சரக்கு உற்பத்தி பாகம் – 2 தேன்மொழி
பயன் – மதிப்பும் பரிவர்த்தனை – மதிப்பும்.
உழைப்பு,மதிப்பை உருவாக்குகிறது. கீழே சாய்ந்துள்ள மரத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் துண்டுகளாக வெட்டப் பட்டால் அது விறகாகப் பயன்படுத்தப்படும்;அல்லது பலகைகளாக அறுக்கப்பட்டால் அது தச்சனுக்கு கச்சாப் பொருளாகப் பயன்படும்.ஏதோ ஒரு தேவையை நிறைவு செய்யும் பொருட்டு உழைப்பால் உருமாற்றப்படுகிற இயற்கைப் பொருள்களில் ஒரு புதிய பண்பு சேர்க்கப்படுகிறது. இதையே நாம் மதிப்பு என்று அழைக்கிறோம்.
பயன் – மதிப்பு என்பது பயன்படுத்துவதற்காக மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் உற்பத்திப்பொருள். பரிவர்த்தனை மதிப்பு அல்லது சரக்கு என்பதுங்கூட பயன்படுத்தப்படத்தான் போகிறது; ஆனால் அது மற்ற சரக்குகளோடு பரிவர்த்தனை ஆவதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது;அதாவது விற்கவும் வாங்கவுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
சரக்கு என்பது,முதலாவதாக, ஒரு மானிடத் தேவையை நிறைவு செய்யும் ஒரு பொருள்; மற்றொரு பொருளுக்குப் பரிவர்த்தனை செய்யப்படக் கூடிய ஒரு பொருளும் ஆகும். ஒரு பொருளின் பயன்பாடுதான் அதைப் பயன் – மதிப்பாக்கிறது.பரிவர்த்தனை மதிப்பு (அல்லது சாதாரமாக சொல்லப்போனால், மதிப்பு) என்பது எல்லாவற்றுக்கும் முதலில்,குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒருவகை பயன் மதிப்புகள், இன்னொரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மற்றொரு வகைப் பயன் – மதிப்புகளுக்கு பரிவர்த்தனை செய்யப்படக் கூடிய விகிதம் அல்லது அளவு ஆகும்.
தொன்மைச் சமுதாயமானது அதன் உறுப்பினர்களிடையே உள்ள கூட்டுறவு,உற்பத்திச் சாதனங்களிலுள்ள பொதுவுடமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.உற்பத்தி தாழ்ந்த மட்டத்தில் இருப்பதால், அச்சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து சுதந்திரமாக உயிர்பிழைத்திருக்க முடியாது என்ற உண்மையின் காரணமாகவே சமூகத்தின் கூட்டு அமைப்பு நிலவியது.மனிதனின் வளர்ச்சி துவங்கிய காலத்திலிருந்தே வேட்டையாடிப் பிழைக்கும் இனங்களிடையேயும் அல்லது சில இந்தியக் குடியினங்களால் மேற்கொள்ளப்படும் வேளாண்மையிலும் கூட்டுறவு செயல்படுவதை நாம் காண்கிறோம். உற்பத்திச் சாதனங்கள் கூட்டுடைமையில் இருப்பதும்,ஒரு தேனீக் கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் ஒரு தேனீ இருப்பதைப் போலவே தனது குலத்தின் அல்லது சமூகத்தின் தொப்புழ்க் கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள முடியாத நிலையில் தனி மனிதன் உள்ளான் என்ற உண்மையும் இந்தக் கூட்டுறவுக்கு அடிப்படையாக உள்ளன.
உலகின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய பழங்குடி இனங்கள் நவீன காலம்வரை எஞ்சி நின்றுள்ளன. எடுத்துக்காட்டாக இருப்பவை மார்க்ஸ் விவரிக்கும் இந்திய கிராமச் சமூகங்களாகும்.
இந்த சிறிய மற்றும் மிகவும் பண்டைய இந்திய சமூகங்களுக்கு இவற்றில் சில இன்றுவரை தொடர்ந்து நீடித்துள்ளன.அடிப்படையாக உள்ளவை; நிலம் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்நிலை; வேளாண்மையும் கைத்தொழில்களும் நயமாக இணைந்திருக்கும் நிலை; ஒரு மாற்றமில்லாத உழைப்புப் பிரிவினை ஆகியனவாகும்.
