தத்துவம் ஏன் பயில வேண்டும்? தத்துவம் என்றால் என்ன? மார்க்சிய லெனினிய தத்துவம் என்பதென்ன?
ஒவ்வொன்றாக விடைத்தேடுவோம்
தத்துவம் ஏன் பயில வேண்டும்?
தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றியும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல் வேறு சமூக வர்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது. பிரபஞ்சம் முழுவதற்கும் அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும், மனிதனது இயல்பையே புரிந்துகொள்ளவும், சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம்யாது பிரபஞ்சத்தின் இரகசியங்களை உட்புகுந்து தெரிந்து கொள்ளவும் இயற்கையின் பெருமதிப்பு வாய்ந்த சக்திகளைப் புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தவும் மனிதனது அறிவால் முடியுமா என்பவற்றைக் தீர்மானிக்கவும் தத்துவம் தான் தோன்றிய கணம் முதலே முயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத் தத்துவம் மிகவும் பொதுப்படையான, அதே சமயம் மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளைக் கிளப்புகிறது. வாழ்க்கை, அறிவு, இவற்றின் மிக மிகப் பல்வகைப்பட்ட துறைகள் பால் மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை.
மனிதனுடைய ஆற்றலை அளவிட இயலாதவாறு அதிகப் படுத்தியுள்ள மிகப் பெரிய விஞ்ஞான- தொழில்நுணுக்கச் சாதனைகளும், பூமியின் வடிவையே மாற்றிவிட்ட பிரமாண்டமான இயற்கை உருமாற்றங்களும், சமூக வாழ்வின் எல்லாப் பகுதிகள் மீதும் பாதிப்பு விளைவித்துள்ள புரட்சிகரமான மாறுதல்களும் நிகழ்ந்திருப்பதனால் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது நமது காலம். இதனை அறிய...
தத்துவம் என்றால் என்ன?
தத்துவத்தின் அவசியம் ஏன்? இங்குள்ள சிலர் சில மயக்க சொல் விளையாட்டில்; இங்குள்ள ஆளும் வர்க்கத்தின் தத்துவத்தை உயர்த்தி பிடிக்க எதையெதையோ பேசி இறுதியில் ஆளும் வர்க்க மாறாநிலை தத்துவ போதகர்களாக மாறி போய் ஆளும் வர்க்கதின் அடிமைகளாக சேவகம் செய்வதையை அம்பலப்படுத்தி சில பதிவுகள் தொடரும் தோழர்களே.
உழைக்காத கூட்டம் உழைக்கும் மக்களை ஏமாற்ற என்னென்ன தந்திரங்கள்!??!
சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வு நிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.
வரலாற்றில் திரளான பொதுமக்களின் பங்கு என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வது இதனால் சாத்தியம் ஆகிறது. மக்கள் வரலாற்றைப் படைப்பவர்களாக இருப்பது எவ்வாறு? முதலாவதாக, சமூகம் நிலவுவதற்கு இன்றியமையாத பொருளியல் நலங்களைத் திரளான வெகுஜனங்களே உண்டாக்குகிறார்கள். உழைப்பாளி மக்கள் உழைக்கிறார்கள்,பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள், ஆலைகளும் தொழிற்சாலைகளும் கட்டுகிறார்கள், கால்வாய்கள் தோண்டுகிறார்கள், இருப்புப் பாதைகள் போடுகிறார்கள், விவசாயப் பண்டங்களைப் பயிர் செய்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இவையாவும் இன்றிச் சமூகம் உயிர் வாழவும் வளரவும் முடியாதோ அவை யாவற்றையும் உழைப்பாளிகளே உருவாக்குகிறார்கள்.
ஆக மார்க்சியம் அதற்குமுன் இருந்த எல்லா தத்துவ போக்குகளையும் ஆராய்ந்து அதன் முற்போக்கு பாத்திரத்தை ஏற்பதோடு அவை சமூக மாற்றதிற்கான பங்களிப்பு எவ்வகையில் உள்ளன அல்லது அதன் தன்மையை பற்றி ஆய்வு செய்கிறது. ஆனால் அவை அதன் வளர்ச்சி போக்கில் ஆளும் வர்க்கத்தின் கருத்தியலையே தனக்கானதாக ஆக்கிக் கொண்ட பின்னர் அதன் மாறாநிலை கண்ணோட்டம் உழைக்கும் பெருவாரியான மக்களின் எதிர்நிலை உள்ள போது அதனை என்ன செய்ய தோழர்களே?
இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்திய போராட்டத்தில் உருவானதே தத்துவஞானம். இயற்கை, மனிதன், சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் உறவுகளையும் அதன் தன்மைகளையும்ஆராய்வதே தத்துவஞானம். எனவே தத்துவ சர்ச்சையை அறிவுஜீவிகளிடம் விட்டு விட்டுசாதாரண மக்கள் ஒதுங்கிவிட முடியாது. இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான உலகில். உலகின் மூலைமுடுக்கெல்லாம கிடக்கும் தகவல்களை நாம் பெற்று ஆய்வு செய்துகொள்ள முடியும்.
மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனிச் சொத்துடமை ஏற்பட்டது. உற்பத்திக் கருவிகளின் வளரச்சியின் காரணமாக உழைப்பவனும் அடுத்தவன் உழைப்பில் வாழ்பவன் என்ற உழைப்பு பிரிவினை தோன்றியது. மனித சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றிய பின்னணியில்தான் தத்துவமும் தோன்றியது. இரண்டு வர்க்கங்களின் போராட்டத்தை ஆம் வர்க்க பகைமையை தனிக்க அதற்கான ஒழுங்குமுறை உருவாக்க ஆளும்(ஆதிக்க) வர்க்க சித்தாந்திகளால் உருவாக்கப்பட்டதே அன்றைய தத்துவங்கள். அதே நேரத்தில் கலகக்குரல் ஒலிக்காமல் இல்லை அன்று இதனை எதிர்த்த தத்துவங்களும் தோன்றிதான் உள்ளது.
நாம் எதை அடைய வேண்டும் - அதற்கு எதார்த்தத்தை எப்படி அணுக வேண்டும். என்ற கேள்விக்கு விடை தருகிறது தத்துவம், வர்க்கங்களாய் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், இரண்டு வேறுபட்ட வர்க்க நலன்களை தத்துவம் வெளியிடுகிறது.
விஞ்ஞானத்தில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், பொருளாதாரம் போன்றே சமூகவியல் வரலாற்றியல் போன்ற பொதுக் கோட்பாட்டுகள் போன்றே தத்துவமும் அந்த குறிப்பிட்ட நிலையில் உலக பார்வையே தத்துவம் எனலாம்.
சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி, தத்துவஞானம் தோன்றிய காலத்திலிருந்தே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இக்கேள்விகளுக்கு விடையளித்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர். ஒரு பிரிவினர் பொருள் இயற்கை பொருளியல் வாழ்க்கை இவைகளே முதன்மையான இவைகளின் பிரதிபலிப்பே உணர்வென்றனர். இன்னொறு பிரிவினர் ஆன்மா, சிந்தனைதான் முதன்மையானது அவற்றின் பிரதிபலிப்பே பொருள், இயற்கை, வாழ்க்கை என்றனர்.
முதல் பிரிவினர் பொருள்முதல்வாதி என்றும் இரண்டாம் பிரிவினர் கருத்துமுதல்வாதி என்றும் பிரிக்கப்பட்டனர்.
“தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது: நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது”- என்றார் தோழர் ஜே.வி. ஸ்டாலின்.
மார்க்சுக்கு முந்திய 2000 ஆண்டுகளில் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து எண்ணற்றோர் பலியாயினர் மதத்திற்கும் மரபுகளுக்கும் எதிராகப் பேசி இளைஞர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டி சாக்ரடீசை நஞ்சூட்டிக் கொன்றனர்.
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது சூரியன் பூமியை அல்ல என்ற கோபர்னிக்கசின் கண்டுபிடிப்பை ஆதரித்ததற்காக கலீலியோவை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தினர். கோப்பர்னிக்கசின் கருத்தே சரியானது என்று கூறிய காரணத்திற்காக ஜார்டானோ ப்ரூனோ என்ற மதபோதகர் 1800-ஆம் ஆண்டில் கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டார். பூமி சூரியனைச் சுற்றி வலம் வருகிறது என்று கண்டுபிடித்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சினார். 1543-ஆம் ஆண்டு வாழ்நாள் இறுதியில் மரணப்படுக்கையில் கிடந்த சமயத்தில்தான் அவற்றை வெளியிடும் தைரியம் அவருக்கு வந்தது.
