மதமும் மனிதர்களின் வாழ்வியலும்

 உலகில் மதங்கள் என்பன மனித வாழ்வில் பாரிய தாக்கத்தினை விளைவித்து நிற்கின்றன. மனிதரின் அன்றாடவாழ்வில் பெரும் கருத்தியல் ஆதிக்கத்தினைச் சுமத்தி பழைமைவாதச் சிந்தனைக்குள் உழல வைப்பதில் நிறுவன ரீதியில் செயல்பட்டு வருகின்றன. பெரிய மதங்கள் தொட்டு சிறிய மதங்கள் வரை மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தியும், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை மறுத்துரைத்தும், முற்போக்கான சமூகக் கருத்துக்களைப் புறமொதுக்கிக் கொள்வதிலும் முன் நிற்பவையாகவே காணப்படுகின்றன. ஒரு சில மதங்களில் காணப்படும் உட்பிரிவினர் சமுதாய சார்பும், மனித நேயமும் கொண்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்க முற்பட்ட போதிலும் பெரும்பாலான மதங்கள் இவ்வுலகையும், மனிதர்களையும் கடந்து அடுத்த உலகம் பற்றியும் கடவுள் அல்லது ஆண்டவன் பற்றியுமே மீண்டும் மீண்டும் மனிதர்களுக்கு எடுத்துரைத்து நிற்கின்றன. எனவே மதங்களுக்கும் மனிதர்களுக்குமிடையிலான உறவினை வரலாற்று ரீதியில் சுருக்கமாகத்தானும் கண்டு கொள்வது தேவையாகின்றது.


மனிதகுல வரலாற்றில் மதங்கள் என்பன ஒவ்வொரு கால கட்டத்திலும் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டு நிறுவன வடிவம் பெற்றுக் கொண்டவையாகும். இன்றிருப்பது போல் ஆரம்ப காலம் தொட்டு மதங்கள் இருந்து வந்தன என்று கூறி விட முடியாது. வரலாற்றின் நீண்ட வளர்ச்சிப் போக்கில் மதங்களின் தோற்றம் வளர்ச்சியினைக் கணக்கிட்ட ஆய்வாளர்கள் ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இக்காலகட்டத்திற்குள்ளான வெவ்வேறு காலப் பிரிவுகளிலே தான் உலகின் பெரு மதங்களாகக் காணப்படும் இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் என்பன தோற்றம் பெற்று நிறுவனங்களாகிக் கொண்டன. இவற்றை விட உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் பலதரப்பட்ட சிறிய மதங்கள் தம்மளவில் நிறுவன வடிவத்துடன் இருந்து வருகின்றன. இம் மதங்களை ஆழ்ந்த பயபக்தியோடும், உயர்ந்த புனிதத் தன்மையோடும் நோக்கும் போக்கினைத் தவிர்த்து அறிவியல் அடிப்படையில் அவற்றிடையே காணப்படும் உள்ளார்ந்த தன்மைகளை உற்று நோக்கின் பல நூறு கேள்விகளை எழுப்பி சிந்திக்க வைக்கும் உட்கிடக்கைகள் அங்கே பொதிந்திருப்பதைக் காணமுடியும்.


உலகின் பெருமதங்களாயினும் சிறு மதங்களாயினும் தத்தமது தோற்றத்தின் பின் ஒன்றை ஒன்று எதிர்த்து வளர்க்கப்பட்ட வரலாற்றினைக் கொண்டதாகவே காணப்படுகிறது. இம்மதங்களின் சார்பாகவும் அதே போன்று அவற்றிடையே காணப்பட்ட உட்பிரிவுகள் சார்பாகவும் மனிதர்கள் யுத்தங்களில் ஈடுபட்டு லட்சக் கணக்கில் மடிந்துபோன வரலாற்றுச் செய்திகளும் நோக்குதற்குரியதாகும் இந்து பௌத்த மோதல், இந்து இஸ்லாமியச் சண்டை, சைவ சமணப் போர் போன்றவற்றையும்: கிறிஸ்தவ இஸ்லாமிய யுத்தம், கத்தோலிக்க புரட்டஸ்தாந்து போராட்டம், இஸ்லாமியர்களிடையே ஷியா, சுன்னி பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் யாவும் மதங்களின் பேரால் மனிதர்கள் வதையுண்ட கதைகளை கூறுபனவாகும். இவற்றிலிருந்து அறியக் கூடிய உண்மை என்னவெனில் கடவுள் மனிதர்களைப் படைத்திருந்தால் இம் மதச் சண்டைகள் ஏற்பட்டிருக்க முடியாது என்பதாகும். அவ்வாறன்றி மனிதர்கள் தத்தமது தேவைகருதிக் கடவுள்களை உருவாக்கினர் என்பதனாலேயே மதச்சண்டைகள் தொடர்கின்றன. மதங்கள் என்பன மனித ஈடேற்றத்திற்கு அன்றி மனிதர்களின் குறுகிய நோக்கங்களுக்கு (சுரண்டல், சொத்துடமை, ஆட்சிஅதிகாரம், உண்மைகளை மறைத்தல், ஏமாற்றுதல்) பயன்படும் வலிமையான கருவியாகவே அவற்றின் ஆரம்பம் தொட்டு இருந்து வந்துள்ளன என்பது தெளிவாகும்.

ஆரம்ப நிலையிலேயே இயற்கை சக்திகளையும், விலங்குகளையும் கண்டு அஞ்சி நடுங்கி அவற்றை எதிர்த்து கட்டுப்படுத்தும் வகையறியாது அம் மனிதர்கள் இருந்தனர். இயற்கைக்கு முன்னால் தாங்கள் சக்தியற்றவர்கள் என எண்ணிய மனிதர்கள் அவற்றுக்கு அஞ்சி வணங்கி நிற்கும் நிலைக்கு உள்ளானார்கள். அச்சம், இயலாமை, அறியாமை காரணமாக பஞ்சபூதங்கள் என்று கூறப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பனவற்றை மன்றாடி வணங்குவதன் மூலம் அவற்றினால் ஏற்படும் இடர்களைத் தவிர்க்கலாம் என நம்பினார்கள். அவற்றுக்குரிய சந்தர்ப்ப சூழல்கள் அவர்களது நம்பிக்கைகளை மேன் மேலும் வளரச் செய்தன. இதனால் சடங்குகள் என்பன இந்நம்பிக்கைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்ப நிலையில் அச்சத்தையும், இயலாமையையும் சைகைகள் மூலம் வெளிப்படுத்தி நின்ற மனிதர்கள் ஓசைச் சீர்உள்ள மொழியினை தம்மிடையே உருவாக்கிக் கொண்ட நிலையில் தமது நம்பிக்கைகளைச் சடங்குகளாக விரிவடையச் செய்தனர். மந்தைகள் மேய்த்தும் பின் பயிர் செய்முறை கண்டு கொண்ட போது வணங்குதல், வேண்டுதல், போற்றுதல் நன்றி தெரிவித்தல் போன்றவற்றை இயற்கையை நோக்கின சடங்குகளாக முன்னெடுத்தனர். இவையாவும் இயற்கையோடு இணைந்தவையாகக் காணப்பட்டவைகளே அன்றி கடவுள் என்னும் கருத்துக் கொண்டவை அல்ல என்பது நோக்குதற்குரியதாகும்.

இயற்கைக்கு முதன்மையும் அதனைப் போற்றும் தன்மையும் ஆதிகால நம்பிக்கைகளாகக் காணப்பட்டன. உதாரணத்திற்கு ஒன்றினைக் கூற முடியும். அன்றைய கட்டத்தில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் குழந்தைகள் பெறுவதும் எதனால் என்பதை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. சில மரங்கள் காய்த்துக் கொள்ளும் போதும், சில காலக் காற்று வீசும் போதும் பெண்கள் கர்பமடைகிறார்கள் என்றே ஆரம்பத்தில் நம்பினார்கள். ஆனால் காலவோட்டத்தில் ஆண் பெண் புணர்ச்சியின் மூலம் தான் கர்ப்பம் உண்டாகி குழந்தைகள் பிறக்கிறார்கள் என்ற இயற்கை நிகழ்வினை மனிதர்கள் அறிந்து கொண்டார்கள். எனவே மனித வாழ்வை விரிவுபடுத்தி நிற்கும் இயற்கை நிகழ்வினைப் போற்றிப் புகழ ஆரம்பித்தார்கள். ஆண் பெண் உறுப்புக்களை ஒன்றிணைத்து உருவகப்படுத்தி அதனைப் போற்றி நிற்கும் நிலைக்கு கிழக்குலகிலே வாழ்ந்து வந்த மக்கள் முக்கியத்துவம் வழங்கினர். அதனையே சிந்துவெளி நாகரீக காலத்திலும் அதற்கு முன்பும் காணப்பட்ட லிங்க வழிபாடு என்பது உணர்த்துவதாக கண்டு கொள்ள முடிகிறது. இதுவே பிற்காலத்தில் கடவுளோடு தொடர்புபடுத்தி சிவலிங்க வழிபாடாகக் காட்டப்பட்டது. ஆனால் ஆரம்பகால லிங்க வழிபாடு என்பது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அம்சத்தை வலியுறுத்திப் போற்றுவதாகவே அமைந்திருந்தது.

மேலும் மனிதர்கள் குழுக்களாகவும், குலங்களாகவும் கூட்டு வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் விலங்குகளிடமிருந்தும் ஏனைய குழுக்கள் குலங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உடற்பலமும் வீரமும் கொண்ட குலத்தலைவர்கள் தேவைப்பட்டனர். இத் தேவையை நிறைவு செய்யும் ஆண்களும் பெண்களும் முன்னணிப் பாத்திரம் வகித்தனர். அத்தகையவர்கள் குல மோதல்களில் வெற்றி பெற்றவர்களாகக் காணப்பட்டபோது அவர்கள் போற்றிப் புகழப்பட்டனர். இறந்தபின் வணக்கத்திற்குரியவர்களாக மதித்து வணங்கப்பட்டனர். பிற்காலத்தில் மதக் கருத்துகளுடன் இணைந்து இத்தகையவர்கள் கடவுள்கள் ஆக்கப்பட்டனர். சிவன், முருகன், ஸ்கந்தன், காளி, அம்மன், துர்க்கை போன்ற சகல தெய்வ வழிபாடுகளின் மூலத்தை வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அறிந்து கொள்ள முற்பட்டால் அங்கே மனிதரில் இருந்தே கடவுள்கள் தோற்றம் பெற்றதைக் கண்டு கொள்ள முடியும். புத்தர், ஏசு, முகமதுநபி போன்ற மனித சமூக முன்னோடிகள் இன்று மூன்றில் இரண்டுக்கு மேல் கடவுள்கள் ஆக்கப்பட்டனர். நாயன்மார்கள், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றவர்கள் ஐம்பது வீதத்திற்கு மேல் கடவுள்களாக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை விட சமகாலத்தில் உயிருடன் வாழ்ந்து வரும் வசதி கொண்ட மனிதரான சத்தியசாயிபாபா வீடுகள் பலவற்றிலே வழிபடப்படும் கடவுளாக மாறி வருகின்றார். இவ்வாறு மனிதர்கள் கடவுளாக்கப்படும் நிகழ்வுப் போக்கு வரலாற்று வளர்ச்சியோடு இணைந்து முன்னெடுக்கப்பட்டு வந்ததேயாகும். ஆனால் ஆரம்பகால மனிதர்களிடையே ஊகங்கள் நம்பிக்கைகளாக மாறி அவற்றுக்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள்: மரபு ரீதியான பழக்கவழக்கங்களாக மட்டமே இருந்து வந்தன. பிற்காலத்திலேயே அவை மதக் கருத்துக்களோடும் மத நிறுவனங்களோடும் பிணைக்கப்பட்டவையாகும்.

வரலாற்றில் ஆதிகாலக் கூட்டு (புராதனப் பொதுவுடமை சமூக அமைப்பு) சமூக அமைப்பு தனிச் சொத்துடமையின் தோற்றத்தினாலும் வர்க்கவேறுபாட்டினாலும் தகர்க்கப்பட்டது. அங்கே குடும்பம் தனிச்சொத்து அரசு என்பன திட்ட வட்டமான வழிகளில் வளர ஆரம்பித்தன. ஒருவர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆண்டு அனுபவிக்கும் சமூக நடைமுறை வளர்ந்தது. இக்கட்டத்தில் பெரும்பகுதியான மனிதர்கள் மீது சொத்துடமையும் ஆட்சி அதிகாரமும் பெற்ற சிறு பகுதியான மனிதர்கள் நேரடியான அடக்கு முறைகளைக் கையாண்டனர். இத்தகைய வர்க்க ஒடுக்குமுறை அமைப்பினை நியாயப்படுத்தி பாதுகாத்து நிலை நிறுத்துவதற்கு மதக் கருத்துக்கள் ஓர் வரலாற்றுத் தேவையாகி நின்றன. அடக்கு முறையினைக் கையாண்ட ஆளும் வர்க்கத் மக்களைச் சிந்திக்க விடாது தடுக்கக்கூடிய கருத்தியல் ஆதிக்கத்தினையும் தமது கரங்களில் எடுத்துக் கொண்டது.

இக்கருத்தியல் படிப்படியாக மதக் கருத்துக்களாக நிறுவனபடுத்தப்பட்டது. உலகியல் வாழ்க்கை என்பது வெறும்மாயை என்றும், மனிதர்களும் உலகத்திற்கும் அப்பால் கடவுள் என்பவருடைய சக்தியினால் தான் சகலதும் இயங்குகின்றன என்றும் கூறப்பட்டது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பவற்றை கடவுளே செய்து வருவதாகக் கூறி முற்பிறப்பிலே செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே இப்பிறப்பில் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள். இப்பிறப்பிலே மனிதர் தமது பாவங்களைக் கழுவிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. மனிதர்களிடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதன் வழியான வறுமை, துன்பம், நோய், இன்னும் பிறமனிதக் கேடுகளுக்கும்; மனிதர்களிடையே காணப்படும் ஒரு சிறு பிரிவினர் காரணமல்லவென்றும் எடுத்துக் கூறிய மதவாதிகள் அதற்குக் காரணம் முன்னைய விதிப்பயன் என்றே எடுத்துக்காட்டினர்.

இன்றைய உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலிலும் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டை அனுபவித்துக் கொண்டும் மனிதர்களில் பெரும்பாலானோர் பழமை வாய்ந்த மதக் கருத்துக்களால் அலக்கழிக்கப் படுபவர்களாகக் காணப்படுகின்றனர். எதனையும் அறிவியல் பூர்வமாக அணுகி பகுத்தறிந்து நிரூபிக்கத்தக்க உண்மைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக -எல்லாம் கடவுள்செயல்-விதிப்படி நடக்கும்-யாவும் தலை எழுத்து;போன்ற இயலாமை கொண்ட பழைமை வாதமதக் கருத்துக்குள் தஞ்சமடைந்து கொள்ளும் சராசரிப் போக்கே காணப்படுகின்றது.

தமது வாழ்வில் ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்கள், துன்ப துயரங்களைப் போக்கி சிறப்பான வாழ்வுக்கு கடவுள் வழிதேடித் தர வேண்டும் என்றே மன்றாடுகிறார்கள். தங்களது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில் சீரழிந்து அதன் காரணமாக வறுமை, நோய், வேலைஇன்மை, வீடின்மை போன்ற அவலங்களுக்குள் சிக்கியுள்ள காரணத்தை அறிய முடியாதவர்களாக மக்கள் கடவுள்களிடம் வேண்டுதல் நடத்துகிறார்கள்.

மீண்டும் மீண்டும் மதக்கருத்துக்களை மனித மூளையில் தணித்துக் கொள்கின்றனர். இது மனிதத்துன்பங்களுக்குரிய உலகியல் காரணங்களான பொருளாதார ஏற்றத்தாழ்வு, சுரண்டல், அரசியல் அடக்குமுறை, கருத்தியல் ஆதிக்கத்தின் திணிப்பு போன்றவற்றைக் கண்டு கொள்வதை மறைத்துக் கொள்வதற்கு போதை கொடுப்பது போன்றதாகும். துயரங்களுக்கு உள்ளான ஒருவர் அதில் இருந்து விடுபடுவதற்குரிய வழிவகைகளைத் தேடுவதை தவிர்த்து துயரங்களை மறக்க போதை ஏற்றிக் கொள்வது எவ்வளவு தவறானதோ அதே போன்ற வேலையைத் தான் மதங்களும் மக்களுக்கு வழங்குகின்றன. இதனாலேயே மார்க்ஸ் மதம் மக்களுக்கு கிடைத்த அபின் என்று எடுத்துக் கூறினார். இதனை எடுத்த வாக்கிலே மார்க்ஸ் மதத்தை இழிவு படுத்தி விட்டார் எனக் கொதிப்போரும் உளர். ஆனால் அவர் கூறிய முழுமையான கூற்றினை அறிவு பூர்வமாக அணுகி ஆராய்ந்து கொள்வதற்கு அத்தகையோர் முன்வருவதில்லை. -மதத்தில் வெளிப்படுத்தப்படும் துயரம் என்பது யதார்த்த வாழ்வில் ஏற்படும் துயரத்தின் வெளிப்பாடாகவும், அதே சமயத்தில் அத் துயரத்திற்கான எதிர்ப்பாகவும் உள்ளது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மனிதர்களின் பெருமூச்சு: இதயமற்ற உலகின் இதயம். ஆன்மாவற்ற நிலைமைகளின் ஆன்மா. அது மக்களுக்குக் கிடைத்த அபின்!! || இதுவே மார்க்சின் கூற்றாகும்.

அடிப்படையில் சமுதாய மாற்றம் ஏற்படுவதை பெரும்பாலான மதங்களும் அவற்றின் நிறுவனங்களும் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியானால் அம் மதங்கள் எவற்றின் சார்பாக செயல்படுகின்றன என்பது கேள்வியாகிறது. உலகின் பெரிய சிறிய நாடுகளினது ஆதிக்கம் பெற்ற பொருளாதார வலிமை கொண்ட உயர் வர்க்க சக்திகளின் சார்பாகவே சகலமதங்களும் செயல்பட்டு பணிபுரிகின்றன. இவ் உண்மை அத்தகைய மதங்களைப் பின்பற்றும் மக்களால் உணர்ந்து கொள்ளப்படுவதில்லை. 

தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்