பல்வேறு வகைபட்ட சோசலிசம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து நமது புரிதலுக்கு-சிபி

 அண்மையில் நான் விவாதிக்க நேர்ந்த ஒரு மோசமான விவாதம் அதனை பற்றியே இங்கே விளக்க உள்ளேன்.

மார்க்சின் எல்லா எழுத்துகளும் வர்க்க சார்புடையவையே அதில் வர்க்க சமரசவாதம் எங்கேயும் காண முடியாது. இன்று மார்க்சியத்தை குழப்ப நினைக்கும் சிலர் மார்க்சிய மூல நூல்களின் சில பகுதியை சுருக்கியும் வெட்டியும் தங்களின் கருத்துகளை அதனுள் சொருகியும் திணிப்பதை ஏற்க முடியவில்லை.

அவர்களை அம்பலப்படுத்தும் நோக்கிலானதே இக்கட்டுரை.

சோசலிசம் என்றால் நாம் சோவியத் புரட்சிக்கு பின் ஏற்பட்ட பொதுவுடைமை நோக்கி செல்லும் இடைகட்டம்தான் சோசலிசமென பலரும் நினைத்திருக்கும் அதேவேளையில் மார்க்சிய ஆசான்கள் 1848 லே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பல்வேறு விதமான சோசலிசம் பற்றி பேசியுள்ளனர் அவை எவ்வகையான சோசலிசம் என்றும் நமது ஆசான்கள் தெளிவாக சுட்டிகாட்டியுள்ளனர்.

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் உள்ள சோசலிசம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்:-

(அ) நிலப்பிரபுத்துவ சோஷலிசம்-1830 ஜூலையில் நடைபெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்து சீர்திருத்தக் கிளர்ச்சியிலும் இந்தப் பிரபுக் குலத்தோர், வெறுக்கத்தக்க திடீர்ப் பணக்காரர்களிடம் தோற்றுப் போயினர். நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப் பிரசுரங்கள் எழுதுவது அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆனது.வெளிப்பார்வைக்காவது தம் சொந்த நலன்களை மறந்துவிட்டு, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலனை மட்டுமே கருத்திற்கொண்டு, முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் தம் குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்தனர். இவ்வாறாகப் பிரபுக் குலத்தோர் தங்களின் புது எஜமானர் மீது வசைமாரி பொழிந்தும், வரப்போகும் பேரழிவு குறித்து அச்சமூட்டும் தீர்க்க தரிசனங்களை அவர் காதுகளில் முணுமுணுத்தும் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.

இவ்வாறுதான் நிலப்பிரபுத்துவ சோஷலிசம் உதயமானது.

தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் அனைத்திலும் அவர்கள் கைகோத்துக் கொள்கின்றனர்; அவர்களுடைய பகட்டான வாய்ப்பேச்சுகள்ஒருபுறமிருக்க, அன்றாட நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் தரம் தாழ்ந்துபோய், தொழில்துறை மரத்திலிருந்து விழுகின்ற பொற்கனிகளைப் பொறுக்கித் தின்னவும், கம்பளி, பீட்ரூட்-சர்க்கரை, உருளைக்கிழக்கு சாராயம் ஆகியவற்றின் சட்டவிரோத வணிகத்தில் பண்டமாற்றாக வாய்மை, அன்பு, கவுரவம் ஆகியவற்றை விலைபேசவும் தயாராக உள்ளனர்.

தங்களுடைய ஆட்சியின்கீழ் நவீனப் பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை எடுத்துரைக்கும் அவர்கள், அவர்தம் சமுதாய அமைப்புமுறையிலிருந்து தவிர்க்க முடியாத படி கிளைத்தெழுந்ததே நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதை மறந்து விடுகின்றனர். அவர்கள் சுரண்டினர் என்பதையும், அந்த நிலைமைகள் தற்போது காலாவதியாகி விட்டன என்பதையும் மறந்துவிடுகின்றனர். ஆக அவர்களின் சோசலிசம் என்பது அவர்களின் வர்க்கத்தை முன்னிலை படுத்துவதே.

(ஆ) குட்டி முதலாளித்துவ சோஷலிசம்-முதலாளித்துவ வர்க்கத்தால் நாசமடைந்தது நிலப்பிரபுத்துவச் சீமான்களின் வர்க்கம் மட்டுமே அல்ல;மத்திய கால நகரத்தாரும் சிறு விவசாய நிலவுடைமையாளர்களுமே நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடி களாக இருந்தனர்.

குட்டி முதலாளித்துவ சோஷலிசம், பொருளாதார வல்லுனர்களின் கபடமான நியாயவாதங்களைத் தோலுரித்துக் காட்டியது. எந்திர சாதனங்கள், உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் நாசகர விளைவுகளையும், மூலதனமும் நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும், தேவைக்கு அதிகமான உற்பத்தியையும், [வணிக] நெருக்கடிகளையும் அது மறுக்க முடியாத வகையில் மெய்ப்பித்துக் காட்டியது. குட்டி முதலாளித்துவப் பிரிவினர், விவசாயிகள் ஆகியோரின் தவிர்க்க முடியாத அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கடுந்து யரையும், உற்பத்தியில் நிலவும் அராஜகத்தை யும், செல்வவளத்தின் வினியோகத்தில் காணப்படும் படுமோசமான ஏற்றத் தாழ்வு களையும், தேசங்களுக்கு இடையிலான சர்வநாசத் தொழில்துறைப் போரையும் குட்டி முதலாளித்துவ சோஷலிசம் சுட்டிக் காட்டியது. பழைய ஒழுக்கநெறிப் பிணைப்புகளும், பழைய குடும்ப உறவுகளும், பழைய தேசிய இனங்களும் குலைந்து போவதையும் அது சுட்டிக் காட்டியது.

இந்த வகைப்பட்ட சோஷலிசம் அதன்உறுதியான குறிக்கோள்களைப் பொறுத்த வரை, பழைய உற்பத்தி சாதனங்களையும், பரிவர்த்தனை சாதனங்களையும், அவற்றுடன் கூடவே பழைய சொத்துடைமை உறவுகளை யும், பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்க விரும்புகிறது.

இந்த வகைப்பட்ட சோஷலிசம் பிற்போக்கானதும் கற்பனாவாத தன்மை கொண்டதுமே ஆகும்.

(இ) ஜெர்மானிய சோஷலிசம் அல்லது “மெய்யான'” சோஷலிசம்-ஃபிரெஞ்சு சோஷலிச இலக்கியங்களை ,ஜெர்மானிய இலக்கிய வல்லுனர்களின் (literati) பணி, புதிய ஃபிரெஞ்சுக் கருத்துகளைத் தங்களின் பண்டைத் தத்துவ மனச்சாட்சிக்கு இசைவானதாக வளர்த்தெடுப்பதில் மட்டுமே அடங்கியிருந்தது. இதனால் கம்யூனிச இலக்கியத்தை முழுமையாக ஆண்மை யிழக்கச் செய்தனர். அந்த இலக்கியம் ஜெர்மானியன் கைக்கு வந்தபின், ஒரு வர்க்கத்துக்கு எதிராக இன்னொரு வர்க்கம் நடத்தும் போராட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை இழந்துவிட்டது. அதனாலேயே அவன் [ஜெர்மானியன்] ”ஃபிரெஞ்சுக்காரரின் ஒருதலைப்பட்சப் பார்வையிலிருந்து” தான் மீண்டுவிட்டதாகக் கருதிக் கொண்டான். உண்மையான தேவைகளை அல்ல, உண்மையின் தேவைகளை எடுத்துரைப் பதாகவும், பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அல்ல, மனித இயல்பின் நலன்களை, பொதுவாக மனிதனின் நலன்களை எடுத்துரைப்பதாகவும் கருதிக் கொண்டான். அவன் கருதும் மனிதனோ எந்த வர்க்கத்தையும் சேராதவன், எதார்த்த இயல்பு இல்லாதவன், தத்துவார்த்தக் கற்பனையின் பனிமூடிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே நிலவக் கூடியவன்.

இந்த ஜெர்மானிய சோஷலிசம், ஒரு பள்ளிக்கூட மாணவன் செய்யக்கூடிய வேலையை அவ்வளவு தீவிரத்துடனும் பயபக்தியுடனும் எடுத்துக்கொண்டது. பிறரை நம்பவைத்து ஏமாற்றும் பாணியில், தன்னு டைய அற்பமான கருத்துகளை வானளாவப் புகழ்ந்துகொண்டது. இதற்கிடையே அதன் பகட்டுப் புலமை வாய்ந்த அப்பாவித் தனத்தைப் படிப்படியாக இழந்துவிட்டது. ஜெர்மானிய சோஷலிசம் தன்னைப் பொறுத்தமட்டில், குட்டி முதலாளித்துவப் போலிப் பண்புவாதிகளின் படாடோபமான பிரதிநிதியாக விளங்குவதே தனக்குரிய பணி என்பதை மென்மேலும் உணர்ந்தது.

ஆக நாம் புரிந்துக் கொள்ள இந்த மூன்று வகையானவையும் "சோசலிசம்" என்பதுபழைய சமூகத்தை கட்டிக் காக்கவும் ஏதாவது ஒரு வகையில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியாகவும், பழைய சமுதாயம் தொடர்ந்து கட்டிக்காக்க நிலவும் சமூகக் குறைபாடுகளை அகற்ற விழைகிறது. மற்றபடி அவை பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் வரவில்லை என்பது தெளிவு.

ஈ. பழமைவாத சோஷலிசம் அல்லது முதலாளித்துவ சோஷலிசம்- முதலாளித்துவ வர்க்கத்தின் இந்தப் பிரிவில், பொருளாதார வல்லுனர்கள், கொடை வள்ளல்கள், மனிதாபிமானிகள், தொழிலாளி வர்க்கத்தின் நிலையை மேம்படுத்துவோர், கருணை இல்லம் நடத்துவோர், விலங்குகளுக்குக் கொடுமை விளைவிப்பதைத் தடுக்க விழையும் சங்கங்களின் உறுப்பினர்கள், குடிவெறிக்கு எதிரான கொள்கை வீரர்கள், கற்பனைக்கு எட்டும் அனைத்து வகையான மூலை முடுக்கச் சீர்திருத்தப் பேர்வழிகள் ஆகியோர் அனைவரும் அடங்குவர். மேலும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் முழுமையான [தத்துவ] அமைப்புகளாக முறைப்படுத்தப் பட்டுள்ளது.

புரூதோன் எழுதிய வறுமையின் தத்துவம் (Philosophie de la Misere) என்னும் நூலை இந்த வகைப்பட்ட சோஷலிசத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.

சோஷலிசவாத முதலாளித்துவப் பிரிவினர், நவீன சமூக நிலைமைகளின் அனுகூலங்கள் அனைத்தும் வேண்டும், ஆனால் அந்த நிலைமைகளின் தவிர்க்கவியலா விளைவு களாகிய போராட்டங்களும் அபாயங்களும் இருக்கக் கூடாது என விரும்புகின்றனர். தற்போது நிலவும் சமூக அமைப்பு, அதன் புரட்சிகரக் கூறுகளும் சிதைவுபடுத்தும் கூறுகளும் இன்றி, அப்படியே நீடிப்பதையே இவர்கள் விரும்புகின்றனர். பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கம் மட்டும் இருக்க ஆசைப்படுகின்றனர். முதலாளித்துவ வர்க்கம், தான் மேலாதிக்கம் வகிக்கும் உலகே தலைசிறந்ததென இயல்பாகவே கருதுகின் றது. இந்த வசதியான கருத்தோட்டத்தை முதலாளித்துவ சோஷலிசம், ஏறக்குறைய முழுமைபெற்ற பல்வேறு [தத்துவ] அமைப்புகளாக வளர்த்தெடுக்கிறது.

முதலாளித்துவ சோஷலிசத்தைக் கீழ்க் காணும் வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்: முதலாளி முதலாளியாக இருப்பது – தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.

சுதந்திரமான வணிகம்: தொழிலாளி வர்க்கத் தின் நலனுக்காக. முதலாளித்துவ சோஷலிசம் வெறும் சொல் அலங்காரமாக ஆகும்.உ. விமர்சன-கற்பனாவாத சோஷலிசமும், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசமும்

நிலப்பிரபுத்துவ சமுதாயம் வீழ்த்தப் படுகையில் உலகெங்கும் பரபரப்பு நிலவிய அந்தக் காலங்களில் பாட்டாளி வர்க்கம் தன் சொந்த லட்சியங்களை எட்டுவதற்காக மேற்கொண்ட முதல் நேரடி முயற்சிகள் தவிர்க்க முடியாதவாறு தோல்வியடைந்தன. காரணம், பாட்டாளி வர்க்கத்தின் அப்போதைய வளர்ச்சியுறாத நிலை. அத்துடன், அது விடுதலை பெறுவதற்கான பொருளாதார நிலைமைகள் அப்போது நிலவவில்லை. அத்தகைய நிலைமைகள் இனிமேல்தான் தோற்றுவிக்கப்படவிருந்தன. வரவிருந்த முதலாளித்துவ சகாப்தம் மட்டுமே அந்த நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தொடக்க கால இயக்கங்களுடன் கூடவே தோன்றிய புரட்சிகர இலக்கியம், தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மையைக் கொண்டிருந்தது. உலகளாவிய துறவுவாதத்தையும், மிகவும் முரட்டு வடிவிலான சமூகச் சமமாக்கத்தையும் அது போதித்தது.

இந்த வர்க்கப் பகைமைகள் அந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருந்தன. வர்க்கப் பகைமைகள் அவற்றின் தொடக்க காலத்தே நிலவிய தெளிவற்ற, வரையறுக்கப்படாத வடிவங் களில் மட்டுமே இந்த வெளியீடுகளில் அடையாளம் காணப்படுகின்றன. எனவே, இந்த முன்மொழிவுகள் கலப்பற்ற கற்பனா வாதத் தன்மை கொண்டவையாகவே உள்ளன.

இவர்கள் தொழிலாளி வர்க்கம் சார்பிலான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் வன்மையாக எதிர்க்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, புதிய வேதாகமத்தில் (New Gospel) கொண்டுள்ள குருட்டுத்தனமான அவநம்பிக்கையின் விளைவாக மட்டுமே அத்தகைய நடவடிக்கை இருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.

சோசலிசத்தின் உண்மையான நோக்கம் என்பது “கொல்லையடிக்கும் காலகட்டத்தில்’ இருந்து மனிதச்சமூகத்தை விடுவித்து, அதனினும் உயரிய ஒரு மனிதச் சமூகத் தையும் அதன் வளர்ச்சியையும் சாத்தியப் படுத்துவதுதான் எனினும், பொருளாதார அறிவியலின் தற்போதைய நிலையானது எதிர்கால சோசலிச சமூகத்திற்கு ஒரு சிறிய வெளிச்சத்தை மட்டுமே காட்ட முடியும். மேலும், சோசலிசம் என்பது ஒரு உயரிய சமூக நன்னடத்தையை நோக்கிச் செல்கிறது.சோசலிசம் ஓர் அறிவியல் எனில், அவ்வறிவியலானது, முற்றும் முடிந்த அல்லது அதற்கும் குறைவான நடத்தை மாற்றங்களை மனிதச்சிந்தனை மரபில் உடனடியாக உருவாக்கி விட முடியாது எனினும், அதை அடைவதற்கான சில வழிமுறைகளை வழங்கக் கூடும்.

மனித சமூக வரலாற்றை அறிஞர்கள் பல கட்டங்களாக பிரிக்கின்றனர் அதில் புராதான பொது உடைமை சமூகம், அடிமை சமூகம், நில உடமை சமூகம், முதலாளிய சமூகம் பொதுவுடமை சமூகம் என்பன ஆகும்.

நாம் இப்பொழுது பேசப்போவது சோசலிசத்தை பற்றி.


பொதுவுடமை சமூக அமைப்பை நோக்கியும் செல்லும் பொழுது ஏற்படும் இடைநிலை அமைப்பாக சோசலிச அமைப்பு உள்ளது.

பொதுவுடமை சமூக அமைப்பின் முதல் கட்டமாகும் இந்த அமைப்பு குறித்த கருத்துகளே சோசலிச கருத்துகள் ஆகும்

முதலாளித்துவ சமூக அமைப்பில் ஏற்பட்ட சில நிலைகளின் எதிர்குரலாக தோன்றியதே சோசலிச கருத்துகளாகும். சோசலிச உற்பத்தி முறை தோன்றும் முன்னரே சோசலிச கருத்துகள் தோன்றி விட்டன.

முதலாளிய சமுதாயத்தில் நிலம் தொழிற்சாலை சுரங்கங்கள் போன்றவை முதலாளி வர்க்கத்திற்கு உடைமைகளாக உள்ளன. அதாவது உற்பத்தி சாதனங்கள் முதலாளி வர்க்கத்திடம் உள்ளன. சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் உழைக்கின்றனர். அதாவது உற்பத்தியில் அனைவரும் ஈடுபட உற்பத்தியின் பயன் சிலருக்கு மட்டும் செல்கிறது. இந்த முதலாளித்துவ சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. மனித குலத்தின் சாதனை அனைத்தையும் ஒரு சிலரின் வங்கி இருப்பை பெருக்குவதாக அமைகிறது. மனித குலம் அனைத்துக்கும் விடிவெள்ளியாக அமையவில்லை மேலும் அவை மனித குலத்தின் வாழ்வையே நிராகரிப்பதாக கூட மாறுகின்றன. ஒரு கட்டத்தில் முதலாளித்துவம் மீதான அதிர்ச்சி குரல்கள் எழுகின்றன தனியுடைமை அடிப்படையிலான சமூக அமைப்பு மாற்றப்பட்டு சம(உடைமை) உரிமை அடிப்படையிலான சமூக அமைப்பு குறித்து சிந்தனைகள் தோன்றின.