போப் இரண்டாம் ஜான்பால் இவ்வாறு மதபீடங்கள் விஞ்ஞானிகளை 16-ஆம் நூற்றாண்டில் கொடுமைப்படுத்தியது தவறு என கி.பி. 2001 துவக்கத்தில் ஏற்றுக் கொண்டார். இந்தியாவில் லோகாயதத்தின்பிதாமகன் சார்வாகரை உயிரோடு எரித்தார்கள். புத்த மடாலயங்களும், சமணப் பள்ளிகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கழுவேற்றப்பட்டனர். தலைகள் அறுக்கப்பட்டன. பதினெண் சித்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பொருள்முதல்வாத, விஞ்ஞான நூல்கள் எரிக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகம்நான்குமுறை தீக்கிரையாக்கப்பட்டது. விக்ரமசீலா இடித்துத் தகர்க்கப்பட்டது.பொருள்முதல்வாதம் பேசினால் இங்கு கொலைதான் நடப்பாக இருந்தது. புத்தரும் மகாவீரரும்அரசர்களாதலால் பொருள்முதல்வாதம் பேசிய அவர்கள் உயிர்தப்பினர். மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டார்வினும் ஐன்ஸ்டீனும் தங்கள் மதங்களிடம் சரணடைந்தனர். மார்க்ஸ் தனது மூலதனம் நூலை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பினார். ஆனால் அதை டார்வின் ஏற்க மறுத்தார். அது தனது குடும்பத்தாரின் கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்தி விடும் என்று கூறி மறுத்தார்.
விஞ்ஞானத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகள் புரட்சிகரமான மாற்றங்களை, அடிக்கடி தோற்றுவிக்கின்றன. இதனால் பழைய கண்டுபிடிப்புகளை சரி செய்யவோ. மறு பரிசீலனை செய்யவோ நேருகிறது. இயற்கை விஞ்ஞானம் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகி வருகிறது. அது தத்துவவியல் கருத்தோட்டமின்றி இருக்கவே முடியாது - என்றார் லெனின், பல்வேறு விஞ்ஞானங்களின் அறிவு பரவலாகி உறுதி பெற்று, ஆழமுறுகிறது. அதேபோல் தத்துவஞானமும் செழுமையுற்றுச் செம்மை பெற வேண்டும். இவ்வாறு தத்துவ ஞானம் வளர விஞ்ஞானங்கள் துணை புரிகின்றன. மனிதன் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதற்கு விடை காண தனது மனவுலகை மட்டுமே நம்ப வேண்டும் - எதார்த்த உலகை நம்பக் கூடாது என்பது இருத்தலியல் வாதம் (எக்சிஸ்டென்சியலிசம்) ஆகும். இந்தக் கண்ணோட்டத்தை மார்க்சியம் நிராகரிக்கிறது.
இது வரை தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே கூறி வந்தனர். ஆனால் விஷயம் என்னவெனில் உலகை மாற்ற வேண்டும் என்பதுதான் என்கிறார் மார்க்ஸ் மார்க்கக்கு முந்திய தத்துவஞானிகள் உலகின் நுன்பங்களை வியாக்கியானம் செய்தார்கள். அழுது புலம்பினார்கள். ஆனால் மார்க்ஸ்தான் உலகை மாற்றியமைக்கும் தத்துவத்தை உருவாக்கினார்.
நாம் எதை அடைய வேண்டும் - அதற்கு எதார்த்தத்தை எப்படி அணுக வேண்டும். என்ற கேள்விக்கு விடை தருகிறது தத்துவம், வர்க்கங்களாய் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், இரண்டு வேறுபட்ட வர்க்க நலன்களை தத்துவம் வெளியிடுகிறது. கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்வர்க்கப் போராட்டமாகவே இருந்தது - இன்றும் இருக்கிறது. இந்த எதிரும் புதிருமான இருபோக்குகளில் எந்தப் பக்கம் என்பதில் தத்துவ ஞானத்தின் சார்புநிலை வெளிப்படுகிறது.
சிறுபானமையிலான உடைமை வர்க்கம் பெரும்பான்மையிலான உடைமை அற்ற வர்க்கத்தை சுரண்டி வாழ முற்பட்டதின் விளைவே இந்த தத்துவ போராட்டம். உழைப்பு சுரண்டலை மூடி மறைக்க உருவான சித்தாந்தம் உழைக்கும் மக்களை ஏய்பதற்கு உருவானதே அதனை புரிந்துக் கொண்டு இந்த ஏற்ற இறக்கத்தையும் சுரண்டலையும் இல்லாதொழிக்க தோன்றியதே மார்க்சிய லெனினியம்.
மார்க்சிய லெனினிய தத்துவம் என்பதென்ன?
மார்க்சிய-லெனினியத் தத்துவ விஞ்ஞானம் அதற்கு முன்பிருந்த தத்துவம், தற்கால பூர்ஷ்வாத் தத்துவம் ஆகியவை எல்லாவற்றிலுமிருந்து பண்பளவில் வேறுபட்டது ஆகும். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், இருவராலும் உருவாக்கப்பட்டு வி. இ.லெனினால் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தத்துவம் பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் இணையுறுப்புக்களாகப் பொருத்துகிறது. இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றுக்கு உரிய நிகழ்ச்சிகளை அறிவதற்கு ஒன்றான இயக்கவியல்-பொருள்முதல்வாதச் சித்தாந்தாமுறையும் இதில் கையாளப்பட்டன. முழுமையான, செப்பமாக அமைந்த விஞ்ஞான ரீதியான இந்தக் தத்துவக் கண்ணோட்டம் தொழிலாளி வர்க்கத்தினதும் உழைப்பாளி மக்கள் அனைவரதும் புரட்சிப் போராட்டத்தின் நோக்கங்களுக்கு வரலாற்றில் முதன் முறையாகத் தொண்டாற்றலாயிற்று. மார்க்சியம் 19 நூற்றாண்டின் 40க்களில் ஜெர்மனியில் உதயமாயிற்று. விஞ்ஞானம், சமூக-வரலாற்று நடைமுறை ஆகியவை அனைத்தினுடையவும் வளர்ச்சியின் விதிமுறைக்கு ஏற்றதன் விளைவாக அது, அந்தச் சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறையின் ஆழ்ந்த முரண்பாடுகள் வெளிப்பட்டுவிட்டன. அதே சமயம் பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டலிலிருந்து விடுவிப்பதற்கான எதார்த்தச் சூழ்நிலமைகள் உருவாகியிருந்தன. பாட்டாளி வர்க்கத்துக்கும் பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் இடையே வர்க்கப் போராட்டம் இந்த அடிப்படையில் வளர்ந்துதீவிரம் அடைந்தது. அதன் நோக்கங்கள் போதிய தெளிவுடன் நிச்சயிக்கப்பட்டன. தொழிலாளி வர்க்கம் தனது பொருளாதார அரசியல் உரிமைகளுக்காக ஊக்கத்துடன் போராடியது.
புரட்சிகரத் தொழிலாளி இயக்கத்துக்குத் தேவையாக இருந்தவை உழைப்பாளி மக்களது போராட்டத்தின் குறிக்கோள்கள், கடமைகள் ஆகியவற்றுக்கு உரிய விஞ்ஞான அடிப்படையை நிறுவுவதும் முதலாளித்துவ அமைப்பை ஒழித்துப் புதிய சமூகத்தை நிறுவுவதற்கு ஏற்ற வழிகளையும் சாதனங்களையும் நிச்சயிப்பதுமே. நவீனச் சமூகத்தின் மிகப் புரட்சிகரமானதும் எல்லா உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும் ஒத்தியைந்த முறையில் போராடுவதுமான பாட்டாளி வர்க்கத்தின் மூலாதாரநலன்களின் சித்தாந்த வெளியீடாக விளங்கியது/விளங்குகிறது மார்க்சியம்.
கம்யூனிஸ உலகக் கண்ணோட்டத்தின் பொதுச் சித்தாந்த அடிப்படையாகத் தங்கள் தத்துவமுறையை உருவாக்கியதன் வாயிலாக மார்க்சும் எங்கெல்சும் கருத்துமுதல்வாத அறியப்படுத்தும் பணியையும், மாறாநிலைப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் கோளாறுகளையும் குறைகளையும் அகற்றுவதிலும் முந்திய தத்துவத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதத்துக்கும் இடையே நிலவிய பிளவை நீக்குவதிலும் மிகப்பெரிய தொண்டு ஆற்றினார்கள். நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, மார்க்சியத்துக்கு முற்பட்ட பொருள்முதல்வாதம் இயக்கவியல் தொடர்பு அற்றதாக, வரலாற்றுக் தொடர்பு அற்றதாக இருந்தது. வளர்ச்சியை அது மிக எளிய வகையில் புரிந்துகொண்ட.து. வளர்ச்சி பற்றிய போதனை பிரதானமாக ஹெகலின் இயக்கஇயல் உருவாக்கப்பட்டது, ஆனால் அது கருத்துமுதல்வாத நோக்கு கொண்டிருந்தது. எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல, “ஹெகலின் இயக்கவியலில் இருந்த திரிபின் அடிப்படை என்னவென்றால், ஹெகலின் கருத்துப்படி அது கருத்தின் சுயவளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே. இதன்படி, பொருள்களின் இயக்க இயல் கருத்தின் பிரதிபலிப்பே ஆகும். உண்மையிலோ, நமது மூளையில் தோன்றும் இயக்க இயல், இயற்கைப் பிரபஞ்சத்திலும் மனித சமூகத்திலும் ஏற்படுவதும் இயக்க இயல் வடிவுக்கு உட்பட்டதுமான எதார்த்த வளர்ச்சி யின் பிரதிபிம்பமே.”(கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும். நூல்திரட்டு, தொகுதி 38, பக்கம் 177.)
மார்க்சியத்தின் ஸ்தாபகர்கள் ஹெகலின் கருத்துமுதல்வாத இயக்கஇயல் மீது விமர்சன ரீதியில் மீண்டும் சிந்தனை செலுத்தி, பொருள்முதல்வாத இயக்க இயலை உருவாக்கினார்கள். இது பண்பளவில் புதிய இயக்கஇயல் முறையாகும். “எனது இயக்கஇயல் வகைமுறை தன் அடிப்படையில் ஹெகலின் முறையிலிருந்து வேறானது மட்டும் அல்ல, அதன் நேர் எதிர்நிலை ஆகவும் விளங்குகிறது” (கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் “மூலதனம்”, நூல்திரட்டு, தொகுதி 23, பக்கம் 21). என்று எழுதினார் மார்க்ஸ். பொருள்முதல்வாத இயக்கவியலைச் செவ்வையாக உருவாக்குகையில் மார்க்சும் எங்கெல்சும் 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்கைவிஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள். அங்கஜீவிகளின் உயிரணுக் கட்டமைப்பு பற்றிய சித்தாந்தம், ஆற்றலின் அழியாமையையும் மாற்றத்தையும் பற்றிய விதி, விலங்கினங்கள், தாவர இனங்கள் ஆகியவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் குறித்த டார்வினது போதனை, இவற்றை அவர்கள் முதன்மையாக ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள். பொருளியல் பிரபஞ்சம் ஏதோ சதாசர்வ காலத்திற்கும் நிலைத்திருப்பது என்றும் மாறுதல் அற்றது என்றும் கருதிய மாறாநிலைக் கண்ணோட்டத்தை இந்தக் கண்டுபிடிப்புக்கள் ஆதாரத்துடன் மறுத்து விட்டன. பிரபஞ்சத்தின் பொருள்களும் நிகழ்ச்சிகளும் மாறுதலும் வளர்ச்சியும் கொண்டவை,
ஏனெனில் மார்க்சியத்துக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் அதைச் சமூக நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தச் செய்யத் திறனற்றவர்களாக இருந்தார்கள். மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத்தை உச்சிவரை “நிறுவிப் பூர்த்தி செய்தார்கள்”. அவர்கள் வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதத்தை உருவாக்கினார்கள். சமூக வளர்ச்சிக்குரிய மிகப் பொதுவான விதிகள் பற்றிய விஞ்ஞானம் இது. தத்துவத்தில்அவர்கள் நிகழ்த்திய புரட்சிகரமான மாறுதலின் வெளியீடாக இதுவும் விளங்குகிறது.
இயக்கவியல் அனைத்துப் பொருட்களும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதாகக் கூறுகிறது. அனைத்துப் பொருட்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதுகிறது. ஒரு பொருளை ஆராயும் போது அந்தப் பொருள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறது. செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறது. நிலைமாறாத் தத்துவத்திற்கு மாறாக இயக்கவியல் பார்வை அனைத்தையும் அவற்றின் இயக்கத் தன்மையில் வைத்துப் பார்க்கிறது; புரிந்து கொள்கிறது. இயற்கை, சரித்திரம், சிந்தனை எல்லாவற்றிலும் மாறுதலும் இயக்கமும் இருக்கின்றன. ”மாறும் என்ற விதியைத் தவிர மற்றவையெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கின்றன” என்றார் மார்க்ஸ்.
உலகில் தோன்றிய எல்லா தத்துவங்களும் தனி உடமை சமூகம் தோன்றிய பிறகு அந்தத் தனி உடைமை சமூகம் சார்ந்த கருத்துக்களை விதைத்தது. ஆக தத்துவத்தின் தேவை அந்த மனித இனங்களில் வாழ்வியலைப் பற்றியது. ஆக ஒருபுறம் உடமையாளர்களின் சொந்தக்காரர்களான ஒடுக்குபவனும் உடைமையற்றோர் ஆகிய ஒடுக்கப்படுபவனும் ஒரே சமூகத்தில் வாழும் பொழுது இருவரையும் ஒழுக்கு படுத்துவதன் என்ற பெயரில் நீதி நியாயம் என்ற கோட்பாடுகளை வழங்கியது. இந்த தத்துவங்களை இவை மதத்தின் அடிப்படையில் மக்களை ஒன்று படுத்தவும் அதிகாரத்தின் அடிப்படையில் மக்களை மிரட்டி அடிபணிய வைப்பதும் எதுவாக இருந்தாலும் அன்று இவை இருந்தது. இன்று அதன் தேவைகளை புரிந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதே.(தத்துவத்தின் தொடக்கம் நூலின் சாரம்).
இந்திய தத்துவங்கள் பற்றி ஓர் அறிமுகம்
இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தத்துவ மரபுகளையும் ஆய்வு செய்தோமானால் அதனுடைய வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இங்குள்ள ஆளும் வர்க்கமே காரணமாகும். ஆளும் வர்க்கத்தை உயர்த்திப்பிடித்த பல்வேறு தத்துவங்கள் நிலைத்து நிற்பதும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்த தத்துவங்கள் தொடர்ந்து காணாமல் போய்விட்டது எனலாம். குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு விதமான தத்துவங்களை ஆய்ந்தறிந்த ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு தத்துவங்களின் கலவைகளை ஒன்றாக்கி சமஸ்கிருத மயமாக்களையும் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் தத்துவங்களை முதன்மைப் படுத்தியும் வேத நாகரீக காலம் தான் உயர்ந்தது என்று வேதத்தை தாங்கிப் பிடிக்கும் வேலையையும் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள். அதற்கு முன்இருந்த பல்வேறு தத்துவங்கள் தங்களுக்கு இடையிலே போட்டி போட்டு வாழ்ந்து மறைந்தும் கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் இந்திய மயமாக்கதலும் அன்றைய தத்துவங்களுக்கு உயிர் கொடுத்தனர் எனலாம். இதனை புரிந்து கொள்வதற்கு மார்க்சிய பார்வை அவசியம்.
இந்தியாவில் தோன்றிய எல்லா தத்துவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்து தத்துவங்கள் தான் இன்று அதன் பயன் என்ன என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ள வர்க்க சமுகத்தில் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் தீர்வு காணும் மார்க்சியம் மட்டுமே உழைப்பு தான் மனித அறிவைத் தோற்றுவித்தது புராதன மனித மந்தையை ஒழுக்க நெறி விஞ்ஞானம், கலை ஆகியவை கொண்ட மனித சமூகமாக மாற்றியது மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்றதற்குப் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணமாகும்.உலகில் உயர்ந்த தத்துவம் மார்க்சியம் மட்டுமே.
ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக்கொள்ளக்கூடாது, மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது.
ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.அதற்கு மனிதர்கள்உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.
இந்தியத் தத்துவ ஞானத்தில், ஆதி சங்கரரை மையமாகக் கொண்ட கருத்து முதல்வாதம், இந்திய விஞ்ஞான வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியையும் பாதித்தது என்பதே இந்த மார்க்சியஅறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. லோகாயதா, இந்தியத் தத்துவம், இந்திய நாத்தீகம் இந்தியத் தத்துவத்தில் இருப்பனவும் இருந்தனவும், பண்டைக்கால இந்தியாவில் விஞ்ஞானமும் சமூகமும், மதமும் சமுதாயமும், பண்டைக்கால இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வரலாறுபோன்ற அரிய பல நூல்களை தேவிபிரசாத் நமக்கு அளித்துள்ளார்.
புராண இதிகாச நீதிநெறி நூல்கள் காரண காரியத்தை அறிய முடியாது என்று நம்பிக்கைக்கு பலியாக இருப்பதை காணலாம். இந்தக் கருத்துகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒவ்வொருகால சமுதாய வளர்ச்சி போக்கில் உதித்ததாய் உள்ளன. அடிப்படையில் சமூக மாற்றம் ஏற்பட்ட பிறகும் சூழ்நிலை கருதி இந்தக் கருத்துக்கள்நீடித்து நிற்பதற்கான வழிவகை உண்டு ஆக கருத்துகளை கருத்துக்களாக வென்று விடமுடியாது. அதற்கான பணியென்பது சமூக மாற்றத்தின் ஊடாக செய்ய வேண்டியதாக உள்ளதுஎன்பேன்.
இருபதாம் நூற்றாண்டிலும் பெரும்பாலான இந்தியகல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் முக்கிய பிரச்சினைகளுக்கு பண்டைய நூல்களில் இருந்து தங்களுக்கான மேற்கோள்களை காட்டுகின்றனர். அதில் குறிப்பாக பகவத் கீதையாக இன்னும் சில முக்கிய இதிகாச புராண நூல்களிலின் தகவல்களை பயன்படுத்துவது போல் தமிழகத்தில் திருக்குறளையும் வேதமாக கொண்டு சிலர் எழுதிக் கொண்டிருப்பதை காணலாம். இவ்வாறு பழைய நூல்கள் அதாவது பிரமாணமாக அமையும் நூல்கள் எக்காலத்துக்கும் உரியவை எனக் கொள்வது அவற்றை இயற்றியவர் ஆதி மனிதராக இருக்க வேண்டியது தவிர்க்க இயலாது ஆகிவிடுகிறது. இந்தியாவுக்கு பொதுவான இப்ப பழமை போற்றும் மனப்பான்மை தமிழர் சித்தாந்தத்துக்குபொருந்தும்.
இந்திய மெய்யியல் வரலாற்றைப் படிப்பவர்க்கு முனைப்பாக தோன்றும் ஒரு பண்பு உண்டு. இந்தியாவில் எழுந்த மெய்யியல் உட்பிரிவுகள் யாவும் வேத உபநிடதங்களையே ஆதாரமாக கொண்டவையாக இந்திய மெய்யியல் முழுதும் உபநிடதங்களே மூலாதாரம் வேத சமயம் (Religion of the veda) என்ற நூலில் ப்ளூம்ஃபீல்டு (Bloomfield)என்ற ஆசிரியர் கூறுகிறார். புற சமயமாகிய பௌத்தம் உட்பட இந்திய சிந்தனை வடிவங்களில் வேதங்களில் வேர்விட்டு வளராத ஒன்றேனுமில்லை உண்மையில் உலகாயதம் ஒன்றிணைத்தவிர.
இந்திய மெய்யியல் பிரிவுகள் வேத உபநிடதங்களை மூலத்தோற்றுவாயாய் கொண்டவையே. பண்டைய இந்தியா அல்லது வேதங்கள் வழி வந்து சிந்தனைகள்உபநிடதங்களையே நிறைவு பெறுகின்றன என்பர்.
இதிலிருந்து பெறப்படுவது ஒன்றுதான் இந்திய மெய்யியலை பொருத்தவரையில் ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்த முடிவுக்கு வந்து விட்டது அறுதியாக வெளியிடபட்டு விட்டன. பின் வந்தஞானிகளின் ஆராய்ச்சிகள் யாவும் முடிவுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்டன அந்த முடிவுக்கு ஏற்றவாறு தன்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர் - அடியும் முடியும் க. கைலாசபதி.
அவரவர் சக்திக்கும் பக்குவத்திற்கும் ஏற்ப அறியப்படவேண்டுமேயன்றி புதிதாக கூறத்தக்க உண்மைகள் இனி உண்டு என்பது அல்ல. இந்தஅடிப்படையில் நம்பிக்கையின் விளைவுகள் பாரதூரமானவை அவற்றுள் ஒன்று இன்நம்பிக்கை வரலாற்று நோக்குக்கு அறவே இடம் அளிக்காததாகும். எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை என்று கூறப்பட்டு விட்டதால் அவை காலம் கடந்தவை ஆகின்றன. ஆக அவற்றைக் கால அளவில்ஆராயும் அவசியம் இல்லாத போகின்றது. ஆகவே அவற்றின் காரணகாரிய நியதிக்குட்பட்டுநோக்கமும் அற்றுப் போகிறது சுய சிந்தனைக்கும் விமர்சனத்திற்கும் ஏற்ற நம்பிக்கைஎன்று கூற முடியுமா? என்கிறார் கைலாசபதி. ஆக இங்குள்ள மெய்யியலை புரிந்துக்கொள்வது அதனை மக்களிடம் உள்ள அறியாமையின் அடியாழத்தை புரிந்துக் கொள்ள பயனளிக்கும்.
ஆக மார்க்சிய லெனினியத்தை தத்துவ தேவையும் புரிதலும் ஒரு மார்க்சிய லெனினியத்தை நேசிப்பவர் அறிந்திருக்க வேண்டும் அல்லவா?
அது போன்ற ஒரு விவாததிற்கான முன்னோட்டம் தான் இதுவரை எழுதியவை.
நம் மார்க்சியம் பேசுவோர்கள் மார்க்சிய லெனினிய தத்துவ போதாமையை விளக்கவே மேல் உள்ள பகுதி. இனி விவாத பகுதி அப்படியே கீழே அதற்குமுன சிலர் கேட்கலாம் எதன் மீது விமர்சனம் என்று அவர்கள் இந்த இணைய பகுதியில் வாசித்து கொள்ளலாம்தோழர்களே:-செந்தளம்பகுதியில் மற்றும் அதற்கு எதிர் வினையாக https://namaduillakku.blogspot.com/2024/10/blog-post_6.html இந்த பகுதியில் வாசிக்கலாம்.
அணுவை பிளக்க முடியும் என்பதை அறிந்தவுடன், இந்தப் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு பொருள்முதல்வாதத்தை எதிர்த்து அழித்திட முடியும் என்று பலர் கருதினர். அணு என்பது பிளக்கமுடியாதது என்கிற தன்மையை இழந்துவிட்டது, ஆகவே பருப்பொருள் மறைகிறது என்ற கருத்தை பரப்பினர். இந்த நிலையில்தான் லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலின் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாத எதிரிகளுக்குப் பதிலளித்தார். இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிராகப் பலபேர் செயல்பட்டனர், அதில் முக்கியமானவர் எர்னஸ்ட் மாஹ். இவரைப் பின்பற்றியே பலர் வந்தனர்.
உலகம் பற்றிய அறிவியல் விளக்கத்திற்கு உறுதியான ஆதாரத்தைப் பொருள்முதல்வாதம் மட்டுமே தருகிறது என்கிற கட்டுக்கதை இப்போது முடிவுக்கு வந்தது என்று மாஹியவாதிகள் கூறினர்.
அணு பிளக்கப்பட்டது, அதனால் பருப்பொருள் மறைகிறது என்று கூறுகிற அனைவருக்கும் பதிலாக, லெனின் பருப்பொருள் என்பதற்குப் புதிய வரையறை கொடுக்கிறார். பருப்பொருள் என்பது மனிதர்களுடைய உணர்வுகளுக்குப் புறத்தே, அவனைச் சாராமல் இருப்பது ஆகும். இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் நுட்பமான வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் பயன்பட்டன என்பதே உண்மையாகும்.
பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
தத்துவவாதிகளின் முன்புள்ள பிரச்சனை என்ன? ஒருபுறத்தில் பொருள்கள்உள்ளன, மறுபுறத்தில் சிந்தனை அல்லது கருத்து இருக்கிறது. இவ்விரண்டுக்கும் இடையிலான உறவை ஆய்வு செய்து முன்வைக்கும் முயற்சியில் தத்துவவாதிகள் இரண்டு முகாம்களாகப் பிரிந்தார்கள்.
ஒருமுகாமைச் சேர்ந்தவர்கள் பொருள்கள்தான் முதன்மையானது கருத்து என்பது இரண்டாவது தன்மையானதாகும் என்றனர், இவர்களே பொருள்முதல்வாதிகள் ஆவார்கள். இரண்டாவது வகையினர் கருத்தே முதன்மையானது என்றும் பொருள் இரண்டாம்பட்சமானது என்றனர், இவர்களே கருத்துமுதல்வாதிகள் ஆவார்கள்.
உலகில், சரி என்றும் தவறு என்றும் இரண்டு எதிர்மறைகள் இருப்பது போல, ஒன்று விஞ்ஞானமாகவும் மற்றொன்று விஞ்ஞானத்தை மறுக்கும் எதிர் மறையாக இருப்பது போலவே தத்துவத்திலும் ஒன்று சரியான உண்மையான தத்துவமாக பொருள்முதல்வாதம் இருக்கிறது. இதற்கு நேர்எதிராக பொய்யான மற்றும் தவறான தத்துவமாக கருத்துமுதல்வாதம் இருக்கிறது. இதனை தவிர்த்து மூன்றாவது வகையான தத்துவத்தை படைப்பதாகச் சொன்னவர்கள் யாரும் மூன்றாவது தத்துவத்தை படைத்ததில்லை, மாறாக மேலே குறிப்பிட்ட தத்துவத்தில் ஒரு வகையே மூன்றாவது தத்துவமாக படைத்தார்கள். அதில் பெரும்பாலும் கருத்துமுதல்வாத தத்துவத்தையே புதிய முறையில் முன்வைத்து மூன்றாவது தத்துவமாக காட்டினார்கள்.
இந்த வகையில் அனுபவவாத விமர்சர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அனுபவவாத தத்துவவாதிகள், அனுபவவாதம் என்ற தத்துவத்தைப் படைத்து, அந்த தத்துவமானது பொருள்முதல்வாத தத்துவத்தையும், கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் மறுத்து விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்றாவது வகையான தத்துவம்தான் அனுபவவாதத் தத்துவம் என்று பறைசாட்டிக்கொண்டார்கள். இவர்கள் வெளிப்படையான அகநிலை கருத்துமுதல்வாதிகள் இல்லை. அதாவது இவர்கள் வெளிப்படையாக அகநிலை கருத்துமுதல்வாதத்தை ஆதரிப்பதில்லை. மாறாக விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அனுபவத்தை ஏற்றுக்கொள்வதாகவும் பாவனை காட்டிக்கொண்டு அனுபவம் என்றால் புலனறிவு என்றும் அந்த புலனறிவு மட்டுமே அனுபவத்துக்கு அடிப்படை என்றும் புலனறிவுக்கும் புறநிலையிலுள்ள பொருள்களுக்கும் இடையிலான உறவை புறக்கணித்துவிட்டு, புறநிலையிலுள்ள பொருள்களின் இருப்பையே மறுத்துவிடுகிறார்கள். இவ்வாறு அனுபவவாத தத்துவவாதிகள், விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்வதாக சொல்லிக் கொண்டே விஞ்ஞானத்தைமறுத்துவிடுகிறார்கள். மேலும் இவர்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதாவது சந்தர்ப்பவாதமாக அகநிலை கருத்துமுதல்வாத தத்துவத்தை ஆதரிக்கிறார்கள். இந்த வகையில் இவர்கள் தத்துவத்துறையில் சந்தர்ப்பவாத தத்துவவாதிகளாக இருக்கிறார்கள். இவர்களால் முன்வைக்கப்பட்ட அனுபவவாத தத்துவமானது சந்தர்ப்பவாத தத்துவமாகவே இருக்கிறது.
ஒருவர் கருத்துமுதல்வாதத் தத்துவத்தை முன்வைப்பது பிரச்சனை இல்லை, உதாரணமாக சங்கிகள் கம்யூனிசத்தை எதிர்ப்பது பிரச்சனை இல்லை. ஏனென்றால் அவர்கள் கம்யூனிசத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது கம்யூனிசத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் தெளிவாகவே தெரியும். ஆனால் கம்யூனிசத்தை ஆதரிப்பதாகச் சொல்லிக்கொண்டே கம்யூனிசத்தை சதித்தனமாகவும், தந்திரமாகவும் எதிர்க்கும் சந்தர்ப்பவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் அல்லவா. அது போலவே இந்த அனுபவவாத தத்துவவாதிகள் பொருள்முதல்வாதத்தையும் கருத்துமுதல்வாதத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, பொருள்முதல்வாத தத்துவத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் கருத்துமுதல்வாதத்தை எதிர்ப்பது போல நாடகமாடிக்கொண்டு கருத்துமுதல்வாதத்தை ஆதரிக்கும் சந்தர்ப்பவாதிகளாக இருந்தனர். அந்த வகையில் இந்த சந்தர்ப்பாத தத்துவவாதிகள் வெளிப்படையான கருத்துமுதல்வாதிகளைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று லெனின் உணர்ந்தார். ஆகவேதான் அனுபவவாத தத்துவவாதிகள் என்று சொல்லப்படும் சந்தர்ப்பவாதத் தத்துவவாதிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும் என்ற நூலை எழுதினார். இந்த நூலில் அகநிலை கருத்துமுதல்வாதத்தை லெனின் எதிர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும் அது முழு உண்மையில்லை, தத்துவத் துறையில் சந்தர்ப்பவாதிகளையும் அவர்களது சந்தர்ப்பவாத தத்துவத்தையும் அம்பலப்படுத்தினார் என்பதே முழு உண்மையாகும்.
அனுபவவாத தத்துவவாதிகள் அவர்களது தத்துவத்தை நியாயப்படுத்தி எழுதும்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக அவர்களது வாதங்களை முன்வைத்தார்கள். அவர்களின் வாதங்களையே லெனின் முன்வைத்து முன்னுக்குப் பின் முரணாகஅவர்கள் வாதம் புரிவதை லெனின் தெளிவாகச் சுட்டிக்காட்டி அனுபவவாத தத்துவவாதிகளின் முகமுடிகளை கிழித்து அவர்களது எழுத்துகளிலிருந்தே அவர்களை லெனின் அம்பலப்படுத்தினார்.
அனுபவவாதம் என்பது வேறு, அனுபவவாத விமர்சனம் வேறு என்று சிலர் கருதுகிறார்கள், ஆனால் அது உண்மையில்லை. தத்துவம் என்ற சொல்லுக்குப் பதிலாக விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பொருள்முதல்வாதம் என்றாலே பொருள்முதல்வாதத் தத்துவம் என்றுநாம் புரிந்துகொள்கிறோம் அல்லவா? அதுபோலவே கருத்துமுதல்வாதம் என்றாலே கருத்துமுதல்வாதத் தத்துவம் என்று புரிந்துகொள்கிறோம் அல்லவா, அதுபோலவே அனுபவவாதம் என்றாலும் அனுபவவாத விமர்சனம் என்றாலும் அனுபவவாத தத்துவம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. லெனின் எழுதிய நூலின் நோக்கமே அனுபவவாத தத்துவம் என்பது பொய்யான சந்தர்ப்பவாத தத்துவம்தான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, அனுபவவாத தத்துவத்தை அம்பலப்படுத்துவதுதான் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டால் அனுபவவாதம் என்ற சொல்லுக்கும் அனுபவவாத விமர்சனம் என்ற சொல் பற்றியும் குழப்பம் அடையத் தேவையில்லை.
“அனுபவவாதம்” “அனுபவவாத விமர்சனம்” ஆகியவை இரண்டும் தனித்தனித் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவை, என்கிறார்கள். இரண்டும் வெவ்வேறான தத்துவம் என்று நாம் புரியும்படி சொல்வதற்குப் பதிலாக தனித்தனித் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குப் புரியாத மொழியில் பேசி நம்மைக் குழப்புகிறார்கள்.
அதென்ன தத்துவப் பள்ளி?
தத்துவம் என்று சொன்னால் நம்மால் புரிந்துகொள்ள முடியுமே. நம்மை குழப்புவதற்கே இவர்கள் புதிய வகையான மொழி நடையில் அவர்களது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதன் நோக்கம் அவர்களை பெரிய அறிவாளிகளைப் போலக் காட்டிக்கொண்டு நம்மை குழப்புவதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. பின்நவீனத்துவவாதிகள், அடையாள அரசியல்வாதிகள் ஆகிய பிழைப்புவாத அறிவாளிகளின் எழுத்து நடை இதுபோலவே இருப்பதை நாம் காணலாம். இருந்த போதும் இவர்கள் முன்வைக்கும் கருத்து, அனுபவவாதம் என்பதும் அனுபவவாத விமர்சனமும் வெவ்றான தத்துவம் என்பதுதான். இப்படி சொல்லும் இவர்கள் “ஆனால் இரண்டும் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது. “அனுபவவாதம்” என்கிற தத்துவத்தின் வளர்ச்சியாக “அனுபவவாத விமர்சனம்” என்கிற தத்துவத்தைக் கூறலாம்” என்று உடனே பல்டியடித்து அனுபவவாத விமர்சனம் என்ற தத்துவமானது அனுபவவாத தத்துவத்தின் வளர்ச்சி என்று சொல்வதன் மூலம் இரண்டும் ஒரே தத்துவம்தான் என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள். இவ்வாறுதான் மார்க்சிய லெனினியத்தை மறுப்பவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை நாம் காணலாம்.
ஆகவே தோழர்களே அனுபவவாதம் என்பது பற்றியும் அனுபவவாத விமர்சனம் என்பது பற்றியும் குழப்புபவர்களின் பிரச்சாரத்தை கண்டு குழப்பம் அடைய வேண்டாம்.
“மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை. அவை சமுதாய நடைமுறை அனுபவத்திலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன; உற்பத்திப் போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை என்ற மூன்று வகையான சமுதாய நடைமுறை அனுபவங்களிலிருந்து வருகின்றன. மனிதனின் சமுதாய வாழ்வே அவனுடைய சிந்தனையை நிர்ணயிக்கிறது. முன்னேறிய வர்க்கத்தின் குணாம்சமாக விளங்கும் சரியான கருத்துக்கள் ஒருகால் பொது மக்களால் கிரகித்துக் கொள்ளப்பட்டதும், இக்கருத்துக்கள் சமுதாயத்தை மாற்றுகின்ற உலகை மாற்றுகின்ற ஒரு பொருளாதாய சக்தியாக வடிவெடுக்கின்றன.
மக்கள், தமது சமுதாய நடவடிக்கையில், பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு, தமது வெற்றிகள், தோல்விகள் இரண்டிலும் இருந்து செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர். புறநிலை உலகத்தின் எண்ணத் தோற்றப்பாடுகள் மனிதனின் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சப் புலன்களுக்கும் ஊடாக, அவனுடைய மூளையில் பிரதிபலிக்கின்றன. ஆரம்பத்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றது. போதிய அளவு புலக்காட்சி அறிவு தொகுக்கப்பட்டதும், அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து அது பகுத்தறிவாக மாறுகின்றது. அதுவே கருத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது அறிகையின் (அறிவதின்) ஒரு வளர்ச்சிப்போக்கு. இது அறிகையின் (அறிவதின்) முழு வளர்ச்சிப் போக்கில் முதலாவது கட்டம். அதாவது புறநிலைச் சடப் பொருளிலிருந்துஅகநிலை உணர்வுக்குச் செல்லுகின்ற, வாழ்நிலையிலிருந்து கருத்துக்களுக்குச் செல்லுகின்ற கட்டம் ஆகும். (தத்துவங்கள், கொள்கைகள், திட்டங்கள், அல்லது வழிமுறைகள் உட்பட) ஒருவரின் உணர்வு அல்லது கருத்துக்கள் எல்லாம் புறநிலை யதார்த்த உலகைச் சரிவரப் பிரதிபலிக்கின்றனவா, இல்லையா என்பது இந்தக் கட்டத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இக்கட்டத்தில் அவை சரியானவையா, இல்லையா என்று நிச்சயிப்பதும் சாத்தியமாகாது. பின்னர் அறிகை அதாவது அறிவது வளர்ச்சிப் போக்கின் இரண்டாவது கட்டம், அதாவது உணர்விலிருந்து மீண்டும் சடப்பொருளுக்கு, கருத்துக்களிலிருந்து மீண்டும் வாழ்வுக்குச் செல்லும் கட்டம் வருகின்றது. இந்தக் கட்டத்தில், தத்துவங்கள்; கொள்கைகள், திட்டங்கள், அல்லது வழிமுறைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைத் தருகின்றனவா என்பதை நிச்சயிக்க, முதல் கட்டத்தில் சம்பாதிக்கப்பட்ட அறிவு சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றது, பொதுவாகச் சொன்னால், எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை; எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை; விசேசமாக இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்தில் இது உண்மையாகும்”.(மனிதர்களின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? மாவோ).
இதில் மனிதர்களின் சமூக நடைமுறை அனுபவத்திலிருந்துதான் மனிதன் அறிவைப் பெறுகிறான் என்கிறார் மாவோ. ஆகவே அனுபவம் என்பது நடைமுறையோடு தொடர்புள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உனக்கு அனுபவம் இல்லை ஆகவே உன்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று மக்கள் சாதாரணமாகப் பேசுவதை நாம் காணலாம் அதிலிருந்து அனுபவம் என்றால் நடைமுறையில் ஒரு விசயத்தை புரிந்துகொள்வதற்கான முயற்சி என்பதே இதன் அர்த்தம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அனுபவவாத தத்துவவாதிகள் நடைமுறை அனுபவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் அறிவைப் பெறுவதற்கான அனுபவத்தை ஏற்றுக்கொள்வது என்ற சரியான கருத்தை முன்வைக்கிறார்கள்.இருந்தபோதும் இந்த அனுபவத்தை புலனறிவு என்று குறுக்கிப் பார்த்து புலனறிவுக்கு அடிப்படையான புறநிலையிலுள்ள பொருள்கள் இருப்பதை மறுத்துவிடுவதன் மூலம் அகநிலை கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கிறார்கள்.
இப்படித்தான் அனுபவவாத தத்துவவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பவாதத்தையே லெனின் அம்பலப்படுத்தினார்.
மனிதர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு தத்துவத்தின் அடிப்படையிலேயே அவர்களது நடைமுறையை வகுத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். சிலர் கருத்துமுதல்வாத தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். உதாரணமாக கடவுள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்ற கோட்பாட்டைப் பின்பற்றி தனது பிரச்சனையை தீர்ப்பதற்கு கடவுளை வணங்கி பரிகாரங்கள் போன்றவற்றை செய்கிறார்கள். மற்றொரு பிரிவினர் தங்களது பிரச்சனைகளுக்கு காரணம் என்னவென்பதை புரிந்துகொண்டு அதனை தீர்ப்பதற்கான வழிமுறையை கண்டுபிடித்து பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.
அனுபவவாதம் என்ற தத்துவமானது அனுபவம் என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்வது போல பாசாங்கு செய்து அனுபவம் என்ற நடைமுறையையே மறுத்துவிடுகிறது. ஆகவே அனுபவவாதத் தத்துவம் என்பது உண்மையில் அனுபவவாதம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் அனுபவம் என்ற நடைமுறையை மறுக்கும் தத்துவமே ஆகும். இவ்வாறு அனுபவத்தையே மறுக்கும் தத்துவம்தான் அனுபவவாதம் என்ற தத்துவம் ஆகும். இந்த உண்மையை லெனின் தனது நூலில் தெளிவுபடுத்தியிருப்பார்.
இத்தகைய நிலையில் சிலர் பொருள்முதல்வாத அனுபவவாதம் என்றும் கருத்துமுதல்வாத அனுபவவாதம் என்று பேசி நம்மை குழப்புகிறார்கள்.
பொருள்முதல்வாத அனுபவவாதம் என்றால் என்ன? கருத்துமுதல்வாத அனுபவவாதம் என்றால் என்ன? என்பதை இவர்கள் விளக்குவதில்லை.
பொருள்முதல்வாத அனுபவவாதம் என்ற தத்துவம் இருக்குமானால் அதனை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?. அத்தகைய தத்துவத்தைப் பற்றி யார் பேசினார்கள்? இவர்களால் விளக்கமுடியுமா?.
அனுபவவாத தத்துவம் என்பது ஒன்றுதான் உள்ளது. அனுபவவாதம் என்பது வேறு அனுபவவாத விமர்சனம் என்பது வேறு என்று பிரித்து குழப்பும் இவர்கள்தான், அனுபவவாதத் தத்துவத்தை இரண்டாகப் பிரித்து ஒன்று பொருள்முதல்வாத அனுபவவாதம் என்றும் மற்றொன்று கருத்துமுதல்வாத அனுபவவாதம் என்று பிரித்து அவை இரண்டும் வெவ்வேறான தத்துவம் என்று அனுபவவாத தத்துவத்துக்கு புதிய விளக்கம் கொடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள்.
ஆகவே அனுபவவாதத் தத்துவம் என்ற ஒரு தத்துவத்தையே அனுபவவாத தத்துவவாதிகள் படைத்தார்கள் என்பதையும் அந்த சந்தர்ப்பவாதத் தத்துவத்தையே லெனின் அம்பலப்படுத்தினார் என்று நாம் புரிந்துகொண்டு அனுபவவாதத் தத்துவத்தை இரண்டாகப் பிரிக்கும் குழப்பவாதிகளுக்கு நாம் பலியாகிவிடக் கூடாது.
“விமர்சனம் என்பது சரி, தவறு என்று பிரிக்காமல் அறுதியானதாகக் கருதுகிறது. அனுபவவாத விமர்சனம் (Empirio-Criticism) அனுபவத்தை அறுதியானதாகக் கொள்கிறது” என்ற வேடிக்கையான கருத்தை முன்வைக்கிறார்கள். விமர்சனம் என்றால் என்ன? என்பதையே இந்த அறிவாளி புரிந்திருக்கிறாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கம்யூனிச அமைப்பிற்குள் வரும் முரண்பாடுகளை விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் என்ற முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். இந்த அறிவாளி சொல்வது போல சரி எது, தவறு எது ன்று பார்க்காமலேதான் ஒரு கருத்தை தெரிவிப்பதுதான் விமர்சனம் என்கிறார் இவர். அவ்வாறு சரிஎது, தவறுஎது என்று பார்க்காமல் கட்சிக்குள் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் செய்துகொள்வதால் எவ்விதமான பயனும் இல்லையே. அவ்வாறு எவ்விதமான பயனும் இல்லாத ஒன்றைத்தான் அதாவது விமர்சனம்சுயவிமர்சனம் என்பதைத்தான் சொல்லி ஆசான்கள் வழிகாட்டினார்களா? இந்த அறிவாளி சொல்வது போல விமர்சனம் என்பது சரிஎது, தவறுஎது என்பதை பார்க்காமல் கண்மூடித்தனமாக அறுதியிட்டு கூறுவது இல்லை.
இவருக்கு அனுபவவாதம் என்பது வேறு, அனுபவவாத விமர்சனம் என்பது வேறு என்று பிரிக்க வேண்டும் என்ற அகவய நிலையிலிருந்தே விமர்சனம் என்பதற்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்.
ஆகவே விமர்சனம் பற்றிய இவரது விளக்கமும் உண்மையில்லை, அனுபவவாதம் அனுபவவாத விமர்சனமும் வேறுவேறு என்று செல்வதும் தவறானதே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் அனுபவத்தையே அறுதியானதாக அனுபவவாத விமர்சனம் என்ற தத்துவம் கருதுகிறது என்று இவர் சொல்வது முற்றிலும் தவறானதாகும். அனுபவவாத தத்துவமானது அனுபவத்தின் மூலம் விசயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பெயரளவுக்கு கூறிவிட்டு அனுபவம் என்பதற்கு தவறான விளக்கம் கொடுத்து அனுபவத்தையே மறுத்துவிடுகிறது. அனுபவத்தையே மறுத்துவிடுகிற அனுபவவாதத் தத்துவமானது அனுபவத்தையே அறுதியானதாகக் கொள்கிறது என்பது எவ்வளவு அபத்தமான கூற்று என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அனுபவத்தின் மூலமே அறிவைப் பெறமுடியும் என்றும் .அதுதான் அறுதியானது என்று மார்க்சியம்தான் கூறுகிறது. இறுதியாகப் பார்த்தால் உண்மை என்பது நடைமுறையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று மார்க்சியம் சொல்கிறது. இவ்வாறு மார்க்சியம் சொல்லும் உண்மையை அனுபவவாதத் தத்துவம் கூறுவதாக இவர் திருத்திப் புரட்டுகிறார்கள். அனுபவம்தான் உண்மை என்று கூறி நடித்துக்கொண்டே அனுபவத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் உண்மைகளை மறுக்கின்ற தத்துவம்தான் அனுபவவாதத் தத்துவமாகும் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
“அனுபவவாத விமர்சனம்” என்பது “அனுபவத்தை விமர்சன வழியில் அறுதியானதாக கருதுகிறது. இதற்கு அனுபவவாத விமர்சனம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்த அனுபவத்தை அனுபவவாதவிமர்சகர்கள் தூய அனுபவம் என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தூய அனுபவம் என்பது அனுபவமே முதன்மையானது, உண்மையானது என்றும் புறப்பொருள் அனுபவத்தின் வெளிப்பாடு, இரண்டாம் நிலையினது என்றும் கருதுகிறது. அதனால்தான் இந்த தூய அனுபவத்தின் மீதான விமர்சனம் என்கிற தத்துவம் அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.”
ஒரு நூலைப் பற்றியோ அல்லது ஒருவரது கருத்தைப் பற்றியோ அது சரியானதா? தவறானதா? என்பதை புரிந்துகொள்ள அதனை விமர்சனப்பூர்வமாக படிக்க வேண்டும் அல்லது அனுக வேண்டும் என்பார்கள். அவ்வாறு விமர்சன முறையில் பார்த்தால் மட்டுமே அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும். அப்படியானால் அனுபவத்தையும் விமர்சன முறையில் ஆராய்ந்து பார்த்தே நாம் முடிவுக்கு வரவேண்டும். அப்படியானால் அனுபவத்தை விமர்சன வழியில் அறுதியானதாக கருதுவதுதான் அனுபவவாத விமர்சன தத்துவம் கூறுகிறது என்றால் அந்தத் தத்துவம் சரியான தத்துவம்தானே அதனை லெனின் ஏன் எதிர்த்தார்? ஆனால் இந்த அறிவாளி சொல்வது போல அனுபவத்தை விமர்சன வழியில் அறுதியானதாக அனுபவவாதம் விமர்சனம் கருதுகிறது என்று சொல்வது பெய்யான கூற்றே. அனுபவவாத விமர்சனம் என்ற பெயரில் வரும் விமர்சனம் என்பதற்கு தவறான விளக்கம் கொடுத்து அனுபவவாத தத்துவம்தான் அனுபவவாத விமர்சனம் என்று அழைக்கப்படுகின்றது என்ற உண்மையை மூடிமறைத்து நம்மை குழப்புகிறார்.
அனுபவவாத தத்துவவாதிகள் அனுபவம் என்ற சொல்லுக்கான பொருளை தவறாக விளக்கி நம்மை குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். அனுபவம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருளை மூடிமறைக்கிறார்கள். இந்த உண்மையைத்தான் லெனின் அம்பலப்படுத்தினார். தற்போது மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை மறுக்கும் அறிவாளிகளுக்கு சாட்டையடி கொடுத்த நூல்தான் லெனினுடைய இந்த நூல்.
. தற்போது இந்த நூல் தமிழில் வெளிவந்துவிட்டது. ஆகவே இந்த நூலைப் பற்றி ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கிறது. அத்தகைய குழப்பவாதிகளுக்கு நாம் பலியாகாமல் நம்மை பாதுகாக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த நூலின் மொழிபெயர்ப்பின் காரணமாக இந்த நூலை நாம் படித்து புரிந்துகொள்வதில் நமக்கு சிரமங்கள் உண்டு இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு மார்க்சிய வேடம் போடும் மார்க்சிய விரோதிகள் நம்மை குழப்புவார்கள். ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த நூல் பற்றிய தொடர் வாசிப்பில் உள்ளதால் இலக்கு தன் பொதுவான கருத்தை இந்த நூலில் உள்ளதையும் நம் நாட்டில் உள்ள மார்க்சிய லெனினிய வாதிகளுக்கான படிப்பினைகளையும் தொகுத்தளிப்போம் வரும் இணைய இதழ்களில். மேலும் விமர்சனம் செய்தவர் செய்ய மறந்த அல்லது மூடிமறைத்த பகுதிகளை பார்ப்போம்...முதல் பதிப்பின் முன்னுரையிலிருந்து பக்கம் 21லிருந்து 23 வரை:-
மார்க்சும் எங்கெல்சும் தமது தத்துவஞானக் கருத்துக்களை இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று பலமுறை அழைத்ததை இவர்கள் அனைவரும் அறியாதவர்களாக இருந்திருக்க முடியாது. ஆயினும் இவர்களெல்லோரும், தமது அரசியல் கருத்துக்களில் கூர்மையான வேறுபாடு இருந்தபோதிலும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்பால் தமது பகைமையில் ஒன்றுபட்டு, அதே போது தத்துவஞானத்தில் தங்களை மார்க்சியவாதிகள் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறார்கள்! எங்கெல்சின் இயங்கியல் என்பது "மாயவாதம்" என்கிறார் பெர்மன்
எங்கெல்சின் கருத்துக்கள் "பழமையானவையாகிவிட்டன" என்று பஸாரோவ் சர்வசாதாரணமாக குறிப்பிடுகிறார், அது ஒரு வெளிப்படையான உண்மை என்பதுபோல். இவ்வாறாக, "நவீன அறிவுக் கோட்பாடு," "அண்மைய மெய்யியல்" (அல்லது "அண்மைய நேர்க்காட்சிவாதம்"), "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் மெய்யியல்" அல்லது "இருபதாம் நூற்றாண்டின் இயற்கை விஞ்ஞானத்தின் மெய்யியல்" ஆகியவற்றைப் பெருமையுடன் குறிப்பிடும் நமது துணிச்சலான போர்வீரர்களால் பொருள்முதல்வாதம் மறுக்கப்படுவதையும். அண்மைக்காலக் கோட்பாடுகள் என்று சொல்லப்படுபவை அனைத்தின் ஆதரவுடன், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அழிப்பவர்களான இவர்கள் அச்சமின்றி அப்பட்டமான நம்பிக்கை கொள்கையை(Fideism- ஃபிடெயிசம் என்பது அறிவுக்கு பதிலாக நம்பிக்கையை மாற்றும் ஒரு கோட்பாடு, அல்லது பொதுவாக நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிற கோட்பாடு. -லெனின்) நோக்கிச் செல்கிறார்கள்.
ஆயினும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரிடம் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறை பற்றிய வெளிப்படையான வரையறை என்று வரும்போது, அவர்களுடைய துணிச்சலும், தங்களுடைய சொந்த நம்பிக்கைகள் மீதான மரியாதையும் உடனடியாக மறைந்து விடுகின்றன. செயலில் - இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை, அதாவது மார்க்சியத்தை முற்றிலுமாக கைவிடுவது; வார்த்தையில் சொல்வதானால், முடிவற்ற சூழ்ச்சிகள், பிரச்சினையின் சாராம்சத்தைத் தட்டிக்கழிப்பதற்கான முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை மூடிமறைப்பதற்கான முயற்சிகள், பொதுவாக பொருள்முதல்வாதத்தின் இடத்தில் ஏதோவொரு பொருள்முதல்வாதம் அல்லது மற்றொன்றை வைப்பது, மற்றும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எண்ணற்ற பொருள்முதல் பிரகடனங்களை நேரடியாக பகுப்பாய்வு செய்ய தீர்மானகரமாக மறுப்பது. இது ஒரு மார்க்சியவாதி நியாயமாக கூறுவதுபோல். இது உண்மையிலேயே "மண்டியிட்டு நிற்கும் கலகம்"(“mutiny on one’s knees,”-கையாலாத கலகம்) ஆகும், இது வகைமாதிரியான மெய்யியல் திருத்தல்வாதமாகும், ஏனென்றால் திருத்தல்வாதிகள் மட்டுமே மார்க்சியத்தின் அடிப்படைக் கண்ணோட்டங்களில் இருந்து விலகிச் சென்றதன் மூலமும், தாங்கள் கைவிட்ட கண்ணோட்டங்களுடன் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும், உறுதியாகவும் மற்றும் தெளிவாகவும் "கணக்குத் தீர்க்க" அவர்களின் அச்சம் அல்லது இயலாமையின் மூலமாகவும் தமக்கென ஒரு வருந்தத்தக்க அவப்பெயரைப் பெற்றனர். மார்க்சின் சில பழங்கால கருத்துக்களுக்கு எதிராக (உதாரணமாக, மேஹ்ரிங் சில வரலாற்று முன்மொழிவுகளை எதிர்த்தபோது) பழைய மார்க்சியவாதிகள் உச்சரிக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, அது எப்போதும் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் செய்யப்பட்டது, அத்தகைய இலக்கியக் கூற்றுகளில் தெளிவற்ற எதையும் யாரும் ஒருபோதும் கண்டதில்லை.
மற்றபடி, மார்க்சிய மெய்யியல் ஆய்வுகளில் உண்மையை ஒத்த ஒரு சொற்றொடர் உள்ளது. இது லூனாசார்ஸ்கியின் சொற்றொடர்: "ஒருவேளை நாம் [அதாவது, ஆய்வுகளில் பங்குபெற்ற எல்லோரும்] வழிதவறிவிட்டோம், ஆனால் நாங்கள் தேடுகிறோம்" (பக். 161). இந்தச் சொற்றொடரின் முதல் பாதியில் முழுமையான உண்மையும், இரண்டாவது பாதி ஒப்பீட்டு உண்மையும் அடங்கியுள்ளன என்பதை இந்நூலில் சூழ்நிலைக்கு ஏற்ப விளக்க முயல்கிறேன். நமது தத்துவவாதிகள் மார்க்சியத்தின் பெயரால் பேசாமல் ஒரு சில "தேடும்" மார்க்சியவாதிகளின் பெயரில் பேசியிருந்தால், அவர்கள் தங்களின் மீதும் மார்க்சியத்தின் மீதும் அதிக மரியாதை காட்டியிருப்பார்கள் என்பதை மட்டுமே இந்த நேரத்தில் நான் குறிப்பிடுவேன்.
என்னைப் பொறுத்தவரை நானும் தத்துவத் துறையில் ஒரு "தேடுபவன்"தான். அதாவது, இந்த விளக்கங்களில் நான் எனக்கு ஏற்படுத்திக் கொண்ட வேலை என்னவென்றால், மார்க்சியப் போர்வையில் இந்த நம்பமுடியாத அளவிற்கு குழப்பமான, தெளிவற்ற, பிற்போக்குத்தனமான ஒன்றை முன்வைக்கும் இவர்களுக்கு எது முட்டுக்கட்டையாக இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஆகும். - விளாடிமிர் லெனின். செப்டம்பர் 1908.
ஒரு விரிவுரையாளரிடம் பத்து கேள்விகள் தலைப்பின் முன்னுரை (இந்த நூலில் பக்கம் 25-27).
நமது விமர்சகர் துளியும் புரிந்துக் கொள்ளாமல் தான்தோன்றிதனமாக புதிய விளக்கத்தையும் விமர்சனத்தையும் முன் வைத்து தன் அறியாமையை அல்லது மார்க்சிய விரோத போக்கை பதிவு செய்துள்ளார் என்பதனை இங்கே பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதனை தேரிவிதுக் கொள்கிறோம்.
இந்நூலின் பக்கம் 79-81 வாசிக்கையில், “பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகியவற்றின் கலவை(பக்-80) இதனைதான் எங்கெல்ஸ்”ஒரு பிச்சைகாரன் எடுத்த வாந்தி” (பக்-81) என்று பொருள்முதல்வாதம் ஆன்மீகவாதம்... இடையிலான ஊசலாட்டம் மிக்க குழப்பம் ஆகும் என்கிறார் லெனின்(பக்-81). ஆக நமது விமர்சகர் ஏனோ இந்த விரோதிகளை அம்பலப்படுத்துவதை விடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதனையும் இதனை பிரசூரம் செய்தவர்களிடம் விட்டுவிடுகிறோம். தொடரும்...

No comments:
Post a Comment