அரசை புரிந்துக் கொள்வோம்

 மார்க்சிய ஆசான்கள் எழுதிய லூயி போன்ப்பார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், பிரான்சில் உள்நாட்டுப் போர், டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் போன்ற மார்க்சிய ஆசான்களது நூல்களை நாம் படிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள இடதுசாரிகளில் பல பேர்களுக்கு அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகள் தெரியாது. இடதுசாரி தலைவர்களும் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இல்லை. அதன்காரணமாக இடதுசாரி அமைப்பிலுள்ள பலருக்கும் நடைமுறையிலுள்ள அரசைப் பற்றியும் தெரியாது உழைக்கும்மக்களுக்கு எந்தவகையான அரசு தேவை என்பதும் தெரியாது. அரசு பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு என்ன தெரியுமோ அந்த அளவிலேயே இடதுசாரிகளும் தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகவேதான் இடதுசாரிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலவே இருக்கிறார்கள். இடதுசாரிகளுக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும்எவ்விதமான வேறுபாட்டையும் இங்கு காணமுடியவில்லை. அவர்களுக்கு இடையிலான வேறுபாடு அவர்கள் ஏந்திக்கொண்டிருக்கும் கொடிகளில் மட்டுமே காண முடிகிறது. அரசு பற்றிய கொள்கையில் இவர்களுக்கு இடையில் எவ்விதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஆகவே உண்மையான இடதுசாரிகள் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை படித்து புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தங்களது அரசியல் கொள்கையை வகுத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இடதுசாரிகள் உண்மையான மார்க்சிய லெனினியவாதிகளாக மாறி வளரமுடியும்..

அரசு என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவான நிறுவனமாக அடையாளப்படுத்தும் சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி உற்பத்திச் சாதனங்களை அதாவது மூலதனத்தை உடமையாகக் கொண்ட வர்க்கங்கள், உடமையற்ற வர்க்கங்களின் உழைப்பு சக்தியை சுரண்டி அதாவது திருடி தனது மூலதனத்தை அதாவது சொத்துக்களை குவிக்கும் நோக்கத்திற்காக உடமையற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான கருவிதான் இந்த அரசு என்பதை மூடிமறைக்கிறார்கள். பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி, ஜெர்மனி, இந்தியாவிலும் தோன்றிய அரசுகளின் வரலாறறை நாம் ஆய்வு செய்தால், இந்த அரசுகள் தோன்றியபோதே சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களை உடமையாகப் பெற்ற வர்க்கங்களுக்கு ஆதரவாக ஆதிக்க சக்தியாகவே அரசுகள் தோன்றியதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உண்மையை வரலாற்றிலிருந்து தகுந்த ஆதாரங்களோடு நிறுவியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள். அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும்தான் மார்க்சியவாதிகள் ஆவார்கள். இதனை மறுப்பவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் மார்க்சியத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே ஆவார்கள். 

உலகில் தோன்றிய அரசுகள் பல வடிவங்களில் தோன்றியது. இவ்வாறு அரசானது பல வடிவங்களைக் கொண்டிருந்தாலும் அனைத்துவகையான அரசுகளுக்கும் நோக்கம் ஒன்றுதான். அதாவது உற்பத்திச் சாதனங்களை உடமையாகக் கொண்ட வர்க்கங்களின் நலன்காப்பதுவே ஆகும். மேலும் இந்த வர்க்கங்களை எதிர்க்கும் வர்க்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதே ஆரசாகும். ஆகவேதான் தற்போது சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களுக்கு உடமையாளனாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு உழைக்கும் வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களுக்கு உடமையாளனாக மாற்றப்பட்டுவிட்டால் இந்த உடமையை அதாவது உழைக்கும் மக்களின் உடமையை பாதுகாப்பதற்கான அரசு அதற்குத் தேவைப்படும் அல்லது இந்த பொதுவுடமையை ஒழிப்பதற்கான வேலைகளில் ஈடுபடும் முதலாளிகளின் எதிர்ப்புரட்சியை நசுக்கவும் உழைக்கும் மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. 

இந்த அடிப்படை கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் நிலவுகின்ற பாராளுமன்ற ஆட்சி முறையானது எவ்வளவுதான் ஜனநாயகம் என்று பேசினாலும், அது சாராம்சத்தில் சுரண்டும் வர்க்கங்களின் குறிப்பாக முதலாளிகளின் சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கிறது என்பதை மார்க்சிய ஆசான்கள் தகுந்த ஆதாரங்களோடு நிறுவினார்கள். மேலும் உழைக்கும் வர்க்கத்திற்கான அரசானது முதலாளிகளின் எதிர்ப்புரட்சியை ஒடுக்குவதற்கான பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசாகவே இருக்க வேண்டும் என்றும் மார்க்சியம் போதிக்கிறது..

கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே சில தலைவர்கள் பாராளுமன்ற அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் கற்பனையை மக்களிடம் விதைத்தார்கள். அவர்களை எதிர்த்து மார்க்சிய ஆசான்கள் கடுமையாகப் போராடினார்கள். மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை எல்லாவிதமான ஜனநாயகமும், சுதந்திரமும் உழைக்கும் மக்களுக்கு உண்மையான விடுதலையை கொண்டுவராது என்பதை மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்..

ஆகவே மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்குஉழைக்கும் வர்க்கமானது தொடர்ந்து போராட வேண்டும் என்றும், அதற்குஉழைக்கும் வர்க்கமானது மூலதனத்தை அதாவது உற்பத்திச் சாதனங்களை உழைக்கும் மக்களுக்குச் சொந்தமான உடமையாக ஆக்க வேண்டும் என்றும் அதற்காக நிலவுகின்ற முதலாளித்துவ அரசை அடித்து நொறுக்கிவிட்டு உழைக்கும் மக்களின் பொதுவுடமையை பாதுகாப்பதற்கான அரசை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. எனினும் முதலாளித்துவ நாடுகளில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கம்யூனிஸ்டுக் கட்சியானது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. இங்கே இரண்டு வகையான எதிர்மறைகளைப் பற்றி மார்க்சியம் போதிக்கிறது. ஒன்று முதலாளித்துவ ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்கள் முழுமையான விடுதலை அடைய முடியாது என்கிறது. அதே சமயம் இதற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயகத்தை உழைக்கும் வர்க்கமானது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறது. இதனை புரிந்துகொள்வதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மார்க்சிய கண்ணோட்டம் உள்ளவர்களால் இதனை குழப்பமில்லாமல் புரிந்துகொள்ள முடியும். அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்கள் தங்களது கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது, ஆகவே தனது கருத்தை உழைக்கும் மக்களிடையே பரப்புவதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று உணர்ந்து அந்த சுதந்திரத்தை பயன்படுத்துவதுதான் அறிவுடமை ஆகும். அதேபோல் உழைக்கும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தையும் நாம் பயன்படுத்துவது அவசியமே என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்து சட்டப்பூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. அதே வேளையில் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே உழைக்கும் மக்களுக்கான முழுமையான விடுதலையை அடையமுடியும் என்று கண்மூடித்தனமாக நம்பி நமது நடைமுறையை வகுத்துக்கொள்ளக்கூடாது என்று மார்க்சியம் எச்சரிக்கிறது.  இந்த கண்ணோட்டத்தை சரியாகப் புரிந்துகொள்பவரே சிறந்த மார்க்சியவாதி ஆவார். இதற்கு மாறாக முதலாளித்து ஜநாயகத்தையே முழுமையாக நம்பி செயல்படுவதும், முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு முடிவுகட்டிவிட்டு பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிறுவ மறுப்பதும் தவறு ஆகும், இதற்கு எதிராக பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிறுவுவதற்கான செயல்பாட்டில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டு முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்த மறுப்பதும் தவறாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆகவேதான் ஒரு பாட்டாளிவர்க்க கட்சியானது சட்டப்பூர்வமான போரட்டங்களை நடத்தும் அதே வேளையில் சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்திட வேண்டும் என்றே மார்க்சியம் போதிக்கிறது. இந்திய முதலாளிகளுக்காகப் பாடுபட்ட காந்தி கூட சட்டப்பூர்வமான போராட்டத்தையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்தினார் என்பதை கவனத்தில் கொண்டால் இதனை நாம் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு மார்க்சியத்தின் போதனைகளில் காணப்படும் எதிர்மறைகளுக்கான நிபந்தனைகள் மற்றும் சூழலைக்கொண்டு புரிந்துகொள்பவரே சிறந்த மார்க்சியவாதி ஆவார். 

உதாரணமாக தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று லெனின் சொல்லியுள்ளார் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு தேர்தலில் ஏன் பங்கு கொள்ள வேண்டும் என்பதையும் தேர்தல் மூலம் கம்யூனிஸ்டுகள் என்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் சில சமயங்களில் தேர்தல்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் பாதையிலேயே மூழ்கிவிடுவதும் தவறு அதே போல் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்பதுவும் தவறாகும். சரியான மார்க்சிய கண்ணோட்டம் இல்லாதவர்களே மார்க்சிய ஆசான்களின் போதனைகளை சரியாகப் புரிந்துகொள்ள தவறுவதை நாம் பார்க்கிறோம்.

