லெனினியக் கண்ணோட்டத்தில் ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்வோம்.-தேன்மொழி
1916ஆம் ஆண்டு ஏகாதிபத்தியம் பற்றி ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலை லெனின் எழுதினார்.முதலாளித்துவவளர்ச்சியில் மிகவும் உயர்ந்த ஒரு கட்டம்தான் ஏகாதிபத்தியம் என்ற உண்மையை தகுந்த ஆதாரங்களுடன் லெனின் நிறுவினார். சமூக வளர்ச்சியில் ஏகாதிபத்திய கால கட்டத்திற்குப் பிறகு சோசலிசக் கட்டமாகத்தான் சமூகம் மாறும் என்றும் அதற்கு இடையில் வேறு எந்தவொரு கட்டமும் இல்லை என்றும் லெனின் விளக்கியுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனாவில் புரட்சிகள் நடந்து அங்கு சோசலிச சமூகம் உருவானது. அங்கு உருவான சோசலிசமும் வீழ்த்தப்பட்டது. அங்கு முதலாளிகளின் ஆட்சி வீழ்த்தப் பட்டாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் வீழ்த்தப்படவில்லை. முதலாளித்துவ கருத்துக்களின் செல்வாக்கிலிருந்து மக்கள் முழு மையாகவிடுவிக்கப்படாத நிலையில், சோசலிசத்தை கட்டியமைப் பதற்குமுன்அனுபவங்கள்இல்லாததாலும் அங்கு சோசலிசம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் மீட்க்கப்பட்டது. ஆகவே தற்போது உலகில் எங்கும் சோசலிச ஆட்சிஇல்லை. ஆகவே உலகெங்கிலும் ஏகாதிபத்திய முதலாளிகளின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஏகாதிபத் தியங்களின் ஆட்சியை வீழ்த்தி சோசலிச ஆட்சியைப் படைப்பதுதான் உலகம்முழுவதிலுமுள்ளகம்யூனிஸ்டுகளின் கடமையாக உள்ளது. அந்த லட்சியத்தை கம்யூனிஸ்டுகள் அடைய வேண்டுமானால் ஏகாதிபத்தியம் பற்றி லெனின் சொன்ன கருத்துக்களை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஏகாதிபத்தியம் பற்றிய கருத்துக்களை லெனின் முன்வைத்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டபடியாலும், இந்த நூறு ஆண்டுகளில் ஏகாதிபத்தியமானது பல்வேறுமாறுதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், ஆகவே இன்றைய சூழலுக்கு ஏகாதிபத்தியம் பற்றி லெனினால் வகுத்துக் கொடுத்த கோட்பாடுகள் பொருந்தாது என்றும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை முழுமையாக சிலர் மறுக்கிறார்கள்.
இரண்டாவது வகையினர், ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் இன்றும் பொருந்தும் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கருத்துக்களை திருத்தி லெனினுக்கு எதிரான கொள்கைகளை லெனினது கொள்கைபோல்சித்தரித்து லெனினியக் கொள்கைகளை நரித்தந்திரமாக மறுக்கிறார் கள். லெனினைத் திருத்தும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக்கொள்கைகளைஆதரிப்பதாக நடித்து லெனினியவாதிகளை இவர்கள் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள்.
மூன்றாவதுபிரிவினர்தாம்ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை உள்ளதுஉள்ளபடி பார்த்து தெளிவாக புரிந்துகொண்டு அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கும்நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கொள்கைகளை உண்மையிலேயே லெனினுக்கு விசுவாசமாகப் பயன் படுத்துகிறார்கள்.
ஆகவே ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கொள்கைகளை அறிய ஏகாதிபத்தியம் பற்றி லெனின் எழுதியவற்றை படித்து நமக்கிடையே விவாதித்து தெளிவான முடிவிற்கு வருவது இன்றைய காலத்தில் அவசியமான பணிகளில் ஒன்றாகும். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை மறுப்பவர்களும், லெனினை திருத்தி ஏமாற்று பவர்களும் உழைக்கும் மக்களின் எதிரிகள்தாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள இந்த படிப்பு மிகவும் அவசியமாகும்.
அதற்கான அறிமுகமாகவே இந்த கட்டுரையை இலக்கு கொண்டு வருகிறது. "ஏகாதிபத்தியக் காலகட்டம் சோசலிசப் புரட்சியின் தறுவாயாகும்" என்றார் லெனின்.
அதாவது ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்கள், பாட்டாளி வர்க்கமும் மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு சோசலிசப் புரட்சியை நடத்துவதைத் தவிர தங்களது விமோசனத்திற்கு வேறு வழியில்லை என்று உணர்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இந்தசூழலை நன்கு உணர்ந்த கம்யூனிஸ்டுகள் அதனை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்று மக்களைத் திரட்டி சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கு பாடுபட வேண்டும். இவ்வாறு கம்யூனிஸ்டு கள் மக்களைத் திரட்டி போராடுவதன் மூலம் மட்டுமே சமூகம் சோசலிச சமூகமாக மாறும் என்றே லெனின் கூறுகிறார்.
"சமூக தேசிய வெறியானது (சொல்லில் சோசலிசமும், செயலில் தேசிய வெறியும்) சோசலிசத்திற்கு அறவே துரோகமிழைத்து முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்புக்கு முழுமையாகத் துறந்தோடி விடுவதாகும்" என்றார் லெனின். ஏகாதிபத்தியக் காலகட்டமானது சோசலிசத்தின் அவசியத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கும் அதே வேளையில் சோசலிசத்துக்கு அறவே துரோக மிழைக்கும் அரசியல் சக்திகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை லெனின் இங்கே நமக்கு நினைவூட்டுகிறார்.. முரண்பாடு அனைத்தும் தழுவியது என்ற பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இங்கே இரண்டு எதிர்எதிரான சூழல்கள் ஏற்படுகிறது என்று லெனின் நமக்கு விளக்குகிறார்.
இந்த இரண்டு எதிர்மறைகளுக்கு இடையிலான போராட்டத்தில் சோசலிசத் திற்காகப் போராட விரும்பும் சக்திகள் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கே சோசலிசப் புரட்சி நடக்கும். ஆகவே நாம் இந்த எதிர்மறைகளில் சோசலிசத்திற்காக போராடும் சக்திகளையும், அதற்கான கொள்கைகளையும் அடையாளம் காணவேண்டும். அதற்கு நமக்கு லெனின் மட்டுமே வழிகாட்டுகிறார்.
தொழிலாளி வர்க்கத்திற்காக, சோசலிசத்திற்காகப் பாடுபடுபவர்கள் ஒருபுறமும்,தொழிலாளிவர்க்கத்திற்கும், சோசலிசத்திற்கும் துரோகம் செய்து எதிரியாகமாறி முதலாளிகளுக்காகப் பாடுபடுபவர் களும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயே இரண்டு பிரிவாக பிளவுண்டு இருப்பதற்கு காரணமே இந்த ஏகாதிபத்திய முதலாளிகள்தான் என்று லெனின் கூறினார்.
தொழிலாளி வர்க்க இயக்கம் பல பிரிவுகளாக பிளவுண்டு இருப்பதற்கு இந்த ஏகாதிபத்தியம்தான் முக்கியமான காரணம் என்பதை இப்போதும் கம்யூனிச அமைப்பின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே ஏகாதிபத்தியத்தைப்பற்றி புரிந்து கொள்வதும் அதன் சதிச் செயல்களை புரிந்துகொண்டு உழைக்கும் மக்களிடம் அம்பலப் படுத்தி உழைக்கும் மக்களை எச்சரித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
ஏகாதிபத்திய காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பிற பின்தங்கிய நாடுகளின் மீது போர் தொடுத்து அந்த நாடுகளை கைப்பற்றுவது நடந்தது. அத்தகைய பிரதேசங்களை கைப்பற்றுதலை முதலாளிகளின் தரப்புக்கு ஓடிவிட்ட சில கம்யூனிஸ்டுகள் (போலி கம்யூனிஸ்டுகள்) வெட்க்கமில்லாமல் மூடிமறைத்து பல பொய்களைச் சொன்னார்கள்.
தற்போதும் ஏகாதிபத்திய நாடுகள் பின்தங்கிய நாடுகளின் மீது வெளிப்படையாக பொருளாதார ஆதிக்கத்தையும் இராணுவ ஆதிக்கத் தையும் செய்து வருகிறார்கள். மேலும் மறைமுகமாக அரசியல் ஆதிக்கம், இரகசியமானஒப்பந்தங்கள் போடுவதன் மூலம் செய்து வருகிறார்கள். இவர்களால் போடப்படும் மூலதனத் தின் மூலம் நாடு தொழில்துறையில் முன்னேறும் என்ற பொய்யைச் சொல்லி ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தை மூடிமறைக்கும் போலி கம்யூனிஸ்டுகளை இப்போதும் நாம் பார்க்கலாம். அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையை,அதாவதுஏகாதிபத்தியத்தின் பொருளாதாரசாராம்சத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக லெனினால் எழுதப்பட்ட நூல்தான் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலாகும். எனினும் பொருளாதாரத்திற்கு தொடர்பான அரசியல், இராணுவம் போர் போன்ற பிரச்சனைகளையும் அந்த நூலில் லெனின் அலசி ஆராய்கிறார். இந்தப் பிரச்சனைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், தற்கால யுத்தங்களை யும், தற்கால அரசியலை யும் நாம் புரிந்துகொள்ளவும் முடியாது, மதிப்பீடு செய்யவும்முடியாது என்று லெனின் விளக்கியுள்ளார். ஆகவே இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை நாம் புரிந்துகொண்டு, மதிப்பீடு செய்து நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்து செயல்பட வேண்டு மானால் ஏகாதிபத்தியம் பற்றிய லெனிய கோட்பாடுகளை படித்து உள்வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். மறுக்கமுடியாத முதலாளித்துவ புள்ளிவிவரச் சுருக்கத் தொகுப்புகளையும், எல்லா நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ அறிஞர் களாலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அதாவது முதல் உலக ஏகாதிபத்திய யுத்தத்தின் தறுவாயில், உலக முதலாளித்துவ அமைப்பை அதன் சர்வதேச உறவு முறைகளில் காட்டும் ஒரு தொகுப்புச் சித்திரத்தை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் வகுத்தளித்தார்.
இப்போதும் 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய முதலாளிகள் அவர்களின் அடிப்படை பண்புகளை மாற்றிக் கொள்ளவில்லை. மேலும் கொடூரமான முறையிலான ஆட்சிக்கு அதாவது பாசிசத்தை கட்டியமைக்கும் முறைக்குத் தான் மாறி இருக்கிறார் கள். அவர்களின் பொருளாதார நிலைமைகளும் அளவு ரீதியாக பிரமாண்டமாக வளர்ந்திருக் கிறார்கள் என்பதை முதலாளித்துவ புள்ளி விவரங்களிலிருந்து லெனின் செய்தது போல் ஆய்வு செய்து இப்போதும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினது கோட்பாடுகள் பொருந்தும் என்பதை நாம் நிருபிக்க வேண்டியது நமது கடமையாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாட்டை அவர்கள் எப்படி கையாளு கின்றார்கள் என்பது பற்றிய ஆய்வு முதன்மையாகும். அதனை தெரிந்துகொள்வதன் மூலமே நமது போர்த்தந்திர திட்டத்தை நாம் வகுக்க முடியும்.
உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய மற்றும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சியாளர்களின் அநியாங்களை எதிர்த்துப் போராடும் உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டு களையும்கைதுசெய்வதும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த மறுத்து ஒடுக்குவதும்,எஞ்சியிருக்கும் அற்ப சொற்ப சட்டப்பூர்வ வாய்ப்புகளை மறுப்பதும் சமூக - அமைதிவாதிகளது கருத்தோட்டங் களும் "உலக ஜனநாயகம்" பற்றிய நம்பிக்கைகளும் இந்த ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் பொய்யா கிவிட்டது என்கிறார் லெனின்.
லெனினது கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்பு ஆட்சிக்கு வந்தவர்களின் கடந்தகால ஆட்சியின் நடைமுறையை நாம் பார்த்தே புரிந்துகொள்ளலாம். தற்போதைய மோடியின் ஆட்சி தெளிவாகவே இங்கே பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையைப் பார்க்கலாம்.
ஏகாதிபத்தியம் என்றாலே ஜனநாயக மறுப்புதான் என்ற லெனினது கோட்பாடு இன்றும் உண்மையாக இருப்பதை நாம் காணலாம். ஆகவே மக்களின் ஜனநாயக உரிமை களுக்காகப் பாடுபடுவது நமது கடமையாகும். 1914-1918 ஆம் ஆண்டுகளது முதல் உலக யுத்தமானது, ஏகாதிபத்தியவாதிகளது இருபிரிவின ருக்கு இடையில், பிரதேச கைப்பற்றல் களுக்கும்,சூரையாடலுக்குமானகொள்ளைக்கார யுத்தமாகும். அதாவது உலகைப்பாகப்பிரிவினை செய்து கொள்வதற்கும்,காலனிகள், நிதிமூல தனத்தின் "செல்வாக்கு மண்டலங்கள்" முதலியவற்றைப்பங்கீடும் மறுபங்கீடும் செய்துகொள்வதற்கான யுத்தமாகும் என்றார் லெனின். அதேபோலவே இரண்டாவது உலக யுத்தமும் உலகை மறுபங்கீடு செய்துகொள்வதற்கான யுத்தமாகவேநடத்தப்பட்டது. முதல் உலக யுத்தத்தின் விளைவாக ரஷ்யாவில் மக்கள் புரட்சி நடத்தி சோசலிச சோவியத்து அரசு உருவானது. இரண்டாவது உலக யுத்தத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டு களின் ஆட்சிகள் உருவானது, சீனாவிலும் கம்யூனிஸ்டுகளின்ஆட்சி உருவானது. இந்த அனுபவங்களை தொகுத்த ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்கு இடையில் போர் நடத்தக்கூடாது என்று முடிவெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். ஆனாலும் அவர்களது புதிய காலனிய நாடுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டுபோர்நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக இந்தியா- பாக்கிஸ்தான் போர், மற்றும்இந்தியா- சீனப் போர், மற்றும் ஈரான்- ஈராக் போர் போன்றவரற்றை நடத்தினார்கள். பின்புஏகாதிபத்தியவாதிகளின்கூட்டமைப்பான நேட்டோ நாடுகள் ஆப்கான் மற்றும் ஈராக்கின் மீது போர் தொடுத்தார்கள். அப்போதும் ஈராக்கை காப்பற்றுவோம் என்று சொல்லி நேட்டோவுக்குஎதிரானஏகாதிபத்தியமான ரஷ்ய ஏகாதிபத்தியமானது நேட்டோவுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. இங்கே இரண்டு ஏகாதிபத்தியமுகாம்களுக்கு இடையில் போர்நடக்கவில்லை எனினும் செல்வாக்கு மண்டலங்களுகான போரை நேட்டோ நாடுகள் நடத்தி ஆப்கானையும், ஈராக்கையும் கைப்பற்றி அங்கே அவர்களது பொம்மை ஆட்சியை நிறுவி புதியகாலனி ஆதிக்கம் செய்தனர். இன்றும் ஏகாதிபத்தியவாதிகள் செல்வாக்கு மண்டலங்களுக்காக போர்களை நடத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாகவே இந்தப் போர்கள் நடைபெற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.தற்போதும் ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகள் உக்ரேன் மீது போர் தொடுத்துள்ளார்கள். நேட்டோநாடுகள் உக்ரேனுக்கு உதவிகள் செய்வதன் மூலம் ரஷ்யாவை தாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும், ரஷ்யர்களின் பாதுகாப்பு கருதி உக்ரேன் அரசானது நேட்டோவுடனான உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகள் உக்ரேன் மீது போர் நடத்துகிறோம் என்று அவர்கள் நடத்தும் போரை நியாயப்படுத்துகிறார்கள். உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு போர் நடத்துகிறது என்றும் ஆகவே ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரேனியர்களுக்கு ஆயுத உதவி செய்வதை நேட்டோ நாடுகள் நியாயப் படுத்துகின்றனர். எனினும் இரண்டு ஏகாதிபத்திய முகாமும் நேருக்கு நேர் போர் நடத்த தயாரில்லை. அதே வேளையில் உக்ரேனை தங்களது செல்வாக்கின் கீழ் கொண்டுவரவதற்கான முயற்சியையும் இவர்கள் கைவிடவில்லை.பாலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு போரின் இவர்களின் நிலைபாட்டை புரிந்துக் கொள்ளவுதவும்.
இந்த சூழலை மதிப்பீடு செய்து கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களில் ஒரு பிரிவினர் ரஷ்யர்களின் பக்கத்தில் நியாயம் இருப்பதாக கருதி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தலைமை யிலான நேட்டோவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லி ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவை தெரிவிக்கிறார்கள். மற்றொரு பிரிவினர் ரஷ்ய ஏகாதிபத்திய வாதிகள்தான் உக்ரேனை ஆக்கிரமித்து போர் நடத்துகிறார்கள் என்றும் அதனால் உக்ரேன் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஆகவே ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரை நிறுத்த வேண்டியதுதான் உடனடிக் கடமை என்று ரஷ்ய ஏகாதிபத்தியமே போரை உடனடியாக நிறுத்து என்று முழங்குகிறார்கள். அதே வேளையில் நேட்டோ அமைப்பை கலைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இவ்விரு பிரிவினரும் உக்ரேன் அரசைப் பற்றி விளக்கவில்லை. மேலும் உக்ரேன் மக்கள் என்ன செய்ய வேண்டும், ரஷ்ய மற்றும் அமெரிக்கா, நேட்டோ நாட்டு மக்கள் என்னசெய்ய வேண்டும் என்பதற்கான கல்வி போதனைகளில் இவர்கள் ஈடுபடவில்லை. ஏதோ இவர்கள் ஒரு பலம்வாய்ந்த கட்சியை கட்டிவிட்டது போலும் செயல்தந்திர முழக்கத்தை முன்வைத்து மக்களை செயலுக்கு கொண்டுவர முடியும் என்பது போலவும் செயல்தந்திர முழக்கத்தை முன் வைக்கிறார்கள். தற்போது கொள்கையை உருவாக்கும் நிலையில்தான் கம்யூனிஸ் டுகள் இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை இவர்கள் காண மறுக்கிறார்கள். உக்ரேன் அரசு அந்த நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவா போரிடுகிறது? இல்லை, உக்ரேனிய முதலாளித்துவ அரசானது நேட்டோ நாடுகளின் ஆதிக்கத்திற்காக ரஷ்ய ஆதிக்கத்திற்கு எதிராக போராடுகிறது. ஆனால் உக்ரேனிய மக்களுக்குத் தேவையான அரசு எது? எந்த ஏகாதிபத்தியத்தையும் அடிமைத்தனமாக சாராமல், அனைத்து நாடுகளுடனும் சம அந்தஸ்தோடு உறவு வைத்துக் கொள்ளும் ஒரு சுதந்திரமான அரசுதான் உக்ரேன் மக்களுக்குத் தேவை அதற்குஉக்ரேன் மக்கள் புதிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராட வேண்டும். அதேபோல் ஏகாதிபத்திய நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா, மற்றும் நேட்டோ நாடுகளைச் சேர்ந்த மக்கள் சொந்தநாட்டு ஏகாதிபத்திய அரசுகள் எந்தவொரு நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று முழக்கமிட்டு அவர்களது நாட்டு அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
யுத்தத்தின் உண்மையான சமூக, அல்லது துல்லியமாகச் சொல்வ தெனில், மெய்யான வர்க்கஇயல்பின் நிரூபனமானது, யுத்தத்தின் ராஜதந்திர வரலாற்றில் அல்ல, போரிட்ட எல்லாநாடுகளிலும் ஆளும் வர்க்கங்களது எதார்த்த நிலையின் பகுத்தாய்வில்தான் இயற்கையாகவே காணக்கிடக்கிறது. இந்த எதார்த்த நிலையை சித்தரிப்பதற்கு உதாரணங் களையோ, தனிப்பட்ட புள்ளி விவரங்களையோ எடுத்துக்கொள்ளக் கூடாது. (சமூக வாழ்வின் நிகழ்வுகள் மிதமிஞ்சி சிக்கல் வாய்ந்தனவாய் இருப்பதன் காரணமாக உதாரணங் களையோ தனிப்பட்ட புள்ளி விவரங்களையோ எத்தனை வேண்டுமானாலும் தேர்வு செய்து எந்த வரையறுப்பையும் நிரூபிப்பது எப்போதும் சாத்தியமே); போரிட்ட எல்லா நாடுகளின், அனைத்து உலகின் பொருளாதாரவாழ்வினதுஅடிப்படைகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங் களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார் லெனின். யுத்தத்தை நடத்தும் நாடுகளின் ஆட்சியாளர்களின் ராஜதந்திரநடவடிக்கையைவைத்துஅவர்களின் வர்க்க இயல்பை நாம் எடை போடக்கூடாது என்கிறார் லெனின். இதற்கு மாறாகஅவர்களின் எதார்த்த நிலைகளை நாம் பகுத்தாய்வு