வர்க்க அரசியல் அறிவோம்- க.கைலாபதியிடமிருந்து

 1972-ல் வெளிவந்த கைலாசபதி அவர்களின் "அடியும் முடியும்" என்ற தமிழிலக்கிய ஆய்வு நூல் கைலாசபதி அவர்களின் ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது. சிவபெருமானின்அடியையும் முடியையும் தேடிச்சென்ற திருமாலும், பிரம்மனும் இறுதியில் தோற்று களைத்துப் போயினர் என்பது புராணக்கதை. தமிழின் மேன்மை பற்றிப் பேசிய தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை(Myth) அளந்தறிய முடியாதென்று பெருமிதம் கொண்டனர். "கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து வாளொடு முன்தோன்றி மூத்த குடி" என்று கவிதை செப்பினர். கைலாசபதி இந்தக் கூற்றை ஆய்வு செய்து "அடியும் முடியும்" என்ற தொகுப்பிலுள்ள கட்டுரையில் மறுக்கிறார்.

உயிர்களின் பரிணாம வளர்ச்சிபற்றிய அறிவியல் ஆய்வுகள் மனிதனின் தோற்றக்காலத்தை திட்பமாக வரையறை செய்துள்ளன. புவியியல் ஆய்வுகள் சூரியனில் இருந்து பிரிந்து உலகம் உருவான காலத்தையும் கணிக்கின்றன. இம்முறையில் தமிழின் தொன்மையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதுதான் என்கிறார் கைலாசபதி "அடியும் முடியும்" என்ற கட்டுரைத் தொகுப்பில் இரண்டாவது கட்டுரை தமிழ் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரை. தொடக்கத்தில்கடவுள்வாழ்த்து இடம் பெறவில்லை.சங்கஇலக்கியத்தொகுப்பில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றது. அதன் பின்னர் காலந்தோறும் புதிய கடவுள்கள் தோன்றினர். சில கடவுள்கள் மறைந்தனர். இத்தகைய இந்தக் கடவுளர்கள் நூல் முகப்பில் வாழ்த்தாக இடம்பெற்றனர். விரிவான முறையில் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றதை கைலாசபதி அவர்கள் ஆய்வு செய்கிறார். 20-ம் நூற்றாண்டை நெருங்கும்பொழுது தமிழ் மொழி கடவுளாக மதிக்கப்பட்டு வாழ்த்துச் செய்யுளாக இடம்பெற்றது. தமிழின்மீது பக்தியுணர்வு பரவியது. இடைக்காலத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களில் தெய்வம்பற்றிய ஐயம் இடம்பெற்றதையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

வடமொழிக்கும், தென்மொழிக்கும் வரலாற்றுக் காலம் முழுவதும் இருந்து வரும் பகைமையை விரிவாக எடுத்துக்காட்டுகிறார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ் வாழ்த்து பாடலில் ஆரியத்துக்கு கடுமையான எதிர்ப்பு இடம்பெற்றதை குறிப்பிடுகிறார். இந்தப்போக்கிற்கு மூலகாரணமாக டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வை குறிப்பிடுவதோடு அவர் நிற்கவில்லை. இதன் வரலாற்றை முற்காலத்திற்கும் கொண்டு செல்கிறார். பிரித்தானிய அரசின் இனக்கொள்கையைக் குறிப்பிடுகிறார். இந்தியர்களைப் பிளவுபடுத்தி தம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் இனக்கொள்கையைப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அடியும் முடியும் என்ற இந்தத் தொகுப்பு நூலில் கடவுள் ஆயினும் சரி, வேறு எத்தகைய மொழி அல்லது இலக்கியப் போக்காயினும் சரி - எல்லாமே வரலாற்றில் குறிப்பிட்ட சூழலில் தோன்றுகின்றன என்ற மார்க்சீயக் கருத்தை ஆய்வு நெறியாக முன்வைக்கிறார். அடியையும் முடியையும் வரலாற்றில்தான் தேடிக் கண்டறிய முடியும். வரலாற்றுக்கு வெளியில் வைத்து இலக்கியம் முதலிய ஆய்வைச் செய்யமுடியாது. கடவுளும், கடவுட்கருத்தும் வரலாற்றுக்குக் கட்டுப்பட்டதுதான் என்றமுறையில் இவரது ஆய்வு தொடர்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வில் வரலாற்றியல் நெறியை இம்முறையில் அழுத்தமாக இந்த நூல் மூலம் கைலாசபதி அவர்கள் பதிக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

இன்று இந்த நெறி இயல்பானதென்று தோன்றினாலும் 60-களின் இறுதியில் அல்லது 70-களின் தொடக்கத்தில் இந்த ஆய்வு நெறியின் புதுமையை அன்றிருந்தவர்கள் நன்றாக உணர்ந்திருக்க முடியும்.

"அகலிகை" கதையின் அடிமுடி ஆய்வு அடுத்த கட்டுரையில் தொடர்கிறது. வேதங்களிலேயே அகலிகை பற்றிய குறிப்பு இடம்பெற்றாலும், அகலிகை கதைக்கு ஒரு முழு வடிவம் தந்தவர் வால்மீகி தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை அகலிகை கதையை கம்பர் புதுமைப்படுத்தினார். நம் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், புதுமைப்பித்தன் முதலியவர்களும் அகலிகை கதைக்கு புதுப்பொருள் வழங்கினர். கடைசியாக முருகையன் கதையையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

கம்பர் முதலியவர்கள் அகலிகையின் உளவியலுக்கு அழுத்தந் தந்தனர் என்பதற்கு அழுத்தம் தருகிறார் கைலாசபதி, சமூகச் சூழலை கவனத்திற் கொள்ளாமல் உளவியல் போக்குக்கு அழுத்தம் தருவதிலுள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறார். இதன் காரணமாக பெண்ணின் கற்பு என்பதே படைப்பாளிகளின்பார்வையில் முதன்மை பெறுகிறது. வரலாற்றில் பெண் எவ்வாறு தன் தலைமை நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டாள் என்பதை எங்கெல்ஸின் மேற்கோள்கள் மூலம் எடுத்துரைக்கிறார் கைலாசபதி,

இதன் மூலம் தனியுடைமை, அரசு ஆகியவற்றின் இயக்கத்திற்கும் இதன் மூலம் ஆணாதிக்கம் முன்னுக்கு வந்ததையும் இத்தகையதொரு சூழலில்தான் பெண் அவளது கற்பு நெறிக்காக - கற்புநெறி தவறியவள் என்ற முறையில் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறாள். விந்தனின் 'பாலும் பாவையும் என்ற நாவலை இங்கு சிறப்பாக மேற்கோள் காட்டுகிறார் கைலாசபதி, கதைத் தலைவி கன்னிப் பருவத்தில் கற்பை இழந்தவள் என்பதற்காக அவளை காதலன் புறக்கணிக்கிறான். அகலிகை புராணக் கதையில் வருவதைப் போல இந்த நாவலிலும் ஒரு தசரத குமாரன் வருகிறான். புராணக் கதையில் அகலிகையின் சாபம் நீக்கியவன், இன்று யதார்த்த வாழ்வில் காதலனால் கைவிடப்பட்ட அகலிகையை மணந்து கொள்வானா, சாபம் நீக்கிய ராமனும் சரி, இன்றைய தசரத குமார்னும் சரி அகலிகையை மணந்து கொள்ளமாட்டான் என்று யதார்த்தக் கதை தருகிறார் விந்தன். புராணக் கதையை இவரும் புரட்டிப் போடுகிறார். முன்னைய படைப்பாளிகள் போல அகலிகை கதையை விந்தன் கையாளவில்லை. விந்தனின் படைப்பில் ஒரு புதிய கோணம் வெளிப்படுகிறது. விந்தனின் கதைத்தலைவி இறுதியில் சாவைத்தான் எதிர்கொள்கிறாள் என்றாலும் சமூகத்தின் முன்னிலையில் ஒரு அறைகூவல் போல அவள் தோற்றம் தருகிறாள். கட்டுரையை முடிக்கும்பொழுது நாம் வியப்பு அடையும் முறையில் ந. சி. கந்தையாபிள்ளையை மேற்கோள் காட்டுகிறார். பெண் போராடித்தான் சமூகத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற முறையில் கந்தையாபிள்ளை எழுதியிருக்கிறார்.

சிலப்பதிகாரம்பற்றி ஆய்வது அடுத்த கட்டுரை. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரக் கதை பெரும்பகுதி கற்பனைக்கதை. தமிழகத்தில் திராவிட இயக்கத்தவர் கொண்டாடியது போல சிலம்பு வரலாற்று நிகழ்ச்சி இல்லை. நற்றிணையில்கூறப்படும் திருமாவுண்ணி, புறநானூற்றில் பேகன் மனைவி ஆகியவர்களோடு சிலம்பின் கண்ணகி கதையை பொருத்தமாகவே தொடர்பு படுத்துகிறார். வரலாற்றுச் சூழலில் மக்களின் உணர்வு அழுத்தங்களோடு வளர்ந்த கதை சிலம்பின் கதை. சேரன் செங்குட்டுவன் வரலாற்றுப் பாத்திரமல்ல.

சிலம்பின் அடியையும், முடியையும் இவ்வாறு பழங்காலச் சூழலுக்கும், நம் காலத்திற்கும் நகர்த்துகிறார் கைலாசபதி, நிகழ்காலத்தின் தேவைகள் முற்காலத்து வரலாற்றைக் கட்டமைக்கிறது என்ற உண்மையைகைலாசபதி மறுக்கவில்லை. எனினும் நம்காலத்திற்குத் தேவையான பொருளைசிலம்பிலிருந்துகண்டெடுப்பதை கைலாசபதி ஒப்புக்கொள்ளவில்லை. கண்ணகி செய்தபுரட்சி, மக்காளாட்சிக் காலத்தில் மட்டுமே கருத்தியல் வடிவம் கொள்ளத்தக்க புரட்சி. பழங்கால நிலைமையில் இத்தகைய புரட்சி சாத்தியமில்லை. டாக்டர் மு.. முதலி யவர்கள் இளங்கோவின் ஊழ் நம்பிக்கையை ஒதுக்கி வைத்து சிலம்பை ஆராய்கின்றனர். இளங்கோவின் படைப்பில் இன்றியமையாத அங்கம் அவரது ஊழ்கோட்பாடு. இளங்கோ விலிருந்து அவரது முக்கியக் கோட்பாடு வெளிப்பட்ட புரட்சி உணர்வையும், கைலாசபதி ஒப்புக்கொள்கிறார். அதே சமயம், இலக்கியம் என்பது பிரதிபலிப்பு என்ற மார்க்சிய கொள்கையைத்தான் வரித்துக்கொள்கிறார். இதனடிப்படையில் மக்களாட்சி யுகத்தில் வெளிப்படுவதாகிய புரட்சி உணர்வு நிலமான்ய சமூகத்தில் வெளிப்படமுடியாது என்று துணிகிறார். இலக்கியம் என்பது பிரதிபலிப்பு என்பதை நாம் மறுக்கவில்லை. பிரதிபலிப்பு என்பதினுள்ளும் இரு வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றை PASSIVE REFLECTION, ACTIVE REFLECTION கூறி இருக்கிறார். இம்முறையில் நிகழும் சூழலுக்கு எதிர்வினை என்ற முறையில் இலக்கியத்திற்கு பொருள் காணமுடியும். கண்ணகி செய்த புரட்சி என்பது அக்கால சூழலில் ஒருகற்பனை என்பதில் ஐயமில்லை. எனினும்மக்களின் உணர்வை ஆற்றலோடு வெளிப்படுத்தக் கூடிய கற்பனை, கழிந்து போன ஆதிபொதுமைச் சமூகத்தின் பொதுமை உணர்வை இளங்கோ முதலிய படைப்பாளிகள் இன்னும் தமக்கு உட்கிடையாக கொண்டிருக்கின்றனர் என்பதையும் இந்த கற்பனை வழியே நாம் புரிந்து கொள்ளமுடியும்.

ஆரிய திராவிட முரண் என்பது பழங்காலம் முதற்கொண்டு இன்றுவரை மறுக்க கூடியதாக இல்லை. இந்த சூழலில் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றி முதலிய கற்பனைகளையும் நாம் புரிந்து கொள்ளமுடியும். இந்திய தேசீயம் என்ற ஆதிக்க கருத்தியல் தமிழ் தேசீயத்தை அடக்க அல்லது ஒதுக்க நிலையில் தமிழின் தொன்மை பற்றிய பேருணர்வுகள் எழத்தான் செய்யும். இயற்பியல் ஆய்வில் அறிவியலின் செயற்பாடும், சமூகவியல் ஆய்வில் நோக்கும் ஒன்றாக இருக்கமுடியாது. எத்தகைய கறாரான அறிவியலின் கருத்தியலைவெளியேற்றிவிட முடியாது. 'அகலிகைபற்றிய ஆய்விலும், 'நந்தன் பற்றிய ஆய்விலும் படைப்பாளிகளுக்குள் அழுத்தம் பெற்றிருந்த உளவியல் பார்வையை கைலாசபதி நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார்.

உளவியல் ஆய்வுபற்றி கைலாசபதி அவர்களிடம் நாம் காண்பது எதிர்மறைப் போக்குஅரசியலுக்கும்,சமூக நோக்கிலான விமர்சனத்திற்கும் மார்க்சியர் அழுத்தம் தந்த அந்த கால சூழலில் உளவியல் நோக்கின்ஆக்கப்பண்புபுறக்கணிக்கப்பட்டது என்பது உண்மை. மெளனியை மார்க்சியர்புறக்கணிப்பதுஇக்காரணத்தினால்தான். பொதுவாக இலக்கியத்தின் தனித் தன்மையை மறுத்த நிலையில் அரசியலுக்கு மார்க்சியர் முதன்மை தந்தனர். கலைபற்றியும் அழகியல் பற்றியும் மார்க்சியரிடம் வளமான பார்வை விரிவுபெறாமல் இருந்தது.

ஆண் ஆதிக்க சமூக சூழலிலும், கம்பர் முதலிய அனைத்து படைப்பாளிகளும் அகலிகையின்பால் சார்புநிலை எடுத்தே பேசினர். கெளதமனை குற்றவாளி ஆக்கியும் சிலர் சித்திரித்தனர். படைப்பாளிகளுக்குள் ஆண் ஆதிக்கம்என்ற கூற்றும் இங்கில்லை. நந்தனைப் பொறுத்த வரையும் படைப்பாளியின் அணுகுமுறைஎதிர்நிலைக்குச்செல்லவில்லை. அகலிகையோடும், நந்தனோடும் அவர்கள் ஒத்து பேசியபொழுது அவர்களின் உளவியல், துயரம் முதலியவற்றையே வெளிப்படுத்தினர். இலக்கியப் படைப்பென்பது வரலாற்றின் முரண்பட்ட பல்வேறு சூழல்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம்எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. இப்படி எதிர்பார்ப்பது ஓர் வகையில் இலட்சிய நோக்கு. இலக்கிய ஆக்கத்தினுள் படைப்பாளிக்கு இருக்கும் பங்கைப் போலவே திறனாளிக்கும் பங்குண்டு. எத்தகைய சூழலில் இந்தப் படைப்பு தோன்றியது என்றெல்லாம் வரலாற்றுச் சூழல் மற்றும் முரண்பாடுகளை திறனாளி விளக்குவதன் மூலம்படைப்பைசெழுமைப்படுத்தமுடியும்.

மேலும் ஒன்று, அகலிகை அல்லது நந்தனின் உளவியலை அகழ்ந்து ஆழ்ந்து செல்லும்முறையில் படைப்பாளியின் இயக்கம் நடைபெறுவதை நாம் புரிந்துகொள்ள முடியும். முருகையனின் நந்தன்,தனக்குள்தானேஎரிமூட்டிக்கொண்டு, அதிலே வெந்து, பொன்போல் ஒளி பெற்று வெளிப்பட்டாரென முருகையன் புனைந்துரைக்கிறார். உண்மையில் புறச்சூழல் கடுமையாக இருக்கும்போது அகத்தினுள் ஆழ்ந்து செல்வதைத் தவிர துன்புற்ற ஒரு மனிதனுக்கு வேறு நெறியில்லை. அதே சமயம் அகத்தினுள் தொடர்ந்து ஆழ்ந்து செல்பவர் இறுதியில் புறத்தினுள் வெளிப்படுவர். அகத்தினுள் ஆழ்ந்து சென்று அங்கே பிரம்மத்தைக் கண்ட சங்கரர் அதனோடு தங்க இயலாமல் வெளிவந்து சவுந்தரிய லாகிரி பாடினார். அத்வைதத்தினுள் மூழ்கி எழுந்த விவேகானந்தர் சோசலிசத்துள் வெளிப்பட்டார். அகத்தினுள் ஆழ்ந்து சென்று பிகாசோ முதலியவர்கள்நவீனஒவியத்தின்கர்த்தாக்கள் ஆயினர். ஆகவே அகத்தினுள் செலவை மார்க்சியர் எதிர்மறை நோக்கில் காணவேண்டியதில்லை.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியர் கண்டதை ஒரு வகையில் கட்டமைப்பு என்றே பொருள்படுத்துவது பொருந்தும். எனினும், கட்டமைப்பு என்பதன் கூறுகள் விரிந்து செல்கின்றன.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்