மூலதனத்தின் பிறப்பு - காரல்மார்க்ஸ்- பகுதி - 1. தேன்மொழி.

 புராதன திரட்சியின் இரகசியம்

பணம் எவ்வாறு மூலதனமாக மாற்றப் படுகிறது, மூலதனத்தின் மூலம் எவ்வாறு உபரி மதிப்பும் மற்றும் உபரி மதிப்பிலிருந்து எவ்வாறு கூடுதல் மூலதனமும் உண்டு பண்ணப் படுகின்றன என்பதைப் பார்த்தோம். ஆனால் மூலதனத்தின் திரட்சி உபரி மதிப்பை முன் அனுமானிக்கிறது; உபரி மதிப்பு முதலாளித்துவ முறை உற்பத்தியை முன் அனுமானிக்கிறது; முதலாளித்துவ முறை உற்பத்தி பண்டங்களின் உற்பத்தியாளர்களின் கரங்களில் பெருமளவில்மூலதனமும் உழைப்புச் சக்தியும் முன்கூட்டியே இருப்பதை முன் அனுமானிக்கிறது. எனவேஇந்த இயக்கம் முழுவதும் ஒரு விஷ வட்டத்தில் திரிவது போலத் தோன்றுகிறது;முதலாளித்துவ திரட்சிக்கு முந்தியதான ஒரு புராதனத் திரட்சியை (ஆடம் ஸ்மித் கூறும் முந்தியதிரட்சியை) அனுமானிப்பதன் மூலம் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும். அந்தத் திரட்சிமுதலாளித்துவத்திற்குரிய உற்பத்தி முறையின் விளைவல்ல மாறாக அதன் துவக்க நிலையே ஆகும்.

அரசியல் பொருளாதாரத்தில் இந்த புராதனத் திரட்சி வகிக்கும் பங்கு இறைமையியலில் ஆதிப்பாவம் வகித்த அதே பங்கைப் போன்றதாகும். ஆதாம் ஆப்பிளை கடித்தான், அதன் விளைவாக மனித இனத்தின் மீது பாவம் சுமந்தது. பழங்கால உபகதையாக இது சொல்லப்படும் பொழுது இதன் தொடக்கம் விளக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

நெடுங்காலத்துக்கு முன்னால் இரு வகையான மக்கள் இருந்தார்கள்; ஒன்று, தளரா ஊக்கமும் விவேகமும் எல்லாவற்றுக்கும் மேலாக சிக்கனமும் கொண்டு வாழ்ந்த உயர்ந்தோர் குழாம்;மற்றது அதிகமாக ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையில் செலவிடுகிற சோம்பேறிப் போக்கிரிகள்.

இறைமையியலில் (மதவியலில்) உள்ள ஆதிப் பாவம் பற்றிய புராணக் கதை, மனிதன் தனது நெற்றி வியர்வையில் தன் ரொட்டியைத் தின்னும்படியாகச் சபிக்கப்பட்டவனானது எவ்வாறு (அதாவது உழைத்துத்தான் வாழ வேண்டும்) என்பதை நமக்கு நிச்சயமாயும் கூறுகிறது;ஆனால் பொருளாதார ஆதிப் பாவத்தின் வரலாறோ இது யாருக்கு எவ்வகையிலும் இன்றியமையாத கூறல்லவோ அத்தகைய மக்களும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்து கிறது. அது கிடக்கட்டும்! இவ்வாறாக, முந்தைய வகையினர் (அதாவது ஒழுக்கமுள்ளவர்கள்) செல்வம் திரட்டியதும், பிந்தைய வகையினர் (அதாவது ஒழுக்கம் கெட்டவர்கள்) தமது சொந்தத் தோலைத் தவிர விற்பதற்கு எதுவுமற்ற (அதாவது தமதுஉழைப்பு சக்தியைத் தவிர) நிலையைக் கடைசியாக எட்டியதும் ஏற்பட்டது. இந்த ஆதிப் பாவத்திலிருந்து மிகப் பெரும் பான்மையான மக்களின் வறுமையும் தொடங்குகிறது. இவர்கள் எவ்வளவோ பாடுபட்டும்கூட இன்றுவரை தம்மைத் தவிர வேறு விற்பதற்கு ஏதுமற்ற நிலையில் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் நெடுங்காலத்துக்கு முன்பே உழைப்பதை நிறுத்தி விட்ட போதிலும் அவர்களது செல்வம் இடையறாது பெருகி வருகிறது. இத்தகைய உப்புச்சப்பற்ற சிறுபிள்ளைத் தனமே சொத்துடமையை ஆதரிப்போரால் நம்மிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உதாரணமாக ஒரு காலத்தில் மிகவும் நுண்ணுணர்வுத் திறனுனிருந்தபிரெஞ்சு மக்களிடம் இதை ஓர் அரசியல் அறிஞன் வீறார்வத்துடன் மீண்டும் உரைக்கும் உறுதி எம்.தியோருக்கு இருந்தது. ஆனால் சொத்தைப் பற்றிய பிரச்சனை எழுந்தவுடன் எல்லோரும் நன்கறிந்த கண்ணோட்டமே எல்லாக் காலங்களுக்கும் எல்லா வளர்ச்சிக் கட்டங்களுக்கும் தகுதியானது என்று பறைசாற்றுவது ஒரு புனிதக் கடமை ஆகிவிடுகிறது. 

