காரல் மார்க்ஸின் புரட்சிகரப் பயணம்-காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றிலிருந்து

இக்கட்டுரைகள் காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை விவரிக்கின்றன. இக்காலகட்டத்தில் ஜென்னி மார்க்ஸின் கடுமையான நோய் மற்றும் வோக்ட்டின் அவதூறுகளால் மார்க்ஸ் குடும்பம் பெரும் மனவேதனையையும் நிதி நெருக்கடியையும் சந்தித்தது. மேலும், அமெரிக்க உள்நாட்டுப் போர், போலந்து தேசிய விடுதலைப் போராட்டம், மற்றும் ரஷ்யாவில் பண்ணையடிமை முறை ஒழிப்பு போன்ற உலகளாவிய அரசியல் நிகழ்வுகளை மார்க்ஸ் தீவிரமாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்திய அவர், லாஸ்ஸலேயின் சீர்திருத்தவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். இறுதியில், பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களை ஒரே அகிலத்தின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான சித்தாந்த அடித்தளத்தை மார்க்ஸ் வெற்றிகரமாக அமைத்தார்.

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு -பக்கம் 691லிருந்து 739 வரை

அத்தியாயம் - 9

ஜென்னி மார்க்ஸின் உடல்நலமின்மை

வோக்ட்டினுடைய அவதூறு மொழிகள் மார்க்ஸினுடைய மனைவியின் மனநிலையை மிகவும் மோசமாக பாதித்தது. வோக்ட்டிற்கு எதிராக எழுதிய புத்தகத்திற்காக மார்க்ஸ் வேலைசெய்து கொண்டிருந்த மாதங்கள் முழுவதிலும் - அக்காலம் முழுவதிலும் - அவள் கடுமையான மன வேதனைக்கும் தளர்ச்சிக்கும் ஆளானாள். அடிக்கடி உறக்கம் கொள்ளாமல் துன்பத்திற்குள்ளானாள். அந்தப் பிரசுரத்தின் சரியான பிரதி எடுப்பதில் அவளும் மிகவும் கடுமையாக வேலை செய்தாள். நவம்பர் 19 ஆம் தேதி அவ்வேலை முடிந்தவுடன் அவள் படுத்த படுக்கையாகிவிட்டாள். அவளுக்கு வைசூரி நோய் வந்துள்ளதாக டாக்டர்கள் பரிசோதனையில் கூறினார்கள். அவள் மிகவும் மெலிந்து விட்டாள். வியாதியை எதிர்க்கும் தன்மை அவளுடைய உடம்பில் குறைந்துவிட்டது. அவளுக்கு இரு தடவை அம்மை குத்தியிருந்த போதிலும் அந்த நோய் அவளைப் பற்றிக் கொண்டது. அதைத் தடுக்கும் வலு அவள் உடம்பில் இல்லாமல் இருந்தது.

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

இக்காலம் மார்க்ஸிற்கு மிகவும் சோதனை மிக்க காலமாக இருந்தது. அடுத்த வீட்டில் குடியிருந்த லீப்க்னெக்ட்ஸ் பொறுப்பில் குழந்தைகளையெல்லாம் விட்டிருந்தார். காரல் மார்க்ஸும் ஹெலென் டெமுத்தும் மாறி மாறி ஜென்னியின் படுக்கையருகில் இருந்து கவனித்து வந்தார்கள். பிற்காலத்தில் ஜென்னி தான் நோய்வாய்ப்பட்டிருந்த இந்தக்காலத்தின் ஆரம்ப சில தினங்களைப் பற்றி லூயி வெய்டிமேயருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தார்: "நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது முகத்தில் மிகவும் கடுமையான வேதனையும் நமச்சலும் இருந்தது. நான் அநேகமாக சுத்தமாகத் தூங்கவே முடியவில்லை. நான் காரலைப்பற்றி மிகவும் அதிகமாகக் கவலை கொண்டிருந்தேன். அவர் என்னை மிகவும் அதிகமாகக் கவலையுடன் அன்பு ஆதரவுடன் கவனித்து வந்தார். கடைசியில் நான் எல்லா நேரத்திலும் நல்ல பிரக்ஞையுடன் முழு உணர்வுடன் இருந்தபோதிலும் வெளிப்படையான புலனுணர்வுகள் எதுவும் இல்லாமல் இருந்தேன். திறந்த. ஜன்னலின் பக்கமேதான் நான் எப்போதும் அமர்ந்திருந்தேன். அதன்மூலம் நவம்பர் மாதத்திய குளிர்ந்த காற்று என் மீது அடித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஒரு பக்கம் கணப்படுப்பில் தீ எரிந்து கொண்டே இருந்தது. எரிச்சல் அதிகமாக இருந்த எனது உதடுகளில் ஐஸ் கட்டியும் வைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது பிரெஞ்சுப் பானகமும் சொட்டுச் சொட்டாகக் கொடுக்கப்பட்டது. அதைக்கூட என்னால் விழுங்க முடியாமல் இருந்தது. எனது காது மந்தமாகிக் கொண்டிருந்தது. கடைசியில் எனது கண்களும் நன்றாக மூடிக் கொண்டன. நிரந்தரமான இருட்டிலேயே நான் சூழப்பட்டு விடுவேனோ என்பதைப் பற்றியே நான் தெளிவாக இல்லாமல் இருந்தேன்."(¹ 1. Reminiscences of Marx and Engels, p. 247.)

ஒரு வார காலத்திற்கு முழுமையாக அவள் பிழைப்பாளா மாட்டாளா என்று பயந்துகொண்டிருந்தார்கள். அதன் பிறகு மாற்றம் ஏற்பட்டது. அவளுடைய நிலைமையில் அபிவிருத்தி ஏற்பட்டது. 1860 நவம்பர் 26 ஆம் தேதி மார்க்ஸ் ஏங்கல்ஸிற்கு எழுதினார்: "எனது மனைவியின் நிலைமை கூடுமான வரை இன்றைய சூழ்நிலையில் ஓரளவு அபிவிருத்தியடைந்திருக்கிறது. அது நீண்ட கால வேலையாக இருக்கும். அதாவது நோயின் வலிப்பின் கடுமை என்பது கடந்து விட்டது"( Marx Engels, Werke, Bd. 30, S. 115.). ஜென்னி முழுமையாகக் குணமடைந்து தேறுவதற்கு அநேகமாக இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

ஜென்னியின் நோய் நிலை மார்க்ஸின் அன்றாட வேலைகளை நிலைகுலைத்து விட்டது. ஆரம்ப கட்டங்களில் அவர் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. அவர் ஏங்கல்ஸிற்கு எழுதினார்: "கட்டுரைகள் எழுதுவது அநேகமாக எனக்கு சாத்தியமே இல்லை. நான் அமைதியாக இருப்பதற்கு உதவியாக உள்ள வேலை கணிதப் பயிற்சிதான்."( Marx Engels, Werke, Bd. 30, S. 113).

டிசம்பர் இறுதி வாக்கில் ஜென்னிக்கு நன்றாக குணமாயிற்று. குழந்தைகளை வீட்டிற்கு அனுப்புவதற்கு டாக்டர் அனுமதித்து விட்டார். குழந்தைகள் வீட்டிற்கு வந்தது பெற்றோருக்குப் பெருமகிழ்ச்சியாக ஒரு பெரிய விசேஷமான நாளாக இருந்தது. தங்களுடைய குமாரத்திகளிடமிருந்து சிறிது பிரிந்திருப்பது கூட அவர்களுக்கு மிகவும் அதிகமான வருத்தத்தைக் கொடுப்பதாக இருந்தது. ஆனால் ஜென்னி நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் மார்க்ஸிற்கு ஏற்பட்டிருந்த உடல் உழைப்பும், உணர்ச்சிவசமான கடுமையான வேதனையும் அவருடைய உடல்நிலையையும் பாதித்தது. ஜென்னிக்கு அநேகமாகக் குணமான நேரத்தில் காரல் மார்க்ஸ் ஜனவரி ஆரம்பத்தில் வியாதியால் படுத்து விட்டார். அவருக்கு இருந்த ஈரல் தொல்லையால் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய் அவரை அநேகமாக ஒரு மாதத்திற்கு மேலாகவே படுக்கையில் கிடத்தி விட்டது.

ஹாலாந்திற்கும் ஜெர்மனிக்கும் போய்வருதல்

மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டதுடன் சேர்ந்து குடும்பத்தின் நிதி நிலவரத்தில் மற்றொரு கெட்ட காலமும் ஏற்பட்டது. 1861 ஆரம்பத்தில் யு.எஸ்.ஏ.யிலிருந்து வந்த பணத்திலிருந்து ஒரு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. உள்நாட்டு யுத்தம் விரைவில் வரும் நிலையில் புதிய அமெரிக்கக் களஞ்சியம் (நியூ அமெரிக்கன் ஸைக்ளோபீடியா) பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது. நியூயார்க் டெயிலி டிரிப்யூன் ஆசிரியர்கள் 1857 நெருக்கடி காலத்தில் ஏற்பட்டதைப் போல மீண்டும் இப்போது மறு தடவையாக மார்க்ஸைத் தவிர இதர எல்லா ஐரோப்பிய நிருபர்களையும் வேலையைவிட்டு நிறுத்தி விட்டார்கள். அவரையும்கூட சில நாட்களுக்கு எழுத வேண்டாம் என்று நிறுத்தி வைத்தும் பின்னர் வாரத்திற்கு இரண்டிற்கு பதிலாக ஒரு கட்டுரை அனுப்பினால் போதும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பிப்ரவரி இறுதியில் தன்னுடைய குடும்பத்தின் நிதி நிலவரத்தை நிலைப்படுத்திக் கொள்ள மார்க்ஸ் தன்னுடைய மாமாவான லியோன் பிலிப்ஸைக் காணச் சென்றார். அவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரியாக இருந்தார். அவர் டச்சு நகரமான சால்ட்-பொம்மலில் குடியிருந்தார். பிலிப்ஸ், மார்க்ஸினுடைய தாயாரின் எஸ்டேட்டை நிர்வகித்துக் கொண்டிருந்தார். மார்க்ஸிற்கு தனக்கு வரவேண்டிய பங்கிலிருந்து பணம் கிடைக்க பிலிப்ஸினுடைய உதவி கிடைக்கும் என்று அங்கு சென்றார். அவருடைய நம்பிக்கை நிறைவேறிற்று. பின்னர் லண்டன் திரும்பிய பின்னர் 1861 மே 7 ஆம் தேதி அவர் ஏங்கல்ஸிற்குத் தகவல் கொடுத்தார்: "நான் என்னுடைய மாமாவைக் கசக்கிப்பிழிந்து 160 பவுண்டு வாங்கிக் கொண்டுவந்து எனது கடன்களில் பெரும்பகுதியை அடைத்துள்ளேன்."( 1. Marx, Engels, Werke, Bd. 30, S. 161.)

ஹாலாந்திலிருந்து மார்க்ஸ் பிரஷ்யன் தலைநகரான பெர்லினுக்குச் சென்றார். அங்கு மார்ச் 17 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் தங்கியிருந்தார். அங்கு லாஸ்ஸலேயுடன் கலந்து கூட்டான முறையில் ஒரு பத்திரிகை வெளியிடுவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க விரும்பினார். அத்துடன் முதலாவது வில்ஹெல்ம் அரசர் பட்டத்திற்கு வந்த விழாவை ஒட்டி பிரஷ்ய சர்க்கார் பொது மன்னிப்பு அறிவித்ததை ஒட்டி தான் மீண்டும் பிரஷ்யப் பிரஜையாக பதிவு செய்து கொள்வதற்கும் விரும்பி முயன்றார். பெர்லினில் மார்க்ஸ் லாஸ்ஸலேயின் விருந்தினராக இருந்தார். அவரை மார்க்ஸ் 1848–49 புரட்சிக்குப் பிறகு இப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தார். லாஸ்ஸலேயும் அவருடைய நண்பரான சோபியா ஹாட்ஸ்ஃபெல்ட் சீமாட்டியும் மார்க்ஸிற்கு மிகவும் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தார்கள். ஆனால் இந்த மிகப் பிரபலமான புரட்சிகர சிந்தனையாளருடன் தங்களுக்கு நல்ல தொடர்பும் பழக்கமும் உண்டு என்று தங்களை தங்களுடைய மேட்டுக் குடி நண்பர்களுக்கு முன்பு அளவுக்கு மீறி விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அவர்களுடைய "குறிப்பான சிலர் மட்டுமே உள்ளக் கூட்டத்தில்" மார்க்ஸை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். மேல் மட்டத்து சில பிரமுகர்களைக் கொண்ட ஒரு விருந்தை அவருக்காக நடத்தினார்கள். அவரை நாடக தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். அரசகுடும்பம் உட்காரக் கூடிய ஆசன அறைக்குப் பக்கத்தில் உள்ள ஆசனப் பெட்டியில் மார்க்ஸ் அமர்த்தப்பட்டார். பகட்டாரவாரம் மிக்க பாலே நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேறு வழியின்றி வேண்டாவெறுப்புடன் சலிப்பு நிறைந்த மாலைப் பொழுதை அவர் கழித்தார். பத்திரிகையாளர்கள் என்னும் பிரிடாக்கின் நகைச்சுவை நிகழ்ச்சியை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை. அது எல்லாமே "பிரஷ்யன் தற்புகழ்ச்சியாக" இருந்தது.

மார்க்ஸ் பத்திரிகையாளர் காலரியிலிருந்து சட்டமன்ற (டெபுடிகள் சேம்பர்) நிகழ்ச்சியை கவனித்தார். 1848 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் அவர் பிரஷ்யன் தேசிய சட்டமன்ற நிகழ்ச்சியைக் கண்டிருக்கிறார். அதனுடன் ஒப்பிடும்போது பிரஷ்யாவின் பிரதிநிதித்துவ நிறுவனங்களில் நல்ல திசையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதை அவர் கண்டார். "ஒரு குறுகலான நெருக்கமான ஹால். பொது மக்கள் உட்காருவதற்கு சிறிய சிறிய பெட்டிகள், டெபுடிகள் உட்காருவதற்கு பெஞ்சுகள். ('கனவான்கள்' உட்காருவதற்கு மட்டும் நல்ல கைநாற்காலிகள்) ஒரு உதிரிக்கலவையான அலுவலகமும் பள்ளியும், ஒப்பிடும்போது பெல்ஜியம் சட்டமன்றம் இன்னும் பார்வைக்கு நன்றாக இருக்கும். சிம்ஸன் அல்லது சாம்சன் என்று அவைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டாலும் மான்டியூபெல்லிடமிருந்து வாங்கிய உதைகளுக்கு பழிக்குப் பழி வாங்குகிறார். கீழே அடங்கியுள்ள அநாகரிக அப்பாவிகளைத் தாக்குவதற்கு ஒரு அமைச்சரவையின் வாயில்காப்போனின் விசித்திரமான கற்பனைக் கதம்பமான முரட்டுத்தனமான சுய முக்கியத்துவத்துடன் தனது கழுதைக் தாடைகளைப் பயன்படுத்திக் கொண்டு மேற்கண்ட வேலைகளைச் செய்தனர்."( Marx, Engels, Werke, Bd. 30, S. 167.)

பெர்லின் நகரத்தில் அவருடைய இதர சந்திப்புகளும் அவ்வளவு சாதகமாக இல்லை. அவருடைய மாமா மகன் அன்டோநெட்டி (நானெட்டி) பிலிப்ஸுடன் அவர் சால்ட்-பொம்மெல்லில் தங்கியிருந்த காலத்தில் மிகவும் பழக்கமாக்கிக் கொண்டு நட்புறவு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் "அநாகரிகமான அப்பாவிகள் உலகம் என்னை மூழ்கடித்து விட்டது"( Marx, Engels, Werke, Bd. 30, S. 594.) என்று கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய மாணவர் காலத்திய நண்பர் ஒருவர் மிகவும் பிரபலமான வரலாற்றியல் நிபுணர் காரல் கோப்பென் அவர்களை சந்தித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது.

பிரஷ்யாவின் தலைநகரத்தில் மார்க்ஸ் சென்றிருந்த குறிப்பிட்ட நேரத்தில் மகிழ்ச்சியற்ற நிலை இருந்த போதிலும் அங்கு வளர்ந்து கொண்டிருந்த எதிர்ப்பும் பொதுவான கொந்தளிப்பும் பெருகிவரும் அடையாளங்களாகத் தென்பட்டன என்பதை அவர் மிகவும் திருப்தியுடன் கவனித்தார். அவர் ஏங்கல்ஸிற்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்: "பெர்லின் நகரில் ஆட்சி ஆதிக்கம் கொண்டிருந்த குரல் துணிச்சலும் விளையாட்டுத்தனமும் கொண்டிருந்தது. சட்டமன்றம் (சேம்பர்ஸ்) மிகவும் இழிவாகக் கருதப்பட்டது.... பெரும்பாலான பொது மக்களிடம் அன்றைய பத்திரிகைகளின் மீது பெரும் அளவில் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலைமைகளில் அடுத்த ஆண்டில் பெர்லின் நகரத்தில் ஒரு பத்திரிகை வெளியிடுவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது."( Marx, Engels, Werke, Bd. 30, S. 163.)

எனினும் கூட்டாகப் பத்திரிகை வெளியிடுவதற்கு லாஸ்ஸலே யுடன் மார்க்ஸ் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவேறவில்லை. லாஸ்ஸலேயின் நிபந்தனைகள் பத்திரிகையின் மீது அவருக்கு முழு ஆதிக்கம் இருக்கும் வகையில் இருந்தது. மார்க்ஸ் இங்கிலாந்திற்குத் திரும்பியவுடன் ஏங்கல்ஸிடம் கலந்தாலோசனை செய்து விட்டு தனது மறுப்பை லாஸ்ஸலேக்கு அனுப்பிவிட்டார். லாஸ்ஸலேயிடம் மிதமிஞ்சிய வெறும் தற்பெருமை, இறுமாப்பு மனப்போக்கு, மேல்தட்டுக் கூட்டத்துடன் அதிகமாகப் பழக வேண்டுமென்னும் ஆசை ஆகிய குணங்களை மார்க்ஸ் நேரிடையாகவே கண்டார். அதனால் அவருடன் கலந்து பணியாற்ற விருப்பம் ஆர்வம் கொள்ளவில்லை.

லாஸ்ஸலேயின் உதவியுடன் மார்க்ஸ் பெர்லின் நகரில் தனது பிரஷ்யப் பிரஜா உரிமையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் மூலம் அடிக்கடி ஜெர்மனிக்கு வந்துபோய், அங்கு அதிக நாட்கள் தங்கியிருந்து ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டுவதில் பங்கு கொள்ளலாம் என்று விரும்பினார். 1861 மார்ச் 25 ஆம் தேதி பெர்லின் போலீஸ் தலைமை அதிகாரி வான் ஜெட்லிட்ஸிற்கு மார்க்ஸ் தன்னுடைய மனுவை அனுப்பினார்.

அவருடைய வேண்டுகோள் அவர் பிரஷ்யத் தலைநகரிலிருந்து வெளியே புறப்படு முன்னரேயே நிராகரிக்கப்பட்டு விட்டது. அவர் 1845-ல் தானாகவேதான் சொந்தப் பொறுப்பில் பிரஷ்யப் பிரஜா உரிமையை வேண்டாம் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் என்று காரணம் கூறப்பட்டது. அதிகாரிகள் மார்க்ஸை மிகவும் ஆபத்தான புரட்சிக்காரர் என்றும் அவரை பிரஷ்யாவில் குடியிருக்க விடக்கூடாது என்றும் கருதினார்கள். தன்னுடைய மனுவின்மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி லாஸ்ஸலேக்கு மார்க்ஸ் அதிகாரப் பத்திரம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் மார்க்ஸ் சார்பில் லாஸ்ஸலே சமர்ப்பித்த மனுக்களும் 1861 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெர்லின் தலைமை போலீஸ் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பரில் உள்துறை அமைச்சரால் நிராகரிக்கப்பட்டது. இதன் தொடர்பாக மார்க்ஸ், பிரஷ்யாவின் பொது மன்னிப்பு என்று அறிவித்தது எல்லாம், "வெறும் ஏமாற்று வித்தையானது, மோசடியானது, சூழ்ச்சிமிக்கது" என்று எழுதினார்.

பெர்லினிலிருந்து மார்க்ஸ் கொஞ்ச நாட்கள், எல்பர்பெல்ட், பார்மென், கோலோன் ஆகிய நகரங்களுக்கு சென்றிருந்தார். கோலோனில் வழக்கறிஞர் ஸ்சினிடெர் அவர்களை சந்தித்தார். அவர் 1852 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பக்கம் வழக்கறிஞராக இருந்தவர். அத்துடன் கம்யூனிஸ்ட் லீகின் முன்னாள் உறுப்பினரும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான காரல் கிளீனையும் சந்தித்தார். ஏப்ரல் 19 ஆம் தேதி டிரையருக்கு சென்று தனது அன்னையுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். ஹென்றிட்டி மார்க்ஸுடன் காரல் மார்க்ஸிற்கு இதுதான் கடைசி சந்திப்பாக இருந்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் 1863 நவம்பர் 30 ஆம் தேதி அந்த அம்மையார் காலமானார்.

டிரையரிலிருந்து ஆச்சென் வழியாக மார்க்ஸ் மறுமுறை ஹாலாந்திற்குச் சென்றார். அங்கு ராட்டர்டாம், ஆம்ஸ்டர்டாம் மற்றும் ஜால்ட்-பொம்மல் ஆகிய நகரங்களுக்குச் சென்று தங்கியிருந்தார். ஏப்ரல் 29 ஆம் தேதி அவர் லண்டன் நகருக்குத் திரும்பினார்.

பிளாங்கிக்கு ஆதரவு திரட்டல்

மார்க்ஸ் பெர்லின் நகரத்தில் தங்கியிருந்த காலத்தில், 1859 ஆம் ஆண்டில் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு பிரான்ஸிற்குத் திரும்பிச் சென்ற பிளாங்கி 1861 மார்ச் மாதம் பாரிஸில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்தார். அவர் மீது அவர் ஒரு ரகசிய சங்கத்தை உருவாக்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பெர்லினில் இருந்த ஜனநாயக வட்டாரங்கள் போனபார்ட்டிஸ்ட் போலீஸின் நடவடிக்கைகள் மீது கடுமையாக கண்டனத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் பிளாங்கி மீது மிகுந்த அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கிறார்கள் என்றும் சோபியா ஹாட்ஸ்ஃபெல்ட் மார்க்ஸிற்கு தகவல் கொடுத்தார். விசாரணை காலத்தில் பிளாங்கி மாஸாஸ் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவர் வார்டர்களால் மிகவும் மோசமான முறையில் மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்பட்டார். போதுமான சாட்சியங்கள் இல்லாதிருந்தும் கூட 1861 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அவருக்கு நான்காண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

லண்டனுக்குத் திரும்பிய பிறகு மார்க்ஸ், பிளாங்கிக்கு உதவி செய்வதற்கு மிகவும் செயலூக்கத்துடன் உள்ள ஒரு இயக்கத்தைத் துவக்கினார். அவர் ஸைமன் பெர்னார்டுடன் ஒரு ஏற்பாடு செய்து கொண்டார். அவர் ஒரு பிரெஞ்சு குடியேற்றாளர். அவர் 1848–49 புரட்சியில் பங்கு கொண்டவர். அத்துடன் ஏர்னஸ்ட் ஜோன்ஸ்-உடனும் கலந்து கொண்டார். ஜோன்ஸ் முன்னாள் சார்ட்டிஸ்ட் தலைவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து பிளாங்கி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதே சமயத்தில் மார்க்ஸ், லூயிஸ் வாட்டேயுடன் கடிதத் தொடர்பு கொண்டார். அவர் ஒரு பிரெஞ்சு புரட்சிக்காரர். பிளாங்கியின் மிக நெருங்கிய நண்பர். அவர் பிரஸ்ஸல்ஸிற்குக் குடியேறியவர். டௌனான்வில்லி என்னும் புனைப்பெயரில் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். வாட்டே மூலம் மார்க்ஸ் பிளாங்கியுடன் தொடர்பு கொள்ளுவதில் வெற்றி கண்டார். இதைப் பற்றி ஏங்கல்ஸிற்குத் தகவல் கொடுத்து 1861 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி மார்க்ஸ் எழுதினார்: "டௌனான்வில்லி மூலம் பிளாங்கியே எனக்கும் ஜெர்மன் பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும் மிகுந்த ஆர்வத்துடன் நன்றி செலுத்தியுள்ளார்.... நாம் காட்டியுள்ள அனுதாபத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் உறுதியான புரட்சிகரக் கட்சியுடன் நேரடியான தொடர்புகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்."¹

பிளாங்கியைக் காக்கும் பொருட்டு அவருக்கு ஆதரவு திரட்ட பத்திரிகைகள் மூலம் ஒரு இயக்கத்தை உருவாக்க மார்க்ஸ் மிகவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தார். மே மாதம் அவர் ஹாட்ஸ்ஃபெல்ட் சீமாட்டிக்கு எழுதினார். அதில் பிளாங்கியை சிறையில் கொடுமைப்படுத்துவது பற்றிக் கண்டனம் செய்தும் பிரச்சாரம் செய்யவும் அவருடைய விடுதலையைக் கோரி குற்றறிக்கைகள் விடவும், உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டிருந்தார். மார்க்ஸினுடைய தீவிர முயற்சியின் பலனாக பிளாங்கியைப் பற்றிய அறிக்கைகள் ஜெர்மன் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், இத்தாலிய மற்றும் அமெரிக்கப் புரட்சிப்போக்குப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

போனபார்ட்டிஸ்ட்டுகள் ஆவேசம் நிறைந்த தீவிர புரட்சிக்காரரை சிறை வைத்து அடைத்து அவவைப் பழி வாங்கிக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்துவதற்கான ஒரு பிரசுரம் வெளியிட வேண்டும் என்னும் வாட்டேயின் விருப்பத்திற்கு மார்க்ஸ் தனது முழு ஆதரவையும் கொடுத்தார். ஹாட்ஸ்ஃபெல்ட் சீமாட்டி மூலம் ஜெர்மனியிலுள்ள ஜனநாயக வட்டாரங்களுக்கு வேண்டுகோள் விடுத்து அந்தப் பிரசுரம் வெளியிடுவதற்கான செலவுக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்தார். லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தின் மூலம், குடியேறி வாழ்ந்துவரும் மக்களிடமும் நிதி வசூல் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். 1861 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கல்விக் கழகத்தின் மூலம் வசூல் செய்த பணத்தை மார்க்ஸ் வாட்டேக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் பிளாங்கியை மிகப் பெரும் அளவில் பாராட்டியும் புகழ்ந்துள்ள ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். அவர் எழுதினார்: "பிரான்ஸிலுள்ள பாட்டாளி வர்க்கக் கட்சியின் அறிவாற்றல் மிக்க தலைவராகவும் இதயத்துடிப்பாகவும் நான் எப்போதுமே கருதும் ஒரு மனிதனைப் பற்றி அவருக்கு ஏற்பட்டுள்ள கதியையப்பற்றி என்னைக் காட்டிலும் அதிக அக்கறை உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் உறுதியாக எடுத்துக் கொள்ள முடியும்."²

மார்க்ஸும் ரஷ்யாவில் ஏற்படும் சமுதாய மாற்றமும்

1850 ஆம் ஆண்டின் முடிவிலிருந்து ரஷ்யாவில் ஏற்பட்டு வந்த உள்நாட்டு நிலையின் வளர்ச்சியைப் பற்றி மார்க்ஸ் மிகவும் நெருக்கமாக இருந்து கூர்ந்து கவனித்து வந்தார். படிப்படியாக அவர், கிரிமியப் போரில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக ஜாரிஸம் வலிமையடைந்திருக்கிறது என்னும் முடிவுக்கு வந்து கொண்டிருந்தார். இந்த யுத்தம் ஜாரிஸ்டு ரஷ்யாவின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளின் நிலைமையை அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல் அது அந்நாட்டின் அரை அடிமைக் குடியானவர்களிடையே மிகவும் பரவலான கிளர்ச்சிக் கலவரங்கள் ஏற்படுவதற்கும் காரணமாயிருந்தது. அது அங்கிருந்த நிலப்பிரபுத்துவ அரை அடிமை அமைப்பின் அடித்தளத்தையே அரித்துக் கொண்டிருந்தது. 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி மார்க்ஸ் எங்கெல்ஸிற்கு ரஷ்ய சாம்ராஜ்யத்தில் புரட்சிகரமான மனோபாவம் வளர்ந்து கொண்டிருப்பதைப் பற்றிய தனது கருத்தைப் பற்றி எழுதினார்: "1854-55 ஆம் ஆண்டின் ரஷ்யப் போர் ரஷ்யாவில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவங்களின் திருப்பத்தை நிச்சயமாக துரிதப்படுத்தியிருக்கிறது." அதே ஆண்டில் மார்க்ஸ் கவனித்துக் கூறினார்: ரஷ்யாவில் பண்ணை அடிமை அமைப்பு முறையின் நெருக்கடி முன்னணிக்கு வந்து கொண்டிருந்தது; ரஷ்யாவில் புரட்சிகரமான நிலைமை வளர்ந்து வருவதற்கான அடையாளங்கள் தென்பட்டன; அது மறுபக்கத்தில் ஐரோப்பிய பிற்போக்கு சக்தியின் கொத்தளமாக உள்ள ஜாரினத்துவையும் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது. இதைத்தான் அவர் எங்கெல்ஸிற்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி வலியுறுத்திக் கூறினார்: "ரஷ்யாவில் பண்ணையடிமைகளின் விடுதலைக்கான இயக்கம்", "அதன் பாரம்பரியமான வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் அப்பால் சென்று" ஒரு புதிய உள்நாட்டு வளர்ச்சி நிலையின் தொடக்கத்தைக் குறித்தது.

ரஷ்யாவில் உடனடியாக வெளிப்படவிருக்கும் மாற்றங்களுக்கான சமூகப் பொருளாதார காரண விளைவுகளையும் மார்க்ஸ் தெளிவாகக் கண்டார். காலங்கடந்து போன நிலப்பிரபுத்துவ உறவுகள் அங்கு முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய தடையாக இருந்தன. இந்த நிலைமையில் முதலாளித்துவ அமைப்பு முறை உருவாகி வந்தது. அந்த அமைப்பானது தவிர்க்க முடியாதபடி அதனுடைய பாரம்பரிய வழக்கப்படி மிகவும் கடுமையான கஷ்டங்களையும் இன்னல்களையும் தொல்லைகளையும் சுரண்டப்படும் மக்களுக்குக் கொண்டு வந்தது. சுரண்டப்படும் மக்கள் இருவகை ஒடுக்குமுறைகளுக்கு ஆளானார்கள். நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளர்கள், முதலாளிகள் ஆகிய இருவகை சுரண்டும் கூட்டங்களின் கொடுமைகளுக்கு ஆளானார்கள். இவையெல்லாம் அங்கு புரட்சிக் கொதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

பண்ணையடிமை முறையின் வீழ்ச்சி நிச்சயம் ஏற்படும் என்பதை தெளிவாகத் தெரிந்து உணர்ந்து கொண்டு மார்க்ஸ், ரஷ்யாவானது அதன் பண்ணையடிமை முறையை ஒழிக்கும் வழிகளை எதிர்நோக்கியிருந்தது என்பதையும் இந்த விஷயம்தான் அந்த நாட்டில் உள்ள போராடிக் கொண்டிருக்கும் வர்க்கங்களுக்கு இடையிலுள்ள முக்கிய பிரச்சனையாக உள்ளது என்பதையும் கண்டார். ஆளும் வட்டாரங்கள் தமது பழைய முறைகளில் நாட்டை ஆள முடியாது என்பதை அறிந்து உணர்ந்து கொண்டு சில சீர்திருத்தங்களின் மூலம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கோடிக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் இந்தப் பிரச்சனையை மிகவும் தீவிரமான புரட்சிகரமான வழியில் தீர்ப்பதற்கு முயற்சித்துப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மார்க்ஸ் எழுதினார்: "ரஷ்யப் பண்ணையடிமைகள் விடுதலைப்பற்றி சர்க்கார் கொண்டுள்ள அர்த்தத்தில் அல்லாமல் வேறுவகையில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்." சீர்திருத்தங்கள் பற்றியும் ஆளும் வர்க்கத்திற்கிடையில் ஒரு உடன்பாடு இல்லை என்பதையும் மிதவாத நிலவுடைமையாளர்களுக்கும் பண்ணையடிமை உடைமையாளர்களுக்குமிடையில் தாவாக்கள் இருந்தன என்பதையும் பற்றி மார்க்ஸ் தெளிவாக முழுமையாக உணர்ந்திருந்தார். ஆனால் அந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால் இருந்த உந்து சக்தி வேறு இடத்தில் உள்ளது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். மேற்கு ஐரோப்பியப் பத்திரிகைகள் குறிப்பிட்டதற்கு நேர்மாறாக அவர் இது பிரதானமாக விவசாயிகளுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் இடையில் ஒத்துப்போக முடியாதபடி உள்ள கடுமையான வர்க்கப் போராட்டத்தின் விளைவாகும் என்று கருதினார்.

விவசாய சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே மார்க்ஸ் அதன் முக்கிய அம்சங்களைப் பரிசீலித்து விமர்சனம் செய்தார். அதற்கு பத்திரிகைகளில் முன்கூட்டி வெளிவந்த தகவல்களைப் பயன்படுத்தி அவர் அந்த மதிப்பீட்டைச் செய்தார். அது பற்றிய அவருடைய கட்டுரைகள் 1858-லிருந்து 1860 வரை நியூயார்க் டெய்லி டிரிப்யூனில் வெளிவந்தன. அவைகளில் இரண்டு - "ரஷ்யாவில் விவசாயிகள் சீர்திருத்தத்திற்கான தயாரிப்பு", மற்றும் "விவசாயிகளின் விடுதலைப் பிரச்சனை", ஆகிய கட்டுரைகள் முழுவதும் வாதத்திற்குரிய அந்த சீர்திருத்தங்களைப் பற்றியே விவாதித்தது. ரஷ்யாவின் எதேச்சதிகார அரசு ஒரு புரட்சியின் நபயத்தின் மீதோ அல்லது ஒரு புதிய பயமுறுத்தலின் மீதோ தான் விவசாயிகளின் விடுதலைக்கு ஒப்புக்கொண்டது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலேயிருந்து கொண்டு வரப்படும் அத்தகைய பல நடவடிக்கைகளைப் போலவே இந்த சீர்திருத்தங்களும் முழுமையாக இருக்காது; அரைகுறையாகவே இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அது ரஷ்யாவில் மிகவும் தேவையான சில பூர்ஷ்வா மாற்றங்களை நோக்கி ஒரு படியைக் குறிப்பதைத் தவிர வேறில்லை; மிகவும் அழுத்தமாக உள்ள எந்தப் பிரச்சனைகளையும் இது தீர்க்காது; அதைப் புரட்சியின் மூலம்தான் தீர்க்க முடியும்.

முன்வைக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து, இரண்டாவது அலெக்ஸாண்டரின் 1861 பிப்ரவரி 19 ஆம் தேதி பிரகடனத்திற்கு முன்பே கூட அது மக்களுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது; நிலவுடைமையாளர்களின் தலைமையை ஊர்ஜிதப்படுத்துவதற்கும், நிலப்பிரபுக்களின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் எடுத்துக்கட்டினார். இந்த நடவடிக்கைகள் நிலப்பிரபுக்கள் போன்ற செத்துக் கொண்டிருக்கும் வர்க்கம் தரம் குறைந்து சீரழிந்து வீழ்ச்சியடைவதைத் நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்காது என்றும் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். விவசாயிகளுக்கு இந்த சீர்திருத்தம் விடுதலையின் ஒரு மாயத்தோற்றம் என்பதைத் தவிர வேறில்லை; அடிமைக்கட்டு முறைகளில் மாற்றமே தவிர வேறில்லை; நிலமீட்சிக் கட்டணங்கள் முதலியவற்றின் பேரால் விவசாயிகள் மேலும் கொள்ளையடிக்கப்பட்டனர். இந்த சீர்திருத்தம் விவசாயிகள் நிலவுடைமையாளர்களைச் சார்ந்து நிற்கும் நிலைமையை ஒழிப்பதற்கு உதவி செய்யாது; இது பழைய "தந்தை வழி" அடிமை முறைக்குப் பதிலாக சற்று "நாகரீகமான ஒன்றை" மாற்றி அமைத்தது.

ஜாரிஸ்ட் சர்க்காரால் இந்த சீர்திருத்தத்தின் மூலம் விவசாயிகளின் புரட்சிகரமான இயக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும்; விவசாயிகள் இதன் உண்மையான முக்கியத்துவத்தை அதிகமாக உணரும்போது இந்த இயக்கம் அதிகமாக வளரும் என்றும் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். ரஷ்யாவில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி சாத்தியப்படலாம் என்று அவர் பேசினார். சர்க்கார் தனது சீர்திருத்தங்களைப் புகுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளின் விளைவாக, அது, "ரஷ்யாவில் உள்ள கிராமப்புற மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பும் மோதலும் ஏற்படுவதற்கு அறிகுறியாகும்" என்று அவர் சுட்டிக்காட்டினார். அதன் அர்த்தம் எப்படி ஆகும் என்றால் '1793 ஆம் ஆண்டு ரஷ்யா கைக்கு வந்து' பயங்கரமான அடக்குமுறை ஆட்சி ஏற்படக்கூடும். அது "ரஷ்யாவின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையைக்" குறிக்கும். அது ரஷ்யாவிற்கு "ஒரு உண்மையான பொதுவான நாகரிகத்தை"க் கொண்டுவரும். மார்க்ஸ், ரஷ்யாவில் ஒரு புரட்சி வெடிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தார். அதே சமயத்தில், அங்கு முதலாளித்துவ உறவுகள் போதுமான அளவில் வளராததால் அது ஒரு விவசாயப் புரட்சியின் வடிவத்தைப் பெறும் என்று மார்க்ஸ் நம்பினார். அவர் லாஸ்ஸலேக்கு 1859 பிப்ரவரி 4 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பாக அவ்வாறே கூறியிருந்தார்.

கிரிமியன் யுத்தத்தின் போதும் அதற்குச் சற்று முன்னரும் மார்க்ஸ், ரஷ்யாவில் புரட்சிக்கான வாய்ப்புகள் இன்னும் ஒப்பிடும்போது வெகு தூரத்தில் இருக்கிறது என்று நம்பினார். அதனால் இந்த நாடு பிரதானமாக ஐரோப்பாவின் பிற்போக்கு சக்திகளின் இருப்பிடமாகவே இருக்கும் என்றும் கருதினார். இப்போது அவருடைய கருத்துக்கள் மாறத் தொடங்கின. எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஒரு உறுதியான நிலை எடுத்தார். அதே சமயத்தில் அதிகாரபூர்வமற்ற ரஷ்யாவின்பால், மக்களின் ரஷ்யாவின்பால் மிகவும் அதிகமான கவனம் செலுத்தலானார். மக்கள் நாட்டிற்குள்ளேயே ஜாருக்கு எதிராக அணி திரண்டு கொண்டிருந்தனர். இந்த சக்திகள் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதற்கும் ரஷ்யாவில் ஒரு மக்கள் புரட்சி பக்குவமடைந்து வருவதற்கும் ஆன சான்றுகளைக் காண அவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அந்த நேரத்திலிருந்து மார்க்ஸ், ரஷ்யப் புரட்சி இயக்கத்தை - புரட்சிகர ரஷ்யாவை - ஜாரிஸ்ட் ரஷ்யாவிற்கு எதிர் நிறுவையாகக் கருதினார். மொத்தமான புரட்சிகர அணி வகுப்புக்கேந்திர முக்கியமான திட்டங்களுக்கும், ஐரோப்பாவில் எதிர்காலத்தில் எந்த ஒரு புரட்சிக்குச் சாத்தியமான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு நிரந்தரமான அம்சம் என்றும் அவர் கருதினார். 1858 ஜுனில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "மற்றொரு வல்லரசு இருக்கிறது. அது பத்தாண்டுகளுக்கு முன்பு புரட்சி வெள்ளத்தை மிகவும் வலுவாகத் தடுத்து நிறுத்தியது. அந்த வல்லரசு ரஷ்யா. இந்தத் தடவை, அந்த வல்லரசின் காலடியிலேயே ஏராளமான எரியும் பொருள் குவிந்திருக்கிறது. ஐரோப்பாவில் ஒரு பலமான வெடிப்பு ஏற்பட்டால் இங்கும் உடனடியாக தீ பற்றிக் கொள்ளும்" 1858 கோடை காலத்தில் மார்க்ஸ், இன்னும் மேற்கு ஐரோப்பாவில் எழும் புரட்சிகர நடவடிக்கையானது ரஷ்யாவிலும் ஒரு புரட்சிகர வெடிப்பைக் கிளப்பிவிடும் என்று நம்பினார். ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் கலவரங்கள் எடுத்துக் காட்டுவது என்னவென்றால் மேற்கே தோன்றுவதற்கு முன்பாகவே ரஷ்யாவில் புரட்சி வெடித்து விடும். ரஷ்யாவிலிருந்து மேற்கு நாடுகளுக்குப் பரவும் என்று நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். 1859 டிசம்பரில் அவர் எங்கெல்ஸிற்கு எழுதினார்: "ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் ரஷ்யாவில் இயக்கம் வேகமாக முன்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறது."

ரஷ்யப் புரட்சி இயக்கத்தை மேற்கு நாடுகளின் பாட்டாளி வர்க்க மற்றும் ஜனநாயக இயக்கத்தின் நேச சக்தியாக மார்க்ஸ் கண்டார். ரஷ்யாவில் உள்ள சம்பவங்களை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நீக்ரோ அடிமை முறையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்துடன் ஒப்பிட்டு மார்க்ஸ் 1860 ஜனவரி 11 ஆம் தேதி எங்கெல்ஸிற்கு எழுதியதாவது: "என்னுடைய கருத்தில் இன்று உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய விஷயங்கள் ஒரு பக்கம் அமெரிக்காவில் அடிமைகளின் இயக்கம்.... மறுபக்கம் ரஷ்யாவில் அடிமைகளின் இயக்கம்."

1861 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விவசாய சீர்திருத்தம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னரும் கூட ரஷ்யாவில் ஒரு புரட்சி வெடிப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்து தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். விவசாயிகளுக்கிடையில் மேலும் மேலும் அதிகமாக அமைதியின்மை பெருகிக் கொண்டிருந்தது பற்றியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது பற்றியும் வந்து கொண்டிருந்த தகவல்கள் அறிக்கைகள் அவருடைய கருத்துக்களுக்கு ஆதாரங்களாக இருந்தன. சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட காலத்திலும் அதற்குச் சற்று முந்தைய காலத்திலும் ரஷ்யாவின் நிலைமை புரட்சிக்கு முந்தைய நிலைமை என்று மார்க்ஸ் கருதுவதற்கு சரியான வரலாற்று ஆதாரங்கள் இருந்தன. லெனின் பிற்காலத்தில் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "மிகவும் எச்சரிக்கையான மிகவும் நிதானமான அரசியல்வாதிகூட ஒரு புரட்சிகரமான வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியப்பாடும் ஒரு விவசாயி கலகம் ஏற்படும் ஆபத்து ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடும் இருப்பதை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது." 1859-61 ஆம் வருடத்திய புரட்சிகரமான நிலைமை உண்மையில் ஒரு புரட்சியாக உருவாகி வளர்ச்சியடையவில்லை. இருப்பினும் அது மார்க்ஸ் கொண்டிருந்த முடிவின் மதிப்பை, ரஷ்யாவில் ஒரு பொது மக்கள் புரட்சி பக்குவமடைந்து கொண்டிருந்தது; அதன் மக்களிடம் ஒரு உண்மையான வற்றாத புரட்சிகரமான ஆற்றலின் சேமிப்பு உட்செறிவாகவே குழுமியிருந்தது என்று மார்க்ஸ் கொண்டிருந்த முடிவின் மதிப்பை அது எந்த விதத்திலும் குறைத்து விடவில்லை.

டி பிரஸ்ஸி பத்திரிகைக்கு எழுத்துக் கட்டுரை வழங்குதல்

வியன்னாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த டி பிரஸ்ஸி என்னும் மிதவாதப் பத்திரிகையின் ஆசிரியர் மார்க்ஸ் பிரிட்டலாண்டர் 1859-ல் அவருடைய பத்திரிகைக்கு எழுதும்படி மார்க்ஸிடம் கேட்டு முயற்சித்தார். 1861 ஜூன் ஆரம்பத்தில் மீண்டும் தன்னுடைய அழைப்பைப் புதுப்பித்தார்.

டி பிரஸ்ஸி பத்திரிகைக்கு 30,000 சந்தாதாரர்கள் இருந்தார்கள். அப்பத்திரிகைக்கு ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் விரிவான வாசகர்கள் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் அப்பத்திரிகைக்கு கணிசமான அளவில் செல்வாக்கு இருந்தது. அதற்கு அது வெளிநாட்டுக் கொள்கை பிரச்சனைகளில் போனபார்ட்டிஸ்ட் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டிருந்தது காரணமாகும். இருப்பினும் 1861 அக்டோபர் வரை டி பிரஸ்ஸி பத்திரிகைக்கு மார்க்ஸ் தனது முதல் கட்டுரைகளை அனுப்பவில்லை. உள்நாட்டுப் பிரச்சனைகளிலும் அது முற்போக்கு நிலை எடுக்கிறதா, சான்சலர் ஆன்டன் வான் ஷ்மெர்லிங்கினுடைய பிற்போக்கான உள்நாட்டுக் கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்துகிறதா என்பதை அவர் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. 1861 செப்டம்பர் 28 ஆம் தேதி அவர் எங்கெல்ஸிற்கு எழுதினார்: "கடைசியில் வியன்னாவின் பிரஸ்ஸி பத்திரிகை ஷ்மெர்லிங்கிற்கு எதிராகத் திரும்பிவிட்டது. எனவே இப்போது நாம் அந்தப் பேப்பருடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்." ஜெர்மன் மக்களுக்கிடையில் நேரடியாகத் தன்னுடைய கருத்தோட்டங்களைப் பரப்புவது மார்க்ஸிற்கு மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது.

1861 அக்டோபரில் மார்க்ஸ் இரண்டு கட்டுரைகள் அமெரிக்க உள்நாட்டுப் போரைப்பற்றி பரீட்சார்த்தமாக வியன்னாவிற்கு ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில் அனுப்பி வைத்தார். இரு கட்டுரைகளும் அங்கீகரிக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டன. 1861 நவம்பர் முதல் டி பிரஸ்ஸி பத்திரிகைப் பணிக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ஒரு கட்டுரைக்கு ஒரு பவுண்டும் ஒரு ரிப்போர்ட்டிற்கு 10 ஷில்லிங்கும் ஊதியம் கொடுக்கப்படும் என்றும் மார்க்ஸிற்கு அறிவிக்கப்பட்டது.

டி பிரஸ்ஸி பத்திரிகைக்கு மார்க்ஸ் எழுதிய பல கட்டுரைகள் அமெரிக்க உள் நாட்டுப் போரையும் சர்வதேச நிலையில் அதன் செல்வாக்கையும் பற்றியதாக இருந்தது. இந்த உள்நாட்டு யுத்தம், ஐரோப்பாவிலுள்ள புரட்சி இயக்கத்தை தீவிரப்படுத்துவதற்கு உதவி செய்யும் என்று மார்க்ஸ் நம்புவதற்கு நல்ல காரணங்கள் இருந்தன. எனவே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள நிலைமையின் வளர்ச்சிப் போக்குகளைப் பற்றி ஐரோப்பிய வாசகர்களுக்கு மிகவும் சரியான செய்திகள் கொடுப்பதற்கு மார்க்ஸ் மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். 1862 ஏப்ரல் 28 ஆம் தேதி அவர் எங்கெல்ஸிற்கு "இந்த முக்கியமான பிரச்சனையைப் பற்றி ஜெர்மனியில் மிகவும் சரியான கருத்தோட்டங்களைப் பரப்ப வேண்டிய" அவசியத்தைப் பற்றி எழுதினார்.

மார்க்ஸ் டி பிரஸ்ஸிக்கு எழுதிய பல கட்டுரைகள் இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நிலைமை, அங்குள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவை பற்றியதாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்நாட்டுப் போர் நிலையின் காரணமாய் அங்கிருந்து இங்கிலாந்திற்கு பருத்தி ஏற்றுமதி நிறுத்தப்பட்ட காரணத்தால் இங்கிலாந்தின் பஞ்சாலைத் தொழிலுக்கு ஒரு நாசகரமான விளைவு ஏற்பட்டிருப்பது பற்றிய மிகவும் விரிவான காட்சிப்பிடிப்பை அவர் கொடுத்தார். அவருடைய கட்டுரைகள், "இங்கிலாந்தில் நெருக்கடி", "இங்கிலாந்தில் தேவை நிறைந்த தொழிலாளர்கள்", ஆகியவை அங்கு வேலையில்லாமல் திண்டாடும் நெசவுத் தொழிலாளர்களின் பயங்கரமான வறுமையைப் பற்றி எடுத்துக் காட்டியது. ஆங்கிலேயத் தொழிலாளிவர்க்கம் மேலும் மேலும் அதிகமாக அரசியல் இயக்கங்களில் ஈடுபடுவதையும் மார்க்ஸ் கவனித்தார். அந்த செயல்பாடு சார்ட்டிஸ்டு இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தொழிற்சங்க வாதத்தின் வலுவான செல்வாக்குப் பிடிப்பின்கீழ் இருந்து வந்தது.

டி பிரஸ்ஸி பத்திரிகையில் மார்க்ஸினுடைய கட்டுரைகள் இரண்டாவது சாம்ராஜ்யத்தின் ஊழல்மிக்க ஆட்சி, அது ஆயுதங்களுக்காக அளவு கடந்து செலவு செய்வது, அதன் பகட்டான ஆடம்பரம் மிக்க அரச சபைகள் முதலியவைகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தன. மெக்ஸிகோவில் 1861-ல் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஆயுதத் தலையீட்டைத் தொடங்கின.

அதைத் தொடர்ந்து மூன்றாவது நெப்போலியனுடைய வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகளை அம்பலப்படுத்துவதற்கும் பல கட்டுரைகளை மார்க்ஸ் எழுதினார். இந்த ராணுவத் தலையீட்டின் பிரதான நோக்கம், அங்கு ஏற்பட்டுள்ள அராஜகத்தைத் தடுக்கப் போகிறோம் என்னும் பேரால் அந்த முகமூடியுடன் அங்கு ஜுரெஸ் தலைமையிலுள்ள முற்போக்கு சர்க்காரைத் தூக்கி எறிந்து விட்டு மெக்ஸிகன் குடியரசை ஐரோப்பிய வல்லரசுகளின் காலனியாக மாற்றுவதாகும் என்பதை மார்க்ஸ் தெளிவாக எடுத்துக்காட்டினார். மெக்ஸிகோவில் ராணுவத் தலையீடு பற்றிய மார்க்ஸினுடைய கட்டுரை காலனி ஆதிக்கத்தையும் தேசிய ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் ஒரு புதிய பங்களிப்பாகும்.

டி பிரஸ்ஸி பத்திரிகையின் பூர்ஷ்வா ஆசிரியர்கள் மார்க்ஸினுடைய கட்டுரைகள் பலவற்றை அதிகமாக புரட்சிகரமானதாக இருப்பதாகக் கருதினார்கள். 1861 ஆம் ஆண்டு முடிவில் மார்க்ஸினுடைய கட்டுரைகள் பல அச்சிற்குச் செல்லவில்லை என்பதை அவர் உணர்ந்தார். அவர் 1861 டிசம்பர் 27 ஆம் தேதியன்று எங்கெல்ஸிற்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்: "இந்தப் படுமோசமான பிரஸ்ஸி பத்திரிகை என்னுடைய கட்டுரைகளில் பாதியைக் கூட பிரசுரிக்கவில்லை."

அச்சுக்குப் போகாத கட்டுரைகளில் சில மெக்ஸிகோ படையெடுப்புப் பற்றியவை. அவை ஐரோப்பிய வல்லரசுகளின் காலனி ஆதிக்கப் பெருக்கக் கொள்கையைக் கண்டிப்பவையாகும்.

1862-ல் அப்பத்திரிகையின் ஆசிரியர்கள் மார்க்ஸினுடைய கட்டுரைகளைப் பிரசுரிப்பதை இன்னும் குறைத்துவிட்டார்கள். 1862 ஆம் ஆண்டில் லண்டனில் இரண்டாவது உலகத் தொழில் பொருள் காட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னர் பிரீட்லாண்டர் மார்க்ஸினுடைய எழுத்துரைகளை வெறும் செய்திகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ள முயன்றார்; இதர விஷயங்களைப் பற்றி வாரத்திற்கு ஒரு கட்டுரைகூட அனுமதிக்கவில்லை; இதன் இறுதி முடிவு 1862 டிசம்பரிலிருந்து அப்பத்திரிகைக்கு எழுதுவதை மார்க்ஸ் நிறுத்திக் கொண்டார்.

அமெரிக்க உள்நாட்டுப்போர்.

நியூயார்க் டெய்லி டிரிப்யூனுடன் சேர்ந்து உழைப்பது முடிவுற்றது.

1861 ஆம் ஆண்டு வசந்த காலத்திலிருந்து மார்க்ஸும் எங்கெல்ஸும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏற்படும் வளர்ச்சி நிலைகளில் அதிகமாகக் கவனம் செலுத்துவதில் முனைந்தார்கள். 1860-ல் அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஆப்ரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நீக்ரோ அடிமை முறையை எதிர்த்தவர். அவர், அடிமை முறையை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அது செயல்படுத்தப்படும் பிரதேசத்தை வரையறுக்க வேண்டும் என்னும் நம்பிக்கை கொண்டிருந்தார். இது தெற்குப் பகுதியிலிருந்த அடிமை உடைமையாளர்களை பகிரங்கமாக கலகத்தில் எழுவதற்குத் தூண்டியது. ஒவ்வொன்றாக தெற்குப் பகுதியில் இருந்த நாடுகள் ஒன்றியத்திலிருந்து பிரிந்து விட்டதாக அறிவித்தன. 1861 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி பிரிந்து சென்ற நாடுகளின் பிரதிநிதிகள் கூடி தனியான தெற்கத்திய மகா சமஷ்டியை அமைத்துக் கொண்டார்கள். 1861 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கலகப் படைகள் ஒன்றியத்தின் ஆயுதப்படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதுதான் மிகப்பெரிய அளவிலான கட்டுக்கடங்காதபடியான உள்நாட்டுப் போரின் ஆரம்பமாகும்.

அமெரிக்க உள்நாட்டுப்போர் 1865 ஏப்ரல் வரை தொடர்ந்து நடந்தது. இப்போர ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவமாக மார்க்ஸ் பார்த்தார். இதைப் பற்றி அவர் 40-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலும் டி பிரஸ்ஸி பத்திரிகைக்காக எழுதப்பட்டவை. ராணுவ அம்சங்களைப் பற்றிய விமர்சனங்களை எங்கெல்ஸ் இன்னும் செய்து கொண்டிருந்தார். 1862 டிசம்பருக்குப் பின்னர் போர் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றிய அறிக்கைகளை பத்திரிகைகளுக்கு மார்க்ஸால் அனுப்ப முடியவில்லை. டி பிரஸ்ஸியுடன் முறித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. நியூயார்க் டெய்லி டிரிப்யூனுக்கு அவர் அனுப்பிக் கொண்டிருந்த கட்டுரைகள் அதற்கு முன்னமேயே நிறுத்தப்பட்டு விட்டன. மார்க்ஸ் நியூயார்க் டெய்லி டிரிப்யூன் பத்திரிகையுடன் பத்தாண்டு காலம் தொடர்ந்து சேர்ந்து உழைத்தார். அந்த சேர்க்கை 1861 ஆரம்பத்திலேயே தேயத் தொடங்கி விட்டது. மார்க்ஸ் அனுப்பும் பத்திரிகைக்கான செய்திகளை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளும்படி அதன் ஆசிரியர்கள் ஆலோசனை கூறினார்கள். அக்டோபர் மாதம்வரை அவருடைய கட்டுரைகள் வெளியிடப்படுவது திரும்பவும் தொடங்கப்படவில்லை. கடைசியில் 1862- மார்ச் வாக்கில் தெற்குப் பிராந்திய நாடுகளுடன் சமரசம் செய்து கொள்வதன் ஆதரவாளர்கள் ஆசிரியர் குழுவில் மேலாதிக்கம் கொண்டபொழுது மார்க்ஸ் டிரிப்யூன் பத்திரிகையுடன் முறித்துக் கொள்ள வேண்டிய தேற்பட்டது.

மார்க்ஸ் டிரிப்யூனுடனும் அதன் பின்னர் டி பிரஸ்ஸி பத்திரிகையுடனும் முறித்துக் கொண்டதால் அவருடைய வருவாய் குறைந்து குடும்பத்தின் நிதி நிலையில் மிகுந்த பேரழிவு ஏற்பட்டது. 1862 ஆம் ஆண்டில் தன்னுடைய பொருளாதார ஆராய்ச்சிப் பணியை மீண்டும் தொடங்கியிருந்தார். அமைதியாக அந்த வேலையில் தொடர்ந்து ஈடுபடுவதற்குப் பதிலாக அவர் வாழ்க்கை நடத்துவதற்கு ஏதாவது வருவாய் தேடி அலைய வேண்டியதாயிற்று. 1863 ஆரம்பத்திலும் மார்க்ஸ் குடும்பக் கஷ்டத்தின் காரணமாய் ஒரு ரயில்வே கிளர்க் வேலைக்குக்கூட முயற்சித்தார். அவருடைய கையெழுத்து நன்றாக இல்லாத காரணத்தால் அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு அவ்வேலை கிடைக்கவில்லை. 1863 இறுதி வாக்கில் அவருடைய தாயார் வழியிலிருந்து கிடைத்த சிறிய சொத்தின் மூலம் கொஞ்சம் வருவாய் கிடைத்தது. அதையொட்டி குடும்பநிலை சற்று அபிவிருத்தியடைந்தது.

இவ்வாறாக, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் மார்க்ஸ், அமெரிக்க உள்நாட்டுப் போரின் ஆரம்ப கட்டங்களைப் பற்றித்தான் பத்திரிகைகளுக்கு எழுத முடிந்தது. ஆனால் அவர் அதற்குப் பின்னர் எங்கெல்ஸுக்கும் மற்றவர்களுக்கும் எழுதிய கடிதங்களில் மிகவும் நன்றாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. போர் நடைபெற்ற காலம் முழுவதையும் அக்கடிதங்களில் கொண்டு வந்திருந்தார். அவைகளில் போர் பற்றிய சம்பவங்கள் மற்றும் சிறப்பான தனிநபர்கள் பற்றிய அறிவுக் கூர்மை மிக்க அரசியல் விமர்சனங்கள் அடங்கியிருந்தன.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சம்பவங்களை ஒரு கூர்மையான பார்வை மிக்க சமூகவியல் நிபுணர் என்னும் வகையிலும் பிற்போக்கை எதிர்க்கும் ஒரு உணர்ச்சிமிக்க போராட்ட வீரர் என்னும் வகையிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளி மக்களின் பொதுவான நல உரிமைகளுக்காக உறுதியாக வாதாடி நிற்கும் வீரர் என்னும் வகையிலும் மார்க்ஸ் கருத்தில் கொண்டு ஆராய்ந்தார். அவருடைய கட்டுரைகளும் கடிதங்களும் அமெரிக்க உள் நாட்டுப் போரின் பொருளாதார மற்றும் சமுதாய வேர்களை வெளிப்படுத்தின. அதன் குணத் தன்மைகளையும் உந்து சக்திகளையும் பகுத்து ஆய்ந்தன. அந்த யுத்தம் இரண்டு சமுதாய அமைப்புகளுக்கிடையிலான போராட்டங்களின் காரணமாய் ஏற்பட்டன. வடக்குப் பகுதியிலுள்ள நாடுகளில் முதலாளித்துவ "சுதந்திர உழைப்பு முறை" அதாவது நவீன எந்திரத் தொழிலாளர்களின் கூலி உழைப்பு, கைத் தொழிலாளர்களின் உழைப்பு, விவசாயிகளின் உழைப்பு ஆகியவை மிகப் பெரும்பாலும் மேலாதிக்கம் கொண்டிருந்தன. தெற்குப் பகுதி நாடுகளில் அடிமை அமைப்பு முறை, நேரடியான உற்பத்தியாளர்களின் முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சுரண்டல் முறை நடைமுறையில் இருந்தது. "இந்தப் போராட்டம் வெடித்ததற்குக் காரணம் வட அமெரிக்காக்கண்டத்தில் இந்த இரண்டு வெவ்வேறு வகையான அமைப்பு முறைகளும் ஒன்றுக்கொன்று அருகில் சேர்ந்து அமைதியாக இருக்க முடியாது." அடிமை அமைப்பு முறை தொடர்ந்து நீடிப்பது என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சியுடன் ஒத்துப்போக முடியாதபடி மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டிருந்தது.

