நூலின் பெரும் பகுதி நிர்வாகம் சம்பந்தமான பிரச்சினையையே பேசுகிறது. ஆனால் பேச வேண்டிய வர்க்க அரசியலையோ ஏன் பாட்டாளி வர்க்க புரட்சிப்பற்றிய பிரச்சினையோ நூலில் காணவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை விளக்கும் பல நூல்கள்,
இந்த வீழ்ச்சியை "தவிர்க்க முடியாதது" அல்லது
"சோசலிசத்தின் அடிப்படைத் தோல்வி" என்று முன்வைக்கின்றன. அத்தகைய
வாதங்களை ஏற்காமல், வீழ்ச்சியின் உள்ளார்ந்த வர்க்க இயக்கவியலையும், அதற்கு வழிவகுத்த அரசியல் முடிவுகளையும் ஆராய்வதே இந்த
ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.
இதில் மையமான வாதம் இதுதான்: சோவியத் வீழ்ச்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டதன் விளைவு. அதைக்
கைவிட்டதற்குக் காரணம், கட்சிக்குள் வளர்ந்த திருத்தல்வாதம் மற்றும் குட்டி
முதலாளித்துவ அடுக்கின் செல்வாக்கு.
2. அடிப்படைக் கோட்பாட்டுக் கட்டமைப்பு
2.1 லெனினின் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்"
லெனின், "பாட்டாளி
வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்" (1918)
நூலில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது பெரும்பான்மை
உழைக்கும் மக்களின் ஜனநாயகம் என்றும், அது முதலாளிகளின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான அரசு அதிகாரம்
என்றும் விளக்கினார். காவுத்ஸ்கி இதை "ஜனநாயகத்துக்கு எதிரானது" என்று
குற்றம் சாட்டியபோது, லெனின் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்தினார்.
இங்கு முக்கியமானது: சர்வாதிகாரம் என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின்
மீது செலுத்தும் அதிகாரம். அது முடிவடையும்போது, வர்க்கங்களும் அரசும் படிப்படியாக மறையும் என்பது
மார்க்சியக் கோட்பாடு. எனவே, சர்வாதிகாரத்தைக் கைவிடுவது சோசலிசத்தைப் பாதுகாக்கும்
நடவடிக்கை அல்ல; அது எதிரி வர்க்கத்துக்கு வாய்ப்புகளைத் திறந்துவிடும்
நடவடிக்கை.
2.2 சீன-சோவியத் விவாதம் (1956–1960
மற்றும் அதற்குப்
பின்)
1956-இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது மாநாட்டில் குருசேவ் முன்வைத்த "அமைதியான
சகவாழ்வு" கொள்கையும், ஸ்டாலின் பற்றிய விமர்சனமும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமான கருத்து
வேறுபாடுகளை உருவாக்கின. பின்னர் இவ்விவாதம் பகிரங்கமான பிளவாக மாறியது. சீனத்
தரப்பு,
அமைதியான சகவாழ்வு என்ற பெயரில் ஏகாதிபத்தியத்துடன் சமரசம்
செய்யப்படுவதாகவும், வர்க்கப் போராட்டம் கைவிடப்படுவதாகவும் வாதிட்டது. இது சோசலிச நாடுகளுக்குள்
திருத்தல்வாதத்தின் அடையாளம் என்று சீனம் கருதியது.
இவ்விவாதத்தின் அடிப்படைக் கேள்வி: ஏகாதிபத்தியத்துடனான போட்டி,
வர்க்கப்
போராட்டத்தைப் பலவீனப்படுத்தலாமா? இதற்கு சீனத் தரப்பின் பதில் "இல்லை" என்பதாக
இருந்தது.
2.3 மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் தர்க்கம்
மாவோ, சோவியத் அனுபவத்திலிருந்து ஒரு முக்கியப் பாடத்தைப் பெற்றதாக வாதிட்டார்: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழும் வர்க்கப் போராட்டம் தொடர்கிறது. கட்சிக்குள்ளேயே முதலாளித்துவ வேர்கள் உருவாகக்கூடும். அவற்றைத் தடுக்க, "தொடர் புரட்சி" அவசியம். இதுவே கலாச்சாரப் புரட்சி (1966–1976).
