சி . பாபு தாஸ்
பெற்றால் தான் பிள்ளையா ? (சிறுகதை)
மெரினா கடற்கரை, உடற்பயிற்சியோடு, தினந்தோறும் புதிதாய் பிறக்கும் அதிகாலை கதிரவனை கண்களில் விழுங்க காத்திருக்கும் ஒரு கூட்டமும்,
இரவு முழுவதும், வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வலையில் மீன்களோடு கதிரவனின் கதிர்களையும் சேர்த்தே இழுத்து வருகிற ஒரு கூட்டமும்,
பளிங்கு மாளிகையில் பட்டு மெத்தையில் வேலைக்காரி கொண்டு வரும் காபிக்காக வெல்வெட் போர்வைக்குள் விழித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமும்,
அழுகிப்போன, கூவம் நதியின் ஓரத்தில் துர்நாற்றம் பழகிப்போன குடிசைகளில், முற்றிலும் இழந்த உழைப்பு சக்தியை மீண்டும் பெறுவதற்காக தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருக்கும் ஒரு கூட்டமும்,
சிங்கார சென்னையில் எண்ணற்ற முரண்பாடுகளோடு விடியலுக்காகவே காத்திருந்தது
மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தின் கீழ், கால்வாயின் ஓரத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு பக்கத்தில் எண்ணற்ற உழைக்கும் மக்கள் வாழும் குடிசை, சிமெண்ட் சீட் வீடுகள், சின்ன சின்ன சந்துகளில் பத்து பதினைந்து வீடுகள், கால் நீட்டி படுக்கலாம் அவ்வளவு தான் அறை, சமயலறை, கழிவறை, குளியலறை எல்லாம் அதற்குள் தான், பெரும்பாலும் சமயலறை, கழிவறை, குளியலறை கழிவுகள் எல்லாம் கால்வாயில் தான் கலக்கிறது,
ரயில் நிலையம், அடுக்கு மாடி குடியிருப்பு என அலைந்து திரிந்து, எண்ணற்ற ஜீவராசிகளுடன் பழகி, தன் இனத்துடன் கூடிக் குலாவி, குடிசை வீடு சிமெண்ட் சீட் வீடுகளின் மீது தாவி, தாவி தனது அம்மா மகேஸ்வரியின் வீட்டின் வாசலில் "மியாவ் மியாவ்" என்ற சத்தத்துடன் வாசற்கதவை பிராண்டிக் கொண்டிருந்தது கருப்பாயி என்கிற அந்த பூனை
பூனையின் சத்தம் கேட்டு விழித்து வாசற்கதவை திறந்தாள் மகேஷ்வரி, "ஏய் கருப்பாயி ராத்திரிலாம் எங்கடி போன, வர வர ஊர்சுத்தரதே உனக்கு வேலையாப்போச்சி" என்று பூனையை தூக்கி கொண்டு உள்ளே சென்றாள், "ம்ம் ன்னாடி வர வர வெய்ட்டு ஜாஸ்த்தியாய்கினே போற, என்னவோ ரகசிமாத்தான் இருக்கு, இதுக்குத் தான் இந்த ஆம்பள பசங்களோட சேராத சேராத ன்னு சொன்ன கேட்டீயா, சரி சரி கத்தாத இரு இரு" என்று சிறிய புன்சிரிப்புடன் அடுக்களையில் பால் வைக்க ஆயத்தமானாள் மகேஷ்வரி
மகேஷ்வரிக்கு பூனைகள் என்றால் அலாதிப் பிரியம், அவள் வீட்டில் மூன்று பூனைகள் உள்ளது, பிலிப்ஸ், டைசன், கருப்பாயி என்று பூனைகளை பெயர் சொல்லி அழைப்பாள், கருப்பாயிக்கும், உள்ளேயிருந்த பிலிப்ஸ்க்கும் சிறிய தட்டில் பால் வைத்து விட்டு " த எழுந்திரு போயி பால் வாங்கினு வா" என்று தன் கணவன் பழனியை எழுப்பி "டேய் எழுந்திருங்கடா டேய்" என்று தூங்கிக் கொண்டிருந்த தன் இரண்டு மகன்களையும் எழுப்பினாள்
பெரியவன் ஆனந்த் 11 ஆம் வகுப்பும், சிறியவன் விஜய் 8 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்
காலையில் அவசர அவசரமாக சமையல் முடித்து, வேலைக்கு கிளம்பிய பழனிக்கும், பள்ளிக்கு கிளம்பிய இரண்டு மகன்களுக்கும் சாப்பிட கட்டிக் கொடுத்து வழியனுப்பி வீட்டில் இருக்கிற பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, துணிகளை துவைத்து விட்டு, குளித்து முடித்து, நேற்று மீதமிருந்த பழைய சாதத்தை சாப்பிட, மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது, மதிய சாப்பாட்டிற்கு தானும் கொஞ்சம் கட்டிக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு நடக்க ஆரம்பித்தாள் மகேஷ்வரி
மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்டில் சற்று கூட்டம் அதிகமாக தான் இருந்தது. கூட்டத்தை பார்ப்பது சற்று தலைவலியாக இருந்தது, 'இப்பவே மணி ஒம்போது ஆகுது, பஸ் வந்து, இந்த கூட்டத்துல முட்டி மோதி ராயப்பேட்டை போறதுக்குள்ள எத்தனை மணியாகப் போகுதோ, ஏற்கனவே அந்த மேனேஜர் ஒம்போதரைக்குள்ள வந்துருன்னு கண்டீஷன் போடறான், நானும் சீக்கிரமா வரனுன்னு தான் பாக்கறேன், வீட்ல அவ்ளோ வேலையும் முடிச்சிட்டு வர்ரதுக்குள்ள நேரமாயிடுது, இன்னைக்கும் அவன்கிட்ட திட்டு தான் வாங்கனும் போல, இந்த பஸ்ஸு வேற சீக்கிரமா வந்து தொலைய மாட்டுது' என்று ஏதேதோ சிந்தனையில் பஸ்ஸுக்காக காத்திருக்கும் எண்ணற்ற மக்களுடன் அவளும் காத்திருந்தாள்.
மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஒட்டினாற்போல் உள்ள கபாலித்தோட்டத்துல தான் மகேஷ்வரியின் வீடு, மகேஷ்வரியின் அம்மா, அப்பா, தங்கை, தங்கைமகன் என எல்லோர் வீடும் பக்கத்தில் தான், பிறந்து வளர்ந்ததெல்லாம் இதே மயிலாப்பூர் தான், பக்கத்து வீட்டு பழனிய காதலித்து திருமணம் செய்து ரெண்டு ஆம்பள கொழந்தகள பெத்து, பசங்களும் நல்லா படிச்சிட்டு இருக்காங்க,
பழனியை போலவே, பழனியோட அண்ணனுக்கும் ரெண்டு பசங்க பெரியவன் சாந்தன், சிறியவன் நந்தன் ன்னு பெரிய குடும்பம், நந்தனுக்கும், மகேஷ்வரியின் பெரிய மகன் ஆனந்துக்கும் ஒரே வயசுதான், சில மாதங்கள் தான் வித்தியாசம், எல்லாருக்கும் பக்கத்துலயே வீடு, பசங்க கொழந்தைங்களா இருந்த போது, ஓரகத்தி ஏதாவது வேலையாயிருந்தால் மகேஷ்வரி ஓரகத்தி குழந்தைக்கு பால் கொடுக்கறதும், மகேஷ்வரி எதாவது வேலையாயிருந்தால் ஓரகத்தி மகேஷ்வரியோட குழந்தைக்கு பால் கொடுக்கறதும் சகஜமாகிப் போன ஒன்று தான்,
எல்லாம் நல்லா வளந்திருச்சீங்க, பசங்களும் சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு ன்னு மாறி மாறி போறதும், வர்ரதும், அங்க அங்க சாப்பிடுறதும், அண்ணன் தம்பிங்களுக்குள்ள விளையாடுறதும், சண்டை போட்டுக்கறதும் ன்னு எப்பவுமே ஒரே கலகலப்பா இருக்கும், ஒரு பண்டிகை வந்தா போதும் அண்ணன், தம்பி பசங்களுக்கு புது துணி எடுத்து கொடுக்கறதும், தம்பி, அண்ணன் பசங்களுக்கு புது துணி எடுத்து கொடுக்கறதும், பண்டிகை சமயத்துல எல்லா பசங்களும் ஒன்னா உக்காந்து சாப்பிடுறதும், ஒரே அன்பு பரிமாற்றம் தான், ஒரு சமயத்துல எல்லாரும் ஒரே கூட்டு குடும்பமாத்தான் இருந்தாங்க , காலவோட்டம், பொருளாதார சிக்கல், சில பிரச்சினைகள் காரணமா தனி தனி குடும்பமா போனாலும், ஒருத்தருக்குள்ள ஒருத்தர் அன்பு மாறாம, வாழ்க்கை என்னவோ ஓடிக்கினே தான் இருக்குது.
நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு 21 ஆம் நெம்பர் பேருந்து மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வந்தது, 'மணி இப்போ ஒம்போதரை ஆயிடுச்சி, இந்த பஸ்ஸ விட்டா அப்பறம் வேலைக்கு போறதுக்கு பத்து மணி ஆயிடும், எப்படி இருந்தாலும் இந்த பஸ்ல ஏறித்தான் ஆகனும், என்று எண்ணிய மகேஷ்வரி "ஏம்பா இறங்கறவங்களுக்கு வழிய விடுங்கப்பா, படிக்கட்டுல நிக்காதீங்க, உள்ள வாங்க, உள்ள வாங்க" என்ற கண்டக்டரின் குரலை யாரும் மதிப்பதாய் தெரியவில்லை, ஒரு வழியாக கூட்டத்தில் இடித்து தள்ளிக் கொண்டு பஸ்ஸின் நடுவே போய் நின்று கொண்டாள் மகேஷ்வரி
பேருந்து மெதுவாகவே நகர்ந்தது
கூட்டத்தில் திடீரென்று ஒரு கை பின்னாலிருந்து மகேஷ்வரியின் இடுப்பில் அழுத்த, திரும்பிய மகேஷ்வரி, திரு திருவென்று முழித்த அந்த நபரை பார்த்து "ஏங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க, விட்டா மேலயே விழுந்திருவீங்க, போலருக்குதே " என்று அதட்டலான குரலில் கடுங்கோபத்தில் ஒரு பார்வை பார்க்க கூடவே அருகிலிருந்த சில பெண்களும் அவனை பார்த்து "ஏம்பா பின்னாடி தள்ளப்போப்பா" என்று குரல் கொடுக்க, பள்ளம் மேடுகள் கடந்து ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தது அந்த பேரூந்து,
சிறிது தூர பயணத்திற்கு பிறகு மீண்டும் அந்த கை மகேஷ்வரியின் இடுப்பை அழுத்த மகேஷ்வரிக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏற திரும்பி அவனை தள்ளி விட்டு பளாரென்று அவன் கண்ணத்தில் அறைந்தாள், "டேய் பொறம்போக்கு தள்ளி போடா, நானும் அப்பத்திலிருத்து பாக்குறேன், இடுப்புல கைய வெக்கிற, பொறம்போக்கு நாய" , என்று கத்த கூடவே சுற்றி இருந்த பெண்களும் "டெய்லி இந்த நாய்க்கு இதே வேலதான், ஏம்பா டிரைவரு வண்டிய ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்துப்பா, இன்னிக்கு இந்த நாய புச்சி குத்துல்லாம்" என்று சத்தம் போட, கூடவே ஒரு சில ஆண்களும் அவனை சத்தம் போட, டிரைவர் பேரூந்தை நிறுத்த, கூட்டத்தை முட்டி தள்ளி கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடியே விட்டான் அந்த பொறம்போக்கு.
ஒரு வழியாக ராயப்பேட்டை வந்திறங்கிய போது மணி பத்தை தாண்டி இருந்தது, அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு படிக்கட்டு வழியாக அவசர அவசரமாக ஏறி உள்ளே நுழைந்தாள் மகேஷ்வரி, மூச்சு வாங்கியது, "ன்னாம்மா இன்னிக்கும் லேட்டா" என்ற முருக்கு மீசை வாட்ச்மேன் தாத்தாவின் குரலுக்கு பதிலளிக்காமல் கதவுக்கு பின்னால் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து அலுவலகத்தை பெருக்க ஆரம்பித்தாள், அலுவலக பணியாளர்கள் அவர்களது வேலையை செய்து கொண்டிருந்தார்கள், வாடிக்கையாளர்கள் ஒரு சில பேர் காத்திருந்தார்கள், ஒவ்வொரு பணியாளரின் இருக்கைக்கு செல்லும் போது "சார் கொஞ்சம் எழுந்திருங்க சார் பெருக்கிடுறேன்" என்று சொல்ல, முகம் சுழிக்க சிலர் எழுந்தனர், ஒரு சிலர் "ஏம்மா நீ லேட்டா வந்திட்டு இருக்கறவங்களுக்கு தொந்தரவு கொடுத்திட்டுருக்க" என்று பேச எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டு அமைதியாக பெருக்கி முடித்து, பாத்ரூமிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து மாப்பு போட்டு துடைக்க, "ஏம்மா உனக்கு அறிவேயில்லீயா எத்தனை தடவை சொல்றேன், சீக்கிரமா வா ன்னு, லேட்டா வந்திட்டு ஏன் எல்லாருக்கும் தொந்தரவு கொடுக்கற, முடியலேன்னே சொல்லிடு, நான் வேற ஆள பாத்துக்கிறேன்" என்ற மேனேஜரின் அதட்டலான குரல் கேட்டு அவளுக்கு அழுகையே வந்துவிட்டது
கண்களில் நீர் தளும்ப "சார் சீக்கிரமா தான் வந்தேன், பஸ் லேட்டாயிடுச்சி சார், பஸ்ஸுல வேற கூட்டம் ஜாஸ்தியாயிடுச்சு, மெதுவாத்தான் வந்துது" என்றாள்
"ஆமா உனக்கு டெய்லி ஒரு சாக்கு, சரி சரி போ எல்லாருக்கும் காபி வாங்கிட்டு வா" என்று சொல்லி அவர் இருக்கைக்கு சென்றார் மேனேஜர்
ஒரு வழியாக அலுவலகத்தை துடைத்து விட்டு ஃபிளாஸ்க்கை எடுத்து கொண்டு வெளியே செல்ல, வாசலில் அமர்ந்திருந்த வாட்ச்மென் தாத்தா தனது மீசையை முறுக்கிக்கொண்டே "ன்னா மகேஷு இன்னிக்கு இவ்ளோ லேட்டு வூட்டுக்கு தூரமாருந்து வரீயா" என்று இரைட்டை அர்த்தத்தில் மறுபடியும் பேசி ஒரு வித நமட்டு சிரிப்பு சிரிக்க, சற்று எரிச்சலோடு "இல்ல தாத்தா, பழைய செருப்பு அடிச்சி அடிச்சி பிஞ்சிருச்சி, அதனால புதுசா ஒரு செருப்பு வாங்கிட்டு வந்தேன், அதான் லேட்டு" என்று சூடாக பதிலளித்து அங்கிருந்து நகர்ந்தாள் மகேஷ்வரி, இதுவரை என்ன பேசினாலும், எந்த பதிலும் பேசாமல் சென்ற மகேஷ்வரி, இப்படி சில வார்த்தைகள் பேசியதும், ஒரு வித தலக்குணிவோடு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீண்டும் தனது மீசையை லேசாக தடவிக்கொண்டார் தாத்தா
மாலை அலுவலகம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வர எண்ணற்ற பல பிரச்சினைகளை தினமும் சந்தித்துக் கொண்டு தான் வருகிறாள் மகேஷ்வரி
இப்படியாக அவள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது
மகேஷ்வரி மாலை வேலை முடித்து வீட்டிற்கு வர ஆனந்தும், நந்தனும் தங்களது அலைபேசியில் எதையோ, தேடிக் கொண்டிருந்தார்கள், வீட்டிற்கு வந்தவள், இருக்கிற பாத்திரங்களை எடுத்து தேய்க்கப் போட்டாள், ஃபிரிட்ஜில் இருந்து காலை வாங்கிய மீதமிருந்த பாலில் டீ போட்டு, "டேய் ஃபோனை எடுத்து வைங்கடா, டீய குடிச்சிட்டு புஸ்த்தக எடுங்கடா, நந்து நீ கூட ரொம்ப கெட்டுப் போய்ட்ட" என்று பிஸ்கட் பாக்கெட்டோடு டீ கிளாசை வைக்க "ஒன்னுல்ல சித்தி சும்மா தான், கேம் விளையான்னே சித்தி" என்றான் நந்தன்
"சரி சரி டீய குடிச்சிட்டு போயி உன் புஸ்தகத்த எடுத்துகினு வா" என்று பாத்திரங்களை கழுவ சென்றாள் மகேஷ்வரி,
அதே நேரம் அவளது தங்கை கௌரி "மகேஷு என்னடி பன்ற" என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வர "கௌரி வாடி, இப்பத்தான் வேலைலருந்து வந்தேன், டீ குடிக்கிறீயாடி" என்று கேட்க "வேனான்டி இப்பத்தான் குடிச்சேன், ஒன்னுல்ல சும்மா தான் வந்தேன், இவனுங்களுக்கு எப்பப்பாத்தாலும் ஃபோனே கெதி, ஏன்டா எப்பவுமே கேம் தானா, போங்கடா படிக்கற வேலைய பாருங்கடா" என்று அவளும் மிரட்ட இருவரும் அங்கிருந்து எழுந்தார்கள்,
லேசான புன்சிரிப்புடன் "ஏய் விசியம் தெரியுமாடி, நம்ம கருப்பாயி மாசமா இருக்கான்னு நெனைக்கிறேன், தூக்கிப் பாத்தேன் வெய்ட்டா இருக்கறாடி" என்றாள் மகேஷ்வரி
"அப்பிடியா ஆமா அதுதான் ஊரெல்லாம் சுத்திகினே இருக்குதே, நம்ம டைசன் எப்பவும் அது பின்னாடியே தான் இருந்தான், போ போ இன்னும் கொஞ்ச நாள்ல எங்க குட்டி போடுமோ, தெரியல" என்று கௌரி சொல்ல.
"அதுக்கு ன்னாடி பன்றது, வாயில்லா ஜுவன், அதுவும் ஒரு கொழந்த தானடி, வுடு பாத்துக்கலாம்" என்றாள் மகேஷ்வரி லேசான புன்னகையுடன்.
ஆனந்தும், நந்தனும் புத்தகத்தோடு வந்தமர்ந்தனர், மகேஷ்வரி 12 ஆவது வரைக்கும் படிச்சிருந்தாலும் எல்லா பசங்களுக்கும் படிப்பு சொல்லி கொடுக்கறதுக்கு கொஞ்சம் வசதியாத்தான் இருக்கு .
இப்பெல்லாம் நந்து அடிக்கடி சித்தி வீட்டிற்கு வருகிறான், மகேஷ்வரி அவனுக்கு பிடித்த உணவை சமைத்து தருகிறாள், அவனுடைய சிறு சிறு தவறுகளை கண்டிக்கிறாள், அவனுடைய படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறாள், அவனும் நன்றாகவே படிக்கிறான், இருப்பினும் அவனது நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது
காலவோட்டம் அவனுக்குள் சில மாற்றங்கள் உண்டாகிறது, அவனுடைய பருவ மாற்றம் அவனை சில தவறுகளுக்கு உந்தி தள்ளுகிறது, அவனுடைய சிந்தனை ஏதோ ஒன்றை தேடியலைகிறது, அலைபேசியில் எதையோ தேடுகிறான், தொலைக்காட்சியில் தேடுகிறான், சாலையில் ஒட்டப்படும் போஸ்டர்களில், கடந்து போகும் பெண்களில், வகுப்பறையில் பழகும் பெண்களில், ஆசிரியைகளில், பக்கத்து வீட்டில் தொட்டுப் பேசும் பெண்களில், இப்படி பல இடங்களில் தேடியலைகிறான், ஒரு கட்டத்தில் எப்படியாவது அந்த இரகசியத்தை பார்த்து விட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் மிகப்பெரிய போராட்டமாகவே வெடித்தது, வீட்டில் யாருமில்லாத போது அவன் வீட்டு கட்டிலில், கழிவறையில், குளியலறையில், தன் மனக்கண்ணில், கற்பனையில் முழுவதுமாக அந்த இரகசியத்தை காண்கிறான், அவன் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது, அடிக்கடி அவன் அவனுடைய உடல் உறுப்பை தடவிக் கொள்கிறான், அது அவனுக்கு அதிசயமாக இருக்கிறது, அது அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது, அது அவனுக்கு ஆனந்தமாக இருக்கிறது, அது அவனுக்கு பேரானந்தமாக இருக்கிறது, அது அவனுக்கு மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறது, உடலில் ஏற்படும் உணர்வுகளுக்கு அவன் தன்னையே அர்ப்பணித்தான், அவன் தனக்குள்ளே தொலைந்து போனான்.
சில நாட்கள் கழிந்தது
அவனுக்கு அரும்பு மீசை வளரந்திருந்தது, அவனுடைய குரலில் சிறு மாற்றம் ஏற்பட்டது, அடிக்கடி தலையை கோதிக் கொள்கிறான், அவனுடைய போக்கு, அவனுடைய சில நடவடிக்கைகள், அவனுடைய வீட்டில் சில சந்தேகங்களை ஏற்படுத்தினாலும், "பையன் பெரியமனுசனாயிட்டான்" என்று அவனுடைய அம்மாவும் அப்பாவும் உறவுகளுக்குள் இரகசியமாக பேசி சிரித்து சென்றார்கள்.