செய்துதான் முடிவுக்கு வரவேண்டும் ஏனென்றால் சமூக வாழ்வானது மிகவும் சிக்கல்வாய்ந்ததாக இருப்பதால் எந்த ஒரு உதாரணத்தை வைத்தோ, தனிப்பட்ட புள்ளி விவரங்களை வைத்தோ நாம் பல்வேறான முடிவுகளுக்கு வர இயலும். ஆகவே எல்லா நாடுகளின் மற்றும் உலகின் பொருளாதார வாழ்வின் அடிப்படைகள்சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக்கொண்டு நாம் ஆய்வு செய்து நாம்முடிவிற்கு வரவேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும். இதனை நாம் சாதிப்பதற்கு கம்யூனிஸ்டு கட்சியானது பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கும், அதனை ஆய்வு செய்து முடிவுகளை கட்சிக்கு கொடுப்பதற்கும் கம்யூனிசத்தின் மீது பற்றுகொண்ட பொருளாதார வல்லுனர்கள் குழுவை உருவாக்க வேண்டும். லெனின் காலத்தில் இந்த ஆய்வை லெனின் செய்தார், ஆனால் தற்போது இந்தப் பணியை செய்வதற்கு ஒரு குழு தேவைப்படுகிறது. கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் பத்திரிக்கைக்கு ஒரு ஆசிரியர் குழு இருப்பதைப் போல பொருளாதாரத்தை ஆய்வு செய்வதற்கு நமக்கு ஒரு குழு தேவையாகும்.ரயில் பாதைகள்தான் நிலக்கரி, இரும்பு, எஃகு ஆகிய மிக முக்கிய முதலாளித்துவ தொழில்களின் ஒட்டுமொத்தமாகும்;உலகவாணிபத்தின், முதலாளித்துவ ஜனநாயக நாகரித்தின் வளர்ச்சி யானது ஒட்டுமொத்தமும் மிகவும் எடுப்பானகுறியீடுமாகும்; ரயில் பாதைகள் பெருந்தொழில்களுடனும் ஏகபோகங் களுடனும் சிண்டிகேட்டு களுடனும் கார்ட்டல்களுடனும் டிரஸ்டுகளுடனும் நிதியாதிக்க கும்பல்களுடனும் எவ்வாறு இணைப்பு கொண்டுள்ளது என்பதை ஏகாதிபத் தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் லெனின் விளக்கியுள்ளார். ரயில் பாதைகளின் ஏற்றத்தாழ்வான விநியோகம், அவற்றின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி - இது உலகு தழுவிய அளவில் தற்கால ஏகபோக முதலாளித்துவத்தின் தொகுப்புரையாக அமைகிறது எனலாம்.
இத்தகைய பொருளாதார அமைப்பில், உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடமை நீடிக்கும்வரைஏகாதிபத்திய யுத்தங்கள் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாதவை என்று லெனின் சொன்னார்.
ரயில் பாதைகளின் வளர்ச்சி மற்றும் நிலக்கரி, இரும்பு, எஃகு தொழில்கள், உலக வாணிபம்,ஆகிய அனைத்தும் சேர்ந்து முதலாளித்துவ - ஜனநாயக நாகரீகத்தின் குறியீடாக கருதப்ப டுகிறது.ரயில் பாதையானது ஏகபோக நிறுவனங்களோடு இணைக்கப்பட்டு அவர்களது வாணிபத்திற்குசேவை செய்கிறது. இதன் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியானது ஏகாதிபத்தியத்தின் விதியாகஇருக்கிறது. இத்தகைய பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடமை நீடிக்கும்வரை ஏகாதிபத்திய முதலாளிகளால் யுத்தம் நடத்துவதை தவிர்க்க முடியாது என்பதே யுத்தங்கள் பற்றிய லெனினியக் கருத்தாகும். இன்றும் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கே முதன்மையாக சேவை செய்வதை நாம் காணலாம். யுத்தங்கள் நவீனமயமாகி யிருப்பதற்கும் அதனால் மக்களுக்கு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்து வதற்கும் இந்த ஏகாதிபத்திய முதலாளிகளே காரணமாகும். இந்த ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மக்களின் மீது அக்கரை ஏதும் இல்லை. மக்களில் எவ்வளவு பேர் செத்தாலும் இவர்களுக்குகவலை இல்லை, இவர்களது லட்சியமே மேலும் மேலும் சொத்துக்களை பெருக்குவது தவிர வேறு ஏதும் இல்லை.ஆகவே இந்த ஏகாதிபத்திய முதலாளிகளை வீழ்த்தி உழைக்கும் மக்களுக்கான அரசை படைக்கும்வரை உலகில் போர்கள் இல்லாத சமாதானத்தை நாம் படைக்க முடியாது. இதுதான் ஏகாதிபத்திய காலகட்டம் பற்றிய லெனினது வழிகாட்டலாகும்.
ரயில் பாதைகள் போடுவது ஒரு சாதரணமான, இயற்கையான, ஜனநாயக, கலாச்சார நாகரிக வளர்ச்சிக்குரிய முயற்சியாகவே தோன்றுகிறது; முதலாளித்துவ அடிமை வாழ்வைக்கவர்ச்சியானவண்ணங்களில் தீட்டிக் காட்டுவதற்காகக் காசு கொடுத்து அமர்த்தப்பட்டிருக்கும் முதலாளித்துவப் பேராசிரியர்களின் கருத்துப்படியும், குட்டி முதலாளித்துவ அற்பர்களின் கருத்துப் படியும் அது இவ்வாறேதான் இருக்கிறது. ஆனால் உண்மையில், ஆயிரக்கணக்கான வெவ்வேறு குறுக்குப் பின்னல்களைக் கொண்டு உற்பத்திச் சாதனங்களிலான தனியார் உடமையுடன் இந்த முயற்சி களைப் பிணைத்துக் காட்டுகின்ற முதலாளித்துவஇழைகள், ஆயிரம்கோடி மக்களை (காலனிகளிலும், அரைக் காலனிகளிலும்)அதாவது ஏகாதிபத்திய சார்பு நாடுகளில் வாழும்பாதிக்கும் மேற்பட்ட உலக மக்கள் தொகையினரையும் "நாகரீக" நாடுகளில் கூலி அடிமைகளாக இருப்போரையும் நசுக்குவதற்கான கருவியாக ரயில் பாதை நிர்மானத்தை மாற்றிவிட்டனஎன்றார்லெனின். லெனினது கண்ணோட்டத்திலிருந்து தற்போதைய ரயில் பாதைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது கணினி தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை நாகரீக சமூகத்தை வளர்ப்பதற்கான முயற்சிகள் போல் தோன்றுகிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்சிகளை எல்லாம் சமூகத்தின் வளர்ச்சியாக, முதலாளிகளிடம் காசுக்கு விலைபோன முதலாளித்துவப் பேராசிரியர் களும், குட்டிமுதலாளித்துவ அற்ப்பர்களும், கம்யூனிச அமைப்பிற்குள் ஊடுருவி ஏகாதிபத்திய முதலாளிகளிடம் விலை போன குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாதிகளும் ஏகாதிபத்தி யத்திற்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி ஏகாதிபத்தியமானது முற்போக்கானது என்று காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பயனடைந் தவர்கள் இந்த ஏகாதிபத்திய முதலாளிகளும் அவர்களை சார்ந்து வாழ்பவர்களுமாகிய மிகச் சிலர்தான் பயனடைந்தார்கள். இந்த வளர்ச்சியால் பெரும்பான்மைமக்களுக்குஎவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. மாறாக பெரும்பான்மையான மக்கள் வேலை யின்றி வாழ வழியின்றி வறுமை யிலும்பட்டினியாலும்செத்துக்கொண்டுஇருக்கின்றனர். இந்த ஏகாதிபத்திய முதலாளி களால் பல வகைகளிலும் முதலாளித்துவ தனிவுடமை முறையானது இணைக்கப் பட்டு உலகம் முழுவதிலும் இவர்களின் கட்டுப்பாட்டிலும், இவர்களுக்குச் சொந்தமாக உள்ள ஏராளமான உற்பத்திச் சாதனங்கள் என்று சொல்லப்படும்தொழில்நிறுவனங்களின் மூலம் உலகம் முழுவதிலும் காலனி, (தற்போது புதிய காலனிய) நாடுகளிலுள்ள கோடிக் கணக்கான மக்களை சுரண்டி அவர்களின் வாழ்வை நசுக்கிக்கொண்டு இருக்கிறார் கள். மேலும் இவர்களது நாடுகளிலுள்ள பல கோடிக்கனக்கான கூலி அடிமைகளின் வாழ்வையும் நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இத்தகையமுதலாளிகள்முற்போக்கானவர் களா? இல்லை இவர்கள் மிகவும் பிற்போக்கானவர்களே என்பது எதார்த்த உண்மையாகும். இவர்களை முற்போக்கு என்று கூறுபவர்கள் உண்மை யில் லெனினது மொழியில் சொல்லவேண்டுமானால்,முதலாளிகளிடம் காசுக்கு விலைபோன முதலாளித்துவப் பேராசிரியர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அற்பர்கள் ஆவார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இந்தகைய முதலாளித்துவ பேராசிரியர் களிடமும், குட்டிமுதலாளித்துவ அற்பர் களிடமும் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். சிறுவுடமையாளர் களது உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனியார் உடமை, தடையில்லாப் போட்டி, ஜனநாயகம் - தொழிலாளிகளையும்விவசாயிகளையும் ஏமாற்றுவதற்காக முதலாளிகளும் அவர்களது பத்திரிக்கைகளும் கையாளு கின்ற இந்தக் கவர்ச்சித் தொடர்கள்எல்லாம் மிகப் பழங்காலத் துக்குரியவை ஆகிவிட்டன. உலகில் மிகப் பெரும் பகுதி மக்களைஒருசில "முன்னேறிய" நாடுகள் காலனி ஆதிக்க ஒடுக்குமுறைக்கும் நிதித்துறை நசுக்கலுக்கும்உள்ளாக்கும் உலக அமைப்பாக முதலாளித்துவம் வளர்ந்து விட்டது. இந்தக் "கொள்ளையை "அங்கம் அனைத்தும் ஆயுதம் தரித்த வலுமிக்க இரண்டு அல்லது மூன்று கொள்ளைக்காரர்கள்(அமெரிக்கா,கிரேட் பிரிட்டன், ஜப்பான்) தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்; இவர்கள் தமது கொள்ளையைப் பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக நடத்தும் தமது யுத்தத்தினுள் அனைத்து உலகையும் இழுத்துவிடுகிறார்கள். என்றார் லெனின்.
ஆரம்பகால முதலாளித்துவ அமைப்பை அதாவது தடையில்லாப் போட்டி, ஜனநாயகம் என்பதைப் பற்றி முதலாளித்துவவாதிகள் அவர்களது பத்திரிக்கைகளின் மூலம் கவர்ச்சியாக விளம்பரம் செய்த காலம் எல்லாம் கடந்துபோய்விட்டது. லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஒருசில முன்னேறிய நாடுகள் பின்தங்கிய நாடுகளை அடிமைப்படுத்தி காலனிகளாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் நிலை உலகில் ஏற்பட்டுவிட்டது, இதற்காக முன்னேறிய நாடுகள் நடத்தும் போரினால் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். லெனின் காலத்திலிருந்த இந்த நிலையானது தற்போது வளர்ந்து மிகவும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது. முன்னேறிய நாட்டு அரசுகள் முன்புபோல் பின்தங்கிய நாடுகளை கைப்பற்றி நேரடியாக ஆளவில்லை, என்றாலும் பின்தங்கிய நாடுகளில் தங்களுக்கு வேண்டியவர்களை பொம்மைகளாக வைத்துமறைமுகமாக ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு தங்களை மறைமுகமாக இவர்கள்தான் ஆளுகின்றார்கள் என்ற உண்மையை உணரவிடாமல் தந்திரமாக, சதித்தனமாக இவர்கள் ஆட்சி செய்கிறார்கள். அதன் விளைவாக மறைமுகமானகாலனி நாடுகளில் வாழும்மக்கள் மிகவும் கொடூரமாக சுரண்டப்படுகிறார்கள். அவர்களின்வாழ்வு லெனின் காலத்தில் இருந்ததைவிட மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த ஒடுக்குமுறையை சாதிப்பதற்கு முன்னேறி நாடுகளும் அவர்களின் சார்பு நாடுகளும் ஆயுதங்களைமேலும் மேலும் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.தேசப்பற்றின்அடிப்படையில் தேசத்தைப் பாதுகாபதற்காகவே இராணுவத்தைப் பலப்படுத்துவதாக பொய்சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்…. தொடரும்….. தேன்மொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment