மோடி கும்பலின் "ஆரிய மாடலு"க்கு "திராவிட மாடல்" மாற்றல்ல.! பாண்டியன்

 என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை யானது தோழர் ஞானம் அவர்களை ஆசிரிய ராகக் கொண்ட சமரன் இதழ்-1, மலர்-5, பிப்ரவரி - 2023ல் வெளியாகியுள்ளதை இலக்கு இங்கு இலக்கின் வாசகர்களுக்காகப் பதிவிடுகிறது. மேலும் இந்த கட்டுரையைப் பற்றிய தனதுகருத்தையும் இலக்கு இங்கே விவாதத் திற்காகப் பதிவிடுகிறது இதன் மீது தோழர்கள் தங்களதுவிவாதத்தை முன்னெடுக்குமாறு இலக்கு கோருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் - வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளானஆதிக்க சாதி வெறியர்களை இரு மாதமா கியும் தமிழக அரசு இதுவரை கைது செய்யவில்லை.

அதற்கு மாறாக, விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தியும், ஆசைகாட்டியும், செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து பழியை அவர்கள் மீதே சுமத்த ஸ்டாலின் அரசின் காவல்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் மூலம் ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இடைநிலைச் சாதியினரின் வாக்குவங்கியைக் குறிவைத்து காய்நகர்த்தி வருகிறது. ஸ்டாலின் அரசு!. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

இன்னொருபுறம் தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்தை தணிக்கவும் வாக்கு அறு வடைக்காகவும் "சமூகநீதி" நாடகமாடி வருகிறது ஸ்டாலின் அரசு. குறிப்பாக அங்குள்ள டீக்கடையில் இரட்டைக் குவளை முறையைப் பயன்படுத்திய டீக்கடைக் காரரைக் கைதுசெய்துஇரட்டைக்குவளை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக விளம்பரப்படுத்திக் கொண்டது. ஆனால் அவர் மீது வன்முறைத் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கவில்லை.

தற்போது அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இப்போது அங்குள்ள டீக்கடைமளிகைக்கடை உள்ளிட்ட எந்தக் கடைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்க ஆதிக்க சாதி வெறியினர் மறுக்கின்றனர். தீண்டாமைக் கொடுமை முன்னிலும் கடுமையாகத் தொடர்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என "சாமியாடிய"ஆதிக்கசாதிவெறிப் பெண்ணை கைது செய்தும், தாழ்த்தப்பட்ட மக்களை அந்தக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும், காவல் அதிகாரியும் ஏற்பாடு செய்தனர். ஆனால் அதுவும் ஒருநாள் கூத்தாக முடிந்துபோனது. கோவில் கழுவப் பட்டு "தீட்டு" கழிக்கப்பட்டுள்ளது. தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நடவடிக்கை மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட விருப்பமாக வெளிப்பட்டுள்ளதே தவிர, சமூகநீதி பேசும் ஸ்டாலின் அரசின் உளப்பூர்வமான நடவடிக்கையாக இல்லை.

சாதி ஆதிக்க வெறியர்களின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்ச ஸ்டாலின் அரசு மறுப்பது ஏன்?. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாததால் டீக்கடைக்காரர், "சாமியாடிய பெண்" ஆகிய இருவருமே ஜாமீனில் விடுதலையாகிவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னிலும் அதிகமான புறக்கணிப்புக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பாய்கிறது ஸ்டாலின் அரசு.

அவமானச் சின்னமான மலம்கலந்த குடி நீர்த்தொட்டியை உடைத்து நொறுக்காமல், அதையே சுத்தப்படுத்தி, புதிய குழாய்கள் பொருத்தி நீர்வழங்க ஏற்பாடு செய்துள்ளதின் மூலம் "இரட்டைக் குடிநீர்த் தொட்டி" முறையைத் தொடர்வதற்கு அனுமதியளித்து தமிழக அரசே வன்கொடு மையைத் தொடர்கிறது. உடனடியாக அந்தக் குடிநீர்த் தொட்டியை உடைத்து நொறுக்கி அனைத்துப் பிரிவினரும் ஒரே நீர்த் தொட்டியைப் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனித்தொட்டி முறை தீர்வாகாது.

இந்த மனிதநேயமற்ற கொடும் செயலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தவிர வேறு எந்நவொரு கட்சியும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை. இத்தனைக்கும் இறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்.

நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என "பிலிம்" காட்டும் பா.ஜ.க., தாழ்த்தப்பட்டசாதி இந்துக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறி இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கிறது.

அப்படியிருந்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் அரசு தயங்குகிறது. காரணம் வாக்குவங்கி அரசியல்தான்.

