கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் நமக்கான வழிக்காட்டுதலும்- சாதி இருத்தலை புரிந்துக் கொள்ள

 இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும்* வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும். -

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை  அத்தியாயம்-1முதலாளிகளும் பாட்டாளிகளும்

*அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென்[31] (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் (Maurer)[32] நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன் (Morgan)[33] வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, இறுதியில் பகைமை பாராட்டும் வர்க்கங்களாகப் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும் (guild-master)கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.

வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.

எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் - முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் - இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.

நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு - உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது.

பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.

இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.

பிற்போக்காளர்கள் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடுகால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்ப்புகளையும், சிலுவைப் போர்களையும்[35] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.

உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.

அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.

மக்கள் தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிப் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

நமக்கான தேடல் இங்கே

பல்வேறு போராட்டங்களையும் மக்கள் திரள் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு செயலாற்றிய அம்பேத்கர் பெரியார் ஆகியோர் ஆற்றிய பணி சாதாரணமானவை அல்ல. இருந்தும் இந்த சமூக அமைப்பையும் அதை கட்டிக் காக்கும் அரசு அதிகாரத்தையும் அதன் ஒரு பிரிவான சாதிமுறையையும் முழுமையாக இவர்கள் புரிந்திருக்கவில்லை என்பது தெளிவு. அதனால் சாதி ஒழிப்பிற்கு மதத்தை ஒழிப்பதை முன் வைத்தார் பெரியார் ஆனால் அம்பேத்கர் மதமாற்றத்தால் இந்த கொடுமையிலிருந்து விடுதலை என்றார்.

இடஒதுக்கீடு வேண்டும் அதாவது சாரம்சத்தில் சாதி ஒழிப்பல்ல சுரண்டும் அரசின் அதிகார வர்க்க பதவிகளில் தங்களுக்குரிய பங்கினை பெறுவதே ஆகும். இவை விடுதலைக்கான பாதை அல்ல.

இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு குறைவானவர்களிடமே நாட்டின் பெருவாரியான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல தான் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையாளர்களின் கைகளில் தான் சொத்தும் ஆட்சி அதிகாரமும் உள்ளது. சமுதாயத்தில் இந்த சிறுபான்மையினர்தான் அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர் சுரண்டும் வர்க்கமும் இதுவே. இன்னொருபுறம் பெரும்பான்மையினர் எந்த அதிகாரம் அற்ற மாகவும் பிளவுண்டு சுரண்டப்படும் வர்க்கம். ஆக இந்த இரண்டு வர்க்கதிற்கு இடையிலான வர்க்க போர்தான் இங்கே நடக்கிறது.

நாட்டில் சுரண்டும் வர்க்கத்தின் நலன் சார்ந்த பாராளுமன்றம் தொடங்கி கடைநிலை அரசு ஊழியர் வரை இந்த வர்க்கத்தின் சேவகர்களாக பணியாற்றுகின்றனர்.

இதனை மார்க்சின் வார்த்தைகளில் கூறுவது என்றால்

".... வரலாற்றில் இதுவரை போற்றி பாராட்டப்பட்டு வந்த பணிவுக்கும் பக்திக்கும் உரியதாக கருதப்பட்டு வந்த அனைத்து பணி துறைகளையும் பக்திக்கு உரிதாக கருதப்பட்டு வந்த பணித்துறைகளும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மருத்துவர்கள் விஞ்ஞானிகள் சமய குருமார்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரையும் முதலாளித்துவம் தனது கூலி உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது" கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மேலே கூறுகிறார்.

மார்க்சின் கூற்றுப்படி, இங்குள்ள அதிகார வர்க்கப் பதவிகளில் உள்ளவர்கள் சாதி கடந்து வர்க்கமாக ஒடுக்கும் வர்க்கத்தின் கருவியாக செயல்படுகிறார்கள். அவர்கள் எந்தப் பதவி வைக்கிறார்களோ அந்த பதவிக்கான பணியை ஆளும் வர்க்கத்தின் நலனில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர் பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும். அவை தான் ஆளும் வர்க்கத்தின் சட்ட திட்டங்கள். இங்கே அரசின் கருவியான இவர்கள் மற்றவர்களை ஒடுக்கும் சுரண்டும் பணியை செய்கின்றனர். வர்க்கத்தால் இவர்கள் சுரண்டும் வர்க்கதினரே.

சனாதன பார்ப்பன எதிர்ப்பு பேசி அரசு பதிவிகளுக்கு வருவோர் பணி அடிப்படையில் வர்க்கமாக பார்ப்பதா சாதியாகவா? மேலும் அரசு பதவிகளுக்கு வந்து விட்டால் எல்லா சாதியினரும் சமம் ஆகி சமாதானம் வந்துவிடுமா, சனாதனம் ஒழிந்து விடுமா? அதிகார வர்க்கத்தில் தங்களுடைய பங்கு கேட்டு தாங்களும் சுரண்ட கொள்ளை அடிக்க இடம்தானே? இவை சமத்துத்தையோ சுதந்திரத்தையோ விடுதலையையோ தருமா?

இந்த சமூகத்தில் வாழ்வதற்கான கொள்ளையடிப்பதற்கான ஒடுக்குவதற்கான இடம் கேட்பது சாதி ஒழிக்க பயன்படுமா?

இன்றைக்கு சாதியால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் கூடுதலான கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து விடுதலை என்பது பெரியார் சொன்ன வழியிலோ, அம்பேத்கர் சொன்ன வழியிலோ, ஏன் தலித்தியம் பேசுவோர் கூறும் வழியிலோ, இல்லையில்லை NGO-கள் கூறும் வழியிலோ சாத்தியம் இல்லை. ஏனென்றால் சாதி ரீதியாக ஏற்படும் எல்லா துன்பதிற்கும் காரணமான இந்த சமூக பொருளாதார அரசியல் அமைப்பே, இதனை இந்த மேற்காணும் பிரிவினர் புரிந்துக் கொள்ளவில்லை, ஆகவே இவர்களால் முன்வைக்கப்படும்கொள்கைகள் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இனியும் வெற்றிப் பெறப் போவதில்லை சாதிய ‘கொடுமைகளும் அவர்களின் முன்னெடுப்பால் தீர்வில்லை. தினம் தினம் மக்கள்கடந்து செல்லும் இங்குள்ள எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இந்த பிற்போக்கான நடைமுறைகளை கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நலன்களை பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே நிகழ்கிறது என்கிறது மார்க்சியம். ஆகவே இந்த ஒடுக்குமுறையின் நுகத்தடியை தூக்கியெறிய சொல்கிறது மார்க்சிய லெனினிய தத்துவம். ஆனால் இதனை விடுத்து ஆளும் வர்க்கங்களுடன் கூடிக்குலாவிக் கொண்டு அவர்கள் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாதிகள் சுயநலப் போக்குள்ளவர்கள் சொல்கின்றனர். இதுதான் சீர்திருத்தவாதம் பேசும் சந்தர்ப்பவாதிகளின் வழிகாட்டல் ஆகும்.

வர்க்கமாக அவர்கள் ஒன்றிணையவே செய்கிறார்கள்;அதே நேரத்தில் பல்வேறு சாதிகளில் உள்ள உழைக்கும் (ஓடுக்கப்பட்ட வர்க்கம்) மக்களுக்களுக்கு இடையிலான வர்க்க ஒற்றுமைக்கும் பல்வேறு தடைகள் உள்ளதை காணலாம். அவை சாதிய பண்பாட்டு மதிப்புகள் கருத்துருவாக்கங்களும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனையும் மீறி ஆளும் வர்க்கங்களைப் போலவே உழைக்கும் வர்க்கங்களும் தேவை கருதி ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். எதிரிகள் ஒன்றுபடும்போது நாம் ஒன்றுபடுவது அவசியம் அல்லவா? இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சி முதலாளிய மாற்றங்களை மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக ஆழப்படுத்தி முழுமை அடைய செய்து நிலவுடமை உறவுகளை முற்றாகச் சிதைப்பதற்கான போராட்டத்துடன் சாதிய பண்பாட்டு மதிப்புகளை எதிர்த்துப் போராட்டங்களை இணைப்பதன் மூலமே தலித் மக்கள் உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க உணர்வோடு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு ஒன்றுபடுவர். பார்ப்பனர்களின் தனிஉரிமைக்கு எதிரான போராட்டமாக சுருக்கி காண்பது கூட நிலஉடைமை பிற்போக்குகளை எதிர்த்தபோராட்டத்தை பார்ப்பன எதிர்த்த போராட்டமாக சுருக்கி காண்பது ஆகும். ஒரே சாதிக்குள் தோன்றிய புதிய வர்க்கங்கள் (பணம்படைத்த வர்க்கங்கள்) தனது சாதி அடையாளத்தை இழந்து விட முயற்சிக்கவில்லை.தனது வர்க்கத்திற்கு என்று புதிய கோரிக்கையைமுன்வைக்க பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது அந்தந்த சாதிகளில் தோன்றிய புதிய வர்க்கத்தினர் அதிகாரியாகவும் முதலாளியாகவும் வணிகர்களாகவும் ஏன் ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும் வளர்ந்துள்ளனர். ஆயினும் இவர்கள் தனது சாதியின் நலன்களுக்காக நிற்காமல், ஆளும் வர்க்கம் செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றனர். இதற்காக பல்வேறு சாதிகளில் தோன்றிய புதியவர்க்கங்கள் தேவைப்படும் நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பாட்டையும் மேற்கொள்கின்றனர். புதிய மேல்நிலை வர்க்கங்கள் சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் இவர்களே பிராமணர் அல்லாதவர் என்ற பெயரிலும் ஒளிந்துக் கொள்கின்றனர். தேவைப்படும்போது பிராமணர்களிடத்தில் மட்டுமல்லாது எல்லா மேல்நிலை சாதி மற்றும் வர்க்கத்தோடும் உறவு கொள்ள இவர்கள் தவறுவதும் இல்லை.

இந்த நிலையில் உழைக்கும் ஏழை எளிய கடைநிலை சாதிகளிலுள்ள மக்களை மற்ற சாதியைச் சேர்ந்த உடைமை வர்க்கங்களின் தாக்குதலிருந்து தங்களை பாதுகாக்க அனைத்து சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக மற்ற சாதியிலுள்ள பணக்கார ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளும், அதேபோல் கடைநிலை சாதியிலுள்ள பணக்கார வர்க்கங்களும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. ஒரே சாதிக்குள் இருக்கும் முதலாளியை, அதிகாரியை, ஆளும் வர்க்க, பிரதிநிதியை, முதலாளியாகவும், அதிகாரியாகவும், ஆளும்வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் சாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் வரையில். சாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே இந்தச் சிக்கல் உடைபடாமல் இதிலிருந்து பாமர மக்கள் விடுபட முடியாது.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் சாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள், சாதி ஆதிக்க சக்திகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. சாதிமுறை உள்ளிட்ட அனைத்துவகையான பிற்போக்கு அம்சங்களும் தூக்கி எறியப்படும். அதற்கு தேவை சமூக மாற்றதிற்கான புரட்சி ஒன்றுதான் ஒரே வழியாகும் என்பதனை நிரூபித்தன. அத்தகைய புரட்சிதான் இந்த எல்லா சீர்கேடுகளையும் துடைதெறியும். அதனை தடுத்து நிறுத்த ஆளும் வர்க்கம் மக்களை சாதி அடையாளத்தில் மக்களை இருத்தி தங்களின் நலனுக்காக பிரிவினை பேசுகிறது.... இவை சமூக மாற்றதிற்கு பயனளிக்காது...

இன்னும் பின்னர்

நேற்றைய வகுப்பை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்த தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்