3.1 விடுபட்ட அடிப்படைகள்
மூல நூல், சோசலிசத்தின்
சாதனைகளை விரிவாகப் பட்டியலிடுகிறது: முழு வேலைவாய்ப்பு,
இலவசக் கல்வி, அனைவருக்குமான சுகாதாரம், மானிய விலைப் பொருட்கள், குறைந்த வருமான இடைவெளி. இவை உண்மையான சாதனைகள். ஆனால் நூல்
கவனிக்கத் தவறுவது:
- பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவமும் உள்ளடக்கமும்
பற்றிய லெனினின் வரையறை.
சோசலிச சாதனைகளின் அரசியல் அடிப்படை என்ன என்பதை விளக்காமல்,
சாதனைகளை மட்டும்
பட்டியலிடுவது முழுமையான பகுப்பாய்வாகாது.
- கட்சி ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவக் கோட்பாடு
எவ்வாறு செயல்பட்டது என்ற
கேள்வி. கட்சிக்குள் விவாதம் குறைந்தபோது திருத்தல்வாதம் எவ்வாறு வளர்ந்தது?
- "இரண்டாவது பொருளாதாரம்" பற்றிய ஆழமான ஆய்வு.
மூல நூல் இதை
அறிமுகப்படுத்தினாலும், அதன் வர்க்க உள்ளடக்கத்தை விரிவாக ஆராயவில்லை.
இதன் தொடர்ச்சியாக இன்னும் சில தேடல்களை காண்போம்
வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட சோசலிசம் - நூல் மீதான விமர்சனம்
நூலின் பெரும் பகுதி நிர்வாகம் சம்பந்தமான பிரச்சினைகளையே பேசுகிறது. ஆனால்
பேச வேண்டிய வர்க்க அரசியலையோ பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய பிரச்சினையையோ
இந்நூலில் காண முடியவில்லை. எனவே நமது ஆய்வு மார்க்சிய வழிகாட்டலின்
அடிப்படையிலேயே அமையும்.
வர்க்கப் போராட்டம், அதனைக் கைவிட்ட நிலைப்பாடு ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள,
கட்டுரையில் உள்ள இணைப்பின் உள்ளே சென்று பார்க்குமாறு
தோழர்களை வேண்டுகிறோம்.
ஒரு நாட்டில் சோசலிசம் உருவாவதற்கு மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர்.
அதற்கான கண்ணோட்டத்தையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கொடுத்துள்ளனர். அதே வேளையில்,
சோசலிசம் வீழ்த்தப்படுவதற்கும் வாய்ப்புண்டு என்று
எச்சரிக்கையும் செய்துள்ளனர். சோசலிசத்தின் வீழ்ச்சியைத் தவிர்க்க என்ன செய்ய
வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளனர். கலாச்சாரப் புரட்சியின் அவசியத்தையும்
போதித்துள்ளனர். இனி அதைத் தேடுவோம்.
லெனினின் கருத்துகள்
ஒரு தனி நாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியம் என்றும்,
அங்கு சோசலிசத்தைத் தொகுத்துக்கொள்ளவும் பராமரிக்கவும்
முடியும் என்றும் லெனின் குறிப்பிட்டார். ஆனால் உலக முதலாளிய அரசியல்,
பொருளாதார, இராணுவச் சூழலில், பெரும்பாலான நாடுகள் சோசலிசக் கட்டமைப்புக்குள் வராத
வரையில்,
ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் இறுதி வெற்றி சாத்தியமில்லை
என்றும் அவர் குறிப்பிட்டார்.
சோசலிச நாட்டின் உள் முரண்பாடுகளையும், சோசலிச நாட்டுக்கும் உலக முதலாளியத்துக்கும் இடையிலான
முரண்பாடுகளையும், பிரிக்க முடியாத ஒன்றின் இரட்டை நிலைகளாக ஒருங்கிணைத்துக் காண்பதில் லெனின்
வெற்றி கண்டார்.
முதலாளிய மீட்சியின் சாத்தியம்
பாட்டாளி வர்க்கம், தான் வென்றெடுத்த அதிகாரத்தைக் கொண்டு முதலாளி வர்க்க எதிரிகளை அடக்கி வைக்கத்
தவறினால்,
மொத்த வெற்றியுமே தோல்வியில் முடியும் என்று எங்கெல்சு (12.05.1883)
கருதினார். ரஷ்யப் புரட்சிக்கு முன்பே இத்தகைய முதலாளிய
மீட்சி குறித்து லெனின் குறிப்பிட்டுள்ளார் (10 : 280; 26 : 172).
