சமரசங்கள் குறித்து - லெனின். பகுதி - 1. பாண்டியன்

 என்னுடன் உரையாடுகையில் தோழர் லான்ஸ்பரி தொழிலாளர் இயக்கத்தில் பிரிட்டீஷ் சந்தர்ப்பவாதத் தலைவர்களுடைய பின்வரும் வாதத்தை விசேஷமாய் வலியுறுத்தினார்.

போல்ஷ்விக்குகள் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். உதாரணமாய், எஸ்தோனியாவுடனான சமாதான ஒப்பந்தத் தில் மரச் சலுகைகளுக்கு ஒத்துக்கொண்டனர். அப்படியானால், பிரிட்டீஷ் தொழிலாளர் இயக்கத்தின் மிதவாதத் தலைவர்கள் முதலாளிகளுடன் செய்துகொள்ளும் சமரசங் களும் இதே அளவுக்கு நியாயமானவையே.

பிரிட்டனில் பரவலாய் அடிபடும் இந்த வாதம் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தென்றும், இதைப்பரிசீலனை செய்வது அவசர அவசியமானதென்றும் தோழர் லான்ஸ்பரி கருதுகிறார்.

இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முயலுகிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆதரவாளர் முதலாளிகளுடனோ முதலாளித்துவ வர்க்கத் துடனோ சமரசங்கள் செய்துகொள்ளலாமா?

இதுதான் மேற்கூறிய வாதத்துக்கு அடிநிலையாய் இருக்கும் கேள்வி என்பது தெளிவு. ஆனால் இந்தப்பொதுப்படையான வழியில் இக்கேள்வியை எழுப்புவதானது கேட்ப்பவரின் அளவு கடந்த அரசியல் அனுபவமின்மையையும் அரசியல் உணர்வில் அவருடைய தாழ் நிலையையும் காட்டுவதாக வோ, வழிப்பறி, கொள்ளை, மற்றும் முதலாளித்துவ வன்முறையின் ஏனைய ஒவ்வொரு வகையும் நியாயமே என்கிற தமது நிலையை மூடிமறைப்பதற்காக குதர்க்க வாதத்தில் இறங்கும் அவருடைய கயமையைக் காட்டுவதாகவேத்தான் இருக்கிறது.

உண்மையில், பொதுப்படையான இந்தக் கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிப்பது அபத்தமே ஆகும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆதரவாளர் முதலாளிகளுடன் சமரசங்கள் அல்லது ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாம் தான். எல்லாம் எவ்வகையான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது, எந்த நிலைமைகளில் செய்து கொள்ளப்படுகிறது என்பதையே பொறுத்திருக்கிறது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் நியாயமான ஒப்பந்தத்துக்கும் (இதே கண்ணோட்டத்தில்) துரோகமான, வஞ்சக மான ஒப்பந்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டை இதில், இதில் மட்டுமே தான்காண முடியும், காணவும் வேண்டும்.

இதைத் தெளிவுபடுத்த முதலில் மார்க்சியத்தின் மூலவர்களுடைய வாதத்தி னை நினைவுபடுத்துகிறேன்; பிறகு தெட்டத் தெளிவான எளிய உதாரணங்கள் சிலவற்றைத் தருகிறேன்.

மார்க்சையும் எங்கெல்சையும் காரணமின்றி நாம் விஞ்ஞான சோசலிசத்தின் மூலவர்களாய் கருதவில்லை. எல்லா வாய்வீச்சுக்கும் அவர்கள் தீராப் பகைவர்களாய் இருந்தவர்கள். சோசலிசத்தின் பிரச்சனைகள் (சோசலிசப்போர்த்தந்திரப் பிரச்சனைகளும் அடங்கலாய்) விஞ்ஞான வழியிலேயேதான் எடுத்துரைக்கப்பட வேண்டுமென்று அவர் கள் போதித்தனர். கடந்த நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் கம்யூனிலிருந்து வெளியே ஓடியவர்களான பிரெஞ்சுப் பிளாங்கியவாதிகளின் புரட்சிகர அறிக்கையைப் பகுத்தாய்ந்தபோது எங்கெல்ஸ் "சமரசங்கள் கூடவேகூடாது" என்று அவர்கள் பெருமையாய்ப் பிரகடனம் செய்தது வெற்றுப் பேச்சே ஆகுமென்று தெட்டத் தெளிவாய் அவர்களிடம் கூறினார். சமரசங்கள் செய்துகொள்ளும் கருத்தையே நிராகரித்து விடக் கூடாது. மிகவும் புரட்சிகரமான வர்க்கத்தின் மிகவும் புரட்சிகரமான கட்சியும்கூட சூழ்நிலைமையின் நிர்பந்தத் தால் சில சமயம் சமரசங்கள் செய்து கொள்வது அத்தியாவசியமாகிவிடுகிறது. எல்லா சமரசங்களுக்கு இடையிலும் புரட்சிகரப் போர்த்தந்திரத்தையும், நிறுவனத்தையும், தொழிலாளி வர்க்கத்தின், அதன் நிறுவன ஒழுங்கமைப்பு பெற்ற முன்னணிப் படையான கம்யூனிஸ்டுக் கட்சியின் புரட்சிகர உணர்வையும், வைராக்கியத்தையும், தயார் நிலையையும் பாதுகாத்துக் கொள்ளவும் பலப்படுத்தவும் உருக்கு உறுதியாக்கிக் கொள்ளவும் வளர்த்துச் செல்லவும் முடிகிறது என்பதே இங்குள்ள பிரச்சனையாகும்.

மார்க்சின் போதனைகளுடைய அடிப்படைக் கூறுகளை அறிந்த எவரும் இந்தப் போதனைகளின் முழுமொத்தத்திலிருந்து தவிர்க்க முடியாதபடி இந்த முடிவினைத்தான் வந்தடைந்தாக வேண்டும். ஆனால் பிரிட்டனில் வரலாற்றுக் காரணங்கள் பலவற்றின் விளைவாகவும் மார்க்சியமானது சார்ட்டிஸ்டு இயக்கத்துக்குப் பிற்பாடு (பல வழிகளிலும் இந்த இயக்கம் மார்க்சியத்துக் கான தயாரிப்பாகவும், மார்க்சியத்துக்கு முன்பு "இறுதி முடிவுக்கு ஒரு படி குறைவான" தாகவும் இருந்தது.) (குறிப்பு:- சார்ட்டிஸ்டு இயக்கம் - ஆங்கிலேயத்தொழிலாளர்களின்வெகுஜனப் புரட்சி இயக்கம்; மிகக் கடினமான பொருளாதார நிலைமைகள், அரசியல் உரிமை கள் இல்லாத நிலை இவற்றின் காரணமாய் எழுந்தது. மக்கள் உரிமைச் சாசனம் (சார்ட்டர்) கோரியதால் இந்த இயக்கம் இப்பெயரைப் பெறலாயிற்று. 1830 ஆம் ஆண்டுகளின் பிற்பாதியில் மாபெரும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுடன் இந்த இயக்கம் ஆரம்பமாகி சிற்சில இடைவெளிகள் விட்டு 1850 ஆம் ஆண்டுகளின் ஆரம்பப் பகுதிவரை நடைபெற்றது முரணற்றப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத் தலைமையும் தெளிவான வேலைத்திட்டமும் இல்லாததே சார்ட்டிஸ்டு இயக்கத்தின் தோல்விக்கான பிரதான காரணம்).தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள் இவற்றின் சந்தர்ப்பவாத, அரை- முதலாளித் துவத் தலைவர்களால் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால், பரிசீலனையிலுள்ள கருத்தோட்டத்தின் மெய்பொருளை எல்லோ ரும் அறிந்த சர்வசாதாரண, அரசியல், பொருளாதார வாழ்க்கையின் உண்மைகளிலி ருந்து எடுக்கப்பட்ட பொருத்தமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்க முயலுகிறேன்.

முன்னொருமுறை என்னுடைய பேச்சுக்களில் ஒன்றில் நான் கொடுத்த ஓர் உதாரணத்திலிருந்து தொடங்குகிறேன்.

(குறிப்பு:- லெனின் முன்னொருமுறை பேசிய பேச்சு - "சுதந்திரம் சமத்துவம் ஆகிய முழக்கங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றுதல்" என்னும் தலைப்பில் முதலாவது அனைத்து ரஷ்ய முதியோர் கல்விக் காங்கிரசில் நிகழ்த்திய சொற்பொழிவைப் பார்க்கவும் - லெனின் நூல்திரட்டு தொகுதி 38, பக்கங்கள் 341 - 42) ஆயுதங்கள் கொண்ட கொள்ளைக் கூட்டத்தினர் நீங்கள் செல்லும் காரைத் தாக்குவதாய் வைத்துக்கொள்வோம். உங்கள் பொட்டுக்கு நேராய் கைத்துப்பாக்கியை வைத்ததும் உங்கள் காரையும் பணத்தையும் ரிவால்வாரையும் நீங்கள் கொள்ளைக் கூட்டத்தினரிடம் ஒப்படைத்துவிடுவதாகவும், கொள்ளைக்காரர்கள் இந்தக் காரையும் பிறவற்றையும் உபயோகித்து மேலும் சில கொள்ளைகள் நடத்துவதாகவும் வைத்துக் கொள்வோம்.