உண்மையான வரலாற்றில், வென்று கீழடக்கல், அடிமைப்படுத்துதல், கொள்ளை, கொலை ஆகியவை - சுருங்கக் கூறில் பலப்பிரயோகம் - மாபெரும் பங்கு வகிப்பது நன்கறிந்த நிகழ்வாகும். அரசியல்பொருளாதாரத்தின் மென்மையான வரலாற்றுப் பதிவேடுகளில் கிராமிய காவிய பாணி கால காலமாகக் கோலோச்சி வருகிறது.உரிமையும்"உழைப்பும்" எல்லாக் காலங்களிலும் செல்வம் திரட்டுவதற்கான ஏக சாதனங்களாக இருந்து வந்துள்ளன. இற்றைய ஆண்டு எப்போதுமே இதற்கு விதிவிலக்கு. உண்மையில் புராதனத் திரட்சி முறைகள் எவ்வகையிலும் கிராமிய காவிய பாணியிலானவை அல்ல.உற்பத்தி மற்றும் பிழைப்புச் சாதனங்களைப் போன்று பணமும் பண்டங்களும் சுயமாகவேமூலதனமாக இருக்கவில்லை. அவற்றை மூலதனமாக உருமாற்ற வேண்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றம் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே நடைபெற முடியும், அதாவது: இரண்டு மிகவும் வெவ்வேறு வகையினரான பண்ட- உரிமையாளர்கள் நேருக்கு நேர் வந்துசந்திக்க வேண்டும் தொடர்பு கொள்ள வேண்டும்; ஒரு புறம், மற்ற மக்களின் உழைப்பு -சக்தியை விலைக்கு வாங்கித் தாம் வைத்திருக்கும் செல்வத் தொகையை அதிகரித்துக்கொள்வதில் ஆர்வமுடைய பணம், உற்பத்திச் சாதணங்கள், பிழைப்புச் சாதனங்களின்உரிமையாளர்கள்,மறுபுறத்தில்,தமது சொந்த உழைப்பு - சக்தியை விற்பனை செய்யும்,எனவே உழைப்பை விற்பனை செய்யும் சுதந்திரமான தொழிலாளர்கள். இரட்டைப் பொருளில்இவர்கள் சுதந்திரமான தொழிலாளர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் அடிமைகள்பண்ணையடிமைகள் போன்று உற்பத்தி சாதனங்களின் ஒரு பகுதியாகவும் இருக்கவில்லை. விவசாய உரிமையாளர்களைப் போல உற்பத்தி சாதனங்களைச் சொந்தமாக வைத்திருக்கவும்இல்லை; எனவே தமது சொந்த உற்பத்தி சாதனங்கள் எவையும் இல்லாமல் சுதந்திரமாகஇருக்கிறார்கள். அவற்றால் கட்டுப்படுத்தப்படாது இருக்கிறார்கள். பண்டங் களுக்கானசந்தையின் இந்த துருவ காரணத்தோடு முதலாளித்துவ உற்பத்தியின் அடிப்படை நிபந்தனைகள் அமுலில் வருகின்றன. தமது உழைப்பு கைவரப்பெற உதவும் சாதனங்களான எல்லா உடமைகளி லிருந்தும் தொழிலாளர்கள் முற்றிலும் பிரித்து வைக்கப்படுகின்றார்கள் என்று முதலாளித் துவ அமைப்பு முன் அனுமானிக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி தன் சொந்தக் கால்களில் நிற்க முடிந்தவுடனேயே அது இந்தப் பிரிவினையை நிலை நிறுத்துகிறது என்பது மட்டுமின்றி தொடர்ச்சியாக விரிவடையும் அளவில் இதை திரும்பவும் உருவாக்குகிறது.

எனவே, முதலாளித்துவ அமைப்புக்குப் பாதை திறந்து வைக்கும் இந்த மாற்றப் போக்கு தொழிலாளர்களிடமிருந்து அவனது உற்பத்தி சாதனங்களின் உடமையைப் பறித்துக் கொள்ளும் மாற்றப் போக்கே தவிர வேறு எதுவும் அல்ல. இந்த மாற்றப் போக்கு ஒரு புறத்தில் சமுதாயத்தின் பிழைப்புக்கும் உற்பத்திக்குமான சாதனங்களை மூலதனமாகமாற்றுகிறது. மறுபுறத்தில் நேரடியாக உற்பத்தி செய்பவர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றுகிறது. எனவே, புராதனத் திரட்சி எனப்படுவது, உற்பத்தி செய்வோரை உற்பத்தி சாதனங்களிலிருந்து விலக்கி வைக்கும் வரலாற்று மாற்றப் போக்கே தவிர வேறு எதுவும் அல்ல. இது புராதனத் தன்மையுடையதாகத் தோன்றுகிறது. காரணம் இது மூலதனத்தின் வரலாற்றுக்கு முந்தைய கட்டத்தையும் அதற்கு இணையான உற்பத்தி முறையையும் உருவாக்குகிறது.முதலாளித்துச் சமூக அமைப்பின் பொருளாதாரக் கட்டுமானம் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் பொருளாதாரக் கட்டுமானத்திலிருந்து வளர்ந்து வந்ததா கும். பின்னதின் அதாவது நிலப்பிரபு வத்தின் அழிவு முன்னதின் அதாவது முதலாளித்துவத்தின் கூறுகளைக் கட்ட விழ்த்து விட்டது.

நிலத்தோடு பந்தப்பட்டு இருந்த நிலை முடிவுற்ற பிறகு மட்டுமே, இன்னொருவரது அடிமையாய் அல்லது பண்ணையடிமையாய் இல்லாத நிலைமை ஏற்பட்ட பிறகு மட்டுமே நேரடியாக உற்பத்தி செய்யும் தொழிலாளிக் குத் தன்னைத்தானே விருப்பப்படி கையாளும் நிலை ஏற்பட்டது. உழைப்புச் சக்தியை தாராளமாக விற்பனை செய்பவனாக, தனது பண்டத்தை எங்கே மார்க்கெட் அதாவது சந்தை கிடைக்கிறதோ அங்கே கொண்டு செல்பவனாக அவன் ஆகவேண்டுமானால் அவன் கில்டுகளின் (கைவினைஞர் சங்கம்) ஆட்சியிலிருந்தும், பணி பயில்வோர் கற்றுக்கொண்டே உழைப்போர் சம்பந்தமான அவற்றின் விதிகளிலிருந்தும் உழைப்பைப் பற்றிய மற்ற சட்டத் தடைகளிலிருந்தும் தப்பி வெளியேறி இருக்க வேண்டும். எனவே, உற்பத்தியாளர்களை கூலித் தொழிலாளர் களாக மாற்றும் இந்த வரலாற்றுப் போக்கு, ஒரு புறம் அடிமை முறையிலிருந்தும் கில்டுகளின் தளைகளிலிருந்தும் அவர்கள் அடைந்த விடுதலையாகக் காட்சி தருகிறது; நமது முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர் களின் பார்வையில் இந்தப் பக்கம் மட்டுமே நிலவுகிறது. ஆனால் மறு புறம், அவர்களது சொந்த உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்ட பிறகே, பழைய நிலப்பிரபுத்துவ ஏற்பாடுகள் வழங்கியிருந்த வாழ்க்கைக்கு உரிய எல்லா உத்தரவாதங் களும் பறிபோன பிறகு மட்டுமே புதிதாக விடுதலை பெற்ற இவர்கள் தம்மைத் தாமே விற்பனை செய்து கொள்கின்றவர்களாக ஆனார்கள். அவர்களது உடமைகள் பறிக்கப்பட்டதன் இந்த வரலாறு மனித குலத்தின் வரலாற்றுப் பதிவேடுகளில் குருதியும் தீயும் கொண்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வல்லுநர்களான தொழில் துறை முதலாளிகளுக்கு கில்டுகளின் தலைமையாளர்களிடமிருந்து கைவினைத் தொழில்களை எடுத்துக்கொள்வது மட்டு மின்றி செல்வ ஆதார வளங்களைஉடைமையாய் வைத்திருந்த நிலப்பிரபுக் களையும் அகற்ற வேண்டியதாக இருந்தது. இந்த வழியில் சமுதாய அதிகாரத்தை அவர்கள் வென்று பெற்றதானது ஒரு புறம் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் அதன் படுகேவலமான தனியுரிமைகளையும் எதிர்த்தும், மறுபுறம் கில்டுகளையும், உற்பத்தியின் சுதந்திரமான வளர்ச்சி, மனிதனை மனிதன் விருப்பம் போல் சுரண்டுவது இவற்றின் மீது கில்டுகள் போட்டிருந்த தளைகளையும் எதிர்த்தும் நடத்திய வெற்றிகரமான போராட்டத்தின் பலனாகக் காட்சியளித்தது. தமக்கு எவ்விதத்திலும் பொறுப்பில்லாததான நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக்கொண்டு மட்டுமே தொழில்துறை வீரர்கள் கத்தி வீச்சு வீரர்களின் இடத்தைப் பிடித்துக்கொள்வதில் வெற்றி அடைந்தார்கள். சுதந்திர மனிதனாகிவிட்ட ரோமன் அடிமை முன் ஒரு காலத்தில் தன்னைத் தானே தனது புரவலர்களின் எஜமானாகிக் கொள்ளப் பயன்படுத்திய, அதே நீசமான வழிகள் மூலமே அவர்கள் உயர்ந்து வந்துள்ளனர்.

