இந்த நூல் PDF வடிவில் இறுதியில் உள்ளன வாசிக்க டவுன்லோட் செய்துக் கொள்ளுங்கள் தோழர்களே.
இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும்வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம் 1
முழுமையாக முடியும் வரை இந்தப் பகுதி
வெளியிடப்படாமல் காத்திருக்க தேவையில்லை. இந்தியாவின் தேசிய இனச்சிக்கல் என்பது
இன்றைய பெரும் அரசியல் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இது பற்றி விரிவான கலந்துரையாடலும்
விவாதமும் தேவைப்படுகிறது.
விளக்கம்:- இந்தியாவிலுள்ள தேசிய இனச்சிக்கலைப்
பற்றி கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்தவில்லை என்று தமிழ் தேசிய
இனவாதிகளும் மார்க்சியத்தை கைவிட்டுவிட்டு ஓடி இனவாதிகளாக மாறியவர்களும்
கம்யூனிஸ்டுகளின் மீது குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் சிறந்த மார்க்சிய
லெனினியசித்தாந்தவாதியான தோழர் சுனிதிகுமார் கோஷ் அவர்கள் இந்தியாவிலுள்ள தேசிய
இனச்சிக்கலைப் பற்றி விளக்கி நூல் எழுதியுள்ளார். ஆனால் இங்குள்ள தேசிய இனவாதிகள்
இனப்பிரச்சனை பற்றி கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரச்சனைக்கு
தீர்வுகாண்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் உலகில்
தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு விஞ்ஞானப்பூர்வமான தீர்வு
கண்டது மார்க்சிய லெனினியம் மட்டுமே. மார்க்சிய லெனினியவாதிகள்
இந்தியாவில் தேசிய இனச்சிக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே
இருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மார்க்சிய லெனினியக்
கண்ணோட்டத்தில் இப்பிரச்சனை பற்றி விரிவான கலந்துரையாடலும் விவாதங்களும் தேவைப்படுகிறது.
மேலும் இது குறித்து விரிவான தகவல்களையும் நாம் சேகரித்து இதற்கு ஒரு
விஞ்ஞானப்பூர்வமான தீர்வை நாம் வந்தடைய வேண்டியது மிகமிக அவசியமாகும்.
90 கோடிகளுக்கும் மேல் மக்கள் தொகையுடைய
இந்தியாவானது ஒரு பல்தேசிய அரசு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
ஆகும். தங்களின் சொந்த மொழி, வாழ்க்கை முறைகள், மரபுகள், பண்பாடு, தனித்தன்மையுடன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய
இனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் பழமையானவை ஆகும். அவற்றில்
சில உதித்து எழுந்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் பல
விழித்தெழ உள்ளன. பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை
உணர்தல் என்பது தேசிய இனங்களுடைய இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.
அவற்றின்
இறுதி ஒற்றுமையானது முழுமையான சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே நிகழ முடியும்.
விளக்கம்:-இந்தியா பலகோடி மக்கள்தொகை கொண்ட
பலதேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு ஆட்சிப்பகுதியாகும். இங்குள்ள தேசிய இனங்களில் பெரும்பாலானவை மிகப் பழமையானவையாகும். ஒவ்வொரு தேசிய இனமும் அவர்களுக்கென்று தனிச் சிறப்பான மொழியும் தனிச் சிறப்பான
வாழ்க்கை முறையையும், மரபுகளையும் பண்பாட்டை கொண்டும் வெவ்வேறு
பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். இந்த தேசிய இனங்களுக்கு இடையே ஒற்றுமையைக்
காட்டிலும் வேற்றுமையே அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் சில தேசிய இனங்கள்
இப்போதுதான் உதித்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில தேசிய இனங்கள் வருங்காலத்தில்
உதித்தெழும். இந்தச் சூழலில் ஒவ்வொரு தேசிய இனமும் அவர்கள் சுதந்திரமாக
வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்வது நியாயமானதாகும். அதேவேளையில்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இன மக்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்வதும்
மிகமிக அவசியமானதே ஆகும். இந்த ஒற்றுமையிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இவ்வாறு
ஒவ்வொரு தேசிய இனமும் சுந்திரமாக வாழ்வதற்கும், தேசிய இனங்களுக்கு இடையே ஒற்றுமையை பாதுகாப்பதற்கும் ஒரேவழிதான் உண்டு. அதாவது
ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் (தேசத்துக்கும்) பிரிந்துபோகும் உரிமையான சுயநிர்ணய
உரிமையை வழங்கி அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இந்திய கூட்டரசில்
ஒன்றிணைக்க வேண்டும். இங்கே தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்குவதே
நமது இறுதி நோக்கமாகும். இந்த இறுதி நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு தேசிய
இனத்துக்கும் அல்லது தேசத்துக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம்
என்ற வழிமுறையைத் தவிர வேறுவழி இல்லை.
இதற்கு மாறாக ஒவ்வொரு தேசிய இனத்தையும் கட்டாயப்படுத்தி
ஒற்றை ஆட்சியின் கீழ்கொண்டுவந்து அடக்கினால், அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு தேசிய இனமும் அந்த அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த வழிமுறையில் தேசிய இனங்களுக்கு இடையில் எப்போதும் ஒற்றுமையை ஏற்படுத்தவே முடியாது. ஆகவே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை உணர்வது இன்றைய வரலாற்றுக் கட்டத்தின் கடமையாகும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.
இன்றைய பிரச்சனையினுடைய பன்முகச் சிக்கல்களைப்
புரிந்து கொள்ள அதை அதனுடைய வரலாற்று நிலையில் வைத்துப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள
முடியும். இந்தப் பிரச்சினையை இவ்வளவு மோசமாகச் செய்த உடனடியான கடந்தகால
நிகழ்ச்சிகளைப் பற்றிய சுருக்கமான வரைவை தருவதற்கு இந்தப் புத்தகத்தில் முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேசியப் போராட்டமும் உள்ளடக்கத்தில் ஒரு
வர்க்கப் போராட்டம் ஆகும். வெளிநாட்டு சுரண்டல்காரர்கள், ஒடுக்குமுறையாளர்களாகிய வர்க்கம் அல்லது வர்க்கங்கள் மற்றும் தேசிய இனத்திற்குள்ளேயே சுரண்டல்காரர்களாகிய வர்க்கம் அல்லது வர்க்கங்களுக்கு எதிராக, அவர்களை நோக்கி இருக்க வேண்டும். பொது எதிரிகளை இந்தப் போராட்டத்தில் இவர்கள் வெல்வதற்கு முதன்மையான உத்தரவாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட
மக்களின் ஒற்றுமையாகும். ஒவ்வொரு தேசிய இனமும் சுய நிர்ணய உரிமையை அடைவதற்கான
கடுமையான போராட்டத்தில் இந்த ஒற்றுமை அவசியமானதாகும். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான
போராட்டங்கள் இந்தியப் புரட்சியின் பொதுவான பிரச்சனையுடன் நெருக்கமாக
இணைந்துள்ளதாகும்.
தங்களின் லட்சியத்தை அடைய இந்தியாவில் உள்ள தேசிய
இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் தங்களுக்குள்
ஒருங்கிணைந்து தோளோடு தோள் நின்று போராடுவது என்பது இந்திய
வரலாற்றின் போக்காக உள்ளது.
விளக்கம்:- இந்தியாவில் நிலவும் தேசிய
இனச்சிக்கலைப் புரிந்துகொள்ள நாம் கடந்தகால வரலாற்றை ஆய்வு செய்து முடிவு
செய்ய வேண்டும்.
ஆகவே நாம் வரலாறு குறித்த தகவல்களை சேகரிக்க
வேண்டும். அதனை இயக்கவியல் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்து இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான குறிப்பான தீர்வை
காணவேண்டும்.
ஒவ்வொரு தேசிய இனத்தையும் அல்லது தேசத்தையும்
சுரண்டல நோக்கமாகக் கொண்டவர்களே அவர்களது சுரண்டலின் நலனிலிருந்து அடிமைப்படுத்தி ஒடுக்குகிறார்கள் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகாரணமாகவே பல்தேசிய அரசின் கீழ் உள்ள தேசிய இனங்கள் தேசிய இனச்சிக்களை சந்திக்கின்றன.
ஆகவே இந்தச் சிக்கலைத் தீர்க்கும் போராட்டத்தில்
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அல்லது தேசங்கள் அவர்களை ஒடுக்குகின்ற
வர்க்கம் அல்லது வர்க்கங்களை எதிர்த்துப் போராட வேண்டியது
அவசியமாகிவிடுகிறது. ஆகவேதான் ஒவ்வொரு தேசியப் போராட்டமும் ஒரு
வர்க்கப் போராட்டமே என்று மார்க்சிய லெனினியம் தெளிவாக வரையறை
செய்கிறது. மேலும் இந்தப் போராட்டத்திற்கான தீர்வாக இன்றைய ஏகாதிபத்திய காலக்கட்டத்தில்
தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற கொள்கையை மார்க்சிய லெனினியம்
முன்வைக்கிறது. மேலும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டத்தில் அந்நிய சுரண்டல்காரர்களையும்
தேசிய இனத்திற்குள்ளேயே உள்ள சுரண்டல்காரர்களையும் எதிரிகளாக மார்க்சிய லெனினியம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த எதிரிகளால் பாதிக்கப்படுகின்ற
ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள்
அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்றும் மார்க்சிய லெனினியம் நமக்கு வழிகாட்டுகிறது.
இந்திய வரலாற்றில் இங்குள்ள அனைத்து தேசங்களையும் ஒடுக்கிய பிரிட்டீஷை எதிர்த்தப்
போராட்டத்தில் அனைத்து தேசிய இன உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டு போராடி வீழ்த்திய
வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போதும் இந்தியாவிலுள்ள அனைத்து
தேசிய இனங்களையும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளே ஒடுக்குகிறார்கள்.
இந்த பொதுவான எதிரியை எதிர்த்தப் போராட்டத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய
இனங்களும் ஒன்றுபட வேண்டியது மிகமிக அவசியமே ஆகும். இந்த பொதுவான எதிரிகள் இந்திய அரசின்
துணைகொண்டே ஒடுக்குகிறார்கள். ஆகவே இந்த அரசையும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள்
எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகிவிடுகிறது. இன்றைய இந்திய ஒற்றை
அரசுக்கு மாற்று தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த
கூட்டரசே ஆகும்.
ஆகவே இந்தியாவின் தேசிய இனச்சிக்கலைத்
தீர்ப்பதற்கு நாம் சுயநிர்ணய உரிமைக்காகவும் அதன் அடிப்படையிலான இந்திய
கூட்டரசிற்காகவும் பாடுபட வேண்டும்.
இந்திய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை
இந்தியாவை மையப்படுத்தி மேற்காசியா முதல் பசிபிக்
பகுதிவரையிலான பரந்துபட்ட பல தேசிய இனங்களைக் கொண்ட ஓர் அரசை உருவாக்க வேண்டும்
என்று கற்பனை செய்திருந்த நேரு “ஆசியா அல்லது ஐரோப்பா கண்டங்களில் உள்ள சிறிய
நாடுகள் சுய நிர்ணய உரிமை பெற வேண்டும் என்ற எண்ணம் கோட்பாட்டு அளவிலானதே யொழிய
நடைமுறைப்படுத்த முடியாதது. அத்தகைய நாடுகள் கோட்பாட்டு அளவில் வேண்டுமானால் சுதந்திரமானவையாக
இருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில் பெரிய நாடுகளைச் சார்ந்தே இருந்து அவற்றின்
வாடிக்கை நாடுகளாகவே இருக்க முடியும்” என்று கூறினார்.
உண்மை நிலை, நேருவின் கூற்றுக்கு மாறுபட்டே இருக்கின்றது. தற்காலத்தில்
சில சிறிய நாடுகளும் சில பெரிய நாடுகளும் கோட்பாட்டு மற்றும் நடைமுறையில் சுதந்திர நாடுகளாகவும், மற்றொருபுறம் சில பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் நேரு கூறியதைப்
போல் வாடிக்கை நாடுகளாகவே இருக்கின்றன. சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிறிய
நாடுகளாக இருப்பினும் சுதந்திரமான சுயாதிபத்திய, பணக்கார நாடுகளாக இருக்கின்றன. மறுபக்கத்தில் உலகிலேயே 90 கோடி மக்கள் தொகை கொண்டதும், உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தை வகிப்பதுமான மிகப்பெரிய நாடான இந்தியா, கோட்பாட்டளவில் சுதந்திரம் பெற்றதாகவும், நடைமுறையில் மேற்கத்திய வல்லரசுகளைச் சார்ந்தும் மிகவும் பின்தங்கியும், ஏழை நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
விளக்கம்:- மேற்காசிய பகுதியில் பரந்துபட்ட பல
தேசிய இனங்களை கொண்ட ஓர் அகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர் தான் ஜவஹர்லால் நேரு. இந்த விருப்பத்திற்கு அடிப்படை இந்தப் பகுதியில் வாழும் உழைக்கும் மக்களின் நலன்கள் அல்ல. மாறாக இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களான பெரும் முதலாளிகள் மற்றும் அந்நிய முதலாளிகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய ஒரு பரந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நேரு விரும்பினார்.
அதற்காக அவர் உலகில் மிகச்சிறிய நாடுகள் பெயரளவுக்குத்தான் கோட்பாட்டளவில்
சுதந்திரமாக இருக்க முடியும் என்றும், நடைமுறையில் அந்த சிறிய நாடுகள் பெரிய நாடுகளை
சார்ந்து இருந்தால்தான் அந்த சிறிய நாடுகள் சுதந்திரமாக வளர முடியும் என்று ஒரு
விஞ்ஞானத்துக்குப் புறம்பான மற்றும் உண்மைக்கும் முரணான கருத்தை நேரு
கொண்டிருந்தார். இந்த கருத்துதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களாக
இன்றளவும் இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை ஆளும் பெருமுதலாளி வர்க்கங்களுக்கு
மிகப்பரந்துபட்ட பகுதியில் அதில் வாழும் பலகோடிக்கனக்கான மக்களும் அவர்களின் சுரண்டல்
கொள்ளைக்கு கிடைப்பார்கள். இந்த பரந்துபட்ட பகுதியிலுள்ள மக்களை சுரண்டுவதன்
மூலமும் இங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதன் மூலம் இந்த உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் கோடிகோடியாக கொள்ளையடித்து அவர்களின் சொத்துக்களை
குவித்துள்ளார்கள். அதேவேளையில் இங்குவாழும் கோடிக்கனக்கான உழைக்கும் மக்கள்
அவர்களிடமிருந்த சிறிய அளவிலான செல்வங்களையும் இழந்து ஓட்டாண்டியாகியுள்ளனர்.
