ஏகாதிபத்தியம் என்றால் ஏகபோக டிரஸ்டுகள், சிண்டிகேட்டுகள், வங்கிகள், நிதி மூலதனக் குறுங்குழுக்கள்

 

ஏகாதிபத்திய சூழ்நிலைமைகளில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிகவும் தீவிரம்அடைந்து இருந்தபோது, தொழிலாளி வர்க்கப் புரட்சி என்பது உடனடியாக நடைமுறைப்பிரச்சனையாக ஆகிவிட்டபோது, தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும்காலம் முடிவுற்று, ஒரு புதிய காலம் தொடங்கிவிட்டபோது, அதாவது முதலாளியத்தைநேரடியாகத் தாக்க வேண்டிய காலம் தொடங்கிவிட்டபோது, லெனினியம் வளர்ந்து உருவம் பெற்றது.

ஏகாதிபத்தியத்திற்கு, "அழுகி செத்து மடியப்போகிற முதலாளியம்" (Moribund Capitalism) என்றுபெயரிட்டார் லெனின். ஏன்? எனென்றால், முதலாளியத்தின் முரண்பாடு களை எந்தஅளவுக்குத் தீவிரமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு - எந்த எல்லையைத் தாண்டியவுடனே புரட்சி ஆரம்பமாகுமோ அந்த எல்லையைத் தொடும் அளவுக்கு ஏகாதிபத்தியம்தீவிரமாக்குகிறது. இந்த முரண்பாடுகளில் மூன்று மிகமிக முக்கியமானவையாகக் கருத்தப்படவேண்டும்.

முதலாவது முரண்பாடு, மூலதனத்திற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ளமுரண்பாடு ஆகும். ஏகாதிபத்தியம் என்றால், இயந்திரத் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில்உள்ள ஏகபோக டிரஸ்டுகள், சிண்டிகேட்டுகள், வங்கிகள், நிதி மூலதனக் குறுங்குழுக்கள் முதலியவற்றில் சர்வ வல்லமை பெற்ற சக்தியாக விளங்குவதாகும். இத்தகைய சர்வ வல்லமை பெற்ற சக்தியை எதிர்க்கும் போராட்டத்தில், தொழிலாளி வர்க்கத்தின் மரபு வழிப்பட்ட சகஜமான போராட்ட முறைகள் - தொழிற்சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், பாராளுமன்றக் கட்சிகள், பாராளுமன்றத்துக்குள்ளே போராட்டம் - முற்றிலும் போதாமையாக உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டது. இரண்டே வழிகள்தாம் உண்டு. ஒன்று, முதலாளியத்தின்கருணையை வேண்டி நின்று, முன்பு மாதிரியே துன்பத்தில் அமிழ்ந்து போக வேண்டும்;அல்லது, புதிய ஆயுதத்தை ஏந்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைக் கடைப் பிடிக்குமாறு பரந்துபட்ட தொழிலாளர் திரள்முன் ஏகாதிபத்தியம் வைக்கிறது. ஏகாதிபத்தியம், தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்குக் கொண்டு செல்கிறது.

இரண்டாவது முரண்பாடு, மூலப் பொருட்கள் கிடைக்கக் கூடிய இடங்களையும், அந்நிய நாட்டுப் பிரதேசங்களையும், கைப்பற்ற நடக்கும் போராட்டத்தில் வெவ்வேறு பணக் கோஷ்டிகளுக்கும், ஏகாதிபத்திய வல்லரசு களுக்கும் இடையே உண்டாகியிருக்கும் முரண்பாடு ஆகும். ஏகாதிபத்தியம் என்றால், மூலப் பொருட்கள் கிடைக்கிற மூல ஸ்தானங்களுக்கு முலதனத்தை ஏற்றுமதி செய்வதாகும். இதற்காக மூலப்பொருள் கிடைக்கின்ற இடங்களை தமக்காக மட்டுமே ஏகபோகமாக வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் மற்றவருக்கு எதிராகப் போராடுவதாகும். ஏற்கனவே பங்கிட்டுக் கொள்ளப்பட்ட உலகத்தை திரும்பவும் புதிய முறையில் பங்கிட்டுக் கொள்ள அவர்களுக்குள்ளே நடக்கும் போராட்டமாகும்.

ஏற்கனவே கைப்பற்றி தம் உடமையாக ஆக்கிக் கொண்டுவிட்ட, இனி யாருக்கும் விடமுடியாது என்று உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிற, பழைய பணக் கோஷ்டிகளையும், வல்லரசுகளையும் எதிர்த்து, "இவ்வுலகில் எங்களுக்கும் ஒரு இடம் வேண்டும்" என்று வாதித்து நாடு பிடிக்க முயற்சிக்கிற புதிய பணக் கோஷ்டிகளும்,வல்லரசுகளும் மூர்க்கத்தன மாக நடத்துகிற போராட்டம் ஆகும். வெவ்வேறு முதலாளிய கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் இந்த வெறிகொண்ட போராட்டம், தவிர்க்க முடியாதவாறு, ஏகாதிபத்திய யுத்தங்களை மூட்டும் அம்சம் பொருந்தியதாக இருக்கின்றது.

அந்நிய நாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றும் பொருட்டு யுத்தம் மூளுவதற்கு வலிகோலக்கூடியதாக இருக்கிறது. அப்படி யுத்தத்தை மூட்டும் இந்த அம்சம் அதன்விளைவாக இன்னொரு குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறது. அது பரஸ்பரம் ஏகாதிபத்தியவாதிகள் பலவீனம் அடைவதில் கொண்டுபோய் விடக் கூடியதாகவும், பொதுவாகவே முதலாளித்துவத்தை பலவீனப்படுத்துவதாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியின் வருகையை துரிதப்படுத்தக் கூடியதாகவும், அப்புரட்சியைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

மூன்றாவது முரண்பாடு, அடிமைப்படுத்தி அரசாட்சி புரிகிர, விரல்விட்டு எண்ணத்தக்க =

ஒருசில "நாகரீக" நாடுகளுக்கும் அடிமைப்பட்டும், குடியேற்ற நாடுகளாயும் கிடக்கிற கோடானுகோடி உலக மக்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடு ஆகும். ஏகாதிபத்தியம் என்றால், அடிமைப்பட்டுக் கிடக்கும் ஏராளமான குடியேற்ற நாடுகளிலும், சார்பு நாடுகளிலும் வசிக்கிற கோடானுகோடி மக்களை வெட்கங் கெட்டத்தனமாகச் சுரண்டுவதும் மிகமிக அரக்கத்தனமாக ஒடுக்குவதுமாகும். இந்தச் சுரண்டலின் மற்றும் ஒடுக்கலின் நோக்கம் கொள்ளைக்காரத்தனமான லாபங்களை கசக்கிப் பிழிந்து மூட்டை கட்டிச் செல்வதாகும்.

ஆனால் இந்த நாடுகளை அதிகமாகச் சுரண்டுவதற்காக, இந்த நாடுகளில் புகைவண்டிப் பாதைகள், தொழிலகங்கள் மற்றும் ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் ஆகியவற்றை நிறுவுவது கட்டாயமாகிறது. அவசியத்தின் நிர்பந்தத்தால் கையாளும் இந்தக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவுகள் என்னவென்றால், இயந்திரத் தொழிலாளிகளுடைய வர்க்கம் உதயமாகிறது; சுதேசி படிப்பாளிக் கூட்டம் தோன்றுகிறது; தேசிய உணர்வு விழிப்படைகிறது; விடுதலை இயக்கம் வளர்கிறது. இது முழுக்க முழுக்கஉண்மை என்பதை விதிவிலக்கின்றி எல்லா குடியேற்ற நாடுகளிலும், சார்பு நாடுகளிலும் வளர்ந்திருக் கும் புரட்சி இயக்கங்கள் நன்கு நிருபிக்கின் றன. இந்த சூழ்நிலை, பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் குடியேற்ற நாடுகளையும் சார்பு நாடுகளையும் ஏகாதிபத்தியத்தின் பின்புலமாக (Reserve) இருக்கும் நிலையை மாற்றி பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்புலமாக ஆக்குவதன் மூலம் இது முதலாளியத்தின் நிலையை மிகவும் பலவீனப்படுத்தி, முற்றிலும் மாற்றி அமைத்து விடுகிறது.

