மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1
படைப்பின் அற்புதத் தருணங்கள்
1848 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய “கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்தது. 1848 ஆம் ஆண்டையும் கம்யூனிஸ்ட் அறிக்கையையும் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய மைல்கற்களாகக் கருதலாம். மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் வரிசையில் தொகுதி ஒன்று, 1848 கம்யூனிஸ்ட் அறிக்கையை அடையாளமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 1841 ஆம் ஆண்டிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் சிந்தனை எவ்வாறு கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி நகர்ந்து வந்தது என்பதை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களும் கட்டுரைகளும் எடுத்துக்காட்டுகின்றன. 1841 ல் மார்க்ஸ் அவரது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்ததிலிருந்து சுமார் 10 ஆண்டுகளில் அவரது சிந்தனைப் பரிணாமத்தை இத்தொகுதிகளில் இடம்பெற்றுள்ள படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. மிக உக்கிரமான வேகத்துடன், காத்திரமான பிரச்சினைகளின் ஊடாக, குறிப்பிட்ட இவ்வாண்டுகளில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் தேடல்கள் நிகழ்ந்தன. அவற்றைத்தான் இந்த அறிமுக உரையில் “படைப்பின் அற்புதத் தருணங்கள்” என்று நாம் பெயரிட்டு அழைக்கிறோம். உலகம் அதுவரையில் அறியாதிருந்த மார்க்சியம் என்ற ஒரு புதிய சிந்தனை எந்தெந்தப் பிரச்சினைகளின் ஊடாகப் பயணம் செய்து அதன் சிந்தனை உயரத்தை எட்டியது என்பதை இந்த அறிமுகக் கட்டுரையில் வரிசைப்படுத்த முனைகிறோம்.
மார்க்சின் டாக்டர் பட்ட ஆய்வேடு (1841)
பண்டைய கிரேக்கத் தத்துவத்தில் இரண்டு முக்கியமான பொருள்முதல்வாதிகள் இருந்தனர். டெமாக்ரிட், எபிக்யூர் ஆகியோர் அவர்கள். மார்க்ஸ் அவர்கள் இருவரின் தத்துவங்களையும் ஒப்பிட்டுத் தனது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வினைச் செய்தார். டெமாக்ரிட், எபிக்யூர் ஆகியோரின் இயற்கைத் தத்துவங்களிடையிலான வேறுபாடுகள் என்பது ஆய்வேட்டின் தலைப்பு. குறிப்பிட்ட அக்காலம் ஜெர்மனியில் ஹெகல் என்ற மிகப்பெரிய தத்துவவாதியை அடுத்து வந்த காலம். இன்றைய மொழியில் அதனைப் பின் ஹெகலிய காலம் என்று சொல்லவேண்டும். ஹெகல் ஓர் அறிவார்ந்த கிறித்தவ சிந்தனையாளர். இறைவன் அல்லது பரம்பொருள் என்ற உலகைக் கடந்த ஒற்றைக் கருத்திலிருந்து அவர் உலகம், இயற்கை, சமூகம், வரலாறு, சிந்தனை, தருக்கவியல், சமயம், சட்டவியல், அழகியல் ஆகிய சகலவற்றையும் வருவித்துக் காட்டினார். அன்றைய அளவுகோல்களின் படி அது ஒரு முழுநிறைவான தத்துவம். ஹெகல் ஒரு மிகப்பெரிய ஆலமரம். ஆயின் அவருக்குப் பிறகு அத்தத்துவம் எந்தத் திசை நோக்கித் திரும்பும்? அவரளவுக்குப் பெரிய சிந்தனையாளர்கள் தோன்ற சாத்தியம் இருந்ததா? ஒரு முட்டுச் சந்து போல, உச்சியை நோக்கி வளர்ந்துவிட்ட அது தொடர்ந்து போக இடம் இருந்ததா?
ஹெகலை அடுத்து வந்த காலத்தைப் பண்டைய கிரேக்கத்தில் அரிஸ்டாட்டிலுக்குப் பிறகான காலத்தோடு அறிஞர்கள் ஒப்பிடுகின்றனர். மார்க்சும் அப்படித்தான் கருதினார். அரிஸ்டாட்டிலைத் தொடர்ந்து கிரேக்கத்தில், ஸ்டாயிக்குகள் (பிடிவாதமான அறச்சிந்தனையாளர்கள்), எப்பிக்யூரியர்கள் (இன்பநுகர்ச்சியாளர்கள்?), ஸ்கெப்டிக்குகள் (நம்பிக்கை வறட்சியாளர்கள்) போன்ற தத்துவவாதிகள் கிரேக்கத்தில் தோன்றினார்கள். கிரேக்கத் தத்துவம் ரோமானியத் தத்துவமாக அக்காலத்தில் மாறி நடைபோட்டது. கிரேக்க அறிவுவாதம் கிறித்தவச் சமயச் சிந்தனையாக மாற்றம் பெற்றது. பண்டையக் கிரேக்க சூழலுக்கும் பின்னை ஹெகலியச் சூழல்களுக்கும் இடையில் ஓர் ஒப்புமை இருப்பதாக மார்க்சுக்குத் தோன்றியது. மார்க்ஸ் தனது சமகாலச் சூழல்களுக்குள் தலையிடுவதற்காகக் கிரேக்கத் தத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.
மார்க்சுக்குப் பிடித்த கிரேக்கப் புராணக் கதாநாயகன் புரோமித்தஸ். அவர் சொர்க்கத்தில் கடவுளர்களிடையில் மட்டும் பயன்பாட்டில் இருந்த நெருப்பைத் திருடி, நெஞ்சுக் கூட்டுக்குள் மறைத்து வைத்து, பூமிக்குக் கொண்டு வந்து மக்களிடம் வழங்கினார். அன்றைக்கு இளம் ஹெகலியவாதியாக இருந்த மார்க்சும் அப்படித்தான் தன்னையும் நினைத்துக் கொண்டார். தத்துவ வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அறிவின் ஆற்றலை உழைக்கும் மக்களிடம் மீட்டுக் கொணர்ந்து சேர்ப்பிக்க வேண்டும். இவ்வாறாக மார்க்சின் ஆய்வுத் தலைப்பு ஓர் இணைநிலை நோக்கம் கொண்டது. டெமாக்ரிட், எபிக்யூர் என்ற இரண்டு தத்துவவாதிகளைக் குறித்த ஆய்வின் மூலம், மார்க்ஸ் மேற்கு ஐரோப்பாவில் ஹெகலுக்குப் பிந்திய தத்துவ வரலாற்றில் பொருள்முதல்வாதத் திருப்பத்தை முன்மொழிந்தார்.
டெமாக்ரிட், எப்பிக்யூர் இருவருமே அடிப்படையில் தத்துவத்தின் பகுத்தறிவுப் பண்பை நிலைநிறுத்தியவர்கள் என்று மார்க்ஸ் வாதிடுகிறார். தத்துவத்தை இறையியலோடு ஒப்பிட்டு இதனை அவர் விளக்குகிறார். தத்துவத்தையும் இறையியலையும் சமப்படுத்தவோ, சமரசப்படுத்தவோ கூடாது என்று மார்க்ஸ் கூறுகிறார். மார்க்சுக்கு இந்நிலையில் தத்துவம் எனில் சுதந்திரம், அறிவு, விடுதலை, மனிதரின் சுய ஓர்மை. இங்கு மார்க்ஸ் புரோமித்தசை நினைவுபடுத்துகிறார். “எல்லாக் கடவுளரையும் நான் வெறுக்கிறேன். கடவுளர்கள் மனிதர்களது சுய ஓர்மையை அங்கீகரிப்பதில்லை”. இவை புரோமித்தஸின் வார்த்தைகள்.
எபிக்யூரைப் பற்றிச் சொல்லும் போது அவர் ஓர் உணர்ச்சித் தத்துவவாதி என்று சொல்லுவார்கள். இதே கருத்தின் அடிப்படையில் அவரது தத்துவத்தை இன்ப நுகர்ச்சிவாதம் என்றும் சொல்லுவதுண்டு. உணர்ச்சி என்பது மனிதரில் பொருள்முதல்வாதம். டெமாக்ரிட்டை அப்படி யாரும் சொல்லுவது கிடையாது. அவரைப் புறவயமான பொருள்முதல்வாதி என்று கறாராகக் குறிப்பிடுவர். அதாவது மானுடச் சார்பற்று, மனித உணர்ச்சிகளின் பங்கேற்பு எதுவும் இல்லாமல், இயற்கை இயற்கையாக மட்டும் புறவயமாகத் தொழில்படுகிறது என்பது அதன் பொருள். ஆயின் மார்க்சுக்கு இயற்கை இப்படி ஓர் எந்திரம் போல தொழில்படுவது ரசிக்கவில்லை.
இப்போது மார்க்சுக்கு எப்பிக்யூருக்கும் டெமாக்ரிட்டுக்கும் இடையிலான வேறுபாடு சரியாகத் தென்படுகிறது. டெமாக்ரிட்டின் இயற்கையில் சுதந்திரத்திற்கோ தன்னிச்சைக்கோ இடமில்லை. அணுக்களின் இயக்கமே கூட நேர்கோட்டுப் பாதைகளைக் கொண்டது. அது கறாரான நிர்ணயவாதத்திற்கு ஆட்பட்டது. எப்பிக்யூரின் பொருள்முதல்வாதம் சம அளவில் இயற்கையின் புறவயப் பண்பையும் மானுடப் பங்கேற்பின் அகவயப் பண்பையும் அங்கீகரிக்கிறது. அங்கு உயிர்ப் பண்பு, சுதந்திரம், தன்னிச்சை ஆகியவற்றுக்குப் போதுமான இடம் உண்டு. அணுக்கள் எப்பிக்யூரின் சித்தரிப்பில் நேர்கோட்டில் பயணிப்பதில்லை. அவை சுழல் இயக்கம் கொண்டவை. அவை வளைகோட்டுப் பாதையில் இயங்குகின்றன. அவை திசைமாறவும் (Swerve) செய்கின்றன.
மார்க்ஸ் கருத்துமுதல்வாதத் தத்துவங்களின் எதிரி என்பது உண்மைதான். ஆயின் அவர் அவருக்கு முந்திய காலத்தியப் பொருள்முதல்வாதங்களையும் விமர்சனங்களுக்கு ஆட்படுத்தினார். மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதத் தத்துவங்களில் மிகபெரிய ஒரு குறைபாடு, பலவீனம், ஓர் இடைவெளி இருந்தது. அவை மனிதனைத் தொடுவதில்லை, அவனை உசுப்புவதில்லை, அவனது ஆற்றலைச் சீண்டுவதில்லை. எப்பிக்யூரின் தத்துவத்தில் மார்க்ஸ் அதனைக் கண்டுகொண்டார். ஜெர்மனியில் ஹெகலுக்குப் பிறகு பொருள்முதல்வாதம் நோக்கிய ஒரு திசைமாற்றம் ஏற்பட வேண்டுமானால், அப்பொருள்முதல்வாதம் இயங்கியலைச் சுவீகரித்து, மானுடச் செயல்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் தத்துவமாக இருக்க வேண்டும். எப்பிக்யூரிடமிருந்து மார்க்ஸ் வரித்துக்கொண்ட பாடம் அது. எப்பிக்யூரின் உணர்ச்சிகளில் நனைந்த பொருள்முதல்வாதத்தை மார்க்சின் ஆய்வேடு பாராட்டியது. இளம் மார்க்சின் அற்புதமான முதல் படைப்புத் தருணம் இது.
மதம் குறித்த இளம் மார்க்சின் விமர்சனங்கள்
“மதம் குறித்த விமர்சனம்தான் எல்லா விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனையாகவும் உள்ளது.” ஹெகல் குறித்த மார்க்சின் ஒரு கட்டுரை (1843-44) மேற்குறித்த வாக்கியத்தோடு தொடங்குகிறது. ஜெர்மானிய அறிஞர்கள் வட்டாரத்தில் அன்றைய நாட்களில் மதம் குறித்த விவாதங்கள் மிகக் காத்திரமாக நடைபெற்று வந்தன. மார்க்சும் எங்கெல்சும் இவ்விவாதங்களில் தீவிரமாகப் பங்கேற்றனர். மதம் குறித்த விமர்சனங்களில் மார்க்ஸ் இக்காலத்தில் ஜெர்மானிய மனிதவியல் பொருள்முதல்வாதியான லுத்விக் ஃபாயர்பாகைப் பின்பற்றினார்.
“பரலோகத்தின் வினோத யதார்த்தத்தில் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன் தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையும் அங்கு காணவில்லை.” இதுவே ஃபாயர்பாகின் நிலைப்பாடு. இந்தக் கருத்தை இன்னும் பல சொற்களால் மார்க்ஸ் தீவிரப்படுத்துகிறார். அப்படித் தீவிரப்படுத்தும்போது அவரால் அடுத்த நிலையை நோக்கி நகர முடிகிறது.
“மதத்தின் துயரம் என்பது ஒரே சமயத்தில் உண்மையான துயரத்தின் வெளியீடாகவும், உண்மையான துயரத்துக்கெதிரான ஆட்சேபணையாகவும் இருக்கிறது.” இது ஃபாயர்பாகின் அணுகுமுறை அல்ல. இங்கு ஹெகலிய இயங்கியல் தொழில்படுகிறது. மதம் குறித்த இயங்கியல் சித்தரிப்பு இது. மதத்தின் இரண்டு முகங்கள் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மதத்தில் மானுட துயரத்திற்கு எதிரான ஆட்சேபணை (விமர்சனம், எதிர்ப்பு) உள்ளது என்ற கருத்தைப் பகுத்தறிவு அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. ஆயின் இயங்கியல் தத்துவம் மதத்தை உடன்பாடாகவும் எதிர்ப்பாகவும் இணைத்துக் காணும் ஆற்றல் கொண்டது. ஃபாயர்பாகிலிருந்து தொடங்கிய மார்க்ஸ், அதனுள் ஹெகலிய அணுகுமுறையை மிகநுட்பமாக நுழைப்பதைக் காணுகிறோம்.
மதத்தை மானுடத் துயரத்திற்கெதிரான ஆட்சேபணையாகக் கொள்ளும் போது, அது “இதயமில்லா உலகத்தின் இதயமாகவும் ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சாகவும்” ஆகிவிடுகிறது. “இவ்வாறாக, பரலோகத்தைப் பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது”. மார்க்ஸ் அவர் விரும்பிய இடத்தை வந்து சேர்ந்து விட்டார். மதத்தை விமர்சிக்க விரும்பிய மார்க்ஸ், அம்மதத்தை உற்பத்தி செய்த பூவுலகின் முரண்பாடுகளுக்கு வந்து சேர்ந்து விட்டார்.
சரி, பூவுலகின் முரண்பாடுகளை எப்படி எதிர்கொள்ளுவது? “பௌதீகமான பலத்தைப் பௌதீகமான பலத்தினால்தான் தூக்கியெறிய முடியும். விமர்சன ஆயுதத்தால் ஆயுத விமர்சனத்தை அகற்ற முடியாது”. விமர்சன ஆயுதம் என்பது கருத்தியல் பலம். ஆயுத பலம் என்பது பொருள்வகைப்பட்ட பலம். பரலோக முரண்பாடுகளைப் பூவுலகின் முரண்பாடுகளாக மாற்றிய பிறகு, அப்பூவுலக முரண்பாடுகளை பூவுலகத் தன்மை கொண்ட பௌதீக ஆற்றல்களாலேயே எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். இங்கு மார்க்ஸ் ஒரு வன்மையான பொருள்முதல்வாதியாகக் காட்சியளிக்கிறார். அடுத்த வரியில், மார்க்ஸ் எனும் அந்த விந்தை மனிதர் தனது இயங்கியல் வித்தையை விளையாடிக் காட்டுகிறார். “மக்கள் மனதைப் பற்றிப் பிடித்த உடனேயே, கோட்பாடும் ஒரு பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது”.
மார்க்சின் தேடல் தொடருகிறது. சமூக முரண்பாடுகளின் ஊடாக அவற்றின் தீர்வை நோக்கிப் பொருள்வகை சக்தியாகத் தொழில்படக்கூடிய ஒரு வர்க்கம் தோன்ற வேண்டும். அது தன்னை மட்டும் விடுதலை செய்து கொள்ளக்கூடிய வர்க்கமாக இருந்தால் போதாது. மொத்த சமூக முரணின் வெப்பத்தையும் தன்னில் சுமக்கும் வர்க்கமாக அது இருக்க வேண்டும். எல்லோரையும் விடுவிக்காமல் தன்னை விடுவிக்க முடியாத வர்க்கமாக அது இருக்க வேண்டும். சமுதாய முழுமைக்கான ஆற்றலாக அது பிறராலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். பூரண இழப்பு என்ற ஒரு நிலையை எட்டி, பூரண மீள்வாக அது எழுச்சி பெறுவதாக இருக்க வேண்டும். அது சீர்குலைந்து உருமாறவேண்டும். இது மார்க்சின் இயங்கியல். ஹெகல் பற்றிய இக்கட்டுரை கீழ்க்கண்ட வரிகளுடன் முடிவு பெறுகிறது: “தத்துவம் தனது பௌதீக ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது ஆத்மார்த்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது..இந்த விடுதலையின் மூளை தத்துவம்; இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்”.
மதம் குறித்த இயங்கியல் விமர்சனம் சமூகம் குறித்த விமர்சனமாக உருமாறுதல், அது ஒரு சமூக வர்க்கத்தைக் கண்டறிதல் என்பதெல்லாம் மார்க்ஸ் தனக்காக ஏற்படுத்திக் கொண்ட படைப்புச் சூழல். அவரது தத்துவத் தேடல் எந்த நேர்கோட்டிலும் செல்லவில்லை. யார் நடந்து தேய்ந்த பாதையிலும் அவர் நடக்கவில்லை. எதிர்பார்த்திராத திருப்பங்களைக் கொண்ட பாதையை அவர் உருவாக்கிக் கொள்ளுகிறார்.
அந்நியமாதல் என்ற பிரச்சினை
கடவுள் தன்னிலிருந்தே உலகைப் படைத்தார் என்பதைக் கடவுளின் அந்நியப்பட்ட வடிவமே உலகம் என்று சொல்லலாம். அப்படித்தான் ஜெர்மானியத் தத்துவவாதியான ஹெகல் சொன்னார். கடவுள் உலகைத் தன்னிலிருந்து புறவயப்படுத்தினார். எல்லாவகையான புறவயப்படுத்தல்களையும் ஹெகல் அந்நியப்படுத்தல்கள் என்றார்.
கடவுள் உலகைத் தன்னிலிருந்து அந்நியப்படுத்தினார். புறவயப்படுத்தினார். பின் அவற்றோடு இயங்கியல் உறவு கொண்டார். எதிர்வுகளின் ஒன்றுபடுதலும் வேறுபடுதலும். கடவுளுக்கும் உலகுக்கும் இடையிலான இயங்கியலே மனிதகுல வரலாறு, சமூக வரலாறு. இதுவும் ஹெகலியத் தத்துவம். மனிதரின் உழைப்பு என்பதைக் கூட ஹெகல் புறவயப்படுத்தல் என்றார், எனவே அதனையும் அவர் அந்நியப்படுத்தல் என்றே கூறினார்.
1844 ல் மார்க்ஸ் எழுதி விட்டுச் சென்றுள்ள “பொருளாதார மற்றும் தத்துவார்த்தக் கையெழுத்துப் பிரதிகள்” என்ற நோட்டுப் புத்தகங்களிலிருந்து இளம் மார்க்சின் அந்நியமாதல் பற்றிய குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கின்றன. 1932 ல்தான் அவை அச்சுக்கு வந்தன.
மனிதரின் உழைப்புத் திறனை மார்க்ஸ் முதன்மையான மனித இயல்பாகக் கொள்ளுகிறார். இது மார்க்சியத்தின் அரிச்சுவடி. உழைப்பு படைப்புத்தன்மை கொண்டது; அது சமூகத்தன்மை கொண்டது. அது மேலும் மேலும் செழுமைப்படும் பண்பு கொண்டது. ஆயின் உடமைச் சமுதாயத்தில் மனித இயல்பான உழைப்பு மனிதருக்கே அந்நியமாகும் அவலம் நிகழுகிறது என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். உழைப்புத் திறன் சுரண்டப்படுவதால் இது நிகழ்கிறது. தனது உழைப்பை இன்னொருவரிடம் பறிகொடுக்கும் சூழல்கள் நிலவும் சமூகத்தில் மனிதர்கள் அந்நியமாகிறார்கள் என்று மார்க்ஸ் எழுதுகிறார். அந்நியமாதல் என்பது மனித இயல்பின் சிதைவு, மனிதன் பிளவு படுகிறான். உழைப்பை இழக்கும் மனிதன் அவனது மானுடப் பண்புகளை இழக்கிறான். மனித இயல்புக்கும் சமூகச் சூழல்களுக்கும் இடையில் நிலவும் மிகப்பெரும் முரண்பாடு இது. இந்த முரண்பாடு சமூகச் சூழல்களை மாற்றியமைக்கும் மானுடச் செயல்பாட்டால் தீர்க்கப்பட முடியும் என்பது மார்க்சியம்.
குறைந்த பட்சம் நான்கு வகையான அந்நியமாதல்களுக்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று மார்க்ஸ் தனது “கையெழுத்துப் பிரதிகளில்” எழுதிச் செல்லுகிறார். முதலாவதாக, உழைப்பு அந்நியமாகிறது. அதைத்தான் மேலே குறிப்பிட்டோம். தனி உடமைச் சமூகத்தில் உழைப்பு சுரண்டப்படுகிறது. பின்னால் மார்க்ஸ், உழைப்புச் செயல்பாட்டின் போது உபரிமதிப்பு உற்பத்தியாவது குறித்தும் அது முதலாளியால் சுரண்டப்படுவது குறித்தும் விவரிப்பார். அந்நியமான உழைப்பே தனி உடமை, மூலதனம் என்ற வடிவங்களை எட்டுகின்றது. இரண்டாவதாக, உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலிருந்து உழைப்பாளி அந்நியப்படுகிறார். தொழிலாளிக்கு கூலி மட்டுமே வழங்கப்படுகிறது. அவர், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது உரிமை கொண்டாட முடியாது. கூலியைப் பெறும்போது உழைப்பாளி பொருளின் மீதான உரிமையை இழந்து விடுகிறார். தனி உடமைச் சமுதாயத்தில், கூலி வழங்குதல் எனும் ஏற்பாடு உண்மையில் உழைப்பாளியை அவரது உற்பத்தியிலிருந்து பிரித்துவிடுகிறது. இதுவே அந்நியமாதல்.
மூன்றாவதாக, உழைப்பாளி உற்பத்திக் கருவிகளிலிருந்து அந்நியப்படுகிறார். பழைய சமூகங்களில் மூலதனம், நிலம், உழைப்பு ஆகியவை பிரிவுபட்டிருக்கவில்லை. உழைப்பாளிகளே உழைப்புக் கருவிகளையும் கொண்டிருந்தனர். உழைப்பைச் சுரண்டலுக்குத் தன்னை இழந்த தொழிலாளி அவர் பயன்படுத்தக்கூடிய உழைப்புக்கருவிகளையே வெறுக்கத் தொடங்குகிறார். இந்த எந்திரங்கள் முதலாளிக்காக வேலைசெய்கின்றன என அவர் எண்ணத் தொடங்குகிறார். எந்திரங்கள் எம்மைச் சக்கையாகப் பிழிகின்றன எனக் கருதுகிறார். இது ஓர் அந்நியமான உணர்வு. நான்காவதாக, உழைப்பாளி அவரது சமூகச் சூழல்களிலிருந்து அந்நியமாகிறார். உடன் வேலை செய்யும் பிற உழைப்பாளிகள் தனக்குப் போட்டியாக வந்தவர்களாக அவருக்குத் தோன்றுகிறார்கள். தொழிலாளர்களுக்கிடையிலான போட்டியைப் பயன்படுத்தி முதலாளி தொழிலாளியின் கூலியைக் குறைக்க முடிகிறது. குடும்பச் சூழல் சுரண்டலால் சுருங்கிப்போகும் உழைப்பாளிக்குச் சுமையாகத் தென்படுகிறது. அந்நியமாதலுக்கு ஆட்படும் உழைப்பாளி மதம், மது, உடல் இச்சைகள் ஆகியவற்றில் மட்டும் தற்காலிகமாக திருப்திப்படுபவராக மாறிவிடுகிறார்; படைப்புத்தன்மையையும் போராட்டக் குணத்தையும் இழந்துவிடுகிறார் என்று மார்க்ஸ் எழுதுகிறார்.
இவை மட்டுமே அந்நியமாதலின் வடிவங்கள் என்று முடித்துவிட முடியாது. இந்திய உழைப்பாளியை மிகக் கொடூரமாக அந்நியப்படுத்தும் ஒரு வடிவம் சாதியம். சாதியம் உழைப்பாளியைக் கடுமையாகச் சுரண்டுகிறது, இழிவு படுத்துகிறது, அவமதிக்கிறது. மானுட ஆளுமையை அது சிதைக்கிறது. எனது சொந்த இயல்பு எது? என்பதை அது அறியமுடியாமல் செய்து விடுகிறது. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் ஆளுமையும் கோரமாகச் சிதைக்கப்படுகிறது.
ஹெகலிய அந்நியமாதலும் மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் அவரது “1844 பொருளாதாரத் தத்துவக் கையெழுத்துப் பிரதிகளில்” சந்தித்துக் கொள்கின்றன. இந்த சந்திப்பு இத்தோடு முடியவில்லை. மூலதனம் நூலில் மனிதர் தம்மைப் பண்டங்களிலும் பணத்திலும் இழப்பது குறித்து மார்க்ஸ் விரிவாக எழுதுவார். கியார்ஜ் லுக்காச் முதலான பிற மார்க்சியரும் அந்நியமாதலை விரிய எடுத்துச் செல்கின்றனர்.
ஹெகல், ஃபாயர்பாக், மார்க்ஸ் என்ற முக்கோணம்
மார்க்ஸ், எங்கெல்சின் “கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மார்க்சியம் என்ற ஒரு கோட்பாடு இன்னும் வரையறுக்கப்பட்ட வடிவில் உருவெடுப்பதற்கு முன்னால், மார்க்ஸ் தனது சிந்தனைகளைத் தனக்குத் தானே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எழுதிவைத்த குறிப்புகளே “ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்” என்ற பெயரில் இப்போது வழங்கப்படுகின்றன. வெறும் நான்கு பக்கங்களே கொண்ட குறிப்புகள் இவை. ஒன்று, இரண்டு, மூன்று .. என 11 தனித்தனி ஆய்வுரைகளாக இவை விளங்குகின்றன. இவற்றை ஒரு கட்டுரையாக வெளியிட வேண்டுமென்று மார்க்ஸ் எப்போதுமே விரும்பியதாகத் தெரியவில்லை. இப்படிச் சில குறிப்புகளைத் தான் எழுதி வைத்திருப்பதாக மார்க்ஸ் எங்கும் எவரிடமும் சொன்னதில்லை.
மார்க்ஸ் 1844-45 ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிரஸ்ஸெல்சில் புலம் பெயர்ந்து வாழ்ந்த போது இந்த குறிப்புரைகளை எழுதியிருக்கலாம் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கணக்கிடுகின்றனர். 1844/45 ல் வெளிவந்த “புனிதக் குடும்பம்”, 1845/46 ல் வெளிவந்த “ஜெர்மானியக் கருத்தியல்” என்ற இரண்டு நூல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்குறிப்புரைகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று மார்க்சிய ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். “ஜெர்மானியக் கருத்தியல்” என்ற பெரிய நூலுக்கான திட்டங்களில் ஒன்றாகவும் இது இருந்திருக்க முடியும்.
மார்க்ஸ் 1883 ல் மரணமடைந்த பிறகு, அவரது பல்வேறு கையெழுத்துப் பிரதிகளைப் புரட்டிப்பார்த்த எங்கெல்ஸ், அவற்றுக்கிடையில் மறைந்து கிடந்த மேற்குறித்த குறிப்புரைகளைக் கண்டு பிடித்தார். இளமையில் ஒரு ஹெகலிய சிந்தனையாளராக இருந்த மார்க்ஸ், அடுத்த நிலையில் ஃபாயர்பாக் என்ற பொருள்முதல்வாதச் சிந்தனையாளரின் பின்பற்றாளராகச் சிலகாலம் விளங்கினார். மூன்றாவது நிலையில் அவர் ஹெகல், ஃபாயர்பாக் என்ற இருவரிலிருந்தும் விலகி தனக்கே உரிய சொந்தச் சிந்தனைகளை நோக்கி நகரத் தொடங்கினார்.
இந்தக் காலக்கட்டத்தில் மார்க்சும் எங்கெல்சும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். எனவே குறிப்பிட்ட அந்த மூன்றாவது காலக்கட்டத்தில் மார்க்ஸ் நிகழ்த்தி வந்த படைப்புத் தன்மை கொண்ட தேடல்களில் எங்கெல்சும் பங்கேற்றார் எனச் சொல்ல வேண்டும். ஹெகலைத் தாண்டி ஃபாயர்பாக் மீது மார்க்ஸ் மிகுந்த ஆர்வம் காட்டியதும் பின்னர் அவரையும் தாண்டிச் செல்ல முயன்றதையும் எங்கெல்ஸ் நன்கு அறிவார். எனவேதான் இக்குறிப்புரைகளைக் கண்டதும் அவற்றின் காலச்சூழலை எங்கெல்சால் எளிதில் கண்டறிய முடிந்தது. 1888 ல் எங்கெல்ஸ் எழுதி வெளியிட்ட “லுத்விக் ஃபாயர்பாகும் ஜெர்மானியச் செவ்வியல் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலின் பின்னிணைப்பாக எங்கெல்ஸ் மார்க்சின் “ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரை”களை வெளியிட்டார். சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பரின் அற்புதமான ஆய்வுரைகளை எங்கெல்ஸ் வெளிக்கொணர்ந்தார்.
1841 ஆம் ஆண்டில் ஃபாயர்பாகின் “கிறித்தவ சமயத்தின் சாராம்சம்” (The Essence of Christianity) என்ற நூல் வெளிவந்தது. கிறித்தவ சமயம் குறித்த பொருள்முதல்வாத விமர்சன நூல் இது. “அதன் மாபெரும் விடுதலை ஆற்றலை நாங்கள் உணர்ந்தோம். உடனடியாக, அந்தக் கணத்திலேயே நாங்கள் ஃபாயர்பாகியர்களாக ஆகிப்போனோம்” என்று எங்கெல்ஸ் எழுதுகிறார். மதமோ கடவுளோ மனிதரைப் படைக்கவில்லை, மனிதர்கள்தாம் மதத்தைப் படைத்தனர் என்ற கருத்தை மிக விரிவான விவாதங்களுடன் ஃபாயர்பாக் அவரது நூலில் எழுதியிருந்தார். மனிதர்கள் தமது சொந்த ஆற்றலை, தாம் இழந்துப்போன சொந்த ஆற்றலையே இறைவன் என்ற பெயரில் மிகைக் கற்பனை வடிவில் படைத்துள்ளனர் என்று ஃபாயர்பாக் அந்நூலில் எழுதியிருந்தார்.
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் ஃபாயர்பாகின் இந்த அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது. ஃபாயர்பாகின் தத்துவ நிலைப்பாடு பொருள்முதல்வாதமாக இருந்தது. கூடுதலாக, மனிதமைய வாதப் பொருள்முதல்வாதமாகவும் இருந்தது. பௌதீகப் பொருட்களை, பருப்பொருட்களை மையப்படுத்திய எந்திரகதியிலான பொருள்முதல்வாதத்தை ஃபாயர்பாக் கடந்து வந்துவிட்டார். மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இது பிடித்திருந்தது. அவர்கள் இருவரும் ஃபாயர்பாகியர்களாக ஆகிவிட்டனர். ஃபாயர்பாக் தத்துவத்தின் “தூய சிந்தனை”யிலிருந்து புலனுணர்ச்சிகளை நோக்கி, மனம் குறித்த தேடலிலிருந்து மனிதரை நோக்கி, இறுதியாக இயற்கையை நோக்கி எம்மை இட்டுவந்தார் என்று எங்கெல்ஸ் எழுதுகிறார்.
இருப்பினும் மார்க்சுக்கு ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் குறித்து இன்னும் சில ஆட்சேபனைகள் இருந்தன. ஃபாயர்பாகின் மனிதன் “தூய சிந்தனை” போல, மிகப் பொதுவான மனிதனாக இருந்தான். அவன்மீது சமூகவாழ்வின் பதிவுகள் எதுவும் இல்லை. ஃபாயர்பாகின் மனிதன் மீது வரலாற்றின் தடங்கள் இல்லை. ஃபாயர்பாகின் மனிதன் இயங்கியல் பண்பு கொண்டவனாக இல்லை. ஆரம்பம் முதல் முடிவு வரை அந்த மனிதன் ஒருபடித்தானவனாக, ஒரே வகைப்பட்டவனாக, மாற்றங்களுக்கு ஆட்படாதவனாக இருந்தான். ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் மனிதனை நோக்கி வந்துவிட்டது சரி. ஆயின் அது இன்னும் சமூகப் பொருள்முதல்வாதமாக, வரலாற்றுப் பொருள்முதல்வாதமாக, இயங்கியல் பொருள்முதல்வாதமாக ஆகவில்லை. அது அப்படி ஆக வேண்டும். இதுவே மார்க்சின், மார்க்சியத்தின் தேவை.
பௌதீகப் பொருட்களை, புறப் பொருட்களை, பருப் பொருட்களை மையப்படுத்திய பொருள்முதல்வாதங்களை இன்னும் செழுமைப்படுத்த வேண்டும். அவை மனிதத்தொடர்பு கொண்டனவாக, மனிதப்பங்கேற்புக்கு இடமளிப்பனவாக இருக்க வேண்டும். அவை சமூகவாழ்வின் சிக்கல்களை, முரண்பாடுகளை சுமப்பனவாக இருக்க வேண்டும். அவை வரலாற்றுப் பண்பு கொண்டனவாக, வரலாற்றிலிருந்து அந்நியப்படாதனவாக இருக்க வேண்டும். அவை மாற்றங்களை முன்னெடுப்பனவாக இருக்க வேண்டும்.
எந்திரகதியிலான பழைய பொருள்முதல்வாதத்தை மனிதமையவாதப் பொருள்முதல்வாதமாக ஃபாயர்பாக் மாற்றினார். மனிதமையவாதப் பொருள்முதல்வாதத்தை கார்ல் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகவும் இயங்கியல் பொருள்முதல்வாதமாகவும் மாற்றிக்காட்டினார்.
ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் இந்த மார்க்சிய உருவாக்கம் அதன் 11 ஆய்வு முடிவுகளிலும் பதிவாகியுள்ளது. அவை குறித்த விரிந்த விளக்கங்கள் அங்கு இல்லை. ஆயின் திருக்குறள் போல, பத்துக் கட்டளைகள் போல மிகச்சுருக்கமான தந்திச் சொற்களில் முழு மார்க்சியத்தின் ரகசியம் அந்த ஆய்வுரைகளில் சொல்லப்பட்டிருக்கின்றது.
எடுத்தஎடுப்பில், முதல் ஆய்வு முடிவில், நாம் வெறும் பருப்பொருட்களை, பௌதீகப் பொருட்களை, புறப்பொருட்களை மையப்படுத்தவில்லை என்று மார்க்ஸ் கூறிவிடுகிறார். நடைமுறை, செயல்பாடு, உழைப்பு எனும் மானுட வடிவிலான, சமூகவடிவிலான, வரலாற்றின் தடங்களைச் சுமக்கும், இயங்கியல் பண்பு கொண்ட ஒரு மையத்தைத் தேர்வு செய்கிறோம் என்று மார்க்ஸ் அறிவிக்கிறார். இந்தப் புள்ளியிலிருந்து மார்க்சின் மார்க்சியத்தின் எல்லாவிதக் கோட்பாட்டுப் பரப்புகளும் விரிகின்றன. மார்க்சின் வாழ்நாள் முழுவதுமான படைப்புச் செயல்பாடுகள் அனைத்தும் நடைமுறை, செயல்பாடு, உழைப்பு என்ற மையங்களிலிருந்துதான் தோற்றம் பெறுகின்றன. புரட்சி என்ற மகத்தான செயலும் அதே பண்புகளைக் கொண்டதாகத்தான் அவரால் சித்தரிக்கப்படுகிறது. ஃபாயர்பாக் குறித்த முதல் ஆய்வுரை இவ்வாறாக ஒரு புதிய தத்துவத்தின் துவக்கவுரையாக ஆகிறது.
“ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்” எடுத்துக்காட்டும் மார்க்சின் பொருள்முதல்வாதம் சமூகம், வரலாறு, இயங்கியல் ஆகியவற்றை உள்வாங்கிய பொருள்முதல்வாதமாக அமைந்தது. ஃபாயர்பாக் மனிதரை நோக்கித் தனது தத்துவத்தைத் திருப்பியதை மார்க்ஸ் உற்சாகத்துடன் எதிர்கொள்ளுகிறார். மனிதர்கள் புலனுணர்ச்சிகளில் நனைந்தவர்கள் என்பதை ஃபாயர்பாக் அங்கீகரிக்கிறார். அருவச் சிந்தனை எனும் கருத்துமுதல்வாதத்திலிருந்து, புலனுணர்ச்சிகள் சார்ந்த எதார்த்தச் சிந்தனையை ஃபாயர்பாக் எட்டிவிட்டார். ஆயினும் மனிதரின் அப்புலனுணர்ச்சிகள் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன என்ற புள்ளிக்கு ஃபாயர்பாக் வந்து சேரவில்லை. உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடு என்ற எல்லையை ஃபாயர்பாக் எட்டவில்லை.
மார்க்சின் பொருள்முதல்வாதம் ஒரே நேரத்தில் உலகின் வாழ்நிலை குறித்த தத்துவ அடிப்படைகளைக் குறிப்பதாகவும் அறிவுத்தோற்றவியல் குறித்த கோட்பாடாகவும் உள்ளது. அறிவுத் தோற்றவியல் எனும்போது, நடைமுறையிலிருந்துதான் அறிவு தோன்றுகிறது என்ற செய்தியை மார்க்ஸ் வலியுறுத்துகிறார். புலனுணர்வுகளிலிருந்து அறிவு தோற்றம் பெறுகிறது என்ற முந்திய பொருள்முதல்வாதக் கருத்தை மார்க்சியம் ஏற்கிறது. இருப்பினும், புலனுணர்வுகள் என்ற மனித ஆற்றலோடு நிறுத்திவிடாமல், சமூக நடைமுறை என்ற விரிந்த தளத்திற்கு அறிவின் தோற்றவியலை மார்க்ஸ் இட்டுச் செல்கிறார்.
நடைமுறையைப் பற்றிச் சொல்லும் போது மார்க்ஸ் அதனைப் பூர்ஷ்வா அறிவுமுதல்வாதிகள் “சாதாரண மனிதர்களின் அழுக்குப்பிடித்த” செயல்பாடுகள் என்று கொச்சைப்படுத்தி வைத்திருந்தனர் என்று குறிப்பிடுகிறார். “பேரறிவு” படைத்த அறிவாளிகள் நடைமுறை என்பதனை அழுக்குப்பிடித்த செயல்பாடு என்றே கருதுகின்றனர். ஆயின் மார்க்ஸ் நடைமுறையின் வரலாற்றுரீதியான வடிவமாக “உழைப்பை” மையப்படுத்துகிறார். உழைப்பு “சாதாரண மக்களுடையது” என்பது உண்மைதான். ஆயின் அது படைப்புத்தன்மை கொண்டது. அதுவே மனிதசமூக வரலாற்றை உற்பத்தி செய்தது. உழைப்பின் கூறுகளாக புலனுணர்வுகள், அனுபவம், ஒப்பிடுதல், அனுமானம், பகுத்தல், தொகுத்தல், ஞாபகம் வைத்துக் கொள்ளுதல், மறுவடிவம் வழங்குதல் என்ற பலவகையான அறிவு உற்பத்திச் செயல்பாடுகள் நடைமுறையில் உருப்பெறுகின்றன. அவற்றையெல்லாம் உள்ளடக்கி மார்க்சியத்தின் அறிவுத் தோற்றவியல் விரிகிறது.
நடைமுறை என்பது அறிவின் தோற்றுவாய் மட்டுமல்ல, அதுவே அறிவின் உண்மைத்தன்மையை மெய்ப்பிக்கும் கடைசி அளவுகோல் என்று மார்க்ஸ் வரையறுப்பார். உணவின் மெய்ம்மையை எப்படி நிரூபிப்பது? உணவின் ருசியை எப்படி மெய்ப்பிப்பது? சாப்பிடுவதன் மூலமாகத்தான் உணவை மெய்ப்பிக்க வேண்டும் என்று எங்கெல்ஸ் ஓரிடத்தில் குறிப்பிடுவார். ஒரு கோட்பாட்டின் உண்மைத்தன்மையை அதன் செயல்பாட்டு ஆற்றலைக் கொண்டுதான் அளக்க வேண்டும் என்று மார்க்சிய அறிவுத்தோற்றவியல் எடுத்துரைக்கிறது. உலகை அறியமுடியுமா? நாம் ஈட்டிய அறிவு உண்மையானதுதானா? போன்ற கேள்விகளெல்லாம் உண்மையில் நடைமுறை சார்ந்த கேள்விகள். அறிவின் மெய்மையை தர்க்கவியலால் ஓரளவே நிரூபிக்க முடியும். முதலும் கடைசியுமாக அறிவு நடைமுறைக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
மார்க்சின் காலத்தில் பலவிதமான பொருள்முதல்வாதங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று, மனிதரின் இயல்பை, செயல்பாடுகளை, லட்சியங்களை அவர்களது “சூழல்களைக்” கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் எனப்படும் பொருள்முதல்வாதம். இது ஒன்றும் தவறான கருத்து அல்ல. நல்ல கோட்பாடுதான். இருப்பினும் மார்க்ஸ் இதனைத் தாண்டி நகர்ந்து செல்கிறார். சூழல்களைக் கொண்டு மனிதரைப் புரிந்து கொள்ளலாம் எனில் சூழல்களைப் படைப்பவர் யார்? சூழல்களைச் செய்பவர் யார்? என்று மார்க்ஸ் கேட்கிறார். படித்துக் கொடுக்கும் ஆசிரியரும் படிக்க வேண்டுமல்லவா? மனிதர்கள் தாம் சூழல்களைப் படைக்கிறார்கள் என்பது மார்க்சின் பதில். எனவே சூழல்கள் மனிதரைப் படைக்கின்றன என்ற விளக்கத்தில் சில போதாமைகள் உள்ளன என்று மார்க்ஸ் கருதுகிறார். மேற்குறித்த இரண்டு விளக்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் சொல்லுகிறார். மனித வாழ்வின் சூழல்களையும் அவற்றைப் படைக்கும் மனித நடைமுறையையும் ஒன்றிணைக்க வேண்டும் என்கிறார். அவை இயங்கியல் ரீதியாக உறவு கொண்டவை. சூழல்களும் நடைமுறையும் ஒன்று சேரும் தருணத்தைப் புரட்சிகரமான சந்தர்ப்பம் என அவர் மதிப்பிடுகிறார்.
“தத்துவவாதிகள் இதுவரை உலகுக்கு வியாக்கியானங்கள் மட்டும் வழங்கி வந்தனர், ஆயின் உலகை மாற்றுவது எப்படி? என்பதே பிரச்சினை” என்பது மார்க்சின் 11 வது ஆய்வுரை. இது ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் மிகவும் பிரபலமானது ஆகும். மொத்த மார்க்சிய சிந்தனையின் குறிப்பான திசைவழியை இந்த ஒரு வரி எடுத்துரைப்பதாக பலரும் கருதுகிறார்கள். அது உண்மையும் கூட. வியாக்கியானங்கள் எனும்போது அவை உலகின் இருப்பை ஏதோ ஒருவகையில் நியாயப்படுத்துபவை, சமூக அமைப்பை நியாயப்படுத்துபவை. அவை வாழ்வின் துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் கூட நியாயம் வழங்குபவை. ஆனால் உலகை மாற்றுவதே பிரச்சினை எனும் போது, உலகின் இருப்பை, சமூக அமைப்பை, வாழ்வின் துயரங்களை, கொடுமைகளைக் கேள்விக்குள்ளாக்குவது. வாழ்க்கைச் சூழல்களை மாற்றியமைப்பதற்கான சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஈடுபடுவது.
ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள் அனைத்திலும் அழுத்தமாக ஒலிக்கும் இயங்கியல் என்பது மாற்றம் குறித்த தத்துவம், விமர்சனம் குறித்த தத்துவம், விவாதம் குறித்த தத்துவம். 11 வது ஆய்வுரையில் அது மிகத் தெளிவாகத் தென்படுகிறது. ஒரு மார்க்சியரின் உலகு குறித்த பார்வையே விமர்சனப் பார்வையாக இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வுரை கூறுகிறது. ஐரோப்பிய விமர்சன மரபின் ஓர் உச்சக்கட்ட விளைவாக மார்க்சியம் தோன்றியது.
11 வது ஆய்வுரையின் பிற்பகுதியில் சொல்லப்படும் “ உலகை மாற்றுவது எப்படி?” என்ற பிரச்சினை மறுத்தல் என்ற ஒரு கோட்பாட்டைத் தன்னில் கொண்டுள்ளது. மறுத்தல் என்ற விடயம் தத்துவ வரலாற்றில் பேசப்பட்ட ஒன்றுதான். மார்க்சுக்குப் பின்னால் மறுத்தல் என்ற விடயம் அதிகம் பிரபலம் அடைந்துள்ளது. தத்துவம் என்றாலே விமர்சனச் சிந்தனை என்ற வரையறையை மார்க்ஸ் நிறுவிவிட்டார். மார்க்சுக்குப் பிறகு, மேற்கிலும் கிழக்கிலும் விமர்சன மரபுகளைத் தத்துவவாதிகள் அக்கறையுடன் தேடி அடைகின்றனர். புரோமித்தஸ், ஹெராக்லிட்டஸ், சாக்ரட்டீஸ், டெமாக்ரீட், எப்பிக்யூர், ஐரோப்பிய பொருள்முதல்வாதிகள், ஹெகல் என ஒரு நீண்ட வரிசை மேற்கில் உண்டு. சாருவாகர், சாங்கியர், வைசேடிகர், புத்தர், சித்தர்கள், கபீர், சூபியர்கள், ரவிதாஸ், அம்பேத்கர், சிங்காரவேலர், அயோத்திதாசர், பெரியார் எனத் தமிழிலும் விமர்சன மரபுகளுக்குப் பஞ்சம் கிடையாது.
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நிலையாமை என்ற ஒரு கோட்பாடு சமண பௌத்தர்களால், இன்னும் சித்தர்களால் ஏராளமாகப் பேசப்பட்டுள்ளது. நிலையாமை என்பதை உலக மறுப்பு என்று பலவேளைகளில் நாம் நிராகரித்து விடுகிறோம். ஆயின் இயங்கியல் எனும் நோக்கில் அதனை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை போன்ற இயற்கையிலேயே நிகழும் சிதைவுகளை மட்டுமின்றி செல்வம் நிலையாமை, உடமை நிலையாமை, அதிகாரம் நிலையாமை, அந்தஸ்து நிலையாமை போன்ற கருத்துக்களும் கூட தமிழில் பேசப்பட்டுள்ளன. பின்னால் சொல்லப்பட்டவை சமூகம் சார்ந்த நிலை மறுப்புகள். அவற்றின் சமூகச் செய்தி யாது, அவற்றுக்கு மாற்றாக எவற்றைக் கருதினார்கள், இந்த உலகை மறுத்து வேறு எந்த கனவுலகைக் கட்ட முயன்றார்கள் போன்ற கேள்விகளோடு நாம் தமிழுக்குள் நுழைந்து பார்ப்பது பயனளிக்கும்.
ஹெகல், ஃபாயர்பாக், மார்க்ஸ் என்ற முக்கோண உரையாடல் மார்க்சியத்தின் ஆரம்பகால வரலாற்றில் மிக அற்புதமான பகுதி ஆகும். மார்க்சின் படைப்பாற்றலுக்கு இவ்வுரையாடல் இன்றுவரை சாட்சியமாக அமைந்துள்ளது.
கம்யூனிஸ்ட் அறிக்கை
1841 லிருந்து சுமார் ஏழு ஆண்டுகள் இளம் மார்க்ஸ் அவரது டாக்டர் பட்ட ஆய்வேடு, ஹெகலிய இயங்கியல் தத்துவம், ஃபாயர்பாகின் மனிதவியல் பொருள்முதல்வாதம், பிரெஞ்சு சோசலிசம், வரலாறு குறித்த புரிதல் ஆகியவற்றினூடாக மேற்கொண்டிருந்த படைப்பாக்கப் ப்யணம் 1848 ல் “கம்யூனிஸ்ட் அறிக்கை” எனும் ஆவணத்தை உருவாக்கும் மிகப்பெரும் பணியோடு ஒரு (முதல் கட்ட) முடிவுக்கு வந்தது எனக் கூறலாம். கம்யூனிஸ்ட் அறிக்கை எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பிரகடனத்துடன் மார்க்சியம் என்ற புதிய சிந்தனை ஐரோப்பியச் சூழல்களில் நிறுவப்பட்டு விட்டது எனக் கூறலாம். சர்வதேச தொழிலாளர் அமைப்பான கம்யூனிஸ்ட் கழகம் என்ற அமைப்பு “கம்யூனிஸ்ட் அறிக்கை” யை தயாரிக்குமாறு மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரையும் பணித்தது. “கம்யூனிஸ்ட் அறிக்கை” ஒரு கோட்பாட்டு ஆவணம் மட்டுமல்ல, அது அதன் தோற்றத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நீண்டகால அரசியல் நடைமுறைக்கான வேலைத்திட்டம் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
“கம்யூனிஸ்ட் அறிக்கை” நான்கு இயல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவை: 1. பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும் 2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் 3. சோசலிச மற்றும் கம்யூனிச இலக்கியம் 4. பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு.
அறிக்கையின் முதல் இரண்டு இயல்களும் நவீன முதலாளிய சமூகத்தை மொத்த உலக வரலாற்றுச் சூழல்களில் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்றுக் கட்டமாக முன்வைக்கிறது. “இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது” என்று தொடங்கும் “அறிக்கை”, வர்க்க சமுதாயங்களின் வரலாறு நவீன சகாப்தத்தில் ஓர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது எனச் சித்தரிக்கிறது. முந்திய வரலாற்றுக் கட்டங்களின் பலவகைப்பட்ட வர்க்க உறவுகள் முதலாளிய சமூகத்தில் பூர்ஷ்வாக்கள், பாட்டாளிகள் என்ற வர்க்கங்களின் முழுப்பகைமை உறவுகளாகப் பரிணமித்துள்ளன என எடுத்துக்காட்டுகிறது.
முதலாளிய சமூகத்தின் தொழில் புரட்சி, விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகள், மனித உறவுகள் முழுவதையும் பண உறவுகளாக மாற்றிவிடும் அதன் அப்பட்டமான சுயநலம், மூடி மழுப்பாத சுரண்டல் வேட்டை ஆகியவை பூர்ஷ்வா சகாப்தத்தை முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன என்கிறார் மார்க்ஸ். இச்சமூகத்தில் “நிலைநிறுத்தப்பட்ட, திடமான அனைத்துமே காற்றில் கரைந்து விடுகின்றன (All that is solid melts into air). புனிதமானவை அனைத்தும் புனிதமற்றவையாக்கப்படுகின்றன”. முதலாளிய சமூகத்தின் உற்பத்தி ஆற்றல்களையும் அதன் கொடூரங்களையும் ஒருசேர மார்க்ஸ் அடுக்கிக் காட்டுகிறார்.
ஆயின் முதலாளியம் இப்படியே தொடரமுடியாது. சமூக உழைப்பின் கருப்பையில் உறங்கிக் கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகளை பிரும்மாண்டமாக உசுப்பிவிடும் இச்சமூகத்தின் உற்பத்தி உறவுகள் பாதாளத்திலிருந்து ஆவேசமாகப் புரண்டெழும் அதே உற்பத்தி சக்திகளுக்கு விரைவில் பலியாகின்றன. தனது சொந்தத் தேவைகளுக்காக பூர்ஷ்வா வர்க்கம் உற்பத்தி செய்த பாட்டாளி வர்க்கம் கோடிக்கால் பூதமென திரண்டெழுந்து தனது கூட்டு ஆற்றலால் பூர்ஷ்வா வர்க்கத்தை எதிர்கொள்ளுகிறது. மிகை உற்பத்தியும் அடுத்தடுத்து காலம் தவறாது வெடிக்கும் பொருளாதார நெருக்கடிகளும் முதலாளியச் சமூக அமைப்பை சமூகப் புரட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றன. வரலாற்றின் நிர்ப்பந்தங்கள் பாட்டாளி வர்க்கத்தை அரசியலில் ஈடுபடச் செய்கின்றன.
கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் சமகால சமூக அமைப்பை மிக அற்புதமான இயங்கியல் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். பூர்ஷ்வாவும் பாட்டாளியும், மூலதனமும் கூலியுழைப்பும், தனி உடமைச் சமூகத்தின் வளர்ச்சியும் தவிர்க்கமுடியாத அதன் நெருக்கடிகளும், முன்னேற்றமும் சீர்குலைவும் எனும் எதிர்வுகளின் இயங்கியல் மார்க்சால் சமகால சமூக வரலாற்று ஆய்வில் மிக அற்புதமாகக் கையாளப்படுகின்றது.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் பிற்பகுதியில் மார்க்சும் எங்கெல்சும் அவர்களது காலத்தில் நிலவிய பலவகையான சோசலிசங்களை அறிமுகப்படுத்தி அவற்றை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்கள். பிரபுத்துவ சோசலிசம், பாதிரியார்களின் சோசலிசம், குட்டி பூர்ஷ்வா சோசலிசம், விவசாயிகளின் சோசலிசம், ஜெர்மன் சோசலிசம், பூர்ஷ்வா சோசலிசம், கற்பனா சோசலிசம் எனப் பலவகை சோசலிசங்கள் அன்று வழக்கிலிருந்தன. அவற்றோடு பொருதிப் போராடி, விவாதங்களில் ஈடுபட்டு, மார்க்சும் எங்கெல்சும் தமது விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கினார்கள்.
கம்யூனிஸ்ட் அறிக்கை பளிச்சென சில சொற்றொடர்களை உலகமெங்கும் பிரபலமாக்கியது. மார்க்சியத்தின் மகாவாக்கியங்கள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும். அவை ஆழமானவை, அர்த்தம் பொதிந்தவை, உண்மையானவை. அவற்றில் சில:
“ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது-கம்யூனிசம் எனும் பூதம். அதை விரட்டுவதற்காக, பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன.”
“இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வந்துள்ளது.”
“முதலாளிய சமூகம் தனது சாயலிலேயே ஓர் உலகத்தைப் படைக்கிறது.”
“இதற்கு முந்தைய இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையினரின் நலன்களுக்காகச் சிறுபான்மையினரால் நடத்தப்பட்ட இயக்கங்கள். பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையினருக்காக மிகப் பெரும்பான்மையினர் நடத்தும் சுயேச்சையான இயக்கம்.”
“பூர்ஷ்வா வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் தொடக்கத்தில்..தேசிய வடிவிலானதாக உள்ளது. ஆகவே, இயல்பாகவே ஒவ்வொரு தேசத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் தனது சொந்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது.”
“ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும், ஒரு கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!”
“பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை, தங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர. அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஓர் உலகம் உள்ளது!”
“அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்று சேருங்கள்!”
மார்க்ஸ், எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி ஒன்று மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்பாக்கத் தருணங்களைச் சந்திக்க விழைவோருக்கு அற்புதமான வாசிப்பு அனுபவங்களை வழங்கும்.
மார்க்சின் இரண்டாம் நூற்றாண்டை முன்னிட்டு மார்க்ஸ், ஏங்கெல்சின் 20 தொகுதிகளை வெளியிடுவது என்ற மிகப்பெரிய வேலைத்திட்டத்தை வகுத்துச் செயல்பட்டு வரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு தமிழ் வாசகர்கள் நன்றி கூறவேண்டும். அந்நிறுவனத்தின் பொது மேலாண் இயக்குநர் நண்பர் சண்முகம் சரவணனுக்கும் அவரோடு உடன் நின்று வேலை செய்யும் பொது மேலாளர் ரத்தின சபாபதி முதலான தோழர்களுக்கும் நன்றி கூறுவோம்.
மதுரை ந. முத்து மோகன்
27. 2. 2018
No comments:
Post a Comment