அரசும் புரட்சியும். 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவம்.அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற வேண்டிய அவசியமும் பாகம் – 1 - தேன்மொழி.

 1. புரட்சி தொடங்கும் தறுவாயில்.

முதிர்ச்சியுற்ற மார்க்சியத்தின் முதலாவது நூல்களான மெய்யறிவின் வறுமையும், கம்யூனிஸ்டு அறிக்கையும் 1848 ஆம் ஆண்டுப் புரட்சி தொடங்கும் தறுவாயில் வெளிவந்தவை.

இக்காரணத்தால் அவை மார்க்சியத்தின் பொதுக் கோட்பாடுகளை எடுத்துரைப்பதோடு,ஸ்தூலமான அக்காலத்திய புரட்சிகரச் சூழ்நிலைகளையும் ஓரளவு பிரதிபலித்துக் காட்டின.

ஆகவே இந்நூல்களின் ஆசிரியர்கள் 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவத்திலிருந்து முடிவுகளை வந்தடைவதற்கு உடனடியாய் முன்னதாக அரசு குறித்து என்ன சொன்னார்கள்என்பதைப் பரிசீலிப்பது இன்னுங்கூட பயனுடையதாய் இருக்கும்.

மெய்யறிவின் வறுமையில் மார்க்ஸ் எழுதினார்:-

".... தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே பழைய முதலாளித்துவச் சமுதாயத் துக்குப் பதிலாக, எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை அமைக்கும், முறையாகச் சொல்லக்கூடிய அரசியல் அதிகாரம் இனி இராது,ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவச் சமுதாயத்திலுள்ள வர்க்கப்பகைமையின் அதிகாரப்பூர்வமான வெளிப் பாடாகும்."

வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும் அரசு மறைந்துவிடும் என்ற கருத்தின் இந்தப் பொது

விளக்கத்தை, இதற்குச் சில மாதங்களுக்குப் பிற்பாடு - துல்லியமாய்க் கூறுவதெனில் 1847 நவம்பரில் - மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டு அறிக்கையில் காணப்படும் விளக்கத்துடன் ஒப்பிடுதல் பயனுடையது.

"... பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம்,

தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன்மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில்உருவரை தீட்டிக் காட்டினோம்...."

"..... பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும்புரட்சியின் முதலாவதுபடி என்பதை மேலே கண்டோம்...."

".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித் துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."

அரசு என்னும் பொருள் குறித்து மார்க்சியத்துக்குள்ள மிகச் சிறப்பான, மிக முக்கியக் கருத்துக்களில் ஒன்று, அதாவது "பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்" (பாரிஸ் கம்யூனுக்குப்பிற்பாடு மார்க்சும் எங்கெல்சும் இப்படித்தான் இதனை அழைக்கத் தொடங்கினர்.) என்னும் கருத்து, இங்கு வரையறுத்துக் கூறப்படுவதைக் காண்கிறோம். அதோடு அரசைப் பற்றிய மிகச் சுவையான ஒரு இலக்கணமும் - மார்க்சியத்தின் "மறக்கப்பட்ட உரைகளில்" இதுவும் ஒன்றாகிவிட்டது - இங்கு நமக்குத் தரப்படுகிறது: "அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்."

அதிகாரப்பூர்வமான சமூக - ஜனநாயகக் கட்சிகளது தற்போதைய பிரச்சார, கிளர்ச்சிவெளியீடுகளில் இந்த இலக்கணம் விளக்கப்படுவதே இல்லை. அது மட்டுமல்ல, வேண்டுமென்றே இது ஒதுக்கித் தள்ளப் படுகிறது . காரணம் என்னவென்றால், இந்த இலக்கணம் சீர்திருத்தவாதத்துக்கச் சிறிதும் இணங்காதது ஆகும் "ஜனநாயகத்தின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சி" என்பதாய் சகஜமாய் நிலவும் சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களுக்கும் அற்பவாதக் குட்டிமுதலாளித்துவப் பிரமைகளுக்கும் இது முற்றிலும் புறம்பானதாகும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு வேண்டும். - எல்லாச் சந்தர்ப்பவாதிகளும் சமூக - தேசிய வெறியர்களும் காவுத்ஸ்கிவாதிகளும் இதைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மார்க்ஸ் இதைத்தான் போதித்தார் என்று நம்மிடம் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதோடுகூட கூறப்பட வேண்டியதை அவர்கள் கூற "மறந்துவிடுகிறார்கள்" முதலாவதாக, மார்க்சின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டியது உலர்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் அரசு மட்டுமேதான், அதாவது உடனடியாகவே உலர்ந்து உதிரத் தொடங்குவதாகவும், உலர்ந்து உதிர்வதாய் அன்றி வேறு விதமாய்இருக்கவொண்ணாததாகவும் அமைந்த ஓர் அரசு மட்டுமேதான். இரண்டாவதாக, உழைப்பாளி மக்களுக்கு வேண்டியது ஓர் "அரசு", "அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்".

அரசு என்பது பலத்தின் ஒரு தனிவகை ஒழுங்கமைப்பு; ஏதோவொரு வர்க்கத்தை அடக்குவதற்கான பலாத்கார ஒழுங்கமைப்பு. பாட்டாளி வர்க்கத்தால் அடக்கப்பட வேண்டிய வர்க்கம் எது? சுரண்டும் வர்க்கம்தான், அதாவது முதலாளித்துவ வர்க்கம்தான் என்பதே இக்கேள்விக்கு உரிய இயற்கையான பதில். சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்குவதற்கு மட்டுமே உழைப்பாளி மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்கும் பணிக்குத் தலைமை தாங்க முடியும், அதனால் மட்டுமே இப்பணியைச் செய்து முடிக்க முடியும். ஏனென்றால், பாட்டாளி வர்க்கம்தான் முரணின்றி முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கம்; முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அவ்வர்க்கத்தை அறவே அகற்றிவிடுவதில், உழைப்பாளர் களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோரையும் ஒன்றுபடச் செய்யக் கூடிய ஒரே வர்க்கம்.

சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அதாவது மிகப் பெருவாரியான மக்களுக்கு விரோதமாய் மிகச் சொற்பமான சிறுபான்மையினரது சுயநலத் துக்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு, எல்லாவிதச் சுரண்டலையுமே அறவே ஒழிக்கும் பொருட்டு, அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக வேண்டி, நவீன கால அடிமை உடமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும் முதலாளிகளுமான மிகச் சொற்ப சிற்பான்மையினருக்கு எதிராய் அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.

குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாய் வர்க்க இசைவு பற்றிய பகற்கனவுகளில் ஈடுபடும் இந்தப் போலி சோசலிஸ்டுகள், சோசலிச மாற்றத்தையுங்கூட கனவுலகப் பாணியில் சித்தரித்தனர். - சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாய்ச் சித்தரிக்காமல், பெரும்பான்மையினர் தமது நோக்கங்களை உணர்ந்துகொண்டு விடுவதாகவும், சிறுபான்மையினர் சமாதானமாகவே அவர்களுக்கு கீழ்ப்படிந்து விடுவதாகவும் சித்தரிக்கின்றனர். இந்த குட்டி முதலாளித்துவக் கற்பனை, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது அரசு என்ற கருத்திலிருந்து பிரிக்க முடியாதது.

நடைமுறையில் இந்தக் கற்பனை உழைப்பாளி வர்க்கங்களுடைய நலன் களுக்குத்துரோகமிழைக்கவே செய்தது. உதாரணமாய், 1848, 1871 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சிகளின் வரலாறும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல நாடுகளில் முதலாளித்துவ அமைச்சரவை களில் "சோசலிஸ்டுகள்" பங்கு கொண்டதன் அனுபவமும் இதைத் தெளிவுபடுத்தின.

தற்போது ரஷ்யாவில் சோசலிஸ்டு - புரட்சியாளர் கட்சியாலும் மென்ஷ்விக் கட்சியாலும் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ள இந்தக் குட்டிமுதலாளித்துவ சோசலிசத்தை எதிர்த்து மார்க்ஸ் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் தமது வர்க்கப் போராட்டத் தத்துவத்தை அரசியல்ஆட்சியதிகாரம், அரசு பற்றிய தத்துவம் வரையிலும் முரணின்றி வளர்த்து வகுத்தார்.

முதலாளித்துவ ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளால் இந்தப் பணிக்குத்தயார் செய்யப்படுகிறது, இந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்பாடும் சக்தியும்அளிக்கப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் எல்லாக் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளை யும் சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது; ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை ஒருசேர இணைத்து ஒன்றுபடுத்துகிறது, நிறுவன வழியில் ஒழுங்கமைக்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் - பெருவீதப் பொருளுற்பத்தியில் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய் - உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது. ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் அனைவரையும் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கி நசுக்கிய போதிலும், பாட்டாளி வர்க்கத்தினரைக் காட்டிலும் குறைவாக அல்ல பல சந்தர்ப்பங்களில் அதிகமாகவே ஒடுக்கி நசுக்கிய போதிலும், இவர்கள் தமது விடுதலைக்காக சுயேச்சையாய் போராடும் வல்லமை இல்லாதவர்கள்.

அரசு, சோசலிசப் புரட்சி இவற்றின் பிரச்சனையில் மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தத்துவத்தைப் பிரயோகித்ததும், தவிர்க்கமுடியாதபடி அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின், அதன் சர்வாதிகாரத்தின், அதாவது யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் நேரடியாய் மக்களுடைய ஆயுதப்பலத்தை ஆதாரமாய்க் கொண்ட ஆட்சியதிகாரத்தின் அங்கீகாரத் துக்கு இட்டுச் சென்றது. பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் தவிர்க்க முடியாத ஆவேசமான எதிர்ப்பை நசுக்கவும், உழைப்பாளர்களும் சுரண்டப்படு வோருமான மக்கள் அனைவரையும் புதிய பொருளாதார அமைப்புக்காக ஒழுங்கமைக் கவும் வல்லமை படைத்த ஆளும் வர்க்கமாக மாறுவதனால் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியும்.

சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை நசுக்குவ தற்கும் சோசலிசப் பொருளாதாரத்தை "ஒழுங்கமைப்பதில்" மாபெரும் திரள்களான மக்களுக்கு - விவசாயிகளும், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும், அரைகுறைப் பாட்டாளி வர்க்கத்தினருமானோருக்கு - தலைமை தாங்குவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு அதிகாரம், பலத்தின் மத்தியத்துவ நிறுவன ஒழுங்கமைப்பு, பலாத்காரத்தின் நிறுவன ஒழுங்கமைப்பு தேவைப்படுகிறது.

மார்க்சியமானது தொழிலாளர் கட்சிக்குப் போதமளிப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைக்குப் போதமளிக்கிறது. ஆட்சியதிகாரம் ஏற்று அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்கி சோசலிசத்துக்கு அழைத்துச் செல்ல, புதிய அமைப்பை நெறிப்படுத்தி ஒழுங்கமைக்க, உழைப்பாளர்களும் சுரண்டப் படுவோருமான மக்கள் அனைவரும் முதலாளித்துவ வர்க்கம் இல்லாமலும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்தும் தமது சமுதாய வாழ்வினை ஒழுங்கமைத்துக் கொள்வதில் அவர்களுக்குப் போதகனாகவும் வழிகாட்டியாகவும் தலைவனாகவும் செயலாற்ற வல்லமை படைத்த இந்த முன்னணிப் படைக்கு போதமளிக்கிறது. தற்போது ஆதிக்கத்திலுள்ள சந்தர்ப்ப வாதமானது, இதற்கு மாறாய், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதி களாய்ச் செயல்படுவதற்கு - வெகுஜனங் களுடன் தொடர்பு இழந்து, முதலாளித் துவத்தில் எப்படியோ ஓரளவு "நல்லபடியாகவே" இருந்து, எச்சித் துண்டுக்காகத் தமது பிறப்புரிமையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகரத் தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தைத் துறந்துவிடும்இத்தகைய பிரதிநிதிகளாய்ச் செயல் படுவதற்கு - பயிற்றுவிக்கிறது.

"அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்" பற்றிய மார்க்சின் தத்துவம் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சிப் பாத்திரம் குறித்த அவருடைய போதனை அனைத்துடன் இரண்டறக் கலந்ததாகும். இந்தப் பாத்திரத்தின் இறுதி நிலையே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம்.

ஆனால் பாட்டாளி வர்க்கத்துக்கு, முதலாளித்துவத்துக்கு எதிரான பலாத் காரத்தின் ஒழுங்கமைப்புக்குரிய தனிவகை வடிவமான அரசு தேவைப்படுவதால், பின்வரும் முடிவு தானாகவே எழுகிறது; முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல், தகர்த்தெறியாமல் இத்தகைய ஒழுங்கமைப் பினை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? கம்யூனிஸ்டு அறிக்கை நேரடியாக இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவத்தை தொகுத்துக் கூறுகையில் மார்க்ஸ் இதே முடிவைத்தான் எடுத்துரைக்கிறார்.

எமது விளக்கம்.

மார்க்சும் எங்கெல்சும் ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தின் அடிப்படையான கோட்பாடுகளை அன்றைய காலத்தில் நிலவிய ஸ்தூலமான சூழ்நிலைகளிலிந்து அவர்களது கருத்துக்களைதகுந்த ஆதாரத்தோடு எடுத்து விளக்கினார்கள். இந்த அடிப்படை கோட்பாடு களையும் மார்க்சால் விளக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்களையும் நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தற்போது மாறி வந்துள்ள சூழல்களை மதிப்பிட்டு பகுத்து அறியவும் மார்க்சின் கண்ணோட்டத்திலிருந்து அதாவது மார்க்ஸ் தற்போது உயிருடன் இருந்தால் தற்போதைய சூழலை எவ்வாறு மதிப்பிட்டு இந்தச் சூழலை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுப்பாரோ அதே முடிவை நாம் எடுக்க முடியும். இந்த வகையில் அரசு என்றால் என்ன? அதன் தோற்றம், வளர்ச்சி மற்றும் இறுதியில் அதன் மறைவு குறித்து மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது முதன்மையான கடமைகளுள் ஒன்றாகும்.

அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவ சமுதாயத்திலுள் வர்க்கப் பகைமையை பாதுகாத்து, தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கங்களை சுரண்டுவதற்கான பலாத்கார அமைப்பாகும். இந்த அரசியல் அதிகாரமானது சமூகத்திலுள்ள உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற நிறுவனமாகும். ஆகவே இந்த தேவையற்ற பலாத்கார நிறுவனத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, வர்க்கங்களற்ற அதாவது வர்க்கப் பகைமைகளற்ற சமூகத்தை உருவாக்க இந்த அரசு அமைப்பின் தேவை இல்லாத ஒரு நிலையை அடைவதற்கான ஒரு சங்கத்தை பாட்டாளி வர்க்கம் அமைத்திட வேண்டும் என்கிறார் காரல்மார்க்ஸ். அதாவது பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட ஒடுக்குமுறைக் குள்ளாகும் வர்க்கங்களின் விருப்பம் என்ன? மனிதர்களுக்கு இடையே வர்க்க வேறுபாடுகள் கூடாது, அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மனிதர்களும் சமத்துவத்துடன் மகிழ்ச்சியாக கூட்டாக வாழ வேண்டும் என்றேவிரும்புகின்றனர். அத்தகைய முறையில் மனிதர்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஊட்டும் கருத்தையே மார்க்ஸ் முன்வைத்தார். அதனை அடைவதற்குத் தேவையான கருத்துக்களை விஞ்ஞானப்பூர்வமான வழிமுறைகளை வைத்ததில்தான் மார்க்சின் சிறப்பு உள்ளது. இங்கே மார்க்சால் சொல்லப்படும் சங்கம் என்பது, கம்யூனிஸ்டுக் கட்சி என்ற அமைப்பாகவும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற சோசலிச சோவியத்து அரசாகவும் இருக்கலாம். இந்த இரண்டு வகையான நிறுவனங்களும் பாட்டாளி வர்க்கத்திற்குத் தேவையாகும். ஆகவே இந்த இரண்டு வகையான நிறுவனங்களைப் பற்றி நமது மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை ஆழமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்கால சமுதாயத்தில் திரைமறைவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கிறது. ஆளும் முதலாளி வர்க்கத்துக்கும், ஒடுக்கப் படும் வர்க்கங்களுக்கும் இடையிலேயும், ஆளும் முதலாளி வர்க்கங்களுக்கு இடையிலும் போர் நடந்துகொண்டு இருக்கிறது. சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள்தான் இந்தப் போர்களுக்கான காரணமாகும்.

இந்த முரண்பாடுகள் கூர்மையடையும் போது இந்தப் போரானது பகிரங்கமாக நடத்தப்பட்டு முதலாளித்துவ வர்க்கங்களின் அரசானது பலாத்காரமாக வீழ்த்தப்படும் என்பது மார்க்சின் போதனைகளில் ஒன்றாகும். இவ்வாறான போர் உடனடியாக நடக்காது ஆனால் மக்களை நேசிக்கும் புரட்சிகரமான கம்யூனிசத் தலைவர்கள் மார்க்சின் இந்தப் போதனைகளை சரியாகப் புரிந்துகொண்டு நம்பிக்கையோடு மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி அவர்களை அணிதிரட்டி தொடர்ந்து போராடினால் சிறுகச் சிறுக அதாவது அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற விஞ்ஞான விதிகளுக்கு ஏற்பவும், சிறுதுளி பெரும் வெள்ளமாக மாறும் என்ற பழமொழிக்கு ஏற்பவும் மக்கள் தமது சொந்த முயற்சியிலிருந்தும் தலைவர்களின் வழிகாட்டலிருந்தும் தங்களது சொந்த அனுபவங்களிலிருந்தும் நம்பிக்கைபெற்று ஒரு நாள் மார்க்ஸ் குறிப்பிட்டது போல நிலவுகின்ற முதலாளித்துவ அரசை தூக்கி எறிந்த்து உழைக்கும் வர்க்கத்திற்கான அரசை உருவாக்குவார்கள். ஆனால் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் மார்க்சின் போதனைகளை மக்களிடம் கொண்டு செல்லாமல், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டாமல் மக்களை அணிதிரட்டாமல் இருந்தால் மார்க்ஸ் சொன்னது நடக்காது.

அதற்கு காரணம் மக்கள் இல்லை, மாறாக கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களே காரணமாகும்.பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக மாற்றுவதும், ஜனநாயகத்துக்கான போரில்உழைக்கும் வர்க்கம் வெற்றிபெறுவதுதான் பாட்டாளி வர்க்கமும் அதன் அரசியல் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சியின் முதன்மையான கடமையாகும். இந்தக் கடமையை ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலுள்ள உழைக்கும் வர்க்கங்களும் கம்யூனிஸ்டு கட்சியும் சிறப்பாகப் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இதற்கான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்டுகள் இங்கே நடத்துவதில் இதுவரை வெற்றி பெறவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதனை சாதிப்பதில் நாம் வெற்றி பெறாமல் போனதற்கு நாம் செய்த தவறுகள் என்ன? பகுத்து ஆராய வேண்டும். நாம் செய்த தவறுகளை புரிந்துகொண்டு மாற்றியமைக் கவில்லை என்றால் இந்த சமுதாயம் முதலாளிகளின் அடிமைச் சமூகமாகவே நீடிக்கும். அதற்கு நாம்தான் காரணமாக இருப்போம்.

பாட்டாளி வர்க்கமானது ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெற்று, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் வர்க்க மாக மாறியவுடன், உடனடியாக மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலாளி வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனத்தைக்கைப்பற்றி அதனை சமூக உடமையாக மாற்றிடும். சமூகத்தைமுதலில் சோசலிச சமூகமாக ஒழுங்கமைக்கும், முதலாளித்துவ சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களி டமுள்ள குறைகளை களைவதற்குப் பாடுபடும். சிறுகச் சிறுக சோசலிச சமூக அமைப்பின் பலன் எவ்வளவு சிறந்தது என்ற உண்மையை மக்களின் சொந்த அனுபவங்களிலிருந்து மக்கள் புரிந்துகொள்வதற்கான போதனை களையும் பயிற்சியையும் மக்களுக்கு வழங்கும். இத்தகைய போதனையும், பயிற்சியும் அதன் அடிப்படையிலான நடைமுறை வாழ்க்கையும் சிறிது சிறிதாக வளர்ந்து அதாவது அளவு மாற்றமானது ஒரு பண்பு மாற்றத்திற்கு அதாவது சமூகம் சோசலிச சமூகத்திலிருந்து கம்யூனிச சமூகமாக மாற்றம் அடையும் என்பதுதான் மார்க்சின் போதனையாகும். இந்த போதனையின் மீது ரஷ்ய போல்ஷ்விக்குகள் நம்பிக்கை கொண்டு செயல்பட்டுத்தான் மக்களையும் இந்த போதனையின் மீது நம்பிக்கை பெற வைத்துத்தான் அவர்கள் ரஷ்யாவில் மாபெரும் சாதனைகள் புரிந்தார்கள். ஆனால் இங்கே மார்க்சின் இந்த போதனைகளின் மீது நம்பிக்கை இல்லாத தலைவர் களையே நாம் பார்க்கிறோம். மக்களுக்கும் இதன் மேல் நம்பிக்கை ஊட்டப்படவில்லை என்றே நாம் பார்க்கிறோம். இந்த நிலையில் மாற்றங்கள் தேவையாகும்.

அரசு பற்றிய மார்க்சிய போதனைகளில் ஒன்றான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றபோதனைதான் முதன்மையானதாகும். அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் என்ற கருத்தியல்தான் மார்க்சின் போதனையாகும். பாட்டாளி வர்க்கமானது புதிய வகையிலான ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று கூறி ஒழுங்கமைப்பின் அவசியத்தை இங்கே மார்க்ஸ் வலியுறுத்துகிறார். இங்கே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்று குறிப்பிடும்போது முதலாளி வர்க்கச் சர்வாதிகாரமும் பாட்டாளி வர்க்ச் சர்வாதிகாரமும் ஒன்றுபோலப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கும் முதலாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்குமான வேறுபாடு களை நாம் துல்லியமாக புரிந்துகொண்டு வரையறுக்க வேண்டும். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் கம்யூனிஸ் டுகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசை அமைத்துச் செயல்பட்டாலும் அந்த அரசே முதலாளித்துவ சர்வாதிகார அரசாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் ரஷ்யாவிலும் சீனாவிலும் உருவான பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசுகளை முதலாளித்துவ சர்வாதிகார அரசுகளாக முதலாளித்துவ வர்க்கப் பிரிவினர் மாற்றிவிட்டனர். இந்த அனுபவங்களி லிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பாரிஸ் கம்யூன் மற்றும் சோவியத்துகளின் அனுபவங்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். இது போலவே வரும் காலத்திலும் நாம் செய்யும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. இத்தகைய பாடங்களின் மூலமே அதனை நாம் பகுத்து ஆராய்ந்து தவறுகளை கண்டுபிடித்து மாற்று வழிகள் பற்றிய முடிவெடுத்துச் செயல்பட்டு முன்னேறியுள்ளோம் என்ற வரலாற்றையும் நாம் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றியும் மார்க்ஸ் நமக்கு போதித்துள்ளார். அதனையும் நாம் படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களில் பெரும்பாலோர் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. மேலும் இவர்கள் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை இருட்டடிப்பு செய்வதோடு மார்க்சுக்கு எதிரான கருத்துக்களையே மார்க்சின் கருத்தாகச் சொல்லி திரித்துப் புரட்டுகிறார்கள். இது போன்றே மார்க்சிய ஆசான்கள் வாழ்ந்த காலத்திலும் நடந்தது. இவ்வாறு இவர்கள் மார்க்சியத்துக்கு எதிராகப் பேசுவதற்கான வர்க்க அடிப்படைகளை நமது ஆசான்கள் விளக்கியுள்ளார்கள். சமூகத்தி லுள்ள அற்பவாத குட்டிமுதலாளித்துவப் பிரிவினரால் மார்க்சின் இந்த புரட்சிக போதனைகளை ஏற்க முடியாது.

ஏனென்றால் இந்த குட்டி முதலாளித்துப் பிரிவினர் ஆலைத் தொழிலாளி வர்க்கம் போல் புரட்சிகரமான வர்க்கங்கள் இல்லை. ஆலைப் பாட்டாளி வர்க்கமானது வளர்ச்சியடைந்ததொழில் நிறுவனங்களில் முதலாளிகளின் ஒடுக்குமுறைகளையும் சந்தித்துக்கொண்டு வேலை செய்வதால், இந்த ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டுவதற்கு அந்த ஆலையை அதாவது அந்த உற்பத்திச் சாதனத்தை தனிப்பட்ட முதலாளியிடமிருந்து பறித்து சமூக உடமை ஆக்கிட வேண்டும் என்ற சோசலிசக் கொள்கையில் ஆர்வமுடையதாக இருக்கிறது.

அதன் காரணமாகவே மார்க்சின் சோசலிசக் கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதற்காகப் போராட வேண்டும் என்பதில்உறுதியாக உள்ளது. இந்த நடைமுறை உண்மையிலிருந்துதான் மார்க்சியமானது சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஆலைப் பாட்டாளி வர்க்கம் மட்டுமே தலைமை அளித்து அதாவது பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் என்று போதனை செய்தார்கள். இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவ வர்க்கம் சிறிய அளவில் உடமையைப் பெற்றிருப்பதால் அது சிலசமயம் உடமை வர்க்க நிலையிலிருந்து முதலாளித்துவச் சுரண்டலை ஆதரிக்கிறது. வேறு சமயம் அதாவது முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்பட்டு அது உடமையற்ற வர்க்கமாக மாற்றப்படும் நிலையில் அது தொழிலாளி வர்க்கத்தின் நிலையை அது ஆதரிக்கிறது. ஆகவே குட்டிமுதலாளித்துவ வர்க்கமானது முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை முற்றிலுமாக தூக்கியெறிய தயங்குகிறது. இந்த முதலாளி வர்க்க ஆட்சி முறைக்குள்ளேயே தனது நிலையைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறது என்ற உண்மையை விளக்கி சோசலிசப் புரட்சிக்கு ஆலைப் பாட்டாளிகளே தலைமை தாங்க முடியும் என்று மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்தார்கள்.

மார்க்சின் இந்த போதனைகளை தொழிலாளி வர்க்கத் தலைவர்களில் பலர் புரிந்துகொள்ள வில்லை. மாறாக முதலாளி வர்க்கமும், முதலாளி வர்க்க அரசியல் கட்சித் தலைவர்களும் நன்கு புரிந்துகொண்டு, முதலாளிகளின் சுரண்டலைப் பாதுகாக்கவும்,முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவும் சரியாக தந்திரம் வகுத்து இன்றளவும் செயல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆலைப் பாட்டாளி வர்க்கம்தான் சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்கும் என்ற மார்க்சின் போதனையை புரிந்துகொண்ட முதலாளித் துவவாதிகள், ஆலைப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்படும் சோசலிச உணர்வுகளை மழுங்கடிப் பதற்கான தந்திரத்தை வகுத்து செயல்படுத்தி னார்கள். அன்றை காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய வாதிகள்தான் உலகில் பல நாடுகளை அடிமைப்படுத்தி காலனிகளை வைத்திருந்தார்கள். இந்த காலனி நாடுகளி லிருந்து ஏராளமாக செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அந்தக் கொள்ளையில் ஒரு சிறு பகுதியை இங்கிலாந்தில் வாழும் தொழிலாளர்களுக்கு லஞ்சமாக அதாவது அவர்களது சம்பளத்தை கூட்டிக்கொடுப்பது, தொழிலாளர்களின் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமும், தொழிலாளர்கள் நிலவுகின்ற சூழலிலேயே தங்களது வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்ள முடியும் என்றஉணர்வை அதாவது தொழிலாளர்களிடம் குட்டிமுதலாளித்துவஉணர்வை ஏற்படுத் தினார்கள். மேலும் தொழிலாளி வர்க்கத் தலைவர்களும் தொழிலாளர்களிடம் சோசலிச உணர்வை ஏற்படுத்தாமல் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையிலேயே தொழிலாளர்களை வைத்துக்கொள்லும்படி பார்த்துக்கொண்டார்கள்.

அன்று பிரிட்டீஷ் காலனி ஆதிக்கவாதி களால் பின்பற்றிய கொள்கைகளையே அனைத்து ஏகாதிபத்தியவாதிகளும் உலகம் முழுவதிலும் பின்பற்றி தற்போது உலகம் முழுவதிலுமுள்ள ஆலைப் பாட்டாளி வர்க்கத்தை குட்டிமுதலாளித்துவ உணர்வுள் ளவர்களாக மாற்றிவிட்டனர்.

மேலும் உழைக்கும் வர்க்கக் கட்சித் தலைவர்களை பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் என்ற நிலையை கைவிட்டு குட்டிமுதலாளித்துவ தலைவர்களாக மாற்றி கம்யூனிஸ்டு அமைப்புகளையே குட்டிமுதலா ளித்துவ அமைப்புகளாக மாற்றுவதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றிபெற்றுள் ளனர். இது போன்று ஏகாதிபத்தியவாதிகள் கம்யூனிச அமைப்புகளுக்குள் பிளவுகள் ஏற்படுத்துகிறார்கள் என்று ஏகாதிபத்தி யத்தை பகுப்பாய்வு செய்த லெனின் ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். அதனை இந்த கம்யூனிஸ்டுத் தலைவர்கள் படித்துப் புரிந்துகொண்டு தங்களது கடமையை ஆற்றத் தவறினார்கள். ஆனால் மார்க்சின் போதனைகளை கற்றுத் தேர்ந்த முதலாளிகள் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு தொழிலாளி வர்க்கத்தை வீழ்த்தியுள்ளார்கள். ஆகவே நாம் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அது எப்படி என்பது நம்முன் உள்ள கேள்வி.

தற்போது இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளை ஆளும் முதலாளித்துவ வர்க்கம் 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப் படுத்தி வருகிறது. இந்திய அரசானது சர்வதேசிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களான உலகவங்கி, ஐ.எம்.எப், போன்ற வற்றிடமிருந்து கடன் பெற்று அவர்கள் போடும் அநியாயமான நிபந்தனைகளை ஏற்றுச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனால் அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்துவதால், அரசுத் துறைகளில் புதிதாக வேலைக்கு ஆட்க்களை எடுப்பதில்லை. அப்படியே சிறிய அளவுக்குவேலைக்கு ஆட்களை நியமித்தாலும் அவர்களை கொத்தடிமை நிலையிலேயே வைத்துள்ளது. அரசே கொத்தடிமைத்தனத்தைசெயல்படுத்தும் போது கார்ப்பரேட் முதலாளி களும் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துவிட்டு கொத்தடிமை முறைகளை புகுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் சமீப காலங்களில் குட்டிமுதலாளித்துவ வாழ்க்கை வாழ்ந்த ஆலைப் பாட்டாளிகள் உடமையற்றவர்களாக மட்டுமல்லாது பிச்சைக் காரர்களாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் சிலர் தற்கொலை செய்து செத்துக் கொண்டு இருக்கின்றனர். இதே போலவே சிறுவுடமை வர்க்கத்தினரான சிறு வியாபாரிகள், சிறு தொழில் முதலாளிகள், விவசாய உடமையாளர்கள் போன்ற உடமை வர்க்கங்களும் சிறிது சிறிதாக உடமைகளை இழந்து உடமையற்றவர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் கூலித் தொழிலாளியாக மாறிக்கொண்டு இருக்கின்றனர் என்று சிலர் கருதுகிறார்கள்.

அதில் பாதிதான் உண்மையாகும். இதில் பலபேர் எவ்விதமான வேலை வாய்ப்பும் இல்லாமல் பிச்சையெடுக்கும் நிலையைத் தான் சந்திக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இந்திய மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய கொடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. இன்றைய இந்திய உற்பத்தி முறையானது உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் எதார்த்தமாகும். அதன் விளைவாகவே கார்ப்பரேட் முதலாளிகள் உற்பத்தி செய்த பொருள்களை விற்க முடியாமல் சந்தையில் ஒரு தேக்கத்தை சந்திக்கின்றனர். ஆகவே நாம் சோசலிசம் பற்றிய மார்க்சிய போதனைகளை இவ்வாறு நெருக்கடிகளை சந்திக்கின்ற வர்க்கப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடம் கொண்டுபோவது நமது முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உழைப்பு என்றால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மூளை உழைப்பும்தான் என்பதையும் இளைஞர் களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். இந்த உழைப்பை மூலதனமானது அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்றும் அதற்கு அடிப்படை உற்பத்திச் சாதனங் களாகிய தொழிற்சாலை போன்றவை தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தமாக இருப்பதை பயன்படுத்தியே நம்மை அடிமைப் படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லி, இந்த மூலதனமானது உழைக்கும் மக்களால்உருவாக்கப்பட்டதை முதலாளிகள் பறித்துக் கொண்டு அதனை அவர்களது சொத்தாக மாற்றினார்கள் என்ற வரலாற்றைச் சொல்லி, நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த மூலதனத்தை அந்த முதலாளிகளிடமிருந்து பறித்து அதனை சமூகத்தின் சொத்தாக மாற்ற வேண்டியது உழைக்கும் வர்க்கத்தின் கடமை என்பதே மார்க்சின் போதனையாகும். இந்த போதனை நியாயமானது என்பதை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