பொதுப்படையாகப் பார்த்தால், இவைகள் தான் ஏகாதிபத்தியத்தின் பிரதான முரண்பாடுகள்.ஒரு காலத்தில் தழைத்து செழித்த முதலாளியத்தை, அழுகி மடியப்போகும் முதலாளித்துவமாக மாற்றி யிருக்கும் முரண்பாடுகள் இவைதான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மூண்ட ஏகாதிபத்திய யுத்தத்தின் விசேஷம் என்ன?

ஏகாதிபத்தியத்தின் மேற்கண்ட முரண்பாடு கள் அனைத்தையும் அது ஒன்றாகக் குவித்து

முடிச்சுப்போட்டு சாவா, பிழைப்பா என்ற நிலைமையை உண்டாக்கியது. அதனால் அது தொழிலாளி வர்க்கப் புரட்சிப் போராட்டங்களை துரிதப்படுத்தியதோடு அல்லாமல், அவற்றிற்கான வசதியையும் செய்து கொடுத்தது.

இன்னொரு விதமாக கூறுவதானால், ஏகாதிபத்தியம் அந்த யுத்தத்தை மூட்டிவிட்டதன் மூலமாக புரட்சியானது காரிய சாத்தியமானதும், தவிர்க்க முடியாததுமான விஷயமாகிவிட்டது; அதோடல்லாமல், முதலாளித்துவ கோட்டை கொத்தளங்களை நேரடியாகத் தாக்குவதற்கு வாய்ப்பான சந்தர்ப்பத்தையும் உண்டாக்கி கொடுத்தது.

இத்தகைய ஒரு சர்வதேச நிலைமைதான் லெனியத்துக்குப் பிறப்பு அளித்தது.

சிலர் கேட்கலாம்; இதெல்லாம் ரொம்பவும் சரி, ஆனால் இதற்கும் ரஷ்யாவுக்கும் என்ன சம்பந்தம்? ஏகாதிபத்தியத்தின் சிறப்பான உறைவிடமாக ரஷ்யா இருக்கவில்லையே?

சிறப்பான உறைவிடமாக ரஷ்யா இருந்திருக்க முடியாதே! ரஷ்யாவில் பிரதானமாக ரஷ்யாவுக்காகப் பாடுபட்ட லெனினுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? லெனினியத்துக்குத் தாயகமாக விளங்கும் பெருமையை தொழிலாளி வர்க்கப் புரட்சியின் தத்துவம், போர்த்தந்திரங்கள் ஆகியவற்றின் பிறப்பிடமாக விளங்கும் பெருமையை, மற்றெல்லா நாடுகளையும்விட ரஷ்ய நாடு மட்டும் எவ்விதம் பெற்றது?

ஏனெனில், ஏகாதிபத்தியத்தின் மேற்கண்ட முரண்பாடுகள் அனைத்துக்கும் கேந்திர மையமாக விளங்கிற்று ரஷ்ய நாடு.

ஏனெனில், மற்றெந்த நாட்டையும் விட ரஷ்யாவில் புரட்சிகரமான நிலைமைபக்குவப்பட்டிருந்தது. அதனால் அது ஒன்று மட்டுமே மேற்கண்ட முரண்பாடுகளை புரட்சிகரமான வழியில் தீர்க்கக் கூடிய நிலையில் இருந்தது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்