ஒரு புதிய சமூகம் அமைக்கப்படுகிற பேதெல்லாம்,அதற்காக முன்கூட்டியே தயாராக உள்ள ஒரு திட்டமாகவும் வழி முறையாகவும் பணிபுரிகிறது.நூறு ஏக்கரிலிருந்து ஆயிரம் ஏக்கர் வரையான பிரதேசங்களைக் கொண்டுள்ள இச்சமூகங்கள் ஒவ்வொன்றும் தனக்கு வேண்டிய அனைத்தையும் உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் கச்சிதமாக அமைந்துள்ளது.இவற்றில் உற்பத்திப் பொருள்களின் பெரும் பங்கு சமூகத்தின் நேரடிப் பயன்பாட்டுக்காகவே உள்ளது. சரக்கு வடிவத்தை அது எடுத்துக் கொள்வதில்லை.
இத்தகையதொரு சமூகத்தில் உழைப்பின் உற்பத்திப் பொருள்கள் பயன் – மதிப்புகளாக இருக்கின்றனவே யன்றி, பரிவர்த்தனை – மதிப்புகளாக அல்ல. அவை நேரடியாக தனிப்பட்ட உற்பத்தியாளர்களால் நுகரப்படாததால் சமூகம் முழுவதிலும் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. அதாவது சமூகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அவரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு சரி நிகரான மற்ற பொருள்களை தனது சொந்த நுகர்வுக்காகப் பெறும் வகையில் இப்பகிர்ந்தளிப்பு நடக்கிறது. ஒவ்வொரு பொருளின் பயன் – மதிப்பும் அதை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நேரத்தால் அளக்கப்படுகிறது. ஒரு சிறு சமூகத்தில் இத்தகைய கணக்கீட்டைக் கையாள்வதில் சிரமம் ஏதும் இல்லை.
இச்சிறு சமூகத்தில் உழைப்புப் பிரிவினைகள் மிக எளிமையானவை; இதன் உறுப்பினர்கள் அனைவருமே சொந்த பந்தங்களால் கட்டுண்டு கிடக்கின்றனர். இந்த நிலைமைகள் நீடித்திருக்கும் வரை, உழைப்பின் உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்தளித்தல் சமூகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைகிறது.
ஆயினும் ஒருநாள் இச்சமூகங்கள் புறச்சக்திகள்,தனிப்பட்டவரின் உற்பத்திக்கும் கூட்டு உடைமைக்கும் இடையில் வளர்ந்துவரும் முரண்பாடு ஆகியவற்றின் நிர்பந்தத்துக்கு இணங்கி மாற்றமடைகின்றன.பரிவர்த்தனைக்கான உற்பத்தி வளர்ச்சியடைந்ததும் உழைப்பின் உற்பத்திப் பொருள் பரிவர்த்தனை மதிப்புகளாகின்றன. தாம் உற்பத்தி செய்த பொருள்களின் உரிமையாளர்கள் என்று இப்போது அங்கீகரிக்கப்படுகிற தனிப்பட்ட உற்பத்தியாளர்களால் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதங்களுக்கு ஏற்ப இவை பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இவர்கள் உற்பத்தியின் வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருந்த பழைய சமூகப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டுள்ளனர். அதே வேளையில் அவர்கள் ஒரு புதிய உறவு அமைப்பில் சம்பந்தப்பட்டுப் போயினர். இப்புதிய உறவு அமைப்பின் மீது அவர்களுக்குக் கட்டுப்பாடு ஏதும் இல்லை.
அமெரிக்க இந்தியக் குலமான இரோக்கியர்களை பண்டைய கிரேக்கர்களுடன் ஒப்பிட்டு எங்கெல்ஸ் வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.
இரோக்கியர்கள் இயற்கையின் மீது இன்னமும் முழுக் கட்டுப்பாட்டைப் பெற்று விடவில்லை;ஆனால் இயற்கைச் சக்திகள் விதித்த வரம்புக்குள் இயங்கி, உற்பத்தியைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருந்தனர். அவர்களின் சிறிய தோட்டங்களில் மோசமான விளைச்சல்கள் காண்பதோ,ஏரிகளிலும் ஆறுகளிலும் இருந்த மீன்களின் இருப்பு தீர்ந்து போவதோடு,காடுகளில் இருந்த வேட்டை விலங்குகள் குறைந்து போவதோ- எதுவானாலும் தாம் வாழ்ந்த விதத்தில்,தம் வாழ்க்கையில் என்ன விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது;உற்பத்தி மிகமிக வரம்புக்குட்பட்டிருந்தது; ஆனால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருள்மீது கட்டுப்பாடு செலுத்தினர்.
கிரேக்கர்களிடம் இந்த நிலை இருக்கவில்லை.கால்நடைக் கூட்டங்கள், ஆடம்பரப் பொருள்கள் ஆகியவற்றின் மீது தனி உடமையின் ஆதிக்கம் பெருகியதால் தனி மனிதர்களிடையே பரிவர்த்தனை எழுந்தது.உற்பத்திப் பொருள்கள் சரக்குகள் ஆயின.பின்பு ஏற்பட்ட கொந்தளிப்புக்கான வித்துக்கள் இங்கேதான் இருந்தன. உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருள்களை தாமே நுகராமல்,பரிவர்த்தனைச் செயலில் அவை தமது கைகளை விஅவற்றின் மீது தமக்கிருந்த கட்டுப்பாட்டை இழந்தனர். அப் பொருள்களுக்கு என்ன நேரிட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது போயிற்று.அப்பொருள் ஒரு நாள் உற்பத்தியாளனுக்கு எதிராகப் பயன்படுத்தப் படக்கூடிய,அவனைச் சுரண்டவும் நசுக்கவுமே பயன்படுத்தப் படக்கூடிய சாத்தியப்பாடு தோன்றியது.
சரக்கு உற்பத்தியின் காரணமாக மனிதன் தனது உற்பத்தி ஆற்றலை வளர்த்துக் கொண்டான்.அதன் காரணமாக அவன் இயற்கை மீதான தனது ஆதிக்கத்தை அளவிடமுடியாத அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டான்.அதே வேளையில் அவன் தனது சமூக உறவுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையை இழந்துவிட்டான்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
உழைப்புதான் பொருள்களுக்கு மதிப்பை உருவாக்குகிறது.ஒரு மூலப் பொருளின் மீது மனிதன் தனது உழைப்பை செலுத்துவதன் மூலம் மனிதர்களுக்கு பயன்படக் கூடிய பொருளைஉருவாக்குகிறான். அதன் மூலம் மட்டுமே மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளுக்கு ஒரு பயன் மதிப்பு உருவாகிறது.மனிதர்கள் பயன்படுத்துவதற்காக தனது உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட பொருள் பயன் மதிப்பைக் கொண்டுள்ளது.
மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் வேறு பொருளுக்காகப் பரிவர்த்தனை செய்யப்படும் போது அப் பொருளுக்கு பரிவர்த்தனை மதிப்பு கிடைக்கிறது.
மனிதர்களால் உருவாக்கப்படும் உற்பத்திப் பொருளுக்கு கட்டாயமாக பயன் மதிப்பு இருக்க வேண்டும். அத்தகைய பயன் மதிப்பு இல்லை என்றால் அந்தப் பொருளை பிற பொருள்களுக்கு பரிவர்த்தனை செய்ய முடியாது.ஆகவே அப்பொருளுக்கு பரிவர்த்தனை மதிப்பு இருக்காது. பரிவர்த்தனை மதிப்பு அல்லது சரக்கும் மனிதர்கள் பயன்படுத்துவதற்காகவேஉற்பத்திசெய்யப்படுகிறது.ஆகவே ஒரு பொருளை பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு பயன் மதிப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
தொன்மைக் காலத்தில் உற்பத்திக் கருவிகளும், உற்பத்தியும் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருந்தது. ஆகையால் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து தனி மனிதனால் சுதந்திரமாக உயிர் பிழைத்திருக்க முடியாது. ஒரு கூட்டத்திலுள்ள அனைத்து மனிதர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டாக உற்பத்தியில் ஈடுபட்டு, உற்பத்தி செய்த பொருள்களை கூட்டாக பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை நிலவியதால் அந்தக் காலத்தில் மனிதர்கள் தங்களுக்கு இடையில் கூட்டுறவை ஏற்படுத்திக்கொண்டு, கூட்டு சமூகமாக வாழ்ந்தனர். ஆகவே மனித சமூகத்தின் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் கூட்டாக அதாவது ஆதிகால கூட்டுறவு அல்லது பொதுவுடமை சமூகமாகவே வாழ்ந்து வந்தனர்.
ஆதிகால கூட்டுறவு சமூகத்தில் மனிதர்கள் பயன்படுத்திய உற்பத்திச் சாதனங்கள்,உற்பத்திக் கருவிகள் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருந்ததால் அந்த உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் கூட்டுடமையாக இருந்தது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் அவர்களது கூட்டத்தில் இருந்து பிரிந்து வாழ முடியாத நிலையிலேயே இருந்தார்கள்.
உலகில் பின்தங்கிய பகுதியில் இத்தகைய கூட்டு சமூக வாழ்வை மேற்கொள்ளும் மனிதக் கூட்டம் தற்போதைய நவீன காலத்திலும் இன்றும் இருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆதிகால கூட்டு சமூகத்தில் நிலமானது சமூகத்திற்கு பொதுவாக இருந்தது;வேளாண்மையும், கைத்தொழிலும் இணைந்திருந்தது;உழைப்புப் பிரிவினையானது வளர்ச்சியடையாமல் மாற்றமில்லாமல் இருந்தது; கூட்டு சமூகத்தில் வாழ்ந்த மனிதர்களின் தங்களது தேவைக்கான உற்பத்தியில் மட்டுமே ஈடுபடும் நிலை இருந்தது; அங்குள்ள மனிதர்கள் அந்த கூட்டத்தின் தேவைக்காக மட்டுமே பொருள் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
இத்தகைய கூட்டு சமூகத்தில் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டப் பொருள்களுக்கு பயன் மதிப்பு மட்டுமே இருந்தது.ஏனெனில் அந்த மனிதர்கள் தங்களது தேவைக்காக மட்டுமே பொருள் உற்பத்தி செய்தார்கள். அந்த மனிதர்கள் பரிவர்த்தனை மதிப்பை உருவாக்கவில்லை.
ஆதிகால மனிதர்கள் அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். ஆதிகால மனிதர்களும் வெவ்வேறான பொருள்களை உற்பத்தி செய்தாலும் அந்தப் பொருள்களுக்கு சரி நிகரான மற்ற பொருள்களுக்கு மாற்றாக தங்களது சொந்த நுகர்வுக்காகப் பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொரு பயன் மதிப்பும் அந்தப் பொருளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுகிறது. ஒரு சிறிய சமூகத்தில் இத்தகைய முறையில் அளப்பது மிகவும் எளிதானதாகும். ஆதிகால சமூகத்தில் உழைப்புப் பிரிவினைகள் மிகவும் எளிமையாக இருந்தது.
உழைப்புப் பிரிவினைக்குட்பட்ட அனைத்து மனிதர்களும் சொந்த பந்தகளாகவே இருந்தனர்.அதன் காரணமாகவே அவர்களுக்கு இடையிலான உறவுகளும் நெருக்கமாகவும் அவர்களுக்கு இடையிலே கட்டுபாடுகளும்இருந்தன.இத்தகைய ஆதி சமூகம் நிலவிக்கொண்டு இருக்கும் வேளையிலேயே உற்பத்திக் கருவிகளை மனிதர்கள் வளர்த்தார்கள். உற்பத்திக் கருவிகள் வளர வளர உற்பத்தி பெருகியது.உற்பத்தி பெருக பெருக, உற்பத்தியானது தங்களது சொந்த தேவைகளுக்காக மட்டுமல்லாது பிறரது தேவைக்காகவும் உற்பத்தி செய்யும் நிலைஉருவானது.அதாவது பரிவர்த்தனை செய்யப்படுவதற்காகவும் உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டது.பழைய கூட்டு சமூகத்தில் பயன் மதிப்பை உருவாக்கும் அதாவது தங்களது சொந்தத் தேவைக்காக மட்டும் உற்பத்திசெய்யும் நிலை மாறி,பிறரது தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படும் நிலையாக மாறி பரிவர்த்தனை மதிப்பை உருவாக்கும் பொருள் உற்பத்தியாக வளர்ச்சியடைந்தது.
தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருள்களை தங்களது கூட்டத்திற்குள் மட்டும் பகிர்ந்து கொள்ளும் நிலை மாறி தங்களது கூட்டத்திற்கு வெளியிலும் தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை பரிவர்த்தனை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.இவ்வாறு பரிவர்த்தனைப் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் உற்பத்தியின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பழைய கூட்டு சமூக முறையிலிருந்து விடுபடுவதற்காகப் போராடினார்கள். இவர்களின் போராட்டத்தின் விளைவாக பழைய கூட்டு சமூக முறை ஒழிக்கப்பட்டு அங்கு தனிவுடமை சமூக உறவு முறை உருவாயிற்று.
இந்த புதிய தனிவுடமை சமூக முறையில் பழைய கூட்டுறவு சமூக முறையிலிருந்த கட்டுப்பாடுகள் தகர்ந்து போயின.ஆதிகால பழைய கூட்டுறவு உற்பத்தி முறையில் உற்பத்தியானது மிகமிகக் குறைவாக வரம்பிற்குட்பட்டுஇருந்தது.
ஆகவே அங்கு உற்பத்தியாளர்கள் அவர்களது உற்பத்திப் பொருள்களின் மீது கட்டுப்பாட்டை செலுத்தினர்.
கூட்டுடமை ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில் உற்பத்திப் பொருள்கள் சரக்குகளாக அதாவது பரிவர்த்தனைப் பொருள்களாகஆகவில்லை.ஆனால் தனிவுடமை வளர வளர அந்த தனிவுடமை சமூகத்தில் உற்பத்திப் பொருள்கள் சரக்குகளாக மாறின அதாவது பரிவர்த்தனைப் பொருள்களாக மாறின.உற்பத்திப் பொருள்கள் சரக்குகளாக மாறிய பின்பு அந்த சரக்குகளை உற்பத்தி செய்யும் உழைக்கும் மனிதர்களை சுரண்டவும்,நசுக்கவும் பயன்படுத்தப் படக்கூடிய சாத்தியப்பாடுகள் தனிவுடமை சமூகத்தில் தோன்றியது.சரக்கு உற்பத்தியின் பயனாக மனிதர்கள் தங்களது உற்பத்திக் கருவிகளை வளர்த்துக் கொண்டார்கள். தங்களது உற்பத்தி ஆற்றலை வளர்ந்துக் கொண்டார்கள். இதனால் மனித சமூகத்தில் வளர்ச்சியும் நாகரீகமும் வளர்ந்தது.
சரக்கு உற்பத்தி காலத்தில் அதாவது தனிவுடமை வளர்ந்த காலத்தில் இயற்கையின் மீதான தனது ஆதிக்கத்தை மனிதர்கள் அளவிட முடியாத அளவுக்கு வளர்த்துக் கொண்டனர்.
தனிவுடமை சமூகம் வளர வளர கூட்டுறவு சமூகத்தில் நிலவிய மனிதர்களுக்கு இடையிலான கூட்டுறவும், ஆரோக்கியமான நட்புறவும் தகர்ந்தது. மனிதர்கள் தங்களுக்கு இடையிலான கட்டுப்பாடான உறவுகளை இழந்தனர். அன்றிலிருந்து மனிதர்களுக்கு இடையிலான உறவானது பகைத் தன்மை கொண்ட வர்க்க உறவாக மாறியது.
ஆதிகால கூட்டுறவு சமூகம் தகர்ந்ததற்கு மனிதர்களின் உணர்வுகள் காரணம் இல்லை.உற்பத்தியின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக கூட்டுறவு சமூகம் இருந்ததன் காரணமாகவும் வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்தி சக்திகளின் போராட்டத்தின் காரணமாக கூட்டுறவு சமூகமானது அதாவது ஆதிகால பொதுவுடமை சமூகமானது தகர்க்கப்பட்டு தனிவுடமை சமூகம் தோன்றியது.
அன்றைய சமூகத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத சமூகமாக அன்றைய ஆதிகால கூட்டுறவு சமூகமாக அது இருந்ததன் காரணமாகவே அன்றைய கூட்டுறவு சமூகம் தகர்ந்தது. அதனிடத்தில் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய தனிவுடமை சமூகம் உருவானது. அன்றைய காலத்தில் ஆதிப்பொதுவுடமை உற்பத்திக்கும்,தனிவுடமை உற்பத்திக்கும் இடையில் உருவான முரண்பாட்டின் காரணமாகவே ஆதிப்பொதுவுடமை சமூகம் தகர்க்கப்பட்டு தனிவுடமை சமூகம் உருவானது.
அதே போலவே தற்போது நிலவும் முதலாளித்துவ தனிவுடமை சமூகத்தில் மிகப்பெருவாரியான உழைக்கும் மக்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை நிலவுகின்றது. பெருவாரியான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத் தடையாக இன்றைய தனிவுடமை சமூக உற்பத்தி முறை உள்ளது.ஆகவே இன்றைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தடையாக உள்ள தனிவுடமை உற்பத்தி முறையை ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியம் உருவாகி வளர்ந்து வருகிறது.
அன்றைய காலத்தில் மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தடையாக இருந்த ஆதிப்பொதுவுடமை சமூகம் எப்படி ஒழிக்கப்பட்டதோ அதே போலவே தற்போது பெருவாரியான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத் தடையாக உள்ள தனிவுடமை உற்பத்தி முறையும் ஒழிக்கப்படும்.
அன்றைய காலத்தில் மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான தனிவுடமை சமுதாயம் உருவாக்கப்பட்டதோ, அதே போலவே இன்றைய காலத்தில் மனிதர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான பொதுவுடமை சமூக உற்பத்தி முறை உருவாவது தவிர்க்க முடியாததாகும்.
இன்றைய காலத்தில் பொதுவுடமை சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது கம்யூனிஸ்டுகளின் மூளையில் உதிக்கப்பட்ட கருத்து அல்ல,அதாவது கம்யூனிஸ்டுகளின் விருப்பம் மட்டுமல்ல, சமூகத்தின் மக்களின் தேவைகளைஅடிப்படையாகக் கொண்ட அவசியமாகும், அதாவது காலத்தின் கட்டாயமாகும்.
உலகில் எந்த சக்தியாலும் மனிதர்களின் சமூகத்தின் இந்தத் தேவைகளை நிறைவேற்றுவதை தடுக்க முடியாது.
தனிவுடமை சமூக உற்பத்தி முறை ஒழிக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும். மனிதர்கள் ஒருபோதும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான போராட்டங்களை நிறுத்த மாட்டார்கள். மனிதர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சூழ்நிலைகளை ஏற்படுத்தாமல் ஓயமாட்டார்கள்.இதுதான்மனிதகுல வரலாறாக உள்ளது.
இந்த வரலாற்றை விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்து மனித சமூகம் இறுதியில் கம்யூனிச சமூகமாக மாறியே தீரும் என்ற கருத்தை முன்வைத்து போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர்கள்தான் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்,ஸ்டாலின் மற்றும் மாவோ போன்ற மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள். அவர்களது போதனைகளை கற்றுத் தேர்ந்து கம்யூனிச சமூகத்தைப் படைத்திடுவோம்.
உலகில் எப்படி ஆதிகால புராதன பொதுவுடமை சமூகம் ஒழிக்கப்பட்டதோ,அதே போலவே இன்றைய தனிவுடமை சமூகமும் நிச்சயமாக ஒழிக்கப்படும்.
உலகில் எப்படி ஆதிகால பொதுவுடமை சமூகத்தை ஒழித்து தனிவுடமை சமூகம் தோன்றியதோ அதே போலவே தற்கால தனிவுடமை சமூகம் ஒழிக்கப்பட்டு பொதுவுடமை சமூகம் தோன்றுவது வரலாற்றில் தவிர்க்க முடியாதது ஆகும் .......... தேன்மொழி.
No comments:
Post a Comment