நேருவின் இந்தக் கூற்று மிகப்பெரிய பொய்யாகவும்
மோசடியாகவும் இருப்பதை நாம் காணலாம். மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளான சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகள் மிகச் சிறிய நாடுகளாகவே இருக்கின்றன. இந்த நாடுகள் சுதந்திரமாகவும் பணம் படைத்த செல்வந்த நாடுகளாகவும் இருக்கின்றது. இந்த நாடுகள் வேறு எந்த
நாடுகளையும் சார்ந்து இல்லை. இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள சிங்கப்பூர் கூட ஒரு
சிறிய நாடுதான், அந்த நாடு வளமான நாடாகவே உள்ளது. அங்குள்ள
மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய நாடான இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்வை விட மிக
வளமாகவே இருப்பதை நாம் காணலாம். இப்படி இருக்க இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு ஜவஹர்லால்
நேரு, ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா இருப்பதன் மூலமே இந்த
நாடு சுதந்திரமாகவும் வளமான நாடாகவும் இருக்க முடியும் என்று பொய் பேசி
ஏமாற்றினார். அவர் பேசிய அந்தப் பொய்யையே இப்பொழுதும் இங்குள்ள இந்திய ஒற்றுமை
என்றும் இந்தியா ஒரு தேசம் என்று பேசுபவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்
இந்த இந்திய ஒற்றுமை பற்றி பேசியவர்கள் இதுவரை என்ன சாதித்தார்கள்?. இங்குள்ள மக்களை வறுமையிலும் பசிப்பிணியிலும் வேலையில்லா திண்டாட்டத்திலும் தள்ளிவிட்டதுதான்
இவர்களது சாதனையாகும். உண்மையில் மிகப்பெரிய நாடான இந்தியாதான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய நாடுகளை சார்ந்து
இருக்கின்றன. இந்த இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது ஸ்வீடன் நார்வே போன்ற சிறிய
நாடுகள் எந்த நாடுகளையும் சாராமல் சுதந்திரமாகவே இருக்கிறது. ஆகவே இந்தியா ஒரே நாடாகவே, ஒற்றை அரசின் கீழ் இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இந்தியாவில் உள்ள
மக்களின் நலன்களை பாதுகாக்க கூடியவர்கள் அல்ல.
மாறாக இந்திய மக்களின் வறுமைக்கும் வேலையில்லாத
நிலைக்கும் காரணமானவர்களே. ஏனெனில் இவர்கள் மக்களின் நலனில் இருந்து ஆட்சி செய்யவில்லை, மாறாக கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களில்
இருந்தே ஆட்சி செய்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒரு பரந்த சந்தை தேவைப்படுகிறது
அந்தப் பரந்த சந்தையை இவர்கள்தான் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பரந்த
சந்தையில் வாழும் உழைக்கும் மக்கள் ஓட்டாண்டிகளாக மாறி தற்கொலை செய்து செத்துக்
கொண்டிருப்பதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
இந்திய ஆட்சியாளர்கள் பொருளாதார அரசியல்
முடிவுகளை எடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவின் விவசாய செயல்பாடுகள், ரூபாயின் மதிப்பைக் குறைத்தல், ஏகாதிபத்திய மூலதனத்திற்கான கதவுகளைத் திறந்துவிடுதல், இறக்குமதிக்கான தடைகளை நீக்குதல், தொழிற்சாலைகள் மீதான அரசுக் கட்டுப்பாடுகளை
திரும்பப் பெறுதல், அரசு தொழில் நிறுவனங்களை தனியார் மயமாக்குதல்
போன்ற இந்திய சமூக அமைப்பை உருவாக்கக்கூடிய, இந்திய மக்களின் வாழ்வில் தாக்கத்தை உருவாக்கக்கூடிய அனைத்து முக்கிய
முடிவுகளுமே ஏகாதிபத்திய நாடுகளின் தலைநகரங்களில் குறிப்பாக வாஷிங்டனில் தான் எடுக்கப்படுகின்றன.
அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகள் புது டெல்லி மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு
அடகு வைப்பதாகும். தனது பொருளாதாரத்தை அடகு வைத்த நாடுகளின் அடிப்படை நிகழ்வுகளை தீர்மானிப்பது
காலனியத்தின் அல்லது அரைக்காலனியத்தின் சாராம்சமாகும். இந்தியத் திட்டக் குழுவின்
முன்னாள் உறுப்பினர் திரு ஜே. டி. சேத்தி, நேருவின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும்,
தொடக்கத்திலிருந்தே
சார்புத் தன்மையுடையதாகவே இருந்தது. ஆனால்
சுயசார்பு
தொழில்மயமாக்கல் என்று விளம்பரப்படுத்தப்பட்டது என்று
சரியாகவே
கூறியுள்ளார். நேருவின் விளக்கப்படி இந்தியா ஒரு வாடிக்கை
நாடுதான். எனவே ஒரு
நாட்டின் சார்பு தன்மையை அல்லது சார்பற்ற நிலையை அதன் பெரிய பரப்பளவை வைத்து
தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. அப்படியானால் இங்கிலாந்து 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு இருக்க முடியாது.
மார்க்சிய - லெனினியவாதிகள் அனைத்து ஒடுக்கப்பட்ட நாடுகளின்
பெரிய சிறிய நாடுகளின் சுதந்திர உரிமையை உயர்த்திப்
பிடிக்கின்றனர். பிரிந்து போவதை உள்ளடக்கிய சுய நிர்ணய உரிமையை,
தங்களுக்கான சொந்த நாடுகளை
உருவாக்கிக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கின்றனர்.
“ரஷ்யாவில் நாம் நமது சோசலிசத்திற்கான புரட்சிகரப்
போராட்டத்துடன் தேசிய இனப் பிரச்சனைக்கான புரட்சிகரத் திட்டத்தையும் கட்டாயம் இணைத்துக்
கொள்ள வேண்டும்” என்று லெனின் கூறினார். மேலும்,
“ஜார்ஆட்சியினால்
ஒடுக்கப்பட்ட அனைத்து நாடுகளும் பிரிந்து சென்று சுதந்திரம் அடைவதற்கான கோரிக்கையை
ரஷ்யா பாட்டாளி வர்க்கம் முன்வைக்க வேண்டும். இல்லையெனில்,
சோசலிசத்திற்கான நமது புரட்சிகர
போராட்டம், ஜனநாயகத்திற்கான தேசிய இனங்களின் பிரச்சனை
களுக்கான புரட்சிகர நடைமுறைகளோடு இணைக்கப்படாத நிலையில் வெறும்
முழக்கமாகவே அமைந்து விடும் என்றும் லெனின் கூறினார். (இந்தியாவின் தேசிய
இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும், சுனிதிகுமார் கோஷ், அலைகள் வெளியீட்டகம். பக்கம் - 7,
8 )
விளக்கம்:- இந்திய ஆட்சியாளர்கள் தங்களை
சுதந்திரமானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாகவே, அவர்களது அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எடுப்பதாகவும், அதில் வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்களும் தலையிட முடியாது என்றும் தொடர்ந்து
பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் விவசாய செயல்பாடுகள், ரூபாயின் மதிப்பை குறைதல், ஏகாதிபத்திய மூலதனத்தை இங்கு இறக்குமதி
செய்வதற்கு, கதவுகளை அகலமாகத் திறந்து விடுதல் இறக்குமதிக்கான
தடைகளை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவது, தொழிற்சாலைகள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை
கைவிடுவது போன்ற மக்களுக்கு எதிரான இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான பல
பிற்போக்கான பாதகமான மோசமான கொள்கை முடிவுகளை, இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளான ஆட்சியாளர்களிடம் கலந்து பேசியே முடிவுகள் செய்கிறார்கள்.
இவ்வாறு இந்திய பொருளாதரத்தை அந்நிய ஏகாதிபத்தியவாதிகளிடம் அடகு வைத்து, இந்திய உழைக்கும் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது
முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் போது எப்படி எல்லாம் இங்கு கொள்கை முடிவுகளை பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியவாதிகள் எடுத்தார்களோ, அதுபோலவே தற்போது வெவ்வேறு ஏகாதிபத்தியவாதிகள்
இந்தியாவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள். இந்த விவரங்களை
இந்திய திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திரு ஜே டி.சேத்தி அவர்களே அம்பலப்படுத்தி
உள்ளார்கள். ஆகவே இவர்கள் சொல்வது போல ஒரு பெரிய நாட்டின் மீது மற்ற நாடுகள்
செல்வாக்கு செலுத்த முடியாது என்று சொல்வது உண்மை அல்ல. ஏனெனில் பிரிட்டன் ஒரு
மிகச்சிறிய நாடு, அந்த நாட்டின் மீது யாரும் ஆதிக்கம் செய்ய
முடியாது, ஆனால் அந்த சின்ன நாட்டைச் சேர்ந்த முதலாளிகள்
மிகப்பெரிய நாடுகளான இந்தியா போன்ற நாடுகள் மீது செல்வாக்கு செலுத்தி ஆதிக்கம்
செலுத்தியது வரலாறு. இன்றும் அதுபோலவே இந்தியா போன்ற பெரிய நாடுகளை சிறிய ஏகாதிபத்திய
நாடுகள் ஆதிக்கம் செய்வதை நாம் பார்க்கலாம்.
உண்மையான மார்க்சிய லெனினியவாதிகள் உலகில் உள்ள
ஒடுக்கப்பட்ட நாடுகளின் மீது அந்நிய நாடுகள் ஆதிக்கம் செய்வதை எதிர்த்து போராடி ஒவ்வொரு
நாடும் சுதந்திர நாடுகளாக வாழ வேண்டும் என்ற கொள்கையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு தேசிய இனமும் பிரிந்துபோகும் உரிமையின் அடிப்படையில்
தனக்கென்று ஒரு தேசத்தையும், தனக்கென்று ஒரு நாட்டையும் உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு
தேசிய இனத்திற்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு என்பதை
மார்க்சிய லெனினியவாதிகள் ஆதரிக்கின்றனர்.. ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடந்து
கொண்டு இருக்கின்ற காலத்தில், சோசலிசத்திற்காக போல்ஷ்விக்குகள் பாடுபடும்
பொழுது, அங்குள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய
உரிமைக்காகவும் போல்ஷ்விக்குகள் பாடுபட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார்.
அத்தகைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கொள்கையை சோசலிசப் புரட்சிக்கான
திட்டத்தோடு இணைக்கத் தவறினால் நாம் விரும்பும் சோசலிச புரட்சி என்பது வெறும்
முழக்கமாகவே, வெற்று வாய் சொல்லாகவே அமைந்துவிடும் என்று
லெனின் சொன்னார். ஆகவே இந்தியாவிலுள்ள உண்மையான மார்க்சியவாதிகள் மக்கள் ஜனநாயகத்திற்காகவோ
அல்லது சோசலிசத்துக்காகப் போராடும்போது இங்குள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுய
நிர்ணய உரிமைக்காகவும் போராட வேண்டியது மிகமிக அவசியமாகும். சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில்
மட்டுமே தேசிய இனங்களின் சுதந்திர தேசிய அரசுகளை உள்ளடக்கிய உண்மையான இந்திய
சோசலிச கூட்டரசை நம்மால் உருவாக்க முடியும். ஆகவே இந்திய சோசலிச அரசமைப்புக்கும்
தேசிய சுய நிர்ணய உரிமைக்கும் இடையிலான நெருக்கமான இணைப்பை புரிந்துகொள்ளாதவர்கள்
நிச்சயமாக மார்க்சிய லெனினியவாதியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது.
தேசப்பற்று முற்போக்கானதாகும், அதே சமயம் அது பிற்போக்கானதாகவும் இருக்கும் என மாவோ கூறினார். சீனாவையும்
மற்றைய நாடுகளையும் அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடைய ஜப்பானிய தேசப்பற்று பிற்போக்கானதே.
ஆனால் ஜப்பானிய ஆக்கிரமிப்பை முறியடிக்க தேசபக்தி உள்ள சீன மக்களை திரட்டியது
முற்போக்கானதாகும். “சீன கம்யூனிஸ்டுகள் தேசபக்தியை உலக தேசியத்துடன்
இணைக்க வேண்டும், எனவே தேசிய விடுதலைப் போராட்டங்களில் தேசபக்தி
என்பது உலக தேசியமாக அமைய வேண்டும்”. ஒடுக்கப்பட்ட நாடுகளின் பூர்ஷ்வா (முதலாளித்துவ) தேசியம் ஒடுக்குமுறைக்கு எதிரான, ஒரு பொதுவான ஜனநாயக உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். இந்த உள்ளடக்கத்தை நாம் நிபந்தனையின்றி
ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின்.
மார்க்சிய - லெனினியவாதிகளின் இறுதி நோக்கம், தேசங்கள் முழுமையாக ஒன்றிணைவதுதான். ஆனால் அத்தகைய இணைப்பு
சுதந்திரம் மற்றும் ஜனநாயக அடிப்படையில் தான் நடைபெற முடியும். ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பிரிந்து சொல்லும் உரிமைக்கானதாகவும் அனைத்து ஒடுக்கப்பட்ட நாடுகளின்
எழுச்சியானது முழுமையான இணைப்பிற்கு இட்டுச் செல்லக்கூடிய இடைப்பட்ட காலமாகும்.
பரந்துபட்ட ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த, தேசிய இனங்களுக்கான சுயாட்சிப் பகுதிகள் - அது எவ்வளவு
சிறியதாக இருந்தாலும் கூட உருவாக்கப்பட வேண்டு.
விளக்கம்:- உழைக்கும் மக்களுக்கு தேசப்பற்று
அவசியம் என்றே மார்சியம்கூறுகிறது. ஆனால் தேசப்பற்றில் இரண்டு வகையான தேசப்பற்று
உள்ளது.
ஒன்று பிற தேசங்களின் மீது ஒடுக்குமுறை
செலுத்தும் சுரண்டும் வர்க்கங்களை கொண்ட தேசங்களின் மீதான தேசப்பற்று.
மற்றொன்று பிற தேசங்களைச் சேர்ந்த சுரண்டலாளர்களையும்
ஒடுக்குமுறையாளர்களையும் எதிர்த்துப் போராடுகின்ற தேசத்தின் மீதான
தேசப்பற்று, அதாவது பிற தேசங்களின் மீது ஒடுக்குமுறை
செலுத்தும் தேசங்களான அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் மீதான தேசப்பற்று
மிகவும் தவறானதாகும். ஏனெனில் இத்தகைய தேசப்பற்று பிற தேசங்களின் மீதான ஒடுக்குமுறையை
ஆதரிக்கும் அடிப்படையிலான தன்மை கொண்டதாகும், ஆகவே இத்தகைய தேசப்பற்றை கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்
கொள்ளக் கூடாது. இதற்கு நேர் எதிராக இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மீது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் செலுத்தும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இந்திய உழைக்கும் மக்களின் தேசப்பற்று நியாயமான தேசப்பற்றாகும். ஏனெனில் இந்த தேசப்பற்று அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அடிப்படை கொண்டதாகும். எனினும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் தேசப்பற்றானது பிற தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும்
மக்களின் மீது நட்பும் பாராட்ட வேண்டும். அதாவது ஒவ்வொரு தேசிய இனமும்
அடக்குமுறைக்கு எதிராக போராடும் அதே வேளையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து
தேசங்களையும்ஒன்றிணைத்து ஒரு உலக தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க
வேண்டும். இதுவே கம்யூனிஸ்ட்களின் கொள்கையாகும்.
ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்களின்
முதலாளித்துவ தேசியமானது ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக
உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். ஆகவே அத்தகைய முதலாளித்துவ
தேசியத்தை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்று லெனின்
சொன்னார். ஆகவே இங்கே இந்தியாவில் இந்திய தேசிய பற்று என்பது
இந்தியாவில் உள்ள பிற தேச இனங்களை ஒடுக்குவதை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது, ஆகவே உழைக்கும் மக்கள் இந்திய தேசியப்பற்றை
ஏற்றுக் கொள்ளக் கூடாது. மாறாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
தேசிய
இனமும் உதாரணமாக தமிழ் தேசிய இனமும், தெலுங்கு தேசிய இனமும், பஞ்சாப் தேசிய இனமும் ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டத்தில் ஜனநாயகத்திற்கான
போராட்டத்தில் ஈடுபடுவதால் தமிழ் தேசியப் பற்று, தெலுங்கு தேசப்பற்று போன்றவை முற்போக்கானவை அவற்றை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும். ஏனெனில் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் நலன்களுக்காக மட்டும் அல்லாமல் எங்கெல்லாம் ஒடுக்குமுறை நடக்கிறதோ அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று போராட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தி உள்ளார்.
மார்க்சிய லெனினியவாதிகளின் இறுதி நோக்கம் உலகில்
உள்ள அனைத்து தேசங்களும் முழுமையாக ஒன்றிணைந்து ஒரு உலக தேசத்தை படைப்பது தான். ஆனால் அத்தகைய தேசங்களின் ஒருங்கிணைப்பு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை வழங்குவதன் மூலமும்
பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நடைபெறும். அவ்வாறு தான் நடைபெற வேண்டும்.
சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுத்த
ஒருங்கிணைப்பு உறுதியானதல்ல. உதாரணமாக இந்தியாவில் தேசிய இனங்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுத்துவிட்டு காட்டாயமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு உறுதியானதல்ல.
இதற்கு மாறாக தேசங்களின் சுதந்திரத்தை மறுத்துவிட்டோ அல்லது
கட்டாயப்படுத்தியோ
தேசங்களை ஒன்றிணைப்பது என்பது சாத்தியமே இல்லை.
அவ்வாறு ஒன்றிணைக்க முயற்சி செய்யும்பொழுது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு தேசமும் தன்னுடைய சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் தங்களை கட்டாயப்படுத்தி ஒன்றிணைப்பவர்களை எதிர்த்து பிரிந்து போகும் சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டே தான் இருப்பார்கள்.
ஆகவே ஒவ்வொரு தேசத்திற்கும் தேசிய சுயநிர்ண உரிமை வழங்கி ஒவ்வொரு தேசத்தின்
விருப்பத்தின் அடிப்படையில் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான்
கம்யூனிஸ்களின், தேசியம் பற்றிய கொள்கையாகும். ஆகவே எவ்வளவு சிறிய
பகுதிகளாக ஒரு தேசம் இருந்த பொழுதும் உதாரணமாக நாகாலாந்து போன்ற தேசிய இனங்கள் ஒரு
சிறிய பகுதியை கொண்டிருந்தாலும் அந்த நாகாலாந்துக்கும் சுய நிர்ணய உரிமை கொடுத்து அதாவது பிரிந்து போகும் உரிமை கொடுத்து இந்தியக் கூட்டரசோடு இணைப்பது
தான் ஜனநாயகம் ஆகும். ஆனால் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களை கட்டாயப்படுத்தி
ஒன்றிணைத்து இந்தியாவின் ஒற்றை ஆட்சியை நடத்துவது இந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்.
ஆகவே இந்தியாவில் தேசிய இனங்கள் சுய உரிமை பெற்று ஒன்றிணையும் வரை தேசிய இனங்கள்
சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டே தான் இருக்கும் இதை யாராலும் தடுக்க முடியாது இந்தியாவில்
சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியவாக
உள்ளன. அவை கலாச்சார தேசிய சுய ஆட்சியை அனுபவிப்பதோடு லெனின் கூறியபடி உண்மையான
ஸ்தல சுய ஆட்சியை அனுபவிப்பவையாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு சொந்தமான
ஜனநாயகமான சுயமான அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள சுயாட்சிப் பிரதேசங்கள் நிச்சயமாக
இருக்க வேண்டும்.
மார்க்சும் எங்கெல்சும் போலந்து, அயர்லாந்து போன்ற நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்தனர். “ஒடுக்கப்பட்ட நாடுகள் பிரிந்து செல்வது என்பது கூட்டமைப்பை உருவாக்கத்தான்.
பிரிவினைக்கான நோக்கில் அல்ல. பொருளாதார அரசியலில் ஒருமித்த கவனம்
செலுத்துவதற்குத்தான்.அத்தகைய ஒருமித்த தன்மை ஜனநாயக அடிப்படையில் அமைய வேண்டும் என்று மார்க்ஸ் நினைத்தார்” என்று லெனின் கூறுகிறார்.
லெனின் கூறுவதுபோல் “மனித இனத்தை சிறு சிறு நாடுகளாக துண்டாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
என்பதோ, நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பதோ சோசலிசத்தின் நோக்கம் அன்று.. மாறாக நாடுகளை ஒன்றுக்கொன்று நெருக்கமடையச் செய்வதோடு அவற்றை இணைக்கவும் வேண்டும்..... அதே போன்று ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சர்வாதிகாரம் என்ற மாறும் இடைக் காலகட்டத்தின் மூலம் தான் வர்க்கங்கள், மனித குலத்தால் ஒழிக்கப்படும் என்றிருக்கும் போது,ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுதந்திரம் மற்றும் பிரிந்து செல்வதற்கான முழுமையான
எழுச்சிக்கான மாறும் காலகட்டத்தின் மூலம் தேசங்களை தவிர்க்க இயலாதவாறு இணைக்கவும்
முடியும்.” மேலும் “மிக நெருக்கமான ஒற்றுமையும் தேசங்களை இணைப்பதும்
ஓர் உண்மையான உலகக் கண்ணோட்டத்தோடு கூடிய
ஜனநாயக அடிப்படையில் தான் செயல்படுத்த முடியும்” என்றார் லெனின்.
விளக்கம்:- இந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி
நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறிய தேசமாக இருந்தாலும், உதாரணம் நாகாலாந்து, மற்றும் மிசோரம் போன்ற பகுதியில் அவர்களுக்கும் கலாச்சார தேசிய ஆட்சி என்ற
வகையில் உண்மையிலே அவர்களுக்கென்று சுதந்திரமான
அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே லெனினது
கொள்கையாகும்.
மார்க்சும் எங்கெல்சும், போலந்து அயர்லாந்து போன்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தனர். அதன்
மூலம் பிரிவினைக்கான போராட்டங்கள் நடத்தும் தேசிய இனங்களின் நோக்கம் தனித்தனி நாடுகளை உருவாக்குவது அல்ல மாறாக தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டரசை உருவாக்குவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். பொருளாதார
அரசியல் ஆகியவற்றில் ஒவ்வொரு தேசிய இனமும் குறிப்பாகவும் ஆழமாகவும் விரிவாகவும்
கவனம் செலுத்தி வளர்வதற்கு இத்தகைய ஜனநாயக உரிமை ஒவ்வொரு தேசிய
இனங்களுக்கும் வேண்டும் என்பதே மார்க்சினுடைய
நோக்கமாக இருந்தது.
மனித இனத்தை சிறு சிறு நாடுகளாக துண்டாடுவதற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதோ, நாடுகள் ஒவ்வொன்றையும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதோ சோசலிசத்தின் நோக்கம் அல்ல, மாறாக ஒவ்வொரு நாடுகளையும், ஒவ்வொரு தேசங்களையும் ஒன்றுக்கொன்று நெருக்கம் அடையச்
செய்யவும், ஒன்றுக்கொன்று இணைப்பை ஏற்படுத்துவது தான் சோசலிசத்தின்
நோக்கம். ஏனெனில் கம்யூனிஸ்ட்களின் லட்சியம் ஒரு கம்யூனிச சமூகத்தை அமைப்பது தான்.
ஆனால் அத்தகைய கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதற்கு இடைக்கட்டமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
என்ற சோசலிச கட்டம் அவசியமாக இருக்கிறது.
அதுபோலவே உலகில் உள்ள அனைத்து தேசங்களையும் ஒன்றிணைப்பதற்கு
ஒவ்வொரு தேசங்களுக்கும் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து போகும் உரிமையைக் கொடுத்து அவர்களது சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் கூட்டரசை உருவாக்கி, முழுமையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் இடைக்கட்டத்தின் மூலமாகவே தேசங்களை
ஒன்றிணைத்து ஓர் உலக தேசத்தை உருவாக்க முடியும் என்பதே லெனினியம் காட்டும்
வழியாகும். இதற்கு மாறாக ஒவ்வொரு தேசத்தையும் அதன் சுய நிர்ணய உரிமையை
மறுத்துவிட்டு கட்டாயப்படுத்தி ஒன்றிணைப்பதன் மூலம் நிச்சயமாக
ஓர் உலக தேசியத்தை நாம் படைக்க முடியாது. ஆகவே
கம்யூனிஸ்டுகளின் லட்சியம் ஒரு இந்திய தேசியம் அல்ல, மாறாக ஓர் உலக தேசியமே கம்யூனிஸ்களின் லட்சியமாகும். அதை அடைவதற்கு
தேசங்களின் சுயநிர்ணய உரிமையை கட்டாயமாக கம்யூனிஸ்டுகள்
ஆதரிக்க வேண்டியது கம்யூனிஸ்ட்களின் கடமையாகும். தேசிய
இனங்களின் சுய நிர்ணய உரரிமையை ஆதரிக்காதவர் எவரும்
கம்யூனிஸ்டாக ஆகமுடியாது. அவர்கள் மக்களை சுரண்டி ஒடுக்கும் முதலாளித்துவவாதியாகவேதான் இருக்க முடியும்.
இன்று இந்தியாவில் உள்ள பாராளுமன்ற கம்யூனிஸ்ட்
மற்றும் சோசலிசக் கட்சிகள் இந்திய ஒற்றுமையின் அதிதீவிர
பாதுகாவலர்களாக இருக்கின்றனர். “நமது கட்சி நாட்டின் ஒற்றுமைக்காக நிற்கும் அதே வேளையில், எல்லா வகையான பிரிவினைவாத சக்திகளை எதிர்த்தும் போராடி வருகிறது. நாம் இன்று செயல்படத்தக்க, திறமை வாய்ந்த மைய அரசிற்காக - நாட்டைப் பாதுகாக்கக் கூடிய, பொருளாதார வாழ்வினை நிலைப்படுத்தி ஒருங்கிணைக்க கூடிய, மற்றும் வெளி விவாகாரம், வெளிநாட்டு வாணிபம், தொலைத்தொடர்பு போன்றவற்றை சீராக நடத்துவதற்கான போதுமான படை பலத்தைக் கொண்டிருக்க
கூடிய அரசிற்காக நிற்கிறோம்” என்று சிபிஎம்.ன் அறிக்கை கூறுகிறது.
“இன்றைய இந்தியச் சூழலில் சுயநிர்ணய உரிமைக்காக
வாதிடுவது மக்களின் எதிரியான ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்பாக
அமைந்து தேசிய இனப்பிரச்சினை பிரதான பாத்திரத்தை முழுமையாக
தவறவிட்டு இத்தனை ஆண்டுகள் வரை அவர்கள் பெற்று வந்த வளர்சிகளை
இழக்க நேரிடும்” என்று சிபிஎம் இன் ரணதிவே எழுதியுள்ளார். அவர்
மேலும் “ஆங்கிலேயர்களை வெளியேற்றிய பிறகு தோன்றிய தேசிய
அரசு ஏற்கனவே இருந்து வந்த பல்வேறுபட்ட மொழிவாரி
குழுக்களை சந்திக்க வேண்டியதாயிற்று. ஒரு நிலப்பரத்துவ -
முதலாளித்துவ ஆட்சியில் ஒற்றுமையும் சமத்துவமும் பல்வேறு
மொழிக்குழுக்களுக்கு இடையே எவ்வாறு உருவாக்க முடியும். சமத்துவமின்மையானது
அரசின் ஒற்றுமையைக் குலைப்பதையும், தேசத்தை துண்டாடுவதையும் எவ்வாறு தடுக்க முடியும் என்பதே மிக முக்கிய பிரச்சனையாகும்." என்று கூறுகிறார்.
ரணதிவே போன்ற மார்க்சிஸ்ட் கள், முதலாளித்துவ நிலப்பரத்துவ ஆட்சியின் கீழேயே பல்வேறு மொழி பேசக்கூடிய
பகுதிகளில் அவற்றின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் இது தொடர்பான
பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறுகின்றனர்.
விளக்கம்:- இந்தியாவிலுள்ள பாராளுமன்றவாத
கம்யூனிஸ்டுகள் (உண்மையில் இவர்கள் திருத்தல்வாதிகள், மார்க்சியத்துக்கு எதிரானவர்கள்) மற்றும் சோசலிஸ்டுகள் இந்தியா ஒரு ஒன்றுபட்ட தேசமாகவே இருக்கவேண்டும் என்ற
நிலையிலிருந்து இந்திய ஒற்றுமையின் தீவிரமான ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். அந்த
வகையில் இவர்களது கொள்கைக்கும் இந்திய ஆளும்வர்க்க கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினரது
கொள்கைக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லை.
இவர்கள் காங்கிரஸ் கட்சியையோ, பாஜகவை இந்திய மக்களின் எதிரிகளாக கருதுவதில்லை. அதற்கு மாறாக இங்குள்ள
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்களை
மக்களின் எதிரியாகப் பார்த்து அவர்களை எதிர்த்துப்
போராடவேண்டும் என்கிறார்கள்.
இந்திய ஆட்சியானது உழைக்கும் மக்களுக்கு
ஜனநாயகத்தை வழங்கி மக்களின் நலன்களுக்காகப் பாடுபடவேண்டும் என்பது
சிபிஎம் தலைவர்களுக்கு முக்கியமானது இல்லை. மாறாக இந்திய
அரசானது திறமைவாய்ந்த மைய அரசாக இருக்கவேண்டுமாம்.
நாட்டைப் பாதுகாப்பதற்கு அவசியமான பலமான இராணுவம்
வேண்டுமாம்.
பொருளாதார வாழ்வை அரசு நிலைப்படுத்த வேண்டும்.
