அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும் இந்தப் பகுதியிலிருந்து விவாதிக்க போகிறோம் தோழர்களே...
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.
எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் - முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் - இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது". என்கின்றனர்.
இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நம்மை ஆண்டவர்கள் நம் சமூக வளர்சியை முடமாக்கி அவர்களின் தேவைக்கான ஒரு சமூகமாக ஆங்கிலேயர்கள் வைத்திருந்தமையால் இன்று சாதி மத மோதல்களும் தேசிய இனப்பிரச்சினைகளும் மேலோங்கி உள்ளது அதற்கு காலனிய ஆதிக்கவாதிகளின் நலனிலிருந்து கணக்கிட்டால் தெளிவுப்பெறுவோம்.
நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்துறை அமைப்புமுறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டவர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது.
கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வியாபாரம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாக விற்பனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் - ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.
நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியைத் அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தனது மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.
இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு - உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.
முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது.
முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
பிற்போக்காளர்கள் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான்.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.
மேலே பேசப்பட்டுள்ள பகுதி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பக்கம் 41-51 வரை சுருக்கம் மட்டுமே.
இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவம் அதன் முற்போக்கு முகமூடியை இழந்து விட்டதை ஆசான் லெனின் விளக்கியுள்ளார்.
நாம் இங்கே தேடுவது நம் சமூக அமைப்பில் உள்ள பிற்போக்கு நிறுவனங்களையும் அதன் பங்களிப்பும் ஏன் நிலவுகிறது என்பதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய ஆசான்களை புரிந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
இந்தியாவில் இன்றுள்ள நிலையில் பிற்போக்கு மதமும் சாதியும் ஏன் கோலோச்சுகிறது என்பதனை சமூக அரசியல் பொருளாதார நிலையோடு கட்டுண்டு கிடக்கும் சமூக வேர்களை புரிந்துக் கொண்டால் இதற்கு பதில் கிடைக்கும். ஏன் சில மார்க்சியவாதிகளே மார்க்சிய சமூக விஞ்ஞான புரிதல் இன்மையால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பேன். அதனால் மார்க்சியம் எனும் கடலில் நீந்த தயார் ஆவோம் சரியான மார்க்சிய சமூக தத்துவ அரசியல் பொருளாதாரத்தை கற்று தேர்வோம் தோழர்களே....
No comments:
Post a Comment