மனித சமூகம், உழைப்பு, வர்க்கப் போராட்டம் — மார்க்சியப் பார்வையில் சமூகத்தைப் புரிந்துகொள்வோம்!
மனித சமூகம், உழைப்பு, வர்க்கப் போராட்டம் — மார்க்சியப் பார்வையில் சமூகத்தைப் புரிந்துகொள்வோம்!
நாம் வாழும் மனிதச் சமூகம் எந்தவொரு கடவுளாலும் உருவாக்கப்பட்டதல்ல. இயற்கையின் நீண்டகாலப் பரிணாம வளர்ச்சியின் விளைவாக மனிதன் தோன்றினான் என்பதை டார்வினின் பரிணாமக் கோட்பாடு அறிவியல் அடிப்படையில் விளக்குகிறது. ஆனால் மனிதச் சமூகம் எவ்வாறு உருவானது, மனிதன் எவ்வாறு சமூக உறவுகளை உருவாக்கினான், சமூகத்தில் வர்க்கங்களும் சுரண்டலும் எவ்வாறு தோன்றின, அவற்றை மாற்றுவதற்கான வழி என்ன என்பவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் மார்க்சியம் விளக்குகிறது.
மனிதன் இயற்கையிலிருந்து தனித்து வாழ முடியாது. இயற்கையுடன் இடையறாத உறவுகொண்டு, தனது வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக உழைத்து, உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ததன் மூலமே மனிதச் சமூகம் வளர்ச்சியடைந்தது. இந்த உழைப்பின் வழியாக மனிதன் இயற்கையை மாற்றியமைத்ததோடு, தன்னையும் மாற்றிக்கொண்டான். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றோடு உருவான சமூக உறவுகள் ஆகியவை மனித வரலாற்றின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.
ஆனால் சமூகத்தின் வளர்ச்சி சமத்துவத்தை நோக்கிய நேர்கோட்டுப் பயணமாக அமையவில்லை. குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களில் உற்பத்திச் சாதனங்களின் உடைமை சிலரது கைகளில் குவிந்தபோது, உற்பத்தியில் ஈடுபடும் மக்களுக்கும் உற்பத்தியின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாயின. இவ்வாறு வர்க்கச் சமூகம் வளர்ச்சியடைந்தபோது, ஒருபுறம் உழைக்கும் மக்களும் மறுபுறம் அவர்களின் உழைப்பின் விளைவைத் தங்களுடைய ஆதிக்கத்தின் மூலம் கைப்பற்றும் சுரண்டும் வர்க்கங்களும் தோன்றின.
இன்றைய முதலாளித்துவச் சமூகத்தில், தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியை விற்று வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்கள் உருவாக்கும் மதிப்பில் ஒரு பகுதி கூலியாகத் திரும்பக் கிடைக்கிறது; மற்றொரு பகுதியை உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள் உபரி மதிப்பாகக் கைப்பற்றுகின்றனர். இந்தச் சுரண்டல் தனிப்பட்ட ஒருவரின் பேராசையால் மட்டும் உருவாவதில்லை. உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை, கூலி உழைப்பு, மூலதனக் குவிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலிருந்தே அது மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறது.
இந்தச் சுரண்டலைத் தொடரச் செய்வதற்குப் பொருளாதார ஆதிக்கம் மட்டும் போதாது. அரசியல் அதிகாரம், சட்டம், காவல்துறை, நிர்வாகம், கல்வி, ஊடகம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களும் கருத்தியல் அமைப்புகளும் குறிப்பிட்ட சூழல்களில் நிலவும் ஆதிக்க உறவுகளைப் பாதுகாக்கவோ நியாயப்படுத்தவோ பயன்படுகின்றன. அதேவேளையில், இந்நிறுவனங்களுக்குள் முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் உருவாகின்றன; உழைக்கும் மக்களின் போராட்டங்கள் அவற்றை மாற்றுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
எனவே, இன்றைய சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு மிக முக்கியமான சமூக முரண்பாடுகளில் ஒன்றாகும். வேலைவாய்ப்பின்மை, குறைந்த கூலி, விலைவாசி உயர்வு, வேலைப் பாதுகாப்பின்மை, நிலமின்மை, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் உள்ள சமத்துவமின்மை போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தனித்தனியான நிகழ்வுகளாக மட்டும் பார்க்க முடியாது. அவற்றின் பின்னால் செயல்படும் பொருளாதார உறவுகள், வர்க்க நலன்கள், அரசின் கொள்கைகள் மற்றும் சமூக அதிகார அமைப்புகளையும் ஆராய வேண்டும்.
அதே நேரத்தில், சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமுறை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றை வெறும் இரண்டாம் நிலைப் பிரச்சினைகளாகக் கருதி ஒதுக்கிவிடுவதும் மார்க்சிய அணுகுமுறையல்ல. இவை குறிப்பிட்ட வரலாற்று அடிப்படைகளைக் கொண்டவை; பொருளாதார உறவுகளுடன் தொடர்புகொள்வதோடு, அவற்றுக்கெனத் தனித்த சமூக மற்றும் அரசியல் இயக்கவியலையும் கொண்டுள்ளன. ஆகவே, இவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்காமல், அவற்றின் தனித்தன்மையையும் பரஸ்பரத் தொடர்புகளையும் ஆராய்வதே அறிவியல் சமூக ஆய்வாகும்.
ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையை மட்டும் முன்னிறுத்தி, மற்ற முரண்பாடுகளைப் புறக்கணிப்பவர்களும், உழைக்கும் மக்களின் வர்க்கப் பிரச்சினைகளைப் பேசுவதாகக் கூறிக்கொண்டு சாதி, தேசிய இன, பாலின ஒடுக்குமுறைகளைப் புறக்கணிப்பவர்களும் சமூகத்தின் முழுமையைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். அதேபோல், சமூகத்தின் முதன்மையானப் பிரச்சினைகளை ஏற்றுக் கொள்ளாமல் தான் காணும் ஒரே பிரச்சினைக்குள் சுருக்கிவிடுவதும் சமூகத்தை அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள உதவாது.
மார்க்சியத்தின் பணி, சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைப் பட்டியலிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அவற்றின் வரலாற்று வேர்கள் என்ன, எந்த உற்பத்தி உறவுகள் அவற்றைத் தொடர்ந்து உருவாக்குகின்றன, எந்த வர்க்கங்களின் நலன்கள் அவற்றால் பாதுகாக்கப்படுகின்றன, அவற்றை மாற்றுவதற்கான சமூக சக்திகள் எவை, உழைக்கும் மக்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பவற்றை ஆராய்ந்து, கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைப்பதாகும்.
சமூகத்தை மாற்ற விரும்புகிறவர்கள் அதன் வெளிப்படையான பிரச்சினைகளை மட்டும் பார்க்காமல், அந்தப் பிரச்சினைகளை உருவாக்கி மீண்டும் உற்பத்தி செய்யும் சமூக உறவுகளையும் ஆராய வேண்டும். உழைக்கும் மக்களின் உடனடி வாழ்வாதாரப் போராட்டங்களை அவர்களின் நீண்டகால விடுதலை இலக்குடன் இணைத்து, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் எதிர்க்கும் புரட்சிகர அரசியல் உணர்வையும் அமைப்பையும் வளர்ப்பதே மார்க்சிய–லெனினிய அணுகுமுறையின் முக்கியமான பணியாகும்.
இந்த அடிப்படையில், உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு, சாதி ஒடுக்குமுறை, தேசிய இனப் பிரச்சினை, பெண்களின் விடுதலை, அரசின் வர்க்கத் தன்மை, புரட்சிகரக் கட்சியின் பங்கு ஆகியவற்றைத் தனித்தனியாகவும் அவற்றின் பரஸ்பரத் தொடர்புகளுடனும் தொடர்ந்து விரிவாக ஆராய்வோம். சமூகத்தைப் புரிந்துகொள்வது என்பது அதன் மேற்பரப்பைப் பார்ப்பதல்ல; அதன் உள்ளார்ந்த இயக்க விதிகளை அறிந்து, உழைக்கும் மக்களின் விடுதலைக்கான நடைமுறைப் பாதையை உருவாக்குவதாகும்..
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக