“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”நூல் மீது வைக்கபட்ட விமர்சனங்களுக்கு பதிலுரையாக நேற்றைய வகுப்பு.

அவரது கேள்விகளும் எங்கள் விளக்கமும் தொடர் விமர்சனமும்

1). இதில் அனுபவவாதம் என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம் என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 

முதல் குழப்பம் அனுபவவாதம் என்கிற சொல்லில் இருக்கிறது. அனுபவவாதம் என்கிற சொல் அகநிலைவாதம் என்கிற போக்குடையவர்களைக் குறிக்கிறது. குறிப்பாக மாவோ கட்சிக்குள் இருக்கும் போக்காகக் குறிப்பிடுகிற அகநிலைவாதம் (Subjectivism) என்பதையே லெனின் இந்த நூலில் அனுபவவாதம் என்று கூறி விமர்சித்துள்ளார் என்று பல தோழர்கள் கூறுகின்றனர்.

என் விளக்கவுரை இந்த கட்டுரை எழுத தூண்டிய தோழர் அந்த குறிப்பிட்ட நூலில் லெனின் முன் வைத்துள்ளவற்றை வாசிக்கவில்லையா?

அனுபவவாத விமர்சனம் என்றால் என்ன?

பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என உள்ள இரண்டு தத்துவங்களையும் மறுத்து மூன்றாவது தத்துவத்தைதான் இதன் பெயரில் அழைக்கப்படுகிறது. இருந்தும் இவை இறுதியில் கருத்துமுதல்வாததில் தஞ்சம் புகுந்து விடுகிறது என்பதனை லெனின் இந்த நூலில் விளக்குகிறார். அதற்கு அந்த நூலின் முன்னுரையை தெளிவாக வாசித்தலே புரிந்துக் கொள்ள முடியும். 

மேலும் நூலிலிருந்தே. சுத்த அனுபவத்தின் மூலம் உலகம் பற்றி ஓர் இயல்பான கருத்து உருவாக்க வேண்டும் என்று எர்னெஸ்ட் மாக், ரிச்சர்ட் அவனேரியஸ் மற்றும் போத்தனோவ் இவர்களின் கருத்துப்படி விஞ்ஞான ரீதியான தத்துவம் என்பது பொருள் முதல்வாதம் கருத்து முதல் வாதம் என்பவற்றை சாராமல் இருக்க வேண்டும் என்பதாகும்.
இதன்படி அனுபவத்தின் மூலம் பெறும் தகவல்களை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருள் முதல்வாத கருத்து முதல்வாத குறுகியீடு இருக்கக் கூடாது (பக்கம் 13) என்றார் அவினரியஸ்.

மேலும் மாக் விஞ்ஞான விவரங்கள் யாவும் நாம் உருவாக்கியவை எனவே இவை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. அவை இருக்கவே முடியாது எனவே விஞ்ஞான விவரங்களுக்கான அடிப்படை அனுபவம் மட்டும் தான் என்ற இந்தக் கண்ணோட்டம் கொண்ட மாக் பொருள் முதல் வாதத்தை மறுத்தார்.இவர் ஒரு அகவய கருத்து முதல்வாதி ஆவார் இந்த போக்கினை விஞ்ஞானத்துடன்இணைத்தார்.
போக்தானோவ் என்பவர் அனுபவவாத ஒருமை வாதியாக இருந்த இவர் எல்லா விஞ்ஞானங்களையும் ஒன்றாக இணைக்கும் டெக்னாலஜி என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இவர் மார்க்சிய இயங்கியலை மறுத்தார் இதற்கு மாறாக சமநிலைக் கொள்கை என்ற ஒரு கோட்பாட்டை முன் வைத்தார்.இவர் அனுபவங்களை மூலங்கள் என்று அழைத்தார்.

இவை மொழி பெயர்ப்பு நூலில் பேசப்பட்டவை

அனுபவவாதம் என்பதிலே பிரச்சினை அதற்கான விளக்கத்தை காண்போம்.

சடப்பொருள், சிந்தனை இரண்டில் சடப்பொருள் முதன்மை வகிப்பதுபோல, நடைமுறை, தத்துவம் இரண்டில், நடைமுறை முதன்மையானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், (சிந்தனை அல்லது) மனம் சடப்பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்கு வதுபோல, தத்துவம்கூட நடைமுறையிலிருந்தே எழுகின்றது. இருந்தும், தத்துவத்தின் பிழையின்மை, அதன் மீண்டும் செழுமைப்படுத்துகின்ற நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட முடியும்.

ஆகவே, தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்கா கவேநாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். தோழர் மாசேதுங் அவர்கள். ஒருகால் குறிப்பிட்டது போல, மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது.

ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் யந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது. சொந்த நாட்டின் ஸ்தூலமான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில், தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிருறோ அவர் வரட்டுவாதியாவர், அல்லது யார் (அனுபவத்தில்) நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கியத்துவத்தை மறுக்கிருரோ அவர் அனுபவவாதியாவர்.

மேலும், வரட்டுவாதம், அனுபவவாதம் இரண்டும் தவறானவை. நடைமுறை இல்லாத தத்துவம், தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவை. இரண்டினதும் ஐக்கியம்தான் நமக்கு வேண்டும்.

(இவை மாவோவின் சிந்தனை எனும் சண்முகதாசன் நூலிலிருந்து)

 தத்துவாதிகளின் முன்புள்ள பிரச்சனை என்ன? ஒருபுறத்தில் பொருள்கள் உள்ளன, மறுபுறத்தில் சிந்தனை அல்லது கருத்து இருக்கிறது. இவ்விரண்டுக்கும் இடையிலான உறவை ஆய்வு செய்து முன்வைக்கும் முயற்சியில் தத்துவவாதிகள் இரண்டு முகாம்களாகப் பிரிந்தார்கள். ஒருமுகாமைச் சேர்ந்தவர்கள் பொருள்கள்தான் முதன்மையானது கருத்து என்பது இரண்டாவது தன்மையானதாகும் என்றனர், இவர்களே பொருள்முதல்வாதிகள் ஆவார்கள். இரண்டாவது வகையினர் கருத்தேமுதன்மையானது என்றும் பொருள் இரண்டாம்பட்சமானது என்றனர்இவர்களே கருத்துமுதல்வாதிகள் ஆவார்கள்.

உலகில், சரி என்றும் தவறு என்றும் இரண்டு எதிர்மறைகள் இருப்பதுபோல, ஒன்று விஞ்ஞானமாகவும் மற்றொன்று விஞ்ஞானத்தை மறுக்கும்எதிர் மறையாக இருப்பது போலவே தத்துவத்திலும் ஒன்று சரியானஉண்மையான தத்துவமாக பொருள்முதல்வாதம் இருக்கிறது இதற்குநேர்எதிராக பொய்யான மற்றும் தவறான தத்துவமாக கருத்துமுதல்வாதம்இருக்கிறது. 

இதனை தவிர்த்து மூன்றாவது வகையான தத்துவத்தைபடைப்பதாகச் சொன்னவர்கள் யாரும் மூன்றாவது தத்துவத்தை படைத்ததில்லை, மாறாக மேலே குறிப்பிட்ட தத்துவத்தில் ஒரு வகையே மூன்றாவது தத்துவமாக படைத்தார்கள். அதில் பெரும்பாலும் கருத்துமுதல்வாத தத்துவத்தையே புதிய முறையில் முன்வைத்து மூன்றாவது தத்துவமாக காட்டினார்கள். இந்த வகையில் அனுபவவாத விமர்சர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அனுபவவாத தத்துவவாதிகள், அனுபவவாதம் என்ற தத்துவத்தைப் படைத்து, அந்த தத்துவமானது பொருள்முதல்வாத தத்துவத்தையும், கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் மறுத்து விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்றாவது வகையான தத்துவம்தான் அனுபவவாதத் தத்துவம் என்று பறைசாட்டிக்கொண்டார்கள். இவர்கள் வெளிப்படையான அகநிலை கருத்துமுதல்வாதிகள் இல்லை. அதாவது இவர்கள் வெளிப்படையாக அகநிலை கருத்துமுதல்வாதத்தை ஆதரிப்பதில்லை. மாறாக விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அனுபவத்தை ஏற்றுக்கொள்வதாகவும் பாவனை காட்டிக்கொண்டு அனுபவம் என்றால் புலனறிவு என்றும் அந்த புலனறிவு மட்டுமே அனுபவத்துக்கு அடிப்படை என்றும் புலனறிவுக்கும் புறநிலையிலுள்ள பொருள்களுக்கும் இடையிலான உறவை புறக்கணித்துவிட்டு, புறநிலையிலுள்ள பொருள்களின் இருப்பையே மறுத்துவிடுகிறார்கள். இவ்வாறு அனுபவவாத தத்துவவாதிகள்விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்வதாக சொல்லிக்கொண்டே விஞ்ஞானத்தை மறுத்துவிடுகிறார்கள். 

மேலும் இவர்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதாவது சந்தர்ப்பவாதமாக அகநிலை கருத்துமுதல்வாத தத்துவத்தை ஆதரிக்கிறார்கள். இந்த வகையில் இவர்கள் தத்துவத்துறையில் சந்தர்ப்பவாத தத்துவவாதிகளாக இருக்கிறார்கள். இவர்களால் முன்வைக்கப்பட்ட அனுபவவாத தத்துவமானது சந்தர்ப்பவாத தத்துவமாகவே இருக்கிறது.

ஒருவர் கருத்துமுதல்வாதத் தத்துவத்தை முன்வைப்பது பிரச்சனை இல்லை, உதாரணமாக சங்கிகள் கம்யூனிசத்தை எதிர்ப்பது பிரச்சனை இல்லை. ஏனென்றால் அவர்கள் கம்யூனிசத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது கம்யூனிசத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் தெளிவாகவே தெரியும். ஆனால் கம்யூனிசத்தை ஆதரிப்பதாகச் சொல்லிக்கொண்டே கம்யூனிசத்தை சதித்தனமாகவும், தந்திரமாகவும் எதிர்க்கும் சந்தர்ப்பவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் அல்லவா. அது போலவே இந்த அனுபவவாத தத்துவவாதிகள் பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாதத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டுபொருள்முதல்வாத தத்துவத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால் கருத்துமுதல்வாதத்தை எதிர்ப்பது போல நாடகமாடிக் கொண்டு கருத்துமுதல்வாதத்தை ஆதரிக்கும் சந்தர்ப்பவாதிகளாக இருந்தனர். அந்த வகையில் இந்த சந்தர்ப்பாத தத்துவவாதிகள் வெளிப்படையான கருத்துமுதல்வாதிகளைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று லெனின் உணர்ந்தார். ஆகவேதான் அனுபவவாத தத்துவவாதிகள் என்று சொல்லப்படும் சந்தர்ப்பவாதத் தத்துவவாதிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும் என்ற நூலை எழுதினார். இந்த நூலில் அகநிலை கருத்துமுதல்வாதத்தை லெனின் எதிர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும் அது முழு உண்மையில்லை, தத்துவத் துறையில் சந்தர்ப்பவாதிகளையும் அவர்களது சந்தர்ப்பவாத தத்துவத்தையும் அம்பலப்படுத்தினார் என்பதே முழு உண்மையாகும்.