யாருடைய பொருளாதார வாழ்வை நிலைப்படுத்த வேண்டும்?.இதுவரை இந்த அரசு இந்திய பெருமுதலாளிகளின் பொருளாதாரத்தைத்தானே
பாதுகாத்துள்ளது, இவர்களுக்குத் தெரியாதா? இவ்வாறு சிபிஎம் கட்சித் தலைவர்கள் இந்திய ஒற்றை ஆட்சியை பாதுகாத்து, அரசு பற்றிய கொள்கையிலும் தேசிய இனங்களுக்கான சுய நிர்சய உரிமைப் பிரச்சனையிலும்
ஏகாதிபத்தியம் என்ற பூச்சாண்டியைக் காட்டி மார்க்சிய லெனினியத்தை மறுத்த முதலாளித்துவ
அரசியல்வாதிகளாகவே செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இன்றைய சூழலில் தேசிய இனங்களின் சுயநிர்ணய
உரிமைக்காகப் போராடுவதை ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக்கொண்டு நாட்டை பிரித்துவிடுவார்கள் என்று ஆளும் வர்க்கங்களின் கருத்தையே சிபிஎம் தலைவர்கள் வாந்தியெடுக்கிறார்கள். தேசிய சுய நிர்ணய உரிமை என்பது இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு தடையாகவே அமையும் என்கிறார்கள்.
மேலும் இந்தியாவில் தேசிய இனங்கள் பல்வேறுவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஆளும்
வர்க்க அரசியல்வாதிகளைப் போலவே புளுகுகிறார்கள். தேசங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கினால்
இதுவரை தேசங்கள் பெற்ற வளர்ச்சியை இழக்கவேண்டி வரும் என்கிறார்கள். இதுவரை
தேசங்கள் வளரவில்லை என்ற உண்மையை மூடிமறைத்துவிட்டு தேசங்களின் உரிமைகளை
பறித்துவிட்டு நடந்துகொண்டிருக்கும் ஒற்றை ஆட்சியின் மூலமாக இந்தியாவில் வாழும் மக்கள்
வளருவார்கள் என்று சிபிஎம் தலைவர்கள் கூறி ஆண்டுகள் பல கடந்த பின்பு இன்றைய நிலை
என்ன? வேலையின்மை வளர்ந்திருக்கிறது,
பட்டிணிச்சாவு
அதிகரித்திருக்கிறது, விவசாயிகள் தற்கொலை கூடிக்கொண்டே போகிறது. இதுதான் இவர்கள்
சொன்ன வளர்ச்சியா? இந்தக் கொடுமைகள் அதிகரித்ததற்கு இந்திய ஒற்றை ஆட்சிதானே
காரணம். உண்மையிலேயே சிபிஎம் தலைவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று
இருந்தால் இவர்களின்
இந்தத் தவறுகளுக்கு சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். பிரிட்டீஷார்
இந்தியாவைவிட்டு வெளியேறிய பின்பு உருவான அரசை ஒரு நிலப்பிரபுத்துவ முதலாளித்து
அரசு என்று இவர்கள் வரையறுக்கிறார்கள். இந்த அரசால் இங்குள்ள மொழிவழி தேசிய
இனங்களுக்கு (இதனை
மொழிவாரிக் குழுக்கள் என்று சிபிஎம் தலைவர்கள்
சொல்கிறார்கள்)
இடையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் எவ்வாறு உருவாக்க முடியும் என்றும்
தேசங்கள் பிரிந்துபோவதை எவ்வாறு தடுக்கமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனாலும் இதற்கான பதிலை இவர்கள் பலகாலம் ஆகியும் இன்றளவும் தீர்வுகாண முடியவில்லை.
ஆனால் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தேசிய இனச்சிக்கலுக்கு
திர்வுகண்டு நடைமுறையில் சாதித்துகாட்டிய பிறகும் சிபிஎம் தலைவர்களுக்கு
புத்திவரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? உழைக்கும் மக்களே சிந்தியுங்கள். சிபிஎம் தலைவர்கள்
நிலவுகின்ற ஒற்றை ஆட்சிமுறைக்குள்ளேயே தேசிய இனச்சிக்கல்களையும் மற்றும் பல்வேறு
பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நெடுங்காலமாக கனவுகண்டு கொண்டிருக்கின்றனர்.
இவர்களது கனவு இன்றும் கனவாகவே இருக்கிறது.நிலவுகின்ற புதிய காலனிய இந்திய ஒற்றை
ஆட்சிமுறையில் எவ்வளவு காலம் ஆனாலும் இங்குள்ள சாதிப்பிரச்சனை,
மதப்பிரச்சனை,
தேசிய இனப்பிரச்சனை,
மொழிப்பிரச்சனை,
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்
பிரச்சனை, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சனை,
பெண்களின் பிரச்சனை,
வேலையில்லாத்
திண்டாட்டம் போன்றஎந்தப் பிரச்சனைகளையும் இந்திய ஒற்றை ஆட்சிமுறையிலான அரசால் தீர்க்க
முடியாது. இதற்கு மாறாக தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர தேசிய
அரசுகளை நாம் உருவாக்க வேண்டும்.
சுதந்திரமான தேசிய அரசுகளின் சுய விருப்பத்தின்
அடிப்படையில் தேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்திய கூட்டாட்சி அரசை
உருவாக்க வேண்டும். இந்த அரசுகள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும்
வளர்க்கும் இலட்சியத்தை கொண்டிருக்க வேண்டும். அதற்காக விடாப்பிடியாகபாடுபட
வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.
=================================================
தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானபோராட்டத்தில்
நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.பாகம் - 1
தேசியம் என்பது நவீன காலத்திய சமூக நிகழ்வாகும். ஒரு
குறிப்பிட்ட பகுதியில் உள்ள தேசிய இனம் தமக்குரிய வரலாற்று
வளர்ச்சியுடன் தம்மை ஒரு தேசத்தினராக உருவாக்கிக் கொள்ளும் நிகழ்ச்சி
போக்கில் அவர்களின் அரசியல் பொருளாதாரம் பண்பாடு ஆகிய துறைகளில்
ஏற்படும் மாற்றங்களின் தொகுப்பு ஆகும். இது தனக்கென ஒரு தேசிய அரசை
முன் நிபந்தனையாகக் கொண்டது. (கோ.கேசவன் எழுதிய இந்திய தேசத்தின் தோற்றம் நூல்
பக்கம் - 9)
மார்க்சியம் குறிப்பிடும் தேசம் என்பது நவீனகாலத்தியத்தைச்
சேர்ந்தாகும் என்பதை நாம் மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்ள வேண்டும். நவீன காலம்
என்பது வரலாற்றில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றி வளர்ந்த காலத்தை குறிக்கிறது.
வரலாற்றில் முதலாளித்துவம் தோன்றிய பின்புதான் இன்றைய நவீனகால அரசுகள் தோன்றியது. ஒரு
குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்துவந்த மக்கள் முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபட்டு முதலாளித்துவத்தின்
வளர்ச்சிப்போக்கில் ஒருமொழி பேசும் மக்கள் தங்களை ஒரு தேசத்தைச் சேர்ந்தவராக
உருவாக்கிக்கொள்ளும் போக்கில்தான் வரலாற்றில் நவீன உருவாகியது. அவ்வாறு உருவாகிய தேசமானது
தனக்கென ஒரு தேசிய அரசை உருவாக்கிக்கொண்டது.
ஒரு தேசியம் உருவாவதற்கு ஒரு குறிப்பிட்ட மொழி அவசியமாகும்.
முதலாளித்துவம் உருவாகியபோது முதலாளிகள் சந்தையில் விற்பனை
செய்வதற்கென பொருள்களை
தொழிலாளர்களைக்கொண்டு உற்பத்தி செய்தார்கள். அந்தப் பொருள்களை விற்பனை செய்வதற்கு
அவர்களுக்கு சந்தை தேவைப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதியில்,
வாழும் ஒரு மொழி
பேசும் மக்களை
ஒன்றிணைத்து அவர்களை நுகர்வோர்களாக மாற்றி
தங்களது
பொருள்களுக்கான சந்தையாக வளர்த்தார்கள். இத்தகைய
முதலாளிகளின் சந்தை
தேவைக்காகவே தேசம் உருவாக்கப்பட்டது.
இத்தகைய தேசத்தையும் தேசிய அரசையும் உருவாக்கும்
முயற்சியில் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவத்தையும்
மன்னராட்சியையும் போரிட்டு ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மொழிவழி, இனவழி தேசங்களும் தேசிய அரசுகளும் மேற்கு ஐரோப்பாவில் தோன்றின. இதற்கு
பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சி சிறந்த உதாரணம் ஆகும்.
இதற்கு முதலாளிகளின் சந்தை தேவை என்ற பொருளியல் முதன்மையான
காரணமாகும். ஆகவே நவீன தேசிய இனத்தை முதலாளித்துவ தேசிய இனம் என்று குறிப்பிடுவதுதான்
எவ்விதமான குழப்பமும் இல்லாமல் நாம் புரிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்.
அதுபோலவே நவீன தேசத்தை முதலாளித்துவ தேசம் என்றும், நவீன தேசிய அரசை முதலாளித்துவ தேசிய அரசு என்றே குறிப்பிட வேண்டும் என்று நான்
கருதுகிறேன்.
ஆங்கிலத்தில்தான் பல்வேறு விஞ்ஞான கருத்துக்கள்
உள்ளது என்றும், இந்த விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை நாம் பெறவேண்டுமானால்
நாம் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற தீர்வை சிலர் முன்வைக்கிறார்கள், அவர்களில் சிலர் சிவப்புச் சடைடைபோட்ட கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். (அவர்கள் கம்யூனிஸ்டுகளா?) இந்த தீர்வு விஞ்ஞானப்பூர்வமானதா? இல்லை என்பதே எமது கருத்தாகும்.
ஆங்கிலத்திலுள்ள விஞ்ஞானங்களை எல்லாம் ஒருசிலர்
மட்டும் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு அவர்கள் மட்டும் அந்த
விஞ்ஞானங்களை தமிழில் மொழிபெயர்த்து கொடுத்துவிட்டால் இங்குள்ள
தமிழர்கள் அனைவரும் அந்த விஞ்ஞான தொழில்நுட்பத்தை தமிழ்
மொழியின் மூலமே எளிதாக கற்றுக்கொள்ள முடியுமே. (ரஷ்யாவில்
சோவியத்து ஆட்சி ஏற்பட்டவுடன் மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை
உலகிலுள்ள பல மொழிகளில் மொழிபெயர்த்து சோவியத்து அரசு
வெளியிட்டதன் காரணமாகவே இங்குள்ள தமிழர்கள் ரஷ்ய மொழியையோ, ஜெர்மன் மொழியையோ தெரிந்துகொள்ளாமல் மார்க்சிய ஆசான்களது
தத்துவ அறிவை பெறமுடிகிறது) இத்தகைய எளிய வழிதான் நாம் ஆங்கிலத்திலுள்ள விஞ்ஞானங்களை கற்றுக்கொள்வதற்கான விஞ்ஞானப்பூர்வமான தீர்வாகும். இத்தகைய விஞ்ஞானத் தீர்வை புறக்கணித்துவிட்டு அனைத்து தமிழர்களும் கட்டாயம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள் ஆங்கில மோகம்கொண்ட கொத்தடிமைகளே ஆவார்கள். இவர்களைப் பார்த்துதான் அன்றே பாரதி, என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாடினார். தமிழ் தேசத்தை பல்வேறு
வகையான முறையில் கார்ப்பரேட் முதலாளிகள் ஒடுக்குகிறார்கள். பொருளாதார ஒடுக்குமுறை, அரசியல் ஒடுக்குமுறை, பண்பாட்டு ஒடுக்குமுறை என்று பல வகையில்
ஒடுக்குமுறைக்கு தமிழ்தேச மக்கள் ஆளாகுகிறார்கள். அத்தகைய ஒடுக்குமுறையில் ஒன்றுதான்
அந்நிய மொழியான ஆங்கிலத்திணிப்பும் ஆகும். இந்த ஆங்கிலத் திணிப்பை தமிழ்தேசத்தைச்
சேர்ந்த பிற்போக்காளர்களும் ஆதரிக்கிறார்கள். இவர்களும் ஏகாதிபத்திய அடிவருடிகளே, தமிழ்தேசிய மக்களின் எதிரிகளே ஆவார்கள்.
சுவீடன் நாட்டில் தமிழ் கற்றுக்கொடுக்கப்
பாடுபடும் தமிழர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொடுக்கப் பாடுபடவில்லையே ஏன்? இங்கே ஆங்கில மோகம் கொண்டவர்களே ஆட்சியில்
இருக்கிறார்கள்.
இவர்கள்தான் தமிழை புறக்கணிக்கிறார்கள். இந்த
ஆங்கில மோகம்கொண்ட அடிமைகள் ஆங்கிலம் படிக்கவில்லை என்றால்
தமிழர்களுக்கு வாழ்வே இல்லை என்கிறார்கள். தாய்மொழியில் கல்வி கற்றால்தான்
குழந்தைகள் சுதந்திரமாக அறிவை வளர்த்துக்கொள்வார்கள் என்ற விஞ்ஞானிகளின் கருத்தை
முற்றிலும் புறக்கணிக்கும் இவர்கள் விஞ்ஞானத்தை மறுக்கும் முட்டாள்களே. தமிழ்
தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கில மோகம்கொண்ட இந்த
துரோகிகளை மக்கள் புறக்கணித்து விரட்டியடிப்பார்கள்.
இந்தியாவை ஒரு தேசம் என்று சில பைத்தியங்கள்
பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தேசம் என்றால் என்ன? அதற்கான இலக்கணம் என்ன? என்பதை புரிந்துகொள்ளாமல் இவர்கள் முட்டாள்தனமாக
இந்தியாவை ஒரு தேசம் என்கிறார்கள். உலகில் முதன்முதலில் தேசம்
எப்போது தோன்றியது? மேற்கு ஐரோப்பாவில்தான் முதலாளித்துவ வளர்ச்சியின்போது முதலாளிகள் தங்களுக்கான சந்தையை உருவாக்குவதற்காக ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை தங்களது ஆட்சி அதிகாரத்தின் கீழ்கொண்டுவந்து தேசிய அரசுகளை உருவாக்கினார்கள். அந்த முதலாளிகளால்தான் வரலாற்றில் தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு தேசம் இருந்ததாக சொல்லப்படுவது சமூக விஞ்ஞான அடிப்படையை மறுக்கும் பழம்பெருமை இனக் கோட்பாடு கண்ணோட்டமாகும். அத்தகைய கண்ணோட்டம் கொண்டவர்களே இந்தியாவை ஒரு தேசம் என்றும், அதேபோல் திராவிட தேசம் என்றும் பேசி மக்களை
ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழர்களாகிய நாங்கள் எங்களது தாய்மொழியான
தமிழ்மொழி வழியிலேயே கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்று
விரும்புகிறோம். அதனை மொழிவெறி என்று சில அயோக்கியர்கள்
பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களது தாய்மொழி தமிழை பிறர்மீது
நாங்கள் திணிக்கவில்லை. வெறி என்பது பிறரை
துண்புறுத்துவதாகும். நாங்கள் எங்களது மொழியை பிறர்மீது திணித்து யாரையும்
நாங்கள் துன்புறுத்தாத நிலையில் எங்களை மொழிவெறி பிடித்தவர்களாக இந்த
அயோக்கியர்கள் சித்தரிக்கிறார்களே ஏன்?. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளை தமிழர்களாகிய எங்கள்மீது
திணிப்பவர்கள்தான் இந்திமொழி வெறியர்கள் மற்றும் ஆங்கில மொழிவெறியர்கள் ஆவார்கள்.
