மார்க்சிய நடைமுறைக்கான தத்துவ அடிப்படை அரசும் அதன் சமூகம் சார்ந்த கண்ணோட்டமும் முக்கியமானது.
இந்தப்பகுதில் அரசு என்றால் என்ன அதனை ஒரு மார்க்சியவாதி புரிந்து செயலாற்ற ஆசான்கள் வகுத்தளித்த வழிமுறைகள், இன்றை சமூகத்தில் அரசின் பங்களிப்பு இவ்வாறு தேடும் நாம் அரசு இல்லாத காலம் தொடங்கி அரசின் பல்வேறு வடிவங்களையும் அண்மையில் உள்ள வடிவங்களை விளக்குவதோடு அரசின் தன்மை அதன் செயல்பாடு வர்க்க ரீதியாக அதன் குணாம்சம் இவ்வாறாக நமது தேடலை தொடங்கும் நாம் உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்கும் அரசு என்பது எப்பொழுது தேவையற்றதாகி போகும் இவ்வாறு நமது நீண்ட தேடல்தான் கீழ வரும் பகுதி.
இவை நமது மார்க்சிய ஆசான்களின் நூல்களான “அரசும் புரட்சியும்” மற்றும் “குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலின் அடிப்படையில் எழுத முயற்சித்துள்ளதே. இதில் உள்ள தகவல்கள் நம் நேரடி கள நிலைமைகளிலிருந்து பெறப்பட்ட முடிவுகளும் அடங்கும். இதில் ஏதேனும் தவறு இருக்குமேயானல் விமர்சனங்களுக்கு இலக்கு ஆசிரியர் குழுவே பொறுப்பு. உங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது.
அரசியல் என்றாலே அந்த வார்த்தை எதோ ஒரு தவறான சொல்போலவும், அரசியல் பேசும் மனிதர்களெல்லாம் எதோ தவறான எண்ணத்தில் அணுகுவது போலவும் ஒரு சித்திரத்தை பரப்பியுள்ள சமூகத்தை என்னவென்று சொல்ல?
தமிழக சட்டசபை தேர்தலின் போது பல முன்னணி கட்சிகள் வெட்க்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை கோட்பாடற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாக வலம் வந்தன, வலம் வருகின்றன, அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை நம்பி அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடு கிறார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்பு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை, அதனை மறந்து விடுகிறார்கள். மேலும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர்எதிராகவே சட்டமும் திட்டமும் போட்டு செயல்படுகிறார்கள். இவர்கள் சாதித்தவைதான் என்ன?. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் இவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக செயல்பட முடியாத நிலை உள்ளது. மேலும் இவர்களுக்கு மக்களுக்காக செயல்பட வேண்டும் என்ற உணர்வும் இல்லை. மக்களுக்காக இவர்கள் செயல்படுவதால் இவர்களுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக பணம் படைத்த முதலாளிகளுக்காகச் செயல்பட்டால் இவர்களுக்கு பலன் கிடைக்கும். ஆகவே இவர்கள் முதலாளிகளின் பிரதிநிதி களாகவே செயல்படுகிறார்கள். இவர்கள் முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படும் போது அது பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.
அவ்வாறு மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. இவர்கள் முதலாளிகளுக்கு எதிராகச்செயல்பட்டால் இவர்களது ஆட்சி கலைக்கப்பட்டுவிடும். ஆகவே இவர்கள் ஒருபோதும் முதலாளிகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டார்கள். சாம்சன் தொழிற்சாலையில் நடந்த போராட்டத்தில் திமுக அரசாங்கம் முதலாளிகளின் பக்கம்தானே நின்றது. அதேபோலவே நந்திகிராம விவசாயிகள் போராடும்போது இடதுசாரி அரசு கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம்தானேநின்றது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் நிற்கவில்லையே ஏன்?
இதுதான் தேர்தல்முறைகளின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் வரலாறு. அது அவர்களின் எல்லைக்கு வெளியே உள்ள விவகாரமாக உள்ளது! பாவம் பல தேர்தல் வாக்குறுதியை கொடுத்து வந்த இன்றைய தமிழக முதலமைச்சரின் நிலை என்ன? ஆகவே அரசு என்றால்என்ன? இந்த அரசாங்கம் என்றால் என்ன? என்பதை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டியது மிகமிக அவசியமாகும். மற்ற எல்லாவிதமான பிரச்சனைகளோடு ஒப்பிடும்போது அரசு பற்றிய பிரச்சனையின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொண்டுவிடக் கூடாது என்பதற்காக மக்கள் விரோத அரசியல்வாதிகள் அரசைப் பற்றி பலவாறான பொய்களைகூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் பாராளுமன்றம் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும், அரசியல்வாதிகளும், இடதுசாரிகளும்கூட ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத, மக்களுக்கு கட்டுப்படாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் போலீஸ், இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை ஏன்?. அவைதான் மக்கள் மீது அதிகாரம் செழுத்தும் அரச ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் அரசாங்கமாகும். இந்த அரசாங்கம்தான் சட்டங்களை போடுகிறது. இந்த சட்டங்களை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகள் அடங்கிய அரசு நிர்வாகம் ஆகும். இந்த அரசுதான் ஆயுதம்தாங்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தைக் கொண்டுள் ளது. இந்த அரசுதான் உழைக்கும் மக்களை வன்முறைகொண்டு அடக்கு கிறது. போலீஸ்தான் போராடும் மக்களை தடிகொண்டு தாக்குகிறது, துப்பாக்கியால் சுடுகிறது. போராடும் மக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில்நிறுத்துகிறது.
நீதிமன்றங்கள்தான் போராடிய மக்களை குற்றவாளி என்று சொல்லி சிறைக்கு அனுப்புகிறது. சிறைச்சாலையில்தான் சிறைத்துறை அதிகாரிகள்தான் சிறைக்குள் போராடிய மக்களை கொடுமைக்குள்ளாக்குகிறது. மக்களின் நலன்காக்கும் அரசுத்துறைகள் யாவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால் அதனை மக்கள் தட்டிக்கேட்டால் அவர்கள் போலீசைக்கொண்டு மக்களை தாக்குகிறார்கள்.
இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை, ஆனால் செல்வந்தர்களின் கோரிக்கை களை நிறைவேற்றுகிறார்கள்.மக்களை இவர்கள் கால்தூசுக்குகூட மதிப்பதில்லை. இதற்கு காரணம் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இவர்களை மக்களே தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் மக்களுக்கு இருக்குமானால் இந்த அரசு அதிகாரிகள் மக்களுக்கு எதிராக நடக்கமாட்டார்கள். ஒரு கம்யூன் வடிவத்திலான பாட்டாளிகளின் அரசில்தான் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை செயல்படுத்தப் படும். ஆகவே அரசு அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யவும் மக்களுக்கு அதிகாரம்கொண்ட கம்யூன் ஆட்சிமுறைதான் உழைக்கும் மக்களுக்குத் தேவை.
இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் எல்லா கட்சிகளின் ஆட்சியிலும் நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்கின்ற நிறுவனம்தான் அரசு அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்க அரசு என்ற நிறுவனமாகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை யாராலும் பறிக்கமுடியாது. ஒரு கட்சியிடமுள்ள ஆட்சி அதிகாரத்தைக்கூட ஒரு தேர்தலில் பறித்துவிட்டு வேறு ஒரு கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை தேர்தல்மூலம் மக்களால் கொடுக்கமுடியும். ஆனால் எப்போதும் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை மக்களால் பறிக்கவும் முடியாது வேறு ஒருவருக்கு அதிகாரத்தை கொடுக்கவும் முடியாது. ஆகவேதான் இங்கே அரசு அதிகாரிகள் அவர்கள் நினைத்ததை யெல்லாம் செய்துகொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் ) ஏன் எதற்கு எப்போது தோன்றியது? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன, ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன் முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசு தேவைப்படவில்லை. தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக, கூட்டம் கூட்டமாக நடக்க தொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது மிருகங்களை வேட்டையாடியும் பூமியிலுள்ள கிழங்குகளை தோண்டியும் மனிதர்கள் அவர்களது உணவுத்தை தேவையை அடைந்தனர். அவ்வாறு மனிதர்களால் சேகரிக்கப்பட்ட உணவு கள் அவர்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. ஏனெனில் அக்காலத்தில் அவர்கள் வேட்டையாடு வதற்கு கற்கள் மற்றும் மரத்தினால் ஆன கூர்மையான பின்தங்கிய ஆயுதங்களையேபயன்படுத்தினர். அவர்களால் சேகரிக்கப்பட்ட உணவு களை அவ்வப்போது சாப்பிட்டுவிட்டனர். மறுநாளுக்கு தேவையான உணவை அவர்களால் சேகரித்துவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்களால் கூட்டாக முயற்சி செய்து சேகரித்த உணவை கூட்டாகவே சேர்ந்து பகிர்ந்துகொண்டனர். அதனால் அந்தக்கால மனிதர்களிடம் தற்போது உள்ளதுபோல தனிச் சொத்தே இருந்ததில்லை. அவர்கள் பயன் படுத்திய கருவிகள் எல்லாம் பின்தங்கிய கருவிகளாக இருந்ததால் அந்தக் கருவிகள் அனைத்தும் பொதுச் சொத்தாகவே இருந்தது. அவர்களால் உழைத்துபாடுபட்டு உருவாக்கியவை அனைத்தும், அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவே இருந்தது. மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்படவில்லை. அனைவரும்சமநிலையிலேயே வாழ்ந்தனர். அங்கு அனைத்து நிலைகளிலும் சமத்துவம் நிலவியது. அந்தச் சமுதாயத்தை ஆதிகால பொதுவுடமை சமுதாயம் என்று வரலாறு வரையறுக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும்; அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர்.குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தானியங்கள் பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமை யாக்குகிறான், இயற்க்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமை யாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம், ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்றபெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது.
இரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமை யற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின.
இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப்பாதுகாப்பதற்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிட மிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே அரசு அதன் முக்கிய தூண் போலிசும் இராணுவமும், இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு- லெனின்”.
அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார்-லெனின்.
ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்தஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ள னர்) வைத்து கொண்டது.
ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு. டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடமுடியுமா?”, இதை ஜனநாயக நாடு என்று சொல்லலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்தான் இங்குள்ள ஜனநாயகம் ஆகும்.
உழைப்பாளர்களுக்கு ஜனநாயகம் என்பது வெறும் கனவே. உண்மையில் உழைப்பாளர்களின் மீது சர்வாதிகாரமே ஏவப்படுகிறது. 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளிகள் (இதனை உச்சாணியில் இருந்த இந்திய தரகுப்பெரு முதலாளிகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு திட்டம், நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்க தான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது என்பதை நாம் இங்கு வெளிப்படையாக்க் காணலாம்.
இப்பொழுது அமெரிக்க பன்நாட்டுஏகாதிபத்தியத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கும் நடுவண் அரசும், ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக் கும் நிலையில், உண்மையை அறிவதே இயலாததாக உள்ள நிலையில். நமது சிந்தனை மற்றும் செயல்கள் எல்லாம் அடிமை படுத்தும் நடவடிக்கையை நமது ஆரம்ப கல்வியிலே போதிக்கப்பட்டு நடைமுறையில் துவக்கப்படுகிறது. அவை சமூக வாழ்நிலையில் இந்த சமூக அரச அமைப்பிற்கு அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வைக்கும் முறையை. பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்ற உண்மையைக்குப் பதிலாக ஆசிரியர் களுக்கும் தலைவர்களுக்கும் அரசுக்கும் அடிபணிய வேண்டும் என்பதையே ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அரசுக்கும் சட்டத்துக்கும் அடிபணிய வேண்டும் அதனை எதிர்த்து கேள்வி கேட்க்கக் கூடாது ஏனெனில் இந்த அரசும் சட்டமும் புனிதமானது என்றே கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இன்றைய தனியார்மய கல்வியின் அவலங்களை சொல்லவேண்டியதில்லை. அப்படியே கல்வி கற்று வெளியே வந்தால் கல்விக்கான வேலையில்லை. வேலை கேட்டு போராடினால் போராளி என்று முத்திரை குத்தி போலிஸ், நீதிமன்றம், சிறைசாலை என்ற வட்டத்தில் வாழ்க்கை பாதிக்கும். இவ்வாறு சமூகத்தில் அடிமையாக வாழச்சொல்லும் அவல நிலை.. ஆகவே நமக்கான விரிவான சமூக அறிவிருந்தால் அதாவது சமூக விஞ்ஞானமான மார்க்சிய அறிவிருந்தால் இந்த அடிமைதனத்தை எதிர்த்தப் போராட்டத்தை நம்மால் நடத்த முடியும் அதில் வெற்றிகாணவும் முடியும்.
எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ? எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்து கின்றதோ? எந்த அரசு மக்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு முதலாளி களின் அதாவது சிறுபான்மையினரின் நலன்களை தூக்கிபிடிக்கிறதோ? அந்த அரசு நிச்சயமாக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அரசாக இருக்க முடியாது, இத்தகைய அரசை அடியோடு மாற்றினால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான விடிவுகாலம் வரும்!!!
இதனை விரிவாகப் புரிந்துக் கொள்ள முயலுவோம்.
“அரசு’ என்பது எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப் பட்டு வந்திருக்கின்றன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத் திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையைநியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. அரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன் தொடர்புடையது என்றும் அது புனிதமானது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் பயபக்தியுடன் பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளதை யும் நாம் கண்டிருக்கின்றோம்.
அரசு அனைத்து மக்களினதும் தேவைக்கும் நன்மைக்கும் உரிய நடுநிலையானதும் நீதியை பாதுகாக்கும் தூய்மையான நிறுவன வடிவமென்றும் கருத்துருவக் கட்டமைப்பு தொடர்ந்து பேணப்பட்டுக் கொண்டே வருகிறது.
மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ் வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங் களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது. மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது.
இந்த வர்க்க முரண்பாட்டுச் சூழலில் (ஒருவர்க்கம் மற்றைய வர்க்கத்தை அடக்கியாள வேண்டிய தேவை ஏற்பட்டது). அத்தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு ‘கருவி அவசிய மாகியது. அதுவே அரசு எனும் வடிவில் உருவாக்கப்பட்டது’ என்று மகத்தான மேதைகளான கார்ல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கெல்சுமே விஞ்ஞான அடிப்படையிலான வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வின் மூலமாக அரசு பற்றிய தெளிவான கோட்பாட்டை முன்வைத்தனர்.மனிதகுல வரலாற்றின் ஆரம்பகாலத்தில் அரசு இருக்கவில்லை என்ற உண்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. சமுதாயத்தின் வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திலேயே மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழலில்தான் அரசு உருவாகி வளர்ந்தது என்று வரலாறு நமக்குப் போதிக்கிறது.
இன்றைய அரசின் இரண்டு முக்கிய அங்கங்களாக விளங்குவது நிலையான இராணுவமும் போலீசுமாகும். இந்த அமைப்புக்கள் எப்போது தோன்றிய தென்பதை பார்ப்போம்.
உலகில் முதலாளித்துவத்திற்கு மாறிய முதலாவது நாடாகிய இங்கிலாந்திலேயே இரண்டும் முதலில் தோன்றின. இங்கிலாந்தில் 3 வது வில்லியம் ஆட்சியில் நிலையான இராணுவம் தோற்றுவிக்கப் பட்டது. அதற்கு முன் உலகில் எந்தப் பகுதியிலும் நிலையான இராணுவம் இருக்கவில்லை. அரசர்களும், தளபதிகளும் யுத்தத்திற்குச் சென்றபோதெல்லாம் கூலிப் படையினரைத் திரட்டினர்.
யுத்தத்தின் முடிவில் படைவீரர்கள் தமது முன்னைய தொழிலுக்குத் திரும்பினர். இவ்வாறே இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையேயான நூற்றாண்டு யுத்தம் அல்லது புனித யுத்தம் நடத்தப்பட்டது. படைக்கு ஆள் திரட்டும் அதிகாரி முரசுடன் சந்தைகளில் போர் வீரர்களைத் திரட்டும் காட்சிகளை திரைப்படம் பார்ப்பவர்கள் கண்டிருப்பார்கள். மூன்றாவது வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லையென்பதை இது திட்டவட்டமாக நிரூபிக்கின்றது. இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது.
அவ்வாறே பொலீஸ்படை இல்லாத நாடே இன்றில்லை. அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது? 18 ஆம் நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில் இங்கிலாந்தில், சர் ரோபர்ட் பீல் உள்நாட்டு மந்திரியாக இருந்தபோது தோன்றியது. ஒரு பொலீஸ் படையை தோற்றிவைப்பதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அவரேயாகும். முன்னர் உலகில் போலீஸ் படை இருக்கவில்லை என்றும் மூன்றாவது வில்லியத்திற்கு முன்னர் உலகில் நிலையான இராணுவம் இருக்கவில்லை எனவும் தெளிவாகக் காண்கின்றோம்.நாம் இன்று காணும் அரசானது நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது.
இதுவரை உலகம் கண்டுள்ள சமூக அமைப்புகள்.
1. புராதனப் பொது உடமை சமூகம்,
2. அடிமைச்சமூகம்,
3. நிலப்பிரபுத்துவ சமூகம்,
4.முதலாளித்துவ சமூகம்,
5. சோசலிச சமூகம்
ஆகிய ஐந்து வகைச் சமுதாயங்களைக் கண்டிருக்கிறதென வரலற்று பொருள் முதல்வாதம் நமக்குப் போதிக்கின்றது. நாகரிகத்தின் மிக ஆரம்பக் காலத்தில் புராதனப் பொதுவுடமைச் சமுதாயம் இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் சீராக வளர்ச்சி அடையாதிருந்த காலத்தில் இந்த அமைப்பு இருந்தது. உற்பத்தி வளர்ச்சியின் அந்தக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றிலேயே வாழ்ந்து வந்தனர்.
இதற்காக அவர்கள் உபயோகித்த உபகரணங்கள் அம்பு, வில்லு போன்ற புராதனமானவை. இவை யாவும் பொதுவில் அனைவருக்கும் உடமையா கவே இருந்தது. இவை யாவும் எவராலும் தனிப்பட்ட முறையில் செய்து கொள்ளக் கூடியவையாக இருந்ததால் உற்பத்திச் சாதனங்களைத் தனி நபர் உடமையாகக் கொள்ளும் நிலை ஏற்படவில்லை.
அதே நேரத்தில் சிறியளவு உணவைப் பெற்றுக் கொள்வதற்குச் சகலரும் கூட்டாக உழைக்க வேண்டி இருந்தது. அப்படிச் செய்யாவிடில் காட்டு மிருகங்கள் மனிதரை வேட்டையாடி விடுமாதலினால் இது அத்தியாவசிய மாயிற்று. இப்படி இருந்தும் இந்த வேட்டையாடுவோரின் கூட்டு உழைப்பு அந்த பூர்வீகக்குடியினர் சகலரும் உண்பதற்கு தேவையான உணவையே கொடுத்தது. இது பெரும்பாலும் போதாதிருந்தது. இந்தச் சூழ்நிலை களில் மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டிய அவசியம் இருந்தது. உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி மிக அடித்தளத்தில் இருந்தபோது மக்களை எதிர் எதிர் வர்க்கங்களாகப் பிரிக்கும் அடிப்படை ஏற்படவில்லை.
தான் உண்பதற்கு வேண்டிய உணவை மட்டுமே உற்பத்தி செய்யத் கூடிய நிலையில் உள்ள ஒருவன் வேறு ஒரு சக மனிதனை அடிமைப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அன்று நிலவிய வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கு இதுதான் அடிப்படை யாகும். வளர்ச்சியடையாத உற்பத்தி கருவிகளும் தனது உணவுத் தேவையைக் கூட பூர்த்திசெய்யமுடியாத சூழலும்தான் மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பொதுவுடமையின் அடிப்படையில் வாழ்வதற்கு காரணமாக இருந்தது.
சில குறிப்பிட்ட ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைக்காகவும், சில குறிப்பிட்ட காடுகளில் வேட்டையாடுவதற்கான உரிமைக்காகவும் வெவ்வேறு பூர்வீகக் குடிகளுக்கிடையே யுத்தங்கள் நடைபெற்றன. அவ்வாறான யுத்தங்களில் தோல்வியுற்ற பூர்விகக் குடிமக்கள் சிறைப்பிடிக்கப்படவில்லை. அவர்களை வெற்றிபெற்ற கூட்டம் சிரச்சேதம் செய்தது, இது காட்டுமிராணிடித் தனமானதாக நமக்குப் படக்கூடும். ஆனால் அன்றைய காலத்தில் தனது கூட்டத்திற்கே உணவில்லாதபோது தோல்வியடைந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களை சிறை பிடித்துச் சென்றால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாத காரணத்தாலேயே தோழ்வியடைந்தவர்களை சிறைபிடிக் காமல் கொலைசெய்துவிட்டனர்.
ஒரு பிந்திய காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியால் ஒரு மனிதன் தனக்குப் போதிய உணவை உற்பத்தி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டதோடு அல்லாமல் அதற்கு மேலும் உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டதுமே, மனித தேவைக்கு அதிகமான உபரியாக பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உபரியை சேகரித்து வைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த உபரியை சமூகத்திலுள்ள சிலர் அவர்களுக்கு தனிப்பட்டமுறையில் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அதன் காரணமாக மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஒருசிலர் தன்வசப்படுத்திக் கொள்வதும் பலருக்கு அந்த பொருள்களில் எவ்விதமான உரிமையும் இல்லை என்ற நிலை உருவானது. இவ்வாறு பொருள்களுக்கு சொந்தக்காரர்கள் ஒரு வர்க்கப் பிரிவினராகவும் பொருள்கள் சொந்தமாகஇல்லாத ஒரு வர்க்கப்பினரும் சமூகத்தில் உருவானார்கள். இப்படித் தான் ஆதிப்பொதுவுடமை சமுதாயம் அழிந்து வர்க்கச் சமுதாயமாக மனித சமுதாயம் மாறியது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஒருசிலர் தனிவுடமையாக கைப்பற்றும் நிலை உருவானபொழுதுதான் வர்க்கங்களாக மனிதர்கள் பிளவுபட்டார்கள்.
இப்பொழுது தோற்கடிக்கப்பட்ட பூர்விகக் குடியினரை வெற்றிபெற்ற கூட்டத்தினர் கொலைசெய்வதில்லை. மாறாக அவர்களை சிறைபிடித்துதங்களது தேவைக்கான உற்பத்தியில் ஈடுபடு வதற்கான அடிமைகளாக அவர்களை வைத்துக்கொண்டனர். இவ்வாறு ஆண்டைகளின் செல்வத்தைஉற்பத்தி செய்வதற்காக அவர்கள் அடிமைக ளாக்கப்பட்டனர். அடிமையை வைத்திருப்போன் என்ற ஒரு பிரிவினர் ஆண்டைகளாகவும், இந்த ஆண்டை களுக்காக உழைப்பவர்கள் அடிமைகளா கவும் ஆனார்கள். இதுதான் வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கச் சமுதாயமாகும்.
இங்கேதான் ஆண்டைகள் என்ற வர்க்கம் ஒருபக்கமும் பலர் அடிமை களாகவும் மறுபக்கமாக அமைந்தனர். இந்த அடிமைகளை அடக்கி ஆள்வதற்காக உருவான அரசுதான் உலகில் முதன்முதலாகத் தோன்றிய அரசாகும். இந்த சமுதாயத்தில் அடிமைகளுக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது. இந்த அடிமைகளை, அடிமைகளுக்குச் சொந்தக்காரனால் விற்கவும் வாங்கவும் முடியும். இந்த அடிமைகளை சவுக்கால் அடித்தே வேலைவாங்கப்பட்டது. இந்த அடிமைகளை அடித்து உதைப்பதற்கு ஆண்டைகளுக்கு உரிமை இருந்தது. இதற்குப் பின்பு சமுதாயம் அதன் வளர்ச்சிப்போக்கில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக மாறியது.
உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சிதான் புராதன பொதுவுடமைச் சமுதாயத்தி லிருந்து அடிமைச் சமுதாயமாக மாறுவதற்கு அடிப்படையாக இருந்தது. உற்பத்திச் சாதனங்களில் ஒரு குறிப்பிட்டளவுக்கு வளர்ச்சி ஏற்படாமல் அடிமைச் சமுதாயம் உருவாகியிருக்கமுடியாது என்ற உண்மையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் சமூகத்தின் இயக்கத்தையோ அல்லது வளர்ச்சியையோ நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் அதன்விளைவாக உற்பத்தியில் நடைபெறும் மாற்றங்களை பரிசீலிப்பதன் மூலமே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் இனிமேல் சமூகத்தை எப்படி மாற்றுவது என்பதையும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.. ஒரு வர்க்க சமுதாயம் உருவானவுடன், அங்கு பகையான, அடிப்படையான இரண்டு வர்க்கங்கள் உருவாகிறது. ஒன்று உழைக்கும் வர்க்கம் மற்றது உழைப்பை சுரண்டிவாழும் வர்க்கமாக அது அமைகிறது. சுரண்டும் வர்க்கம் அதன் வர்க்க நரன்களை பாதுகாக்க உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்காக ஒரு வகையான நிறுவனத்தை உருவாக்குகிறது அந்த அரசு என்ற நிறுவனத்தை தொடர்ந்து வளர்க்கிறது. இந்த அரசு என்ற நிறுவனத்தின் மூலமே சுரண்டும் வர்க்கமானது அதனை பாதுகாத்து வளர்த்துக்கொள்கிறது வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் அரசாங்க இயந்திரம் இருக்கவில்லை, அதற்கு எவ்விதமான அவசியமும் இல்லை.. அப்பொழுது வர்க்கங்களற்ற சமுதாயமாக அது இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறோரு வர்க்கம் அடக்கி வைத்திருப்பதற்குத் தேவையில்லை, ஆகவே அந்த சமுதாயத்தில் அரசின் தேவை ஏற்படவில்லை..
அந்த சமுதாயத்தில் அரசு இல்லாத சூழலில் சமுதாயத்தில் ஒழுங்கு எவ்வாறு நிலை நாட்டப்பட்டது? ஒவ்வொரு பூர்வீகக்குடியும் தம்முள் ஒருவரைத் தலைவராக அல்லது முக்கியஸ்தராகத் தெரிவுசெய்தனர். பொதுவாக அந்த தலைவன் வேட்டையாடுவதற்கும், யுத்தத்திற்கும், அந்த கூட்டத்தாருக்கு தலைமைதாங்கும் உடல் வலிமை பெற்றவனாகவும் கூட்டத்தை வழிநடத்தும் அனுபவமும் திறமையும் படைத்தவனாகவும் இருந்தான். ஆனால், அவன் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு அவனிடம் அரசாங்க இயந்திரமான ஓர் இராணுவத்தையோ அல்லது போலீஸ் படையையோ அவன்கொண்டிருக்கவில்லை. சுயமாகவே மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஒவ்வொருவரும் அவனது சொல்லை ஏற்றுக் கொண்டனர். ஒரு பூர்வீகக்குடியில் தலைவனுக்குக் கிடைத்த மனப்பூர்வமான மரியாதையும் கீழ்ப்படிதலும், இன்றைய முதலாளித் துவ சமுதாயத்தில் எந்தவொரு சக்திவாய்ந்த தலைவனுக்கும் கிடைத்ததில்லை என்கிறார் எங்கெல்ஸ்.
புராதான பொதுவுடைமைச் சமுதாயத் தின் கால கட்டத்தில் அரசு இயந்திரத்தைச் சிறிதளவாவது ஒத்ததாக ஏதும் இருக்கவில்லை யென்பது மிகவும் தெளிவாகின்றது.
எதிர் எதிர் பகைவர்க்கங்கள் உருவாகி, ஒரு வர்க்கத்தை ஒரு வர்க்கம் தனக்குக் கீழ்க் கொண்டுவரும் நிலைக்கு சமூகம் வளர்ச்சியடையும்போதே ஓர் அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை ஏற்படுகின்றது. அவ்வாறான முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களை கிரேக்கத்திலும் உரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதி யிலும் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன் என்றும் அடிமை என்ற எதிர் எதிர் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க உரோம சாம்ராஜ்யத் திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமைகளின் தலைவன், தலைமை தாங்கிய மிகப் பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள் உட்பட பல அடிமைகள் கிளர்ச்சிகளை இந்த அடிமைச் சமுதாயம் கண்டது.
இதுபோலவே ஒவ்வொரு வகையான வர்க்க சமூகத்திலும் சுரண்டும் வர்க்கங்களை எதிர்த்தப் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கும். இந்தப் போராட்டங்கள் வர்க்கங்கள் ஒழியும் வரை நீடிக்கும்.
வர்க்கங்களாக மனிதர்கள் பிளவுபட்ட ஆரம்ப காலத்தில் உருவான அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும், பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்துசமுதாயம் அடுத்த கட்டமான நிலப்பிரபுத்துவத்திற்கு வளர்ச்சி யடைந்ததும், மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை நிலப்பிரபுக்களால் உணரப்பட்டது.
நிலையான இராணுவம் உருவாக்கப்பட்டது. ஒரு நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசும் அரசாங்கமும் தோன்றியது.
இதிலிருந்து வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசும் அரசாங்கமும் தோன்றியதோடு கூடவே அரசானது நவீனமயமாகவளர்ந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மார்க்ஸ் விளக்கியது போன்று அரசென்றால் ஒருவர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு சாதனமாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அரசாகும்.
வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் இந்த அரசேயாகும். கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், போகலாம். இந்த கட்சிகளுக்கு ஐந்து ஆண்டுகள்தான் ஆட்சி செய்யும் உரிமை உண்டு. அதற்கு பின்பு தேர்தல்மூலம் இதே கட்சியோ அல்லது வேறு கட்சியோ ஆட்சிக்கு வரலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை போலீஸ், இராணுவம், நீதி மன்றம், நிர்வாகத்துறைகள் அனைத்தும் நிரந்தரமாக இருக்கும். இந்த அரசுத்துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களிலிருந்து அதிகாரிகள்வரை அவர்களது ஓய்வுக் காலம் வரை அரசு அதிகாரிகளாகவே இருப்பார்கள். இந்த அரசு இயந்திரம்தான் அவர்களுக்கான அதிகாரத்தைப் பயன் படுத்தி மக்களை ஆட்டிவைக்கிறார்கள்.
இந்திய அதிகார வர்க்கத்தின் சில உதாரணங்களுடன் பார்க்கலாம். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இராணுவ அதிகாரியான சிலர் பின்னர் இராணுவ ஜெனரல்களாகவும், முன்னர் ICS லும் பின்னர் IAS லும் பதவி வகித்தவர்கள் நிரந்தரமாக எப்படி தொடர்கின்றனர் என்பதை நாம் காணலாம். அதாவது நமது நாட்டில் ஐந்து வருட பிரதம மந்திரிப் பதவிக் காலத்தில் செயலாளராக இருந்தவர் முன்னைய ஆட்சிக் காலத்திலும் ஏன் பின்னர் வந்த ஆட்சி காலத்திலும் நிரந்தர செயலாளராக எப்படி தொடர முடிகிறது?. இதுதான் அரசு ஆகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த அதிகாரி களுக்குத்தான் அரசாங்கத்தின் கொள்கையை செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகார வர்க்கத்திடம் உழைக்கும் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பிச்சையெடுக்கும் நிலையிலேயே மக்கள் உள்ளனர். இது ஜனநாயகமா?
ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பயிற்று விக்கப்பட்ட இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் பிரிட்டீஷாரின் ஆட்சி காலத்தில் எப்படி மக்களுக்கு எதிராக இருந்தார்களோ அதேபோலவே இப்போதும் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் முன்பு எந்த எஜமானர்களுக்கு சேவை செய்தார் களோ அதே எஜமானர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கே இப்போதும் சேவை செய்கின்றனர். அந்த அதிகார வர்க்கங்கள்தான் உண்மையில் இப்போதும் ஆட்சி செய்கிறார்கள். அதனால்தான் பிரிட்டீஷார் இங்கிருந்து வெளியேறிய பின்பும் உழைக்கும் மக்களின் வாழ்வில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை, அதற்கு மாறாக உழைக்கும் மக்களின் வாழ்வு மிகமிக மோசமாகிக்கொண்டு இருக்கிறது. இவ்வாறான ஓர் ஒடுக்குமுறைக்கான முதலாளித்துவ அரசு இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்கா தென்பது நிச்சயமாகத் தெளிவாகின் றது. ஆயுதப் படையினரதும், பொலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கி யில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது, அடக்கி ஆளமுடியாது.
ஆகவேதான் பாராளுமன்ற தேர்தல்கள் மூலம் ஒரு கட்சிக்குப் பதிலாக வேறு கட்சியை வெற்றிபெறச் செய்து அரசாங்கத்தை மாற்றுவதால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை. மாறாக நிரந்தரமான முதலாளித்துவ அரசை அதாவது போலீஸ், இராணுவம் நிர்வாக அதிகாரிகள் அடங்கிய இந்த அரசு நிறுவனங்களை கலைத்துவிட்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்யக்கூடிய அரசு உறுப்பினர்களைக் கொண்ட (அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் சரியில்லை என்றால் மக்களால் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்) அரசமைப்பை மக்கள் போராடி உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது.
அரசு அதிகாரிகள் முதலாளிகளின் உயிரையும், உடமையையும் பாதுகாக்கவே உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக இருக்கின்றார்கள். அல்லது அடக்குமுறைச் சாதனங்களைக் கொண்டுள்ளார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளிகளையும், அவர்களது வர்க்கத்தையும் பாதுகாக் கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்க மாட்டார்கள். எவ்வாறாயினும், பெரும்பாலும் சமூகத்தில் உழைப்பவர்களின் எண்ணிக்கையே முதலாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலமடங்கு உள்ளது. இந்த நிலைமைகளில் எவ்வாறு முதலாளிகளால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ள உழைப்பாளர் களை பலவந்தப்படுத்திச் சுரண்ட முடிகின்றது?. முதலாளிகளின் காவல் நாய்களான இராணுவம், போலீஸின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியின் மூலமே இதனை முதலாளிகள் சாதிக்கிறார்கள். அதனாலேயே தோழர் மாசேதுங், அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்றார். இந்த உண்மையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், உழைக்கும் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே, அதாவது சுரண்டப்பட்ட வர்க்கங்கள் (உழைக்கும் மக்கள்) புரட்சிகரப் பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைஅல்லது ஆயுதங்களை பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள்.
வேறு எந்த மார்க்கமும் இல்லை. மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும். பாராளுமன்றம் யாருக்கானது? முதலாளி வர்க்கமானது தொழிலாளி வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதற்காக அதன் கைகளில் அரசு என்ற பலாத்கார நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறது என்ற உண்மையை மறைப்பதற்கும், மக்களைக் குழப்பு வதற்கும் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளி களும் மற்றைய பிற்போக்குச் சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்து இன்றுவரை பயன்படுத்திவருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றத்தின் மூலம்தான் இங்கு ஆட்சி நடத்தப்படுவதாகச் சொல்லி, இந்த ஆட்சி நல்லாட்சி இல்லை என்றால் மக்கள்தான் தவறானவர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர் என்று மக்கள் மீதே குற்றம் சுமத்துவதைப் பார்க்கிறோம். ஆனால் மக்கள் எந்தக் கட்சியை தேர்ந்தெடுத்தாலும் யாருமே நல்லாட்சியை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் என்ன? பாராளுமன்றம் வெறுமனே அரட்டை மடம்தானேயொழிய உண்மையான ஆட்சியை நடத்துபவர்கள் பாராளுமன்ற திரைக்குப் பின்னால் பெருமுதலாளிகளும் ஆளும் அரசியல் தலைவர்களும் அதிகாரவர்க்கத்தின் உயர் அதிகாரிகளும் ரகசியமாகப் பேசித்தான் கொள்கை முடிவெடுக்கிறார் கள். இவர்களால்எடுக்கப்படும் கொள்கை முடிவுகளைத்தான் பாராளுமன்றத்தில் விவாதம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி பாராளுமன்றம்தான் கொள்கை முடிவெடுத்தாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பல சமயங்களில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தும்போது கூச்சல் போட்டுவிவாதமில்லாமலேயே சட்டங்கள் நிறை வேற்றுவதை நாம் பார்க்கிறோம். இதிலிருந்தே இந்த பாராளுமன்றமானது மக்களை பிரதிநித்துவம் செய்கிறது என்பது உண்மை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாராளுமன்றம் வெறுமனே ஏமாற்றும் இடம்தானே அன்றி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான இடமன்று.பாராளுமன்றம் மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு மூடுதிரை, மற்றும் ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும் நிறுவப்பட்டது. பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் மக்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களை புரிந்து கொள்ளவிடாமல் தடுத்து மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. மக்கள் தங்களுக்கான பாட்டாளிவர்க்க அரசை உருவாக்குவதற்கும் ஏன் தொழிற்சங்கங்களில் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு கூலி உயர்வுக்காகவும் தங்களை வேலையிலிருந்து நீக்கக்கூடாது என்பதற்காக அமைதிவழியில் போராடும் போதும் ஆயுதம்தாங்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தைக்கொண்டு முதலாளித்துவ அரசு அடக்குவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய ஆயுதம்தாங்கிய அடக்கு முறையை தொழிலாளர்கள் மண்டியிட்டு ஏற்றுக்கொண்டு அடிபணிய வேண்டுமா? அத்தகைய அடக்குமுறையை அரசு கையாளும்போது பாதிக்கப்பட்ட மக்கள் அதனை எதிர்த்து ஆயுதம்தாங்கி போராடுவது தவறா?. அரசு ஆயுதம் தாங்கி மக்களை அடக்குவது நியாயமா? தர்மமா?. அத்தகைய ஆயுதஅடக்குமுறையை எதிர்த்து மக்கள் ஆயுதம் ஏந்துவது எப்படி தவறாகும்?.
மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் தங்களை தாக்குபவர்களைஎதிர்த்துப் போராடுவது நியாயமான ஒன்றே ஆகும். கோரிக்கைவைத்து போராடும் மக்களை ஆயுதம்கொண்டு தாக்கி யுத்தம் நடத்தும் அரசின் யுத்தம் அநீதியானது. அரசு நடத்தும் அநீதியான யுத்தத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் பாதுகாப்பு யுத்தம் நீதியானது. இத்தகைய மக்களின் ஆயுதம் தாங்கியநீதிக்கான போராட்டத்திற்குப் பதில் வெறும் வாய்ச் சொற்களால் போராட்டம் நடத்தவேண்டும் என்ற மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றவர் களால் அரசின் ஆயுதம்தாங்கிய அடக்குமுறையை தடுக்கமுடியுமா? அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்ற பழமொழியை முதலாளிவர்க்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தொழிலாளர் களை தாக்கி அடிபணியச் செய்கிறது.
இதற்கு மாற்று முதலாளிவர்க்கத்தையும் அதன் அரசுப்படையையும் தாக்கி முதலாளிகளை தொழிலாளர்கள் அடிபணியச் செய்வது நியாயமானதே அவசியமானதே. எனினும் அரசானது ஆயுதப்படையை பயன்படுத்தி மக்களை தாக்கவில்லை என்றால் தொழிலாளர் களும் ஆயுதம்தாங்க வேண்டிய அவசியமில்லை. மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் பக்கமே நியாயம் இருந்தது. அதுபோலவே அரசின் ஆயுதப்படை மக்களை தாக்கும்போது அதனை எதிர்த்து மக்கள் ஆயுதம்தாங்கி யுத்தம் நடத்தும்போது அந்த யுத்தத்தில் மக்களின் பக்கமே நியாயம் உள்ளது.
ஆகவே அரசுப்படையானது சமூக விரோதிகளை தாக்கலாம் தொழிலாளர் களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை தாக்கலாம் அதில் நியாயம் உள்ளது. இதற்குமாறாக தொழிலாளர்களை தாக்கினால் அது நியாயமல்ல. பாட்டாளிவர்க்க அரசுக்கும் மக்கள் படை இருக்கும். அந்தப் படையானது சமூகவிரோதிகளையும் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் முதலாளிகளைத்தான் தாக்கும், மேலும் தொழிலாளர்களை பாதுகாக்கும். ஆகவே உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசுக்கும் பாட்டாளிவர்க்க அரசுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொண்டு தங்களுக்கான பாட்டாளி வர்க்க அரசமைக்கப் பாடுபடவேண்டும் அதற்கு தலைமை கொடுக்கும் கட்சியைத்தான் மக்கள் நம்பவேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மீது கொண்டிருந்த பெரும் அன்பினால் பாராளுமன்றத்தை உருவாக்கி வாக்குரிமை வழங்கப்பட்டதா? இல்லை. அந்நியர்களான பிரிட்டீஷார்தான்இந்திய மக்களை அடக்கி ஆளுகின்றனர் என்ற உண்மை இந்தியர்கள் உணர்ந்துவிட்டால் அவர்கள் ஒன்றுசேர்ந்து பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு இருந்தனர். ஆகவே இந்திய மக்களை இந்தியர்கள்தான் ஆளுகின்றார்கள் என்று உணரவேண்டும் என்பதற்காக அதாவது இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவே அவர்கள் மக்களுக்கு பொது வாக்குரிமை யைக் கொடுத்தார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கியத்தை மத-இன ரீதியிலும், சாதி ரீதியிலும், வேறு பல வழிகளிலும் பிளவுபடுத்த அவர்கள்எண்ணினார்கள். அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர், அதற்கு இங்குள்ள கருங்காலிகளும் துணைசெய்தனர். இதுவரை இந்திய மக்கள் எத்தனைமுறை பாராளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ளனர்? எத்தனை கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்? எத்தனை அரசியல் தலைவர்கள் மக்களிடம் கவர்ச்சியாகப் பேசி மக்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்? ஆட்சியில் இருந்தவர்கள் பாராளுமன்றத்தின் மூலம் எத்தனை சட்டங்களை இயற்றினர்? இதன் மூலம் மக்களுக்கு எத்தனைவகையான நன்மைகள் கிடைத்தது? எத்தனை வகையான தீமைகள் கிடைத்தது? இவர்கள் சட்டமியற்றுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களது, விவசாயிகளது அல்லது குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் கருத்துக் களை எத்தனைமுறை கேட்டறிந்தார்கள்? அதாவது இவர்களால் போடப்பட்ட சட்டங்களில் எத்தனை சட்டங்கள் திட்டங்கள் மக்களின் நலனுக்காகப் போடப்பட்டது? எத்தனை சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு எதிராகப் போடப்பட்டது? மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட சட்டத்தை எதிர்த்து மக்கள் போராடும்போது எத்தனை சட்டங்களை இவர்கள் திரும்பப் பெற்றார்கள்? இவர்களால் போடப்பட்ட மக்கள் விரோத சட்டங்களை ஏற்றுக்கச் சொல்லி இவர்களால் எத்தனைமுறை மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டார்கள்? இதற்கான தகவல்களை சேகரித்து பரிசீலியுங்கள் இந்த பாராளுமன்ற ஆட்சிமுறையின்அவலங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். உழைக்கும் மக்களுக் காகவே பாடுபடக்கூடிய கட்சி என்று சொல்லிக்கொண்டு சிவப்புக்கொடி பிடித்த கட்சியே விவசாயிகளுக்கு எதிராக சட்டம் இயற்றியது. அதை எதிர்த்துப் போராடிய மக்களை சுட்டுக் கொன்றது. இடதுசாரிகளே இந்த பாராளுமன்றத்தையும் சட்டமன்றத் தையும் மக்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உழைக்கும் மக்களுக்கு இந்த பாராளுமன்ற ஆட்சிமுறை தேவையா? சிந்திக்கவேண்டும்.
உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது இதுவரை எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா?. சுரண்டல் குறையவில்லை. சுரண்டல் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் மட்டும் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித் துவ அரசு இயந்திரமும் சேர்ந்தே சுரண்டலைப் பாதுகாக்கின்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் நாடகமாவது Musical chair விளையாட்டை ஒத்திருக்கின்றது. கட்சி மாறுகிறது, ஆம் ஆட்சி மாறுகிறது ஆனால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர், சுரண்டலின் தரத்திலென் றாலும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கின்றது. செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர் ஏனெனில், முதலாளித்துவப் பராரளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் அதாவது தேர்தல் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசு இயந்திரத்திலோ எந்தவித அடிப்படை மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை.
அதாவது அரசு அதிகாரவர்க்க நிறுவனத்திலோ பொருளாதார கட்டமைப்பிலோ மாறுதலின்றி நிரந்தரமாகத் தொடர்கிறது. ஆகவே தான் உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. மாறாக உழைக்கும் மக்கள் சந்திக்கும் துன்பங்கள்தான் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும் இப்போதுள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுக்கோப்பை ஒழிக்க வேண்டும் என்றும், இந்த பொருளாதாரக் கட்டமைப்பை பாதுகாக்கும் அரசு எந்திரத்தை அதாவது அரசு நிறுவனங் களை கலைக்கவேண்டும் என்றும் இதற்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும் திருப்பி அழைக்கக்கூடியதுமான அரசு அதிகாரிகளைக் கொண்ட அரசு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர். உழைக்கும் மக்களுக்கு கட்டுப்படாத அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது என்பதை கடந்தகால நடைமுறை அனுபவங்களிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசு இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமேயில்லை. நிலவுகின்ற அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாளி வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்சிய ஆசான்கள் முதலாளித்துவ அரசு இயந்திரம் கட்டாயமாக நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர்.அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் சமூகத்தில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. அதாவது ஒன்று முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது அதற்கு எதிரான பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக வேறு ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கிவிட்டு அதனிடத்தில் பாட்டாளி களின் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்த வேண்டியது அவசியமென மார்க்சிய -லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. மேலும் அதற்காகப் பாடுபட வேண்டியது உழைக்கும் மக்களின் கடமை என்றும் மார்க்சியம் போதிக்கிறது. பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தைமார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.
இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. ரஷ்ய அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக் கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதித்துறையை தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக் கொண்டிருக்கவில்லை. சீனாவைப் பொறுத்தமட்டில் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது.
சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர் சீனக் கம்யூனிஸ்டுகள் சீனப் புரட்சியின் தொட்டில் என இன்று அழைக்கப்படும் யெனானில் 13 வருடங்கள் தோழர் மாவோ தலைமையில் இருந்தனர். புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் நீதி நிர்வாகம் மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் விடுதலைச் சேனையின் பின்னால் செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர். இது ஒரு முழுமையான புதிய வழிமுறையிலான அமைப்பு. அது பழைய அமைப்புடன் எந்தவித தொடர்பையோ, உறவையோ வைத்துக் கொளாதது மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசு இயந்திரத்தை அடித்து நொருக்குவது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது. புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது எவ்வளவு அவசியமோ, அதே போல புதியபாட்டாளி வர்க்க அரசு நிலைத்து நிற்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசும் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜகவாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர் முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு அதிகாரத்தை புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின் ஒரு பாட்டாளி வர்க்க அரசதிகாரம் வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின் பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். ஆனால், நாம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வர வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப் பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும்.
இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கங்கள் புதிதாக உருவாகிய பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சியை தூக்கியெறிய முயற்சி செய்யும். அந்த முயற்சியை முறியடிக்க பாட்டாளி வர்க்கத்துக்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவைப்படுகிறது என்றார் லெனின். ஆகவே புதிதாக உருவாக்கப்படும் அரசானது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இதில் தவறு செய்தால்பாட்டாளி வர்க்க அரசை முதலாளிகள் ஒழித்துவிடுவார்கள்.
1848 இல் கம்னியூஸ்ட் அறிக்கையை எழுதியபோது மார்க்சும், எங்கெல்சும்கூட முதலாளித்துவ அரசியல் அதிகாரத்தின் இடத்தை எவ்வாறு நிரப்புவது என்பதில்ஓர் இறுதி முடிவை எடுக்க முடியாதிருந்தனர். 1871இல் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்து இரண்டு நாட்களுக்குள் ‘பிரான்சில் உள்நாட்டு யுத்தம்’ என்ற தலைப்பையுடைய அவரது பிரசித்தி பெற்ற நூலில் மார்க்ஸ், இதனை ஆராய்ந்த அனுபவங்களைக் கொண்டே, அவரால் ஒரு தீர்மானத்திற்கு வரக்கூடியதாயிருந்தது. மார்க்ஸ் இறப்பதற்கு முன் இறுதிக் கூட்டு முன்னுரையாக கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு செய்யப்பட்ட ஒரேயொரு திருத்தத்தை அவர் சேர்த்துக் கொண்டார். வேறு ஒரு கேள்வி யெழுகின்றது. அரசு எந்தக் காலத்திலும் இருந்து வருமா? இல்லை. அரசு இல்லாத காலமும் வரலாற்றில் இருந்தது. இனிவரும்காலத்தில் அரசு இல்லாத நிலையும் உருவாகும். வர்க்கங்களும், வர்க்கமுரண்பாடுகளும் தோன்றியதன் விளைவாக அரசு தோன்றியது போல வர்க்கங்களையும் வர்க்க முரண்பாடுகளும் ஒழிப்பதோடு உருவாகும் வர்க்கங்களற்ற சமுதாயத்தில் அரசு இறுதியில் தேவையற்று‘ உலர்ந்து உதிர்த்து’விடும் என ஏங்கெல்ஸ் கூறினார். அதாவது வர்க்கமற்ற சமூகத்தில் யாரையும் யாரும் சுரண்டவோ ஒடுக்கவோ தேவையற்ற சூழல் ஏற்படும். ஒடுக்குமுறை என்ற செயலே தேவையற்றதாகிவிடும் அதனால் ஒடுக்குமுறைக்கான கருவியான அரசே தேவையில்லாமல் போய்விடும்.
இது மிகவும் சரியானதே. ஆனால், ஒரு வர்க்கபேதமற்ற சமுதாயச் சூழலில் மட்டுமே அரசு ‘உதிர்ந்து” விடும். அதற்கு முன்பு அல்ல. ஆனால் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் சோசலிசப் புரட்சி நடைபெற்றவுடன் மறைந்து விடுவதில்லையென்று தோழர் மாவோ குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனி சத்திற்கான மாற்றத்தின் வரலாற்றுக் கால கட்டம் ஒரு கணிசமான நீண்டகாலமாகும்.
இந்த முழுக் கால கட்டத்தில் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் இருக்கும். ஆகவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருப்பது மட்டுமல்லாமல் பலப்படுத்தப்படவும் வேண்டும்.சோசலிச அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளுக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்படும் இக்காலகட்டத்தில் வர்க்கப் போராட்டங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச் சூழலில் நடைபெறும்.
சீனாவின் மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சி ஒன்றுதான் இதற்கு ஒரேயொரு உதாரணமாகும். தோழர் மாவோ அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தலைமை தாங்கப்பட்ட இந்தக் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச் சூழ்நிலைகளில் எவ்வாறு வர்க்கப் போராட்டங்களை நடத்தி தலைமைதாங்குவது எனக் கண்டோம்.
சொசலிசப் புரட்சிக்கு முன்பும் சோசலிசப் புரட்சிக்குப் பின்பும் வர்க்கங்களற்ற கம்யூனிச சமுதாயத்தை அடையுமுன் நாம் இதுபோன்ற பல புரட்சிகளை அநேகமாக காண்போம். அப்போதுதான் அரசு உதிர்ந்து போவதை எதிர்ப்பார்க்கலாம். நாம் மீண்டும் அதே இடத்துக்கு திரும்புவோம்.
ஆனால், இது சுற்று வளர்ச்சியின் மிக உன்னதமான உயர்ந்த கட்டமாக அமையும். இதிலிருந்து நமக்குத் தெரிந்த அரசானது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலில் தோன்றி அந்தச் சூழல் ஒழிந்ததும் அரசும் மறைந்துவிடுகிறது. அரசென்பது எப்பொழுதும் இருந்ததுமல்ல மேலும் முடிவில்லாததுமல்ல. வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு வர்க்கத்தைப் பிறதொரு வர்க்கம் அடக்கியாள்வதற்காகத் தோன்றி பின்னர் வர்க்கங்களற்ற சூழலில் தேவையற்றதாகி இல்லாமல் போய் விடுகிறது. ஆகவே, அரசென்பது ஒருவர்க்கத்தைப் பிறதொரு வர்க்கம் அடக்குவதற்கான கருவியாகுமென்று குறிப்பிட்டால் அது சரியானதே. அவ்வாறான ஒரு அரசு இயந்திரம் இல்லாவிடில் இக்காவல் நாய்களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாமல் எந்த ஒரு சுரண்டும் வர்க்கமாவது சுரண்டப்படும் மக்களைத் தொடர்ந்தும் சுரண்டமுடியாது.
அரசுப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு இதுவாகும். இதை ஏற்றுக்கொள்பவர் மார்க்சிய - லெனினிய புரட்சிவாதிகளாவர். இதை நிராகரிப்பவர்கள் நவீன திரிபுவாதிகளும் சீர்திருத்தவாதிகளும், மற்றும் பலவகைப்பட்ட துரோகிகளும் ஆவர். அரசுப் பற்றிய மார்க்சியக்கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக்கொள்ள மறுப்பதுமே புரட்சிவாதிகளை திரிபுவாதி களிடமிருந்தும் சீர்திருத்தவாதி களிடமிருந்தும் பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
ஆரம்பத்தில் நமது பலம் எதிரியின் பலத்திலும் பார்க்க பலவீனமுடையா தாயிருக்குமானால், எதிரியின் பலம்மிக்க இடத்தில் நாம் குறிவைப்பது பலனற்றதாகுமென்று தோழர் மாவோ குறிப்பிட்டுள்ளார். நமது தலைகள் நொருக்கப்படுமென்பது பெரும்பாலும் சாத்தியமாகும்.
மறுபுறத்தில் சரியான தந்திரோ பாயத்தைப் பின்பற்றி லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கும். இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல் இருக்கவும், புரட்சியைப் பாதுகாக்கவும் முடியும். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையின்கீழ் மக்களை அணி திரட்டுவது என்ற அடிப்படையில், மக்களை இலட்சோப இலட்சக் கணக்கில் அணிதிரட்டி மக்கள் யுத்தத்தின் நீண்ட போராட்டத்தின் மூலம் எதிரியின் பலத்தை அழித்து எதிரியை வீழ்த்தினார்கள். ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை வகித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிக்கு வழிவகுத்த சீனப் புரட்சியின் அனுபவங்களி லிருந்து பெறப்பட்டதே இந்தக் கோட்பாடாகும். சீனாவில் ஆயுதம் தாங்கிய புரட்சி ஆயுதம்தாங்கிய எதிர்ப்புரட்சியை எதிர்த்துப் போராடியது. இது சீனாவின் குறிப்பான முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அத்துடன் சீனப் புரட்சியின் சாதகமானவற்றுள் ஒன்றாகும் என ஸ்டாலின் சரியாகக் குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை. இங்கு நீண்டகாலமாக பொருளாதாரப் போராட்டங்களும் சீர்திருத்தவாத அரசியல் போராட்டங்களுமே நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே இங்கே உடனடியாக ஆயுதப் போராட்டம் நடத்தவேண்டிய அவசியம் இல்லை. எனினும் தொழிற்சங்கவாத பொருளாதாரப் போராட்டங்களையும் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போராட்டங்களை மட்டும் நடத்துவது திருத்தல்வாதமாகும். இதற்கு மாறாக போர்குணமிக்க பொருளாதாரப் போராட்டங்களையும் புரட்சிகரமான அரசியல் போராட்டங்களையும் இணைத்தே போராட்டங்களை நடத்த வேண்டும். மேலும் மக்களுக்குபாட்டாளி வர்க்க அரசின் தேவைகளை பிரச்சாரத்தின் மூலம் போதிப்பதோடு அத்தகைய அரசை அமைப்பதற்கு மக்களை தொடர்ந்து தயாரிக்க வேண்டும். இத்தகைய முறையில்தான் இந்தியாவில் நீண்ட புரட்சிப்பாதை அமையும். நமது லட்சியம் பாட்டாளி வர்க்க அரசை அமைப்பதாகும். இந்த லட்சியத்தை எப்பொழுதும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் மறந்து விடக்கூடாது. எப்போதும் பாட்டாளிவர்க்க அரசமைப்பது பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். பாட்டாளிவர்க்க அரசமைப்பது பற்றியே நமது விவாதங்கள் நடைபெற வேண்டும். நாம் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்திலும் பாட்டாளிவர்க்க அரசமைப்பதே நமது லட்சியம் என்று முழங்க வேண்டும்.
அரசும் அரசாங்கமும்
சிலர் “திராவிட மாடல் அரசு” என்கிறார்கள். வேறுசிலர் “கேரள மாடல், அரசு என்றும் குஜராத் மாடல்” அரசு என்கின்றனர். அரசென்பது நிரந்தரமான சிவில் சமூக நிறுவனமான மாறாத அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை உள்ள நிறுவனம் ஆகும். ஆனால் நாம் இங்கு திராவிட மாடல் அரசு என்றே பேசுகிறோம். உண்மையில் இவைகள் எல்லாம் அரசு அல்ல, மாறாக அரசாங்கமாகும். திராவிட மாடல் அரசாங்கம், கேரளமாடல் மற்றும்குஜராத் மாடல் அரசாங்கங்களாகும். அரசாங்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம்ஆகியவை மட்டுமே ஆகும். இது அரசு அல்ல. அரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கங்களை உள்ளடக்கிய அரசு நிறுவனத்தை குறிக்கிறது. இந்த நிறுவனங்களுக்குத்தான் திமுக போன்ற கட்சி அரசாங்கங்கள் போட்ட சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளது. ஆகவே நாம் அரசையும் அரசாங்கத்தையும் வேறுபடுத்தி புரிந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் இரண்டுக்கும் இடையிலான நெருக்கமான உறவு களையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த கட்சி ஆட்சி என்றாலும் மோடி அரசாங்கம், இடதுசாரி கேரள அரசாங்கம், இங்குள்ள மு.க. ஸ்டாலின் அரசாங்கம் எதுவென்றாலும் இவை அனைத்தும் இந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற திரை மறைவுக்கு பின்னே நடக்கும் அரசின் செயலை மூடி மறைக்கும் வேலைகளைத்தான் இவைகள் செயல்படுகின்றன.. இந்த மூடுதிரைக்குப் பின்னால் இருந்து செயல்படுத்துவோர்கள்தான் உண்மை யான அதிகாரம் படைத்தவர்களாவார் கள். இதனை பற்றி மார்க்சியம் மிகதெளிவாக சொல்கிறது. அரசாங்கம் மாறுகிறது ஆனால் அரசு மாறுவதில்லை.அன்றைய மாவட்ட ஆட்சியர் அடுத்த ஆட்சியிலும் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு பல நிரந்த பணியாளர்கள்.
ஆக அரசையும் அரசாங்கத்தையும் புரிந்துக் கொள்ள முயலுவோம்.
ஆசான் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூலிலிருந்து இன்னும் சில பகுதியை பார்ப்போம் நம்மை நாம் வளர்த்துக் கொள்ள. அரசு என்பது என்ன?நாம் வாழும் வர்க்க சமூகத்தில் அரசின் பாத்திரம் என்ன? நமக்கான அரசு ஆம் உழைக்கும் மக்களின் அரசானது எப்படி இருக்கும்? இந்த கேள்விகளுக்கு விடைதேட நினைக்கும் ஒவ்வொருவரும் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூல் அவசியம் படிக்க.அரசு பற்றிய பிரச்சினை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஏகபோக முதலாளித்துவமானது அரசு ஏகபோக முதலாளித்துவமாய் மாற்றப்படும் நிகழ்ச்சி போக்கை யுத்தம் அளவு கடந்த வேகமும் தீவிரமும் பெறச்செய்கிறது. அனைத்து வல்லமை கொண்ட முதலாளித்துவ கூட்டுக்களுடன் மேலும் மேலும் இணைந்து ஒன்றிவரும் அரசானது உழைப்பாளி மக்களை அசுரத்தனமாய் ஒடுக்குவது மேலும் மேலும் அசுரத்தனமாகி வருகிறது. முன்னேறிய நாடுகள் அவற்றின் உட்பகுதிகளை குறிப்பிடுகிறோம். தொழிலாளர்களுக்கு இராணுவ கடுங்காவல் சிறைக்கூடங்களாக மாறி வருகின்றன..
"முதலாளித்து ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளால் இந்த பணிக்கு தயார் செய்யப்படுகிறது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்படும் சக்தியும் அளிக்கப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் எல்லா குட்டி முதலாளித்துவப் பகுதிகளையும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்குகிறது. ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை ஒருசேர இணைத்து ஒன்று படுத்துகிறது. நிறுவன வழியில் ஒழுங்கமைக்க செய்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் பெருவீத பொருளுற்பத்தியில் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய் உழைப்பாளர்களுக்கும் சுரண்டப்படும் பாத்திரம் காரணமாக உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது. ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் அனைவரையும் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கி நசுக்கி போதிலும் பாட்டாளி வர்க்கத்தினரை காட்டிலும் குறைவாக அல்ல கூட பல சந்தர்ப்பங்களில் அதிகமாகவே ஒடுக்கி நசுக்கிய போதிலும் இவர்கள் தமது விடுதலைக்காக சுயேட்சையாக போராடும் வல்லமை இல்லாதவர்கள்.
அரசு சோசலிசப் புரட்சி இவற்றின் பிரச்சனையில் மார்க்ஸ் வர்க்கப் போராட்டத் தத்துவத்தை பிரயோகித்ததும் தவிர்க்க முடியாதபடி அது பாட்டாளி வர்க்கத்தின்அரசியல் ஆதிக்கத்தின், அதன் சர்வாதிகாரத்தின் அதாவது யாருடன் பகிர்ந்து கொள்ளாமல், நேரடியாக மக்களுடைய ஆயுத பலத்தை ஆதாரமாய் கொண்ட ஆட்சி அதிகாரத்தின் அங்கீகாரத்துக்கு இட்டுச் சென்றது. பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் தவிர்க்க முடியாத ஆவேசமான எதிர்ப்பை நசுக்கவும் உழைப்பாளர்களும் சுரண்டப் படுவோருமான மக்கள் அனைவரையும் புதிய பொருளாதார அமைப்புக்காக ஒழுங்கமைக்கவும் வல்லமை படைத்த ஆளும் வர்க்கமாக மாறுவதனால் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியும்.
சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கும் சோசலிசப் பொருளாதாரத்தை "ஒழுங்கமைப்பதில்" மாபெரும் திரளான மக்களுக்கு விவசாயிகளும், குட்டி முதலாளித்து வர்க்கத்தினருக்கும், அரைகுறை பாட்டாளி வர்க்கத்தினருமானோருக்கும் தலைமை தாங்குவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு அதிகாரம் பலத்தின் மத்தியத்துவ நிறுவனம் ஒழுங்கமைப்பு பலாத்காரத்தின் நிறுவன ஒழுங்கமைப்பு தேவைப்படுகிறது.
மார்சியமானது தொழிலாளர் கட்சிக்கு போதமளிப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி படைக்கு போதமளிக்கிறது. ஆட்சி அதிகாரம் ஏற்று அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்கி சோசலிசத்துக்கு அழைத்துச் செல்ல புதிய அமைப்பை நெறிப்படுத்தி ஒழுங்கமைக்க உழைப்பாளர்களுக்கும் சுரண்டப்படுவோருமான மக்கள் அனைவருக்கும் முதலாளித்துவ வர்க்கம் இல்லாமலும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்தும் தமது சமுதாய வாழ்வினை ஒழுங்கமைப்புக் கொள்வதில் அவர்களுக்கு போதகனாக வழிகாட்டியாக தலைவனாக செயலாற்ற வல்லமை படைத்த இந்த முன்னணி படைக்கு அது போதமளிக்கிறது. தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்ப வாதமானது இதற்கு மாறாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாக செயல்படுவதற்கு- வெகுஜனங்களுடன்தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு நல்லபடியாகவே இருந்து, எச்சில் துண்டுகாக தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகர தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை துறந்து விடும் இத்தகைய பிரதிநிதிகளாய் செயல்படுவதற்கு- பயிற்சி அளிக்கப் படுகிறது.
"அரசு அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்" பற்றிய மார்க்சின் தத்துவம் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சிகர பாத்திரம் குறித்த அவருடைய போதனை அனைத்தும் இரண்டற கலந்ததாய் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம். ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு, முதலாளித்துவதிற்கு எதிரான பலாத்கரத்தின் ஒழுங்கு அமைவதற்குரிய தனி வகை வடிவமான அரசு தேவைப்படுவதால் பின்வரும் முடிவுகள் தானாகவே எழுகிறது: முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல் தகர் தெரியாமல் இத்தகைய ஒழுங்கமப்பினை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நேரடியாக இந்த முடிவுக்கே இட்டு செல்கிறது என்கிறார் லெனின் தனது அரசும் புரட்சியும் நூலில் (பக்கம் 37-39).
அரசு பற்றிய புரிதலில் இங்குள்ள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து அவர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதை குறித்து லெனின் எவ்வளவு துள்ளியமாக கூறியுள்ளார்.
"ஒடுக்கும் முதலாளித்துவ வர்க்கங்கள், மாபெரும் புரட்சியாளர்களை அதாவது அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின. அவர்களுடைய கருத்துக்களின் மீது வெறுப்பு கொண்டு கயமைத்தனமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தார்கள். ஆனால் அவர்கள் மறைந்தபின்பு அவர்களை அபாயமற்ற பூஜையறை படங்களாக்கி அவர்களை வழிபாட்டுக் குரியவர்களாக மாற்றினர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டமக்களை ஆன்ம திருப்தி செய்து ஏமாற்றினர்" -என்கிறார் லெனின்அதே பகுதி "இன்று மார்க்சின் போதனைகளிலுள்ள புரட்சிகர சாரத்தை மூடி மறைத்துவிட்டு, அதனை திருத்தி முதலாளி வர்க்கத்தாருக்கு சாதகமான முறையில் மாற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை முதலாளி வர்க்கங்களிடம் அடிமைப் படுத்துவதில் முதலாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் ஒன்றுபடுகிறார்கள்".
மேலும், "இவ்வாறு முதலாளித்துவ அறிவாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கங்களிலுள்ள சந்தர்ப்பவாதி களாலும் மிகவும் அதிகமாக மார்க்சியத்தை திருத்தி மக்களை குழப்பத்திற்குள் ஆழ்த்திய மார்க்சிய போதனைகளில் மிகவும் முதன்மை யானது அரசு பற்றிய மார்க்சிய போதனையையே ஆகும்".
"ஏனெனில் மார்க்சின் போதனை களிலேயே மிகவும் முதன்மையான, மற்றும் உழைக்கும் மக்களாலும், அதன் முன்னணிகளாலும் உணர்ந்து, புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய கொள்கை என்பதுஅரசு பற்றிய மார்க்சியக் கொள்கையாகும். அரசு பற்றிய மார்க்சிய கொள்கையில் உழைக்கும் மக்களுக்கும் அதன் முன்னணிகளுக்கும் குழப்பம் இருந்தால் ஆளும் முதலாளி வர்க்கமும், தொழிலாளிவர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும், மக்களும் அதன் முன்னணிகளும் மார்க்சியத்தின் அடிப்படைகளையே புரியவிடாமல் செய்துவிட முடியும், மேலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை இழக்கச்செய்ய முடியும்".
‘’அரசுகுறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித் துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.’’ என்றார் லெனின்.
ஆகவே அரசு குறித்த சந்தர்ப்பவாதிகள் அதாவது மார்க்சிய போதனையை திருத்தி விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதிகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல்
மக்களை விடுவிக்க நாம் போராட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஐரோப்பா கண்டுள்ள எண்ணற்ற முதலாளித்துவப் புரட்சிகள் யாவற்றின் போதும் அதிகார வர்க்க, இராணுவ இயந்திரத்தின் வளர்ச்சியும் செம்மையும் வலிமையும் தொடர்ந்து நடைபெற்றன. குறிப்பாக, குட்டி முதலாளித்துவப் பகுதியினர்தான் பெரு முதலாளி வர்க்கத்தின் தரப்புக்குக் கவர்ந்திழுக்கப் படுகிறார்கள், பெருமளவுக்கு இந்த இயந்திரத்தின் மூலம் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தப்படுகிறார்கள். விவசாயிகள், சிறு கைவினைஞர்கள், வணிகர்கள் முதலானோரின்மேல்தட்டுப்பகுதியினருக்கு இந்த இயந்திரம் ஒப்பளவில் வசதியான, அமைதியான, கெளரவமான வேலைகளை அளித்து, நில உடைமையாளர்களை மக்களுக்கு மேலானவர்களாக உயர்த்து கிறது. பிப்ரவரி 27, 1917-க்குப் பிறகு ஆறு மாதங்களில் ரஷ்யாவில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். முன்பு கறுப்பு நூற்றுவருக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பதவிகள் இப்போது காடேட்டுகள், மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக-புரட்சியாளர்களின் கொள்ளைப் பொருட்களாக மாறிவிட்டன. எந்தவொரு தீவிரமான சீர்திருத்தங் களையும் அறிமுகப்படுத்துவது பற்றி யாரும் உண்மையில் சிந்திக்கவில்லை. "அரசியல் நிர்ணய சபை கூடும் வரை" அவற்றைத் தள்ளிப் போடவும், அதன் பட்டமளிப்பு விழாவை போர் முடியும் வரை படிப்படியாகத் தள்ளிப் போடவும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன! ஆனால், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், கவர்னர் ஜெனரல் போன்ற ஆதாயம் தரும் பதவிகளைப் பெறுவதில் கிடைக்கும் ஆதாயங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில், அரசியல் நிர்ணய சபைக்காகக் காத்திருப்பதில் தாமதமோ, காத்திருப்பதோ இல்லை! அரசாங்கத்தை அமைப்பதில் விளையாடப்பட்ட சேர்க்கைகளின் விளையாட்டு, சாராம்சத்தில், நாடு முழுவதும், மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் மேலேயும் கீழேயும் நடந்து வரும் "கொள்ளையடித்தல்" மீதான இந்த பங்கீடு மற்றும் மறுபங்கீட்டின் வெளிப்பாடு மட்டுமே. 1917 பிப்ரவரி 27க்கும்ஆசான்களது போதனைகளை மறுத்து அதனை கைவிட்டு விட்டு செயல்படுவதால் எவ்விதமான பயனும் இல்லை. இதன் காரணமாகவே இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மக்களிடம் செல்வாக்கு பெறாமல் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றனர்.
“பிரான்சில் ஒவ்வொரு புரட்சியிலிருந்தும் தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாய் வெளிவந்தனர்” என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அங்கு நடந்த மன்னராட்சிக்கு எதிராக நடந்த முதலாளித்துவப் புரட்சியின் போதும் பிறகு நடந்த தொழிலாளர்களின் புரட்சியின் போதும் தொழிலாளர்கள் ஆயுதபாணி களாகினர். அவ்வாறு தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாக மாறுவதன் மூலமே தொழிலாளர்கள் தங்களுக்கு எதிரான நிலப்பிரபுகளையும், மன்னர்களையும் பின்பு முதலாளிகளையும் அவர்களது ஆட்சியையும் வீழ்த்த முடிந்தது என்பதை பிரெஞ்சு நாட்டின் முதலாளிகள் புரிந்துகொண்டு தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதே முதலாளிகளின் முதன்மையான லட்சியம் என்று புரிந்துகொண்டு செயல்பட்டார்கள். அதேவேளையில் தொழிலாளர்களை மற்றும் உழைக்கும் மக்களை அடக்குவதற்கு முதலாளிகள் தங்களை ஆயுதபாணிகளாக வளர்த்துக் கொண்டார்கள். இந்த முதலாளிகளின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான நிறுவனங்கள்தான் போலீஸ், இராணுவம் போன்ற ஆயுதம்தாங்கிய படையாகும். இந்த உண்மை நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொழிலாளர்களின் பிரெஞ்சுப் புரட்சியிலேயே நிருபிக்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சியிலும் நிருபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும். நூறு ஆண்டுகளை கடந்த பின்பும் இதுவரை உழைக்கும் மக்களின் அடிப்படையான பிரச்சனையான வறுமை ஒழிக்கப்படாததற்கு, உழைக்கும் மக்கள் போராடுவதற்கான வலிமையை வழங்கும் ஆயுதங்கள் இல்லாமல், மக்கள் நிராயுதபாணிகளாக இருப்பதுதான் காரணம் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன?.
இங்குள்ள கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் இந்த உண்மையை உழைக்கும் மக்களுக்கு உணர்த்தாமல் மூடிமறைப்பதுவே காரணமாகும்.
முதலாளிகள் தொழிலாளிகளிடமிருந்து (உழைக்கும் மக்களிடமிருந்து) போர் ஆயுதங்களைப் பறித்து நிராயுதபாணி களாக்கி கூலி அடிமைகளாக ஒடுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் போலி கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் களிடமிருந்து தத்துவ ஆயுதமான மார்க்சிய லெனினிய ஆயுதத்தைப் பறித்து தத்துவத் துறையில் அறிவற்ற மூடர்களாக மாற்றி நிராயுதபாணி களாக்கியுள்ளார்கள். இந்த வகையில் முதலாளிகளைக் காட்டிலும் போலி கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு மிகவும் கொடூரமான துரோகத்தைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் தொழிலாளர்களுக்கு உயிர் போன்ற மார்க்சிய லெனினிய தத்துவ ஆயுதம் தொழிலார்களின் கைகளில் இருக்குமானால் அதைக்கொண்டு ஒவ்வொரு சூழலிலும் என்னவகையான ஆயுதத்தை தொழிலாளர்கள் ஏந்த வேண்டும் என்பதை விஞ்ஞான அடித்தளத்திலிருந்து புரிந்துகொண்டு, தேவையான ஆயுதத்தை ஏந்தி தொழிலாளர்கள் போராடி அவர்களது எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவார்கள். அத்தகைய வெற்றியை தொழிலாளி வர்க்கம் பெறமுடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டு, கொத்தடிமைகளாகவே வாழ்ந்து கொண்டு இருப்பதற்கு முதலாளிகளைக் காட்டிலும் இந்தப் திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளே முதன்மையான காரணமாகும்.
இந்த உண்மையை தொழிலாளி வர்க்கம் புரிந்துகொள்ள முடியாததற்கும் தொழிலாளர்களிடம் மார்க்சிய லெனினிய தத்துவ ஆயுதம் இல்லாததே காரணம் ஆகும். ஆகவே தொழிலாளி வர்க்கம் முதலில் ஏந்தவேண்டிய ஆயுதம் மார்க்சிய லெனினிய தத்துவ ஆயுதம் ஆகும் என்பதை புரிந்துகொண்டு, அந்த ஆயுதத்தை ஏந்தினால், அவர்களால் அவர்களின் எதிரிகளை மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள் போல் வேடமணிந்து வலம் வரும் போலி கம்யூனிஸ்டுகளின் உண்மையான முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களையும் எதிர்த்துப் போராடி முறியடித்து வெற்றிபெற முடியும், கூலி அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். அரசு பற்றிய பிரச்சனையில் உழைக்கும் மக்களின் கைகளில் போர் ஆயுதங்கள் இருக்கிறதா? அதாவது அவர்களுக்கு ஆயுதம் ஏந்துவதற்கான உரிமை இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கு முதலாளித்துவ சிந்தனையாளர்கள் மறுத்துவிடுகிறார்கள் என்றார் லெனின். இந்தமுதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலவே கம்யூனிச வேடம் போட்ட திருத்தல்வாத மென்ஷ்விக்கு களும் உழைக்கும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளதா? என்பதை பார்க்க மறுக்கிறார்கள் என்றார் லெனின். அதாவது உழைக்கும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஆயுதங்கள் அவர்களது கைகளில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர்ந்துகொண்டு, அதனை மக்களிடம் போதித்து உழைக்கும் மக்களை ஆயுதபாணியாக்குவதன் மூலமே உழைக்கும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வகை செய்ய முடியும். எந்தெந்த சூழலில் எவ்வகையான ஆயுதத்தை உழைக்கும் மக்கள் ஏந்த வேண்டும் என்று உழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இருந்தபோதும் உழைக்கும் மக்கள் மார்க்சிய லெனினியம் என்ற கருத்தியலான ஆயுதத்தை எப்போதும் கைகளில் ஏந்திட வேண்டும் என்பதை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது.
இறுதியாக
பிரான்சில் பாரீஸ் கம்யூன் மூலம் அதிகாரத்துக்கு வந்த தொழிலாளி வர்க்கம் கீழ்கண்ட அனுபவங்களைப் பெற்றது.
1).அதிகாரத்துக்கு வந்த தொழிலாளர் கள் அல்லது கம்யூனிஸ்டுக்கட்சியானது, அதிகாரத்துக்கு வந்துவிட்டாலும், ஏற்கனவே முதலாளிகளை பாதுகாப் பதற்காகவும் அதற்காகவே பழக்கப் படுத்தப்பட்ட இராணுவம், போலீஸ், மற்றும் அதிகாரிகளை உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியாது என்ற அனுபவம் அவர்களுக்கு கிடைத்தது.2) மக்களை இதுவரை ஒடுக்கிவந்த அதிகாரவர்க்க எந்திரத்தை ஒழித்து விட்டு, தொழிலாளி வர்க்கம், தனது சொந்த பிரதிநிதிகளையும் அதிகாரி களையும் மக்களே தேர்ந்தெடுத்தாலும், தொழிலாளி வர்க்கம் தன்னையும் உழைக்கும் மக்களையும், கம்யூன் அரசையும் பாதுகாக்கும் பொருட்டு தனது பிரதிநிதிகளும் எந்த நேரத்திலும் திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களே என்பதை பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டது. இதன் மூலம் கம்யூன் அரசை உருவாக்குவது மட்டும் உழைக்கும் மக்களின் கடமை இல்லை, அந்த அரசை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். அவ்வாறு மக்கள் கம்யூன் அரசை தொடர்ந்து கண்காணித்து தவறுகள் காணப்படும்போது அவ்வப்போது உடனடியாக மக்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கம்யூன் அரசை பாதுகாக்க முடியும் என்ற அனுபத்தை பாரீஸ் கம்யூன் பெற்றது. ரஷ்யாவில் பாரீஸ் கம்யூனது முதல் அனுபவத்தை எடுத்துக்கொண்டு சோவியத்துக்கு முன்பு இருந்த அரசு எந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டு சோவியத்து அரசு உருவாக்கப்பட்டது. ஆனால் பாரீஸ் கம்யூனது இரண்டாவது அனுபவத்திலிருந்து ரஷ்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்து பிரதிநிதிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அங்கே சோவியத்து அரசை பாதுகாக்க முடியவில்லை. சோவியத்து அரசை முதலாளிகள் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் ஊடுருவியே கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாத கட்சியாக மாற்றி சோவியத்து அரசையும் வீழ்த்திவிட்டார்கள். வெற்றிபெற்ற சோவியத்து கம்யூனிஸ்டுக் கட்சியையே கைப்பற்றிய முதலாளிகள் இங்குள்ள கம்யூனிஸ்டு அமைப்புக்குள் ஊடுருவி என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே பாரீஸ் கம்யூன் அனுபத்திலிருந்து படிப்பினை பெற்று செயல்பட முன்வராதவரை இங்கே கம்யூனிச ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கே கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்பவர்கள், எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளாக ஆகி, இந்த போலீசையும், அதிகாரிகளையும் கொண்டே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் கம்யூனிஸ்டுகள் இல்லை. மாறாக சிவப்புச் சட்டை போட்ட முதலாளித்துவ சீமான்களே ஆவார்கள். இந்த கட்சிகளும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் இல்லை. இவர்கள் சிவப்பு கொடி பிடிக்கும் முதலாளித்துவ கட்சிகளே.
முடியரசு அதாவது மன்னராட்சி முறையில் மட்டுமல்லாது குடியரசிலும் அதாவது பாராளுமன்ற ஜனநாயக முறையிலான ஆட்சியிலும், அரசு அதிகாரிகள் மக்களுக்கு பணி செய்யக்கூடிய பணியாட்களாக இல்லாமல் மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் மக்களை அச்சுறுத்தி ஒடுக்குபவர்களாகவுமே உள்ளனர் என்று எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார்.இந்த எங்கல்சின் கொள்கைக்கு மாறாக இந்த பாராளுமன்ற ஆட்சி புனிதமான ஆட்சி என்றும், இந்தப் பாராளுமன்றமும் அரசியல் சட்டமும் புனிதமானது என்றும்இந்த புனிதமான பாராளுமன்றத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று சில போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்களே, இவர்களுக்கு எங்கெல்சின் இந்த போதனை தெரியுமா? தெரிந்தால் பாராளுமன்றத்தின் புனிதத்தை காத்திட வேண்டும் என்று பிரச்சாரம்செய்வார்களா? உழைக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தில் போடப்பட்ட சட்டங்களில் எத்தனை சட்டம் மக்களின் நலனுக்கானது?
எத்தனை சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை சிந்தித்துப் பாருங்கள். மிகப் பெருவாரியான சட்டங்களும் அரசியல் சட்டமும் மக்களுக்கு எதிராக இருப்பதையே நாம் காணலாம். இந்த நிலையில் இந்தப் பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்று சொல்வது மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும். இதற்கு மாற்று கம்யூன் அரசுதான் என்பதை பிரச்சாரம் செய்பவரே உண்மையான கம்யூனிஸ்டாவார். அந்தக் கட்சிதான் உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சியாகும்.
இப்படி நாம் சொல்வதால் நாம் பாராளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதாக யாரும் தவறாக கருத வேண்டாம். இந்த பாராளுமன்ற நடவடிக்கையில் பங்குகொண்டே கம்யூன் அரசமைப்பு பற்றி பிரச்சாரம் செய்யும் மேடையாக பாராளுமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே மார்க்சிய லெனினியம் ஆகும்.
அரசும், அரசின் நிர்வாக உறுப்புகளும் மக்களுக்கு பணியாற்றும் பணியாட்க்கள் என்ற நிலைக்கு மாறாக மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் எஜமானர்கள் என்ற நிலையை மாற்றுவதற்காக பாரீஸ் கம்யூன் முன்வைத்த கொள்கைகள் என்ன? நிர்வாகம், நீதித்துறை, கல்வி போன்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலம் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை முன்வைத்தது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மக்கள் திருப்பி அழைக்கும் முறையையும் முன்வைத்தது. இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பிற தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமே அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அதிகாரப் போட்டிகள் தவிர்க்கப்பட்டது. அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை நவீன முறைகளைப் பயன்படுத்தி எளிமையாக்க வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. அதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களும் அரசு அதிகாரிகளுக்குரிய பணியை செய்ய முடியும் என்று உணரப்பட்டது. அதிகாரிகளுக்கு லாபம் கிடைக்குமாறு இருந்த பணிகளில் இலாபம் கிடைக்க முடியாதபடி செய்வதோடு பதவிகள் மதிப்புக்குரியது என்ற நிலையையும் இல்லாது மாற்ற வேண்டும் என்பது உணரப்பட்டது. இத்தகைய முறையில் உழைக்கும் வர்க்கத்துக்கான அரசுமுறை உடனடியாக அல்லது சிறிது காலத்திற்குள் உருவாகிவிடும் என்று கருத முடியாது. அதற்கு பல காலம் ஆகும். அதே வேளையில் அதனை சாதிக்க முடியாமலும் போய்விடலாம்.
ஆகவே கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து மாறுகின்ற சூழலை மார்க்சிய வெளிச்சத்தில் புரிந்துகொள்ள வேண்டும் அதற்கு நமக்கு முதன்மையாக தேவை மார்க்சிய லெனினிய கல்வி அதற்கான இயக்கம். இங்குள்ள மார்க்சியம் அல்லாத போக்குகளை களைந்தெறிய, நாம் மா-லெ-மா நிலைப்பாட்டை உயர்திப்பிடித்து நமக்கான மார்க்சிய கல்வியையையும் சமூகத்தை படைக்க முயலுவோம்.
No comments:
Post a Comment