தொடக்க காலத்தில் இத்தகைய கருத்தில் கற்பனை அளவில் இருந்தன. முதலாளித்துவ சமூகத்தை விட மேம்பட்ட ஒரு சமூகத்திற்காக கனவு கண்டனர். எனினும் முதலாளித்துவசமூகத்தை அம்பலப்படுத்தி அதற்கு மாற்றாக சோசலிசத்தை முன்வைத்த கருத்தளவில் இவர்கள் ஆற்றிய வரலாற்று பங்களிப்பு புறக்கணிக்க இயலாதவை .

இவர்கள் முதலாளிய சமூகத்தை அறிவில் அளவில் விளங்கிக் கொள்ளாத காரணத்தால் முதலாளிய சமூகத்தில் உள்ள கூலி அடிமை முறை பற்றியும் பாட்டாளி வர்க்கத்தின் சமூக பங்கு பற்றியும் சமூக மாற்றத்துக்கான வழியாக உள்ள வர்க்க போராட்டத்தைப் பற்றி இவர்களால் ஏதும் சொல்ல இயலாது போயிற்று எனவே இவர்களின் சோசலிச கருத்துகள் கற்பனை அளவில் நின்று போயின.

இதனைப் பற்றி காரல் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

இயக்கவியல் பொருள் முதலாதத்தை அணுகு முறையாக கொண்டு சமூக நடைமுறையில் ஈடுபட்ட மார்க்ஸ் முதலாளிய சமூகத்தில் காணப்படும் கூலி அடிமை முறையின் சாரத்தையும் புதிய சமுதாயத்தை படைக்கும் ஆற்றல் பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் பங்களிப்பையும் விளக்கிக் கொண்டு வர்க்கப் போராட்டமே எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொண்டார். பாட்டாளி வர்க்க தலைமையின் கீழ் முதலாளியத்தை எதிர்த்து உறுதியுடன் போராடினால் அன்றி சோசலிசம் ஏற்படாது எனவும் தெளிவு படுத்தினர். சோசலிச சமூகத்தில் ஏற்பட இருக்கும் முரண்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டார். மார்சியமானது சோசலிசம் குறித்த கருத்துக்களை அறிவியல் தளத்தில் நிறுவின.

அதேபோல் பாட்டாளி வர்க்க சார்பற்ற அறிவியல் வகையற்ற சோசலிச கருத்துகளை எடுத்து விளக்கி உள்ளார் மார்க்ஸ்.

1).நில உடமை சோசலிசம்

2).சிறு முதலாளிய சோசலிசம்

3). முதலாளிய சோசலிசம்

நில உடமை சோசலிசம் பாட்டாளி வர்க்கமும் முதலாளி பார்க்கும் இல்லாத ஓர் உலகை கனவு கண்டனர்.

சிறு முதலாளிய சோசலிசம் முதலாளிய நெருக்கடியில் சிறு முதலாளி வர்க்கம் தன் வர்க்க நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது ஆனால் நெருக்கடியின் கடுமையால் இவர்கள் இழிந்து பாட்டாளி வர்க்க நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டுள்ளார்கள். எனவே இவர்கள் தம் வர்க்ககண்ணோட்டத்தில் முதலாளியத்தை அறிவுரீதியில் அம்பலப்படுத்தினர். மூலதனக் குவியல் செல்வ விநியோகம் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை அம்பலப்படுத்தினாலும் பெருகிவரும் முதலாளிய நெருக்கடியை அவர்களுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம் தீர்க்க முயன்றனர். ஆக சோசலிசம் என்பது எல்லாமே பாட்டாளி வர்க்கம் சார்ந்தவையா என்று புரிந்துக் கொள்க.


2 comments:

  1. மார்க்சிய விரோதிகள்
    அதன் முழுமையான ஆய்வு முறை கண்ணோட்டங்களை தவிர்ப்பதற்காக வெட்டி ஒட்டி அவர்களுடைய கண்ணோட்டத்திற்கு மார்சியத்தை திரிப்பார்கள். அது இன்று மட்டும் நடக்கவில்லை மார்க்ஸ் காலம் தொட்டு இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
    இந்தப் போக்கை மூலவர்கள் கறாராக எதிர்த்தார்கள்.
    நம் காலத்திலும் இதை எதிர்த்துப் போராடியே அதன் பொருள் முதல்வாத ஆய்வு முறை கண்ணோட்டத்தையும் ,அதன் அடிப்படையில் அமைந்த வரலாற்றுப் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தையும், அரசியல் பொருளாதர விமர்சனத்தையும் நாம் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது

    ReplyDelete
  2. நன்றி தோழர்,
    கருத்திட்டமைக்கு

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்