இத்தகைய தவறுகளை எதிர்த்து போராட வேண்டியது மார்க்சிய லெனினியவாதிகளின் கடமையாகும். உற்பத்தி சக்திகள் அதாவது உற்பத்தி கருவிகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்கள், போக்குவரத்து சாதனங்கள், போன்றவைகள் அனைத்தும் வளர வளர சமூகத்தின் உற்பத்திமுறையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்தனிவுடமை தோன்றியது. அதற்கு முன்பு சமூகமானது பொதுவுடமையாக இருந்தது. இந்த பொதுவுடமைச் சமூகம் தகர்ந்து தனிவுடமை தோன்றியது. இந்த தனிவுடமை சமூகத்தில்தான் அதுவரை மனிதர்களிடம் எவ்விதமான பிளவுகளும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்த மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டு மனிதர்களுக்கு இடையிலான ஒற்றுமை தகர்ந்தது. இவ்வாறு மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டது தவிர்க்க முடியாததாகவே அப்போது இருந்தது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் இந்தப் பிளவுக்கு அடிப்படையாக இருந்தது. முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் மேலுமேலும் வளர்ச்சியடைகின்றது. இந்த வளர்ச்சியின் காரணமாக தனிவுடமையும் சுரண்டும் வர்க்கங்களும் சமுதாயத்தின் உற்பத்தியின் வளர்ச்சிக்கு தடையாக மாறுகிறது. முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் முதலாளித்துவ தனிவுடமையும் சுரண்டும் வர்க்கங்களும் உற்பத்தி சக்திகளை வளர்க்கின்றன, அதன் பயனாக சமூக உற்பத்தி அதிகரித்து வளர்க்கப்படுகிறது, சமுதாயமும் வளர்ந்தது. ஆனால் இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் உற்பத்தி அதிகரித்த போதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் சந்தையில் விற்க முடியாமல் தேங்குகிறது. அதனால் முதலாளிகள் உற்பத்தியை தொடராமல் உற்பத்தியை குறைக்கிறார்கள். ஆகவே இவர்கள் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறார்கள்இவ்வாறு முன்பு சமூகத்தின் உற்பத்தி வளர்ச்சிக்கும் பொதுவாக சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த முதலாளிகள், தற்போது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிட்டார்கள். ஆகவே சமூகத்தை வளர்ப்பதற்கு இந்த முதலாளிகளின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டியது அவசியமாகிறது. இந்த அவசியத்தின் காரணமாகவே இந்த முதலாளிகளின் நலன் காக்கும் அரசை எதிர்த்து புரட்சி நடத்திட வேண்டியது அவசியமாகிறது என்று மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து போதித்தார்கள்..

அதாவது நிலவுகின்ற அரசு இயந்திரத்தை அடித்து நொறுக்குவது அவசியம் என்று தொடர்ந்து மார்க்சிய ஆசான்கள் வலியுறுத்தினார்கள். இத்தகைய புரட்சியின் மூலம் மட்டுமே நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயக அரசு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசு உருவாக்கப்படும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்தார்கள். இந்த உண்மையை மறுக்கும் திருத்தல்வாதிகள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டே நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயகத்தை மெச்சி புகழ்ந்துகொண்டே இந்த முதலாளித்துவ அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தியே பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நிறுவ முடியும் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவதற்காகவே தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து முதலாளிகளுக்கு சேவை செய்ய துடிக்கிறார்கள். ஆகவே பொதுவுடமை இயக்கத்திலுள்ள இந்த திருத்தல்வாதிகளின் துரோகத்தை நாம் புரிந்துகொண்டு நாம் புறக்கணிக்க வேண்டும். ஆகவே நமக்குத் தேவை முதலாளித்துவ ஜனநாயக அரசு அல்ல, மாறாக பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசுதான் நமக்குத் தேவை என்பதையும், பாட்டாளி வர்க்க அரசு மட்டுமே உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மிகச் சிந்த ஜனநாயகத்தை வழங்கக்கூடிய அரசாக இருக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அத்தகைய அரசை உருவாக்குவதற்காகப் பாடுபட வேண்டும்..

தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.

இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதித்துறையை தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை.

சீனாவைப் பொறுத்தமட்டில் விடயம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது. சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர் சீனக் கம்யூனிஸ்டுகள் சீனப் புரட்சியின் தொட்டில் எனஇன்று அழைக்கப்படும் யெனானில் 13 வருடங்கள் தோழர் மாவோ தலைமையில் தளமாக செயல்பட்டது. புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் ஆளுமை மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் விடுதலைச் சேனையின் பின்னால் செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க பரிபாலன அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர். இது ஒரு முழுமையான புதிய பரிபாலன அமைப்பு. அது பழைய அமைப்புடன் எந்தவித தொடர்பையோ, உறவையோ வைத்துக்கொளாதது மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை அடித்து நொருக்குவது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது..

புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது எவ்வளவு அவசியமோ, அதே போல புதிய பாட்டாளி வர்க்க அரசதிகாரம் நிலைத்து நிற்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜக வாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர் முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு அதிகாரத்தை புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின் ஒரு பாட்டாளி வர்க்க அரசதிகாரம் வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின் பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். சந்தேகத்திற்கு உரிய வகையில் இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வர வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.. லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும். இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல் இருக்கவும், புரட்சியைப் பாதுகாக்கவும் முடியும். இதைச் செய்யத் தவறினால் புரட்சியின் வெற்றி பலவீனமடையும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்