கூலித் தொழிலாளியும் முதலாளியும் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த வளர்ச்சியின் தொடக்க நிலை தொழிலா ளியின் அடிமைத்தனமாகும். இந்த அடிமைத்தனத்தின் வடிவம் மாற்றமடைந்த திலும் நிலப்பிரபுத்துச் சுரண்டல் முதலாளித்துவச் சுரண்டலாக உருமாற்றம் அடைந்ததிலும் தான் முன்னேற்றம் அமைந்திருந்தது. இதன் முன்னேற்றத்தின் போக்கைப் புரிந்துகொள்ள நாம் வெகுதூரம் பின்னால் நோக்க வேண்டியதில்லை. மத்திய தரைக் கடற்பகுதியிருந்த சில நகரங்களில் அங்குமிங்குமாக ஏற்பட்டிருந்த முதலாளித்துவஉற்பத்தியின் முதல் துவக்கங்களை 14, 15ஆம் நூற்றாண்டுகளிலேயே நாம் காண நேர்ந்த போதிலும், முதலாளித்துவ சகாப்தம் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே துவங்குகிறது. அது எங்கெல்லாம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் பண்ணையடிமை முறை ஒழிப்பு நீண்ட காலத்துக்கு முன்பே செயல்படுத்தப் பட்டிருந் தது, மற்றும் மத்திய காலத்தின் ஆக உயர்ந்த அபிவிருத்தியை (முன்னேற்றத்தை) குறிக்கும் சர்வ சுதந்திர நகரங்கள் நீண்ட காலத்துக்கு முன்பே தேய்வுறலாயின.

புராதனத் திரட்சியின் வரலாற்றில், முதலாளித்துவ வர்க்கத்தினது உருவாக் கத்தின் நெம்பு - கோல்களாகச் செயல்பட்ட எல்லாப் புரட்சிகளும் சகாப்தம் படைப்பவனாக இருந்தன; எல்லாவற்றுக்கும் மேலாக, பெருந்திரளான மக்கள் அவர்களது பிழைப்புச் சாதனங்களிலிருந்து திடீரென் றும் பலவந்தமாகவும் பிய்த்தெடுக்கப்படு, உழைப்புச் சந்தையில் சுதந்திரமான "கட்டுப்பாடில்லாத" பாட்டாளிகளாகத் தூக்கி யெறியப்பட்ட தருணங்கள் சகாப்தம் படைப்பனவாகவே இருந்தன. விவசாயப் பொருள் உற்பத்தியாளரை, விவசாயியை, நிலத்திலிருந்து உடமை பறிமுதல் செய்து வெளியேற்றியதுதான் இந்த மாற்றப் போக்கு முழுவதற்குமான அடிப்படை ஆகும். இந்த உடமை பறிமுதலின் வரலாறு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அம்சங்களை மேற்கொள்கிறது. வெவ்வேறு வரிசை முறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் பல்வேறு படிநிலைகளுக்குள் கடந்து செல்கிறது. நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டுள்ள இங்கிலாந்தில் மட்டுமே இது அதன் சாஸ்த்ரீய வடிவத்தைக் கொண்டுள்ளது. (இது பற்றிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

                                                                        ++++++++++++++++

குறிப்பு:-முதலாளித்துவ முறை உற்பத்தி ஆக முதலில் வளர்ச்சியடைந்த இத்தாலியில், பண்ணையடிமை முறையின் ஒழிப்பும் மற்ற இடங்களை விட ஆக முன்னதாகவே நடைபெற்றது. பண்ணையடிமைக்கு நிலத்தில் சட்ட பூர்வமான எவ்வித உரிமையும் கிடைப்பதற்கு முன்னரே அந்த நாட்டில் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவனது விடுதலை அவனை உடனே ஒரு சுதந்திரமான பாட்டாளியாக மாற்றியது. மேலும் அவன் ரோமன் காலம் முதல் பெரும்பாலும் மரபுரிமையாக ஒப்படைக் கப்பட்டு நிலவிய நகரங்களில் உடனுக்குடன் புதிய எஜமானர்களைக் கண்டான். உலக மார்க்கெட்டின் புரட்சி அதாவது 15 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் வட இத்தாலியின் வணிக மேலாதிக்கத்தை அழித்த பொழுது, நேர் எதிர்த்திசையிலான ஓர் இயக்கம் தொடங்கியது. நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் கூட்டமாக நாட்டுப் புறத்துக்கு விரட்டப்பட்டனர். தோட்டங்கள் போடும் வடிவிலான சிறுவீத விவசாயத்துக்கு முன் என்றுமே கண்டிராத அளவில் தூண்டுதல் அளித்தார்கள். 

