அம்பேத்காரியம், பெரியாரியம், மார்க்சியம் . . .
-------------------------------------------------------------------
சாதிய அடிப்படையில் இந்தியாவில் நீடித்துவருகிற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அம்பேத்கார். இவர் சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவராக - அவர்களின் அடையாளமாக - இன்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனதில் நிலைகொண்டுள்ளார். இந்தியாவில் சாதியக்கொடுமைகளுக்கு அடிப்படையான பல்வேறு சமுதாயக் கூறுகளை இனம்கண்டு, அவற்றைத் தெளிவுபடுத்தினார். உயர் வர்க்கங்களால் அவர் சூழப்பட்டிருந்தபோதிலும் அவற்றைப்பற்றிக் கவலைப்படாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நின்றார். சாதியத்திற்கு எதிராக - குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின்மீதான பிற 'உயர் சாதியினரின்' கொடுமைகளை எதிர்த்துநின்றார். இவருடைய கருத்துகளும் செயல்களும் ஒரு 'இயமாகவே' - அம்பேத்காரியமாகவே - இன்று நீடிக்கிறது.
பெரியார் தமிழகத்தில் நீடித்துவந்த பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார். மதத்தின்பெயரில் பிற சாதியினர்மீது பிராமணியம் தொடுத்துவந்த சமுதாயக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தார். பிராமணியத்தின் அடிப்படை புராணக்கதைகளிலும் கடவுள் வழிபாட்டிலும் நீடித்ததால், அவற்றை எதிர்த்து நின்றார். தமிழ் இலக்கியங்கள், பண்டிகைகள், சடங்குகள் போன்றவற்றில் எவ்வாறு பிராமணியம் பிற சாதியினர்மீது ஆதிக்கம் செலுத்திவந்தது என்பதை, மக்களுக்கும் எளிமையாகப் புரியும்வகையில் பேசினார்; எழுதினார்; பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். பல தாக்குதல்களுக்கு உட்பட்டார். அம்பேத்காரியம்போன்று, இவருடைய கருத்துகளும் செயல்களும் ஒரு 'இயமாகவே' - 'பெரியாரியமாகவே' - இன்று நீடிக்கிறது.
19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரல்மார்க்ஸ் ஒட்டுமொத்த உலகில் உழைக்கும் வர்க்கங்களுக்குமீதான முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக நின்றார். இந்த ஒடுக்குமுறைக்கு அடிப்படையான சமுதாயப் பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை அறிவியல்பூர்வமான - புறவய ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கினார்.
முதலில் தமது ஆய்வுகளுக்கு அடிப்படையான தத்துவக் கண்ணோட்டத்தை விளக்கினார். இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகிய மூன்றையும் புறவயமாக விளக்கக்கூடிய அறிவியல் தத்துவத்தை முன்வைத்தார். அதனடிப்படையில் மனித குல வரலாறு எவ்வாறு மாறுதல்களுக்கு உட்பட்டு இன்றைய முதலாளித்துவ சமுதாயவளர்ச்சியை எட்டியுள்ளது என்பதை விளக்கினார். இந்த முதலாளித்துவ வளர்ச்சியும் அடுத்து என்னென்ன நெருக்கடிகளைச் சந்தித்து வீழ்ச்சியடையும் என்பதை விளக்கினார்.
முதலாளித்துவத்திற்கு அடிப்படையான 'மூலதனம்' 'உபரிமதிப்பு' 'கூலி' ஆகியவற்றை விளக்கினார். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே பிற அரசியல், சமுதாய ஒடுக்குமுறைகளுக்கு அடிப்படை என்பதைத் தெளிவுபடுத்தினார். முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய அமைப்புகளில் உழைக்கும் மக்களின்மீதான பொருளாதார, அரசியல், பண்பாட்டு ஒடுக்குமுறைகள் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை விளக்கினார்.
இன்றைய முதலாளித்துவம் எப்படிப்பட்ட நெருக்கடிகளை - புறவயமான நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதை விளக்கி, அது எவ்வாறு பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான ஒரு சோசலிச சமுதாய அமைப்பை ஏற்படுத்தும் என்பதைக் கூறினார். அச்சோசலிச சமுதாயத்தின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் எதிர்காலத்தில் ஒரு பொதுவுடைமைச் சமுதாயமாக - சுரண்டல் அற்ற சமுதாயமாக - வர்க்கமற்ற சமுதாயமாக மலரும் என்பதைப் புறவய ஆய்வுகளின்வழி விளக்கினார். சோசலிச, பொதுவுடைமைச் சமுதாய அமைப்புகளே பொருளாதாரச் சுரண்டல்களைமட்டும் அல்லாமல், அரசியல் ஒடுக்குமுறை, பண்பாட்டு ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அழித்தொழிக்கும் என்பதை விளக்கினார்.
மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோர் முன்வைத்த ஆய்வுகளின் அடிப்படையில் சோவியத் ரசியாவில் லெனின் . ஸ்டாலின் ஆகியோரும் சீனாவில் மாசேதுங்கும் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிரான உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்களை முன்கொண்டுசென்றனர். மேலும் மார்க்ஸ் காலத்தில் நிலவாத புதிய சமுதாயக்கூறுகளை - ஏகாதிபத்திய வளர்ச்சியை - இவர்கள் இனங்கண்டு, அதற்குத் தகுந்தவகையில் தங்களது புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோர் அனைவரின் ஒட்டுமொத்தக் கருத்துகளும் நடைமுறைகளுமே இன்றைய 'மார்க்சியமாகும்'.
மக்கள்மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் - பொருளாதார, அரசியல், பண்பாடு, தத்துவம் என்னும் அனைத்துத்தளங்களிலும் நீடிக்கிற ஒடுக்குமுறைகளுக்கும் - எதிரான ஒன்று மார்க்சியம் ஆகும். ஒரு முழுமை ஆகும். மத, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்க்கிற பெரியாரியம், அம்பேத்காரியம் போன்றவை மார்க்சியம் என்னும் முழுமையின் சில பகுதிகள். மார்க்சியத்தின் போராட்டங்களில் இவையும் அடங்கும்.
இப்பகுதிகள் மார்க்சியம் என்னும் முழுமையில் அடங்கும். ஆனால் பகுதிகள் முழுமையாகாது. எனவே, முழுமையான மார்க்சியத்தைப் பகுதிகளுக்குத் தாழ்த்திக் கூறுவது தவறு. மார்க்சியப் பெரியாரியம், மார்க்சிய அம்பேத்காரியம் போன்ற சொல்லாட்சிகள் சரியானவை அல்ல என்ற்பது எனது கருத்து.
மேலும் மார்க்சியத்தின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைப் பெரியாரியமோ அம்பேத்காரியமோ ஏற்றுக்கொள்ளவில்லை. இவை இரண்டுமே இயங்கியல் ஆய்வுமுறை இல்லாத கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமே. பொருளாதாரக் கோட்பாட்டிலும் இவை மார்க்சியக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் தளத்திலும் பாட்டாளிவர்க்க அரசு நிறுவப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. பண்பாட்டுத்தளத்திலும் மார்க்சியத்தின் வரலாற்றுப்பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை இவை இரண்டும் கொண்டதில்லை.
இவை இரண்டுமே மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவான இயக்கங்கள் என்பதில் ஐயம் இல்லை! உறுதியாக, இவை ஆளும் வர்க்கங்களின் இயக்கங்கள் இல்லை. மாறாக, சமுதாயத்தை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்பும் ஜனநாயக சக்திகளே ஆகும். ஆனால் மார்க்சியத்தின் வர்க்கக்கண்ணோட்டத்தில் - இயங்கியல் ஆய்வுமுறையில் - இவை தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டதில்லை. அப்படியிருக்க, மார்க்சியப் பெரியாரியம், மார்க்சிய அம்பேத்காரியம் என்னும் சொல்லாட்சிகளைப் பயன்படுத்துவது சரியல்ல.
பகுதியானது முழுமையின் அங்கங்களே. முழுமைக்குள் பகுதி அடங்கும். ஆனால் பகுதிக்குள் முழுமை அடங்காது. மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களுக்கான ஒரு முழுமையான தத்துவம் - முழுமையான பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கோட்பாடு ஆகும். பகுதிகள் முழுமையின் பண்புகளை ஏற்றுக்கொண்டு, அடுத்த உயர்நிலைக்குச் செல்லவேண்டும். மாறாக, முழுமையைப் பகுதியாக்க் கீழே இறக்குவது சரி இல்லை.
மார்க்சியத்திற்குள் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்கள் - பொருளாதாரம், அரசியல், பண்பாட்டு நலன்கள் - அடங்கும். எனவே இதை உணர்ந்து, பகுதிகளுக்கான பிற இயக்கங்கள் முழுமைக்கான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல், முழுமையைப் பகுதிக்குத் தாழ்த்துவது கூடாது.
ஆளும் வர்க்கங்கள், குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களுடன் சமரசம் செய்துகொள்வதற்காக, அவற்றின் 'அங்கீகாரத்தைப் பெறுவதற்காக' திருத்தல்வாதிகள் இவ்வாறு செய்கிறார்கள். அவ்வளவே. இவ்வாறு திருத்தல்வாதிகளாக இருந்தால் ஆளும் வர்க்கங்கள் இவர்களுக்கு 'விருதளித்து' மரியாதை செய்வார்கள், அவ்வாறு இல்லாமல் இருந்தால், . . . . ?
மார்க்சியம் மார்க்சியமாக இருக்கட்டும். அதனைத் தரம் தாழ்த்தாதீர்கள்!
மார்க்சியக் கடலுக்குள் பிற குட்டிமுதலாளித்துவ ஆறுகள் எல்லாம் சங்கமிக்கவேண்டும். பாட்டாளிவர்க்கத்தின் அரசின் கீழ், உபரிமதிப்பின் ஆணிவேரைப் பிடுங்கி, சமூகமயமாகிய உற்பத்திக்கு (உற்பத்தி சக்திகள்) ஏற்ப உற்பத்தியின் பயன்பாட்டையும் (உற்பத்தி உறவுகள்) சமூகமயமாக்கி , ஒரு வர்க்கமற்ற மனித சமுதாயத்தை நோக்கிப் பாதை அமைக்கும் புறவயமான வரலாற்று வளர்ச்சியை அறிவியல்பூர்வமாக விளக்கும் மார்க்சியத்தைத் தேவையில்லாமல் கொச்சைப்படுத்துவதே இந்த 'இயங்களை' முன்வைக்கும் குட்டிமுதலாளித்துவ அரசியல். இறுதியில் இவை ஆளும் சுரண்டும் வர்க்கங்களின் நலன்களுக்குச் சேவை செய்வதில்தான் முடியும்.
எனது கேள்வி . . . இவர்கள் திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காகச் செயல்பட்டார்களா? அல்லது இவர்களது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் அமைந்த 'சீர்திருத்தச் சிந்தனைகள்' அவர்கள் உணராமலேயே ஆளும் வர்க்கங்களின் நலன்களைக் காப்பாற்றப் பயன்பட்டதா? இவர்களின் வரலாற்றுப்பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அமையாத குட்டிமுதலாளித்துவச் சிந்தனைப் போக்குகளையும், அவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளையும் இறுதியில் ஆளும் வர்க்கங்கள் தங்கள் நலன்களைக் காப்பாற்றவே பயன்படுத்திக்கொள்வார்கள்! பிராமணியத்தை எதிர்த்த பிற சாதிகளின் போராட்டங்களை ஆங்கிலேயர் ஆட்சி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதுபோன்று பிராமணியத்தை எதிர்த்த சாதிகளின் போராட்டங்களைப் பிளவுபடுத்த 'தாழ்த்தப்பட்ட சாதியினர்' போராட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சி மறைமுகமாக ஆதரித்தது. பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லுநர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.இவர்களின் உலகக் கண்ணோட்டம் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமாக இருப்பதால், இறுதியில் இது ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகிறது. மேலும் ஆளும் வர்க்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் பாட்டாளிவர்க்கக் கட்சியைநோக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள்.
இங்கு ஒரு சரியான புரட்சிகரக் கட்சி இருந்திருந்தால், மேற்கூறிய போராட்டங்களைத் தங்களது புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டங்களைநோக்கித் திருப்பியிருக்கும். ஆனால் அந்த முயற்சி சரிவர நடைபெறவில்லை. மாறாக, அவர்களை நோக்கி, தங்களைத் திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மார்க்சியப் பெரியாரியம், மார்க்சிய அம்பேத்காரியம் போன்ற சொல்லாட்சிகள் இங்குத் தோன்றி நீடிக்கின்றன. பெரியார் , அம்பேத்கார் இயக்கத்த்தார் மார்க்சிய இயக்கங்களின் இரண்டறக் கலப்பதற்குப் பதிலாக, ''பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள்!!!'' பெரியாரியத்திலும் அம்பேத்காரியத்திலும் தங்களைக் 'கரைத்துக்கொள்கிறார்கள்' - எதையோ 'எதிர்பார்த்து'!
அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின்மீது ஏவிவிடப்படுகிற சமூகக்கொடுமைகளுக்கு எதிராகப் பேசியதும் போராடியதும் . . . ஆளும் வர்க்கங்களின் நலன்களைத் திட்டமிட்டுக் காப்பாற்றுவதற்காகத்தான் என்று கூறமுடியுமா? சமூகக்கொடுமைகளின் ஆணிவேர் எது என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம். ஆணிவேரைப் புரிந்துகொண்டு, அதை அகற்றுவதற்கான போராட்டங்களில் ஈடுபடவில்லை. முதன்மையான முரண்பாட்டைப் புரிந்துகொள்ளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதியக்கொடுமைகள், தமிழ்நாட்டில் பிராமணய ஆதிக்கம் அவற்றிற்கான சமூக அடிப்படைகளை அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை. அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. இது இறுதியாக அவர்களின் போராட்டங்களை ஆளும் வர்க்கங்கள் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்தது.
No comments:
Post a Comment