உள்நாட்டுப் போர் அடிமை முறையைப் பற்றிய பிரச்சனையைச் சுற்றி மையப்பட்டிருந்தது என்று மார்க்ஸ் வலியுறுத்திக் கூறினார். 1861 அக்டோபரில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "இந்த இயக்கம் முழுவதும் அடிமை முறை பற்றிய பிரச்சினை மீதே படிந்திருக்கிறது. தொடர்ந்து படியும் என்பதைக் காண முடியும். அதாவது, அடிமை அமைப்பு முறை உள்ள நாடுகளில் உடனடியாக அடிமைகள் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வில் அந்த அர்த்தத்தில் அல்ல. ஆனால் வடக்கில் உள்ள 2 கோடி சுதந்திரப் பிரஜைகள் தொடர்ந்து 3 லட்சம் அடிமை உடைமையாளர்களின் கூட்டாட்சிக்கு அடி பணிந்து கிடக்க வேண்டுமா என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. குடியரசின் பரந்த பிரதேசங்கள் சுதந்திர அரசுகளின் மயங்களாக இருக்க வேண்டுமா அல்லது அடிமை அமைப்பின் மயங்களாக இருக்க வேண்டுமா என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. இறுதியாக ஒன்றியத்தின் தேசியக் கொள்கை மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் ஆயுதபலத்தின் மூலம் அடிமை முறையை அமுல் படுத்த வேண்டும் என்னும் லட்சியத்தைக் கைக்கொள்ள வேண்டுமா என்பதே பிரச்சனையாக இருந்தது."

அமெரிக்க உள்நாட்டுப் போரின் வரலாற்று மூலாதாரத்தைக் குறிப்பிட்டு மார்க்ஸ் கூறினார்: பகைமைமிக்க சக்திகளுக்கிடையிலான போராட்டம் - நவீனத் தொழில் முறை வடக்கும் அடிமை அமைப்பு முறைத் தெற்கும் - "அந்த நாட்டின் அரை நூற்றாண்டு கால வரலாற்றின் அசையும் சக்தியாக இருந்திருக்கிறது." இந்தப் போராட்டத்தில் தெற்குப் பகுதி இடைவிடாமல் மிகவும் தீவிரமாகவும் முரட்டுப் பிடிவாதத்துடனுமான ஆக்கிரமிப்பு சக்தியாக, அடிமை முறை பற்றிய பிரச்சனை மீது வடக்குப் பகுதியின் மீது ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறது என்று "வட அமெரிக்காவில் உள்நாட்டுப்போர்" என்னும் தலைப்பிலுள்ள ஒரு கட்டுரையில் மார்க்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். அடிமை உடைமையாளர் ஆதிக்கக் கூட்டத்தின் வெற்றிக்குக் காரணம் வடக்குப் பகுதி நாடுகளில் இருந்த பெரும் பூர்ஷ்வா வர்க்கத்தின் ஆதரவு கிடைத்ததாகும். இந்தப் பெரும் பூர்ஷ்வா வர்க்கம் அடிமை உடைமையாளர்களான தோட்ட முதலாளிகளுடன் இணைப்பு வைத்துக் கொண்டிருந்தார்கள். அடிமை உழைப்பின் மூலம் உற்பத்தியான பருத்தி மற்றும் இதர உற்பத்திப் பொருள்களின் வாணிபத்தின் மூலம் அவர்கள் பணம் சம்பாதித்தார்கள். "1817 ஆம் ஆண்டு முதல் அடிமை உடைமையாளர்களின் அதிகரித்துக் கொண்டே வந்த தாக்குதல்களை எதிர்ப்பதற்கு அவ்வப்போது தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் இந்த எதிர்ப்பRevisionist கூட்டணியின் மூலம் ஒழிக்கப்பட்டன." இதற்கிடையில் பூர்ஷ்வா வர்க்கத்தின் முற்போக்கு வட்டாரங்கள், பிரதானமாக எந்திரத் தொழில் பூர்ஷ்வா வர்க்கமும் அடிமை அமைப்பு முறைக்கு எதிராகத் தங்களுடைய போராட்டத்தையும் தீவிரப்படுத்தினார்கள். இத்துடன் அடிமை முறையை எதிர்த்துள்ள விரிவான மக்கள் இயக்கமும் சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் லிங்கனுக்கு வெற்றியைக் கொடுத்தது.

பிரிட்டிஷ் பூர்ஷ்வாப் பத்திரிகைகளில், அமெரிக்கப் பிரிவினை இயக்கம் அமைதியாகவே நடந்துகொண்டிருப்பதாகப் பரப்பிய பொய்களையெல்லாம் மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். ஐரோப்பிய பத்திரிகைகள் தெற்குப் பகுதியின் அடிமை உடைமையாளர்களின் உண்மையான குறிக்கோள்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதற்குச் செய்த முயற்சிகளையும், சமஷ்டி சர்க்காரின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அந்த நாடுகளின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி வாதிடவும், அந்நாடுகள் ஸ்தல சுயாட்சியை நிறுவிக் கொள்ள வெறும் தற்காப்பு நடவடிக்கைகள்தான் எடுத்து வருகின்றன என்று வலியுறுத்தி வாதிடவும் செய்த முயற்சிகள் அனைத்தையும் உறுதியாக எதிர்த்து நின்று மார்க்ஸ் சரியான பதிலளித்தார். தெற்கில் ஒரு சிறு சுரண்டும் கூட்டம் அடாவடித்தனமாக மற்றவர்களைக் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தது என்றும் அச்செயல் தெற்கத்திய நாடுகளிலேயே உள்ள மிகப் பெரும்பாலான மக்களின் நலவுரிமைகளுக்கே எதிரானது என்றும் மார்க்ஸ் வலியுறுத்தி வந்தார். நீக்ரோ மக்களுக்கு அப்பால், தெற்கில் இருந்த அடிமை உடைமையாளர்களின் ஆதிக்கக் கூட்டம், "ஏழை வெள்ளையர்கள் என்று கூறப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கும் எதிராக இருந்தனர். அவர்களின் வாழ்க்கை நிலையை ரோமாபுரி படுமோசமாக வீழ்ச்சியடைந்த காலத்தில் ரோமில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலைக்குத்தான் ஒப்பிடலாம்." இந்தப் பிரிவினை இயக்கம் உண்மையில் ஒரு எதிர்ப்புரட்சிக் கலகமாகும். அடிமை உடைமையாளர்களின் கலவரமாகும். "எந்த வகையிலும் அது ஒரு தற்காப்புப் போராட்டம் அல்ல, ஆனால் அது ஒரு ஆக்கிரமிப்புப் போராட்டமாகும், அடிமை முறையை நீடித்து நிலைநிறுத்தவும் அதைப் பரப்பவும் நடத்தப்பட்ட போராகும்." வடக்கத்தியர்கள் ஒரு முற்போக்குப் போரை நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று வலியுறுத்திக் கூறிய மார்க்ஸ் அதே சமயத்தில் வடக்கு நாடுகளின் பூர்ஷ்வா வட்டாரங்கள் காட்டிய உறுதியற்ற நிலையையும் ஊசலாட்டத்தையும் கடுமையாகக் கண்டித்தார். குடியரசு சர்க்கார் ஆரம்ப முதற்கொண்டே இந்தப் போரை ஒரு நாடு தழுவிய புரட்சிப் போராக மாற்றுவதற்கு விரும்பாமல் இருந்ததைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இதை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பூர்ஷ்வா ஜனநாயகத்தின் ஒரு குறுகிய வரம்புக்குட்பட்ட தன்மையின் வெளிப்படுத்தலே என மார்க்ஸ் கண்டார். வடக்கத்திய சர்க்காரின் இந்தக் கொள்கைதான் போரின் ஆரம்ப நாட்களில் வடக்கத்தியர்களின் ராணுவத்தோல்விகளுக்குப் பிரதான காரணமாக இருந்தது. பொருளாதார பலமும் ஆள்பலமும் அதிகமாக இருந்தும் கூட அவர்களுடைய வேண்டா வெறுப்பான கொள்கையின் காரணமாக அத்தோல்விகள் ஏற்பட்டன.

வடக்கத்திய ராணுவத்தில் பிற்போக்கு அதிகாரிகள் சூழ்ந்து கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் தெற்கத்தியர்களுடன் ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்தனர் என்றும் மிகுந்த கோபக்கனலுடன் மார்க்ஸ் எழுதினார். நீக்ரோ பிரச்சனையில் வடக்கத்தியத் தலைவர்களை அவர்களுடைய கொள்கைகளைப் பலமாகக் கண்டித்து அவர் விமர்சனம் செய்தார். புரட்சிகரமான பேரெழுச்சி ஏற்பட்டு விடுமோ என்று பயந்து அவர்கள் முதலில் நீக்ரோ மக்களை ராணுவத்தில் சேர அனுமதிக்கவில்லை. வடக்கத்திய ராணுவத்தில் நீக்ரோக்களைச் சேர்ப்பது என்பது யுத்தத்தின் போக்கில் மிகப்பெரிய பிரம்மாண்டமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வடக்கின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என்றும் தெற்கத்திய அடிமை உடைமையாளர்களின் நிலையை பலவீனப்படுத்திவிடும் என்றும் மார்க்ஸ் நம்பினார். 1862 ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் எங்கெல்ஸிற்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "ஒரே ஒரு அமெரிக்க நீக்ரோ படைப்பிரிவு (ரெஜிமெண்ட்) இருக்குமேயானால், தெற்கத்தியர்களுக்கு சரியான நடுக்கத்தை உண்டாக்கியிருந்திருக்கும்." அடிமை அமைப்பு முறைக்கு எதிரான போராட்டம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உழைக்கும் மக்களுடைய நலவுரிமைகளுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டாளி வர்க்கத்தின் நலவுரிமைகளுக்கு சாதகமானது என்பதை வலியுறுத்திக் கூற மார்க்ஸ் ஒருபோதும் ஓய்ந்ததில்லை. காரணம் அடிமை அமைப்புமுறை தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு இடையூறாக இருந்தது. தங்களுடைய பொது சுரண்டலை எதிர்த்துள்ள போராட்டத்தில் வெள்ளையர்களையும் கருப்பர்களையும் அது பிளவுபடுத்தியது. அதனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தை பலவீனப்படுத்தியது. "வட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொழிலாளர்களின் ஒவ்வொரு சுயேச்சையான இயக்கமும், அடிமை அமைப்புமுறை குடியரசின் ஒரு பகுதியை அசிங்கப்படுத்தும் வரை முடக்கப்படுகிறது."

அடிமை அமைப்பு முறையை எதிர்த்துள்ள போராட்டத்தில் மக்கள் ஒரு தீர்மானமான பங்கை ஆற்றக்கூடும் என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். விடுதலை விருப்பம் கொண்ட அமெரிக்க விவசாயிகளும் தொழிலாளர்களும் வடக்கத்திய சர்க்கார்மீது ஒரு வலுவான செல்வாக்கைச் செலுத்தி யுத்தமுறைகளை மாற்றிக் கொள்ளும்படி அதைச் செய்ய வைக்கும் என்று மார்க்ஸ் எதிர் பார்த்தார். உள்நாட்டுப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, விரிவான மக்கள் பகுதியினுடைய மேலும் மேலும் அதிகமாகி உயர்ந்து கொண்டே சென்ற அவர்களுடைய நடவடிக்கைகள் ஒரு உண்மையான புரட்சியாக மாற்றம் கொண்டு அந்த எரி நெருப்பில் தோட்ட முதலாளிகளின் ஆதிக்கக் கூட்ட ஆட்சியும் வடக்கிலுள்ள அவர்களுடைய கள்ளக் கூட்டாளிகளின் துரோகச் செயல் திட்டங்களும் பொடி சாம்பலாகி நொறுங்கும் என்று எதிர்பார்த்தார். "இறுதியில் வடபகுதி விசுவாசமாகவே மிகுந்த அக்கறையுடன் போரை நடத்தும், புரட்சிகரமான முறைகளை கையாளும், அடிமை எல்லையில் இருக்கும் ராஜதந்திரிகளை தலைமையிலிருந்து தள்ளுபடி செய்யும்" என்று மார்க்ஸ் நிச்சயமாக உணர்ந்தார். 1862 ஆகஸ்டில் அவர் எழுதினார்: "இதுவரை உள்நாட்டுப் போரின் முதல் காட்சியைத்தான் பார்த்திருக்கிறோம் - அதாவது போரின் அரசியல் சாசன நடத்தையைக் கண்டிருக்கிறோம். இரண்டாவது காட்சி போரின் புரட்சிகரமான நடத்தை இனிமேல்தான் இருக்கிறது."

மார்க்ஸினுடைய முன் கணிப்பு மிகவும் சரியென முழுமையாக நடந்து விட்டது. 1862 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெகுஜன இயக்கத்தில் வலுவான நிர்ப்பந்தங்களின் காரணமாய் லிங்கன் சர்க்கார் பல புரட்சிகரமான ஜனநாயக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதேற்பட்டது. அவைகள் இறுதியாக, வடக்கிற்கு வெற்றியைத் தேடித்தந்தன. லிங்கன் எடுத்த நடவடிக்கைகளை, கொண்டு வந்த சட்டங்களை மார்க்ஸ் ஆதரித்தார் - ஒரு நீக்ரோ படைப்பிரிவை (ரெஜிமென்டை) உருவாக்குவதற்கு அனுமதி கொடுத்தது, கலகக்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான சட்டம் முதலியனவற்றை ஆதரித்தார். குறிப்பாக 1862 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி லிங்கன், கலகக்கார தோட்ட முதலாளிகளுக்குச் சொந்தமாக இருந்த நீக்ரோ அடிமைகளை விடுவித்து, விடுதலைப் பிரகடனம் செய்ததைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அடிமைகளை விடுவித்த அந்தப் பிரகடனத்தில் சில குறைபாடுகள் இருந்ததை, விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கு நிலம் கொடுக்காதது பற்றி மார்க்ஸ் தெளிவாகக்கண்டார். ஆயினும் அந்தப் பிரகடனத்தின் அளப்பரிய மிகப் பெரிய புரட்சிகரமான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவருடைய "வட அமெரிக்க சம்பவங்கள் பற்றி" என்னும் கட்டுரையில் அவர் கூறியுள்ளார்: லிங்கனுடைய பிரகடனம் "அமெரிக்க வரலாற்றில் அந்தக் கட்டமைப்பு அமைக்கப்பட்ட காலத்திற்குப் பின்னர் கொண்டு வரப்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு ஆவணமாகும்." இப்பிரகடனம் உள்நாட்டுப்போர் ஒரு புதிய கட்டத்திற்கு மாறியதை, புரட்சிகரமான வழியில் நடத்தப்பட்ட போரைக் குறித்தது.

அதே கட்டுரையில் மார்க்ஸ் லிங்கனைப்பற்றிய ஒரு விரிவான வர்ணனையைக் கொடுத்துள்ளார். மக்களுடைய குரலுக்கு செவி கொடுக்க ஒரு தலைசிறந்த ராஜதந்திரி என்று குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸ் லிங்கனை மக்களின் மனிதர் என்ற வகையிலும் உணர்விலும் வாழ்க்கை வழி முறையிலும் ஒரு சாதாரண மனிதரைப் போல் இருந்ததையும் மார்க்ஸ் பெரிதும் விரும்பினார். லிங்கனுடைய எளிய முறை, அவருடைய திறமை, மிகவும் மேல் ஏறிய பகட்டாரவாரத்திற்கு சாயவும் ஈடுபடவும் அவர் மறுத்து நின்றது ஆகியவைகளை மார்க்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். லிங்கனை அவருடைய குறுகிய பூர்ஷ்வா எல்லைகளுக்காகவும், சில விஷயங்களில் உறுதியற்ற நிலையின் காரணமாகவும் அவரை மார்க்ஸ் விமர்சனம் செய்த போதிலும் அவருடைய செயல்களை மிகவும் உயர்வாகப் புகழ்கிறார். "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வரலாற்றிலும் மனித குலத்தின் வரலாற்றிலும் லிங்கன், வாஷிங்டனுடன் அணி நிற்பவராவார்."மார்க்ஸ், உள்நாட்டுப் போரைப் பற்றி புரட்சி இயக்கத்தின் ஒட்டுமொத்தமான வாய்ப்புகளின் வெளிச்சத்தில் பரிசீலித்து நிர்ணயம் செய்தார். நீக்ரோ அடிமை முறையை ஒழிப்பதற்கான போராட்டம், அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தையும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் ஆகிய இரண்டையும் ஒன்று திரட்டுவதற்கான பிரதான அம்சமாக இருந்தது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அடிமை உடைமையாளர்களின் கலவரம் "உழைப்பாளர்களுக்கு எதிராக சொத்துடைமைக்காரர்களின் ஒரு பொதுவான புனிதப் போராட்டத்திற்கான அபாய எச்சரிக்கையின் மணியோசையை" ஒலித்தது என்று மார்க்ஸ் கவனித்துக் குறித்தார். உலகம் முழுவதிலும் இருந்த உழைக்கும் மக்களின் எதிர்காலம் வடக்கின் வெற்றியிலோ அல்லது தோல்வியிலோ சுழன்று கொண்டிருந்தது. அமெரிக்க பூர்ஷ்வா வர்க்கம் மக்களுடைய வெற்றியின் பலாபலன்களை அபகரித்துக் கொள்வதற்கு எவ்வளவுதான் கடுமையாக முயற்சித்தாலும் அல்லது நீக்ரோ மக்களின் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முயற்சித்தாலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு புரட்சிகரமான வழிமுறையின் மூலம் அடிமை முறை ஒழிக்கப்பட்டதானது அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறங்களிலும் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு வலுவான தூண்டு விசையைக் கொடுக்கிறது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான், அவர், ஐரோப்பிய தொழிலாளி வர்க்கத்திற்கும் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்னும் அமெரிக்கர்களுக்கும், ஒடுக்கப்பட்ட நீக்ரோ மக்களுக்கும் இடையில் ஒருமைப்பாட்டைக் கொண்டு வருவதற்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றி எழுதப்பட்ட அவருடைய கட்டுரைகள் அனைத்தும் தேசிய இன, நிற வேறுபாடின்றி எல்லா நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் ஒரே பொதுவான நலவுரிமை இருக்கிறது என்னும் கருத்தை முன்னுக்குக் கொண்டு வந்து வைத்தது. இது, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்னும் மிகப் பெரிய மகத்தான கோட்பாடுகளின் மேலும் விரிவாக்கப்பட்ட ஒரு விளக்கமாகும்.

வடக்கை ஆதரித்து ஆங்கிலேயத் தொழிலாளர்களின் இயக்கம்

ஆங்கிலேய ஆளும் வட்டாரங்கள் தெற்கை ஆதரித்து வெளிப்படையாகவே அமெரிக்க உள்நாட்டுப் போரில் தலையிடுவதற்கு விரும்பியதற்கு எதிராக ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் நடத்திய ஆட்சேபணை இயக்கம், சர்வதேச ஒருமைப்பாட்டுணர்வில் பாட்டாளி வர்க்கத்திற்கு ஞானமூட்டுவதில் மிகப் பெரிய பங்கை ஆற்றியிருக்கிறது என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். போரின் தொடக்கத்திலிருந்தே ஆங்கிலேய அரசாங்கம் தெற்கத்திய தோட்ட முதலாளிகளையே ஆதரித்து நின்றது. அவர்களுக்கு ஆயுத தளவாடங்களையும் இதர பல பொருள்களையும் கொடுத்து உதவினார்கள். ஆங்கிலேய கப்பல் கட்டும் தொழிற்சாலைகளில் அவர்களுடைய போர்க் கப்பலைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆங்கிலேய பூர்ஷ்வா வர்க்கமும் மேல்தட்டுக் கூட்டமும் அமெரிக்க வடக்குப் பகுதிக்கு எதிராகத் தலையிடுவதற்கும் தெற்குப் பகுதிக்கு ஆயுத தளவாட உதவியைக் கொடுப்பதற்காகப் பிற்போக்கு ஐரோப்பிய அரசுகளைக் கொண்ட கூட்டணியை ஸ்தாபிப்பதற்கும் கூட்டுச் சதி செய்து கொண்டிருந்தார்கள். எனினும் இந்தத் திட்டங்களையெல்லாம் ஆங்கிலேய மக்கள் குறிப்பாகத் தொழிலாளி வர்க்கம் கடுமையாக எதிர்த்தது.