                                                                                       +++++++++++++

நமது விளக்கம்.

மார்க்சின் இந்த கட்டுரையிலிருந்து நாம் புரிந்துகொண்டு தெளிவடைய வேண்டிய வற்றை பார்ப்போம்.1. மூலதனம் திரள வேண்டுமானால் அந்த மூலதனமானது தொழிலாளர்களால் உருவாக் கப்படும் உபரி மதிப்பை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.

2. தொழிலாளர்களால் உருவாக்கப்படும் உபரி மதிப்பை கைப்பற்றக் கூடிய ஆற்றல் மூலதனத்திற்கு இருந்தால் மட்டுமே இந்த மூலதன உடமையானது முதலாளித்துவ உற்பத்தி முறையை பாதுகாத்து வளர்க்க முடியும்.

3. உழைப்புதான் பொருளை அல்லது பண்டத்தைப் படைக்கிறது அதிலிருந்துதான் மூலதனம் உருவாகிறது. அந்த மூலதனத்தைப் பயன்படுத்தியே முதலாளி உழைப்பு சக்தி என்ற பண்டத்தை தொழிலாளர்களிடமிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட உபரி மதிப்பை கைப்பற்றி முதலாளி தனது மூலதனத்தை மேலும் வளர்த்துக்கொள்கிறார். இந்த சுழற்சியின் மூலமே மூலதனம் வளர்கிறது.

4. இத்தகைய மூலதன வளர்ச்சியின் மூலமே முதலாளித்துவ உற்பத்தி முறையானது பாதுகாக்கப்பட்டு வளர்கிறது. அதற்கு அடிப்படை உற்பத்திச் சாதனங்களின் மீதான முதலாளியின் தனிச் சொத்துடமையாகும்.

5. இந்த வகையான முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்கு முன்பே புராதன மூலதன திரட்சி ஆரம்பமாகிவிட்டது.

6. இந்த புராதன மூலதன திரட்சியையும் ஆதாம் ஏவாள் கதையில் வரும் ஆதிப் பாவம் என்ற கருத்திற்கும் ஒற்றுமை உள்ளது.

7. நெடுங்காலத்துக்கு முன்பே உலகில் இரண்டுவகையான மக்கள் இருந்ததாக முதலாளித்துவ பொருளியலாரும் ஆன்மீக வாதிகளும் குறிப்பிடுகின்றனர். சிலர் ஒழுக்கமாகவும் சிக்கனமாகவும் வாழ்பவர்கள் என்றும் அவர்கள் செல்வந்தர்களாக ஆகின்ற னர் என்றும் மற்ற சிலர் ஒழுக்க மற்றவர்க ளாகவும் ஊதாரிகளாகவும் இருக்கிறார்கள் என்றும் அவர்களால் செல்வந்தர்களாக ஆக முடியாது என்றும் கூறி, சிலர் பணவசதியுள்ள வர்களாக இருப்பதற்கும் பலர் ஏழைகளாக இருப்பதற்கான காரணமாக இதனை விளக்கினார்கள். இது உண்மை அல்ல.

8.ஏழைகளில் பலர் ஒழுக்கம் உள்ளவர்களாக வும் கடுமையான உழைப்பாளிகளாகவும் இருந்தாலும் அவர்களின் வறுமை ஒழியாமல் தொடர்ந்து அவர்கள் மட்டுமல்லாமல் அவர் களது சந்ததியினரும் வறுமையில் வாடுவ தற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு இவர்கள் பதில் கொடுப்பதில்லை.

9. ஆனால் வரலாற்றில் இந்தக் கருத்துஉண்மையானது அல்ல என்று சொல்லி பலஅறிஞர்கள் போராடினார்கள். எனினும் நடைமுறையில் ஏழைகளின் பிரச்சனை களை தீர்ப்பதற்கு அவர்களால் ஒரு விஞ்ஞானப்பூர்வமான வழியை காட்ட முடியவில்லை.

10. வரலாற்றில் போர்கள், கொள்ளை, கொலை ஒரு நாட்டைக் கைப்பற்றி அடிமைப் படுத்துதல், ஆகிய கொடுமைகள் நடந்தனவே அதற்கு என்ன காரணம். இத்தகைய சமூகக் கொடுமைகளுக்கு ஒரு பொருளாதாரக் காரணம் உண்டு. அதுதான் ஒரு சிலர் எவ்விதமான உழைப்பிலும் ஈடுபடாமல் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி அவர்களை உழைப்பில் ஈடுபடுத்தி அதனால் கிடைக்கும் பயன்களை சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்த முறையிலேயே சிலர் செல்வந்தர் களாகவும் பலர் ஏழைகளாகவும் வாழும் நிலை உருவானது. என்ற உணைமையைமுதலாளித்துவ அறிஞர்களும் ஆன்மீக வாதிகளும் மக்களிடம் மூடிமறைக்கிறார் ள்.

11. சிலர் நெடுங்காலத்துக்கு முன்பே உழைப்பதை நிறுத்தி விட்டனர்,உதாரணமாக அன்றையமன்னர்கள், பண்ணையார்கள், முதலாளிகள், இன்றை மந்திரிமார்கள், போன்றவர்கள் எவ்விதமான உழைப்பிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் அவர்கள் மேலும் மேலும் செல்வங்களை சேர்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் காலம்காலமாக கடுமையாக உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர் கள், மீனவர்கள் சிறுவீத முதலாளிகள், வணிகர்கள் போன்றவர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் இருக்கின்றனர். குறைந்தபட்ச சொத்துக்களையும் விற்று விட்டு ஓட்டாண்டிகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அநீதிக்கு யார் காரணம்? விதியா? இல்லை ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களா?

12. அரசியல் பொருளாதார வரலாற்றை எழுதும் முதலாளித்துவ அறிஞர்கள், வரலாற்று நாயகர்களாக மன்னர்களையும் பெரும் பண்ணையார்களையும் பெரும் முதலாளிகளையும் இவர்களுக்காகவே பாடுபட்ட அரசியல்வாதிகளைப் பற்றியும் கதைகதையாகப் பேசி புகழ்ந்து அவர்களின் வளமான வாழ்க்கையை நியாயப்படுத்து வார்கள்.

13. ஆனால் அதிகால புராதன மூலதன திரட்சி என்பது இந்த முதலாளித்துவஅறிஞர்கள் சொல்வது போல பண்பான முறையில் திரட்டப்படவில்லை. இவர்கள் புகழ்வது போல இந்த மன்னர்களும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இருந்தது இல்லை. விதிவிலக்காக மிகச் சிலஅரசியல்வாதிகள் மக்களுக்காகப் பாடுபட்டார் கள். ஆனால் பெரும்பான்மையினர் மக்களுக்கு எதிராகவே மக்களை கொள்ளை யடித்தும், மக்களை அடிமைகளாக மாற்றியும் அடிமை வணிகம் செய்தும் இன்னும் பலவாறு கொடிய முறைகளை கையாண்டே புராதன மூலதன திரட்சியை நடத்தினார்கள் என்பது வரலாறு. இந்த வரலாறானது முதலாளித் துவம் தோன்றுவதற்கு முன்பே நடந்தது.

14. பணமும் பண்டங்களும் சுயமாகவே மூலதனம் ஆகிவிடாது. அதற்கு ஒரு குறிப்பிட்ட சூழல்உருவாக வேண்டும். ஒரு புறம் பணம், உற்பத்திச் சாதனங்களை உடமையாகக் கொண்ட முதலாளிகள், மறுபுறம் எவ்விதமான உடமையும் இல்லாத தொழிலாளிகள் இவ்விருபிரிவினரும் ஒன்று சேர்ந்து சில ஒப்பந்தங் களின் மூலம் உற்பத்தியில் ஈடுபடும் போதுதான் முதலாளிகளிடம் இருக்கும் பணமும், உற்பத்திச் சாதனங்களும் மூலதனமாக மாறும்.

15. தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் அடிமைச் சமுதாயத்தில் இருந்தது போல் அடிமைகளாகவும் பண்ணையடிமைச் சமூகத்தில் இருந்தது போல் பண்ணை அடிமைகளாகவும் இல்லை. ஒப்பீட்டளவில் தொழிலாளர்கள் சுதந்திரமானவர்கள். அவர்களிடமுள்ள உழைப்புச் சக்தியை யாரிடமும் விற்க முடியும் என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. மேலும் பண்ணையார்களிடம் இருந்தது போல் உற்பத்திச் சாதனங்கள் எதுவும் இவர்களுக்குச்சொந்தமாகவும் இல்லை. இத்தகைய தன்மை கொண்டவர்களே தொழிலாளர்கள் ஆவார்கள்.

16. முதலாளித்துவ உற்பத்தி உருவாகி வளர வேண்டுமானால், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் எவ்விதமான உற்பத்திச் சாதனங்களும் அவர்களின் உடமையாக இருக்கக்கூடாது என்பது முன்நிபந்தனை யாகும்.