சிறு உடைமை முதலாளியமுறை, குலாக்குகளின் எழுச்சி, அதிகாரிகளாக உருவெடுத்த கம்யூனிஸ்டுகள்,
உலக முதலாளிய இராணுவ அபாயம் ஆகியவற்றால் பின்னடைவு,
அதாவது லெனின் குறிப்பிட்ட "முதலாளிய மீட்சி",
சாத்தியம் என்பதை லெனின் இறுதி வரை வலியுறுத்தினார் (27
: 337-338; 28 : 172; 31 : 493-95).
இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய சாத்தியமான அம்சங்களை லெனின் பின்வருமாறு
தொகுத்தார்:
- வர்க்க
உணர்வு பெற்ற தொழிலாளர்-விவசாயிகளின் இணைவு. குலாக்குகளுக்கு எதிராக ஏழை
விவசாயிகளை ஒருங்கிணைத்தல், அதிகாரத் தவறுகளைச் சரி செய்தல்,
தொழிலாளர்-விவசாயிகளின்
பண்பாட்டு நிலையை உயர்த்துதல்.
- நேர்மையான
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் (A Genuine, 27 :
394).
சுருக்கமாகச் சொன்னால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசின் கீழ், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்-விவசாயிகள் தொடர்ந்து
நடத்தும் வர்க்கப் போராட்டமே முதலாளிய மீட்சியைத் தடுக்கும்;
உருவான சோசலிச அமைப்பையும் பராமரிக்கும். இது தற்காப்பு
நிலை (Defensive)
ஆகும். உலக முதலாளிய அமைப்புக்குள் சோசலிச அமைப்பு நடத்தும்
ஊடுருவலையும் விரிவாக்கத்தையும் பொறுத்து இது மாறிச் செல்லும்.
எனவே,
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்,
வர்க்கப் போராட்டம் ஆகிய இரண்டு ஆயுதங்கள் இல்லையெனில்,
அல்லது அவற்றை அலட்சியப்படுத்தினால்,
லெனின் குறிப்பிட்டது போல முதலாளிய மீட்சிக்கான நம்பிக்கை,
முதலாளிய மீட்சிக்கான முயற்சிகளில் போய் முடியும். அந்த
முயற்சி உறுதியாகவும் தவிர்க்கவியலாத வகையிலும் (surely,
inevitably) தொழிலாளர்
அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிடும் (27 : 337; 28 : 254). இந்த நிபந்தனையின்றி, வரலாற்றில் பின்னடைவு தவிர்க்க இயலாதது.
மாவோவின் அனுபவம்
சீனப் புரட்சிக்குப் பிந்தைய மாவோவின் அனுபவத்தையும் இதனுடன் பொருத்திப்
பார்க்கலாம். மாவோ லெனினியத்தைப் பின்பற்றி, ரஷ்யா மற்றும் யூகோஸ்லாவியாவின் அனுபவங்களைத்
தொகுத்துக்கொண்டு சீன நடைமுறையை விமர்சித்தார். லெனின் ஒரு முறை குறிப்பிட்டார்:
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது வர்க்கப் போராட்டம் முடிந்துவிட்டதைக்
குறிக்கவில்லை; மாறாக,
அதைப் புதிய வடிவங்களில் தொடர்ந்து நடத்துவதாகும்.
தோல்வியடைந்த ஆனால் அழிந்துவிடாத முதலாளியத்தை எதிர்த்து,
அரசதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள பாட்டாளி வர்க்கம்
நடத்தும் வர்க்கப் போராட்டமே அது. (விடுதலை மற்றும் சமத்துவம் ஆகிய முழக்கங்களை
வைத்து மக்களை ஏமாற்றுதல் என்ற பேச்சின் முன்னுரை)
சோசலிச சமூகத்திலும் முதலாளியத்தை எதிர்த்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப்
போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய லெனினியத்தைக் கவனமாகப் பின்பற்றிய
மாவோ,
சீனச் சமூகத்திலும் இதன் தேவையை உணர்த்தினார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாளியப் புரட்சிகள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தன.
நிலப்பிரபுத்துவம் தூக்கியெறியப்பட்ட பின்னரும், நிலப்பிரபுத்துவ மீட்சி பல முறை நிகழ்ந்தது. அதிர்ஷ்டம்
மாறி மாறி அடித்தது. இத்தகைய பின்னடைவு சோசலிச சமூகங்களிலும் சாத்தியம்தான்.
உதாரணமாக,
யூகோஸ்லாவியா தன் இயல்பை மாற்றிக்கொண்டு திருத்தல்வாதமாக
மாறிவிட்டது. தொழிலாளர்-விவசாயிகளின் நாடு, பிற்போக்கான தேசியவாத சக்திகளால் ஆளப்படும் நாடாக
மாறிவிட்டது.
வர்க்கப் போராட்டத்தின் இருப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். பிற்போக்கு
வர்க்கங்கள் மீட்சி பெறுவதற்கான சாத்தியம் உண்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். (24.09.1962,
எட்டாம் மத்தியக் குழுவின் பத்தாவது பிளீனத்தில் ஆற்றிய
உரை)
புரட்சிக்குப் பிந்தைய சீனாவில் பிற்போக்கு வர்க்கங்களின் மிச்சசொச்சம்
இருப்பதாகவும், அவர்கள்
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும் மாவோ தன்
கட்சியினரை எச்சரித்தார் (30.01.1962). இந்தப் போக்கின் பிரதிநிதித்துவம் கட்சிக்குள்ளேயே உள்ளது
என்பதையும் அவர் குறிப்பிட்டார். சோசலிசப் புரட்சியை நடத்தி விட்டோம்,
ஆனால் முதலாளியம் எங்கே உள்ளது என்று கண்டறியவில்லை என்று
சொல்லிக்கொண்டு, பொதுவுடைமைக்
கட்சிக்குள்ளேயே முதலாளியப் பாதைக்கு இட்டுச் செல்லும் சிந்தனையாளர்கள்
இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார் (ஜனவரி 1965). இதன் சமூக வேர்களையும் மாவோ சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகப் புரட்சி முடிந்த பின்னர், தொழிலாளர்களும் வறிய மற்றும் கீழ்நிலை நடுத்தர (lower
middle) விவசாயிகளும் அத்துடன்
நின்றுவிடாமல் புரட்சியைத் தொடர்ந்து நடத்த விரும்பினர். ஆனால் கட்சி
உறுப்பினர்களில் பலர் முன்னேறிச் செல்ல விரும்பவில்லை;
சிலர் பின்னோக்கித் திரும்பி, புரட்சியை எதிர்க்கத் தொடங்கினர். ஏன்?
அவர்கள் உயர் அதிகாரிகளாக மாறி,
அந்த உயர் அதிகாரிகளின் நலன்களைப் பாதுகாக்க விரும்பினர்
(மேற்கோள், Vanguard, June 1985).
கட்சி, அரசாங்கம்,
இராணுவம் ஆகிய துறைகளிலும், பண்பாட்டுத் துறையின் பல பிரிவுகளிலும் ஊடுருவியுள்ள
இவர்களை,
முதலாளியப் பாதையாளர்கள் என்றும் எதிர்ப்புரட்சியாளர்கள்
என்றும் மாவோ வரையறுத்தார். "நிலைமைகள் சாதகமாகக் கனிந்தவுடனே இவர்கள்
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை முதலாளிய வர்க்கச்
சர்வாதிகாரமாக மாற்றிவிடுவர்" என்று மாவோ முன்னுணர்ந்து கூறினார்.
பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்ந்து
நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்த மாவோ, பிற்போக்கு வர்க்கங்களின் மீது சர்வாதிகாரத்தைப்
பயன்படுத்தும்போது கட்சியையும் மக்கள் திரளையும் சார்ந்திருக்க வேண்டியது அவசியம்
என்பதை வலியுறுத்தினார் (30.01.1962). பாட்டாளி வர்க்கம் தன் தலைமையைப் பொதுவுடைமைக் கட்சியின்
வழியாகச் செலுத்த முடியும் என்று குறிப்பிட்ட மாவோ, கட்சித் தலைமையில் உள்ள சிலர் தவறான பாதையைப்
பின்பற்றும்போது அவர்களைத் திருத்தும் வழிமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.
கட்சிக்கும் மக்கள் திரளுக்கும் இடையிலான உறவு முறையில்,
கட்சியின் தவறுகளை விமர்சிக்கவும் திருத்தவும் உரிமைகளை
மக்கள் திரள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தவறு செய்யும்
கட்சித் தலைமையினர், விமர்சிக்கும் மக்களைக் கண்டு அஞ்சக்கூடாது; மக்களை வெளிப்படையாகப் பேச அனுமதிக்க வேண்டும் என்று மாவோ
விரும்பினார் (ஜனநாயக மத்தியத்துவம் குறித்து, 30.01.1962).
கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் நடைபெற்றாக வேண்டிய வர்க்கப்
போராட்டத்தில், மக்கள்
திரளின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய
தற்காப்புச் செயல்பாடு, சோசலிசத்தைத் தொகுத்துக்கொள்ளும் முதலாளியப் பாதையை எதிர்ப்பதற்கும் உரியது.
இது மாவோவின் சிந்தனையின் பங்களிப்பாகும். இந்தப் போக்கு
பிரதானப்படுத்தப்படாவிட்டால் முதலாளிய மீட்சி சாத்தியம் என்று குறிப்பிட்ட மாவோ,
அதுவே நிரந்தரமாகிவிடும் என்றும்,
கட்சியை மக்களே முதலாளிய மீட்சியிலிருந்து மீண்டும்
தூக்கியெறிய வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
நமது அடுத்த பரம்பரை திருத்தல்வாதத்தில் மூழ்கி, இப்போதைய நிலைமை எதிர்மறையாகத் திரும்பினாலும்,
அதாவது அவர்கள் பெயரளவில் சோசலிசத்தையும் உண்மையில்
முதலாளியத்தையும் கொண்டிருந்தாலும், அதற்கு அடுத்த பரம்பரையினரான நம் பேரக் குழந்தைகள் அதில்
நிறைவடையாமல், புரட்சியில்
உறுதியாக எழுந்து நின்று தம் தந்தையரைத் தூக்கி எறிவார்கள். (எட்டாம் மத்தியக்
குழுவின் பத்தாம் பிளீனம், 24.09.1962)
நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்ற இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையில் வரலாற்று
நிகழ்வுகளை விளக்கிய மாவோ, முதலாளிய மீட்சியின் தோற்றத்தை மட்டுமின்றி, அது அழியும் சாத்தியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
மாவோவுக்குப் பின்
ஆனால் மாவோவின் கருத்தே சீனாவின் ஆளுகை பெற்ற கருத்தாக்கமாக எப்போதும்
இருந்ததில்லை. டெங் சியோபிங் காலத்தில் (1978 முதல்) ஏற்பட்டு வரும் பல மாற்றங்களால்,
முதலாளிய மீட்சி குறித்த இந்தக் கருத்தும்
மாற்றப்பட்டுவிட்டதைக் காண்கிறோம். பெய்ஜிங் நகரில் உள்ள சமூக அறிவியல் கழகத்தின்
மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை நிறுவன இயக்குநர் கசோவாஷி அவர்களின்
பேட்டியில், முதலாளிய
மீட்சி குறித்த பல கருத்துகள் மாவோவின் கருத்துடன் முரண்படுகின்றன (Monthly
Review, Vol. 38, Sept. 1986). சோசலிச
சமூகத்தில் முதலாளிய மீட்சிக்கான அபாயம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கிறார்:
சோசலிச சமூகத்தில் முதலாளிய மீட்சிக்கான அபாயம் உள்ளது என்பது தவறு என்று
நாங்கள் கருதுகிறோம். நாம் நமது கொள்கையைக் கவனமாகப் பரிசீலித்து,
தனிப்பட்ட தொழில்முனைவோர் மேலும் முதலாளியாவதை அனுமதிக்கக்
கூடாது. சில லட்சாதிபதிகள் தோன்றினாலும், அவர்களால் முதலாளிய அமைப்பை மீண்டும் கொண்டுவர முடியாது.
இதற்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் முதலாளிய மீட்சி நடந்தது என்று சொன்னோம்.
ஆனால் அவ்வாறு சொன்னது தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அது இடதுசாரிக் கருத்தின்
செல்வாக்காகும். (Monthly Review, Vol. 38, Sept. 1986, பக்கம் 22)
முன்பு லெனினியத்தை மறுத்த குருசேவ் கும்பலைப் போலவே,
மாவோவுக்குப் பிந்தைய டெங் சியோபிங் கும்பலும் மாவோவின்
சிந்தனையை மறுத்ததைக் காண வேண்டியுள்ளது.
வஞ்சகக் கதையாடல்களின் மறுப்பு
இத்தகைய மார்க்சிய ஆசான்களின் போதனைகளை மூடிமறைத்துவிட்டு,
சில கயவர்கள் "வஞ்சகத்தால் சோசலிசம்
வீழ்த்தப்பட்டது" என்று கதையளந்துகொண்டு, உழைக்கும் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
உண்மையில், சோசலிசத்தை
உருவாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த
வேண்டும் என்றே மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்தனர்.