தவிர, திராவிட மாடல் சமூகநீதி என்பது அனைவரையும் உள்ளடக்கியது அல்ல. பார்ப்பனர் அல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத இடைநிலைச் சாதிகளின் ஆதிக்க சக்திகளுக்கானதே. அதனால்தான் பிற்பட்ட சாதி ஆதிக்க வெறியர்களைக் கைதுசெய்யத் தயங்குகிறது.

திராவிட மாடல் என்று பேசுவதெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதற் காகத்தான். அதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது. மறுபுறம் மோடி - அமித்ஷா கும்பலின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல் படுத்துவது என்பதே ஸ்டாலினின் திராவிட மாடல்.

ஏகாதிபத்தியக் கார்ப்பரேட்டுகளின் முதலீடு களுக்காக "எல்லா" வகையான வசதி களையும் சலுகைகளையும் செய்து கொடுக்கிறது.

மோடியின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை திறம்படச் செயல்படுத்துகிறது.

மின்சாரத் திருத்தச் சட்டத்தை செயல்படுத்தி மின்கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி யுள்ளது.

மோடியின் தேசியக் கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை ஏற்பதில் தவறில்லை என்று கூறிக்கொண்டு "இல்லம் தேடிக் கல்வி" "நமது ஊர் நமது பள்ளி" என நாமகரணம் சூட்டிமோடியின் கொள்கைகளைச் செயல் படுத்துகிறது.

இவ்வாறு மோடியின் கார்ப்பரேட் நலன்களுக்கான கொள்கைகளைச் செயல் படுத்துகிற அதே நேரத்தில் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதில் மோடியைப் பின்தொடர்கிறது.

வேங்கை வயல் மலம் கலந்த குடிநீர்த் தொட்டியை இடிக்கக் கோரி ஊர்வலம் நடத்துவதைதடுக்க கம்யூனிஸ்ட் கட்சியினரை முன்கூட்டியே கைதுசெய்து அச்சுறுத்தியது.ஊர்வலம் சென்றவர்களை வழியிலேயே கைதுசெய்தது ஸ்டாலின் அரசு.

குஜராத் கலவரத்தில் மோடி கும்பலின் பங்கு குறித்த BBC யின் ஆவணப்படத்தை திரையிடுவோரைத் தடுத்ததோடு அதனை செல்போனில் பார்த்தவர்களை குறிப்பாக சி.பி.எம். இன் கவுன்சிலரை கைதுசெய்து மோடி கும்பலின் காவி பயங்கரவாதத்தைப் பாதுகாத்தது.

இவ்வாறு கார்ப்பரேட் காவிப் பாசிச மோடி கும்பலின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் ஜனநாயக விரோத பாசிச ஒடுக்குமுறைகளையும் "திராவிட மாடல்" வழியில் செயல்படுத்துகிறது ஸ்டாலின் அரசு.

பா.ஜ.க. வின் பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறுவோர், அக்கூட்டணியில் பிரதானமாக அங்கம் வகிக்கும் காங்கிரசை மறந்துவிடுகின்றனர்.

காங்கிரசும் ஏகாதிபத்திய நிதிமூலதனத் துக்குச் சேவை செய்யும் ஆளும்வர்க்கக் கட்சிதான்;மக்கள் விரோத உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திய கட்சிதான். இப்போதும் அக்கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிதான்.

மென்மையான இந்துதுவத்தை ஆதரிக்கும் கட்சிதான்; காவிக் காடையர்கள் பாபர் மசூதியை இடித்தபோது பாதுகாப்புக் கொடுத்த கட்சிதான்; காவி பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாத கட்சிதான்.

மாநில அதிகாரங்களைப் பறித்து மத்தியிலே குவித்து தேசிய இனங்களை ஒடுக்குவதிலும் இந்தி மொழியைத் திணிப்பதிலும் பா.ஜ.க. வுக்கு குறைந்தது அல்ல.

ஊபா (UAPA) போன்ற அடக்குமுறைக் கருப்புச் சட்டங்களுக்கு அஸ்திவாரம் போட்டதும் காங்கிரஸ் கட்சியே.

அப்படிப்பட்ட காங்கிரசை முன்னிறுத்தும் தி.மு.க. கூட்டணியால் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்த முடியாது. மாறாக கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யஇன்னொரு பாசிச அணி ஆட்சிக்கு வரலாம்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்க காலம் தொட்டு ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்து, பார்ப்பனர்கள் அல்லாத, வைசிய, சத்திரிய, சூத்திர வர்ணங்களின் இடைநிலைச் சாதி ஆதிக்க சக்திகளின் நலன்களுக்காகவே "திராவிட மாடல்" செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களாகிய பஞ்சமர்களைப் பற்றிய அக்கறை யற்றதுதான் "திராவிட மாடல்".