அனுபவவாத தத்துவவாதிகள் அவர்களது தத்துவத்தை நியாயப்படுத்தி எழுதும்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக அவர்களது வாதங்களை முன்வைத்தார்கள். அவர்களின் வாதங்களையே லெனின் முன்வைத்து முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் வாதம் புரிவதை லெனின் தெளிவாகச் சுட்டிக்காட்டி அனுபவவாத தத்துவவாதிகளின் முகமுடிகளை கிழித்து அவர்களது எழுத்துகளிலிருந்தே அவர்களை லெனின் அம்பலப்படுத்தினார்.

அனுபவவாதம் என்பது வேறு, அனுபவவாத விமர்சனம் வேறு என்று சிலர் கருதுகிறார்கள், ஆனால் அது உண்மையில்லை. தத்துவம் என்ற சொல்லுக்குப் பதிலாக விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பொருள்முதல்வாதம் என்றாலே பொருள்முதல்வாதத் தத்துவம் என்று நாம் புரிந்துகொள்கிறோம் அல்லவா? அதுபோலவே கருத்துமுதல்வாதம் என்றாலே கருத்துமுதல்வாதத் தத்துவம் என்று புரிந்துகொள்கிறோம் அல்லவா, அதுபோலவே அனுபவவாதம் என்றாலும் அனுபவவாத விமர்சனம் என்றாலும் அனுபவவாத தத்துவம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. லெனின் எழுதிய நூலின் நோக்கமே அனுபவவாத தத்துவம் என்பது பொய்யான சந்தர்ப்பவாத தத்துவம்தான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, அனுபவவாத தத்துவத்தை அம்பலப்படுத்துவதுதான் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டால் அனுபவவாதம் என்ற சொல்லுக்கும் அனுபவவாத விமர்சனம் என்ற சொல் பற்றியும் குழப்பம் அடையத் தேவையில்லை.

ஆகவே தோழர்களே அனுபவவாதம் என்பது பற்றியும் அனுபவவாத விமர்சனம் என்பது பற்றியும் குழப்புபவர்களின் பிரச்சாரத்தைகண்டு குழப்பம் அடைய வேண்டாம்.

மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை. அவை சமுதாய நடைமுறை அனுபவத்திலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன; உற்பத்திப் போராட்டம், வர்க்கப் போராட்டம்விஞ்ஞானப் பரிசோதனை என்ற மூன்று வகையான சமுதாய நடைமுறை அனுபவங்களிலிருந்து வருகின்றன. மனிதனின் சமுதாய வாழ்வே அவனுடைய சிந்தனையை நிர்ணயிக்கிறது. முன்னேறிய வர்க்கத்தின் குணாம்சமாக விளங்கும் சரியான கருத்துக்கள் ஒருகால் பொது மக்களால் கிரகித்துக் கொள்ளப்பட்டதும், இக்கருத்துக்கள் சமுதாயத்தை மாற்றுகின்றஉலகை மாற்றுகின்ற ஒரு பொருளாதாய சக்தியாக வடிவெடுக்கின்றன.

மக்கள், தமது சமுதாய நடவடிக்கையில், பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு, தமது வெற்றிகள், தோல்விகள் இரண்டிலும் இருந்து செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர். புறநிலை உலகத்தின் எண்ணத் தோற்றப்பாடுகள் மனிதனின் மெய், வாய், கண்மூக்கு, செவி ஆகிய பஞ்சப் புலன்களுக்கும் ஊடாக, அவனுடைய மூளையில் பிரதிபலிக்கின்றன. ஆரம்பத்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றது. போதிய அளவு புலக்காட்சி அறிவு தொகுக்கப்பட்டதும், அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து அது பகுத்தறிவாக மாறுகின்றது. அதுவே கருத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது அறிகையின் (அறிவதின்) ஒரு வளர்ச்சிப்போக்கு. இது அறிகையின் (அறிவதின்) முழு வளர்ச்சிப் போக்கில் முதலாவது கட்டம். அதாவது புறநிலைச் சடப் பொருளிலிருந்து அகநிலை உணர்வுக்குச் செல்லுகின்ற, வாழ்நிலையிலிருந்து கருத்துக்களுக்குச் செல்லுகின்ற கட்டம் ஆகும். (தத்துவங்கள், கொள்கைகள்,திட்டங்கள், அல்லது வழிமுறைகள் உட்பட) ஒருவரின் உணர்வு அல்லதுகருத்துக்கள் எல்லாம் புறநிலை யதார்த்த உலகைச் சரிவரப்பிரதிபலிக்கின்றனவா, இல்லையா என்பது இந்தக் கட்டத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இக்கட்டத்தில் அவை சரியானவையா, இல்லையா என்று நிச்சயிப்பதும் சாத்தியமாகாது. பின்னர் அறிகை அதாவது அறிவது வளர்ச்சிப் போக்கின் இரண்டாவது கட்டம், அதாவது உணர்விலிருந்து மீண்டும் சடப்பொருளுக்கு, கருத்துக்களிலிருந்து மீண்டும் வாழ்வுக்குச் செல்லும் கட்டம் வருகின்றது. இந்தக் கட்டத்தில், தத்துவங்கள்கொள்கைகள், திட்டங்கள், அல்லது வழிமுறைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைத் தருகின்றனவா என்பதை நிச்சயிக்க, முதல் கட்டத்தில் சம்பாதிக்கப்பட்ட அறிவு சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றது, பொதுவாகச் சொன்னால், எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை; எவை தோல்வியடை கின்றனவோ அவை தவறானவை; விசேசமாக இயற்கையுடன் மனிதன் நடத்தும்போராட்டத்தில் இது உண்மையாகும்”. ( மனிதர்களின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? மாவோ). இதில் மனிதர்களின் சமூக நடைமுறைஅனுபவத்திலிருந்துதான் மனிதன் அறிவைப் பெறுகிறான் என்கிறார்மாவோ. 

ஆகவே அனுபவம் என்பது நடைமுறையோடு தொடர்புள்ளதுஎன்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உனக்கு அனுபவம் இல்லை ஆகவே உன்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று மக்கள் சாதாரணமாகப் பேசுவதை நாம் காணலாம் அதிலிருந்து அனுபவம் என்றால் நடைமுறையில் ஒரு விசயத்தை புரிந்துகொள்வதற்கான முயற்சி என்பதே இதன் அர்த்தம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அனுபவவாத தத்துவவாதிகள் நடைமுறை அனுபவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் அறிவைப் பெறுவதற்கான அனுபவத்தை ஏற்றுக்கொள்வது என்ற சரியான  கருத்தை முன்வைக்கிறார்கள். இருந்தபோதும் இந்த அனுபவத்தை புலனறிவு என்று குறுக்கிப் பார்த்து புலனறிவுக்கு அடிப்படையான புறநிலையிலுள்ள பொருள்கள் இருப்பதை மறுத்துவிடுவதன் மூலம் அகநிலை கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கிறார்கள்.  இப்படித்தான் அனுபவவாத தத்துவவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பவாதத்தையே லெனின் அம்பலப்படுத்தினார்.

நேற்றைய வகுப்பை ஒலி வடிவில் கேட்க இந்த லிங்கில் லிஸ்னர் பகுதியை அழுத்தி கேட்க முடியும் தோழர்களே

மனிதர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு தத்துவத்தின்அடிப்படையிலேயே அவர்களது நடைமுறையை வகுத்துக்கொண்டுசெயல்படுகிறார்கள். சிலர் கருத்துமுதல்வாத தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். உதாரணமாக கடவுள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்ற கோட்பாட்டைப் பின்பற்றி தனது பிரச்சனையை தீர்ப்பதற்கு கடவுளை வணங்கி பரிகாரங்கள் போன்றவற்றை செய்கிறார்கள். மற்றொரு பிரிவினர் தங்களது பிரச்சனைகளுக்கு காரணம் என்னவென்பதை புரிந்துகொண்டு அதனை தீர்ப்பதற்கான வழிமுறையை கண்டுபிடித்து பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். அனுபவவாதம் என்ற தத்துவமானது அனுபவம் என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்வது போல பாசாங்கு செய்து அனுபவம் என்ற நடைமுறையையே மறுத்துவிடுகிறது. ஆகவே அனுபவவாதத் தத்துவம் என்பது உண்மையில் அனுபவவாதம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் அனுபவம் என்ற நடைமுறையை மறுக்கும் தத்துவமே ஆகும். இவ்வாறு அனுபவத்தையே மறுக்கும் தத்துவம்தான் அனுபவவாதம் என்ற தத்துவம் ஆகும். இந்த உண்மையை லெனின் தனது நூலில் தெளிவுபடுத்தியிருப்பார்


தொடர்ந்து விவாதிப்போம் தோழர்களே இவை எமது இலக்கு ஆசிரியர் குழுவின் கருத்தே விமர்சனங்கள் மார்க்சிய லெனினிய தத்துவார்த்த அடிபடையில் எதிர்கொள்ள தயார். உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன தோழர்களே

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த கட்டுரைக்கான சில பதில்களே மேலே முழுமையாக பின்னர் தொடரும் தோழர்களே....

  அனுபவவாதம்” என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அகநிலை கருத்துமுதல்வாதம் என்கிற “அனுபவவாத விமர்சனம்” 

லெனின் ரஷ்ய மொழியில் எழுதிய நூல் “Материализм и эмпириокритицизм” இதன் ஆங்கில  மொழிபெயர்ப்பின் தலைப்பு "Materialism and Empirio-criticism" இதனை தமிழில் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்று மொழிபெயர்த்துள்ளனர்.. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த, இந்த நூலின் பகுதியை “முன்னேற்றப் பதிப்பகம்” வெளியிட்டபோதும் இதையே தலைப்பாக வைத்தனர்.

இதில் “அனுபவவாதம்” என்பது எதைக்குறிக்கிறது என்பதிலும், “அனுபவவாத விமர்சனம்” என்பதில் யார், யாரை விமர்சிக்கிறார் என்பதிலும் நம் நாட்டு இடதுசாரிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 

முதல் குழப்பம் “அனுபவவாதம்” என்கிற சொல்லில் இருக்கிறது. அனுபவவாதம் என்கிற சொல் அகநிலைவாதம் என்கிற போக்குடையவர்களைக் குறிக்கிறது. குறிப்பாக மாவோ கட்சிக்குள் இருக்கும் போக்காகக் குறிப்பிடுகிற அகநிலைவாதம் (Subjectivism) என்பதையே லெனின் இந்த நூலில் அனுபவவாதம் என்று கூறி விமர்சித்துள்ளார் என்று பல தோழர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு குழப்பம் என்னவென்றால், பொருள்களின் வழியாகக் கிடைக்கும் அறிவு மட்டுமே உண்மை என்று கூறுகிற போக்கினை அனுபவவாதம் என்று கூறுவது. பொருள்களின் மூலமாகக் கிடைக்கும் அறிவை மறுக்கிற விமர்சனம் ‘அனுபவவாத விமர்சனம்”. அதாவது பொருள் வழியில் கிடைக்கிற அனுபவத்தை அடிப்படையாக் கொண்ட பொருள்முதல்வாதத்தை விமர்சிப்பதே “அனுபவவாத விமர்சனம்” என்பதாகப் புரிந்து கொள்வது.

இவ்விரண்டு புரிதலும், லெனின் எழுதிய இந்த நூலின்படி எவ்வாறு தவறு என்பதை பார்ப்போம்.

கம்யூனிஸ்டுக் கட்சியில் உள்ள தோழர்களிடையே காணும் அகநிலைவாதப் போக்கை மாவோ சுட்டிக்காட்டுவது வேறு, இந்த அனுபவவாதம் என்கிற அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்பது வேறு.

அகநிலைக் கருத்துமுதல்வாதம் புறநிலையின் இருப்பை மறுத்து பேசுகிறது, மேலும் புலன் அனுபவங்களின் வெளிப்பாடாக புறநிலைப் பொருளை பார்க்கிறது. வெளியில் உள்ள பொருளுக்குத் தனித்த இருப்பு இல்லை, புலனுணர்வு அல்லது மனம் இல்லை என்றால் புறப் பொருள் இல்லை என்பதே இந்தத் தத்துவத்தின் அடிப்படை ஆகும்.

மாவோ கூறுகிற அகநிலைவாதம் (Subjectivism) என்கிற போக்கு புறநிலையை ஏற்றுக் கொண்டிருந்தாலும் தம்முடைய அனுபவங்களை புறநிலையோடு பொருத்திப் பார்க்காமலும் சரிபார்க்காமலும் அப்படியே ஏற்றுக் கொள்வது. நடைமுறையையும் கோட்பாட்டையும் இணைத்துப் பார்க்காமல் அனுபவங்களையே ஆர்வமிகுதியினால் ஏற்றுக் கொள்வது. இத்தகைய அகநிலைவாதப் போக்குடையவர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகளைப் போல புறநிலையை மறுப்பதும் இல்லை, அகநிலையின் வெளிப்பாடே காணும் பொருள் என்று கூறவும் இல்லை.

“நமது படிப்பினைச் சீர்செய்வோம்” என்கிற கட்டுரையின் தொடக்கத்தில் மாவோ அகநிலைவாதம் என்கிற போக்கை தவிர்க்க வேண்டும் என்றால் புறநிலை எதார்த்தத்தில் இருந்து செயலாற்ற வேண்டும் என்று மார்க்சிய மூலவர்கள் கூறியதை நினைவுகூறுகிறார்.

“மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மனச்சான்றுடன் நிலைமைகளை பயின்று அகநிலை விருப்பங்களிலிருந்து இல்லாமல் புறநிலை யதார்த்தங்களிலிருந்து செயலாற்றுவது இன்றியமையாதது என்று நமக்கு கற்பித்து உள்ளனர்.”

(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)

நடப்பு நிலைமைகளை ஒதுக்குதல், வரலாற்று தொடர்ச்சியை பார்க்காதிருத்தல், மார்க்சிய-லெனினிய போதனையை பின்பற்றாமை ஆகிய குறைபாடே அகநிலைவாதப் போக்கு தோன்றுவதற்குக் காரணமாக மாவோ கூறுகிறார்.

“நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந் தள்ளுதல், மார்க்சிய - லெனினியத்தைப் பயன்படுத்துதலை புறந் தள்ளுவது ஆகிய மூன்று கூறுபாடுகள் அனைத்தும் மோசமான வேலைப்பாணியை கொண்டிருக்கின்றன. அதன் பரவல் நமது பல தோழர்களுக்குத் தீங்கை ஏற்படுத்துகிறது.

உண்மையில் நமது அணிகளில் இந்த வேலைப்பாணியினால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ள பல தோழர்கள் உள்ளனர். அவர்கள் நாடு, மாகாணம், கவுன்டி அல்லது மாவட்டத்திற்கு வெளியே மற்றும் உள்ளே இருக்கின்ற குறிப்பான நிலைமைகளைப் பற்றி முறையான முழுமையான ஆய்வை மேற்கொண்டு பயில்வதற்கு விருப்பமில்லாமல் குறைபாடான அறிவு மற்றும் “அது அவ்வாறே இருந்தாக வேண்டும். ஏனெனில் எனக்கு அவ்வாறே தெரிகிறது” என்ற அடிப்படையின் மீதே உத்தரவுகளை இடுகிறார்கள். வேறு எந்த அடிப்படையும் இல்லை. நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைப் பாணி நிலவுகிறது அல்லவா?”

(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)

அகநிலைவாதம் என்கிற போக்குடையோர் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை மீறுவதைப் பற்றி மாவோ கூறுகிறார்.

“நாம் மார்க்சியத்தைப் பயின்று கொண்டிருக்கிற போதிலும் நம்மில் பலர் அதைப் பயிலும் வழியானது மார்க்சியத்திற்கு நேரடி யாக எதிராகச் செல்கிறது. சுருக்கமாக கூறுவதெனில். அவர்கள், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரால் நமக்கு அக்கறையோடு வற்புறுத்தி கூறப்பட்ட அடிப்படை கொள்கைநெறி யான (Principle) கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான ஐக்கியத்தை மீறுகின்றனர். அவர்கள் அக்கொள்கைநெறியை மீறிய தோடு நடைமுறையிலிருந்து கோட்பாட்டைப் பிரித்தல் என்ற தங்களுக்கு சொந்தமான எதிர்நிலைக் கொள்கைநெறியைக் கண்டு பிடிக்கின்றனர்”

(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)

புறநிலையை கவனிக்காமல் ஆர்வத்தினால் எழும் உற்சாகத்தினைச் சார்ந்து; கொள்கைக்கு மாற்றாக உணர்வுகளை வைப்பதினால் ஏற்படும் அகநிலைவாதம் என்கிறப் போக்கை மாவோ கூறுகிறார்.

“அகநிலை உளப்பாங்கு.

ஒரு நபர் இந்த உளப்பாங்கை கொண்டு சூழ்நிலை பற்றிய முறையான முழுமையான பயிலுதலை மேற்கொள்ளாமல் திடீரென்று எழுகிற அகநிலை உற்சாகத்தினைக் கொண்டு பணிபுரிந்து இன்றைய சீனாவின் முகத்தைப் பற்றித் தெளிவற்ற சித்திரத்தை கொண்டிருக்கிறார்.

… … …

… … …

இன்றையு சீனா அல்லது நேற்றைய சீனாவைப் பயில்வதில் விருப்பமின்றி தங்களின் விருப் பத்தை எதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் “கோட்பாடுகளை” பயில்வதற்கு கட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். மற்ற பலரோ நடைமுறை வேலையினைச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கூட புறநிலை நிலைமைகளைப் பயில்வதற்கு தங்களது கவனத்தினைச் செலுத்தாமல் அடிக்கடி வெறும் ஆர்வத்தினை சார்ந்து கொள்கைக்கு தங்களது தனிநபர் உணர்வுகளை மாற்றாக வைக்கின்றனர். இவ்விரு வகையிலான நபர்கள் அகநிலையைச் சார்ந்துள்ளதோடு புறநிலை எதார்த்தங்களையும் புறக்கணிக்கின்றனர்.”

(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)

அகநிலைவாதப் போக்கானது மார்க்சிய-லெனினியத்துக்கும் அறிவியலுக்கும் முரணாக இருப்பதையும், அகநிலைவாதப் போக்கை தூக்கி எறிந்தால் மட்டுமே மார்க்சிய-லெனினியம் என்கிற பேருண்மையை மேலோங்கச் செய்ய முடியும் என்று மாவோ கூறுகிறார்.

“தொகுத்திடுகையில், இந்த அகநிலை வழிமுறையானது மார்க்சிய - லெனினியத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பட்ட தாகவும் (உழைக்கும் வர்க்கம், மக்கள் மற்றும் தேசத்திற்கே) ஒரு வல்லமைமிக்க எதிரியாகவும் உள்ளது. இது கட்சியின் மன வலிமையில் உள்ள கறைப்பட்ட தன்மையின் ஒரு வெளிப்பாடே. ஒரு வல்லமைமிக்க எதிரி நம்முன் நிற்கிறான். அகவியத்தைத் (subjectivism) தூக்கி எறியும்போது மட்டுமே மார்க்சிய - லெனினியம் என்ற பேருண்மை மேலோங்க இயலும்; கட்சியின் மனவலிமை வலுப் படுத்தப்பட இயலும். புரட்சி வெற்றிகரமாக இருக்க இயலும். அறிவியல் உளப்பாங்கு இல்லாமல் இருத்தல் அதாவது, கோட்பாட்டையும் நடைமுறையையும் ஐக்கியப்படுத்தும் மார்க்சிய - லெனினிய அணுகுமுறை இல்லாமல் இருத்தல் என்பது கட்சியின் பால் உணர்வு இல்லை அல்லது குறைபாடாக இருக்கிறது என்றே பொருளாகிறது என வலியுறுத்தி ஆக வேண்டும்.”

(நமது படிப்பினைச் சீர்செய்வோம்)

மாவோ இங்கே குறிப்பிடுகிறவை அனைத்தும் அகநிலைவாதம் (Subjectivism) என்கிற போக்கே ஆகும். இந்த அகநிலைவாதப் போக்கு புறநிலையை ஒப்புக் கொள்கிறது, ஆனால் அனுபவத்தை நடைமுறையோடு சரிபார்க்காது, கோட்பாட்டை நடைமுறையோடு இணைக்காது போனதினால் ஏற்பட்ட குறைபாடு ஆகும்.

லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலில் விமர்சிப்பது, அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும். இந்த அகநிலை கருத்துமுதல்வாதம் புறப் பொருள் தனித்து இருப்பதை மறுப்பதோடு, புறப் பொருளை புலனுணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமே கொள்கிறது. மேலும் இந்த அகநிலைக் கருத்துமுதல்வாதமானது புறநிலை எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் புலனுணர்வை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் “நான்” மட்டுமே இந்த உலகில் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறது. மாவோ குறிப்பிடுகிற அகநிலைவாதமானது “நான்” மட்டும் இருப்பது என்கிற கற்பனையை ஏற்றுக் கொள்ளவில்லை.

“அனுபவவாத விமர்சனம்” என்று லெனின் தனது நூலில் குறிப்பிடுவது அகநிலைவாதப் போக்கை அல்ல, அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்கிற தத்துவத்தை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நூலில் லெனின், “அனுபவவாத விமர்சன தத்துவத்தின் தொடக்கம் அகநிலைக் கருத்துமுதல்வாதம்..” (பக்-115) என்று தெளிவாகவே கூறியுள்ளார். 

“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் எஸ்.தோதாத்ரி தமது உரையில், “..பொருள் மூலமாகக் கிடைப்பது மட்டும் தான் உண்மை என்று கூறும் தத்துவப் போக்கினை அனுபவவாதம் என்று அழைக்கின்றனர். இது பற்றிய விரிவான ஆய்வுதான் லெனினது இந்த நூல்” என்று எழுதியுள்ளார்.

அனுபவவாதம் இரண்டு போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாத அனுபவவாதம், மற்றொன்று பொருள்முதல்வாத அனுபவவாதம். எஸ்.தோதாத்ரி அவர்கள் இங்கே பொருள்முதல்வாத அனுபவவாதத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் லெனின் இந்த நூலில் கருத்துமுதல்வாத அனுபவவாதத்தைத்தான் விமர்சிக்கிறார். 

எஸ்.தோதாத்ரி அவர்களின் கூற்று, பொருள்முதல்வாத அனுபவவாதத்தை மாஹி போன்றோர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிற தவறானப் புரிதலுக்கு வழிவகுக்கிறது. அதாவது பொருள்முதல்வாத அனுபவவாதத்தை மாஹி விமர்சிப்பதனால் மாஹியர்களின் தத்துவம் “அனுபவவாத விமர்சனம்” என்று கூறப்படுகிறது என்ற தவறானப் புரிதலுக்கு இடம் கொடுக்கிறது.

எஸ்.தோதாத்ரி அவர்களின் கூற்றின் அடிப்படையில் நானும் தொடக்கத்தில், “பொருளை முதலாகவும் அடிப்படையாகவும் கொண்ட பொருள்முதல்வாதத்தை “அனுபவவாதம்” என்றும் கூறுவர். ஏனென்றால் அனுபவத்தின் அடிப்படையில் அறிவைப் பெறுவதினால் இவ்வாறு அழைக்கப்பட்டது. பொருள்முதல்வாதத்தை விமர்சிக்கும் மாஹ் போன்றோர்களின் விமர்சனத்தை “அனுபவவாத விமர்சனம்” என்று கூறப்படுகிறது.” என்று எழுதினேன். இது தவறு என்பதனால் தற்போது இதனை நீக்கிவிட்டேன். 

“அனுபவவாதம்” “அனுபவவாத விமர்சனம்” ஆகியவை இரண்டும் தனித்தனித் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவை, ஆனால் இரண்டும் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது. “அனுபவவாதம்” என்கிற தத்துவத்தின் வளர்ச்சியாக “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவத்தைக் கூறலாம்.

கருத்துமுதல்வாத அனுபவவாதத்துக்கும் பொருள்முதல்வாத அனுபவவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.

புலன் அனுபவம்தான் அறிவுக்குத் தோற்றுவாய் என்று கருத்துமுதல்வாத அனுபவவாதம் கூறுகிறது. பெர்க்கிலி, ஹீயூம் ஆகியோர் இந்தத் தத்துவத்தைப் போதிக்கின்றனர். புறநிலையாக இருக்கக்கூடிய புற உலகே, புலன் அனுபவத்திற்கான அடிப்படை என்று கூறுவது பொருள்முதல்வாத அனுபவவாதம். பிரான்சிஸ் பேகான், லாக் ஆகியோர் இந்தத் தத்துவத்தைப் போதிக்கின்றனர்.

லெனின் இந்த நூலில் பெர்க்கிலியைப் பின்பற்றுகிற மாஹி, அவெனாரியஸ் போன்றோர்களின் கருத்துமுதல்வாதம் என்கிற அனுபவவாத விமர்சனத்தை எதிர்த்து விமர்சிக்கிறார். இந்தக் கருத்துமுதல்வாதம் என்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம் ஆகும்.

இந்த நூலில் லெனின் “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவத்தை விமர்சிப்பதினால், இந்தச் சொல்லை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

“அனுபவவாத விமர்சனம்” (Empirio-Criticism) என்றால் அனுபவத்தின் விமர்சனம் (criticism of experience) என்பதே பொருளாகும். 

அனுபவவாத விமர்சனம் என்பது புலன் அனுபவத்தை மட்டுமே உண்மையானதாகக் கருதுவதோடு இந்த புலன் அனுபவத்தை இறுதியானதாக, உறுதியானதாக, அறுதியானதாக (absolute) கருதுகிறது. 

ஆங்கிலத்தில் உள்ள Criticism (விமர்சனம்)  critique (பகுத்தாய்வு) என்கிற இரண்டு சொல்லும் ஒரே பொருளை கொடுப்பதாகத் தோன்றினாலும் இரண்டுக்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. விமர்சனம் (Criticism) என்கிற சொல் எதையாவது அல்லது யாரையாவது பற்றிய உறுதியான இறுதியான, அறுதியான தீர்ப்பை வழங்குகிறது. பகுத்தாய்வு (critique) என்கிற சொல் எதையாவது அல்லது யாரையாவது பற்றிய சரி, தவறு என்பதை பிரித்து காட்டுகிறது. சரியானதை ஏற்பதற்கும் தவறானதை ஒதுக்குவதற்கும் பகுத்தாய்வு உதவுகிறது. ஆனால் விமர்சனம் என்பது சரி, தவறு என்று பிரிக்காமல் அறுதியானதாகக் கருதுகிறது. அனுபவவாத விமர்சனம் (Empirio-Criticism) அனுபவத்தை அறுதியானதாகக் கொள்கிறது.

“அனுபவவாத விமர்சனம்” என்பது அனுபவத்தை விமர்சன வழியில் அறுதியானதாக கருதுகிறது. இதற்கு அனுபவவாத விமர்சனம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்த அனுபவத்தை அனுபவவாத விமர்சகர்கள் தூய அனுபவம் என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தூய அனுபவம் என்பது அனுபவமே முதன்மையானது, உண்மையானது என்றும் புறப்பொருள் அனுபவத்தின் வெளிப்பாடு, இரண்டாம் நிலையினது என்றும் கருதுகிறது. அதனால்தான் இந்த தூய அனுபவத்தின் மீதான விமர்சனம் என்கிற தத்துவம் அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

தூய அனுபவத்தின் அகநிலைக் கருத்துமுதல்வாத தத்துவவாதியான பிச்டேயின் கூற்றை மேற்கோளாக லெனின் தருகிறார்.

“ஒரு மனிதன் அனுபவத்தைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை என்பதுதான் எனது தத்துவத்தின் ஆன்மாவாக உள்ளுணர்வாக உள்ளது என்பதை நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன்; ஒரு மனிதனுக்குக் கிடைப்பதெல்லாம் அவனது அனுபவத்தின் மூலம் மட்டுமே….” (பக்கம் - 185)

“அனுபவவாத விமர்சனம்” என்பது புலன் அனுபவத்தை விமர்சிப்பதன் மூலம் அறிந்து கொண்ட முடிவு என்னவென்றால், புலனே அனுபவத்துக்கு அடிப்படை, உலகம் என்பது புலன் அனுபவத்தின் வெளிப்பாடு.

“அனுபவவாத விமர்சனம்” என்கிற அகநிலைக் கருத்துமுதல்வாதத் தத்துவமானது, கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்கிற இருபெரும் முகாமை மறுத்து தத்துவத்தை ஒன்றெனக் கூறுகிறது.

அகநிலைக் கருத்துமுதல்வாதமான “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவப் போக்கையே லெனின் இந்த நூலில் விமர்சித்துள்ளார். அனுபவவாத விமர்சகர்கள் பல்வேறு நாடுகளில் பலர் உருவாகினர். இதில் குறிப்பிடத் தக்கவர்கள் மாஹ், அவெனாரியஸ், போக்தனோவ், பஸாரவ், லுனாசார்ஸ்கி, பெர்மன், ஹெல்பாண்ட், யுஷ்கேவிச், சுவோரோவ்.

பொருள்முதல்வாதத்தை விமர்சிப்பதனால் இவர்களின் தத்துவத்தை அனுபவவாத விமர்சனம் என்று கூறவில்லை, புலன் உணர்வுகளை விமர்சிப்பதன் மூலம் தங்கள் தத்துவத்தைப் பெற்றதனால் அனுபவவாத விமர்சனம் என்று இத்தத்துவத்துக்கு இவர்களே பெயரிட்டுக் கொண்டனர்.

இந்தத் தெளிவைப் பெற்று, “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற தமிழ் மொழிபெயர்ப்பு நூலைப் படித்து பயன்பெறுவோம்.

அ.கா. ஈஸ்வரன்




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்