உழைக்கும் மகளிர் தினத்தினால் நாம் பெறும் படிப்பினைகள்.-தேன்மொழி

 உலக மகளிர் தினம் என்பது பெண்களுக்கு சமயல் போட்டியும் கோலப் போட்டியும்நடத்து வதற்கான நாள் அல்ல. நகையும் சேலையும் அணிந்து பெண்கள் தங்களது அழகை வெளிப்படுத்தும் விழா அல்ல.

உலகில் பல நாடுகளில் உழைக்கும் பெண்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளும் ஒன்றுகூடி தங்களது உரிமைகளுக்காகப் போராடி தியாகம் புரிந்த நாளாகும்.

சோசலிச சமுதாயத்தை உருவாக்கிய மாபெரும் புரட்சிக்கு வழிவகுத்த சோசலிச மகளிர்அமைப்புகளால் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டங்கள் வெடித்த நினைவு நாளாகும்.

உலகம் முழுவதும் இப்போதும் அடிமைத் தனத்திலிருந்து ஓரளவு மீண்டு பெண்கள் முன்னேறியதற்கு வழிவகுத்த நாள்.

இதுவரை நடைபெற்ற பெண்களின் மற்றும் சோசலிசத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங் களை நினைவுகூர்ந்து இனிவரும் காலத்தில் நாம் நடத்தப்போகும் போராட்டங்களைப் பற்றிய திட்டம் வகுக்கும் நாள்.

தற்போதும் மகளிர் சந்தித்துவரும் கொடுமை களை ஒழித்துக்கட்ட சபதம் ஏற்கும் நாள்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது போன்ற காரியங்களில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலுக்கு முதலாளித்துவ தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு சரியான முடிவு கண்டது. இந்த வகையில் முதலாளித்துவ மானது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதாவது பெண்களும் சமூக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. முதலாளிகளின் லாப நோக்கத்திலிருந்தே பெண்களுக்கு தொழிற்சாலைகளில் முதலாளிகள் வேலை கொடுத்தார்கள். அதுவே முதலாளிகளுக்கு எதிராக பெண்கள் போராடும் நிலையை ஏற்படுத்தியது.

பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட பொழுதுதான் அவர்கள் சமூகப் பிரச்சனை களை நேரடியாக எதிர்கொள்ள நேரிட்டது. அதுவரை அவர்களது பிரச்சனைகளுக்கு காரணமாக அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள்தான் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள்,சமூகப் பிரச்சனைகளால் (முதலாளிகளின் சுரண்டலால்) தங்களது கணவர்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படு வதை உணர்ந்தார்கள். ஆகவே இந்த சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதன் மூலமே தங்களது பிரச்சனைகளும் தீரும் என்ற உண்மையை புரிந்துகொள்ளத் தொடங்கி னர். இதற்கு சமூகமானது சோசலிச சமூகமாக மாறுவதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்து பெண்கள் அமைப்பாகத் திரண்டு ஆண் தொழிலாளர்களுடனும் இணைந்து சமூக மாற்றத்திற்காகப் போராட்டங்களை நடத்தினர். இத்தகையப் போராட்டங்கள் எல்லாம் முதலாளித்துவ தொழில்துறை வளர்ச்சிபெற்ற நாடுகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது என்பது வரலாறு.

பெண்கள் சமூக பொருள் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டதால், இதுவரை பெண்களதுபொருளாதாரத் தேவைகளுக் காக அவர்களது கணவன்மார்களை சார்ந்திருக்கும் நிலை முடிவிற்கு வந்தது. அதன் காரணமாகவே பெண்களால் சுதந்திரமாக தங்களது உரிமைக்காகப் போராடுவதற்கு இத்தகைய சுதந்திரமான பெண்களை ஒரு அமைப்பிற்குள் திரட்டுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அந்தப் பெண்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு பக்கம் முதலாளித்துவம் பெண்களுக்கு சமூக உற்பத்தியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது, மறுபக்கம் பெண்களை, கணவர்களை பொருளியலுக்காக சார்ந்திருக்கும் நிலையி லிருந்து விடுவித்தது. இவ்விரண்டும் சேர்ந்து பெண்களை அமைப்பாக்கி சோசலிசத்துக்காக முதலாளிகளை எதிர்த்து போராடுவதற்கு அணிவகுக்கச் செய்தது.

தொழில்துறை முதலாளித்துவம் உருவான போது, நிலப்பிரபுத்துவத்தின் கீழ் பண்ணை யடிமைகளாக இருந்த உழைக்கும் மக்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதே போல வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடக்கும் பெண்கள் அதிலிருந்து வெளியேறி தொழிற்சாலைகளில் ஆண்களோடு இணைந்து, ஆண் பெண் இரு பாலினத் தவரும் சமமாக தொழிலாளர்கள் என்ற வகையில் உழைப்பில் ஈடுபட்டனர்.ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் 16 மணி நேரத்துக்கும் மேலாக தொழிற் சாலைகளில் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதனால் தொழிலாளர் களின் உடல்நிலை மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே தொழிலாளர்கள் மரணமடைந்தார்கள்.

ஒரு பெண் தொழிலாளி 16 மணி நேரத்திற்கும் மேலாக ஆரோக்கியமற்ற சூழலில் வேலை செய்ததால் இளம் வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி பத்திரிக்கையில் வெளிவந்து தொழிலாளர் கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி தொழிலாளர்கள்

தன்னியல்பாக போராடினார்கள். அவர்களது போராட்டம் தொழில்துறையில் முன்னேறிய நாடுகளில் பரவியது.

இந்த சூழலில்தான் 1864 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதிகள் லண்டனில் கூடி காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பல்வேறுவிதமான கருத்து வேறுபாடுகள் கொண்ட சோசலிஸ்டுத் தலைவர்கள் "உலகத் தொழிலாளர்கள் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதுவே "முதல் அகிலம்" என்று அழைக்கப்படுகிறது.

"தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்றும் அதற்காக அனைத்து நாடுகளின் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்" என்றும் 8 மணி நேர வேலை, பணி நிலைமையை மேம்படுத்த வேண்டும், அரசியல் உரிமைகள் தொழிலாளர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் போராட வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு முதலாவது அகிலம் வழிகாட்டியது. அதன் அடிப்படையில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது. அந்தப் போராட்டங்களில் உழைக்கும் மகளிரும் பங்கெடுத்துக் கொண்டனர். ஆனாலும் முதலாம் அகிலத்தில் இணைந்துள்ள தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காரணமாக முதலாம் அகிலம் கலைக்கப்பட்டது.

1886 ஆம் ஆண்டு மே மாதத்தில் 8 மணி நேர வேலைநாள் கோரிக்கையை முன்வைத்து

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.

பலர் கைது செய்யப்பட்டனர். சிலரை அரசாங்கம் தூக்கில் போட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து எங்கெல்சின் தலைமையில் இரண்டாவது அகிலம் உருவானது. இதனை சோசலிஸ்டு அகிலம் என்று அழைக்கப்பட்டது. இந்த அகிலம் தொழிலாளர்களின் நலனுக்காக பல தீர்மானங்களை நிறைவேற்றியது. சிகாகோ தொழிலாளர்களின் போராட்டத்தின் அடிப்படையில் 8 மணி நேர வேலைநாள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைக் காக தொழிலாளர்கள் மே 1 அன்று போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இரண்டாம் அகிலம் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் அடிப்படையில் தொழிலாளர்களின் போராட்டங்கள் எங்கும் பரவியது. இதன் வளர்ச்சிப் போக்கில் சோசலிஸ்டு பெண்கள் இயக்கம் உருவாகி வளர்ந்தது.

அகிலத்தின் தலைவர்கள் 8 மணி நேர வேலைக்கானப் போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கு என்ன காரணம்? தொழிலாளர்கள் 16 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதால், அந்தப் பணியின் காரணமாகவே தொழிலாளர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் என்றும் அதற்கு மேல் அவர்களால் சமூகப் பணி பற்றி சிந்திப்பதற்கோ அதற்காக செயல்படு வதற்கோ அவர்களுக்கு நேரம் இருக்காது. அதன் காரணமாக தொழிலாளர்கள் சமூகப் பணிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது என்பதை தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் நன்கு உணர்ந்து இருந்தார்கள். மேலும், தொழிலாளர்களின் பங்களிப்பு இல்லாமல் எவ்விதமான சமூகப் பணிகளிலும் முன்னேற்றம் இருக்காது என்பதையும் தலைவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே தொழிலாளர்களை சமுதாயத்தைப் பற்றி சிந்திக்க வைக்கவும் அதற்காக செயல்பட வைக்கவும் தொழிலாளர்களுக்கு போதிய நேரம் வேண்டும் என்பதால், அத்தகைய பணிகளை தொழிலாளர்கள் செய்வதற்கு 8 மணி நேரம் தேவை என்றும், மீதி 8 மணி நேரம் தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்குத் தேவை என்றும் மீதியுள்ள 8 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற முடிவை அந்தத் தலைவர்கள் எடுத்து அந்தக் கருத்தை தொழிலாளர்களிடம் பரப்பி 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தைதொழிலாளர்கள் நடத்திட வேண்டுமென தொழிலாளர்களுக்குவழிகாட்டினார்கள்.

இந்த 8 மணி நேரப் போராட்டத்தில் தொழிலாளர்கள் வெற்றி பெற்ற பின்புதான்

தொழிலாளர்களுக்கு சமூகம் பற்றி சிந்திக்கவும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடவும்முடிந்தது. அதே வேளையில் பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் 16 மணி நேர வேலையின் காரணமாக அவர்களால் சமூகப் பணி செய்வதற்கு நேரம்கிடைக்காத நிலைக்கு முடிவு கண்டவுடன் அவர்களும் சமூகப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டனர். அதன் விளைவாகவே ரஷ்யாவில் ஒரு சமூகப் புரட்சி நடத்தப்பட்டது.

அன்றைய தொழிலாளர் வர்க்கங்களின் சூழ்நிலையை அன்றைய தலைவர்கள் நன்கு

புரிந்துகொண்டு 8 மணி நேர வேலைக்காகத் தொழிலாளர்கள் போராட வேண்டும் என்று வழிகாட்டினார்கள். வரலாற்றில் அவ்வப் போது நிலவும் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து தொழிலாளர்கள் சமூக மாற்றத்திற்காக அவர்களின் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் வளர்ப்பதற்குத் தேவையான சரியான வழிகாட்டுதலை தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தொழிலாளர்களிடம் எடுத்துச் சொல்லி வழிகாட்டுவதன் மூலமே, தொழிலாளர்களை சமூக இயக்கத்திற்குள் கொண்டுவந்து அவர்களை போராட வைக்க முடியும். இதுதான் புறநிலை எதார்த்தத் திலிருந்து முடிவெடுக்கும் இயங்கியல் முறையாகும். இத்தகைய இயங்கியல் முறையை அன்றைய கம்யூனிசத் தலைவர்கள் சரியாகக் கையாண்டதன் பயனாகவே ரஷ்யாவில் ஜாரினது எதேச்சிகாரம் ஒழிக்கப்பட்டு தொழிலாளர் களின் ஆட்சி நிறுவப்பட்டது.

இந்த வகையான புறநிலை எதார்த்தத் திலிருந்து முடிவெடுக்கத் தவறிய தலைவர்களின் செயல்பாட்டின் காரணமா கவே தொழிலாளர் இயக்கம் இப்போது இங்கே பின்னடைவை சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

அன்று சமூக இயக்கத்திற்கு தொழிலாளர் களின் பங்களிப்புக்கு தடையாக 16 மணி நேர வேலை இருந்தது. ஆகவே இந்தத் தடையை அகற்ற 8 மணிநேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர் கள் போராட வேண்டும் என்று தொழிலாளர் களுக்கு அன்றைய கம்யூனிஸ்டுத் தலைவர்கள் வழிகாட்டினார்கள். அதன் மூலம்அந்தத் தடைகள் அகற்றப்பட்டு மிகப்பெரு வாரியான தொழிலாளர்களை சமூக நடவடிக் கையில் ஈடுபடுத்தினார்கள்.

ஆனால் தற்போது இந்தியாவிலுள்ள தொழிலாளர்களின் நிலைமை என்ன?

மிகப்பெருவாரியான தொழிலாளர்கள் வேலையற்றோராக உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் காலையில் எழுந்து இரவு படுக்கப் போகும்வரை அவர்களது உணவுப் பிரச்சனை என்ற அடிப்படை பிரச்சனை களிலேயே கவனம் முழுவதும் சென்று விடுகிறது.

காரல்மார்க்ஸ் குறிப்பிட்டது போல ஒருவன் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் முன்பு அவன் சாப்பிட்டாக வேண்டும் என்ற உண்மைக்கு ஏற்ப இந்த ஏழை உழைக்கும் மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனை களைத் தீர்க்காமல் அவர்களால் சமுதாயத் தைப் பற்றி சிந்திக்க முடியுமா? அவர்களால் சமூக நடவடிக்கையில் ஈடுபட முடியுமா? இந்த எதார்த்த உண்மையை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தொழிலாளர்களுக்காகப் பாடுபடும் தலைவர் களும் புரிந்துகொள்ளவில்லை. இந்த காரணத்தால் பெருவாரியான உழைக்கும் மக்கள் மிகக்கடுமையான துண்பத்தில் இருக்கும் போதும், அந்த துண்பங்களி லிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றி சிந்திக்கவும் அதற்காக ஒரு இயக்கத்தினுள் தன்னை ஈடுபடுத்தி போராடவும் முன்வரவில்லை. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தொழிலாளர்கள் எந்தகொள்கையின் அடிப்படையில் எவ்விதமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு வழிகாட்டி அணிதிரட்டாமல் எவ்விதமான போராட்டங்களுக்கும் தொழிலாளர்கள் வருவதில்லை என்று தொழிலாளர்களின் மீதே பழிபோடும் தலைவர்களைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம்.

மிகப்பெருவாரியான தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சனையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற பிரச்சனைகள் குறைந்தபட்சம் தீர்க்கப்படாத காரணத்தால் உழைக்கும் மக்களில் பலர் தற்கால முதலாளித்துவ கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு பணத்தைப்பெற்றுக் கொண்டும், அவர்கள் போடும் உணவை உண்டுகொண்டும் சிலர் மது வகைகளை வாங்கிக்கொண்டும் முதலாளித்துவ கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வதை நாம் பார்க்கிறோம். தேர்தல்காலங்களில் முதலாளித்துவ கட்சிகள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உழைக்கும் மக்கள் ஓட்டு போடுவதையும் நாம் பார்க்கிறோம்.

இத்தகைய தவறுகளை ஏழை உழைக்கும் மக்கள் செய்வதற்கான அவர்களது வாழ்நிலையைப்

பார்க்காமல் அவர்களிடம் ஒழுக்கம் இல்லை என்ற குற்றச்சாட்டை இது போன்ற பிரச்சனைகள் இல்லாத குட்டிமுதலாளித்துவ வாதிகள் சொல்வது புறநிலை எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத நிலையி லிருந்தே வருகிறது. வாழ்நிலைதான் ஒருவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற மார்க்சியக் கோட்பாட்டை புரிந்து கொள்ளாத நிலையைத்தான் இது காட்டுகிறது. ஒரு புரட்சிகர இயக்கமும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமானால் உழைக்கும் மக்கள் அன்று அவர்கள் கூலி வேலைக்கு போகாமலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முன்வருவதை நாம் பார்க்கிறோம். பிற முதலாளித்துவ கட்சிகளின் கூட்டத்திற்கு செல்வதற்கு பணத்தை எதிர்பார்ப்பதைப் போல் புரட்சிகர இயக்கங்களிடம் பணத்தை எதிர்பார்ப்ப தில்லை.

ஆனாலும் போக்குவரத்திற்காகவும் உணவிற் காகவும் பணத்தை செலவழிப்பதற்கு அவர்களிடம் பணம் இருக்காது. ஆகவே இது போன்ற செலவுகளை ஒரு புரட்சிகர அமைப்பு தான் செலவிட வேண்டும். இத்தகைய சூழலில் ஒரு புரட்சிகர இயக்கத்திடம் தேவையான பணம் இருந்தால் மட்டுமே ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கத்தை செயல் படுத்த முடியும் என்ற சூழல்தான் உள்ளது. இந்தச் சூழலை முறியடித்து உழைக்கும் வர்க்க இயக்கத்தை முன்கொண்டு செல்வது எப்படி? என்பது நம்முன் உள்ள கேள்வியாகும்.

ஆகவே மிகப்பெருவாரியான உழைக்கும் மக்கள் சந்தித்துவரும் அடிப்படை பிரச்சனைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலமே அவர்களிடம் சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கும், சமூகத்தை மாற்றி யமைப்பதற்கான இயக்கத்தில் ஈடுபடு வதற்கான முன்முயற்சியையும் ஆர்வத்தை யும் அவர்களிடம் ஏற்படுத்த முடியும். அன்று எப்படி 16 மணிநேர வேலை தொழிலாளர் களின் சிந்தனைக்கும் அவர்கள் அமைப்பாவதற்கும் தடையாக இருந்ததோ, அதே போல இன்றைய காலத்தில் உழைப்பாளர்களின் வறுமை, பசி, பட்டினி என்பதுதான் உழைக்கும் மக்கள்அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் தடையாக உள்ளது. இந்த தடைகளிலிருந்து உழைக்கும்மக்கள் மீள்வதன் மூலம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்மையாகஇருக்கும் அதே வேளையில் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடி சமூகத்தை மாற்றும்செயலில் ஈடுபடுவதால் சமூகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

ஆகவே அன்று தொழிலாளர்களின் தலைவர்கள் 8 மணி நேர வேலைக்காகப் போராடியதற்கு வழிகாட்டியது போல, இன்றைய உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வேலை வேண்டும் என்றும் வேலை கிடைக்கும்வரை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும் என்று உழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இதற்கு மாறாக தற்போதைய இடதுசாரி அமைப்புகளில் பெருவாரியாக உறுப்பினர் களாகஇருப்பது அடிப்படைத் தேவைகளை குறைந்தளவு பூர்த்தி செய்து வாழும் நடுத்தர வர்க்கப் பிரிவினர்கள்தான் உள்ளனர். இவர்களுக்கு பசி, பட்டினி போன்ற பிரச்சனைகள் இல்லை.

இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற போர்க்குணம் கொண்டவர்களாகவும் இவர்கள் இல்லை. இத்தகைய வர்க்கப் பிரிவினரை உழைக்கும் வர்க்கம் நம்புவதற் கும் தயாரில்லை.

இத்தகைய சூழலில் போர்க்குணமுள்ள உழைக்கும் வர்க்கங்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களை அமைப்பாக்காமல் இன்றை இடதுசாரித் தலைவர்களால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது.

ஆகவே உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அனைவருக்கும் வேலை வேண்டும்.

வேலை கிடைக்கும்வரை நிவாரனம் வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில்

உழைக்கும் மக்களைத் திரட்டி போராடுவோம். இதைத்தவிர வேறு வழியில்லை என்றே நான் கருதுகிறேன். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் விவாதிப்போம்.

............ தேன்மொழி.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்