மகேஷ்வரிக்கும் அது புரியாமலில்லை, நந்து வயதையொத்த தன் மகனின் நடவடிக்கையிலும் மாற்றமடைவதை காண்கிறாள் அல்லவா? 'ஹும் இந்த பசங்க குழந்தையாவே இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்' என்று உள்ளூர நினைத்து சிரித்துக் கொள்கிறாள்
"டேய் ஆனந்தே சீக்கிரமா வாடா, வேலைக்கு மணியாகுது, பாத் ரூம்ல உக்காந்து அப்பிடி அந்த ஃபோன்ல என்னத்த பாக்குற, எப்பப்பாத்தாலும் ஃபோனே கெதின்னு, டேய் சீக்கிரமா வெளியே வாடா"
"ம்மோவ் வர்றேன் இரும்மா, எப்பப்பாத்தாலும் சும்மா கத்திகினே இருக்கற"
தினமும் இந்த சத்தங்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது
ஒரு நாள் காலையில் நந்தன் சித்தி வீட்டிற்கு வர "டேய் நீ ஸ்கூலுக்கு கிளம்பளையா" என்று வேலைக்கு கிளம்பிய பழனி கேட்க "இல்ல சித்தப்பா வயிறு வலிக்கிது அதான் இன்னிக்கு லீவு போட்டேன்" என்று சொல்ல
"ஆமாண்டா எப்பப்பாத்தாலும் எதாவது ஒரு சாக்கு போக்கு, சும்மா சும்மா லீவுலாம் போடக்கூடாது, போடா, போயி ஸ்கூலுக்கு கிளம்பு" என்று சொல்ல உடனே அவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.
பழனி வேலைக்கு சென்றவுடன், மீண்டும் சித்தி வீட்டிற்கு வந்தான் நந்தன், ஆனந்தும், விஜய்யும் ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர், நந்தன் தொலைக்காட்சியில் பாடல்களை ரசித்து கொண்டிருந்தான், ஆனந்தும் ,விஜய்யும் ஸ்கூலுக்கு சென்றதும், பாத்திரங்களை கழுவி கொண்டிருந்த மகேஷ்வரி "டேய் நந்து டீ குடிக்கிறீயாடா" என்று கேட்டாள் "ம்ம் ச்சரி சித்தி" என்றான் நந்தன், சிறிது நேரத்தில் தனக்கும் சேர்த்து இரண்டு டம்ளரோடு வந்தாள், டீ குடித்துக் கொண்டே சிறிது நேரம் அவளும் தொலைக்காட்சி பாடல்களை பார்த்து கொண்டிருந்தாள்
"இத பாத்துட்டு உக்காந்தா நமக்கு வேல ஆவாது, நான் போயி குளிச்சிட்டு கிளம்பறேன்" என்று எழுந்தாள் "டேய் லீவு போட்டு வெளிய எங்கியும் சுத்தக்கூடாது, ஒழுங்கா புக்க எடுத்து வச்சி படிக்கனும்" என்று சொல்லி குளிக்கப் போனாள் மகேஷ்வரி
"ம்ம் ச்சரி சித்தி" என்று தொலைக்காட்சி பாடல்களில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்
சிறிது நேரத்தில் குளித்து முடித்து பாத்ரூமை விட்டு வெளியே வந்த மகேஷ்வரி உடை மாற்ற நந்தன் இருப்பதை பார்த்து சற்று தயக்கமாகவே "நந்து கொஞ்சம் நேரம் வெளிய இருடா, நான் துணி மாத்திட்டு வந்துர்ரேன்" என்று சொல்ல, உடனே எழுந்த நந்தன் "நான் பாத்ரூம் போய்ட்டு வரேன் சித்தி" என்று பாத்ரூமுக்குள் சென்றான்
மகேஷ்வரி ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் மெதுவான சத்தத்துடன் தொலைபேசியின் ஒலி கேட்டது, சுற்றி சுற்றி தேடிப் பார்த்து அலமாரி பக்கத்தில் ஒலி வந்ததை பார்த்து அங்கிருந்த ஃபோனை எடுத்து பார்த்தாள், ஒலி நின்றது, அதில் கேமரா அவளை நோக்கி படம் பிடித்துக் கொண்டிருந்தது, அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது, ஒரு வித பதட்டத்துடன் ஆராய்ந்தாள், அதில் அவளுடைய உடை மாற்றும் வீடியோ இருந்தது கண்டு தலையில் கை வைத்தபடி அப்படியே அதிர்ச்சியாகி நின்றாள், அந்த சமயத்தில் பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கண்களில் லேசான கண்ணீர் தூளிகள் எட்டிப் பார்த்தது, ஒன்றும் புரியவில்லை, ஃபோனை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்
சிறிது நேரத்தில் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த நந்தனை முறைத்துப் பாத்தாள், சித்தி கையில் தன்னுடைய ஃபோன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றான் நந்தன்
"டேய் என்னடா இது, இப்படி ஒரு காரியம் பண்ணிட்டியேடா, ஐய்யோ டேய் நந்து என்ன காரியம் செஞ்சிட்டடா , ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டியேடா, ஐய்யோ எனக்கு என்ன பண்றது ன்னு தெரியலையே" என்று தலையில் கைவைத்துக் கொண்டாள், " டேய் இங்க என்னடா இருக்கு, இங்க ஒன்னும்மே இல்லடா, உன் அம்மா வேற, நான் வேற இல்லடா நந்து, நானும் அம்மா தான்டா நந்து, இங்க நம்மள சுத்தி நிறைய தப்பு நடக்குது, இதெல்லாம் பாத்து நீயும் ரொம்ப கெட்டுப்போயிட்ட, இது வெறும் உடம்பு தான்டா நந்து, இதுல என்ன இருக்கு, நீ கொழந்தயாயிருக்கும் போது நானும் இந்த மாருல உனக்கு பால் கொடுத்திருக்கேன், உன் அம்மா உன்ன எந்த வழியா பெத்தெடுத்தாங்களோ அது தான் இங்கியும் இருக்கு, உன் அம்மாவ இந்த மாதிரி பாக்கலாமா, இத பாக்கவா இந்த காரியம் செஞ்ச, ஐய்யோ நந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டியேடா நந்து" என்று தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்தாள்