17. ஆரம்ப காலங்களில் உருவான முதலாளிகள் இந்தத் தொழிலாளர்களிடம் இருந்த உற்பத்திச் சாதனங்களை அவர்களிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள். தொடர்ந்து முதலாளித்துவத்தை வளர்க்கின்ற போது இதனை தொடர்ந்து உறுதிப்படுத் தினார்கள். ஆகவேதான் அன்று உழைக்கும் மக்களிடமிருந்து முதலாளிகளால்பறிக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளிடமிருந்து பறித்து அதனைதொழிலாளர்களின்உடமையாக மாற்ற வேண்டும் கம்யூனிஸ் டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

18. நிலவுடமை அமைப்பிலிருந்து முதலாளித்து அமைப்பிற்கு மாறுகின்ற போக்கானது உழைக்கும் மக்களுக்கு சொந்தமான உற்பத்தி சாதன உடமைகளை அவர்களிடமிருந்து பறித்ததன் மூலமாகவே நடந்தேறியது.

19. இந்த மாற்றப் போக்கு ஒரு புறத்தில் உற்பத்தி சாதனங்களை மூலதனமாக மாற்றுகிறது மறுபுறத்தில் உற்பத்திச் சாதனங்களை இழந்த உழைக்கும் மக்கள் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படு கின்றனர்.

20. ஆகவே புராதன மூலதன திரட்சி என்பது உழைக்கும் மக்களை உற்பத்திச் சாதனங்களிலிருந்து விலக்கி வைக்கும் வரலாற்று மாற்றுப் போக்கே ஆகும்.

21. முதலாளித்துவ உற்பத்தி முறையானது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை போன்று சுரண்டலை அடிப்படையாகக் கொண்டாலும், முதலாளித்துவ உற்பத்தி முறையானது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையைக் காட்டிலும் மேலானதாகவும் வளர்ச்சி பெற்றதாகவும் இருக்கிறது.

22. முதலாளித்துவ உற்பத்தி முறையானது முற்போக்கானதாக இருந்தாலும் சோசலிச உற்பத்தி முறையோடு ஒப்பிடும் போது முதலாளித்துவம் பிற்போக்கானதே ஆகும்.

23.விவசாயிகள்நிலத்தோடு பிணைக் கப்பட்டு பண்ணையடிமைகளாக இருக்கும் நிலைக்கு முடிவுகட்டி சுதந்திரமான தொழிலாளிகளாக மாறிய போதுதான் அவர்கள் தங்களது உழைப்பு சக்தியை சுதந்திரமாக முதலாளிகளுக்கு விற்கும் நிலையை தொழிலாளிகள் அடைந்தனர்.

24. தொழிலாளர்கள் நிலப்பிரபுத்துவ பண்ணையடிமையிலிருந்து மீண்டுவிட்ட பிறகும் கைவினைஞர்களின் சங்க விதிகளிலிருந்தும் உழைப்பு பற்றிய பிற தடைச் சட்டங்களுக்கும் முடிவுகட்டிய பிறகுதான் தொழிலாளர்கள் தங்களது உழைப்பு சக்தியை அவர்களின் விருப்பத் திற்கு ஏற்ப விற்பதற்கு முடிந்தது.

25. உழைக்கும் மக்கள் கூலித் தொழிலாளர்களாக மாறும் இந்த வரலாற்றுப் போக்கு ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத் திலிருந்தும் மறுபக்கம் கைவினைஞர்களின் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்ற போராட்ட வரலாறாகவே காட்சியளிக்கிறது. இந்த வரலாறு மேற்கு ஐரோப்பிய வரலாறாகும். ஆனால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட சனாதன சாதி அமைப்புமுறையையும் கூடுதலாகவும் மிகவும் கடுமையான போராட்டங்களின்மூலமும்தான் இங்குள்ள உழைப்பாளர்கள் தொழிலாளர் களாக மாறி அவர்களது உழைப்புசக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்தார்கள். இந்த வகையில் சனாதனவாதிகளை எதிர்த்தும் தொழிலாளர்களும் முதலாளி களும் போராட வேண்டிய நிலை குறிப்பாக இந்தியாவின் வரலாறாக அமைகிறது.

26. உழைப்பாளர்கள் நிலப்பிரபுத்துவ அடிமைத் தனத்திலிருந்தும் கைவினைஞர்களின் தளைகளிலிருந்து மட்டுமல்லாது நிலப்பிரபுத் துவ சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கைக்கான உத்தரவாதங்கள் அனைத் தும் பறிபோன பிறகுதான் தொழிலாளர்கள் முதலாளிகளின் கூலி அடிமைகளாக மாறினர். இவ்வாறு தொழிலாளர்களாக ஒப்பீட்டளவில் சுதந்திரமாக மாறிய போதும் இந்தியாவில் உழைப்பாளர்கள் சாதிய தீண்டாமை முறையிலான அடிமைத்தனத்திலிருந்து இப்போதும் விடுதலைக்காகப் போராட வேண்டியுள்ளது. இதற்கு அடிப்படையான சனாதனக் கொள்கையை எதிர்த்தப் போராட்டங்களை தொழிலாளி வர்க்கமானது தனது வர்க்கப் போராட்டத்தோடு இணைத்து கூடுதலான வகையில் போராட வேண்டியது அவசியமாகிறது.