அந்த திராவிட - மாடல் - சமூகநீதிதான் வேங்கைவயலில் இடைநிலைச் சாதி ஆதிக்க வெறியர்களைப் பாதுகாக்கிறது. என்பதுதான் "ஆரிய" மாடலுக்கு "திராவிட" மாடல் மாற்று அல்ல என்கிறோம்.

இத்தகைய வன்கொடுமைகள் இறையூர் வேங்கை வயலில் மட்டுமல்ல, தமிழகத்தில் 341 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தலைவிரித் தாடுகின்றன.

இது குறித்து முறையான நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதிக்க சாதி வெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து தண்டிக்க வேண்டுமெனக்கோரி அனைத்து சாதி உழைக்கும் மக்களும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு, தொடர்ந்து போராடுவது ஒன்றே வழி.

இலக்கின் கருத்து:-

திரவிட மாடல் என்ற பெயரில் சமூகநீதிக் காவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசானது உண்மையில் சமூகநீதிக்கான அரசு இல்லை என்ற உண்மையை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது சரியானதே.

தி.மு.க. கட்சியின் கொள்கையானது பார்ப்பனர் அல்லாத, மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாத பிற சாதியைச் சேர்ந்த சுரண்டும் ஆதிக்க சக்திகளின் நலன்களை பிரதிநித்துவப் படுத்தும் கொள்கையே தி.மு.க.வின் கொள்கை என்று இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது. இது சரியானதே ஆகும். உழைக்கும் மக்களை அவர்கள் எந்த சாதிப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் பிற சாதியைச் சேர்ந்தவர்க்கங் களை ஆதரிப்பதுதான் தி.மு.க.வின் கொள்கைஎன்பதை தெளிவாக இந்த கட்டுரை முன் வைத்திருக்க வேண்டும் என்று இலக்கு கருதுகிறது.

வேங்கைவயல் கிராமத்தில் நடந்த வன்கொடுமைக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தவறிவிட்டது என்ற உண்மையை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்தியிருப்பது சரியானதாகும்.

மலம் கலந்த தண்ணீர்த் தொட்டியை இடித்துத் தள்ளாமல் அதனை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவதற்கான நடைமுறையை இந்த அரசு கையாளுவதன் மூலம் டீக்கடைகளில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு தனிக்குவளை என்ற தீண்டாமை கொள்கையை கிராமங்களி லுள்ள சுரண்டும் ஆதிக்க சக்திகள் செயல்படுத்துவது போன்ற அதே பிற்போக்கு கொள்கையை இந்த அரசே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொட்டி என்ற பிற்போக்கு கொள்கையை செயல்படுத்தி தீண்டாமையை இந்த அரசே ஊக்குவிக்கிறது என்று இந்த தி.மு.க. அரசை அம்பலப்படுத்தியுள்ளது சரியானதே ஆகும்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் சாதி தீண்டாமையை வலியுறுத்தும் சுரண்டும் ஆதிக்க சக்திகளின் மீது நடவடிக்கை எடுத்து தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து கோவிலுக்குள் சென்று கடவுளை வழிபடுவதற்கு வழி ஏற்படுத்தாமல் நாடகம் ஆடும் இந்த அரசை அம்பலப்படுத்தியிருப்பது சரியானதே ஆகும்.

இதன் மூலம் இந்த அரசானது தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்காது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது சரியானதே.

வேங்கைவயல் கிராமத்தில் நடந்த இந்த கொடுமையைக் கண்டித்து கம்யூனிஸ்டு களும், விடுதலை சிறுத்தைகள் மட்டுமே போராடினார்கள். பிற அரசியல் கட்சிகள் எதுவும் போராடவில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லி பிற அரசியல் கட்சிகளின்பிற்போக்குத் தன்மையை சுட்டிக்காட்டியிருப் பது வரவேற்கதக்கதாகும்.

இந்தியாவை ஆளும் பா.ஜ.க. வினர் எப்போதும் கலகத்தை தூண்டி விடுபவர்கள் இப்பிரச்சனையில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் சாதி ஆதிக்க சுரண்டும் வர்க்கங்களுக்கே ஆதரவாக இருந்தனர் என்பதை அம்பலப் படுத்தியது சரியானதே ஆகும்.

தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகச் சேவை செய்யும் தனியார்மயம், தாராளமயம்,  உலகமயக் கொள்கைகளை செயல்படுத்து வதில் ஒரே கொள்கை உடையவர்கள்தான் என்பதையும் காங்கிரஸ் கட்சிக்கும் இதே கொள்கைதான் என்பதையும் அம்பலப் படுத்தியுள்ளது பாராட்டத் தகுந்ததே.

இந்த கொள்கை ஒற்றுமையின் காரணமா கவே தி.மு.க. அரசானது கார்ப்பரேட் முதலாளி களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப் பட்டு செயல்படுத்தப்படும் பா.ஜ.க. அரசின் கொள்கைகளை தி.மு.க. அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியது சரியானதே ஆகும்.

எனினும் பா.ஜ.க வின் ஆரிய மாடல் பற்றிய கோட்பாட்டை விளக்கியிருந்தால் கட்டுரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று இலக்கு கருதுகிறது.

ஆர்.எஸ்.எஸ். ன் கொள்கை கோட்பாடு என்பது சனாதனமே ஆகும். மக்களை பிறப்பின் அடிப்படையில் வகைப்படுத்துவதுதான் இந்த சனாதனக் கொள்கையாகும். பிறப்பால் ஒருவர் பிராமணன் என்றால் அவன் எவ்வளவு பெரிய கொடியவனாக இருந்தாலும் அவனைஉயர்ந்தவன் என்கிறது சனாதனம். அதேபோல் பிறப்பால் ஒருவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்துவிட்டால் அவர் எவ்வளவு நல்ல தன்மைகள் படைத்தவராக இருந்தாலும் அவர் தாழ்ந்தவராகவும் தீண்டத்தகாதவராக அடையாளப்படுத்துகிறது சனாதனக் கொள்கை. இந்தக் கொள்கை விஞ்ஞானப் பூர்வமானது இல்லை என்று தெளிவாகக் கூறுகிறது மார்க்சியம். இந்த தவறான சனாதனக் கொள்கையைத்தான் பா.ஜ.க.வினர் மக்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கின்றனர். அதன் மூலம் தீண்டா மையை நியாயப்படுத்துகின்றனர்.

இந்தக் கொள்கையை தி.மு.க. மறுத்த போதும் வர்க்கம் என்ற வகையில் பார்ப்பன சாதியல்லாத தாழ்த்தப்பட்ட சாதி அல்லாத பிற சாதியைச் சேர்ந்த சுரண்டும் ஆதிக்க வர்க்கங்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதையே சமூகநீதி என்ற கொள்கையினைப் பின்பற்றி பிற சாதியைச் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்களின் நலன்களுக்காகவே பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. வினர் வெறுமனே தேர்தல் ஆதாயத்திற்கு மட்டுமல்லாமல் அவர்கள் பொதுவாகவே தாழ்த்தப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிட்டு சுரண்டும் ஆதிக்க வர்க்கங்களுக்காகவே பாடுபடுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தவேண்டியது அவசியம் என்று இலக்கு கருதுகிறது. சில சமயங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தி.மு.க. பாடுபடலாம். அது அந்த மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமாகவே இருக்கிறது.

இந்த கட்டுரையில் ஆளும்வர்க்க கட்சிகளை அம்பலப்படுத்தி யிருந்தாலும்,பாதிக்கப்படும்தாழ்த்தப்பட்ட ஏழை உழைக்கும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கும், அவர்கள்சந்திக்கும் கொடுமைகளிலிருந்து விடுதலை அடைவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு தல்களைப் பற்றி இந்த கட்டுரை பேசாமல் விட்டுவிட்டது ஒரு குறையாகவே இலக்கு கருதுகிறது.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் உள்ளிட்ட அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்கும் இந்த அரசியல் கட்சிகளோ அதன் அரசுகளோ எவ்விதமான பாதுகாப்பையும் கொடுக்காது என்பது நடைமுறை உண்மையாகும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தனியாக ஒன்றுதிரண்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சுரண்டும்வர்க்கங்களை எதிர்த்துப் போராட முடியாது. இந்தியாவில் அனைத்து சாதி மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் எண்ணிக்கைதான் 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளார்கள்.இந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடுவதன் மூலமே மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள அனைத்துச் சாதியைச் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்களை போரில் வெல்ல முடியும். மேலும் இத்தகைய ஒற்றுமையின் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தகுந்த பாதுகாப்பை கொடுக்க முடியும். ஆகவே தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஆளும்வர்க்க கட்சிகளையும், ஆட்சிகளையும் நம்பாமல் அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ஓர் அணியில் திரட்டுவோம். மேலும் அனைத்து சாதிகளைச் சேர்ந்த புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவோம். அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுப்போம் உழைக்கும் மக்களை நாடிச் செல்வோம். அணிதிரள்வோம் வெற்றி பெறுவோம் என்று அறைகூவி அழைக்கிறது இலக்கு.

நாம் ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு. ...... பாண்டியன்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்