மகேஷ்வரி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் உணர, உடலெல்லாம் வியர்த்து போய் கை கால்கள் நடுங்க நடுங்க அங்கு நிற்பதற்கே அருவருப்பாய், அவமானமாய் உணர்ந்து கண்களில் கண்ணீர் துளிகள் பெருகி அழுகை வர தயங்கி தயங்கி "அம்மா என்ன மன்னிச்சிடும்மா, அம்மா என்ன மன்னிச்சிடும்மா, இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண மாட்டம்மா, மன்னிச்சிடும்மா" என்று குரல் தொண்டையை அடைக்க கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு அப்படியே நின்றான் நந்து
"அம்மா மன்னிச்சிடும்மா , அம்மா என்ன மன்னிச்சிடும்மா" அம்மா என்ற குரல் அந்த நொடி அவளை சிந்திக்க வைத்தது
"அழாதடா நந்து, அழாத, அது இந்த வயசுல அப்படித்தான் இருக்கும், நீ ஒரு கொழந்தடா நந்து, கொஞ்சம் வளந்துட்ட, இந்த வயசு பருவம் மாற்றம் அடையும் போது அப்படித்தான் இருக்கும், அப்படித்தான் தோனும், வளர வளர இது தப்பு, இது சரின்னு நமக்கே புரியும், இங்க யாரும் பொம்பளைங்கள நினைக்காம ஆம்பளையா ஆவறது இல்லடா நந்து, பொம்பளையை நினெச்சாத்தான் ஒருத்தன் ஆம்பளையாவே ஆவமுடியும், எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான், இந்த உணர்வு இயற்கையானது நந்து, இந்த சமயத்தில தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், இங்க பொம்பளைங்க படுறபாடு, மாடு மாதிரி வளந்த மனுசஜென்மங்களுக்கே தெரியாத போது உனக்கெங்க புரியப்போவுது, இந்த வயசுல இந்த விஷயம் பிரம்மாண்டமா தான் தெரியும், காலவோட்டத்தில இது ஒண்ணுமே இல்லன்னு தானாவே புரியும், பிரமாண்டமா தெரியற எல்லா விஷயமும் அப்படித்தான்டா நந்து, இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணக்கூடாது நந்து, முதல்ல இந்த ஃபோன்ல இருக்கற அசிங்கத்த அழிச்சிடு, அப்படியே உன் மனசில இருக்கற அசிங்கத்தயும் அழிச்சிடு, இனிமே இந்த ஃபோனை தொடவே கூடாது புரியுதா, நீ நல்லா படிக்கனும்டா நந்து, நல்லா படிச்சு பெரிய பெரிய உத்யோகத்துக்கு போகனும், இந்த வயசுல இந்த மாதிரி எண்ணமெல்லாம் உன்ன படிக்கவிடாது, நல்ல எண்ணத்த வளத்துக்கோ, காலம் போற போக்குல எல்லாம் மாறிடும், எல்லாத்தையும் மாத்திடும் நந்து....." என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசற்கதவை திறந்து உள்ளே வந்தாள் கௌரி
"என்னடி ஈரத்தலையோட அப்படியே நின்னுட்டுருக்க, இவன் ஏன் அழுதிட்டுருக்கான், என்னடி என்ன ஆச்சு" என்று அருகிலிருந்த சேரில் அமர்ந்தாள் கௌரி
"ஏ ஒன்னும் இல்லைடி இவன் பாத்ரூம் ல தப்பான படம் பாத்திட்டுருந்தான், அதான் கூப்ட்டு பேசிட்டுருந்தேன் என்று அவளுக்கு பதிலளித்து விட்டு நந்துவிடம் "டேய் இனிமே இந்த மாதிரி படம்லாம் பார்க்கக்கூடாது, சரியா, சொல்றது புரியுதா, நல்லா படிக்கனும், சரி சரி போ போயி எக்ஸாமுக்ககு படிக்கிற வழிய பாரு போ" என்றாள் மகேஷ்வரி
"ச்சரிம்மா" என்று கண்களை துடைத்து கொண்டு அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நந்தன்
"ஏ உண்மைய சொல்லு என்னடி ஆச்சு"
"அதான் சொன்னேனேடி, பசங்க இந்த வயசுல அப்படித்தான் இருக்கும், என்ன பண்றது இந்த சமாச்சாரத்தை பத்தி இந்த பசங்க கிட்ட யாரு பேசி புரிய வைக்கிறது, என் பையனும் பாத்ரூமுக்கு போவும் போது போன் எடுத்துட்டு தான் போறான், யாருக்கு தெரியும் அவன் மண்டைல என்ன ஓடுதோ"
"இல்ல நீ எதையோ மறைக்கிற என்னடி ஆச்சி, நீ எதுக்கு அழுவுற, உன் கண்ணுலாம் ஏன் கலங்கினா மாதிரி இருக்கு, என்னடி ஆச்சி" என்று சற்று அதட்டலாகவே கேட்டாள் கௌரி
"ஒன்னுல்லடி இந்த பையன் நான் ட்ரஸ் மாத்தரத வீடியோ எடுத்துட்டான்டி, அதை நான் பாத்துட்டேன், எனக்கு என்ன பண்றது ன்னு தெரியல, ஒரே எரிச்சல் அதான் கொஞ்சம் கோவமா திட்டிட்டுருந்தேன்" என்றாள் கண்களில் நீர் பெருக .
"வீடியோ எடுத்தானா செருப்ப கழட்டி அடிக்கறத்தான, அறிவு கெட்ட நாயி, ஒரு வரையறைவானா, நீ ஏன்டி சும்மா விட்ட, ரெண்டு அற விடவேண்டியதான" என்று எழுந்தாள் கௌரி
"ஏய் ஒக்காருடி, இதுக்கு தான்டி எதுவும் சொல்லக் கூடாதுன்னு நெனச்சேன், அவனும் எனக்கு புள்ள மாதிரி தான்டி, என்னவோ திடீர்னு இப்பிடி புத்தி மாறி போச்சி சரி விடு" என்றாள் மகேஷ்வரி
"என்னடி இவ்ளோ சாதாரணமா விடுன்னு சொல்ற, இந்த பையன் புத்தி இப்டி தான் போவும் ன்னு எனுக்கு அப்பவே தெரியும், அது சேர்ர செட்டு சரியில்ல, அதுமட்டுமில்லடி அது அவுங்க அப்பா அம்மா வளர்ப்பு அப்படி"
"ஏய் கத்தாதடி, ஒரு குழந்தை வளர்றது அப்பா, அம்மா மட்டும் கிடையாதுடி, இந்த சமூகமும் தான், எந்த அப்பா, அம்மாவும் தான் புள்ள இப்டி ஒரு தப்பு பண்ணுன்னு நினைச்சு கூட பாக்க மாட்டாங்கடி, எல்லாரும் தன்னோடபுள்ள நல்லா படிச்சு நல்லா வளரும்ன்னு தான் நினைப்பாங்க, ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான்டி அப்பா, அம்மா, எல்லாம் அதுக்கப்புறம் நம்ம சுத்தியிருக்கற இந்த சமூகம் தான், ஏன் நம்ம வீட்டுலயே இந்த ஆனந்த் பையன் எந்த சிந்தனையும் இல்லாமலா பெரியமனுசனாயிருப்பான், இது இந்த வயசுல வர பாலின ஈர்ப்புடி அது அப்படி தான் இருக்கும், இத பெரியவங்க தான் இந்த வயசு பசங்களுக்கு சொல்லி புரியவைக்கனும்"
"ஏய் என்னடி ஒருத்தன் இவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கான், அது நியாயப் படுத்துற மாதிரி பேசுற"
"ஐயோ ஏய் நான் அவன் செஞ்சது சரின்னு சொல்லடி, எல்லாத்தையும் புரிஞ்சுக்க ஒரு வயசு இருக்குன்னு செல்றேன், நேத்து கூட பஸ்ஸுல போவும் போது ஒருத்தன் என் இடுப்புல கைய வச்சு அழுத்தறான், அந்த நாயிக்கி 40, 45 வயசிருக்கும், டெய்லி இதே வேலையாத்தான் திரியுது புடிச்சு ரெண்டு அறை விட்டேன், ஆபீஸ்ல வாட்ச்மேன் வேல செய்யற கிழட்டு நாயி எப்படா கொஞ்சம் ச்சான்ஸ்சு கிடைக்கும்ன்னு நாக்கை தொங்கப் போட்டு திரியுது, ஆபீஸ் முழுக்க குனிஞ்சி நிமிந்து பெருக்கும் போது எவன் எவன் கண்ணு எங்கெங்க போகும் ன்னு எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்கேன், இங்க பொம்பளைங்க நிலமைய எவன் புரிஞ்சுக்கறான், நாமளும் எல்லாத்தையும் கடந்து தானடி வந்திருக்கோம் இதெல்லாம் நமக்கு புதிசில்லே"
"அது சரிடி அவங்க அப்பா அம்மாக் கிட்டயாவது இனிமேலாவது பையன ஒழுக்கமா இருக்க சொல்லி கொடுங்க ன்னு சொல்லலாம் ல"
"ஏய் முதல்ல ஒழுக்கம் ன்னா என்ன?
அத சொல்லுடி, இங்க பெரும்பாலும் ஒழுக்கம் ன்னு சொன்னவுடனே கடவுள் பக்தி, நேர்மை, திருடக்கூடாது, பொய் சொல்ல கூடாது ன்னு உளருவானுங்க, ஒருத்தரோட வறுமைய பயன்படுத்தி வட்டிக்கு பணம் கொடுத்து அடுத்தவன் உழைப்பை சொரண்டி திங்கறவனும், நேர்மைய பத்தியும், கடவுள் பக்திய பத்தியும் பேசுவான், அப்பறம் இவனுங்களுக்கு ஒழுக்கம் ன்னா நேரா பொம்பளைங்க இடுப்புக்கு கீழே தான் ஞாபகம் போகும், இந்த சமூகம் இப்படி தான் நம்மள வளக்குது, இந்த சமூகம் சொல்ற மாதிரி நாம இருக்கோமா? சரி நமக்கு சொல்லிக் கொடுக்கற மாதிரி இந்த சமூகம் இருக்குதா? இங்க அவனவனுக்கு ஒரு ஒரு நியாயம், சந்தர்ப்ப சூழ்நிலை தகுந்த மாதிரி மாறிக்கிட்டு போய்ட்டு இருக்கானுங்க, மாட்டிக்கினவன் குற்றவாளியா நிக்குறான், மாட்டாதவன் ஒழுக்கம் பேசிட்டு திறியுறான்" என்ற மகேஷ்வரி சிறிது மௌனத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள், "இருந்தாலும் இந்த சமூகம் பொதுவான ஒரு நியாயத்தை சொல்லிகிட்டு தான் இருக்கு, அந்த நியாயம் ஒவ்வொரு மனுசனுக்குள்ள இருக்குற மனிதாபிமான உணர்வு சம்மந்தப்பட்டது, அந்த மனிதாபிமான உணர்வுக்கு பேர்தான் ஒழுக்கம், நம்மளோட உணர்வு ன்றது, நாம வாழக்கூடிய இந்த சமூக சூழ்நிலையிலருந்து தான் டி பொறக்குது, பாலுக்கும் கஞ்சிக்கும வழியில்லாத இந்த சமுகத்தில எப்படிப்பட்ட உணர்வு வளரும்?, இதுல இவனுங்க சொல்ற ஒழுக்கம் எப்படி இருக்கும்?"
"ஏய் இருடி என்னென்னவோ பேசிட்டு போற, என்னடி இவ்ளோ வெகுளியா இருக்க, அவன் தப்பு பண்ணியிருக்கான் அட்லீஸ் அவனை கால்ல விழுந்து மன்னிப்பாவது கேட்க சொல்லுடி அப்பத்தான்டி அவன் திருப்பி தப்பு பண்ணமாட்டான்"
"ஏய் இல்லடி அவன் தெரிஞ்சு இந்த தப்பு பண்ணலடி அவனுக்குள்ள ஏதோவொரு மாற்றம் நடக்குது, அவன் இந்த உடம்புக்குள்ள அப்படி என்ன அதிசயம் இருக்குன்னு தெரிஞ்சிக்க நெனைக்கிறான், அதனால இப்படி ஒரு காரியம் பண்ணிட்டான், ஆனந்தை மாதிரி அவனும் ஒரு கொழந்த தான்டி, இந்த வயசுல, இந்த தப்புக்காக அவனை கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னா, அது அவன் மனசுல ஆழமா பதிஞ்சிடும், அது அவன் வாழ்நாள் முழுக்க, தான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டதா, அவனுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கும், ஒரு ஒரு நாளும் அவன் இத நெனச்சி நெனச்சி வருத்தப்படுவான், அதனால அவனுடைய படிப்பும் பாதிக்கும், அவனுடைய மனநிலையும் பாதிக்கும், அதனால இந்த விஷயத்தை நாம ஒரு பொம்பளையாயிருந்து பாக்கறத விட ஒரு அம்மாவாயிருந்து பாக்கனும்டி, நீ கவனிச்சியா இவ்ளோ நாள் சித்தி ன்னு கூப்டவன், இன்னிக்கு அம்மா ன்னு கூப்புடுறான், அவனும் என் புள்ளதான்டி, பெத்தாத்தான புள்ளையா? என்னடி ச்சும்மா உடம்பு உடம்பு ன்னு, அப்பிடி என்ன தான் இருக்குது இந்த உடம்புல, ஒரு கட்டத்துல இந்த உடம்புல எல்லாமே வெறுத்து போயிடுது, ஒன்னும்மே இல்லடி, இப்படி ஒன்னும்மே இல்லாத உடம்பு மேல எவ்ளோ பெரிய கட்டமைப்பு, நாமலே நெனச்சாலும் இதுலருந்து வெளிவர முடியாத அளவுக்கு நாம இந்த கட்டமைப்புக்குள்ள சிக்கிக் கிட்டு இருக்கோம், நிர்வாணம் ன்னா என்ன? உடம்புல துணி இல்லாம இருக்கறதா நிர்வாணம்? ஒரு குழந்தைய குளிப்பாட்டும் போதும், ஒரு பொணத்த குளிப்பாட்டும் போதும் நிர்வாணத்த பத்தி யாரும் யோசிக்க மாட்டாங்கடி, ஹாஸ்பிடல்ல பிரசவம் பாக்கும் போது டாக்டர் முன்னாடி நிர்வாணமாத் தான் படுத்து கிடக்கிறோம், எல்லாமே அந்தந்த சூழ்நிலை தான்டி, இந்த சமூகம் நிர்வாணத்தை பத்தி ஒரு தப்பான கண்ணோட்டத்தை உருவாக்கி வெச்சிருக்கு, இந்த பசங்களுக்கு வீட்ல, இல்லன்னா ஸ்கூல்ல, படிப்போட இந்த விஷயத்தை பத்தின சரியான புரிதலை ஏற்படுத்திட்டா போதும் ஓரளவுக்கு இங்க எல்லாம் மாறிடும், என்ன கேட்டா நிர்வாணம் ன்றது, ஒருத்தன் ஒரு தப்பு பண்ணிட்டு தப்பிக்க எந்த வழியும் இல்லாம குற்றவுணர்ச்சியோட கைகட்டி நிர்க்கதியா நிக்கறதுக்கு பேரு தான்டி நிர்வாணம், தினமும் இந்த மாதிரி நிறைய ஆம்பளைங்கள நான் பாத்துட்டு தான்டி இருக்கேன்"
"என்னவோடி வர வர நீ ரொம்ப பெரிய மனுசியாயிட்டு வரடி" என்று தனது அக்கா மீது மிகுந்த மரியாதை கொண்டவளாய் பார்த்தாள் கௌரி.
"ஆமாண்டி வயசாக வயசாக நாமளும் பெரிய மனுசங்க தானே" என்று எங்கெங்கோ சுற்றி திரிந்து, கருவுற்று குட்டிகளை சுமந்து கிடக்கும் கருப்பாயிக்கு ஒரு தட்டில் பாலூற்றி வைத்தாள் மகேஷ்வரி .
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் தோழர்களே
சி . பாபு தாஸ்a
No comments:
Post a Comment