இது வழிப்பறிக்காரர்களுடன் செய்து கொள்ளப்படும் ஒரு சமரசமே, அவர்களுட னான ஓர் ஒப்பந்தமே என்பதில் சந்தேகமில்லை; கையொப்பம் இடப்படாமல் மௌனமாமாய் செய்துகொள்ளப்பட்டது என்றாலும் திட்டவட்டமான ஒப்பந்தமே ஆகும். "கொள்ளைக்காரர்களே, என் காரையும் ஆயுதத்தையும் பணத்தையும் உங்களுக்குத் தருகிறேன், உங்களுடைய சகவாசத்திலிருந்துஎன்னை விட்டுவிடுங்கள்."

வழிப்பறிக்காரர்களுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்துகொண்ட ஆளைக் கொள்ளையில் உடந்தையாக இருந்தார், ஒப்பந்தம் செய்து கொண்டவரிடமிருந்து பெற்ற கார், பணம், ஆயுதம் இவற்றின் துணை கொண்டு கொள்ளைக் கூட்டத்தினர் மூன்றாவது ஆட்க்கள் மீது தாக்கி நடத்திய கொள்ளையில் உடந்தையாக இருந்தார் என்று சொல்வீர்களா?

இல்லை, சொல்லமாட்டீர்கள்.

சின்னஞ்சிறு விவரம் வரை முற்றிலும் தெளிவாகவும் சுலபமாகவும் விளங்கும் விவகாரம் இது.

வேறொரு வகை சூழ்நிலையில் கொள்ளைக்காரர்களிடம் காரையும் பணத்தையும் ஆயுதத்தையும் பேசாமல் ஒப்படைப்பதானது பகுத்தறிவுடைய எவராலும் கொள்ளையில் உடந்தையாய்க் கொள்ளப்படும் என்பதும் இதே போலத் தெளிவு.

முடிவு தெளிவாய் விளங்குகிறது; பொது வாகப் பேசுமிடத்து, கொள்ளைக்காரர் களுடன் சில சமயம் ஒப்பந்தங்கள் அவசிய மாகவும் அனுமதிக்கப்படக் கூடியவையா கவும் இருக்கலாம் என்ற கருத்தியலான நிர்ணயிப்பின் அடிப்படையில் கொள்ளை யில் ஒருவர் உடந்தையாய் இருந்திருக்க முடியாதென தீர்ப்பளிப்பது எவ்வளவு அபத்தமானதோ, அதே அளவுக்கு அபத்தமானதுதான் கொள்ளைக்காரர் களுடனான எல்லா ஒப்பந்தங்களையும் அல்லது சமரசங்களையும் நிராகரிப்பதும்.

இனி ஓர் அரசியல் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.... .(கையெழுத்துப் பிரதி இத்துடன் நின்றுவிடுகிறது.)

லெனின் - நூல் திரட்டு தொகுதி 40, 1920, மார்ச் - ஏப்ரலில் எழுதப்பட்டது.

எமது விளக்கம்

ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்திய போல்ஷ்விக் கம்யூனிஸ்டுக் கட்சியானது முதலாளித்து வர்க்கங்களுடன் அதாவது முதலாளித்துவ கட்சிகளுடன் பல சமயங்களில் சமரசங்கள் செய்துள்ளார்கள். ஆகவே பிற கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இது போன்ற சமரசங்கள் செய்துகொள்வது நியாயமானதே என்ற கேள்வி எழுந்த போது, அதற்கு லெனின் கொடுத்த பதில்தான் மேலேகண்ட இந்த கட்டுரையாகும்.

இந்தக் கேள்விக்கு பொதுப்படையாக பதில் கொடுப்பது சரியானது அல்ல என்றும்பொதுவாக சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியது தவறல்ல, அது அவசியமும் கூட என்றாலும், குறிப்பான பிரச்சனையில் ஒரு சமரசம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்தானா? என்பதை குறிப்பான சூழலிருந்தே முடிவு செய்ய வேண்டும் என்றும்,

அதாவது புரட்சிகர இயக்கத்தின் நிகழ்ச்சிப் போக்கில் அகச் சூழலையும் அதாவது கட்சி மற்றும் போராடும் வர்க்கங்களின் சூழலையும், புறச் சூழலையும் அதாவது எதிரிகள் மற்றும் எதிரிகளோடு தொடர்புள்ள பிற வர்க்கங்களின் சூழலையும் பகுத்து ஆராய்ந்து சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்படியே சமரசம் செய்ய வேண்டுமானால் என்னவகையான சமரசம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பாக முடிவு செய்ய வேண்டும் என்றும், இத்தகைய முடிவுகளை குறிப்பாக பிரச்சனைகளை எதிர்நோக்கும் தொழிலாளி வர்க்க கட்சியால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்கிறார் லெனின். ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது இந்தப் பிரச்சனையில் சரியான முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றிபெறும். தவறாக முடிவெடுத்து செயல்பட்டால் தோல்வியடையும்.

முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்ளலாம் என்று லெனின் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி கண்ணைமூடிக்கொண்டு எவ்விதமான பகுப்பாய்வும் செய்யாமல் முதலாளித்துவ கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையை சிலர் பின்பற்றுகிறார்கள். அது தவறானது என்பதை லெனின் சொல்லியிருக் கிறார் என்பதை இவர்கள் பொருட்படுத்துவ தில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் நியாயமான சமரசங்களுக் கும், அதே பாட்டாளிவர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் துரோகமான மற்றும் வஞ்சகமான சமரசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இவர்கள் காணத் தவறுகிறார்கள், அல்லது மூடிமறைக்கிறார் கள்.

மார்க்சிய ஆசான்களான மார்க்சும் எங்கெல்சும், சோசலிசம் பற்றிய பிரச்சனை யாக இருந்தாலும் சரி, நமது போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, நாம் எப்போதும் விஞ்ஞானத்தின் துணைகொண்டே செயல்பட வேண்டும் என்று போதித்தார்கள். இடது தீவிரவாதிகளான பிளாங்கிஸ்டுகள் எந்த வகையான சமரத்திலும் கம்யூனிஸ்டுகள் ஈடுபடக் கூடாது என்று வாதம் செய்த போது அதனை எங்கெல்ஸ் மறுத்தார். சில சமயம் நிர்பந்தத்தின்காரணமாகவே கம்யூனிஸ்டுகள் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியதுஅவசியமாகிவிடுகிறது என்றும் கம்யூனிஸ்டுக் கட்சியைப் பாதுகாக்கவும் உழைக்கும் மக்களைப் பாதுகாக்கவும், கட்சியின் திட்டவகைப்பட்ட போர்த்தந்திரங் களைப் பாதுகாக்கவும், மக்களின் உணர்வு நிலைகளைப் பாதுகாத்து உயர்த்தவும் மொத்தத்தில் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களிலிருந்து சமரசங்கள் செய்து கொள்வது, புரட்சிகரமான போராட்டங்களி லிருந்து பின்வாங்குவது போன்ற முடிவுகளை எடுத்து செயல்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும் என்றார் எங்கெல்ஸ்.

உதாரணமாக தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விவசாயி களின் ஆயுதப் போராட்டங்கள் நடத்தப்பட்டு பல வெற்றிகளை அந்த விவசாயிகள் அடைந்தனர். அந்தப் போராட்டத்தை ஒடுக்க நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இராணுவத்தை ஏவி போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தபோது கம்யூனிஸ்டுகள் அந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கி நேரு அரசுடன் சமரசம் செய்துகொண்டார்கள் அது சரியானதே. ஆனால் இத்தகைய பின்வாங்குதலின் போது தனது லட்சியத்தை கைவிடாமல் பின்வாங்க வேண்டும் என்ற லெனினிய வழிகாட்டுதலை இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றத் தவறி, போர்க்குணமிக்கப் போராட்டங்களை கைவிட்டுவிட்டு தேர்தல்களின் மூலமாகவே சோசலிசத்தை அடைந்துவிடலாம் என்ற முடிவெடுத்து முதலாளித்துவ கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டு சமரசவாதி களாகவே மாறிவிட்டது, லெனினது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இது ஒரு துரோகமே, இது வஞ்சகமான சமரசமே. இதன் மூலம் இந்தியகம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்ஸிஸ்டுக் கட்சியும் அரைமுதலாளித்துவ கட்சிகளாகவே மாறிவிட்டனர்.

ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டு நடந்த முதல் முதலாளித்துவப் புரட்சி தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டோலிபியன் என்ற கொடியவனது கொடுங்கோல் நடவடிக்கை கள் அதாவது கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுவது, தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பது போன்ற கொடிய நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள சிலர் புரட்சிகர கட்சியை கலைத்துவிட வேண்டும் என்றும் ஜார் ஆட்சிக்கு உகந்த முறையிலான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் வாதிட்டார்கள்.இவர்களை கலைப்புவாதிகள் என்று லெனின் மதிப்பிட்டு இவர்களது திட்டத்திற்கு மாறாக கட்சியை தலைமறைவுக் கட்சியாக மாற்றி சட்டப்பூர்வமான வழிகளில் மக்களைத் திரட்டிப் போராடி சட்டப்பூர்வமான போராட்டங்களையும்

சட்டத்தை மீறியப் போராட்டங்களையும் ஒன்றிணைத்தார் லெனின். அதன் தொடர்ச்சியாக 1917 ஆம் ஆண்டு ஜார் அரசாங்கத்தை மக்கள் தூக்கியெறிந்தார்கள். இத்தகைய லெனினிய முறைகளை பின்பற்றத் தவறி தற்போது மக்களின் செல்வாக்கையும் இழந்துவிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றிய சமரசவாதமே காரணம் ஆகும்.

இந்த வரலாற்று அனுபவத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது புரட்சியின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் கம்யூனிஸ்டுகள் சமரசங்கள் செய்து கொள்வது அவசியமே என்றாலும் சமரசவாத நிலையிலிருந்து புரட்சி மற்றும் மக்களின் நலன்களுக்கு எதிராக தனது சொந்த சுயநலத்தின்அடிப்படையில்துரோகத்தனமான

மற்றும் வஞ்சகமான சமரசங்களை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் செய்து கொள்ளக் கூடாது.

தற்போது இந்தியாவில் பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை உழைக்கும் மக்களின் நலனிலிருந்து தூக்கியெறிய வேண்டியது அவசியமானதாகும். இதனை சாதிக்கக் கூடிய வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே உள்ளது. தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இதற்காக எவ்விதமான சலனமும் இல்லாமல் உறுதியாகப் போராடும். ஆகவே தொழிலாளி வர்க்கத்துக்கு தலைமை கொடுத்து தொழிலாளர்களைத் திரட்டி வைத்துள்ள கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் மட்டுமே இந்தப் பாசிசத்தை வீழ்த்த முடியும். அதன் பொருட்டு கம்யூனிஸ்டுகள் பாசிசமல்லாத பிற முதலாளித்துவ கட்சிகளோடு சமரசம் செய்துகொண்டு ஒரு ஐக்கியமுன்னணி அமைத்துப் போராட வேண்டும் என்பது பொதுவான உண்மைதான். எனினும் இந்த பொதுவான உண்மையின் அடிப்படையில் கண்மூடித்தனமாக செயல்படக் கூடாது என்று லெனின் எச்சரித்துள்ளார். குறிப்பாகதற்போதைய சூழலை பகுப்பாய்வு செய்து முடிவிற்கு வருவதுதான் விஞ்ஞான மாகும் என்பதுதான் லெனினது வழிகாட்டலா கும். தற்போது இந்தியாவில் அல்லது தமிழகத்தில் ஒரு ஒன்றுபட்ட பலம்வாய்ந்த புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சி இல்லை. சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற கட்சிகள் ஒப்பீட்டளவில் தொழிலாளர்களையும்விவசாயிகளையும் திரட்டிவைத்திருந்தாலும் இந்தக் கட்சித் தலைவர்கள் இங்குள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கு வாலாகவே செயல்படுகின்றனர். இவ்விரு கட்சிகளுக்கு இடையில் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் இல்லை என்றாலும் இவ்விரு கட்சிகளையும் கூட ஒன்றுபடுத்துவதில் இந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆர்வம் இல்லை. காரணம் என்ன? ஒன்றுபட்ட கட்சிக்கு யார் தலைவர்கள் என்ற தலைமைக்கான போட்டிதான் இவர்களது பிரச்சனையாக இருக்கிறது. மக்களின் நலனுக்காக இவர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. இதற்கு காரணம் இவர்களிடத்திலுள்ள தனிவுடமையின் அடிப்படையிலான சுயநலனே காரணமாகும்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான எம்.எல்.குழுக்கள் உள்ளது. இந்தக் குழுக்களின் தலைவர்களிடம், தான் என்ற அகம்பாவமும், சுயநலனும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் நிறைந்த குறுங்குழு வாதிகளாகவே இந்தக் குழுக்களின் தலைவர்கள் உள்ளனர். இத்தகைய தலைவர்களின் அதிகார வர்க்கப்போக்கு மற்றும் அராஜகத்தைப் பிடிக்காதவர்கள் சிலர் இந்தக் குழுக்களிலிருந்து வெளியேறி தனிக் குழுக்களை உருவாக்குகிறார்கள். அவர்களிடத்திலும் இதே தவறான போக்குகள்தான் நீடிக்கிறது. இந்தத் தவறுகளை இவர்கள் சுயவிமர்சனம் செய்து களைந்துகொள்ளத் தயாரில்லை. இவர்களும் அவர்கள் சொல்வதைத்தான் பிறர் கேட்க்க வேண்டும் என்றே கருதுகிறார்கள். அமைப்பிற்குள் உள்ள ஒவ்வொரு தோழர்களுக்கும் சுதந்திரமாகச்

சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகத்தைக்கூட இவர்கள் புரிந்து கொண்டு அனுமதிக்கத் தயாரில்லை. பிறர் அவர்களது கருத்துக்களை சுதந்திரமாக வைப்பதற்கும் அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு அவர்களின் சொந்த அனுபவங்களிலிருந்து புதிய கருத்துக்களை முன்வைப்பதற்கும் சுதந்திரம் கொடுப்பதன் மூலம் பல்வேறுவிதமான கருத்துகள் ஒன்றுக்கொன்று மோதி மிகவும் சரியான அனைவராலும் அல்லது பெரும்பான்மை யினரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுக் கருத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளையே இவர்கள் மறுக்கிறார்கள். இதன் மூலம் சிறிய அளவில் திரட்டப்பட்ட இவர்களது உறுப்பினர்களுக்கு உள்ளேமட்டும் விவாதிப்பதும் அதனையே சரியான கருத்து என்று கருதி குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு வெளியே உள்ள அனைவரும் குறைஉள்ளவர்களாகக் கருதி இவர்களிடத் தில் குறையே இல்லாத புனிதமானவர்களாகத் தங்களைக்கருதிக்கொள்கின்றனர். முரண்பாடு அனைத்தும் தழுவியது என்ற முரண்பாடு பற்றிய விதியை இவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை, அதன் அடிப்படையில் பிறரிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்து செயல்படவும் தயாரில்லை. தற்போது நிலவும் மாறுபட்ட கருத்துகளை எதிர்த்து கருத்து மோதல்களில்

ஈடுபட வேண்டியதுதான் அவசியமாகும். இதற்கு மாறாக மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் எல்லாம் எதிரிகளாக பாவித்து நபர்களின் மீது தாக்குதல் நடத்தும் மோசமான முறையை இவர்கள் கைவிட்டு ஆரோக்கிமானவிவாதங்களில் ஈடுபட்டு ஒரு ஒத்த கருத்திற்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய எதார்த்த பலவீனமான சூழல் ஆகும்.

இவ்வாறு பலவீனமான சூழலில் கம்யூனிச அமைப்புகள் இருப்பதும், அவர்களிடத்தில் ஒற்றுமை இல்லாமல்பலவாறு பிளவுபட்டு சிதறி இருப்பதன் காரணமாக தொழிலாளர் மற்றும் விவசாய வர்க்கங்களும் பலவாறு பிளவுபட்டும் சிதறியும் ஒற்றுமையின்றி மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர். இந்த வர்க்கங்களுக்குஎவ்விதமான நம்பிக்கையும் ஆர்வமும் இல்லாத விரக்தி மனப்பாண்மையிலேயே உள்ளனர். இத்தகைய சூழலில்பாசிசத்தை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்திட முடியுமா? நிச்சயமாக முடியாது. இப்படி நாம்சொல்வதால் பாசித்தை எதிர்த்துப் போராடவே முடியாது என்று நாம் சொல்வதாக யாரும் கருத வேண்டாம்.

பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதில் முதன்மையாக பங்கு வகிக்கும் தொழிலாளர் களையும் விவசாயிகளையும் ஒன்று சேர்ப்பதன் மூலமே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முடியும் என்கிறோம். மேலும் அத்தகையஒற்றுமையை சாதிக்க வேண்டுமானால் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும் என்ற நிபந்தனைக்கு தெளிவானமுடிவு காண வேண்டும் என்கிறோம். இத்தகைய கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையை சாதிப்பதற்கு இரண்டு வழிகள்உள்ளன. ஒன்று அனைத்து கம்யூனிஸ்டுகளும் ஒன்றுகூடி தங்களுக்கு இடையிலுள்ள கருத்து வேறுபாடுகளை ஒரு சித்தாந்தப்போராட்டத்தை நடத்தி ஒரு ஒன்றுபட்ட திட்டம் மற்றும் போர்த்தந்திரம் மற்றும் அமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட கட்சியைக் கட்டலாம். அல்லது ஏதாவது ஒரு குழு தனது சொந்தத் திட்டத்தை மக்களைத் திரட்டிப் போராடி நிருபிப்பதன் மூலம் அந்தத் திட்டத்தை பிற அமைப்புகளும் ஏற்றுக் கொண்டு ஒன்றிணையலாம். இத்தகைய வெவ்வேறான முறைகளை கையாண்டாலும் கம்யூனிசஅமைப்புகளுக்கு இடையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலும் ஆரோக்கிமான உறவை தொடர்ந்து நாம் கடைபிடிப்பதும் கருத்து வேறுபாடுகளை கருத்தியல் தளத்தில் விவாதித்து தீர்த்துக் கொள்ளும் முறையை கடைபிடிப்பதன் மூலம் நமக்கிடையே உள்ள முரண்பாடு பகைத் தன்மை அற்றது என்பதையும் அதனை பகையற்றமுறையில்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவ நிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

இத்தகைய ஒற்றுமையை நமக்கிடையே சாதிக்காமல் முதலாளித்துவ கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி என்று பேசுவது தற்கொலைக்குச் சமமாகும். அன்று இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி செய்த தவறுகளிலி ருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே குறிக்கிறது. மேலும் இதுபோன்ற பலவீனமான சூழலில் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்து ஐக்கிய முன்னணி என்பதால் முதலில் இந்த முதலாளித்துவ கட்சிகள் எதுவும் நம்மை குறிப்பாக ஒப்பீட்டளவில் பலமாக உள்ள சி.பி.எம். கட்சியையே அவர்கள் மதிப்பதில் லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் ஒரு சிலரை மட்டுமே திரட்டியுள்ள குழுக்களை இந்த முதலாளித்துவ கட்சிகள் எப்படிப் பார்ப்பார்கள்? மேலும் இந்த முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்தால் தற்போது கம்யூனிச குழுக்களி லுள்ள பலபேர் அந்த முதலாளித்துவ கட்சிகளுக்கே போய்விடுவார்கள் என்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

ஒருகாலத்தில் மதுரை நகரமானது கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கியது. கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவரான தோழர் இராமமூர்த்தி அவர்கள் சிறையில் இருந்தவாறே மக்களை சந்திக்காமலேயே பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்று மதுரை நகரமானது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிட்டது அதற்குக் காரணம் என்ன? கம்யூனிஸ்டுகள்தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் மாறிமாறி தேர்தல் கூட்டணி வைத்து செயல்பட்டதால், குடும்பம் குடும்பமாக கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தவர்கள்குடும்பம் குடும்பமாக தி.மு.க, மற்றும் அ.தி.மு.க.வுக்கும் போய்விட்டார்கள். மேலும் தற்போது கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ளவர்கள் பா.ஜ.க.வுக்கே கட்சி மாறிக்கொண்டி ருக்கின்ற நிலையைப் பார்க்கிறோம். ஆகவே கம்யூனிஸ்டுகள் தங்களுக்குள் ஒன்றுபட்டு தங்களைப் பலப்படுத்தாதவரையில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நம்மால் முடியாது என்ற எதார்த்த நிலையை ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனாவில் ஒரு பலம்வாய்ந்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி இருந்தது, அந்தக் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டி வைத்திருந்தது, அதன் தலைமையில் ஒரு மக்கள் படை இருந்தது. இத்தகைய அகச் சூழல் நிலவியபோதுதான் முதலாளித்துவ கட்சியான கோமிங்டானுடன் ஜப்பானிய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டிப் போராடியது. இத்தகைய பலம்வாய்ந்த அகநிலை சூழ்நிலை இல்லாத நிலையில் மேலும் அகம் பலவீனமாக இருக்கும் சூழலில் தி.மு.க.வோடும் காங்கிரசோடும் ஐக்கிய முன்னணி என்று பேசுவது ஒரு துரோகமே ஆகும்.

மேலும் சீனாவில் கோமிங்டான் கட்சியின் நோக்கமும் ஜப்பானிய எதிர்ப்பாகும், கம்யூனிஸ்டுகளின் கொள்கையும் அதோடு ஒத்துப் போனதால் அங்கே ஐக்கிய முன்னணி சாத்தியமாயிற்று. ஆனால் இங்கே தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த பாசிசத்திற்கு அடிப்படையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை பா.ஜ.க.வைப்போலவே ஆதரிக்கின்றர். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு இதற்கு எதிரான கொள்கைக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நேர் எதிரான கொள்கை உடைய கம்யூனிஸ்டுகளும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளோடு எந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடுவது? ஆகவே சீனாவோடு ஒப்பிடும் போது அங்கே கோமிங்டானோடு சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி சேர்ந்து ஐக்கியமுன்னணி கட்டியது போன்ற ஐக்கிய முன்னணியை ஆளும் முதலாளித்துவ கட்சிகளின் ஒரு பிரிவினரோடு இங்கே கட்டுவது தற்கொலைக்கு ஒப்பானதே ஆகும். இத்தகைய ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள் சுயநலவாதிகளே. இந்த முதலாளித்துவகட்சிகளுக்கு காவடி தூக்குபவர்களே. அவர்களது கொள்கையானது மக்கள் விரோத கொள்கையே ஆகும்.

பிரிட்டனில் சார்ட்டீஸ் தொழிலாளர் இயக்கம் ஆரம்பத்தில் வளர்ச்சிபெற்று மக்களின் செல்வாக்கோடு வளர்ந்த போதும் அதற்கென்று புரட்சிகரமான திட்டம் மற்றும் போர்த்தந்திரம் இல்லாததால் அதன் வளர்ச்சி குன்றியது என்று இங்கே லெனின் குறிப்பிடுகிறார். அதே போலவே இங்குள்ள கம்யூனிஸ்டுகளிடத்திலும் இத்தகைய புரட்சிகரமான கொள்கை இல்லாததாலேயே அவர்களின் வளர்ச்சி தடைபட்டு கம்யூனிஸ்டுகள் மக்களின் செல்வாக்கை இழந்து நிற்கின்றனர். தன்னிடத்திலுள்ள குறைகளை சரியாகப் புரிந்துகொண்டு அந்த தவறுகளைகளையாத எந்தவொரு தனிமனிதனும் அவர்களது வாழ்க்கையில் முன்னேற முடியாது. இது ஒரு கட்சிக்கும் பொருந்தும். ஆகவே கம்யூனிஸ்டுகள் தங்களது பலவீனத்துக்கு காரணமான தவறுகளை களைவதன் மூலமே அவர்களால் மக்களுக்காகப் பணியாற்ற முடியும். பாசிசத்தையும் வீழ்த்த முடியும். ஆகவே வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் வாழும் இன்றைய சூழலை பகுப்பாய்வு செய்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி நமது ஆசான்களது கண்ணோட்டத்திலிருந்து முடிவு செய்து செயல்பட வேண்டும். இதற்கு மாறாக நமது மார்க்சிய ஆசான்கள் சொல்லியவற்றை வறட்டுத்தனமாகப் பின்பற்றி கண் மூடித்தனமாக செயல்படக்கூடாது.

மார்க்சியமானது நமது நடைமுறைக்கான வழிகாட்டிதான், அது நாம் கண்மூடித்தன மாகப் பின்பற்றும் வறட்டுத்தத்துவம் அல்ல என்று நமது மார்க்சிய ஆசான்கள் பலமுறை நம்மை எச்சரித்துள்ளார்கள். அந்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய சூழலை பகுப்பாய்வு செய்து முடிவெடுத்து செயல்படுவோம். நாம் நமது கருத்து வேறுபாடுகளை தோழமையுடன் விவாதித்து ஒரு ஒன்றுபட்ட கருத்தை வந்தடைந்து ஒன்றுபடுவோம்.

பாசிசத்தை எதிர்த்துப் போராடி மூலதனத்தின் ஆட்சிக்கு முடிவுகட்டி சோசலிச சமூகத்தை படைக்கும் நமது பயணத்தில் முன்னேறுவோம்…

……….. தொடரும்.... பாண்டியன்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்