ஆகவே இங்கே யார் மொழிவெறியர்கள் என்பதை நாம் இனங்கண்டு பிறர்மீது மொழியை திணிக்கும்
மொழிவெறியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.
தமிழ் தேசத்தவராகிய எங்களுக்கு மும்மொழியும்
வேண்டாம், இருமொழியும் வேண்டாம். எங்களுக்கு ஒருமொழி தமிழ்
மட்டுமே போதும்.
தமிழ் தேசத்தில் வாழும் பிற தேசிய இனச்
சிறுபான்மையிலோருக்கு அவர்கள் விருப்பப்படி அவர்களுக்கான அவர்களது
தாய்மொழிக் கல்வியையும் சுதந்திர தமிழ்தேச அரசு வழங்கும். அத்தகைய
சுதந்திர தமிழ்தேச அரசமைப்பதே எங்களது லட்சியமாகும்.
இந்தியாவிலுள்ள தேசங்களை உள்நாட்டு வெளிநாட்டு
கார்ப்பரேட்டுகள் சுரண்டும் நோக்கத்திலிருந்தே அடிமைப்படுத்தி
ஒடுக்குகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை மத்தியிலும் மாநிலத்திலும்
ஆளும் அரசியல்வாதிகள் துணைபோகிறார்கள். ஆகவே தேசங்களின்
மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட உள்நாட்டு வெளிநாட்டு
கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டவும்
அவர்களுக்கு துணைபோகும் ஆட்சியாளர்களை புறக்கணித்து ஒவ்வொரு
தேசங்களும் சுதந்திரமான தேசிய அரசுகளை உருவாக்க வேண்டும்.
இந்த அரசுகள் இந்திய கூட்டாட்சியை ஏற்றுக்கொண்ட சுதந்திரமான
தேசிய அரசுகளாகவே இருக்கவேண்டும். தேசிய சுயநிர்ணயத்தின்
அடிப்படையிலேயே இந்திய கூட்டாட்சி செயல்பட வேண்டும். இந்தியாவில் தற்போதுள்ள ஒற்றை
ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும். மேலும் இந்த தேசிய அரசுகள் கார்ப்பரேட்டுகளின்
சுரண்டலை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை ஒழிக்காமல் சுதந்திர
தேசிய அரசுகளால் அதன் சுதந்திரத்தை நீண்டகாலம் பாதுகாக்க முடியாது. இங்கே சிலர் தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ் மக்களில் சிலருக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கலாம், அவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதை நாம் தடுக்கவில்லை. அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம்
கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமா? தேவையில்லை என்பதுதான் எமது கருத்தாகும்.
ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது கடைந்தெடுத்த
பொய்யாகும். ஆங்கில கல்வி பெற்ற பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேலை இல்லை
என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. வேலையின்மைக்கு இந்த முதலாளித்துவ உற்பத்திமுறைதான்
காரணம் ஆகும். முதலாளிகள் இலாப நோக்கத்தில் செயல்படுவதால் வேலையில்லாதவர்களின்
எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு அவர்கள் கூலியை குறைத்துகொடுத்து
சுரண்டி இலாபத்தை பெருக்கமுடியும் என்பதால் இங்கு அனைவருக்கும் வேலை
கிடைக்கவில்லை. இந்த முதலாளித்துவ உற்பத்திமுறையை ஒழிக்காமல் நம்அனைவருக்கும் வேலை
கிடைக்காது என்ற உண்மையை மூடிமறைத்துவிட்டு ஆங்கிலம் படித்தால் வேலை கிடைக்கும்
என்று திராவிட அரசியல்வாதிகளும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று காங்கிரஸ்
மற்றும் பாஜக அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள். எனினும்
இந்த அயோக்கியர்கள் எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை உருவாக்கி ஆங்கிலம்
படிக்க வேண்டியதை கட்டாயமாக செயற்கையாக மாற்றியுள்ளனர். அதேபோலவே எங்கும் இந்தி
எதிலும் இந்தி
என்ற நிலையை உருவாக்கி இந்தியை படித்தே தீரவேண்டும் என்ற நிலையை
உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுப்பதை தொடர்ந்து மறுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இவர்கள்
பணமில்லாதவர்களுக்கு கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு
ஆங்கிலம் படித்தால் வேலை, இந்தி படித்தால் வேலை
என்று
நாடகமாடுகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாம் நாம்
ஆங்கிலத்தை படிக்கலாமே
என்று அப்பாவித்தனமாக எண்ணுபவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும்
ஆங்கிலம் கற்றுக்கொள்ள
வேண்டும் என்றும் இந்தியை கற்றுக்கொள்ள
வேண்டும் என்பது
அயோக்கியத்தனம் மட்டுமல்ல அடக்குமுறையும்
ஆகும்.
‘மத்திய அரசு எங்களை அடிமைபடுத்தி வருகிறது... நாங்கள்
இந்தியர்கள் கிடையாது.. நாங்கள் கன்னடர்கள்..எங்கள் நாடு கன்னடநாடு
...எங்களை தனியாக பிரித்து விடு’ என்று கன்னடர்கள் போராடுவது தவறு என்கிறார்கள். மத்திய அரசு
கன்னடர்களை ஒடுக்கவில்லையா? மத்திய அரசு பஞ்சாபியர்களை ஒடுக்கியதால்தானே பஞ்சாபியர்கள் தனிநாடு
கோரி போராடினார்கள். இங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கென்று
உரிமையுள்ள சட்டங்களை எல்லாம் பறித்துவிட்டு பொதுப்பட்டியலில் சேர்த்தது மத்திய அரசின்
ஆதிக்கம் இல்லையா? ஒவ்வொரு மாநிலமும் தங்களது மாநிலத்தில் வாழும் மக்களுக்கு
என்னவகையான கல்வி கொடுக்க வேண்டும் என்ற உரிமையைப் பறித்துவிட்டு ஒற்றை ஆட்சி
மூலம் இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்பது இங்குள்ள ஒவ்வொரு தேசத்தின் மீதான
ஒடுக்குமுறை இல்லையா? ஒரு மாநிலத்திலிருந்து வரிவசூல் செய்துவிட்டு அந்த
வரியிலிருந்து அந்த மாநிலத்துக்கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுக்கிறதே இது
அநீதி இல்லையா? மக்களிடமிருந்து பெற்ற வரியை மக்களுக்கு பயன்படுத்த தவறுவது
தர்மம்மா?
இவ்வாறு அநீதியான
முறையில் தேசிய இனங்களை ஒடுக்கும் மத்திய அரசை கண்டிப்பது எப்படி தவறாகும். அன்று
பிரிட்டீஷ்காரன் இங்கிருந்து பெற்ற செல்வங்களை அவர்களது நாட்டுக்கு அள்ளிச்
சென்றான். இங்குள்ள
மத்திய அரசு மக்களிடம் வரியை பெற்று கார்ப்பரேட்
முதலாளிகளின் நலன்களை
பாதுகாக்கிறதே நியாயமா? சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மொழி பேசுபவர்கள்
இருக்கிறார்கள், ஆகவே ஒவ்வொருவர் மொழியிலும் இங்கே நிர்வாகம் நடத்தமுடியாது, எனவே இங்கே ஒரு பொது மொழி தேவை என்று சிலர்
வாதிடுகிறார்கள். பல்வேறு மொழி பேசும் மக்களை நிர்வாகம் செய்ய இவர்களுக்கு
வக்கில்லை என்றால் பல்வேறு மொழி பேசும் மக்களை ஒரே
ஆட்சியின் கீழ் ஏன் இவர்கள் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்? ஒவ்வொரு மொழி பேசும் மக்களையும் தனித்தனியாகப் பிரித்துவிட்டு
அவரவர்கள் தங்களது தாய்மொழியிலேயே நிர்வாகம் செய்துகொள்ளலாமே.
அவர்களது விருப்பங்களுக்கு எதிராக வெவ்வேறு மொழி பேசுபவர்களை
கட்டாயமாக இணைத்துக்கொண்டு இவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும். மேலும் இந்தி என்ற ஒரு
பொது மொழியை செயற்கையாக உருவாக்கி அந்த மொழியை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்குள்ள பெரும்பான்மையான மக்களை ஏன் கஷ்டப்படுத்துகிறார்கள்? ஆகவே பல்வேறு மொழிபேசும் மக்களை நிர்வாகம் செய்ய
வேண்டுமானால் ஒவ்வொரு மொழிக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை
கொடுத்தே நிர்வாகம் செய்ய வேண்டும். அத்தகைய நிர்வாகம்
நடத்துவதற்கு மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
தற்போது வெவ்வேறு மொழி பேசுபவர்கள் கலந்துரையாடுவதற்கான
தொழில்நுட்ப கருவி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அந்தக் கருவியைக் கொண்டு ஒருவருக்கு
ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் அவரால் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவருடன் தமிழ்
மொழியில் பேசிக்கொண்டே கலந்துரையாட முடியும். அந்தக் கருவி
மொழிபெயர்ப்பு பணியை செய்திடும். ஒரு மொழி பேசும் மக்கள் மீது பிற
மொழியை பொதுமொழி என்ற பெயரில் திணிக்கும் ஒடுக்குமுறையாளர்கள்
இந்திய உழைக்கும் மக்களின் எதிரிகளே ஆவார்கள். மக்களுக்கு மொழிச்
சுதந்திரத்தை மறுக்கும் இந்த கயவர்களை உழைக்கும் மக்கள்
புரிந்துகொண்டு விரட்டியடிக்க வேண்டும்.
கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது பழமொழி.
இங்கே பலமொழி பேசும் மக்களின் நலனுக்காகவே ஒரு பொதுமொழி தேவை
என்று பொய் சொல்லிக்கொண்டிருந்தவர்களில் ஒரு கெட்டிக்காரர்
தன்னையும் அறியாமல் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.
பலமொழி பேசும் மக்களை நிர்வாகம் செய்வதற்கு ஒரு பொதுமொழி
அவசியம் என்கிறார். இதுதான் உண்மையாகும், இதற்கு முன்பு இவர்கள் சொன்னது போல பலமொழி பேசும் மக்களின் நலனுக்காக இவர்கள் பொதுமொழி தேவை என்று பேசியது மக்களை ஏமாற்ற இவர்கள் சொன்ன பொய்யாகும். இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கும் பலமொழி பேசும் மக்களைக் கொண்ட இந்தியா என்ற பெரிய சந்தை தேவைப்படுகிறது. இந்தியாவிலுள்ள மக்களை அடக்கி ஒடுக்கி சுரண்டி
கொள்ளையடிப்பதற்கு நிர்வாகம் என்ற பெயரில் ஒரு பொதுவான மொழி இந்தக் கொள்ளைக்
கூட்டத்துக்கு தேவைப்படுகிறது.
ஆகவேதான் இந்தக் கொள்ளைக் கூட்டமும் அதன்
எடுபிடிகளும் ஒரு பொதுமொழி தேவை என்று கூச்சலிட்டுக்கொண்டு
இருக்கிறது. இந்தக் கொள்கைக் கூட்டத்தின் தேவையை மக்களின் தேவையாக
பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. இப்போது அது
அம்மணமாக, உண்மையைப் போட்டு உடைத்துவிட்டது. ஆனால் மொழிப்
பிரச்சனையில் மக்களுக்கு எது தேவை என்பதை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியின் மூலமாகவே கல்வி கற்கவும், சிந்திக்கவும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு சமூக வளர்ச்சிக்கு பயனுள்ள பணிகளை
ஆற்றமுடியும் என்றும் பணியாற்ற வேண்டும் என்றும் விஞ்ஞானம் சொல்கிறது. ஆகவே மக்களுக்குத்
தேவை தாய்மொழிதான். மாறாக பொதுமொழி என்பது மக்களின் தேவையில்லை, அதாவது நம்மை சுரண்டி கொள்கையடிக்கும் முதலாளி கூட்டத்துக்குத்தான் பொதுமொழி
அல்லது இருமொழி மற்றும் மும்மொழி தேவையாகும். ஆகவே சுரண்டலுக்கு எதிரான
போராட்டத்தில் நாம் தாய்மொழிக் கொள்கையை அதாவது
ஒருமொழிக் கொள்கையை உயர்த்திப்பிடிக்க வேண்டும். பொதுமொழி, இருமொழி, மும்மொழி என்று பேசும் கயவர் கூட்டம் அனைத்தும் இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களுக்கு எதிரான முதலாளித்துவ சுரண்டல் கூட்டத்தின் எடுபிடிகளே என்பதை பல மொழி பேசும் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களுக்கு இந்தி மட்டுமல்ல அந்நிய மொழியான
ஆங்கிலமும் வேண்டாம். எங்களுக்கு தாய்மொழி தமிழ் மட்டுமே
போதும். எங்களில் யாருக்கெல்லாம் (அவர்கள் சிறு எண்ணிக்கையிலானவர்களே)
வேற்று மொழி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதோ
அவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் வேறு மொழியை
கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மாறாக தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம்
கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள் தமிழ்இனத் துரோகிகளே.
தாய்மொழி தமிழை வளர்ப்பவரே எங்களது நண்பர். அனைத்து
மொழியிலிருக்கும் விஞ்ஞானக் கருத்துக்களையும் தமிழ்மொழியில்
மொழிபெயர்த்துக் கொடுப்பவரே எங்களது நண்பர்கள் ஆவார்கள்.
தமிழ்மொழியே கல்வி பயிற்றுமொழியாகவும், ஆராய்சிக்கான மொழியாகவும் பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் அமைவதற்கு பாடுபடுவதே எமது இலட்சியமாகும்.
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திர தமிழ்
தேசத்தை உருவாக்கி எங்களது தமிழ் தேசத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற
நிலையை உருவாக்க பாடுபடுவதே எமது இலட்சியமாகும்.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது ஒரு பழமொழி. இது ஒரு பழமொழி மட்டுமல்ல ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும்.
அதாவது ஒருவர் ஒரு மொழியை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே அந்த மொழியை மறக்காமல் அந்த மொழியறிவை வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு மொழியை ஒருவர் நீண்டகலம் பயன்படுத்தவில்லை என்றால் அந்த மொழியை அவர் மறந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும். இங்கே சில பிற்போக்கு பேர்வழிகள் அந்நிய மொழியை ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த மொழியை ஒருவர் படிப்பதோடு தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான வழிகளை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்களா? இல்லை. ஆகவே மக்கள் எந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும், அல்லது எந்த மொழியின் வாயிலாக அனைத்து விஞ்ஞானங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றால்
அதற்கு அந்த மக்கள் தொடர்ந்து எந்த மொழியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே
அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
அப்படிப் பார்த்தால் மக்கள் ஒவ்வொருவரும்
பயன்படுத்தும் மொழி தாய்மொழியாகவே இருப்பதை நாம் காணலாம். ஆகவே
மக்களின் கல்விக்கான, அறிவியலுக்கான கருத்துக்களை பரிமாறுவதற்கான மொழி தாய்மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். தாய்மொழி கல்வி கற்பதற்கான சூழ்நிலையில் வாழும் மனிதர்களே சிறந்த முறையில் அறிவு வளர்ச்சியைப் பெற்ற சிறந்த சமூகமாக அமைவார்கள். தொடர்புமொழி ஒரு சிலருக்குத் தேவைப்படலாம், அத்தகையவர் அதனை கற்றுக்கொள்ளலாம் இதற்கு மாறாக தொடர்புமொழி என்று
சொல்லி அந்நிய ஆங்கிலத்தை அனைத்து தமிழர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது
ஆங்கில மோகம் கொண்டவர்கள் தமிழர்களின் மீதான அடக்குமுறையே.
இன்றைய இந்திய ஒற்றை அரசுக்குள்ளிருந்தே
தொடர்புமொழி என்ற உங்களது கோரிக்கை. இந்த ஒற்றை அரசை ஒழித்துவிட்டு
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திர தேசிய அரசுகளை
உள்ளடக்கிய இந்திய கூட்டரசை உருவாக்க வேண்டும் என்ற நிலையிலிருந்தே
நாங்கள் பேசுகிறோம். அதுவரை தொடர்புமொழி அல்ல, மொழியெயர்ப்பாளர்களின் துணையே போதும். அனைவரையும் ஆங்கிலம் கற்க
வேண்டும் என்பது அராஜகமே. அதனை மொழிச் சுதந்திரந்திரத்தை விரும்பும் நாங்கள் ஏற்க முடியாது.
தேவைப்படுபவர்கள் ஆங்கிலத்தை படிக்கலாம் எங்கள் மீது ஆங்கிலத்தை திணிக்காதீர்கள்.
கல்வியை கடைச்சரக்காக்கிய கயவர்கள் ஆங்கிலத்தை படிக்காமல் இங்கு யாருக்கும் வாழ்வு
இல்லை என்ற நிலையை ஏற்படுத்த சதி செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அதனை நியாயப்படுத்தவே தொடர்பு மொழி என்று பேசி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி மொழிபெயர்ப்பை எளிமையாக்கிவிட்டது. அதனை பயன்படுத்தி நாம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கு மாறாக தமிழர்கள் அனைவரும் ஆங்கிலத்தின் மூலமே அனைத்து விஞ்ஞானங்களையும் கற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அயோக்கியத்தனமே. இந்தக் கருத்து ஏதோ தமிழ் மொழியின் மீது கண்மூடித்தனமான பற்றின் அடிப்படையிலானது அல்ல. மாறாக விஞ்ஞான அடிப்படையான கருத்தாகும். அதாவது தாய்மொழிக் கல்வியே விஞ்ஞானமாகும் என்ற அடிப்படை கொண்டதே எமது கருத்தாகும். இந்தக் கருத்து மக்களின் நலனிலிருந்துவரும் விஞ்ஞான கருத்தாகும். பாராளுமன்றத்திலே ஒவ்வொருவரும் அவர்களது தாய்மொழியிலேயே பேசுகிறார்களே, அதனை ஒவ்வொருவரும் அவர்வர்களது சொந்த தாய்மொழியின் வாயிலாகவே புரிந்துகொள்கிறார்களே அதற்கேற்ப தொழில்நுட்பம் வளர்ந்துள்ளே. ஆகவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொடர்புமொழிப் பிரச்சனையை நாம் தீர்க்க முடியும். இதற்கு மாறாக தொடர்பு மொழி என்ற பிரச்சனையை முன்வைத்து நம்மீது
ஆங்கிலத்தை திணிப்பதும் பணம் உள்ளவன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்துவர்களும்
மக்களுக்கு எதிரான அயோக்கியர்களே ஆவார்கள். டாக்டர் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியின் வாயிலாகவே படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் நாம் ஒவ்வொரும் தமிழ் மொழியின்
வாயிலாகவே இந்தப் படிப்புகளை படிக்கலாமே. அதற்கு முயற்சி செய்பவர்கள் யாரோ
அவர்கள்தான் உண்மையான தமிழர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் ஆவார்கள். இதற்கு
மாறாக இந்தப் படிப்புகளை படிக்க நாம் ஆங்கிலத்தை படிக்க வேண்டும் என்பவர்கள்
தமிழர்கள் அல்ல அவர்கள் ஆங்கிலேயராகவோ அல்லது ஆங்கில மோகம்கொண்ட எடுபிடிகளாகவோதான்
இருப்பார்கள். இந்தியாவை ஆளுகின்ற ஒற்றை ஆட்சியாளர்கள் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும்
இந்தி மொழி வளர்ச்சிக்கும் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது உண்மையே இவர்கள்
மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில்லை. அதனை நாங்கள் சந்தேகம்
இல்லாமல் கண்டிக்கிறோம். இதற்கு மாற்று என்ன?
இந்திய ஒற்றை ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும்.
ஒவ்வொரு மொழிவழி தேசத்துக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும்.
அத்தகைய உரிமையுடன் கூடிய சுதந்திர தேசிய அரசுகள் உருவாக வேண்டும். அத்தகைய
சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட இந்திய கூட்டரசு உருவாக வேண்டும். ஒவ்வொரு தேசிய
அரசுகளும் சுயவிருப்பத்தோடு ஒன்றுபட வேண்டும். எந்தவொரு தேசத்தையும் கட்டாயப்படுத்தி
இணைக்கக் கூடாது. ஒவ்வொரு தேசத்தின் அரசியல், பொருளாதாரம், கலை பண்பாடு கல்வி மற்றும் மொழிப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஒவ்வொரு
தேசத்துக்கும் சுதந்திரம் வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது. அத்தகைய
ஆட்சிமுறைக்காக இங்குள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
அதுவரை தாய்மொழிக்கல்விக்காக அதன் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும்.
மேலும் தாய்மொழியல்லாத அந்நிய மொழிகளான இந்தி
மற்றும் ஆங்கில மொழித்திணிப்பை எதிர்த்தும் நாம் போராட வேண்டும்.
நவீனகால தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுகிறேன்.
நவீனகால தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில்தான் பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்கிறேன்.
தோழர் ஜீவா பொதுமொழி இந்தி வேண்டும் என்றார். அந்தக் கொள்கைக்கு நேர்எதிரான
ஒருமொழிக் கொள்கையே எனது கொள்கையாகும். எனது தாய்மொழி தமிழ் மொழியின் மூலமாகவே வேற்றுமொழி
பேசுபவருடன் உரையாடுவதற்கான தொழில்நுட்ப கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில்
மொழிச்சிக்கலை விஞ்ஞான வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நான் பேசுகிறேன்.
ஆனால் இங்கே இல்லாத திராவிட தேசியம் பேசியவர்களின் கடந்தகாலக் கண்ணோட்டத்திலிருந்து மொழிப்பிரச்சனையைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டிய காலக்கட்டத்தில் சுரண்டலை பாதுகாக்க முயற்சிப்பவர்களைப் போலவே அந்நிய மொழியின் தேவையில்லாமலே தாய்மொழியை மட்டும் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம்
வளர்ந்துகொண்டிருப்பதை பார்க்க மறுத்துவிட்டு சுரண்டலுக்கு ஆதரவான அந்நிய மொழியான
ஆங்கிலக் கல்வியின் அவசியத்தைப் பற்றி கூச்சமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தின் வளர்ச்சியும்
தொழில்நுட்ப விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மட்டுமே மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும்.
தேசங்களின் சுய நிர்ணய உரிமைக்குப் போராடத் தயாரில்லாத போலியான தமிழ் தேசிய
இனவாதிகளான திராவிட இயக்கத் தலைவர்களின் துரோகத்தைக் காரணம் காட்டி,
இந்தியாவிலுள்ள
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கும் பேர்வழிகள் இந்தியாவை ஆளும்
சுரண்டல் பேர்வழிகளான இந்திய கார்ப்பரேட் மற்றும் அயல்நாட்டு கார்ப்பரேட்
முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் முதலாளித்துவ எடுபிடிகளே ஆவார்கள்.
இவர்கள் இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களை சுரண்டி
அவர்களின் வாழ்வை நாசப்படுத்திக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஒடுக்குமுறையையும்
சுரண்டலையும் மூடிமறைக்கிறார்கள். திராவிட இயக்கத் தலைவர்களும் இந்த
சுரண்டலாளர்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கும் பிழைப்புவாதிகளே. ஆகவே பிழைப்புவாதிகளான
திராவிட இயக்கத்
தலைவர்களும் இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுத்து
ஜனநாயகத்துக்கு எதிரான இந்திய ஒற்றை சர்வாதிகார ஆட்சிக்கு வக்காலத்து
வாங்குபவர்களும் இந்திய மக்களின் எதிரிகளே துரோகிகளே ஆவார்கள். ஆகவே இந்திய மக்கள்
இவ்விரு பிற்போக்குப் பேர்வழிகளை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும்,
அதனை ஏற்றுக்கொண்ட
இந்திய கூட்டரசுக்காகவும் பாடுபடுபவரே இந்திய உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்கள்
ஆவார்கள். தேன்மொழி
இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும்வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 3
அவர்களது ஒற்றுமை கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால்தான் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முடியும். முதலாளிகளும், குட்டி முதலாளிகளும் அவர்களது வர்க்கத் தன்மையின் காரணத்தால், விவசாயிகளையும் தொழிலாளி வர்க்கத்தையும் திரட்ட முடியாமல் போகலாம். இவ்விழப்பினால், முதலாளிகளும் குட்டி முதலாளிகளும் தலைமையேற்று நடத்தக்கூடிய இயக்கங்கள் சில நேரங்களில் சீரழிவுற்று தனிநபர் அல்லது குழு பயங்கரவாதமாகி, எதிரிகளையோ அல்லது சில நேரங்கள் சாதாரண அப்பாவி மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட பிற தேசிய இனங்களுக்கு எதிராகக் கூட செயல்பட நேரிடும். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும், ஆளும் வர்க்கங்களும். சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 14, 15)
விளக்கம்:- இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஒற்றுமைதான் அவர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரே வழியாகும்.தேசிய இனங்களுக்கு இடையில் அவர்களது பொதுவான எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒற்றுமை யை கட்டமைப்பதன் மூலமே அவர்களுக் கான பிரிந்துபோகும் தேசிய சுயநிர்ணய உரிமையை தெளிவாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முடியும். ஆகவே ஒவ்வொரு தேசிய இனமும் தனது சுயநிர்ணய உரிமைக்காக அவர்களின் எதிரியை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் இவர்களின் எதிரிகளே பிற தேசிய இனங்களுக்கும் எதிரிகளாக இருப்பதைப் புரிந்துகொண்டு பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் கூட்டுசேர்ந்து பொதுவான எதிரியை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டும். உதாரணமாக இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும் அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளும் தமிழ் தேசிய இனத்துக்கு மட்டுமல்லாமல் தெலுங்குதேசம், பஞ்சாப்தேசம் போன்ற பிற தேசிய இனத்துக்கும் பொதுவான எதிரிகளாகவே இருக்கிறார்கள். இந்த பொதுவான எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒற்றுமையை சீர்குழைக்கும் தமிழ்தேச வெறியை வளர்க்கும் சீமானையும் கன்னட தேசவெறியை வளர்க்கும் வட்டல் நாகராஜ் போன்ற துரோகிகளையும் இனம்கண்டு புறக்கணிக்க வேண்டும். சீமான் போன்றவர்கள் தமிழ் உழைக்கும் மக்களின் நண்பர்கள் அல்ல. இவர்களது வர்க்கத் தன்மையானது குட்டி முதலாளித்துவ தன்மையாகும். இவர்கள் பெரும்பாலும் ஆளும் வர்க்கங்களான உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுடன் கூட்டுசேர்ந்து தேசிய இனங்களிலுள்ள உழைக்கும்
மக்களிடம் பகையை ஏற்படுத்தி உழைக்கும் மக்களிடையே சண்டையைதூண்டிவிட்டு ஆளும் கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்தப் போராட்டங்களை திசைதிருப்பி உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மோதவிடுகிறார்கள். ஆகவே இந்த துரோகிகள் பிற தேசிய இன மக்களுக்கு மட்டுமல்லாமல் சொந்த தேசிய இனமான தமிழ் தேச உழைக்கும் மக்களுக்கும்
எதிரானவர்களே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிபிஎம் கட்சித் தலைவர்கள் தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை வேண்டும் என்று சொல்லி தேசிய இனங்களின் சுதந்திரத்தை மறுக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியம் அன்னிய ஒடுக்குமுறையாளர்களுக்கும் அவர்களது உள்நாட்டு கூட்டாளிகளுக்கும் எதிராக இருக்கும்போது அது முற்போக்கானதாக இருக்கும். அவ்வாறின்றி பிறதேசிய இனங்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படும் போது அடிமைப்படுத்து வோர்களுக்கும், ஒடுக்குபவருக்கும் சாதகமாக அமைந்து, ஒரு தேசிய இனத்தை மற்றொன்றிற்கு எதிராக மோத விட்டு உழைக்கும் மக்களின் அணிகளையே உடைத்துவிடும். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும், சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 15)
விளக்கம்:- தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்லது பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுதந்திரமான தேசிய அரசுகளை உருவாக்குவதற்கான போராட்டமானது முற்போக்கானதாகும் என்று லெனினியம் வரையறுக்கிறது. எனினும் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு.
அதாவது அந்தப் போராட்டமானது அந்த தேசிய இனங்களுக்கு வெளியே உள்ள அந்நிய சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறையாளர் களையும், அத்தகைய ஒடுக்கு முறையாளர்களுக்கு துணைபோகும் சொந்த தேசத்தைச் சேர்ந்த அவர்களது கூட்டாளிகளையும் எதிர்த்துப் போராடி அவர்களின் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்தை யும் வீழ்த்த வேண்டும். இவ்வாறில்லாமல் பிற தேசிய இன ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இனவெறி கண்ணோட்டத் திலிருந்து போராடினால் அந்தப் போராட்டமானது சொந்த தேசிய இன உழைக்கும் மக்களையும் பிற தேசிய இன உழைக்கும் மக்களையும் ஒடுக்குபவர் களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டு மல்லாமல் ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு ,ஒட்டுமொத்த உழைக்கும் மக்களிடையே ஒற்றுமை உடைந்துவிடும். இதனை பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களது அரசும் இந்திய உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி தாக்கி அடிமைப்படுத்துவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு தேசிய இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் போராட்டங்கள் பிற்போக்கானவையே ஆகும். இத்தகைய பிற்போக்கு கொள்கை கொண்டவர்கள்தான் சீமான் போன்றவர் கள். தமிழ் இனத் துரோகிகளான திமுகவை எதிர்ப்பது என்ற பேரில் தமிழர்களிடையே இனவெறியை ஊட்டி தெலுங்கு தேசிய இன மக்களை எதிரிகளாகக் காட்டி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அவர்களது ஆட்சிக்கும் எதிரான போராட்டத்தை பிற்போக்கான முறையில் திசைதிருப்புகிறார்கள். எந்த ஒரு தேசமோ அல்லது தேசிய இனமோ இன்று மரபு இன அடிப்படையில் சுத்தமானதாக இல்லை. ஒரு தேசிய இனத்தின் தோற்றத்தை ஆராயும் போது, அது ஒரு குறிப்பிட்ட மரபு இனத்திலிருந்து தோன்றியதாக இருக்கும், ஆனால் நாளடைவில் பிற இனங்களின் ரத்த கலப்பால் கலப்பினமாக இருக்கும். இனத்தை தூய்மைப்படுத்துதல் என்பது விஞ்ஞானத்துக்குப் புரம்பானது மட்டுமின்றி மிக அபாயமானதாகும்.
வரலாற்று காரணத்திற்காக ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளான பிற பகுதி மக்கள் அல்லது தேசிய இனங்கள் ஒரு குறிப்பிட்ட தேசிய இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் குடியேறி இருக்கலாம், காலனி ஆட்சியாளர் களும் அவர்களது வாரிசுகளும் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் பொது எதிரியாக இருந்ததுடன், இந்தப் பிரச்சனைக்கு மேலும் சிக்கல்களை சேர்த்தார்கள். வரலாற்று அமைவு களிலிருந்து இப்பிரச்சனைகளை விலக்கிப் பார்ப்போமேயானால் இதற்கு யாதொரு தீர்வையும் காண இயலாது.
விளக்கம்:- தற்காலத்தில் மரபுவழி தேசிய இனமானது சுத்தமான தேசிய இனம் என்ற நிலையிலிருந்து மாறி ரத்த கலப்பின் காரணமாக சுத்தமான தேசிய இனமாக இருக்காமல் போகலாம். பிற தேசிய இனங்களோடு கலந்து கலப்பினங்கள் உருவாகலாம். ஒவ்வொரு மனிதனின் குறிப்பிட்டவாழ்க்கை சூழ்நிலை காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லலாம். உதாரணமாக இலங்கையில், பர்மாவில் குடியேறிய உழைக்கும் தமிழர்களையும், தமிழ்நாட்டில் குடியேறிய சௌராஷ்டிர மக்களையும் சொல்லலாம். இவ்வாறு குடியேறியவர்கள், அவர்கள் குடிபெயர்ந்த நாட்டில் உழைப்பில் ஈடுபட்டு அந்த தேசத்தை வளர்த்திட்ட வரலாறை நாம் பார்க்கலாம். அவ்வாறு குடியேறியவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் உள்ளவர்களோ டு ஒன்று கலந்துவிட்டதையும் நாம் பார்க்கலாம். அத்தகைய மக்களை அவர்கள்குடியேறிய தேசத்தைச் சேர்ந்தவராகவே நாம் பார்க்க வேண்டும். மேலும் அவர்களை சிறுபான்மை தேசிய இனத்தவராகக் கருதி அவர்களுக்கு மொழி உரிமை போன்றவற்றை நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்தச் சூழலில் தேசிய இனங்களை அல்லது தேசங்களை அடிமைப்படுத்திய காலனி ஆதிக்கவாதி களையும் அவர்களுக்கு துணைபோகின்ற வர்களையும் தேசிய இனங்களின் பொதுவான எதிரிகளாக நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக தமிழகத்திலுள்ள தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தெலுங்கு சிறுபான்மை தேசிய இனம் போன்ற பிற தேசிய சிறுபான்மை இனத்தவர்களின் பொதுவான எதிரிகளா கவே இந்த ஆதிக்க சக்திகளை நாம் பார்க்க வேண்டும். மேலும் இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களின் பொது
எதிரிகளாகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளை
நாம் பார்க்க வேண்டும். மேலும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி
தூக்கும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சித்
தலைவர்களும் தேசிய இனங்களின் பொதுவான எதிரிகளே என்பதை நாம்
புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் இந்தப் பிரச்சனையை வரலாற்று வழியில் ஆய்வு செய்து புரிந்துகொள்ளாமல் இதற்கான தீர்வை நாம் காணமுடியாது என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது. ஆகவேதான் தமிழ் தேசத்தின் விடுதலையை விரும்புபவர்கள் இந்திய வரலாற்றையும், இந்தியப் பொருளா தாரத்தையும், இந்திய ஆட்சிமுறையையும் ஆய்வு செய்து அதற்கான தீர்வை காண வேண்டும் என்கிறது மார்க்சிய லெனினியம்.
ஒரு பகுதியில் உள்ள பெரும்பான்மையான தேசிய இன மக்களுக்கும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் இடையிலான போராட்டங்கள், இத் தேசிய இனங்களுக் குள் இருக்கும் ஒடுக்குமுறையாளர்களின் கரத்தைப் பலப்படுத்தும். இவ்விருவர்க்கங்களுக்கிடையே வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாக வர்க்க ஒற்றுமை ஏற்பட்டு தேசிய இனப் போராட்டமானது சீரழிந்து போகும்.
இன்று தேசிய இனங்கள் தங்களது பொது எதிரிக்கு எதிராக தோளோடு தோள் நின்று போராட வேண்டியிருக்கிறது. இத்தகைய பொதுப் போராட்டங்கள் அவர்களை நெருக்கமாக பிணைத்து, ஐக்கியப்படுத்தி ஒரு பொது தேசிய இனமாக உயர்த்தும் அல்லது அவர்களது போராட்டங்களில் வெற்றி பெற்ற பின் சில சரி கட்டுதல்களை ஏற்படுத்திக் கொள்ளும். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங் களும், சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 15, 16)
விளக்கம்:- ஒரு பகுதியில் அல்லது ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன மக்கள் பெரும்பான்மையாகவும், பிற தேசிய இன மக்கள் சிறுபான்மையினராகவும் வாழ்ந்துவரும் நிலையை நாம் காண்கிறோம்.
உதாரணமான தமிழகத்தில் தமிழ் தேசிய இன மக்கள் பெரும்பான்மையாகவும் பிற தேசிய இனங்களான தெலுங்கு, சௌராஷ்டிரா போன்ற சிறுபான்மை யினரும் சேர்ந்தே வாழ்ந்துவருகின்றனர்.
இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு களும் போராட்டங்களும் கூட நடந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். உதாரணமாக மஹாராஷ்டிரத்தில் அங்குள்ள இனத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதல்கள், கர்நாடாவில் கன்னடியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதல்கள், தமிழகத்தில் சீமான் போன்றவர்களால் தமிழர்களுக்கும் தெலுங்கு பேசும் மக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் சதிச்செயல்கள். இத்தகைய மோதல்களினாலும் மோதல்களை தூண்டுவதாலும் பயனடைவோர் யார்? இந்த மக்களின் உழைப்பை சுரண்டுபவர்களும், இந்த மக்களை ஒடுக்குவோரும்தான் பயனடைகிறார்கள். இந்த மோதல்களின் மூலம் மோதுகின்ற இரண்டு இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எவ்விதமானபயனும் கிடைப்பதில்லை. மாறாக மோதுகின்ற இவ்விரு இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள்தான் தொடர்ந்து வேலையின்மையாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இத்தகைய இன மோதல்களும் சாதிய மோதல்களும் உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தி ஒடுக்கிச் சுரண்டுவோர் களின் கரத்தையே வலுப்படுத்தும். உதாரணமாக குசராத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தினால் ஏற்பட்ட விளைவு என்ன?
இந்திய மக்களின் வாழ்வை சீரழிக்கக் கூடிய கொடூரமான கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலுக்கு சேவை செய்யும் ஒரு பாசிச ஆட்சிதான் உருவாகியது. இந்த ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ந்தார்கள், ஆனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வறுமையில் வீழ்ந்தார்கள். ஆகவே மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ, இனத்தின் பெயராலோ உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மோதவிடும் சதிகாரர்களுக்கு உழைக்கும் மக்கள் எப்போதும் பலியாகக்கூடாது. இதற்கு மாறாக ஒவ்வொரு சாதி, மத, இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு பொது எதிரியை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியதுதான் மிகவும் அவசியமாகும். இதற்கு மாறாக சாதி, மதம், இனத்தின் அடிப்படையில் போராடுவது வர்க்கங் களுக்கு இடையே அதாவது சுரண்டும் வர்க்கங்களை எதிர்த்து சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கம் போராடுவதற்குப் பதிலாக ஒவ்வொரு சாதி, மதம், இனத்துக்கொள்ளேயே உள்ள பகையான வர்க்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு அனைத்து சாதி, மதம், இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வு சீரழியும்.
இந்தியாவில் இதுவரை நடந்தது இதுதான். இதன் காரணமாகவே அனைத்து சாதி, மதம், இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் வறுமையிலேயே தொடர்ந்து வீழ்ந்து கிடக்கிறார்கள். ஆகவே உழைக்கும் மக்கள் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றுபட்டு பொது எதிரியை எதிர்த்துப் போராடினால்அவர்களுக்கு இடையில் நெருக்கம் ஏற்பட்டு ஒவ்வொரு தேசிய இன மக்களும் ஒவ்வொரு தேசிய இனமாக ஒன்றுபட்டு ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களும் அவரவர்களுக்கான சுதந்திரமான தேசிய அரசுகளை அதாவது பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய அரசுகளை உருவாக்க வேண்டும், உருவாக்க முடியும். அத்தகைய தேசிய அரசுகள்தான் இங்குள்ள சாதி, மதம்,இனம் போன்ற பல பிரச்சனைகளை தீர்க்கும். இந்திய ஒற்றை அரசு இந்தப் பிரச்சனைகளை தீர்க்காது மட்டுமல்லாமல் இந்தப் பிரச்சனைகளை மேலும் மேலும் வளர்க்கும். ஆகவே நம்முடைய வாழ்வை சீரழிக்கும் இந்திய ஒற்றை அரசு நமக்குத் தேவையா? நம்மை சுரண்டுபவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி உருவாக்கப்படும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுதந்திரமான தேசிய அரசுகள் நமக்குத் தேவையா? சிந்தியுங்கள்.
அருகருகே வாழ்ந்து வரும் தேசிய இனங்களுக்கிடையே உள்ள இன வேறுபாடுகளை, பொது எதிரிகள் ஒரு இனத்திற்கு எதிராக மற்றதை மோதவிடு வதற்கு அடிக்கடி பயன்படுத்தி, தேசிய விடுதலைப் போராட்டங்களையே அழித்து விடுவார்கள். எதிரிகள், புரட்சிகர இயக்கங்களுக்குள்ளேயே தங்களது கையாள்களை வைத்து அவ்வியக்கங்களை நிலைகுலையச் செய்துள்ளதை அரசியல் பணியாற்றியவர்களின், மோசமான அனுபவங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். சில சமயங்களில் புரட்சிகர அமைப்புகள் போல்தோற்றமளிக்கும் எதிர்ப் புரட்சிகர அமைப்புகளை உருவாக்கி, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, குழப்பி, குழுக்களாகப் பிரித்து விடுவார்கள். நாகர்களுக்கும், குக்கிகளுக்கும் இடையிலும் போடோக்களுக்கும் அஸ்ஸாமி யர்களுக்கும் அல்லது வங்காள மொழி பேசும் உழைப்பாளிகளுக்கும் இடையிலும் பரஸ்பரம் மோதல்களை உருவாக்கி வருபவர்கள்தான் இவர்கள் அனைவருக்கும் பொது எதிரிகளாவார்கள்.(இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும், சுனிதிகுமார்
கோஷ், பக்கம் - 16).
விளக்கம்:- இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான எதிரிகள் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் ஆவார்கள். இவர்களுக்கு துணைபோகும் அரசுதான் இந்தியப் பெருமுதலாளிகளின் நலன் காக்கும் அரசான இந்திய ஒற்றை அரசாகும். இந்த அரசில் பங்குபெறு வதற்காக போட்டிபோடும் அரசியல் கட்சித் தலைவர்களான காங்கிரஸ், பாஜக போன்ற ஆளும் வர்க்க அரசியல் கட்சித் தலைவர்களும் அவர்களின் தலைமையை ஏற்று செயல்படும் அரசியல் கட்சிகளும் இங்குள்ள தேசிய இனங்களுக்கு எதிரிகளே ஆவார்கள். இந்த எதிரிகள்தான் இங்குள்ள தேசிய இனங்களுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளை ஊதிப் பெருக்கி அவர்களுக்கு இடையில் பகையைத் தூண்டிவிட்டு மோதவிட்டு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒன்றுபட்டு பொது எதிரிக்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்பி தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களையே அழித்து விடுகின்றனர். இந்த எதிரிகள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள்ளும் பொதுவாக புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் அவர்களின் கையாள்களை ஊடுருவச் செய்து, புரட்சிகர கட்சியை அதன் லட்சியத்திலிருந்து விலகச் செய்து புரட்சிகர இயக்கத்தையே நிலைகுலையச் செய்துவிடுகிறார்கள்.
இதற்கு அடிப்படையான காரணம் புரட்சிகர அமைப்பில் இணைந்து செயல்படுபவர் களுக்கு சமூக விஞ்ஞானமான மார்க்சிய லெனினிய அறிவு பற்றாக்குறையே காரணமாகும். இவர்களுக்கு மார்க்சிய அறிவு இருந்திருக்குமானால் உண்மை எது? பொய் எது? என்பதை புரிந்துகொண்டு
எதிரியின் கையாட்களை அடையாளம் கண்டு அவர்களின் துரோகத்தனமான கொள்கைகளை அம்பலப்படுத்தி அமைப்பிலுள்ள தோழர்களுக்குவிழிப்புணர்வை ஊட்டியிருக்க முடியும். இந்த
அமைப்பிலுள்ள தலைவர்களும் அமைப்பிலுள்ள உறுப்பினர்களும் மார்க்சிய
அறிவை வளர்த்துக்கொள்ளாததன் காரணமாகவே புரட்சிகரமான அமைப்புகள் திருத்தல்வாத மற்றும் சீர்திருத்தவாத அமைப்புகளாக மாறிவிட்டன. சில அமைப்புகள் புரட்சிகரமான அமைப்புகள் போல் தோற்றமளித்தாலும் அவை உண்மையில் எதிர்ப்புரட்சிகர அமைப்பு களாகவே உள்ளன. அத்தகைய எதிர்ப் புரட்சிகர அமைப்புகளை உருவாக்கி எதிரிகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு குழப்பங் களை ஏற்படுத்தி புரட்சிகர கட்சியை பல குழுக்களாகப் பிளவுபடுத்துகின்றனர். இதற்கு முதன்மையான காரணம், நம்மிடத்திலுள்ள அறியாமையே ஆகும். அதற்கு நாம் மார்க்சியத்தை படித்து மார்க்சிய அறிவை வளர்க்கத் தவறியதே ஆகும். மேலும் தேசிய இனங்களுக்கு இடையிலும், சாதிகளுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் பகையைத் தூண்டி மோதவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும், தேசிய இனங்களுக்கும், அனைத்து சாதி மதங்களைச் சேர்ந்தஉழைக்கும் மக்களின் பொது எதிரிகளே ஆவார்கள். ஆகவே உழைக்கும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்து பவர்கள் அனைவரும் அனைத்து உழைக்கும் மக்களின் பொது எதிரிகளே என்பதை புரிந்துகொண்டு அந்த எதிரிகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் இதைத்தவிர வேறுவழி இல்லை. இத்தகைய ஒற்றுமையை சாதிப்பதுதான் கம்யூனிஸ்டு களின் லட்சியமாக இருக்கவேண்டும். இதற்குத் தடையாகவே குறுங்குழுவாதிகள் இருக்கிறார்கள். ஆகவே இந்த குறுங்குழுவாதத்திற்கு முடிவுகட்ட நாம் மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டு ஒரு பலமான ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டி சாதி, மதம், இனம், பெண் போன்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான புரட்சிகர வழியில் முன்னேற வேண்டும்.திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரமில் இருந்து சக்மாக்களை வெளியேற்றும் நடவடிக்கை தேசிய சுய நிர்ணயத்திற்கு சேவை செய்வது கிடையாது. மாறாக பிற்போக்கு ஆளும் வர்க்க நலனுக்கு சேவை செய்யத்தான். யார் இந்த சக்மாக்கள்? ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களது இந்து, முஸ்லிம் கூட்டாளிகளின் சதித் திட்டங்களுக்கு பலியானவர்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். அந்த ஆளும் வர்க்கம்தான் வங்காளத்தையும் பஞ்சாப்பையும் மத அடிப்படையில் இரு பகுதிகளாகப் பிரித்தது. இதில் மிகவும் ஆச்சரியத்திற்குரிய, கிரிமினல் செயல் என்னவெனில், பஞ்சாப், வங்காளம், சைலட் ஆகிய பகுதிகள் மவுண்ட்பேட்டன், நேரு, ஜின்னா இவர்களின் தூண்டுதலால் ஆங்கில வழக்கறிஞர் ஒருவரால் ஒரு மாதத்திற்குள்ளாகவே எல்லைகள் பிரிக்கப்பட்டு, குறிக்கப்பட்டன. அனைத்து விதிகளையும் மீறி சக்மா மலை சாதியினரின் தாயகமான சிட்காங் மலைத்தொடர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப் பட்டது. அது கிழக்கு பாகிஸ்தானின் தற்போதைய பங்களாதேஷின் பகுதி ஆயிற்று. நாளடைவில், கடுமையான அடக்குமுறைக்கும்,அநீதிகளுக்கும் ஆளான அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் தங்களது தாயகத்தை விட்டு விரட்டப்பட்டனர். தற்போது அடுத்துள்ள திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் பகுதிகளில் மிகவும் இழிநிலையில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். (இந்தியாவின் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும், சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 16, 17)
விளக்கம்:- ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள், நேரு மற்றும் முகமதலி ஜின்னாவால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள்தான் சாக்மா பழங்குடி மக்கள். இந்த ஆளும் வர்க்கங்களுக்கு துணை போனவர்கள் தான் நேருவும் ஜின்னாவும். பஞ்சாப் தேசத்திலும் வங்காள தேசத்திலும் ஒரு மொழிவழி தேசம் என்ற முறையில்ஒற்றுமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அதனை மத அடிப்படையில் பிளபடுத்தி ஆளும் வர்க்கங்களுக்கு சேவை
செய்த கட்சிகள்தான் காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம்லீக்கும் என்பதுதான் வரலாறாகும். இவர்களின் பிற்போக்கு செயல்களின் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ்ம் பாஜகவும் திட்டமிட்டு இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவின் இந்து மதவெறிக்கு விதை போட்டவர்களே இவர்கள்தான். மொழிவழி தேசங்களாக எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு மாறாக மத அடிப்படையில் எல்லைகள பிரிக்கப்பட்டு சக்மா பழங்குடி மக்களின் தாயகமான சிட்காங் மலைத்தொடரை கிழக்கு பாக்கிஸ்தானோடு சேர்த்து அங்கு வாழ்ந்த சக்மா பழங்குடி மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். இதே போலவே தேவிகுளம் பீர்மேடு பகுதியில் வாழ்ந்த தமிழர்களை தமிழகத்தோடு இணைக்காமல் கேரளாவோடு இணைத்தார்கள். இவ்வாறு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாக்குகிறோம் என்று சொல்லி ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி மொழிவழி தேசங்கள் உருவாகாமல் இருப்பதற்கான சதித்தனங் களில் நேரு அரசாங்கம் ஈடுபட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மக்களிடை யே ஒற்றுமை வேண்டும் என்று நாடகமாடிக் கொண்டே இந்திய மக்களை சாதி, மதம், இன அடிப்படையில் பிளவுபடுத்தும் வேலைகளை காங்கிரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் செய்தது. தற்போது இந்தியாவிலுள்ள இஸ்லாமிர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற பாஜக சதி செய்துகொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆகவே ஆளும் வர்க்கங் களின் பிளவுபடுத்தும் சதித்தனங்களை முறியடிக்க ஒவ்வொரு மொழிவழி மாநிலங்களுக்கும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை வழங்கி, ஒவ்வொரு மாநிலத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட கூட்டரசாகவே இந்திய அரசை மாற்றுவதுதான் ஒரே வழியாகும்.இந்தியாவில் உள்ள பெரும் தொழில் மையங்கள் அனைத்திலும் தொழிலாளி வர்க்கம் பல்வேறு இன மக்களைக் கொண்டு அமைந்துள்ளது. பிரிந்து போகும் உரிமையோடு கூடிய சுய நிர்ணய உரிமைக்காக போராடும் இயக்கங்களின் ஒற்றுமை உடையுமானால் பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் அவர்களை தம் விருப்பப்படி அடக்கி ஒடுக்கும். சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் உடனடியான போராட்டப் பணியோடு, பல்வேறு தேசங்களின் இணைவு ஐக்கியம் பற்றிய கோட்பாடுகளை மறந்துவிடக்கூடாது. மனித இனம் வர்க்கங்களாகவும் தேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வர்க்கங்கள் மறையும் போது தேசங்களும் கூட படிப்படியாக மறைந்து போகும். (இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும், சுனிதிகுமார் கோஷ், பக்கம் - 17).
விளக்கம்:- இந்தியாவிலுள்ள பெரிய தொழில் மையங்களான சென்னை, பெங்களூரு, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்துவருகிறார்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இன மக்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்புகளுக்கு இடையில் பொதுவான எதிரியை எதிர்த்த போராட்டத்தில் ஒற்றுமை இருக்குமானால் இந்த நகரங்களில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களிடையே ஒற்றுமை நிலவுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால், இதற்கு மாறாக இந்த அமைப்புகளுக்கு இடையேயான ஒற்றுமை தகருமானால் பொதுவான எதிரிகளான பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் இந்தப் பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் வர்க்கங்கள் அவர்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதோடு அவர்களது செல்வங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வார்கள்.
ஆகவே ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் சரி தேசியஇனத்தின் விடுதலைக்கான அமைப்பாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேசிய இனங்களுக்கான பிரிந்துபோகும் உரிமை யுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான உடனடியான போராட்டத்தில் ஈடுபடுவதோடு
கூடவே அனைத்து தேசிய இன மக்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
ஆகவே கம்யூனிஸ்டுகளும் தேசிய இன விடுதலைபபோராளிகளும் ஒருபக்கம் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும் மறுபக்கம் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையே ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும். இவ்விரண்டையும் இணைத்தே நமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை மறுப்பவர்களும் தேசிய இனங்களுக்கு இடையே ஒற்றுமை எதிர்ப்பவர்களும் அனைத்து தேசிய இன உழைக்கும் மக்களின் எதிரிகள் என்பதை புரிந்துகொண்டு இந்த எதிரிகளை எதிர்த்து போராட வேண்டியது மிகமிக அவசியமாகும். மனிதகுல வரலாற்றை ஆய்வு செய்யும்போது மனித குலமானது ஒருபக்கம் வர்க்கங்களாகவும் மறுபக்கம் தேசங்களா கவும் பிளவுண்டு இருப்பதை நாம் காணலாம். எனவே உலகில் வர்க்கங்கள் ஒழியும்போது தேசங்களும் மனித குலத்துக்கு தேவையற்றதாகிவிடும். ஆகவேதான் வர்க்கப் போராட்டத்தையும் தேசிய இனங்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தையும் இணைத்தே போராடவேண்டும் என்று மார்க்சியம் நமக்குப் போதிக்கிறது.
சிபிஎம் போன்ற திருத்தல்வாதிகள் தேசிய சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள், சீமான் மற்றும் வட்டால்நாகராஜ் போன்றவர்கள் தேசிய இனங்களுக் கிடையிலான ஒற்றுமைக்கு எதிராக நிற்கிறார்கள். இவ்விரு பிரிவினரும் அனைத்து தேசிய இனங்களுக்கும் எதிரிகளே ஆவார்கள்.தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவளிக்க வேண்டியது மார்க்சிய லெனினிய வாதிகளின் பணியாகும். அவர்களின் போராட்டங்களில் சாதகமானவற்றை உயர்த்தி பிடிக்கும் அதே
சமயம் பாதகமான அம்சங்கள் ஏதாவது இருப்பின் அவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். பல்வேறு தேசிய இனங்களில் உழைக்கும் மக்களுடைய அடிப்படையான ஒற்றுமையை குலைக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளைப் பற்றியும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இல்லை யெனில் அவர்களது நடவடிக்கைகள் போராட்டங்களை வலுவிழக்கச் செய்து மக்களுக்குப் பாதகங்களை உண்டாக்கும். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத் தோடு ஏகாதிபத்திய நிலப்பிரவுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களோடு பிரிந்து போவதற்கான உரிமையோடு கூடிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை இணைக்க வேண்டியதும் மார்சிய லெனினிய வாதிகளின் வேலையாகும். மார்சிய லெனினிய வாதிகளைப் பொறுத்தமட்டில் தேசிய இனப் பிரச்சனை என்பது தனிப்பட்ட ஒன்றல்ல.
புரட்சியின் பொதுவான பிரச்சனைகளின் ஓர் அங்கமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய தேசிய இனங்களின் தற்போதைய பிரச்சனைகள் ஒரு வரலாற்று மரபுரிமைப் பண்பாகும். அதை சரிவரப் புரிந்து கொள்ள அவற்றை அதன் வரலாற்றுச் சூழலில் காணவேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
விளக்கம்:- உண்மையிலேயே மார்க்சிய லெனினிய ஆசான்களின் தத்துவ அரசியலை பின்பற்றக்கூடிய மார்க்சிய - லெனினியவாதிகள் ஒவ்வொருவரும் தேசிய இனங்களின் சுதந்திரத்திற்காகவும், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காகவும் நடத்தப்படும்
போராட்டத்தை கட்டாயம் ஆதரிக்க வேண்டியது முதன்மையான கடமையாகும். தேசிய சுயநிர்ணய உரிமைக்கானபோராட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு என்னென்ன சாதகங்கள் இருக்கிறதோ அந்த சாதகங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதே வேளையில் அந்தப் போராட்டங்களில் பாதகமான அம்சங்கள் ஏதும் இருக்குமானால் அவற்றை சுட்டிக்காட்டி அவற்றை தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுதந்திரம் வேண்டும் என்பது நியாயமானது. அத்தகைய நியாயத்துக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும், அதற்காகப் போராட வேண்டும். அதே வேளையில் தேசிய இனங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை ஊதி பெருக்கி அவர்களுக்கிடையே பகையை மூட்டி அவர்களது ஒற்றுமையை குலைக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்த்துப் போராட வேண்டும். தேசிய இன உணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில் தேசிய இனங்களுக்கிடையில் ஒற்றுமை குலைக்கும் முயற்சிகள் நடக்குமானால் அந்தப் போராட்டமானது வலுவிழந்து மக்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும், எதிரிகளுக்கு சாதகங்களை ஏற்படுத்தும். ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் தங்களுடைய லட்சியமான சோசலிச அரசை உருவாக்கு வதற்கான போராட்டத்தில், நிலவுகின்ற அரசமைப்பில் அதிகாரத்தில் உள்ள வர்க்கங்களான உள்நாட்டு கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியவர்களை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் சுதந்திரமாக பிரிந்து போவதற்கான உரிமையுடன் கூடிய சுதந்திர தேசிய அரசுகளை உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை உண்டு என்பதை மார்க்சிய - லெனினியவாதிகள் அங்கீகரித்து அவர்களது லட்சியமான சோசலிசத்துக் கான போராட்டத்தோடு தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இணைக்க வேண்டும்.
இவ்விரண்டையும் இணைத்துப் போராடுவதன் மூலமே மார்க்சியலெனினியவாதிகளின் லட்சியமான சோசலிச அரசை உருவாக்குவதை நோக்கி புரட்சியானது முன்னேறும். ஏனெனில் தேசிய இனப் பிரச்சனை என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல. அனைத்து வகையான சமூக பிரச்சனையின் ஒரு அங்கமாகவே தேசிய இனப் பிரச்சனை உள்ளது. இதே போலவே சாதிப் பிரச்சனையும், தீண்டாமையும் தனிப்பட்ட பிரச்சினையாக இல்லை. அது மக்கள் சந்திக்கும் அனைத்து வகையான சமூகப் பிரச்சனையின் ஒரு அங்கமாகவே உள்ளது. அனைத்து வகையான சமூகப் பிரச்சனைக்கு தீர்வு என்பது பாட்டாளிவர்க்க அரசமைப்பின் மூலமே தீர்க்க முடியும். ஆகவே சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பாட்டாளிவர்க்க அரசை உருவாக்குவது தான் தீர்வாகும். ஆகவே தான் இங்கு முதன்மையாக காணப்படும் தேசிய இன பிரச்சனையும், சாதி பிரச்சனையும் பாட்டாளி வர்க்க அரசமைப்பதற்கான போராட்டத்தோடு ஒன்றிணைக்க வேண்டும் என்பதே மார்க்சிய லெனினியம் காட்டும் வழிமுறையாகும். இந்திய தேசிய இனங்களின் தற்போதைய பிரச்சனைக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோலவே இங்குள்ள சாதிப் பிரச்சனைக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலமே இங்குள்ள தேசிய இனப் பிரச்சனைக்கும், சாதிப்பிரச்சனைக்கும் நாம் தீர்வு காண முடியும். ஆகவே இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்திய வரலாற்றை நாம் படித்து அலசி ஆராய வேண்டும். அதன் அடிப்படையில் நீண்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கான சரியான வழியை நாம் காண முடியும். … தேன்மொழி
No comments:
Post a Comment