முதலாளி வர்க்கங்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்களை அதாவது தொழிற்சாலை போன்றவற்றை பறிமுதல் செய்ய வேண்டு மானால் தொழிலாளர்களுக்கு அரசு தேவை என்று மார்க்ஸ் போதித்தார். இந்த போதனையை கம்யூனிச அமைப்புகளிலுள்ள சில சந்தர்ப்பவாதிகள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். எனினும் தொழிலாளர் களின் அரசானது எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற மார்க்சின் போதனையை இவர்கள் பேசுவதில்லை.

தொழிலாளர்களின் அரசானது உலர்ந்து உதிரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே மார்க்சின் போதனை யாகும். அதாவது இனிமேல் அரசு என்பதே தேவையில்லை என்றவகையான ஒரு சமூக அமைப்பை உருவாக்கும் தன்மை கொண்ட அரசு அதுதான் உலர்ந்து உதிரும் (இனிமேல் அரசு என்பதே தேவையில்லை) அரசுதான் தொழிலாளர்களின் அரசாகும் என்ற போதனையை மூடிமறைத்துவிட்டு. நிலவு கின்ற சமூக அமைப்பிற்குள்ளேயே, அதாவது முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிற் குள்ளேயே இந்த முதலாளித்துவ வாதிகளின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்ட பாராளுமன்ற அமைப்பிற்குள்ளேயே மந்திரிகளாக ஆகி அந்த மந்திரி சபையே தொழிலாளர்களின் அரசு என்கிறார்களே இதுதான் மார்க்சின் போதனை என்கிறார்களே இது சரியா?. இந்த அரசு உலர்ந்து உதிரக்கூடியதா? முதலாளிகளின் உற்பத்திச் சாதனங்களை இந்த அரசால் பறிமுதல் செய்ய முடியுமா? தொழிலாளர்கள் போராடினால் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படும் முதலாளிகளை இந்த அரசால் தண்டிக்க முடியுமா? மாறாக விவசாயிகளின் போராட்டத்தை இந்த அரசுகள் தொழிலாளர்களின் அரசு என்று சொல்லிக்கொண்டே ஒடுக்கியதுதான் வரலாறாகும். ஆகவே மார்க்சின் போதனைகளை திருத்தி விளக்கமளிக்கும்திருத்தல்வாதிகளை மார்க்சின்காலத்திலேயே கண்டிக்கப்பட்டு அவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டதுஎனினும் இப்போதும் அத்தகைய திருத்தல்வாதக் கருத்துக்களை இவர்கள் கொண்டு வருவதற்குக் காரணம் உழைக்கும் மக்களிடமும், கம்யூனிஸ்டுகளிடமும் மார்க்சிய

போதனைகளை கொண்டுசெல்லாத நமது தவறுதான் காரணமாகும்.

மிகச் சிறுபான்மையினராகிய சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்கு மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியை சுரண்டும் போது உழைக்கும் மக்களின் எதிர்ப்பை பலாத்காரம் கொண்டு ஒடுக்குவதற்கு அரசியல் அதிகாரமும் அதற்கான பலாத்காரக் கருவியான அரசும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சுரண்டும் வர்க்கமாகிய முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை ஒழிக்கவும், அதனை எதிர்த்து முதலாளி வர்க்கம் போராடினால் அதனை ஒடுக்கவும் உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரமும் அதற்கான பலாத்காரக் கருவியான அரசும் தேவைப்படுகிறது. இங்கே இரண்டு வகையான வர்க்கங்களுக்கும் அரசு

தேவைப்படுகிறது. என்றாலும் அதன் நோக்கங்கள் வெவ்வேறானவையாகும். முதலாளி வர்க்கத்துக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கும், தொழிலாளர்களுக்கு இந்தச் சுரண்டலை ஒழிப்பதற்கும் அரசு தேவைப்படுகிறது. ஆகவே தொழிலாளி வர்க்கமானது உழைக்கும் மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தி முதலாளிகளின் அரசை ஒரு புரட்சியின் மூலம் தூக்கியெறிய வேண்டும் என்பதே மார்க்சின் போதனையாகும்.

இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்கள் வர்க்கப் போராட்டத்தை மறுத்துவிட்டு வர்க்க இசைவு பற்றி கனவு காண்கிறார்கள். சோசலிச சமூக மாற்றமானதுதானாக அமைதியான முறையில் நடந்துவிடும் என்கிறார்கள். அது தானாக நடக்காது தொழிலாளி வர்க்கத்தின் உணர்வுப்பூர்வமான செயல்பாட்டின் மூலம்தான் நடக்கும். என்ற போதிலும் அது அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்பதுதான் தொழிலாளர்கள் மற்றும் உண்மையான கம்யூனிஸ்டுகளின் விருப்பமாகும். ஆனால் சிறுபான்மையான முதலாளிகள் அவர்களின் அதிகாரத்தை அவர்களாக விட்டுக்கொடுத்து விடுவார்களா? என்ற கேள்விக்கு குட்டி முதலாளித்துவ சிந்தனையாளர்கள் அவர் களாக விட்டுவிடுவார்கள் என்று வாதிடுகிறார்கள். தற்போது நடக்கும்தேர்தல்களில் கூட இந்த முதலாளித்து வவாதிகள் மக்கள்பொரும்பான்மையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே ஆளட்டும் என்றுசெயல்படுகிறார்களா? இல்லையே பல்வேறுவிதமான தேர்தல் தில்லுமுள்ளுகளைச் செய்து தான் ஆட்சிக்கு வருவதற்கு எப்படியெல்லாம் செயல்படு கிறார்கள். மோசமான கலவரங்களை ஏற்படுத்தி பல மக்களை படுகொலை செய்வதையும் பார்க்கிறோம். இந்த பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றி முதலாளிகளுக்கு எதிராக உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. அப்படி இருந்தபோதும் இந்த ஆட்சிக்காக எவ்வளவு இழிவான செயல்களிலும் இறங்கும் இவர்கள்தான் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் ஆட்சியை தொழிலாளர்களிடம் ஒப்படைத்துவிடுவார்களா? இவ்வாறான கற்பனைகளை குட்டிமுதலாளித்துவவாதி களும் திருத்தல்வாதிகளும் மக்களிடம் பரப்பி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் கள். இவர்களது துரோகப் பிரச்சாரத்தை முறியடிக்க மார்க்சின் போதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும்.

பாட்டாளி வர்க்கம்தான் சோசலிசப் புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தது என்று மார்க்ஸ் போதித்தார். பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் அதன் பொருளாதார நிலைமைகளின்காரணமாக சோசலிச உணர்வைப் பெற்று வளர்வதன் மூலம் சோசலிசப் புரட்சிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும் வர்க்கமாக இருக்கிறது என்று மார்க்ஸ் போதித்தார். முதலாளி வர்க்கமானது குட்டிமுதலாளித்துவப் பகுதியினரை சிதைத்து சின்னாபின்ன மாக்குகிறது, ஆனால் அதே வேளையில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்று சேர்த்து ஒரு தொழிற்சாலைக்குள் ஒன்றுதிரட்டுகிறது. ஆகவே தொழிலாளர்களுக்கு இயல்பாகவே கூட்டுணர்வு ஏற்படுகிறது என்றும் இதன் காரணமாகவும் தொழிலாளி வர்க்கத்தால் சோசலிசப் புரட்சிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடிகிறது என்று மார்க்ஸ் போதித்தார். இந்த தொழிலாளர் வர்க்கத் தைக் காட்டிலும் மிகவும் கொடூரமாக சிறுவுடமை வர்க்கத்தினரை சுரண்டியும் ஒடுக்கினாலும், இந்த குட்டிமுதலாளியப் பிரிவினர் சுதந்திரமாகப் போராடும் வலிமை இல்லாதர்கள் என்று மார்க்ஸ் போதித்தார். ஆனாலும் குட்டிமுதலாளித்துவ வர்க்கமானதுதனது நிலையைத் தக்கவைக்க முடியாத நிலை வளர்ந்துவரும் சூழலில் இந்த வர்க்கங்களையும் தொழிலாளி வர்க்கம் அல்லது கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் முதலாளித்துவவர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போராட அணிதிரட்ட வேண்டும் என்றே மார்க்ஸ் போதித்தார். அதாவது இந்த குட்டிமுதலாளி வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் வலிமை பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமே உண்டு என்றே மார்க்ஸ் போதித்தார்.

தொழிலாளர் வர்க்கக் கட்சிக்கு மார்க்சியத் தைப் போதிப்பதன் மூலம், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படைக்கு மார்க்சியம் போதிக்கப்படுகிறது. மார்க்சிய அறிவொளி யைப் பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் அதனை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் போதிப்பதன் மூலம் சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றக் கூடிய சக்திகள் அனைத்தும் சமூக மாற்றத்திற்கான விஞ்ஞான வழியைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வருவார்கள். அதனை பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற முடியும். அதோடு நமது பணி நின்றுவிடுவ தில்லை. கையில் கிடைத்த அரசியல் அதிகாரத்தையும் நாம் எப்படிப் பயன் படுத்துவது என்பதை இதுவரை நமக்கு கிடைத்த அனுபவத்திலிருந்து அதாவது நாம் செய்த தவறுகளை களைந்து புதிய வழியில் செயல்படுத்த வேண்டும். எனினும் புதிய வழியில் செயல்படும்போதும் தவறே வராது என்று நாம் கருதக் கூடாது. அந்தத் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு மேலும் சிறப்பான பாதையை வகுத்துக் கொண்டு செயல்படுவதன் மூலமே நாம் நமது லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும். ஆகவே இதுவரை நமக்கு கிடைத்த தோல்விகளிலிருந்து துவளக்கூடாது. மார்க்சின் போதனைகளை ஆழமாகக் கற்றுக் கொண்டு புறநிலை எதார்த்தத்தை மார்க்சிய அடிப்படையில் பகுத்து ஆய்வு செய்து விடுதலைக்கான வழியை வகுத்துக்கொண்டு செயல்படுவோம். அத்தகைய செயல்பாட்டின் போது நமக்குத் தோல்வி கிடைத்தாலும் அதற்கான காரணத்தை அறிந்து தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறுவோம். இத்தகைய முறையைக் கையாண்டே மனித சமூகம் இயற்கை பற்றிய விஞ்ஞான அறிவைப் பெற்று வளர்ந்திருக்கிறது. இதே முறையை கையாண்டு சமூக விஞ்ஞான அறிவையும் பெற்று வளர்வோம்....

தேன்மொழி.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்