"ஆங்கிலேய பொது ஜன அபிப்பிராயம்", "லண்டன் தொழிலாளர்களின் ஒரு கூட்டம்" மற்றும் இதர தலைப்புகளைக் கொண்ட அவருடைய பல கட்டுரைகளில், மார்க்ஸ் வெளிநாட்டுக் கொள்கையின்பால் தனது செயலூக்கமிக்க செல்வாக்கைச் செலுத்துவது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் முன்புள்ள ஒரு மிக முக்கிய கடமை என்று கருதினார். ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய சர்வதேசக் கடமைக்கு விசுவாசமாக இருந்தது என்றும் எடுத்துக் காட்டியுள்ளார். 1861 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் நடத்தப்பட்ட எண்ணற்ற பல கூட்டங்களில் ஆங்கிலேயத் தொழிலாளர்கள், அடிமை முறையைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட மானக்கேடான ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு உறுதியாகக் குரல் கொடுத்தார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போரின் காரணமாய் இங்கிலாந்தில் இருந்த பஞ்சாலைத் தொழிலுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டு அதன் காரணமாய் ஆங்கிலேயத் தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையுற்றிருந்த போதிலும் அவர்கள் நிலை தடுமாறாமல் உறுதியாக நின்றார்கள் என்று மார்க்ஸ் கூறினார். தொழிலாளர்களின் கடுமையான ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களை அமெரிக்க வடக்கத்திய நாடுகளுக்கு எதிராக வெறுப்பை உண்டாக்குவதில் சர்க்கார் வெற்றி பெறவில்லை.

ஆளும் மேல் தட்டுக் கூட்டம் எடுத்த முயற்சிகள் எப்படியிருந்த போதிலும் இங்கிலாந்தில் வடக்குப் பகுதிக்கு அதிக அனுதாபம் வளர்ந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய தொழிலாளர் பொதுக் கூட்டங்கள் லண்டன், மான்செஸ்டர், ஷெப்பீல்டு முதலிய நகரங்களில் 1862 மற்றும் 1863 ஆம் ஆண்டுகளில் நீக்ரோ அடிமை அமைப்பிற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்காக நடத்தப்பட்டன. 1863 மார்ச் 26 ஆம் தேதி லண்டன் தொழிற்சங்கக் கவுன்சிலின் சார்பில் செயின்ட் ஜேம்ஸ் ஹாலில் நடைபெற்ற ஒரு மிகச் சிறந்த மனதில் ஆழமாகப் பதியத்தக்க ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மார்க்ஸ் கலந்து கொண்டார். ஆங்கிலேய பூர்ஷ்வா வட்டாரங்களைப் போல அல்லாமல் இக்கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் வடக்கத்திய சர்க்காருக்கு உறுதியாக ஆதரவு கொடுத்துக் குரல் எழுப்பினார்கள். இந்தக் கூட்டத்தைப் பற்றிய தனது கருத்துக்களை விவரித்து மார்க்ஸ் எங்கெல்ஸிற்கு 1863 ஏப்ரல் 9 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்: "தொழிலாளர்களே மிகவும் சிறந்த முறையில் பேசினார்கள். பூர்ஷ்வா படாடோபம் ஆரவாரம் எதுவும் இல்லை; முதலாளித்துவத்தின்பால் அவர்களுக்கு இருந்த எதிர்ப்பைக் கொஞ்சம்கூட மூடி மறைக்கவில்லை."

ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கத்தின் இந்த சர்வதேச நிலையை மார்க்ஸ் மிகப் பெரும் அளவில் மதித்தார். 1863 அக்டோபரில் அவர் கவனித்துக் கூறினார்: "ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம், அழியாத பெரும் புகழை வரலாற்றில் பெற்றுவிட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடர்வதால் ஒரு பத்து லட்சம் பேருக்கு வேலையின்மையும், துன்ப துயரங்களும் வறுமையும் ஏற்படுகிறது என்னும் நிலைமை மிகுந்த போதிலும், அமெரிக்க அடிமை உடைமையாளர்களுக்குச் சாதகமாகத் தலையிடுவதற்கு ஆளும் வர்க்கங்கள் செய்த அத்தனை முயற்சிகளையும் தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் உணர்ச்சி மிக்க மிகப்பெரிய பொதுக்கூட்டங்கள் மூலம் எதிர்த்து அடித்து நொறுக்கியுள்ளது."

ஆங்கிலேயத் தொழிலாளர்கள் நடத்திய தலையீட்டு எதிர்ப்பு இயக்கத்தைப் பற்றிய மார்க்ஸின் கட்டுரைகள் சர்வதேச மோதல் விவகாரங்களில் பாட்டாளி வர்க்கக் கொள்கை வழியை வகுத்துக் கொள்வதற்கும் அதை உறுதியாக எடுத்துக் கூறி வலியுறுத்துவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்குக் கற்றுக் கொடுத்தது.

1863-64 ஆம் ஆண்டின் போலந்து புரட்சிக் கிளர்ச்சியின்பால் மார்க்ஸின் மனப்பான்மை

1863 ஆரம்பத்தில் மற்றொரு புரட்சிப் போராட்ட மையம் தோன்றத் தொடங்கியது. ஜனவரி 22 மற்றும் 23 தேதிகளில் ஜாரிஸ்ட் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இருந்த போலந்து பகுதிகளில் கொரில்லாப் போராட்டம் தொடங்கி ஒரு தேசிய விடுதலைப் புரட்சிக் கிளர்ச்சித் தாக்குதல் வெடித்தது.

மார்க்ஸ் இதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணினார். போலந்து மக்களின் இதற்கு முந்தைய பேரெழுச்சிகளுக்கு மாறாக இந்தக் கிளர்ச்சி ஒரு புதிய பின்னணியில் தொடங்கியது. இத்தருணம் ஒரு பெரிய புரட்சிப் பேரெழுச்சி மேற்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பாவிலும் - ரஷ்யாவில் 1861 சீர்திருத்தத்தில் அதிருப்தி ஏற்பட்டிருந்த காரணத்தால் மக்களிடம் புரட்சிக் கொந்தளிப்பு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இது போலந்தின் பகுதிகளில் புரட்சிக் கிளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருந்தன. இந்தச் சம்பவங்களின் சாதகமான திருப்பத்தில் இது ஒரு அனைத்து ஐரோப்பிய புரட்சிக்கு ஆரம்பப் புள்ளியாக ஆகக்கூடும் என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்கள். போலந்தின் புரட்சிக் கிளர்ச்சி ஒரு ரஷ்யப் புரட்சிக்கான தீப்பொறியைக் கிளப்பிவிட உதவும் என்றும் அதன் பிறகு அதனுடன் சேர்ந்து அது அப்புரட்சித் தீயை அருகிலுள்ள ஜெர்மனிக்கு குறிப்பாக பிரஷ்யாவிற்கும் எடுத்துச் செல்லும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது பிரஷ்யா ஒரு கடுமையான அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்தது. இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அத்தகைய அரசியல் நெருக்கடி சூழ்ந்து கொண்டிருந்தது. 1863 பிப்ரவரி 13 ஆம் தேதி மார்க்ஸ் எங்கெல்ஸிற்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "போலந்து விவகாரத்தைப் பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ஒரு விஷயம் மிகவும் தெளிவாகும். ஐரோப்பாவில் மீண்டும் ஒரு புரட்சி சகாப்தம் மிகவும் நல்ல முறையில் தொடங்கியிருக்கிறது... இந்தத் தடவை அப்புரட்சியின் எரிமலைக் குழம்பு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் - மற்ற எதிர்திசையில் அல்ல - என்று நம்புவோமாக."

இந்தப் புரட்சிக் கிளர்ச்சிக் காலம் முழுவதிலும் மார்க்ஸும் எங்கெல்ஸும் ஒருவருக்கொருவர் கடிதத் தொடர்புடன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். கிளர்ச்சி வீரர்களின் வெற்றி வாய்ப்புகளைப் பற்றி எழுதிக் கொண்டார்கள். போலந்தின் சம்பவங்கள், இதர நாடுகளின் புரட்சி இயக்கத்தில் எத்தகைய அடையாளப் பதிவுகளை உண்டாக்குகின்றன என்பதைக் கலந்து கொண்டார்கள். கிளர்ச்சி முகாமிற்குள்ளே குழுக்களுக்கிடையில் இருந்த போராட்டத்தைப் பற்றி கூர்மையாகக் கவனித்தார்கள். வெளிநாட்டு அரசியல் சக்திகள் கிளர்ச்சி நிகழ்ச்சிப் போக்கில் செலுத்தும் செல்வாக்கைப் பற்றி ஆய்ந்து நிர்ணயம் செய்தார்கள்.

மார்க்ஸும் எங்கெல்ஸும் போலந்து கிளர்ச்சியின் வெற்றி இரண்டு அம்சங்களைப் பொறுத்திருக்கிறது என்று கருதினார்கள். போலந்தின் விரிவான விவசாயப் பகுதியினர் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வது மற்றும் ரஷ்யாவில் ஒரு விவசாயப் புரட்சி நடப்பது. அது போலந்து மக்களின் விடுதலைப் போராட்டத்தை ரஷ்யப் புரட்சி இயக்கத்துடன் இணைப்பதற்கு உதவி செய்யும். இவர்களுடைய கருத்தோட்டங்கள், ரஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதிகளுடைய கருத்தோட்டங்களுடனும், போலந்திலிருந்த "சிவப்பு" புரட்சிக் கட்சியின் உறுப்பினர்களுடைய கருத்தோட்டங்களுடனும் ஒத்திருந்தது. போலந்தில் "சிவப்பு" புரட்சிக் கட்சி என்பது 1861 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருந்தது. மிகவும் நெடிது நோக்குப் பார்வை கொண்ட போலந்து மற்றும் ரஷ்யப் புரட்சிக்காரர்கள் சேர்ந்து, ரஷ்யாவிலும் போலந்திலும் இருந்த புரட்சிகர சக்திகளை ஒன்றுபடுத்துவதற்கு மிகவும் கடினமாகப் பாடுபட்டார்கள். 1862-ல் இவர்களுக்கிடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 1863 வசந்த காலத்திற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் போலந்து புரட்சிக் கிளர்ச்சிக்கு ரஷ்யப் புரட்சிக்காரர்கள் ஆதரவு கொடுப்பார்கள். இந்த ஏற்பாட்டைப் பற்றி மார்க்ஸிற்கும் எங்கெல்ஸிற்கும் தெரியாது. இருப்பினும் அவர்கள், சரியான நிலைமை ஏற்படுமானால் போலந்து புரட்சிக் கிளர்ச்சியானது ரஷ்யாவில் விரிவான விவாயிகள் பகுதியினர் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு தூண்டு விசையைக் கொடுக்கும் என்றும் அது ரஷ்யப் புரட்சியாளர்களிடமிருந்து ஒரு சக்தி மிக்க ஆதரவைப் பெறும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இருப்பினும் 1863 கோடை காலத்திற்குள் மார்க்ஸும் எங்கெல்ஸும் போலந்தின் புரட்சிக் கிளர்ச்சிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன என்னும் முடிவுக்கு வந்தார்கள். போலந்தில் வந்த இயக்கம் ஒரு விவசாயப் புரட்சியாக வளர்ச்சி யடையத் தவறிவிட்டது என்றும், ரஷ்யாவிலும் விவசாயிகளின் அமைதியின்மையும் தணிந்து மறையத் தொடங்கி விட்டது என்றும் அவர்கள் மிகவும் வருத்தத்துடன் கண்டறிந்தார்கள். போலந்து புரட்சிப் போர் வெற்றி பெறாமல் போனதற்குப் பிரதான காரணம் கிளர்ச்சிப் படைகளின் பொதுவான மொத்தத் தன்மையை "வெள்ளை"க் கட்சி பிடித்துக் கொண்டதும், அத்தலைமை ஒரு வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தைக் கொண்டுவரப் பாடுபடுவதற்குப் பதிலாக பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து உதவியை எதிர்பார்த்தன என்றும் மார்க்ஸ் கண்டார். "வெள்ளை"க் கட்சி பெரிய நிலவுடைமையாளர்கள் மற்றும் பூர்ஷ்வா மேல்தட்டுக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. போலந்தின் புரட்சிக் கிளர்ச்சி ஒரு விவசாயப் புரட்சியாக வளரவிடாமல் தடுப்பதற்குத் தங்களால் ஆன அனைத்தையும் அவர்கள் செய்தார்கள். "வெள்ளை"க் கட்சித் தலைவர்கள் உக்ரேன் மற்றும் பிலோ ரஷ்யாப் பகுதிகள் சிலவற்றையும் தங்களுடையது என்று உரிமை கொண்டாடினார்கள். வெளிநாடுகளில் இருந்த போலந்தின் மேல்தட்டு செல்வந்தர்கள் பலருடன் தொடர்பு கொண்டார்கள். இளவரசர் ஸார்ட்டோரிஸ்கி அப்போது பாரீஸில் குடியிருந்தார். அவர் மூலம் மூன்றாவது நெப்போலியன் மற்றும் பால்மெர்ஸ்டனுடைய அரசுகளுடன் உறவுகள் வைத்துக் கொண்டார்கள். "வெள்ளை"க் கட்சியினரின் மேற்கத்திய ஆதரவுக் கொள்கை எழுச்சி இயக்கத்திற்குப் படுமோசமான நாசகர விளைவுகளை ஏற்படுத்தியது. 1863 ஆகஸ்டு 15 ஆம் தேதி மார்க்ஸ் எங்கெல்ஸிற்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்: "போலந்து விவகாரம், பவுஸ்ட்ராப் பாவExchange மற்றும் அவருடைய சூழ்ச்சியின் உதவியால் ஸார்ட்டோரிஸ்கி கட்சி பெற்ற செல்வாக்கின் காரணமாகவும் முழுமையாக அழிந்து விட்டது."

எங்கெல்ஸிற்கு எழுதிய பல கடிதங்களில் மார்க்ஸ், பிரான்ஸும் இங்கிலாந்தும், போலந்தும் கிளர்ச்சிக்காரர்கள் சம்பந்தமாக அனுசரித்த ஆத்திரமூட்டும் கொள்கையைக் கடுமையாகக் கண்டனம் செய்தார். இந்த அரசுகள் உண்மையில் புரட்சிக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்குவதற்கு உடந்தையாக செயல்பட்டன என்றும், ஜாரிஸத்திற்கு தனது படுகொலை நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவி செய்தன என்றும் எடுத்துக் காட்டினார். பிரெஞ்சு மற்றும் இங்கிலாந்தின் சர்க்கார்கள், கிளர்ச்சிக்காரர்களுக்கு அனுதாபம் காட்டுவதாகப் பாசாங்கு செய்தார்கள். ஆனால் மிகவும் நெருக்கடியான நேரத்தில் கைவிட்டு விதிவழி தள்ளி விட்டார்கள். அவர்கள் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்மானங்கள் வழியில் சென்றார்கள். போலந்துக்கு உண்மையான உதவி எதுவும் செய்யவில்லை. பிரான்ஸும் இங்கிலாந்தும் போலந்தின் விவகாரங்களில் தலையிட்டதற்குக் காரணம் அவர்களுக்கென்று தனியாகச் சில தன்னல நோக்கங்கள் இருந்தன என்று மார்க்ஸ் வலியுறுத்திக் கூறினார். மூன்றாவது நெப்போலியன் சர்வதேச நிலைமையை மிகவும் மோசமடையச் செய்து அதன் மூலம் தனக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டு ரைன் நதியின் இடதுபக்கக் கரைப்பகுதியைப் பிடித்துக் கொள்ளவும் வேறு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நம்பிக் கொண்டிருந்தார். புரட்சிக் கிளர்ச்சி ஆரம்பமானவுடன் பிரெஞ்சு சக்கரவர்த்தியின் சூழ்ச்சித் திட்டங்கள் எவ்வாறு வந்தன என்பதை மார்க்ஸ் கண்டார்.

1863 பிப்ரவரி 21 ஆம் தேதி அவர் எங்கெல்ஸிற்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "போலந்து விவகாரத்தில் நான் அதிகமாகப் பயப்படுவது என்னவென்றால், அந்தப் பன்றி போனபார்ட் ஏதாவது ஒரு சாக்கைக் கண்டுபிடித்து ரைன் நதி பக்கம் படையெடுத்து வந்து, ஒரு சிக்கலான நிலைமையிலிருந்து தன்னை மீண்டும் விடுவித்துக் கொள்வதற்கு முயற்சிப்பான்."

போலந்து புரட்சிக் கிளர்ச்சிக்கு அனுதாபம் தெரிவித்து பால்மெர்ஸ்டன் செய்த பிரகடனத்தின் பின்னாலும் இருந்த உண்மையான உள்நோக்கத்தை மார்க்ஸ் உணர்ந்தார். ஆங்கிலேய பிரதம மந்திரி, ரஷ்யாவின் ராஜதந்திர உறவு நிலைமைகளில் சிக்கல்களை உண்டாக்கி, பிரான்ஸை சில நடவடிக்கைகளுக்குத் தூண்டிவிட்டு, கிரிமிய யுத்தத்திற்குப் பிறகு பிரான்ஸ் - ரஷ்யாவிற்குமிடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதற்குத் தொடங்கியுள்ளதைக் குலைத்து ஸ்தம்பிக்கச் செய்யவும் நம்பிக் கொண்டிருந்தார்.

பிஸ்மார்க் தலைமையில் உள்ள பிரஷ்ய சர்க்காரைப் பொறுத்தவரையில் போலந்தின் புரட்சிக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு ஜாரிஸத்திற்கு மிகவும் செயலூக்கமிக்க உதவியை, ஆதரவைக் கொடுக்கும் என்பதில் மார்க்ஸிற்கு தொடக்கத்திலிருந்தே எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் நிலை மிகவும் சரியென்று நிரூபிக்கப்பட்டு விட்டது. 1863 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஜாரிஸ்ட் சர்க்காரும் பிரஷ்ய சர்க்காரும் சேர்ந்து, கிளர்ச்சிக்காரர்களை கூட்டாக ஒடுக்குவதற்கு ஒரு தற்காலிகமான உடன்படிக்கை செய்து கொண்டனர். இது ஒரு படுமோசமான எதிர்ப்புரட்சி நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைக்கு உண்மையில் பிரஷ்யன் லிபரல் பூர்ஷ்வா வர்க்கம் ஆதரவு கொடுத்தது. மாகாண சட்டமன்றத்தில் லேசான பயங்கொள்ளித்தனமான விமர்சனத்துடன் நிறுத்திக் கொண்டது. பிஸ்மார்க்கிற்கு பயந்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த பிரஷ்ய மிதவாதிகளின் கோழைத்தனத்தை மார்க்ஸ் மிகுந்த கோபத்துடன் கடுமையாகக் கண்டித்தார்.

அவருடைய பங்கிற்கு மார்க்ஸ் போலந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு தன்னால் இயன்ற அனைத்தும் செய்தார். மேற்கு ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக வட்டாரங்களில், ஒடுக்கப்பட்டுள்ள போலந்து மக்கள்பால் உள்ள அனுதாபத்தைப் பயன்படுத்தி போலந்து மக்களுக்கு மிகச்சரியான பயனுள்ள உதவியைச் செய்வதற்கு திரட்ட வேண்டும், அத்துடன் எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் சர்வதேச சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். மார்க்ஸ் லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தை ஊக்குவித்து போலந்துக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஏற்பாடு செய்தார். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் இன்னும் ஜெர்மனியிலேயே உள்ள ஜெர்மன் தொழிலாளர்களுக்கிடையில் போலந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு நிதி வசூல் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

1863 செப்டம்பரில் போலந்து நாட்டு ராணுவத் தளபதி கர்னல் லாப்பின்ஸ்கி என்பவர் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக ஒரு ஜெர்மன் படைப்பிரிவு உதவி வேண்டும் என்று வேண்டிக் கொண்டபோது மார்க்ஸ் இதற்கு மிகவும் முகமலர்ச்சியுடன் ஆதரவு தெரிவித்தார். 1863 செப்டம்பர் 12 ஆம் தேதி அவர் எங்கெல்ஸிற்குத் தகவல் கொடுத்தார். "இந்த விஷயம் மிகச் சிறந்த ஒன்றாகும்" என்றார். மார்க்ஸ், லாப்பின்ஸ்கிக்கு உதவி செய்வதற்கு பல நடைமுறை நடவடிக்கைகள் எடுத்தார். நிதி வசூல் செய்து உதவி செய்ய ஏற்பாடு செய்தார். எங்கெல்ஸிற்குக் கடிதம் எழுதி மான்செஸ்டரில் நிதிவசூலிக்க ஏற்பாடு செய்தார். எனினும் லாப்பின்ஸ்கியின் படையெழுச்சி நடைபெறவில்லை. நிதிக்குறைவின் காரணமாக மட்டுமல்ல, "வெள்ளை"க் கட்சியினர் இதற்கு எதிர்மறையான நிலை எடுத்தனர். கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு வெளிநாட்டுப் புரட்சிப் படைப்பிரிவுகள் வருவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

போலந்தின் புரட்சிக் கிளர்ச்சி, அதற்கான ஆதரவு இயக்கம் ஆகியவற்றின் அனுபவங்களிலிருந்து, போலந்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமானால் ரஷ்யாவினுடைய புரட்சி இயக்கத்துடனும், ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கத்துடனும் மிக நெருக்கமாக தொடர்பும் கூட்டணியும் வைத்துக் கொள்வதன் மூலமாகத்தான் முடியும் என்னும் முடிவுக்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் வந்தார்கள். மேலும், ஒரு ஒடுக்கப்பட்ட நாடு வெற்றிபெற வேண்டுமானால் ஒரு முக்கியமான நிபந்தனை அது தனது தேசிய சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் உள்நாட்டுப் புரட்சிகரமான மாற்றத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயப் பிரச்சனைக்கு ஜனநாயக வழிகளில் ஒரு தீர்வு காண்பதை சேர்த்து இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

போலந்துபற்றி ஒரு பிரசுரம் கொண்டு வருவதற்கான பணி

மார்க்ஸ் பத்திரிகைகள் மூலமும் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்யலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். பிரஷ்யாவும் ரஷ்யாவும் சேர்ந்து கூட்டாக நின்று புரட்சிக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்குவதற்கு தற்காலிகமான உடன்பாடு செய்துள்ளார்கள் என்று அறிந்தவுடனே அவர் எங்கெல்ஸுடன் சேர்ந்து போலந்தைப் பற்றி ஒரு தனி பிரசுரம் எழுதுவது என்று தீர்மானித்தார். பெர்லின் போலீஸிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போலீஸிற்கும் இடையிலுள்ள கூட்டுறவை அம்பலப்படுத்தவும், போலந்தைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பிற்போக்கு சக்தியை எதிர்த்தும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு ஜெர்மனியின் ஜனநாயக வட்டாரங்களைத் தூண்டவும் விரும்பினார். இந்தப் பிரசுரத்தில் வரலாறு, ராஜதந்திர உறவு பற்றிய பகுதியை மார்க்ஸும் ராணுவம் பற்றிய பகுதியை எங்கெல்ஸும் எழுதுவது என்று தீர்மானித்தனர். 1863 பிப்ரவரி கடைசியில் எங்கெல்ஸ் மார்க்ஸிற்கு எழுதிய கடிதத்தில் ஒரு தோராயமான திட்டம் வகுத்து அனுப்பியிருந்தார். அந்தப் பிரசுரத்திற்கு கீழ்க்கண்ட தலைப்பை குறிப்பிட்டிருந்தார்: ஜெர்மனியும் போலந்தும் போலந்தின் 1863 ஆம் வருடத்திய புரட்சிக் கிளர்ச்சியின் அரசியல்-ராணுவப் பிரதிபலிப்புகள்.

இந்தப் பிரசுரம் மார்க்ஸினுடைய உடல்நலக் குறைவின் காரணமாய் பூர்த்தி செய்யப்படவில்லை. மார்ச் மாதம் அவருக்கு கடுமையான ஈரல் நோய் ஏற்பட்டது. மே மாதம் வரை இந்நோய் நீடித்தது. இருப்பினும் இந்த மூன்றரை மாதங்களில் அவர் பெரும் அளவிற்கு தயாரிப்பு வேலைகள் செய்தார். ஏறத்தாழ 50 புத்தகங்களிலிருந்து அவர் குறிப்புகள் எடுத்திருந்தார். இரண்டு பெரிய நோட்டுப் புத்தகமும் ஒரு சிறு நோட்டுப் புத்தகம் நிறைய குறிப்புகளும் சேகரித்து வைத்திருந்தார். போலந்து பிரச்சனையை முக்கிய ஐரோப்பிய வல்லரசுகள் அதன்பால் அனுசரித்த கொள்கைகளை வைத்துப் பரிசீலனை செய்து மார்க்ஸ், போலந்தைப் பற்றி மட்டுமல்லாமல், ரஷ்யா, பிரஷ்யா, பிரான்ஸ் முதலிய நாடுகளும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், நினைவுக் குறிப்புகள், கடிதப் போக்குவரத்துக்கள், மற்றும் ராஜதந்திர உறவுகள் மற்றும் உள்நாட்டு வரலாறுகள் பற்றிய வரலாற்று எழுத்துரைகள் ஆகியவைகளைப் படித்து ஆராய்ந்தார். சிறிய நோட்டுப் புத்தகத்தில் 1863 புரட்சிக் கிளர்ச்சி பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திக் குறிப்புகள் பற்றிய பல மேற்கோள் குறிப்புகள் அடங்கியிருந்தன.

மார்க்ஸ் பின்னர் அவர் சேகரித்து வைத்திருந்த விவரங்களை யெல்லாம் ஒழுங்காக முறைப்படுத்தி வைத்தார். பொருள் வாரியாக அவைகளைப் பிரித்தார். அவைகளை தேதி வாரியாகத் தொகுத்து வைத்தார். இது அவருக்குத் தோராயமான இரு கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்தது. ஒன்றின் தலைப்பு "பிரஷ்யன் கயவர்கள்" என்பது. இது 1640 முதல் 1863 வரை இருந்த பிரஷ்யன் - போலந்து உறவுகள் பற்றியது. மற்றொன்றுக்குத் தலைப்பு கொடுக்கப்படவில்லை. அது போலந்து விவகாரத்திலுள்ள வரலாற்றுப் பின்னிய தேதி வாரியான வரிசைக் குறிப்புகளைக் கொண்டது. அவர் பிரசுரத்தை எழுதத் தொடங்கும்போது தயாரித்து வைத்திருந்த விவரங்களைப் பயன்படுத்தி முதல் அத்தியாயத்தை இருவகையாக எழுதினார். அவர் மத்திய காலத்திலிருந்து தொடங்கினார். முதல் நகலிலிருந்து 1768 வரை வந்தார். இரண்டாவது நகலில் 1770 வரை வந்தார்; அது இன்னமும் நயமாக இருந்தது. அதன் தலைப்பு "போலந்து, பிரஷ்யா மற்றும் ரஷ்யா". 1863 மே கடைசியில் அவருடைய நூலின் நிலை அதுதான். மே 29 ஆம் தேதி அவர் எங்கெல்ஸிற்குத் தெரிவித்தார்: "பல தடவை முயற்சித்தும் கூட போலந்து கதையை நான் இன்னும் முடிக்கவில்லை." மார்க்ஸும் எங்கெல்ஸும் அப்புத்தகத்தை எழுதுவதை நிறுத்தி விட்டார்கள் என்று தோன்றுகிறது; காரணம் அதை முடிப்பதற்கு மிக அதிகமான காலம் பிடிக்கும் என்றும் மற்றும் அதை விரைவில் பிரசுரிக்கவும் முடியாது; அது போலந்தின் புரட்சிக் கிளர்ச்சிக்கு நடைமுறையில் உடனடியாகப் பயன்படும் அளவில் விரைவில் வெளியிட முடியாது என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

எனினும் அதன் கையெழுத்துப் பிரதி உள்ள அளவிற்கு அது மார்க்ஸினுடைய மொத்தத் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுவதற்காக இருந்த கணிசமான பகுதியின் உள்ளடக்கத்தைப் பற்றி நிர்ணயிப்பதற்கும் அது உதவியாக இருக்கிறது: ஆரம்ப வடிவிலான கையெழுத்துப் பிரதி "பிரஷ்யக் கயவர்கள்" பகுதி, முதல் அத்தியாயத்தின் முதல் படிவம் அதன் சில பகுதிகள் ஆகியவை பிரஷ்யாவிற்கும் ஜாரிஸ்ட் ரஷ்யாவிற்கும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக போலந்தின் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பு ஆசையிருந்ததை ஆராய்கிறது; மார்க்ஸ் பிரஷ்யாவை அம்பலப்படுத்துவதிலும் "ஹோஹென்ஜோலேர்ன்களின் சிதைந்து போன கடைசி கட்டத்திலுள்ள வீட்டைத் தாக்குவதிலும்" கூர்மையான கவனத்தைச் செலுத்தினார். இந்தப் பிரசுரம் மார்க்ஸின் கட்டுரைகளின் தொடர்ச்சியும் விளக்க விரிவுமாகும்; அவைகளில் மார்க்ஸ் 1848 புரட்சிக் காலத்தில் தொடங்கி பிரஷ்ய பிற்போக்காளர்களைக் கண்டித்துரைத்துள்ளார்.

ஹோஹென்ஜோலேர்ன் வம்சத்தின் பிராண்டன் குலவழியின் தோற்றத்தை வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக மார்க்ஸ் விவரித்தார். அவர்களுடைய குறுகிய நோக்கமுள்ள சூழ்ச்சிகள், ஏமாற்றுதல், மோசடி, துரோகம் ஆகியவைகளைப் பற்றியும் அவைகளின் மூல போலந்திலிருந்து பிரஷ்யக் கோமகனை தனது பிடிப்பின்கீழ் வெற்றிகரமாக வைத்துக் கொண்டதைப் பற்றியும், அதன்மூலம் அதிகமான பிரதேசத்தைக் கையடக்கிக் கொண்டும் அரசு பட்டமும் பெற்றுக் கொண்டதைப் பற்றியும் எடுத்துக் காட்டினார். போலந்தின் மேல்தட்டு ஆதிக்கக்காரர்களின் குடியரசு வீழ்ச்சியடைந்ததை ஒட்டி முன்னாள் மானியக்காரன் தனது பழைய எஜமானின் காவல் நாயாக இருந்த அடிப்படையில் தனக்குத்தானே பழி தீர்த்துக்கொண்டு, ஒரு குள்ள நரி தனக்கு முன்வந்த ஒரு தீனியை தட்டிப் பறித்துக் கொண்டு ஓடுவதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டதுபோல அது தனது சுயரூபத்தைக் காட்டிவிட்டது. மார்க்ஸினுடைய கையெழுத்துப் பிரதி, பிரஷ்யா, ஜாரிஸ்ட் ரஷ்யாவுடனும் ஆஸ்திரியாவுடனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் போலந்தை மூன்று பங்குகளாகப் போட்டு பிரித்து எடுத்துக் கொண்ட அதன் துரோகச் செயலை விவரித்துக் காட்டுகிறார். போலந்தைப் பிரித்தெடுப்பதில் பங்கு கொண்டது பிரஷ்யாவின் தோற்றத்திற்கும் உயர்வுக்கும் தீர்மானமான அம்சமாக இருந்தது என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். அது முதல் போலந்து மக்களுடைய ஒவ்வொரு எழுச்சிப் போராட்டத்திலும் அதை அடக்கி ஒடுக்கும் காவல் படையின் காரியத்தைச் செய்து வந்திருக்கிறது. பிரஷ்யா தனது ஆக்கிரமிப்புக் காரியங்களுக்கு எத்தகைய படுமோசமான இழிவான, மிருகத்தனமான முறைகளைக் கையாண்டிருக்கிறது என்பது பற்றி மார்க்ஸ் மிகவும் விரிவான சித்திரத்தை வரைந்து காட்டினார். பிரஷ்யன் ராணுவ வெறியர்கள், போலந்தில் அதை முதல் தடவை பிரிவினை செய்து பங்கு போடுவதற்குச் சற்று முன்பு செய்த கொடுமைகளை விவரித்து மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "1771 ஆரம்பத்தில் பிரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழிருந்த போலந்து பகுதி முழுவதிலும் பிரஷ்ய கூலிப்படை அடித்துச் சென்றது. அந்த ஏவல் படை அங்கு இதுவரை கண்டும் கேட்டும் இராத அளவு கொள்ளைகள், கொடுமைகள் பெரும் பழி பாவங்கள், எல்லா வகையான காட்டுமிராண்டித்தனமான செயல்களையும் செய்தது."

ஹோஹென்ஜோலேர்ன் பிரஷ்யாவும் ஜாரிஸ்ட் ரஷ்யாவும் போலந்தின்பால் எத்தகைய ஒரு கொள்கையை அனுசரிக்கிறார்கள் என்பதை உதாரணமாகப் பயன்படுத்தி மார்க்ஸ் தன்னுடைய கையெழுத்துப் பிரதியில், கூட்டாக இதர நாடுகளை அடிமைப்படுத்தினால் ஒடுக்கும் நாடுகள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று தளைகளை மாட்டிக் கொள்கின்றன, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உள்ள சார்பு நிலையை அதிகப்படுத்திக் கொள்கின்றன; அதிக பலமுள்ள நாடு பலவீனமான நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயித்து ஆதிக்கம் செலுத்தும் என்ற கருத்தை மிகவும் விரிவாக விளக்கியுள்ளார். பிரஷ்ய அரசர்கள் போலந்தின் பிரதேசத்தைப் பிடித்துத் தங்கள் ஆட்சியின் கீழ்க்கொண்டு வருவதற்கு ஜாரிஸ்ட் ரஷ்யாவை நம்பி அதைச் சார்ந்து இருந்தனர். எனவே இதை ரஷ்யாவின் ஜாரிடம் ஹோஹென்ஜோலேரன் மிகுந்த கீழடங்கிய பக்தி விசுவாசம் கொண்டிருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக மார்க்ஸ் கருதினார். பிரஷ்யாவும் ஜாரிஸ்ட் ரஷ்யாவும் ஐரோப்பிய புரட்சி இயக்கம், 18 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்திய பூர்ஷ்வாப் புரட்சி, அப்புரட்சி ஐரோப்பாவில் செலுத்திய விடுதலைத் தன்மை கொண்ட செல்வாக்கு ஆகியவற்றின் மீதுள்ள பொதுவான வெறுப்பில் ஒன்றுபட்டு நின்றனர். ஹோஹென்ஜோலேரன்களும் ரோமனோவ்களும் போலந்தின் சுதந்திரத்தைத் திரும்பவும் நிலை நாட்டுவதற்காக போலந்து மக்கள் காட்டிய ஆர்வமும் துடிப்பும் ஒரு புரட்சிகரமான போக்கின் வெளிப்படுத்தலாகும் என்றே எப்போதும் கருதினர். "ஜாக்கோபின் போர்க்காலத்திலிருந்து.... பிரஷ்யா, போலந்தை கீழைநாட்டு பிரான்ஸ் என்று ஒப்பிட்டு புரட்சியின் எரிமலை வாய் என்றே கண்டது."

மார்க்ஸினுடைய கையெழுத்துப் பிரதியில் உயிரோட்டமாகப் போய்க்கொண்டிருக்கும் கருத்து பிரஷ்யா உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து ஹோஹென்ஜோலேரன்கள் போலந்தின்பால் அனுசரித்து வந்த கொள்கை ஜெர்மனியினுடைய உண்மையான நலன்களுக்கு எந்த வகையிலும் உகந்தது அல்ல. அத்துடன் அதன் நலவுரிமைகளுக்கு விரோதமாக இருந்தன. அதற்கு எதிராக நின்று மோதின; அண்டை மக்களான ஸ்லாவ் மக்களுக்கும் ஏன் ஜெர்மன் மக்களுக்கும் கூட மிகுந்த தீங்கை விளைவித்தன. 1848-49-ல் செய்ததைப் போல மார்க்ஸ் பிரஷ்யன் மன்னரீகம்தான் புரட்சிகரமான ஜனநாயக வழிமுறைகளில் ஜெர்மனியை ஒன்றுபடுத்துவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது என்னும் கருத்தையும் ஜெர்மனியின் புரட்சிகரமான வளர்ச்சிக்கு முதல் படியாக மன்னராட்சி தூக்கி யெறியப்பட வேண்டும் என்னும் கருத்தையும் வளர்த்தார். அந்தப் பிரசுரத்திற்கான பணியின் உச்ச கட்டமாக அவர் எங்கெல்ஸிற்கு எழுதினார்: "போலந்து நிலைகொண்டிருப்பது ஜெர்மனிக்கு அவசியமானதாகும். ஆனால் பிற்காலத்தில் தோன்றியதான பிரஷ்ய அரசுடன் சேர்வது அதற்கு சாத்தியமே இல்லை. பிரஷ்யா என்னும் பிந்திய அரசு பூமியின் மேலிருந்து ஒழிக்கப்பட்டாக வேண்டும்."

போலந்து சம்பந்தமாக வல்லரசுகளுக்கிடையிலிருந்த ராஜ தந்திரப் போராட்டத்தைப் பற்றி மார்க்ஸ், இந்த நாடுகளில் உற்பத்தியாகும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியைப் பற்றியும் அதே போலந்தின் உள்நாட்டு வளர்ச்சியைப் பற்றியுமான அவருடைய பகுப்பாய்வுடன் நெருக்கமான இணைப்புடன் ஆராய்ந்து தெரிந்து கொண்டார். அவருடைய கையெழுத்துப் பிரதிகளில் அவர் போலந்து சமுதாயத்தின் சமுதாயக் கட்டமைப்புகளைப் பற்றியும் தேசிய விடுதலை இயக்கத்தின் வர்க்கக் கட்டமைப்பைப் பற்றியும் படித்தாராய்ந்தார். பிரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா அனுசரித்துவந்த போலந்து எதிர்ப்புக் கொள்கைக்கு போலந்தின் தொழில் நிறைந்த மேல் தட்டு வசதிக்காரர் கூட்டம் ஆதரவு கொடுத்து வந்தது; அக்கூட்டம் தங்களுக்குள் நிலப்பிரபுத்துவ சலுகைகளையும் ஆடம்பர வசதிகளையும் இருந்தால் போதும் தேசிய சுதந்திரத்தையுங் கூட விட்டுக் கொடுத்து விடலாம் என்றிருந்தார்கள். தேசிய பூர்ஷ்வா வர்க்கம் பலவீனமாக இருந்ததால் போலந்தின் மேல்குடிமக்களின் முற்போக்கான பகுதியினர் கொழுத்த வசதிக்கார கூட்டத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், தேசிய சுதந்திரத்திற்காதரவாகவும் நீண்ட நாட்களாகவே போராட்டப் பதாகையை முன் எடுத்துச் சென்றனர். மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு கூறினார்: "போலந்தின் வசதிக்காரக் கொழுத்த மேல்தட்டுக் கூட்டத்திற்கும் இதர போலந்து மேட்டுக்குடி மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் காண வேண்டும். இந்தப் பகுதியினர் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பூர்ஷ்வா வர்க்கத்தின் அதே அந்தஸ்து நிலையை போலந்தில் வகித்துள்ளார்கள்."

போலந்தின் மேட்டுக் குடியினரின் தலைமை வட்டாரங்களை முற்போக்காளர்களாக மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அவர்கள் அன்றைய காலத்தின் சுதந்திரக் கருத்துக்களுக்கும் பிரெஞ்சு பூர்ஷ்வாப் புரட்சியின் லட்சியங்களுக்கும் காது கொடுத்து செயல்பட்டார்கள் என்பதை, போலந்தைப் பிரிவினை செய்ததை அவர்கள் எதிர்த்து நின்றதையும் உள்நாட்டில் அரசியல் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான பாதையை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளையும் சுட்டிக்காட்டித் தெளிவுபடுத்தினார். இந்தக் கண்ணோட்ட நிலையிலிருந்து அவர் 1791 மே 3 ஆம் தேதிய அரசியல் சாசனத்தைப் புகழ்ந்து வரவேற்றார். அந்த அரசியல் சாசனம் போலந்தின் தேச பக்த சக்திகள் வசதிக்கார ஆதிக்கக் கூட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பலனாகும். வர்க்கக் காரணங்களின் விளைவாக அவர்களுக்கு சில குறைபாடுகள் இருந்த போதிலும் இந்தப் புரட்சிக்காரர்கள் போலந்தின் விடுதலைக்கான போராட்டத்தில்.முக்கியமான தலைமையான பங்கைத் தொடர்ந்து ஆற்றினர். 1794-ல் தாடியுஸ் கோஸ்சியஸ்கோ தலைமையில் நடைபெற்ற பெருங்கிளர்ச்சி தொடங்கி அந்நிய அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற போலந்தின் எல்லா எழுச்சிப் போராட்டங்களிலும் அவர்கள் முக்கிய பங்காற்றினர்.

போலந்தைப் பற்றிய மார்க்ஸினுடைய கையெழுத்துப் பிரதிகள் தேசியப் பிரச்சனை பற்றிய அவருடைய தத்துவார்த்த மரபுரிமைச் செல்வத்தின் ஒரு முக்கியமான பகுதியாக அமைந்துள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதிகள் அவருடைய ஆக்கபூர்வமான வழி முறைகளை மிகவும் நெருக்கமாக அருகில் சென்று பார்ப்பதற்கு உதவுகிறது. அவர் எந்தத் துறையில் கவனம் செலுத்தினாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலவுரிமைகளுக்காக, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் நலவுரிமைகளுக்காகப் பணியாற்றும் ஒரு விஞ்ஞானி என்னும் முறையில் அவர் எப்போதும் மிகவும் மேலான வகையில் உணர்வுபூர்வமாக இருந்தார் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தில்

1860 ஆம் ஆண்டுகளில் லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தில் மார்க்ஸ் மிகவும் அதிகமான அளவில் செயலூக்கத்துடன் பணியாற்றினார். அவரும் எங்கெல்ஸும் 1850 செப்டம்பரில் அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்கள்; அப்போது அது செக்டேரியன் (தனித்த போக்கு) நபர்களின் செல்வாக்கின் கீழ் இருந்தது. 1850 ஆம் ஆண்டுகளின் இறுதியில் நிலைமை மாறிவிட்டது. அப்போது ஜோஹான் எக்காரியஸ், பிரிட்ரிக் லெஸ்னர் மற்றும் இதர பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரர்கள் மேலும் மேலும் அதிகமாகத் தலைமைப் பங்கை ஆற்றத் தொடங்கினார்கள். அவர்கள் பழைய தலைமையின் செக்டேரியன் தவறுகளை திருத்தி வெற்றி கொண்டு கல்விக் கழகத்திற்கும் ஆங்கிலேய தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்கள், இதர தேசிய இனங்களில் உள்ள பாட்டாளி வர்க்க நபர்களுக்குமிடையில் மிகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். எனவே அதன்படி மார்க்ஸ் அந்தக் கல்விக் கழகத்தில் திரும்பவும் வந்து வேலை செய்வதற்கு சாத்தியப்பட்டது.

அவர் தொழிலாளர்களை சர்வ தேச ஒருமைப்பாட்டு உணர்வில் பயலுவிக்க முனைந்தார். 1861-ல் அவர் முன்கையெடுத்து கல்விக் கழகத்தின் சார்பில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தொழிலாளர்களின் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் பிளாங்கி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போலந்து புரட்சிக் கிளர்ச்சியின் போது போலந்து தேசிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாக மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர்களுடைய தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கையை உருவாக்குவதற்கான மையமாக கல்விக் கழகத்தை மாற்றுவதற்கு மார்க்ஸ் கடுமையாகப் பாடுபட்டார். குடியேறியுள்ள இதர பாட்டாளி வர்க்க, ஜனநாயக வட்டாரங்களுடன் சேர்ந்து நின்று கல்விக் கழகம், போலந்தைக் காப்பதற்காக ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டது; அதன் பிரதிநிதிகள் இதற்காக லண்டனில் நடைபெற்ற கூட்டங்களில் அணிவகுப்புகளில் கலந்து கொண்டார்கள். குறிப்பாக 1863 ஜூலை 22 ஆம் தேதி செயின்ட் ஜேம்ஸ் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு கொண்டார்கள்.

1863 ஆம் ஆண்டு அக்டோபரில் மார்க்ஸ் கல்விக் கழகத்தின் சார்பில் போலந்தின் புரட்சிக் கிளர்ச்சிக்காரர்களின் உதவிக்காக நிதி வசூல் செய்வதற்காக ஒரு வேண்டுகோள் எழுதினார். இந்த வேண்டுகோள், ஜெர்மனிக்கு போலந்து பிரச்சனை எவ்வளவு முக்கியத்துவமானது என்பதைத் தொகுத்துக் கூறியது; அதில் வந்த கருத்துக்கள், போலந்து பற்றிய அவருடைய முடிவு பெறாத கையெழுத்துப் பிரதிகளில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களாகும். அவருடைய பிரதான ஆய்வுரை: "ஒரு சுதந்திரமான போலந்து இல்லாமல் ஒரு சுதந்திரமான ஒன்றுபட்ட ஜெர்மனி இருக்க முடியாது". ஜெர்மன் பூர்ஷ்வா வர்க்கம், "ஒரு வீரமிக்க மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டும் காணாமலும் ஊமையாகவும், சோம்பேறித்தனமாகவும், பாராமுகமாகவும் இருந்ததாக"க் குற்றம் சாட்டுகிறார். போலந்தினுடைய சுதந்திரத்திற்கான போராட்டம் பாட்டாளி வர்க்கத்திற்கு குறிப்பாக ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு கேந்திர முக்கியத்துவமான லட்சிய நோக்காகும் என்பதை வலியுறுத்தினார். "போலந்தின் சுதந்திர மீட்பளிப்பு அதன் பதாகையில் அனல் கக்கி ஒளி வீசும் செந்நிற எழுத்துக்களால் புகழ் பரப்பப்பட வேண்டும்."

இந்த வேண்டுகோள் நவம்பர் பிற்பகுதியில் இங்கிலாந்தில் குடியேறியுள்ள ஜெர்மானியர்களுக்கிடையில் வினியோகம் செய்யப்பட்டது. மார்க்ஸினுடைய ஆணைப்படி 50 பிரதிகள் ஜெர்மனிக்கு அங்கு தொழிலாளர்களிடம் வினியோகிப்பதற்காக அனுப்பப்பட்டது.

கல்விக்கழத்தில் மார்க்ஸினுடைய செயல்பாடுகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையான பிரதிநிதிகளுடன் உள்ள தொடர்புகளை பலப்படுத்திக் கொள்வதற்கு உதவிற்று. அவர்...குடியேறியுள்ள ஜெர்மன் தொழிலாளர்களுக்கிடையில் மட்டுமல்ல கல்விக் கழகம் இடைவிடாமல் தொடர்பு கொண்டிருந்த ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வட்டாரங்களுக்கிடையிலும் மிகவும் பிரபலமாக அறிமுகமானார்.

ஒரு நல்ல நண்பரை இழத்தல்

வில்ஹெல்ம் வோல்ப் 1853 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் மான்செஸ்டரில் குடியிருப்பதாக வந்தார். அவர் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதற்கு மார்க்ஸிற்கும் எங்கெல்ஸிற்கும் உதவி செய்வதில் மிகவும் செயலூக்கத்துடன் பாடுபட்டார். போலந்து பற்றிய மார்க்ஸினுடைய வேண்டுகோளை அவர் மிகவும் மனமகிழ்ச்சியுடன் ஆதரித்தார். 1863 டிசம்பர் 2 ஆம் தேதி வோல்ப் ஜென்னி மார்க்ஸிற்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "முதலிரண்டு சிலவரிகளை நான் படித்த உடனேயே இந்த சுருக்கமான ஆனால் வேகமான வேண்டுகோளை மூரை (மார்க்ஸ்-மொ-ரி)த் தவிர வேறு யாராலும் எழுதியிருக்க முடியாது என்று நான் உணர்ந்தேன்." அந்த வேண்டுகோளை மான்செஸ்டரில் குடியேறியுள்ள ஜெர்மன் தொழிலாளர்களுக்கிடையில் வினியோகம் செய்வதற்கு வோல்ப் அரும்பாடுபட்டார். இந்த வேண்டுகோள் இன்னும் வெறும் தேசிய மனப்பான்மை மட்டுமே கொண்டிருக்கும் சிலர் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்வதற்கும் உதவும் என்று அவர் நம்பினார்.

மார்க்ஸ், வோல்பை, எங்கெல்ஸிற்கு அடுத்தபடி தன்னுடைய மிகச் சிறந்த நண்பராகக் கருதினார். மிகவும் முக்கியமான அரசியல் பிரச்சனைகளிலும் நடைமுறை உபாயங்கள் பற்றிய பிரச்சனைகளிலும் மார்க்ஸ் அவரிடம் இடைவிடாமல் கலந்து ஆலோசனை செய்து கொள்வார். மார்க்ஸினுடைய கட்சி-அரசியல் நடவடிக்கைகளுக்கு வோல்ப் தன் பங்காக உள்ள உதவியை எப்போதும் செய்வதற்குப் பாடுபடுவார்.

1860 ஆம் ஆண்டுகளில் வோல்ப் அடிக்கடி வியாதியுற்றார்; கடுமையான நோய் ஏற்பட்டது. அவருடைய உடல் நிலை ஏற்கெனவே, பிரஷ்ய சிறைச்சாலைகளில் இருந்த கொடுமையினாலும் வெளிநாடுகளில் குடியேற்ற வாழ்க்கையில் இருந்த வறுமையினாலும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தனது ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறது என்பதை வோல்ப் உணர்ந்து 1863 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தன்னிடம் சேமிக்கப்பட்டிருந்த கொஞ்சம் பணம் தனக்குப் பின்னர் மார்க்ஸிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் சேரவேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். இந்தப் பணம் மார்க்ஸிற்கு அவருடைய அரும்பணியான மூலதனத்தின் முதல் தொகுப்பைப் பூர்த்தி செய்வதற்கு உதவிற்று.

1864 மே 3 ஆம் தேதி மரணத்தின் வாசலில் இருந்து கொண்டிருந்த தனது நண்பரைக் காண்பதற்கு மார்க்ஸ் மான்செஸ்டருக்குச் சென்றார். வோல்ப் மயக்க நிலையில் இருந்தார். கொஞ்சம் உணர்வு வந்தபோது மார்க்ஸையும் எங்கெல்ஸையும் அடையாளம் கண்டு கொண்டதாக சைகை காட்டினார். மீண்டும் உணர்விழந்தார். அவர் மே 9 ஆம் தேதி மறைந்தார். மார்க்ஸ் அவருடைய மனைவிக்கு எழுதினார்: "இவருடன் நாங்கள் எங்களுடைய தலைசிறந்த ஒரு சில நண்பர்கள், உடன் இணைந்த தோழர்களில் ஒருவரை இழந்தோம். மனிதன் என்னும் சொல்லின் மிகச் சிறந்த பொருளில் அவர் இருந்தார்."

மே 13 ஆம் தேதி வோல்ப் அடக்கம் செய்யப்பட்ட போது மார்க்ஸ் ஒரு சிறிய சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரை துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. பேச்சைப் பலதடவை நிறுத்தி நிறுத்திப் பேசினார்.

மார்க்ஸும் ஜெர்மன் தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பும்

ஜெர்மனியில் தொழிலாளி வர்க்க நடவடிக்கைகள் மீண்டும் புனரமைந்து தொடங்கியது. ஜெர்மன் தொழிலாளர்களுக்கிடையில் அவர்களுடைய சக்திகளை ஒன்று படுத்த வேண்டும் என்றும் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒரு சுயேச்சையான நிலை எடுக்க வேண்டும் என்னும் உணர்வு விருப்பம் ஏற்பட்டது. அந்த விருப்பம் தொழிலாளர்களின் ஒரு அரசியல் ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்று பிரச்சார இயக்கத்தைத் துவக்குவதற்கு லாஸ்ஸலேயைத் தூண்டியது. லாஸ்ஸலேதான் தான் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தத்துவ ஞானியும் தலைவரும் என்று கூறிக்கொண்டார். அதனுடைய வேலைத்திட்டத்தையும் நடைமுறை உபாயங்களையும் உருவாக்க முயற்சித்தார்.

லாஸ்ஸலே ஜெர்மனியில் ஒரு வெகுஜன இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு, 1862 ஜூலை ஆகஸ்டு மாதங்களில் லண்டனில் தங்கியிருந்தபோது அவருடைய வேலைத்திட்டத்தின் பிரதான அம்சங்களைப் பற்றி மார்க்ஸ் அறிந்தார். லாஸ்ஸலே, தொழிலாளர்கள் வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை பெறுவதன் மூலமும் அரசின் உதவியின் மூலமும் அதாவது பிரஷ்யன் நிலப் பிரபுத்துவ அரசின் உதவியின் மூலம் உற்பத்திக் கூட்டமைப்புகளை நிறுவுவதன் மூலமும் சமுதாய விடுதலையை அடைய முயல வேண்டும் என்று கருத்துக் கொண்டு கூறினார். இந்த வேலைத்திட்டம் தொழிலாளி வர்க்கத்திற்கு எந்தவிதமான எதிர்கால வாய்ப்பையும் உண்டாக்கிக் கொடுக்கவில்லை. புரட்சிகரமான வர்க்கப்போராட்டம் இல்லாமல் சோஷலிஸத்தை அடைவதற்கு சாத்தியமிருப்பதாகப் பிரமைகளை உண்டாக்கிப் பரப்பினார். லண்டனில் அவர்கள் இருவரும் கலந்து பேசியபோது மார்க்ஸ், லாஸ்ஸலேயிடம் அவருடைய வேலைத்திட்டம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகளுடன் வேறுபட்டு மோதுகிறது என்று கூறினார்.

லாஸ்ஸலேயின் இந்தக் கருத்தோட்டங்களில் புதிய மூலாதாரங்கள் எதுவுமில்லை. அரசாங்க உதவியுடன் கூட்டமைப்புகள் என்னும் கருத்து 1840 ஆம் ஆண்டுகளிலேயே பிரெஞ்சு கத்தோலிக்க சோஷலிசத்தின் சித்தாந்தியான பிலிப்பி புச்சே, குட்டி பூர்ஷ்வா சோஷலிஸவாதி லூயிஸ் பிளாங்க் மற்றும் பலராலும் ஏற்கெனவே கூறப்பட்ட கருத்துக்களாகும். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்னும் கோரிக்கையை சார்ட்டிஸ்டுகளிடமிருந்து லாஸ்ஸலே கடன் வாங்கியுள்ளார். ஆனால் இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் இருந்த நிலைமைகள் வெவ்வேறானவை என்பதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஜெர்மனியைப் போன்ற ஒரு நாட்டில் ஜனத் தொகையில் மிகப் பெரும்பாலும் விவசாயிகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் உணர்வு இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கக்கூடிய நிலையில் இந்தக் கோரிக்கையை எதிர்ப்புரட்சி சக்திகள் கூட பயன்படுத்திக் கொள்ள முடியும்: இதேபோல்தான் போனபார்ட்டிஸ்டுகள் பிரான்ஸில் 1851-ல் திடீரென ஆட்சிக் கைப்பற்றலின்போது பயன்படுத்தினார்கள் என்று மார்க்ஸ் கூறினார். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்னும் பிரச்சனையை மார்க்ஸ் எதிர்க்கவில்லை என்பது நிச்சயம், ஆனால் லாஸ்ஸலே அதைத் தொழிலாளி வர்க்கம் முழு விடுதலை பெறுவதற்குள்ள, நிச்சயமான ஒரே ஒரு சாதனம் என்று வலியுறுத்தியதைத்தான் மார்க்ஸ் எதிர்த்தார்.

ஜெர்மனியில் தொழிலாளி வர்க்கத்தின் கடந்தகாலப் போராட்டம், 1848 ஆம் ஆண்டு காலத்தின் புரட்சிகரப் பாரம்பரியங்கள் கம்யூனிஸ்ட் லீகின் பாரம்பரியங்கள் ஆகியவற்றிற்கிடையிலுள்ள தொடர்ச்சியை லாஸ்ஸலே புறக்கணித்ததை மார்க்ஸ் விமர்சனம் செய்தார். லாஸ்ஸலே மிகவும் அதிகமான அளவு ஆசைகள் வைத்திருந்தார்; தன்னைப் பற்றியே எப்போதும் சிறந்த முறையில் முன்னுக்கு வைப்பதற்கு இடைவிடாது முயற்சித்துக் கொண்டே யிருப்பார். இவைகளையெல்லாம் மார்க்ஸ் விரும்பவில்லை. "தான் அவரைப் பார்த்த ஆண்டிலிருந்து அவருக்குப் பைத்தியமே பிடித்து விட்டது", மார்க்ஸ் லாஸ்ஸலேயுடன் நடத்திய பேச்சுக்கள் பற்றி எங்கெல்ஸிற்கு எழுதினார்: "அவர் மிகப்பெரிய படித்த அறிவாளி, மிகவும் தெளிவான சிந்தனையாளர், ஆகத் தலைசிறந்த ஆராய்ச்சி யாளர், இன்னும் இத்யாதி, மேலும் இவர் மட்டுமல்ல டான் ஜுவானும், மற்றும் ஒரு புரட்சிகரமான பெரிய பாதிரியார் ரிச்செலுவும் இவரைப் போலவேதான் என்பதைப்பற்றி அவர் தெளிவாகப் புரிந்து ஒப்புக்கொள்கிறார்." லாஸ்ஸலேயைப் பற்றி ஜென்னியினுடைய மனதில் அவ்வளவு நல்ல கருத்துப் பதிவு ஏற்படவில்லை. லாஸ்ஸலேயின் தற்புகழ்ச்சிக் கிறுக்கு பற்றியும், அவரை எப்போதும் புகழ்ந்துகொண்டே, அவரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே உள்ளவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டே யிருக்க வேண்டும் என்னும் அவருடைய விருப்பப்போக்கு ஆகியவைகளைப் பற்றி ஜென்னி மிகவும் வேடிக்கையாக கிண்டலாக எழுதினார்: "அவர் ஒரு படித்த அறிவாளி, சிந்தனையாளர், கவிஞர், அரசியல் மேதை என்னும் சிறப்பியல்புகளின் சாதனைகளின் பெரும் புகழின் பெரும் சுமையின்கீழ் அப்படியே அநேகமாக அழுத்தப்பட்டு நசுக்கப்பட்டு விட்டார்."

இந்த சந்திப்பிற்குப் பிறகு மார்க்ஸ் இறுதியாக லாஸ்ஸலேயுடன் முறித்துக்கொண்டார். 1865 பிப்ரவரி 23 ஆம் தேதி குகல்மானுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் கீழ்க்கண்ட காரணங்களைத் தருகிறார்: "அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கும் நமக்கும் இடையிலிருந்த உறவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது; 1) காரணம் அவருடைய தற்புகழ்ச்சி கசிந்தொழுகும் வீண் பெருமை, இத்துடன் அவர் என்னுடைய எழுத்துரைகளிலிருந்தும், இதரர்களுடைய எழுத்துரைகளிலிருந்தும், மிகவும் வெட்கக்கேடான முறையில் கருத்து வாசகத்திருட்டும் சேர்ந்தது. 2) காரணம் நான் அவருடைய அரசியல் தந்திர முறைகளை கண்டித்துள்ளேன். 3) காரணம் அவர் தன்னுடைய கிளர்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னமேயே, நான் மிகவும் தெளிவாக அவர் இங்கு லண்டனில் இருந்தபோது விளக்கிக் கூறினேன், 'நிரூபித்து'க் காட்டினேன், அதாவது 'பிரஷ்ய அரசின் மூலம் நேரடியான சோஷலிஸத் தலையீடு என்பது மடத்தனமான கருத்தாகும் என்று. அவர் எனக்கு எழுதிய கடிதங்களில் (1848-லிருந்து 1863 வரை) எங்களது சந்திப்பின் போதும் கூட அவர் எப்போதும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியையே அனுசரித்துப் பின்பற்றுவதாகவே பிரகடனம் செய்தார். ஆனால் லண்டனில் (1862 இறுதியில்) அவருடைய தந்திர விளையாட்டு என்னிடம் பலிக்காது என்று அவருக்குப் புரிந்தவுடனேயே அவர் எனக்கு எதிராகவும் பழைய நமது கட்சிக்கு எதிராகவும் 'தொழிலாளர்களின் சர்வாதிகாரியாக' வெளியே வந்துவிடத் தீர்மானித்து விட்டார்."

இருப்பினும் லாஸ்ஸலேயுடன் முறித்துக் கொண்ட பிறகும் கூட அவருடைய நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கவனித்து வந்தார். 1863 ஆம் ஆண்டு மே மாதத்தில் லாஸ்ஸலே தலைமையில் ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுக்கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அதை ஜெர்மனியில் ஒரு சுயேச்சையான தொழிலாளி வர்க்க இயக்கம் மீண்டும் தோன்றியிருப்பதாகவும், மிதவாத பூர்ஷ்வாக்களின் பாதுகாப்புப் பிடிப்பிலிருந்து தொழிலாளர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு அது முக்கியமான ஒரு முன்படி என்றும் அவர் கண்டார். மிதவாதிகள் ஷூல்சி-டெலிட்ச்ஷ் மற்றும் இதர பலரைப் போல தொழிலாளர்களை வெறும் கூட்டுறவு சொசைட்டிகள், கடன் மற்றும் சேமிப்பு வங்கிகள் அமைப்பது முதலியவற்றோடு பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று முயற்சித்தனர். மார்க்ஸ் கூறினார்: "லாஸ்ஸலே, பதினைந்து ஆண்டு காலமாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தை திரும்பவும் விழிப்படையச் செய்தார் - இது அவருடைய அழியாப் புகழ்பெற்ற மகத்தான சேவையாக இன்று நிலைபெற்று இடம் பெற்றிருக்கிறது." லாஸ்ஸலேயின் பங்கு ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஆக்கபூர்வமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு மார்க்ஸும் எங்கெல்ஸும் லாஸ்ஸலேயின் தவறான தத்துவக் கோட்பாடுகளையும் நடைமுறை உபாயங்களையும் வெளிப்படையாகத் தாக்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.

