சாதிஅன்றும் இன்றும்-மார்க்சிய பார்வையில்-1

மார்க்சியம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான தத்துவம்மார்க்சியமல்லாத பிற தத்துவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு எதிராக துரோகம்  செய்யும் தத்துவமே.மார்க்சியம் அல்லாத பல கண்ணோட்டங்கள் நம் சமூகத்தில் உள்ளன. ஆனால் அவை நிரூபிக்கப்பட்ட தத்துவ கண்ணோட்டம் இல்லை! மார்க்சியம் மட்டுமே எல்லா சுரண்டலையும் ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களுக்கான தத்துவமாக உலகில் உள்ளது. ஆகையால் அதனை பின்பற்றினால் மட்டுமே நமக்கான சரியான வழிமுறையாக இருக்கும் தோழர்களே.

மார்க்சியம் மிகத் தெளிவாக சமூக இயக்கத்தை சமூக விஞ்ஞான அடிப்படையில் விளக்கியுள்ளது.

நாம் வாழும் சமூகத்தில் பல்வேறு விதமான கண்ணோட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன. அவை தான் மக்கள் மத்தியில் பேசு பொருளாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. இவையெல்லாம் சமூகத்தின் ஆளுவோரின் (ஆளும் வர்க்க) கருத்துகளே கண்ணோட்டங்களே. இங்கே நாம் காணும் பல பிரச்சினைக்கு காரணம் நமது சமூக அமைப்பே! இதனைத் தான் மார்க்சியம் மிகத் தெளிவாக தனக்கான கண்ணோட்டத்தையும் அதற்கான நடைமுறையில் தீர்பதற்கான வழிமுறையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது ரஷ்யாவும் சீனாவும் இன்னும் சில சோசலிச நாடுகளும், மார்க்சிய தத்துவத்தை நடைமுறைக்கான வழிகாட்டியாகவும் அதன் அடிப்படையில் பல நாடுகளில் புரட்சியும் நடத்தேறியது. இந்த புரட்சியின் பலனை புரிந்துக் கொள்ள வேண்டிய நாம் எந்தளவு புரிந்துள்ளோம் என்பது கேள்விக்குறியே. புரட்சியையும் சீர்திருதத்ததையும் புரிந்துக் கொள்ளாதவர்களாக நாம் இங்கே உள்ளனர். வேண்டுமெனில் லெனின் சோசலிச புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தி இருப்பார்.

 சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்றபோது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருத்தலுக்கு பங்காற்றியது சனாதன மதமான பிராமணியமே. அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுங்கமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது. சாதி, தீண்டாமை நிலவுவதற்கு காரணம் உற்பத்தி முறைதான். இந்தியாவில் சாதிகள் பற்றி பல்வேறு அறிஞர்கள், களப்பணியாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் விவாதங்கள், இடைவிடாத போராட்டங்கள் மூலம் தினம் தினம் நமது செவிகளுக்கு கேட்ட வண்ணமே உள்ளது. ஆக இந்திய சமூகத்தில் சாதியின் பல்வேறு விளைவுகளையும் அதன் தோற்றதிலிருந்து இன்று வரை அதன் பன்முக போக்குகளையும் அறிவதற்கும் என்னால் இயன்ற பல்வேறு நூலாசிரியர்களின் ஆதாரங்களுடன் இந்த நூலை எழுதியுள்ளேன். எனக்கு முன்னர் பலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் எழுத்துகளையும் எனது தேடுதலையும் சரியான முறையில் உங்கள் முன் கொண்டுவர முயற்சித்துள்ளேன்.

சாதி அன்றும் இன்றும் நூலை எழுத தூண்டியது இங்குள்ள கம்யூனிசம் பேசுவோர் வர்க்க சமூகத்தை புரிந்துக் கொள்ளாமல் சாதரண மக்கள் போல் சாதியை பற்றி பேசுவதும், இன்னொருபுறம் இந்தியாவில் சாதி உள்ளது இங்கு வர்க்க போராட்டதிற்கு முன் சாதி போராட்டத்தை நடத்த வேண்டும் என்பவர்களும், அதனால் மார்க்சிய கண்ணோட்டத்தில் சாதியின் தோற்றம் முதல் இன்றைய இருப்பு வரை தேடியுள்ளதோடு சாதி ஒழிப்புக்காக அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் போராட்டம் எந்தளவு பயன்பட்டது? உண்மையில் கம்யூனிஸ்டுகள் வர்க்க சமூகத்தை புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன? என்று தேடி விளக்கி உள்ளதோடு, இன்று தமிழகத்தில் பேசு பொருளாய் உள்ள பார்ப்பனர் மற்றும் சாதி ஒழிப்பில் கடைபிடிக்க வேண்டியவை என்ன என்று ஓரளவு மார்க்சிய வழிக்காட்டுதலில் எழுத முயன்றுள்ளதை நூலில் காணலாம்.

நம் சமூகத்தில் ஏன் சாதி இருக்கிறது என்றால் அதனை ஒழிக்க வேண்டியவர்கள் ஒழிக்க விரும்பவில்லை.

ரசிய புரட்சி நடந்தேறிய 4 ஆண்டுகளுக்கு பின்னர் லெனின் கூறியது தான், “மத்திய கால முறைமைகளின் மிச்சங்களை அழித்து, அவற்றை அறவே துடைத் தெறிந்தது, அதாவது, முடியரசு, குலப்படி ஆதினங்களும், நிலவுடைமைமுறையும், மதமும், பெண்களின் அடிமை நிலையும் ....” ".... மிக விரைவாகவும், துணிவாகவும், வெற்றிகரமாகவும் மற்றும் பெரும் திரள் மக்களிடையே ஏற்பட்ட பலனை கொண்டு பார்க்கையில் பன்மடங்கு விரிவாகவும் ஆழமாகவும் இந்த களையெடுப்பினை நடத்தினோம் என நாம் நியாயமாக பெருமை கொள்ளலாம்” என்றார்.

இந்தியாவில் அதுபோல் சமூக மாற்றம் நடந்தேற யாரும் முயற்சிக்கவில்லை. மத, சாதிய பிற்போக்கு அமைப்புகள் அழித்தொழிக்கப்படவில்லை. இன்றைய சமூக தேவைக்கு இல்லாத பழைய முடைநாற்றம் பிடித்த நிறுவனங்களை குப்பைகளை இன்றும் சுமக்கும் அவல நிலையில் உள்ளோம்.

நம்மிடையே உள்ளவர்கள் மார்க்சிய தத்துவத்தை புரிந்துக் கொள்வதில் பல வேறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குறைகளை தேடுவதை விட நமக்கான வழிமுறைகளை தேடுவதே நமக்கான பணி.  
இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால், தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது. மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூக மாற்றத்திற்கான கொள்கைத் திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. 
மனித சமூகம் உயிர் வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூக விஞ்ஞானம் போதிக்கிறது. இவ்வளவு விரிவாக விளக்குவதன் நோக்கம் நம் சமூகத்தில் உள்ள ஏற்றதாழ்வான வர்க்க அமைப்பே சாதியின் இருப்பிற்கு காரணமாக உள்ளது. அதனை புரிந்து, மாற்ற மார்க்சிய அறிவை பெற வேண்டும். மார்க்சிய போதனையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைக் கொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். மனித சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான தொடக்கக் காலங்களில் இந்த உற்பத்திச்சாதனங்கள் சமூகத்தின் பொதுச்சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப் பிரிவுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடைமையுள்ளவர்கள் மற்றும் உடைமையற்றவர்கள் உருவாகினார்கள். மேலும் சமுகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் கைப்பற்றிக் கொண்டு பலரை உடைமையற்றவர்களாக மாற்றியதோடு அவர்களை சுரண்டியும் வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமுக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமுகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமுகத்தை மாற்றியமைக்க முடியும். வர்க்க சமுகத்தில் பல்வேறு உடைமை வர்க்கப் பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமுகத்தின் ஆளும்வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன் படுத்தியே ஆளும் வர்க்கம் சமுகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தி நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள்.
இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்துவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் (மேல்கட்டுமானம்) என்கிறோம். மேலும் சுருக்கமாக அறிவோம். மனிதகுலம் தோன்றியதிலிருந்து இதுவரை 5 விதமான சமூக அமைப்பு தோன்றியுள்ளது. அவை அதன் சமுக உற்பத்தி முறையின் அடிப்படையில் அதனை ஒவ்வொன்றாக மேலோட்டமாக பார்ப்போம். சாதி சமுகத்தில் தோன்றி வளர்ந்த வரலாற்று உண்மைகளை புரிந்துக் கொள்ள எளிதாக சமூக வளர்ச்சி போக்கை அறிவோம் இதன் ஊடாக,மார்க்சின் படைப்புக்களில் இருந்தும் அதன் குறிப்புக்களில் இருந்தும் மார்க்சிய மானிடவியல் அணுகுமுறையில் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்(05) என்ற நூல் ஏங்கெல்சால் முழுமையாக்கப்பட்டது. உடனடி வாழ்க்கையின்‌ உற்பத்தியும்‌ புனருற்பத்தியுமே வரலாற்றில்‌ தீர்மானகரமான காரணியாகும்‌. ஆனால்‌ இது இருவகையான தன்மைகொண்டது. ஒரு பக்கத்தில்‌, வாழ்க்கைக்குத்‌ தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும்,‌ அவற்றைப்‌ பெறுவதற்குத்‌ தேவையான கருவிகளையும்‌ உற்பத்தி செய்‌வது; மறுபுறத்தில்‌, மனிதர்களையே உற்பத்தி செய்வது அதாவது மனித குலத்தைப்‌ பெருக்குவது. ஒருதிட்டவட்டமான வரலாற்றுச்‌ சகாப்தத்தைச்‌ சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச்‌ சேர்ந்த மக்கள்‌ எந்த சமுக அமைப்பின்‌ கீழ்‌ வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின்‌ இரண்டு வகைகள்‌ கட்டுப்‌ படுத்துகின்றன. ஒரு பக்கத்தில்‌, உழைப்பின்‌ வளர்ச்சி எந்தக்‌ கட்டத்தில்‌ இருக்கிறது என்பதும்‌ மறுபக்கத்தில்‌, குடும்பத்தின்‌ வளர்ச்சி எந்தக்‌ கட்டத்தில்‌ இருக்கிறது என்பதும்.‌
எந்த அளவுக்கு உழைப்பின்‌ வளர்ச்சி குறைவாகவும் உற்பத்தியளவு குறுகியதாகவும் உள்ளதோ‌ அதன்‌ காரணமாக சமூகத்தின்‌ செல்வமும்‌ குறுகியதாகவும்‌ இருக்கின்றது. அதன் காரணமாக சமூக அமைப்பின்‌ மீது குலமரபு உறவுகளின் எச்சங்கள் தொடர்வதும்‌ குலமரபு உறவுகளை அடிப்‌படையாகக்‌ கொண்ட இந்தச்‌ சமூகக்‌ கட்டுக்கோப்புக்குள்‌ளாகவே உழைப்பின்‌ உற்பத்தித்‌திறன்‌ மேன்மேலும்‌ வளர்கிறது; அத்துடன்‌ கூடவே தனிச்சொத்தும்‌ பரிவர்த்‌தனையும்‌ வளர்கின்றன; செல்வத்தில்‌ வேற்றுமைகளும்‌ மற்றவர்களுடைய உழைப்புச்‌ சக்தியைப்‌ பயன்படுத்திக்‌ கொள்வதற்குரிய வாய்ப்பும்‌, அதன்‌ மூலம்‌ வர்க்க முரண்‌பாடுகளின்‌ அடிப்படையும்‌ வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்‌; இவை தலைமுறைக்குப்‌ பின்‌ தலைமுறையாக பழைய சமூகத்தின்‌ கட்டுக்கோப்பைப்‌ புதிய நிலைமைகளுக் கேற்பத்‌ திருத்தியமைக்கப்‌ பார்க்கின்றன.
முடிவில், அவ்விரண்டிற்கும்‌ இடையிலுள்ள பொருந்தாநிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச்செல்கிறது. புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின்‌ மோதலில்‌ குலமரபுக்‌ குழுக்களின்‌ அடிப்படையில்‌ அமைந்திருந்த பழைய சமுகம்‌ வெடித்துச்‌ சிதறிவிடுகிறது. அந்தப்‌ பழைய சமுகத்தின்‌ இடத்தில்‌ ஒரு புதிய சமூகம்‌ தோன்றுகிறது. அந்த அரசின்‌ கீழ்நிலை அங்கங்களாக குலமரபுக்‌ குழுக்கள்‌ இல்லை, வட்டார அடிப்படையில்‌ அமைந்த குழுக்களே இருக்கின்றன. இந்தப்‌ புதிய சமுகத்தில்‌ சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின்‌ மீது முழுமையாக ஆதிக்கம்‌ செலுத்துகிறது. மேலும்‌, இந்த சமுகத்தில்‌ வர்க்க முரண்‌பாடுகளும்‌ வர்க்கப்‌ போராட்டங்களும்‌ இப்பொழுது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும்‌ வர்க்கப்‌ போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்லா வரலாற்றுக்கும்‌ உள்ளடக்கமாக இருக்கின்றன.
மனித குலமானது காட்டுமிராண்டி நிலையிலிருந்து இன்றைய நிலை அடைய பல இலட்சம் ஆண்டுகளாயின. மனிதன் இயற்கையோடு போரிட்டு தன்னை வளப்படுத்திக் கொண்டான். அவனின் வாழ்க்கை தேவையின் ஒரு கட்டத்தில் சாதி அதனை பற்றிய கோட்பாடுகள் சமுக நியதி கருத்துருவாக்கம் இவ்வாறு சாதியின் வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்ள இயன்ற அனைத்தையும் ஆய்வுமுறையின் அடிப்படையில் உங்கள் முன் இந்தநூலில் வைக்கப்பட்டுள்ளது. 


தொடரும் 

நூல் தேவைக்கு அழைக்க :- 7010134299
நூல் விலை 225 தற்போதைய விலை ₹110 கூடுதல் 50 ரூபாய் கொரியர் இதற்கான தொகையை 9095136356 என்ற எண்ணிற்கு அனுப்பிவிட்டு தகவல்களை 7010134299 எண்ணிற்கு வாட்சாபில் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே





No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்