27. மேற்கு ஐரோப்பாவிலுள்ள முதலாளிகள் நிலப்பிரபுத்துவ அடிப்படையிலான சொத்து டமை உறவுகளை நீக்கவும், கில்டுகளிட மிருந்து தொழிலாளர்களை விடுவிக்கமும் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ மன்னர் ஆட்சியை வீழ்த்தி பாராளுமன்ற முறையி லான ஆட்சியைக் கொண்டு வருவதற்காக போராடினார்கள். ஆனால் இது போன்ற போராட்டத்தை இந்தியாவில் நடத்துவதற்காக முதலாளித்துவ வர்க்கம் வளர்ச்சி அடைவ தற்கு முன்பு இந்தியா பிரிட்டீஷாரின் காலனி நாடாக மாறிவிட்டது. இந்தியாவில் உருவான முதலாளிகளில் சிலர் பிரிட்டீஷாரோடும் நிலப்பிரபுத்துவ சக்திகளோடும் சமரசம் செய்துகொண்டதால் ஐரோப்பாவில் நடந்தது போன்ற வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடக்கவில்லை. அதன் காரணமாகவே இப்போதும் சனாதனத்தின் ஆதிக்கம் நீடிக்கிறது. சாதிகள் ஒழியவில்லை. ஆகவே அந்த முதலாளிகள் செய்யத் தவறிய கடமைகளில் ஒன்றான சாதி ஒழிப்பு நடவடிக்கையையும் தொழிலாளி வர்க்கம் அதன் தலைமையில் சாதிக்க வேண்டியது அவசியமாக இந்திய வரலாற்றில் உள்ளது.

28. தொழிலாளர்களின் கூலி அடிமைத்தன மானது, நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைத் தனத்திலிருந்து மாறுபட்டது, மேலும் பண்ணையடிமைத்தனத்தைக்காட்டிலும் உயர்வானது. கூலி அடிமைத்தனத்தில் தொழிலாளர்கள் தனது உழைப்பு சக்தியை தனக்கு விருப்பப்பட்டவர்களிடம் விற்பனை செய்வதற்கான சுதந்திரம் தொழிலாளிக்கு இருந்தது. இந்த அடிமைத்தனத்தின் வடிவ மாற்றம்தான் முதலாளித்து சமூகமாக மாறியதன் மூலம் சமூகம் அடைந்த முன்னேற்றமாகும். மேலும் இங்கு நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறையானது  முதலாளித்துவ சுரண்டல் முறையாக மாறியது.

29. மத்திய காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் இருந்த நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகளை எதிர்த்து முதலாளிகளின் தலைமையில் நடந்த மாபெரும் புரட்சிகளின் வரலாற்றின் காரணமாகவே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிலப்பிரபுத் துவ மன்னர்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற முறையிலான முதலாளிகளின் ஆட்சி நிறுவப்பட்டு, மன்னராட்சி யிலிருந்த பிற் போக்கு கருத்துக்களும் கொள்கை களும் புறக்கணிக்கப்பட்டு தொழில் துறையில் மாபெரும் முன்னேற்றங் கள் ஏற்பட்டு, நவீன நாகரீகம் படைத்த சமூகமாக அந்த நாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டது.

30. மேற்கு ஐரோப்பாவில் நடந்த புரட்சிகள் போன்ற புரட்சிகள் இந்தியாவில் நடக்கவில்லை. அதன் காரணமாகவே இங்கே பிற்போக்கு சனாதனக் கருத்துக் களின் செல்வாக்கிலிருந்து மக்கள் மீளவில்லை. இங்கு விவசாயமும் வளர்ந்து விவசாயிகளின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் இல்லை. தொழில்துறையும் வளர்ந்து தொழிலாளர்களின் வாழ்வும் சீரடைய வில்லை. மாறாக தொழிலாளர்கள் முதல் விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் மோசமாகி பசி, பட்டினிச் சாவை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

31. என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்ற பாரதியின் பாடல் வரிகளை நினைவு கூர்வோம். உழைக்கும் மக்கள் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்தும் சாதிவாத சனாதனக் கருத்துநிலையிலான அடிமைத் தனத்திலிருந்தும் மீண்டுவர, மூலதனத்தை எதிர்த்தும் பிற்போக்கு சனாதனத்தை எதிர்த்தும் தொழிலாளி வர்க்கத்தின் அதாவது புரட்சிகரமான கம்யூனிஸ்டுகளின் தலைமையில் இந்தியாவில் பாதிப்பிற் குள்ளாகி ஒடுக்கப்பட்ட அனைத்து சாதிகளைச் சேர்ந்த மக்களையும் ஒடுக்கப் பட்ட அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்தமக்களையும் ஒன்றுபடுத்தி போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை..... தொடரும்.. தேன்மொழி.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்