எனினும், லாஸ்ஸலேயின் தலைமையில் ஜெர்மன் தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பு நிறுவனம் ஒரு செக்டேரியன், சீர்திருத்தவாத அமைப்பாக இருந்தது என்பதை அவர்கள் மிகவும் தெளிவாகக் கண்டார்கள். அரசாங்க உதவியுடன் உற்பத்திக் கூட்டமைப்புகள் பற்றியும், வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை பற்றியும் லாஸ்ஸலே...

 * Marx and Engels, Selected Correspondence, p. 167.

 * Ibid., p. 213.

முன் வைத்த தத்துவக்கோட்பாடு, அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்து என்று கூட்டமைப்பு தனது அடிப்படைக் கோட்பாடுகளாக நிறைவேற்றி அமைத்துக் கொண்டது. தொழிலாளர்களுடைய கூலி ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவுக்கு மேல் போக முடியாது (காரணம் 'கூலி பற்றி இரும்புக்கரச் சட்டம், செயல்படுகிறது) என்னும் கொச்சையான கருத்தை லாஸ்ஸலே கொண்டிருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தை மறுத்தார். இதன் காரணமாய் இந்தக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் நிறுவுவதிலும், வேலை நிறுத்தங்களை உருவாக்குவதிலும் பங்கு கொள்ள மறுத்தது. லாஸ்ஸலே விவசாயிகளை ஒரு பிற்போக்கு வர்க்கமாகக் கருதினார். அவருடைய செல்வாக்கின் கீழ் அந்தக் கூட்டமைப்பு, சுரண்டல் அமைப்பு முறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திரளான விவசாயி மக்களை ஈடுபடுத்துவதை சுத்தமாகப் புறக்கணித்தார்கள். அதனால் நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களை நீக்குவதற்கான கோரிக்கைகளை முன் வைக்கவில்லை. இந்தக் கூட்டமைப்பு குறுகிய தேசியப் போக்குகளையே வெளிப்படுத்திக் காட்டியது. வெளிநாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளுடன் அனைத்து நாட்டு அளவில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள மறுத்தனர். அந்தக் கூட்டமைப்பின் ஸ்தாபன அமைப்பு விதிமுறைகள் லாஸ்ஸலேயினுடைய சர்வாதிகார வழிமுறைகளுக்கொப்ப இருந்தது. அது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஜனநாயகக் கோட்பாடுகளுடன் எதிர்த்து மோதியது. அதன் தலைவர் - அது லாஸ்ஸலேதான் - மிகவும் விரிவான அதிகாரங்களைக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் அந்தக் கூட்டமைப்பின் எல்லா விவகாரங்களையும் வேறு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தானே அனைத்தையும் நடத்திக்கொண்டு செல்ல முடியும். அநேகமாக நடைமுறை காரியங்கள் அனைத்திற்கும் லாஸ்ஸலே அந்தக் கூட்டமைப்பிற்குள் தலைவரின் தனிநபர் வழிபாட்டு முறையை ஊன்றி வைத்தார்.

லாஸ்ஸலேயின் தந்திர உபாயங்களில் இருந்த மிகப்பெரிய தவறு அவர், ஆளும் நிலப்பிரபுத்துவ வட்டாரங்களுடன் கண்ணடித்துக் கூட்டுச் சேரும் அபாயகரமான வழியைக் கைக்கொள்ளும்படி தொழிலாளர் அமைப்பைக் கொண்டு செல்வதற்காக எடுக்கும் முயற்சியாகும். சுரண்டும் வர்க்கங்கள்பால் லாஸ்ஸலே நடத்திய தாக்குதல்கள் ஒரு சார்புநிலை கொண்டதாக இருந்தது. அவர் பூர்ஷ்வா மிதவாதிகளை (புராக்ரஸிஸ்டுகள்) த் தாக்கினார் - அது ஒரு மிகவும் முக்கியமான விஷயமாகும் - ஆனால் அவர் பிஸ்மார்க்கின் சர்க்காரையும் ஜங்கர்களை (நிலப்பிரபுக்களை)யும் எதிர்த்துப் போராடவில்லை. அதற்கு நேர்மாறாக அவர் தொழிலாளி வர்க்கத்தை இந்தப்படு பிற்போக்கு சக்திகளுடன் அணி சேர்த்து பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராக நிறுத்தினார்.

லாஸ்ஸலே பிஸ்மார்க்குடன் ரகசியமாகக் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்; பல தடவை அவரை சந்தித்துப் பேசியிருந்தார். இருவரும் ரகசிய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி மார்க்ஸிற்கும் எங்கெல்ஸிற்கும் அப்போது தெரியாது. புராக்ரஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிஸ்மார்க்கிற்கு தொழிலாளி ஸ்தாபனங்கள் உதவி செய்வதற்கும், பிஸ்மார்க்கின் ஒன்றிணைப்பு திட்டங்களுக்கு ஆதரவு தரவும் லாஸ்ஸலே வாக்குறுதி கொடுத்திருந்தார். இதற்கு மாற்று உதவியாக பிஸ்மார்க், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கொடுக்கவும் உற்பத்தி கூட்டமைப்புகள் அமைத்துக் கொடுக்கவும் சம்மதம் கொடுத்திருந்தார். எனினும் லாஸ்ஸலே கூறிக் கொண்டிருந்ததை வைத்து பிரஷ்ய சர்க்கார் பிரதிநிதிகளுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை மார்க்ஸ் ஊகிக்க முடிந்தது. 1864 ஆகஸ்டு 31 ஆம் தேதி ஒரு நேரடி மோதலில் லாஸ்ஸலே கொல்லப்பட்டார். அவர் இறந்த பின்னர் 1865 ஜனவரிவாக்கில், மார்க்ஸும் எங்கெல்ஸும் சந்தேகப்பட்டதற்கும் அதிகமாக லாஸ்ஸலேக்கு பிஸ்மார்க்குடன் இருந்த கண்டிப்பான கன்னக்காதல் வெகுதூரம் சென்று விட்டது. லாஸ்ஸலே பிரஷ்ய சர்க்காரின் தலைமைக்கு ஸ்ட்லெஸ்விக்-ஹோல்ஸ்டீன் பகுதியைப் பிடித்துக் கொள்வதற்கு தொழிலாளர் கூட்டமைப்பின் உதவியைக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனால் அவர்கள் இவருடைய நடத்தையை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் என்று குற்றம் சுமத்தினர். அப்படியிருந்தும் அப்போது பிஸ்மார்க்குடன் லாஸ்ஸலேக்கு இருந்த உறவு பற்றிய முழு விவரங்கள் வெளிவரவில்லை; பல பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அவை தெளிவாக விவரமாக வெளியாயின.

லாஸ்ஸலேயை விமர்சனம் செய்யும்போது மார்க்ஸும் எங்கெல்ஸும் அவரை ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மொத்தத்திற்குமான பிரதிநிதியாகக் கொள்வது ஒருபுறமிருக்கட்டும், ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுக்கூட்டமைப்பின் பிரதிநிதியாகக் கூட வைத்துப் பேசவில்லை. அந்தக் கூட்டமைப்பில் இருந்த சில நல்ல நபர்கள் மூலம், புரட்சிகரமான பாரம்பரியத்திற்கு விசுவாசமாக உள்ள தொழிலாளர்கள் மூலம் அதன் வேலைத்திட்டம், நடைமுறை உபாயங்கள், ஸ்தாபன அமைப்புக் கோட்பாடுகள் ஆகியவைகளைத் திருத்தி அமைத்து அதைத் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு போர்க்குணம் மிக்க ஸ்தாபனமாக மாற்றுவதில் வெற்றி பெறமுடியும் என்னும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஜெர்மனியிலிருந்து கிடைத்த தகவல் அறிக்கைகள் அங்கு அத்தகைய புரட்சிகர சக்திகள் அந்த கூட்டமைப்பிற்கு உள்ளேயும், வெளியேயும் குறிப்பாக ரைன் மாகாணத்தில் இருந்த பாட்டாளிகளுக்கிடையில் இருந்தன என்பதைக் காட்டின. தலைமையான முக்கிய பல தொழிலாளர்களுக்கிடையில் இருந்த கம்யூனிஸ்ட் லீக் மற்றும் அதன் தலைவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸைப் பற்றிய நினைவுகளை லாஸ்ஸலேயாலும் அவர்களுடைய சீடர்களாலும் அழித்துவிட முடியவில்லை. 1864 வசந்த காலத்தில் ரைன் நகரமான ரோன்ஸ்டார்பில் கூட்டமைப்பின் ஆண்டுவிழா நிகழ்ச்சியின் போது மார்க்ஸ் எங்கெல்ஸின் பெயர்களை பேச்சாளர்கள் குறிப்பிட்டபோது கூடியிருந்த மக்கள் பெருத்த ஆரவாரம் செய்து கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். 1864 கோடை காலத்தில் இரண்டு சோலிஞ்ஜென் தொழிலாளர்கள் பிரஷ்யன் அதிகாரிகளின் அடக்குமுறைத் தாக்குதலிலிருந்து தப்பித்து லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மார்க்ஸிடம் வந்து ரைன் மாகாணத்தில் உள்ள தொழிலாளர்கள் அவருடைய மற்றும் எங்கெல்ஸுடைய கருத்துக்களுக்கு இன்னும் அதிகமாக விசுவாசம் வைத்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

மார்க்ஸும் எங்கெல்ஸும் ஜெர்மன் தொழிலாளர் கூட்டமைப்பிற்குள்ளேயே தங்களுடைய கைகோர்த்த தோழர்களுடைய குறிப்பாக வில்ஹெல்ம் லீப்னெக்ட்டினுடைய நடவடிக்கைகள் பற்றி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். வில்ஹெல்ம் லீப்னெக்ட் 1862-ல் தாய் நாடு திரும்பியிருந்தார். அவர் தொடர்ந்து ஜெர்மனியிலிருந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பற்றி எங்கெல்ஸிற்கு தகவல் கொடுத்துக் கொண்டேயிருந்தார். மார்க்ஸும் எங்கெல்ஸும் லீப்னெக்ட்டிற்கு, விஞ்ஞான கம்யூனிஸ கருத்துக்களை நாலாபக்கமும் பரப்ப வேண்டியதைப் பற்றி ஆலோசனையும் குறிப்புகளும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கருத்துக்கள் பரவினால் அது, லாஸ்ஸலேயின் குட்டி பூர்ஷ்வா சோஷலிஸத்தின் செல்வாக்கைக் கீழடக்கி வெல்வதற்கும், அவருடைய செக்டேரியன் சீர்திருத்தவாத தந்திர உபாயங்களை அம்பலப்படுத்துவதற்கும், மற்றும் - லாஸ்ஸலே யிஸத்திற்கு நேர்மாறாக - ஜெர்மன் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு புரட்சிகரமான அணியை உருவாக்கி அமைப்பதற்கும் மிகச்சிறந்த சாதனமாக இருக்கும் என்று அவர்கள் கண்டார்கள்.

அகிலத்தை நோக்கிச் செல்லும் வழியில்

1850 ஆம் ஆண்டுகளின் கடைசியிலும், 1860 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் ஒரு புதிய புரட்சிகரமான எழுச்சி உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கணிசமான அளவில் வெற்றி அடைந்தது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மிகவும் விரிவான அளவை அடைந்தன. தொழிலாளர் அமைப்புக்கள், பரஸ்பர உதவி சொசைட்டிகள், தொழிற்சங்கங்கள் முதல் அரசியல் கூட்டமைப்புகள்; ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்புகள் போல பலவகைத் தொழிலாளர் அமைப்புகள் பல நாடுகளிலும் நிறுவப்பட்டன. தொழிலாளர் வெளிநாடுகளிலும் நிகழும் அரசியல் சம்பவங்கள் மீது தொழிலாளர்கள் தீவிரமாக அழுத்தமாகப் பிரதிபலித்தார்கள். அது தொழிலாளர்கள் ஏன் சுயேச்சையான நிலை எடுக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. பாட்டாளி வர்க்கத்தின் கூட்டத்தின் செயல்பாடு தொழிலாளி வர்க்கம் தன்னியல்பாக ஏற்பட்டுள்ள ஆக்க அமைவின் முக்கியமான மாற்றங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. அது எண்ணிக்கையில் பெருகியிருந்தது மட்டுமல்ல அதன் கட்டமைப்பும் மாறியிருந்தது. தொழில் புரட்சியின் முன்னேற்றத்தை ஒட்டி, பெரிய அளவிலான தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பகுதி அதிகரித்துக் கொண்டே வந்தது. இதை ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட் லீக் காலத்தில் அரை-குறை கைத்தொழில் பாட்டாளிகள் அதிகமிருந்தனர், பாட்டாளி வர்க்கம் அப்போதுதான் தோன்றியுள்ள சில நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு அதிகரித்துக் கொண்டிருந்தது.

தொழிலாளி வர்க்க இயக்கத்தினுடைய வளர்ச்சி அனைத்து நாட்டுப் பாட்டாளி வர்க்க சக்திகளை ஒன்றுபடுத்த வேண்டிய வேலையை மிகவும் அவசர அவசியமான கடமையாக ஆக்கிவிட்டது. தொழிலாளர்களுக்கிடையில் அனைத்து நாட்டுத் தொடர்பை இணைப்பை - வைத்துக் கொள்ள வேண்டுமென்னும் இயல்பணர்வான ஆர்வம் இருந்தது. ஒரு வெகுஜன அனைத்து நாட்டுத் தொழிலாளி வர்க்க அமைப்பை நிறுவுவதற்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதற்கு நல்லாதரவும் கிடைத்தது. இந்தத் திசை வழியில் நடைமுறையிலான நடவடிக்கைகளுக்குத் தூண்டு விசையாக 1863 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி லண்டனில் போலந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற மேலே குறிப்பிட்ட ஆதரவுக் கூட்டம் இருந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுத் தொழிலாளர்கள், அத்தகைய ஒரு கூட்டமைப்பைத் தயார் செய்வதற்கான ஒரு அமைப்புக் குழு நிறுவப்பட்டது.

எனினும் ஒரு வெகுஜன புரட்சிகர அனைத்து நாட்டு பாட்டாளி வர்க்க அமைப்பை நிறுவுவதற்கு தொழிலாளர்களிடம் ஒற்றுமைக்கான இயல்புணர்வான ஆசை மட்டும் இருந்தால் போதாது. இந்த சக்திகளை ஒன்றிணைப்பதற்கு ஒரு சித்தாந்த அடிப்படையான தேவையும் இருந்தது. இதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டுமானால் எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கு விஞ்ஞானபூர்வமான வெளிப்படுத்தலைக் கொடுக்கக் கூடிய ஒரு புரட்சிகரமான தத்துவத்தால் தான் முடியும். அந்தத் தத்துவம் மார்க்ஸ் எங்கெல்ஸின் தத்துவக் கொள்கையாகும். 1860 ஆம் ஆண்டுகளுக்குள் தொழிலாளர்களில் பெரும்பாலோர் பூர்ஷ்வா சித்தாந்தத்தின் செல்வாக்கின் கீழும், மார்க்ஸியத்திற்கு முந்தைய கற்பனாவாத சோஷலிசத்தின் செல்வாக்கின் கீழும் இருந்தார்கள் என்பது உண்மைதான் என்றாலும், தொழிலாளி வர்க்க இயக்கம் படிப்படியாக மார்க்ஸியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு ஏற்கெனவே போதுமான அளவில் பக்குவமடைந்திருந்தது. மார்க்ஸிய தத்துவம் தொழிலாளர்களுக்கிடையில் உள்ள பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வா செல்வாக்கைக் கீழடக்கி வெல்வதற்கும் அவர்களுடைய சித்தாந்தக் குழப்பத்தையும், செக்டேரியன் தனிமைப்பட்டு நிற்றலையும், குறுகிய தேசிய ஒதுக்கலையும் தவிர்த்து தெளிவடைந்து முன்வருவதற்கான சாதனங்களை உண்டாக்கித் தருகிறது.

1848-49 புரட்சிக்குச் சற்று முன்பு மார்க்ஸும் எங்கெல்ஸும் பாட்டாளி வர்க்க சர்வதேசத்திற்கான ஒரு விஞ்ஞான அடிப்படையை கொடுத்திருந்தார்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் லீகை நிறுவியதன் மூலம் எதிர்காலத்திய ஒரு விரிவான அனைத்து நாட்டுப் பாட்டாளி வர்க்க அமைப்பின் முன் வடிவத்தை உண்டாக்கியிருந்தார்கள். அவர்கள் அதன் தலைமையான மையத்தை அமைக்கக் கூடிய முறையிலான புரட்சிகரமான ஊழியர்களைப் பேணி வளர்த்திருந்தார்கள். பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் இருந்த காலத்திலும், குறிப்பாக பாட்டாளி வர்க்க மற்றும் ஜனநாயக இயக்கங்களின் எழுச்சி ஏற்பட்டிருந்த காலத்தில் விஞ்ஞான கம்யூனிஸத்தின் பதாகையைச் சுற்றி பாட்டாளி வர்க்க சக்திகளை ஒன்றுபடுத்துவதற்கான தீவிரமான அழுத்தமான போராட்டத்தை மார்க்ஸ் நடத்தினார். அந்த ஆண்டுகளில் அவருடைய பிரச்சார எழுத்துரைகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தலைமையாக பங்கு கொண்டிருந்த ஊழியர்களுக்கிடையில் புரட்சிகரமான கருத்தோட்டங்களை வார்த்தெடுப்பதற்கும், பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வில் அவர்களைப் பயிலுவிப்பதற்கும், அவர்களுடைய ஒற்றுமைக்கான உணர்வை தீவிரப்படுத்துவதற்கும் உதவி செய்தன.

மார்க்ஸினுடைய நடைமுறை செயல்பாடும் அனைத்து நாடுகளிலும் இருந்த பாட்டாளிகளின் அனைத்து நாட்டு ஒருங்கிணைப்பை முன்னுக்குக் கொண்டு வந்து மேல் உயர்த்தியது; லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தில் 1860 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் பங்கு கொண்டது, பிளாங்கிக்கு ஆதரவாக வாதிட்டுக் கூறிய அவருடைய அறிக்கைகள், போலந்து தேசிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நீக்ரோ அடிமை முறையை எதிர்த்துப் போராடி வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆங்கிலேயத் தொழிலாளர்கள் நடத்திய கூட்டங்களுக்கு அவர் கொடுத்த ஆதரவு,

ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுக்கூட்டமைப்பில் இருந்த தொழிலாளர்கள் பூர்ஷ்வாக்களான காரியவாதிகளுக்கு இழுத்துச் செல்ல முயன்றவர்களை எதிர்த்து அவர்களை நடைமுறைப் பிரச்சனைகளுக்காகப் பல்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளுடன் இணைத்து மார்க்ஸினுடைய நேரடி தோழர்கள் நடத்திய ஆதரவுப் போராட்டங்களில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி ஈர்ப்பதற்கு உதவியது.

மார்க்ஸும் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைச் செயல்பாடும், விஞ்ஞான கம்யூனிஸம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் ஆகியவற்றின் கருத்துக்களைப் பரப்புவதற்காக அவர்களாலே முயற்சித்துப் பாட்டாளி வர்க்கக் கட்சியை நிறுவுவதற்கு அவர்களாலே முயற்சிகள் அனைத்து நாட்டு உழைக்கும் மக்களின் கூட்டமைப்பை (அகிலம்) நிறுவுவதற்கான சித்தாந்த அடித்தளத்தை அமைப்பதில் ஒரு தீர்மானமான பங்கை ஆற்றின.

முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக நடத்தும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு அவர்கள் ஒரு தத்துவார்த்தப் பேராயுதத்தைக் கொடுப்பதற்காகப் பெருமுயற்சி எடுத்த அதே சமயத்தில் - இந்தக் காலத்தில் எல்லாம் மார்க்ஸ் அவருடைய முதன்மையான பணியான மூலதனம் என்னும் பெரு நூலை எழுதுவதற்கு தன்னுடைய முழு முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.





தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மாநாடு

அத்தியாயம் VIII சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீர்த்திமிக்க 9 வது தேசிய மகாநாடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது தேசிய மகாநாடு மற்றும் த...

செய்தியை சார்ந்த அலசல்