இந்தியாவில் சோசலிசம் உருவாகாததற்குக் காரணம், மார்க்சிய ஆசான்களின் போதனைகளைப் பின்பற்றி வர்க்கப்
போராட்டத்தை நடத்தாததே என்பதை இங்குள்ள திருத்தல்வாதிகளும் கலைப்புவாதிகளும்
புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார்கள். உண்மையில், மார்க்சிய ஆசான்களின் போதனைகளைப் பின்பற்றி இங்கே வர்க்கப்
போராட்டத்தை நடத்தியிருந்தால், இங்கே சோசலிசம் உருவாகியிருக்கும்.
வர்க்கப் போராட்டத்தின் மூலம் சோசலிச ஆட்சியை உருவாக்கிய பின்பும் வர்க்கங்கள்
உடனே ஒழிந்துவிடாது. அதிகாரத்தை இழந்த முதலாளி வர்க்கம்,
முன்பை விட அதிக பலத்துடன் சோசலிச அரசை வீழ்த்த முயற்சி
செய்வார்கள். அவர்களின் சதிகளை முறியடிக்க, பாட்டாளி வர்க்கத்துக்கு அரசியல் அதிகாரம் அவசியம் என்று
மார்க்சிய ஆசான்கள் போதித்தனர். தற்போதும் நாம் வர்க்கப் போராட்டத்தைத் தொடர
வேண்டும். பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தைச் சரியாக நடத்தவில்லையென்றால்
சோசலிசம் வீழ்த்தப்படும் என்றே மார்க்சிய ஆசான்கள் எச்சரித்தனர்.
வர்க்கப் போராட்டம் என்பது பொருளாதாரப் போராட்டம்,
அரசியல் போராட்டம், சித்தாந்தப் போராட்டம் ஆகிய மூன்று தளங்களிலும் நடத்தப்பட
வேண்டும் என்றனர். ஆனால், இரண்டாம் உலகப் போரால் அழிக்கப்பட்ட ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும்
பொருளாதாரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கவனம் குவிந்தது. அதனால் அரசியல்
மற்றும் சித்தாந்தத் தளங்களில் போராட்டங்களை நடத்த முடியாமல் போனது. பாசிச
எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட பல உன்னதத் தோழர்கள் மரணமடைந்ததால் புரட்சிகரத்
தோழர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு,
குட்டி முதலாளித்துவ வர்க்கங்கள் (குருஷேவ் கும்பல்) கட்சி
மற்றும் சோவியத் ஆட்சித் தலைமையைக் கைப்பற்றின. ஜோசப் ஸ்டாலின் மரணத்துக்குப்
பிறகு கட்சியைத் திருத்தல்வாதக் கட்சியாகவும், சோவியத் ஆட்சியை அதிகாரவர்க்க ஆட்சியாகவும் மாற்றி,
சோசலிசத்தை வீழ்த்தினர்.
இந்த உண்மையை மூடிமறைக்கும் கயவர்கள்தான் "வஞ்சகத்தால் சோசலிசம்
வீழ்ந்தது" என்று கதையளக்கிறார்கள். இவர்கள் உண்மையில் மார்க்சியத்தை
மறுக்கிறார்கள்; வர்க்கப்
போராட்டத்தை மறுக்கிறார்கள்; பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை மறுக்கிறார்கள்.
சோசலிசத்தின் வீழ்ச்சியை வெறும் பொருளாதார, நிர்வாகப் பிரச்சினையாகச் சுருக்குகிறார்கள். மேலும்,
மக்களிடம் சோசலிசத்தின் மீதான நம்பிக்கைக்கு இவர்கள்
துரோகம் செய்கிறார்கள். சோசலிசத்தை அடைவதற்கான மார்க்சிய ஆசான்களின் வழிமுறையையே,
அதாவது லெனினும் மாவோவும் மார்க்சியத்தைத் திருத்தினார்கள்
என்று குறை சொல்லி, வர்க்கப் போராட்டத்திலிருந்து மக்களைத் திசை திருப்புகிறார்கள்.
லெனினும் மாவோவும் மார்க்சியத் தத்துவத்தைக் குறிப்பான சூழலில் பயன்படுத்தி
புரட்சியை நடத்தினார்கள். அதன் மூலம் அவர்கள் மார்க்சியத்தைக் குறிப்பாக
வளர்த்தார்கள். ஆனால் "வஞ்சகத்தால் சோசலிசம் வீழ்ந்தது" என்று
கதையளக்கும் கயவர்கள்தான் மார்க்சியத்தை முழுமையாக மறுக்கிறார்கள். இதைப்
புரிந்துகொண்டு, மார்க்சியத்தைக்
குழப்பும் கயவர்களை உழைக்கும் மக்கள் இனம் காண வேண்டும்.
