இரு நாட்களுக்கு முன் எனது அருகாமை கிராமத்தில் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு பிரச்சாரம் நடந்தது, அங்கே நான் கேட்ட பாமர மக்களின் கருத்து வியக்க வைத்தது,” இவையெல்லாம் கண்கட்டி வித்தை” என்பதை என்னவென்று சொல்ல. ஏனெனில் அறிவியலை விட மத போதனையால் மயங்கி கிடக்கும் கூட்டத்தை முதலாளித்துவ நாத்திக வாதத்தால் வென்றெடுக்க முடியாது, அவர்களின் வாழ்க்கை மாற சமூகம் மாற வேண்டும், அதை விளக்க கீழ் காணும் பதிவை வாசிக்கவும்.
மதம் பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி நின்று அதற்கு மிகவும் அயலானதாகத் தோன்றுகிறது. ஆயினும், மதக் கருத்துக்கள் தம் சொந்த விதிகளின்படி வளர்ந்தாலும், இவ்வளர்ச்சியின் போக்கும் சாரமும் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார வாழ்க்கையின் மாற்றங்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையவை என்று மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.
சமுதாய வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் எதிர் எதிராக நின்று போராடும் வர்க்கங்களின் பொருளாதார் உறவுகள் மற்றும் நலன்களால் கோட்பாடு ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகின்றன என்ற உண்மை மதத்துறைக்கும் பொருந்தும்.
சுரண்டப்படும் மக்களை சுரண்டல்காரர்கள் தமது அடிமைகளாக நீடித்து வைத்திருப்பதற்கு பொருளாதார ஒடுக்குமுறையுடன் கூட அரசியல், ஆன்மீக ஒடுக்கு முறைகள் தேவைப்படுகின்றன. ஆன்மீக ஒடுக்குமுறைகளின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.
காட்டுமிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும், சைத்தான்களிலும், அவதாரங்களிலும், அற்புதங்களிலும், பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறதோ, அதுபோல சுரண்டப்படும் வர்க்கங்கள், சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவலநிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறது.
பிறர் உழைப்பில் உண்டு வாழ்வோர் சுகபோகமாக வாழ்வது ஏன்? ஒருவன் மேல் சாதிகாரனாகப் பிறப்பது ஏன்? அது அவன் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என மதம் காரணம் கூறுகிறது. உழைத்து உழைத்து உருக்குலைந்து போன சுரண்டப்படுவோர் இல்லாமையால் துன்புறுவது ஏன்? ஒருவர் தாழ்ந்த சாதிக்காரராக பிறப்பது ஏன்? அது அவர் செய்த பாவம் என மதம் காரணம் கூறுகிறது. இவ்வாறு ஆண்டான் அடிமை முறைக்கு மதம் நியாயம் கற்பிக்கிறது. சுரண்டப்பட்டு அடிமைப்பட்டிருப்போர் இந்தப் பிறவியில் தமது எஜமானர்களுக்கு பயன் கருதாமல் உழைத்தால் அவர்களுக்கு செத்தபின் சிவலோக பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, இந்த வாழ்வில் அவர்களை மன ஆறுதல் கொள்ளச் செய்கிறது மதம். இந்த வாழ்வில் தமது அவல நிலையைப் போக்கவும், ஓரளவேனும் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான கோரிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் இருக்கும் படி அவர்களை ஆன்மீக போதையில் மதம் மூழ்கடித்து விடுகிறது. இதனால்தான் மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் சொன்னார். “மதம் மக்களின் அபின்” என்ற மார்க்சியத்தின் ஆய்வுரைதான் மதம் பற்றிய மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் அச்சாணியாகும்-அடிப்படையாகும் (Corner Stone).
மதமும் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயம் தோன்றும்போது மதமும் ஒழிந்துப்போகும் என்றும் மார்க்சியம் கூறுகிறது.
இனி நாத்திகம் பற்றி
முதலாளித்துவவாதிகள் நாத்திகத்தைப் பற்றியும், மதத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் முறையிலிருந்து பாட்டாளி வர்க்கம் அதைப் பிரச்சாரம் செய்யும் முறை மாறுபட்டிருக்கிறது. அவர்கள் செய்வதுபோல், மதம் பற்றிய பிரச்சினையை ஒரு அரூபமான, கருத்து முதல்வாத பாணியிலும், வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத ஒரு “அறிவுத்துறை” பிரச்சினையாகவும், முன்வைப்பது ஒரு தவறான பாதையாகும் என மார்க்சியம் கருதுகிறது. மேலும், உழைக்கும் மக்களை ஒடுக்கப்படுவதை அடிபடையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வெறும் பிரச்சார முறைகளைக் கொண்டே மத மூட நம்பிக்கைகளை அகற்றிவிட முடியாது.
மக்களிடம் மத நம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்புமாகும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிற்போக்குச் சக்திகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தாமே போராடுவதின் மூலம் அவர்கள் அறிவொளி பெறாதவரை, எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. ஆகையால், விண்ணுலகச் சொர்க்கம் குறித்து, உழைக்கும் மக்களிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும், மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். வர்க்கங்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மத நம்பிகைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. ஆகையால்தான் தமது தப்பெண்ணங்களை இன்னமும் முற்றாக விட்டொழிக்காமல் வைத்திருக்கும் மக்களை பாட்டாளி வர்க்கக் கட்சி முன்வைக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் திரட்டுவதற்கும், அதன் மூலம் அவர்கள் அறிவொளி பெற்று மத மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கச் செய்யும் பொருட்டும் கட்சித் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதை அதன் அடிப்படையான பணிக்கு - அதாவது சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டப்படும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உட்படுத்தியே செய்யவேண்டும். இதற்கு மாறாக ஒரு பிரச்சினை எழுப்பப்படலாம்.
சிந்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்தவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்குமான எதிரியை எதிர்த்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தை எவ்வாறு வர்க்கப் போராட்டத்துக்கு உட்படுத்த முடியும்? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்துக்கு உட்படுத்த முடியும் என்று கேட்கக்கூடும். இவ்வாறு கேட்பது மார்க்சிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதலின்மையினாலேயாகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யும் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும். அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல.நாத்திகப் பிரச்சாரத்துக்கும் - அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கிடையில் உள்ள மத நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவது இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறாநிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடய, ஒப்புநோக்கு ரீதியலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை) அழிக்க முடியாத முற்றான ஒரு எல்லைக்கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவது ஆகும். இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் ஒன்றை பலவந்தமாகப் பிரிப்பதாகும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.
இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திக்கப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டதின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.
இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப் படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச் செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாதத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு - அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.
-நன்றி சமரன் (பதிவு).
No comments:
Post a Comment