கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆக்கிரமித்தான்

 முதலாளித்துவம் பற்றி தேடிய பொழுது கிடைத்த நூலின் தகவல் திடுக்கிட வைத்தது, அதனை உங்களுக்கு பகிர்ந்துக் கொள்வதே இந்த பதிவு. நான் இதற்க்கு முன் எழுதியதன் தொடர்ச்சியே இவை...

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆக்கிரமித்தான் .
15 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வளரத் தொடங்கிய போது ஐரோப்பிய நாட்டவர் உலகின் இதர பகுதிகளை கண்டறியும் சாகாச செயலில் ஈடுபட்டனர். ஸ்பானிஷ் நாட்டவரான கொலம்பஸ் அந்நாட்டு அரசின் ஆதரவுடன் கிழக்கு திசை நாடுகளை கண்டறிய புறப்பட்டார் . ஆனால் அவர் மேற்கில் உள்ள அமெரிக்க கண்டத்தின் தீவுகளில் ஒன்றான பஹாமாவை 1492ல் சென்றடைந்தார். 1498 ல் இந்தியாவின் மேற்குக் கரையோரம் உள்ள கோழி கோட்டுக்கு போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா வந்து சேர்ந்தார் .
இதனால் பிற்காலத்தில் அமெரிக்கா இந்தியா போன்ற பகுதிகளில் அவர்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு சாதகமாக இருந்தன.
அமெரிக்காவை ஆக்கிரமித்ததை தொடர்ந்து ஸ்பானிஷ் பிரிட்டன் போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகள் அங்கு படை யெடுத்து சென்றன. இவர்களை எதிர்த்த அங்கு வாழ்ந்து வந்த செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட பூர்வகுடி மக்களை கொன்று குவித்தனர் . மிகச்சிலரே மிஞ்சினர்.
அன்று அமெரிக்கா பூர்வகுடி மக்களை கொண்ட நாகரீக வளர்ச்சி அடையாத ஒரு பின்தங்கிய நாடாக இருந்தது. பூர்வகுடி மக்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்டதுதனால் அமெரிக்க மண்ணில் உழைப்பதற்கு போதுமான மனித சக்தி இல்லாத நிலை ஏற்பட்டது. போரில் கொல்லப்பட்டவர்கள் மீதம் இருந்தவர்கள் அடிமையாக்கப்பட்டனர். அமெரிக்க இயற்கை வளம் நிறைந்த கண்டம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அங்கு ஏற்பட்டது .
ஐரோப்பியர்களே பின்னர் அமெரிக்க இனத்தவராக மாறினர்.
அமெரிக்கா யாருடைய நாடு? கொலம்பஸ் கரையிறங்கும்போது அங்கு வெறும் காடும் மலையும்தான் இருந்ததா?. மனிதர்களும் இருந்தார்களா?
இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இருந்தார்கள்.
”வாஸ்கோடகாமாவின் புண்ணியத்தில் தான் இந்தியாவை அடிமைப்படுத்தினோம்” என்று வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் இறங்கிய ஆண்டை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டாக பிரிட்டிஷார் கொண்டாடியிருந்தால் நாம் சகித்துக் கொள்ள முடியுமா?
நமக்கு வாஸ்கோடகாமாவின் வரவு, ஆதிக்கத்தின் வரவு, அடக்குமுறையின் துவக்கம். அமெரிக்கப் பழங்குடியினரைப் பொருத்தவரை கொலம்பஸும் அவ்வாறே.
போர்த்துகீசியர்களைவிடப் பன்மடங்கு கொடுரமான அடக்குமுறையை இனக் கொலையை முன் நின்று நடத்தியவன் கொலம்பஸ். நிறவெறியை, பண்டங்கள் போல அடிமைகள் விற்கப்படுவதை, இனப் படுகொலையை, கொள்ளையை முன்நின்று நடத்திய மண் வெறியும், பொன் வெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட ஒரு மாலுமிதான் கொலம்பஸ்.
கொலம்பஸ் கரையொதுங்கிய இடத்துக்கு ’மேற்கு இந்தியத் தீவுகள்’ என்று பெயரும் சூட்டப்பட்டது.
அமெரிக்கா என இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடிகள் 2 கோடி. வன விலங்குகளைப் போல மாதிரிக்காக இன்று விட்டு வைக்கப்பட்டிருப்பவர்கள் 16 லட்சம்.
மெக்சிகோவில் ஐரோப்பியர்களின் நாகரீகக் காலடிகள் பதியும்போது அங்கிருந்த மக்கள் 2 1/2 கோடி இன்று எஞ்சியிருப்பவர்களோ 20 லட்சம். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த இன ஒழிப்பை சாதிக்க நேரடியான கொலைகளைக் காட்டிலும் வக்கிரமான முறைகளையெல்லாம் கையாண்டார்கள் கொலம்பஸின் ஐரோப்பிய வாரிசுகள்.
அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது.
நிறவெறி மட்டுமல்ல, அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ்.
அவனுக்கு முந்தைய காலத்தில் ஒரு அடிமையை விலைகொடுத்து வாங்கிய ஆண்டை விதிவிலக்கான சமயங்கள் தவிர மற்றெப்போதும் ஆடுகளைப்போல விற்றதில்லை. ஆதிக்கமும் சுரண்டலும் இருந்த போதும் அடிமைகள் தங்கள் ஆண்டையுடன் பல பரம்பரைகளுக்குக்கூட பிணைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் நோயுற்றவர்கள், குறிப்பிட்ட திறமையில்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை அடிமாடுகளைப் போல விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ். அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ச்சி கொலம்பஸின் இந்தக் கண்டுபிடிப்பை ‘அதன் எல்லைக்கே கொண்டு சென்றது. அமெரிக்காவின் புகையிலை, ரப்பர். காப்பித் தோட்டங்களுக்காக ஆப்பிரிக்க மக்கள் விரட்டி, வேட்டையாடி, கூண்டிலடைத்து ஏலமிடப்பட்டனர்.
அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ்.
ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ பழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்.
ஒரு நாகரிகம் அல்லது இனம் இன்னொன்றுடன் மோதும்போது போர்களும் கொலைகளும் வரலாற்றில் தவிர்க்கவியலாதவைதான். அதிலும் முன்னேறிய நாகரீகத்தின்மீது பின்தங்கிய நாகரீகம் படையெடுக்கும்போது அழிவு அதிகமாக இருக்கும். சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தின் மீது நாடோடி ஆரியர்கள் நடத்திய தாக்குதலையும், செங்கிஸ்கானின் போர்களையும் இன்ன பலவற்றையும் இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் பின்தங்கிய பழங்குடி மக்கள்மீது முன்னேறிய வெள்ளை நாகரிகம் தொடுத்த தாக்குதலுக்கும் இனக் கொலைக்கும் கிறித்துவப் பாதிரிகளும், வெள்ளை ஆதிக்கவாத வரலாற்றாசிரியர்களும் கற்பிக்கும் நியாயத்தின் சாரம் இது தான்.
முறியடிக்க வேண்டிய எதிரிகளை பழங்குடி மக்களை – கொலம்பஸும் அவர்களது வாரிசுகளும் உயிருள்ள மனிதர்களாகக் கருதவில்லை; அகற்றப்பட வேண்டிய உயிரற்ற சடப் பொருளாகவே கருதினார்கள்; சித்தரித்தார்கள்.
“அவர்களிடம் பண்பாடு இல்லை. எழுதத் தெரியவில்லை. வரலாற்றை எழுதி வைப்பதில்லை. எழுதப்பட்ட சட்டமில்லை, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். நம்மைக் கண்டால் பெண்களைப் போல(!) ஒடி ஒளிகிறார்கள்” – பழங்குடிகளை அடிமையாக்கி விற்க 1550 இல் ஸ்பானிய அரசுப் பிரதிநிதி கூறிய நியாயம் இது. தமது கொலைகளும், அடிமையாக்குவதும் சட்டப்படி செல்லும் என்பதற்கு 16-ம் நூற்றாண்டின் ஸ்பானிய நீதிபதி கூறிய நியாயம் ‘அவர்கள் பண்பாடற்ற காட்டுமிராண்டிகள்’ என்பதுதான். ‘அவர்கள் மாற வேண்டும் இல்லையேல் அவர்கள் ஒழித்துக்கட்டப்படுவார்கள்’ என்று 1930 இல் பேசினான் அமெரிக்க செனட்டர் பேண்டல்டன். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த ஐரிஷ் இன மக்களை (அவர்களும் கிறித்துவர்களாக இருந்தபோதும்) கடவுளுக்கு பலியிடுவதில் தவறில்லை எனக்கூறிய கத்தோலிக்கப் பாதிரிகள் அமெரிக்கப் பழங்குடிகளைக் கொலை செய்ய தேவனின் அங்கீகாரத்தை வழங்கியதில் வியப்பில்லை.
கொலம்பஸின் ஆக்கிரமிப்பை மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடியவர்கள் கரீபிய மக்கள். கரீப் என்றால் அவர்களது மொழியில் வீரம் செறிந்த என்று பொருள் அவர்களை நரவேட்டையாடவும் அடிமையாக்கவும் கொலம்பஸ் கற்பித்த நியாயம் நயவஞ்சகமானது. கரீப் கனிப் கானியல் என்று அந்தச் சொல்லின் மூலத்திற்கு விளக்கம் தந்தான் கொலம்பஸ். கணிபல் என்றால் நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகள் என்று பொருள். உண்மையில் அவர்களிடம் அத்தகைய பண்பாடு இல்லாதபோதும் கொலம்பஸின் இந்த ஆய்வு மட்டுமே அவர்களை கொல்லப் போதுமானதாக இருந்தது.
தொகுத்துக் கூறினால் வெள்ளை நாகரீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், எதிர்ப்பவர்கள் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல; எனவே அவர்களைக் கொல்வதில் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் தடைக்கற்கள். ஆம் வெறும் தடைக்கற்கள் மட்டுமே. ( கொலம்பஸ் குணம் பற்றிய கட்டுரை புதியகலாச்சரம் இதழின் அடிப்படையில்).
இவ்வளவு அறுவருப்பானது முதலாளித்துவ வளர்ச்சி போக்கு. ஆக முதலாளித்துவத்தின் ஆரம்ப்ப கட்டம் புரிந்துக் கொள்ளவே இந்தப் பதிவு. அடுத்தப் பதிவில் தொடரும்..
Like
Comment

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்