சோசலிசம், சோசலிசப்
புரட்சி,
சோசலிச எதிர்காலம், பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகியவை பற்றி மார்க்சிய ஆசான்கள்
சொல்லாதவை எதுவும் இல்லை. மேலும், பாரிஸ் கம்யூன் படிப்பினைகள் குறித்து மார்க்ஸ் கூறுகிறார்:
"நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி,
அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள
முடியாது." (பார்க்க: பிரான்சில் உள்நாட்டுப் போர்,
சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை,
லண்டன், 1871.)
சோவியத் படிப்பினைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் உள்ளன. ஆனால் இந்த நூல்
எதற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இன்றைய நிலையில்,
இடதுசாரிகள் என்ற பெயரிலுள்ள கட்சிகளும்,
கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு நிலைப்பாடுகளில் உள்ள
கட்சிகளும், மார்க்சியம்
அல்லாத,
மார்க்சிய விரோதப் போக்குகளை மார்க்சியம் என்று
பரப்பும்போது, அதை
விளக்குவதற்கு விரிவான ஆய்வு தேவை. அதனை இந்த நூல் செய்துள்ளதா என்று தேடும்போது,
இல்லை என்பதே பதில்!
இந்நூல், மார்க்சிய-லெனினியத்தின்
வரலாற்று வளர்ச்சி, வர்க்கப் போராட்டத்தின் அவசியம் ஆகிய எதையும் ஏற்றுக்கொள்ளாத பல்வேறு
போக்குகளைக் கொண்டுள்ளது. இதைக் கணக்கில் கொண்டே எமது ஆய்வு அமையும். பல்வேறு
ஆய்வுகளை உள்ளடக்கிய தேடலை எமது தொடரில் எழுத முயல்வோம்,
தோழர்களே.
இந்த நூல் பேச மறுக்கும் பகுதியோடு இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறோம்,
தோழர்களே!
லெனினியம் மற்றும் கட்சியின் பங்கு
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சி, புரட்சிப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையாக
உண்மையிலேயே பணியாற்ற வேண்டுமெனில், அது தலைவர்கள், கட்சி, வர்க்கம், மக்கள் ஆகியோருக்கிடையேயான பரஸ்பர உறவுகளைச் சரியாகக் கையாள
வேண்டும். மேலும், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய கட்சி, கிட்டத்தட்ட
ஒரு ஸ்திரமான தலைமைக் குழுவைப் பெற்றிருக்க வேண்டும்.
அத்தகைய மார்க்சிய-லெனினிய சர்வ வியாபக உண்மையைப் புரட்சியின் பருண்மையான
நடைமுறையுடன் இணைப்பதில் சிறந்தவர்களாக விளங்கும், புடம்போட்ட தலைவர்களடங்கிய ஒரு குழுவை அது உள்ளடக்கியதாக
இருக்க வேண்டும்.
ஆனால் குருசேவ் காலத்தில் நடந்தது என்ன?
"தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது" என்ற போர்வையில் ரஷ்யக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஸ்டாலினை முழுமையாக மறுக்க முயற்சித்தது. ரஷ்யக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தலைமை பற்றிய கொள்கைகளிலும் கட்சி வாழ்க்கையிலும் லெனினிய
மரபுகளை மீட்கும் நோக்கில் "தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை"
நடத்தவில்லை. மாறாக, அவர்கள் தலைவர்கள், கட்சி, வர்க்கம்,
மக்கள் ஆகியோருக்கிடையேயான பரஸ்பர உறவுகள் பற்றிய லெனினியப்
போதனைகளை மீறுகிறார்கள்; கட்சியில் ஜனநாயக மத்தியத்துவக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.
இதைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிட்டது (மாபெரும் விவாதம்
நூலின் அடிப்படையில்).
"தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தின்" உண்மையான
சாரம் என்ன?
ஒளிவுமறைவின்றிச் சொல்ல வேண்டுமானால், கீழ்க்கண்டவற்றைத் தவிர வேறொன்றுமில்லை:
- "தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது" என்ற பெயரில்,
கட்சியின் தலைவரான ஸ்டாலினைக்
கட்சி அமைப்புக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும்,
பரந்துபட்ட மக்களுக்கும்
எதிராக நிறுத்துவது.
- "தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது" என்ற பெயரில்,
பாட்டாளி வர்க்கக்
கட்சியையும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும்,
சோசலிச அமைப்பு முறையையும்
களங்கப்படுத்துவது.
- "தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது" என்ற பெயரில்,
தங்களைத் தாங்களே
உயர்த்திக்கொள்வது; மார்க்சிய-லெனினியத்திற்கு விசுவாசமாக இருக்கும்
புரட்சியாளர்களைத் தாக்குவது. அதன் மூலம், திரிபுவாத சூழ்ச்சியாளர்களுக்குக் கட்சி மற்றும்
அரசுத் தலைமையைக் கைப்பற்ற பாதை அமைத்துத் தருவது.
சர்வதேசக் கம்யூனிச இயக்க வரலாற்றில், மார்க்சிய-லெனினியத்தின் எதிரிகள் பாட்டாளி வர்க்கத்
தலைவர்களைக் கொடியவர்களாகக் காட்டுவதும், "தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது" போன்ற முழக்கங்களைப்
பயன்படுத்திப் பாட்டாளி வர்க்க இலட்சியத்திற்குக் குழி பறிப்பதும் புதிய விஷயமல்ல.
இது நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் கண்டுகொண்ட ஓர் அசிங்கமான தந்திரம்.
- முதலாவது அகிலத்தின் காலகட்டத்தில், சதிகாரன் பக்கூனின் மார்க்சை வசைபாட இத்தகைய மொழியையே
பயன்படுத்தினான். முதலில் மார்க்சின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் புழுவைப்
போல நெளிந்து "நான் உங்கள் சீடன்; அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்று
எழுதினான். பின்னர், முதலாவது அகிலத்தின் தலைமையைக் கைப்பற்றும் சதியில்
தோல்வியுற்ற அவன், மார்க்சை வசைபாடினான். "ஒரு ஜெர்மானியனும்
யூதனுமான அவன், அடியிலிருந்து முடிவு வரை ஒரு எதேச்சதிகாரி"
என்றும், "சர்வாதிகாரி" என்றும் சொன்னான்.
- இரண்டாவது அகிலத்தின் காலகட்டத்தில், லெனினை வசைபாட ஓடுகாலி காவுட்ஸ்கி இதே மாதிரி மொழியைப்
பயன்படுத்தினான். "ஓர் அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல,
மாறாக ஒரு மத்தியகால அல்லது
கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு" மார்க்சியத்தைக்
குறுக்கிவிட்ட "ஏக கடவுள் கொள்கையினரின் கடவுள்" என்று லெனினைப்
பழித்தான்.
- மூன்றாவது அகிலத்தின் காலகட்டத்தில், ஸ்டாலினை வசைபாட ஓடுகாலி டிராட்ஸ்கி இதே மாதிரி
மொழியைப் பயன்படுத்தினான்.
(இதற்கான ஆதாரங்கள் மூல நூலில் தொகுக்கப்படவுள்ளன. இவை
மாபெரும் விவாதம் நூலின் அடிப்படையிலானவை.)
இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள, வரலாற்றுப் பக்கங்களைத் தேடுவதோடு,
மார்க்சிய-லெனினிய தத்துவ, அரசியல், கோட்பாட்டுப் புரிதலிலும் நாம் தெளிவடைய வேண்டியுள்ளது.
வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்ட குருசேவ் தலைமை, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது காங்கிரசில் கொண்டுவரப்பட்ட "அமைதி-சகவாழ்வு" என்ற வர்க்க சமரச, ஏகாதிபத்திய சார்புக் கொள்கையே, சோவியத் பாட்டாளி வர்க்க அரசைத் தகர்க்க அடிகோலியது எனலாம்.
-இலக்கு ஆசிரியர் குழுவின் அறிக்கையே.
இந்த தேடலுக்கு பயன்பட்ட நூல் பட்டியல் கீழ்
1). மாபெரும் விவாதம்.
2). Class Struggles in the USSR 1917-1930-Charles Betteheim
3). சோசலிசமும் முதலாளிய மீட்சியும்-கோ.கேசவன்
4). சோவியத் சோசலிச நிர்மாணத்தில் லெனினின் திட்டம்
இன்னும் வாசிப்பில் கிடைத்த அனுபவத் தொகுப்பும் AI ஒலி வடிவமும் அடக்கமே எமது இந்த கட்டுரை உருவாக்க பயன்பட்டது.
*********************************************************
இன்னும் விரிவாக அடுத்தப்பகுதியில் தோழர்களே....
.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக