மோடியின் ‘திமாஹி நக்சல்கள்’ என்பதன் அபாயகரமான அர்த்தம்: கரண் தாப்பர்
மோடியின் தெளிவற்ற ‘திமாஹி நக்சல்’ என்ற முத்திரை, அவரது அரசியலை எதிர்க்கும் எவரையும் தேசத்துரோகி என்று முத்திரை குத்தப் பயன்படக்கூடும்.
நான் முதன்முதலில் அறுபதுகளில் நக்சல் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டேன். அறுபதுகளின் பிற்பகுதியில் செய்தித்தாள்கள் முழுவதும் அது நிறைந்திருந்தபோதிலும் அதன் அர்த்தத்தை நான் புரிந்துகொண்டேனா என்பது சந்தேகமே. அவர்கள் வங்காளத்தின் நல்ல மக்களை அச்சுறுத்தும் ஒரு கும்பல் என, நான் புரிந்திருந்தேன். நான் எப்போதாவது சாதாரணமாகச் செய்தித்தாள்களைப் படிக்கும் இடமான டேராடூனில் உள்ள பள்ளியில் இருந்து வங்காளம் வெகு தொலைவில் இருப்பதாகவே உணர்ந்தேன்.
70களின் முற்பகுதியில் அது அதிக அர்த்தமுள்ள ஒரு சொல்லாக மாறியது. எங்களது புதிய தலைமை ஆசிரியரின் மகன் திலீப் சிமியோன் அக்காலத்தில் ஒரு நக்சலைட்டாகவும் தலைமறைவாகவும் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானபோது அவருடைய கடந்த காலத்தின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானவர் என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஒருவிதத்தில் நிஜ வாழ்க்கையின் ராபின் ஹூட் போல அது அவரை ஒரு கதாநாயகனாக்கியது.

கடந்த வார இறுதியில் பிரதமர் ‘திமாஹி நக்சல்கள்’ அச்சுறுத்தல் பற்றிப் பேசியபோது அவர் துல்லியமாக என்ன குறிப்பிடுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தைகள் எனக்குப் புரிந்தன. அந்தச் சொற்றொடர் தெளிவற்றதாகவும் தன்னிச்சையானதாகவும் வரையறுக்கப்படாததாகவும் தோன்றியது. இது ‘த்ரூ தி லுக்கிங் கிளாஸ்’ நூலில் ஹம்ப்டி டம்ப்டி ஆலிஸிடம் ‘நான் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தும்போது அதற்கு நான் என்ன அர்த்தம் கொடுக்க விரும்புகிறேனோ அதுவே அதன் அர்த்தம்’ என்று சொல்வது போன்றதா?
மோடி, ‘இடதுசாரி அறிவுஜீவிகளையும் ஆர்வலர்களையும் குறிப்பிடுகிறார்’ என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அப்படியானால் மார்க்சிஸ்டுகள், லெனினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் திமாஹி நக்சலிஸ்டுகளா? அந்தத் தர்க்கத்தின்படி மோடியின் இந்தியாவில் எரிக் ஹாப்ஸ்பாம், கிறிஸ்டோபர் ஹில், ஈ.பி. தாம்சன் போன்ற வரலாற்றாசிரியர்களுக்கும், ஹெர்பர்ட் மார்க்யூஸ், அந்தோனியோ கிராம்சி போன்ற தத்துவஞானிகளுக்கும், ஹோ சி மின், பிடல் காஸ்ட்ரோ, ஓலாப் பால்மே, வில்லி பிராண்ட், கிளமென்ட் அட்லீ போன்ற அரசியல்வாதிகளுக்கும் இடமில்லை. இது உண்மையாக இருந்தால், அது ஒரு துயரமான, மதிப்பிழந்த நிகழ்வாக இருக்கும்.
இந்தியாவின் சில சிறந்த வரலாற்றாசிரியர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள். நான் இர்பான் ஹபீப், பிபன் சந்திரா, ரொமிலா தாப்பார் போன்றவர்களைக் குறிப்பிடுகிறேன். அவர்களின் பங்களிப்பைக் கேள்வி கேட்டு அதைத் திமாஹி நக்சலிசம் என்று முத்திரை குத்த பா.ஜ.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது? இது வெறும் ஆணவம் மட்டுமல்ல. இது மெக்கார்த்தியிசத்தின் சாயலைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதுகிறேன்.
தனது உரையில் திமாஹி நக்சல்களுக்கு உதாரணங்களைக் கூறிய ளமோடி ‘பல ஆண்டுகளாக மாவோயிச சித்தாந்தம் கொண்ட தனிநபர்கள் நாட்டின் அதிகார மையங்களில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தனர். அரசாங்கக் குழுக்களில் ஆலோசகர்களாக இருந்தனர். இந்த மாவோயிச சித்தாந்தம் அரசின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தியது’ என்றார். காங்கிரஸ் அரசாங்கங்கள் திமாஹி நக்சல்களாக இருந்தன என்று அவர் குறிப்பிடுகிறாரா?

முரண்பாடு என்னவென்றால் 1974ம் ஆண்டு ரயில்வே வேலைநிறுத்தத்தின் போதும், பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போதும் இந்திரா காந்தி ஜார்ஜ் பெர்னாண்டஸை ஒரு திமாஹி நக்சல் என்று கருதியிருப்பார். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அடல் பிஹாரி வாஜ்பாயும் அவரை மூத்த அமைச்சர்களாக ஆக்கினார்கள். வாஜ்பாய் அவருக்குப் பாதுகாப்புத் துறையை வழங்கி தனது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் உறுப்பினராகவும் ஆக்கினார். இந்தியச் சூழல்களில் திமாஹி நக்சல் என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை என்பதற்கு இதுவே சான்று அல்லவா?
ஒருவேளை மோடி, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், கன்னையா குமார் ஆகியோரை மனதில் வைத்திருக்கிறாரா? அல்லது அபிஜீத் திப்கே, நேஹா போரா போன்ற மாணவர் தலைவர்களையா? அப்படியென்றால் அவர் ஒரு முழு மாணவர் தலைமுறையையும் கல்வி முறையையும் சவாலுக்கு அழைப்பது போல் ஆகாதா? அது அவரால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வதாக அமையாதா?
எனில், பிரதமருக்குச் சவாலாக இருப்பவர், அவரது கொள்கைகளைக் கேள்வி கேட்பவர், அவரது சர்வாதிகாரப் போக்கை எதிர்ப்பவர் எவரும் திமாஹி நக்சல் என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படியானால், இது ஜனநாயக விரோதமானது. இது ஜனநாயகத்தின் தாய்க்குப் பொருத்தமற்றது என்பது மட்டுமல்லாமல், இது 1930-40 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் எதிர்க்கட்சிகள் மீதான ஹிட்லரின் அணுகுமுறையையும் நினைவூட்டுகிறது.
இது மேலும் ஒரு கேள்வியை எழுப்புகிறது. இது மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது தேவையற்றதாகவோ கூட உங்களுக்குத் தோன்றலாம். அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதையே பணியாகக் கொண்டிருந்த ஹிட்லரின் ரகசியக் காவல் படையான கெஸ்டபோவின் இந்திய வடிவத்தை உருவாக்குவதற்கு உங்கள் எதிராளிகளை திமாஹி நக்சல்கள், அறிவுசார் நக்சல்கள் என்று அழைப்பது இதற்கு ஒரு சில படிகள் மட்டுமே தொலைவில் உள்ளது என்று கருதி நீங்கள் அஞ்சுகிறீர்களா?

‘நாம் இந்த திமாஹி நக்சல்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்’ என்று மோடி கூறினார். அவர்களைக் ‘குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்றும் அவர் குறிப்பிட்டார். சிலருக்கு நான் சொல்வது அச்சுறுத்துவதாகத் தோன்றலாம். நான் சொல்ல வருவது எளிமையானது. திமாஹி நக்சல்களை ஒழிப்பதில் மோடி கொண்டுள்ள எண்ணம் உறுதியானது எனில், நமது ஜனநாயகத்தின் கோட்பாடுகளையும் அரசியலமைப்பின் உயரிய விழுமியங்களையும் சிதைக்கக்கூடிய ஒரு கொள்கையாக அது கருதப்படலாம். இது அவர் எவ்வளவு தூரம் செல்கிறார் என்பதைப் பொறுத்தது.
எனது கவலைகள் சரியானவை என்றால், அவசரநிலைக் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் ஏற்பட்ட மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக மோடியின் சுதந்திர தின உரை அமைகிறது என்று நான் கூறுவதும் சரியாகத்தானே இருக்கும்?
நான் சொல்வது தவறாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்களும் அப்படித்தான் நினைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நன்றி: தி வயர்/ 20 ஆகஸ்ட் 2026..
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக