“தாய் மொழி தமிழும்” இன்றைய சமூகத்தில் அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்

 மொழி அதன் தேவைக்கேற்பமாற்றங்களை ஏற்பது மொழியின் வளர்ச்சிக்கும் அந்த மொழியைப் பேசுகின்ற சமூகத்தின்வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்.

இன்று உலகின் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களின் தொடர்புகளும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது. தமிழர்கள் பல நாடுகளுக்கும் சென்று குடியேறிவாழ்தலுடன் தொடர்பான சமூக மாற்றங்களைக் கிரகித்து வெளிப்படுத்த வேண்டிய தேவையும் தமிழ் மொழிக்குண்டு.

நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கேற்பவும் சமூக மாற்றங்களுக் கேற்பவும் ஈடுகொடுத்து மொழி தனது பங்கை ஆற்றுதற்கு சில மாற்றங்களை ஏற்க வேண்டியது மிக அவசியமாகும்.

மொழிக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவு மிகவும் ஆழமானது. சமூகத்தின் மிகப் பலம் வாய்ந்த ஒருகூறாகவும் கலை, பண்பாடு, வரலாற்று ஊடகமாகவும் மொழி விளங்குகின்றது.

சமூக வளர்ச்சி எப்படி பல்வேறு காலகட்டங்களிலும் பரிணாமம் பெற்று மாற்றமடைந்து வளர்ந்து வந்திருக்கிறதோ அதே போலவே மொழியும் நீண்ட வரலாற்றுக் காலகட்டங்களில் சமூக மாற்றம்-சமூகத் தேவைக்குஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்துவந்திருக்கிறது. மொழிகள் மாறுகின்றன. வளர்ச்சிப்போக்கில் ஒருபுறமும் நெருக்கடியின் நிமித்தம் மறுபுறமும் மாற்றங்கள் நேர்கின்றன. வளர்ச்சி தோற்றுவிக்கும் மாற்றங்கள் மரபுக்கும் மொழியின் நடைமுறைக்கு இடையிலான முரண்பாடுகளாகப் பரிணமிக்கின்றன. இதன் விளைவான நெருக்கடியின் தீர்வே பெரும் சீர்திருத்தங்களாக அமைகின்றன. எழுத்துச் சீர்திருத்தமும் இலக்கண விதிகளில் ஏற்படும் மாற்றங்களும் பெரும் மாற்றங்கள் எனலாம். இவ்வாறான மாற்றங்கள் கடுமையான கருத்துமோதல்களின் பின்னரே சாத்தியப்படுகின்றன. பல வகைகளில் மொழி மாற்றங்கள் சமுதாய மாற்றங்களை ஒத்த தன்மையின.

தமிழின் இன்றைய நெருக்கடி பன்முகப்பட்டது. தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் பிறழ்வுகளாகக்காட்டப் படுகின்றன. இந்தப் பிறழ்வுகள் இல்லாமல் இன்று இந்த மொழி இயங்க முடியாது என்ற உண்மை வசதியாக மறக்கப்படுகிறது.

தமிழ் அயல் மொழியிலிருந்து பெற்ற கொடைகளில் அதன் சொல்வளத்தின் ஒரு பெரும் பகுதி முக்கியமானது. முன்னர் பெறப்பட்ட சொல்வளம் பழந்தமிழின் இலக்கண விதி தமிழில் இடம்பெற்றது. அண்மைக் காலச் சொல்வளத்தின் தன்மை வேறு. இது தமிழ் ஒலிவளத்தின் வளர்சியை வற்புறுத்துகிறது.

ஆங்கிலேயர் புகுத்திய பலவில் தொடங்கி அன்றைய வேத மரபாகவும் ஏன் இன்றைய பன்நாட்டு கம்பெனிகள் வலைவிரிக்கும் கலாச்சார பண்பாட்டு மொழி வழக்குகள் தமிழ் மொழி தனக்கான வளர்ச்சியில் செப்பனிட்டுக் கொள்ளவில்லையா? ஆங்கிலமோ வேற்றுமொழி வாயிலாக வந்தடைந்த வற்றை தமிழின் ஒரு பகுதியாகிவிடவில்லையா?.

இவற்றின் வருகை தமிழ் மொழியிற் புதிய சாத்தியப்பாடுகளை நிறுவியுள்ளது. இவற்றுக்குரிய இலக்கணம் என்று தெளிவாக எதுவுமில்லாவிடினும், நடைமுறை சில பொது வழிகாட்டல்களை நிறுவியுள்ளது.

விஞ்ஞானமும் கணிதமும் தொழில்நுட்பமும்நவீன மருத்துவமும் வாணிபமும் சட்டத்துறையும் தமிழில் விருத்தியடையவேண்டும் என்பது உணரப்பட்டதன் விளைவாகக் கலைச் சொல்லாக்கமும் புதிதாகப் புனையப் பட்ட வாக்கியப் பிரயோகங்களும்பழந்தமிழின் மரபுக்குமுரணான பல அம்சங்களை மொழியின் ஒரு பகுதியாக்கிவிட்டன.

இவற்றைவிட அந்நிய மோகமும் தமிழுடன் ஆங்கிலத்தை ஒழுங்கற்ற முறையில் கலந்து பிரயோகிக்கும் பழக்கமும் தமிழில் புதிய நெருக்கடிகளைத் தோற்று விக்கின்றன. இவ்வாறான பிரயோகங்கள் பெரும்பாலும் மொழி வளர்சியை மனதில் கொண்டனவல்ல. ஆங்கில மோகங் கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் தனது வர்க்கத் தேவைகளைத் தமிழர் அனைவர் மீதும் சுமத்த முனையும் பாங்கிலேயே அவர்களுக்கான கலை இலக்கியங்களிலும் தமிழ் மீது ஆங்கில ஆதிக்கத்தைத் திணிக்கிறது.

மொழியுணர்வு, மொழிப்பற்று என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத ஒரு ஜீவாதாரத் தொடர்பினைக் கொண்டுள்ளது. மொழிவெறித்தன்மை என்பது எதைச் சார்ந்ததாயினும் தீய விளைவையே ஏற்படுத்தும். எந்தவொரு மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. மொழி வெறியும் தீமையையே தரும் உழைக்கும் மக்களை பிளவுப்படுத்தும்.

நவீனத்துவம் என்று சிலர் கருதும் குருட்டுத்தனமான அந்நிய மோகமோ நமது மரபு என்று வேறு சிலர் கட்டிக்காக்கமுனையும் மாறாநிலை கண்ணோட்டமோ தமிழின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியாது, தமிழிலேயே செயற்படும் பெரும்பான்மையான மக்களின் சமுதாய நலனும் அவர்களது மொழித் தேவையும் மரபுக்கும் நவீனத்துவத்துக்கு இடையிலான பாலம் அமைக்கவல்ல ஒரு தெளிவான கண்ணோட்டத்திலேயே நிறைவு செய்யப்பட முடியும்.

மேலும்

சிலர் தமிழனின் பெருமையை இப்படி பேசுகின்றனர் "கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து வாளொடு முன்தோன்றி மூத்த குடி" என்று கவிதை செப்பினர். கைலாசபதி இந்தக் கூற்றை ஆய்வு செய்து "அடியும் முடியும்" என்ற தொகுப்பிலுள்ள கட்டுரையில் மறுக்கிறார்.

உயிர்களின் பரிணாம வளர்ச்சிபற்றிய அறிவியல் ஆய்வுகள் மனிதனின் தோற்றக் காலத்தை திட்டவட்டமாக வரையறை செய்துள்ளன. புவியியல் ஆய்வுகள் சூரியனில் இருந்து பிரிந்து உலகம் உருவான காலத்தையும் கணிக்கின்றன. இம்முறையில் தமிழின் தொன்மையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதுதான் என்கிறார் கைலாசபதி,"அடியும் முடியும்" என்ற கட்டுரைத் தொகுப்பில் இரண்டாவது கட்டுரை தமிழ் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரை. தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து இடம்பெறவில்லை. சங்க இலக்கியத் தொகுப்பில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றது. அதன் பின்னர் காலந்தோறும் புதிய கடவுள்கள் தோன்றினர். சில கடவுள்கள் மறைந்தனர். இத்தகைய இந்தக் கடவுளர்கள் நூல் முகப்பில் வாழ்த்தாக இடம்பெற்றனர். விரிவான முறையில் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்து இடம்பெற்றதைகைலாசபதி அவர்கள் ஆய்வு செய்கிறார். 20-ம் நூற்றாண்டை நெருங்கும்பொழுது தமிழ் மொழி கடவுளாக மதிக்கப்பட்டு வாழ்த்துச் செய்யுளாக இடம்பெற்றது. தமிழின்மீது பக்தியுணர்வு பரவியது. இடைக்காலத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களில் தெய்வம்பற்றிய ஐயம் இடம்பெற்றதையும் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

வடமொழிக்கும், தென்மொழிக்கும் வரலாற்றுக் காலம் முழுவதும் இருந்து வரும் பகைமையை விரிவாக எடுத்துக்காட்டுகிறார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ் வாழ்த்து பாடலில் ஆரியத்துக்கு கடுமையான எதிர்ப்பு இடம்பெற்றதை குறிப்பிடுகிறார். இந்தப்போக்கிற்கு மூலகாரணமாக டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வை குறிப்பிடுவதோடு அவர் நிற்கவில்லை. இதன் வரலாற்றை முற்காலத்திற்கும் கொண்டு செல்கிறார். பிரித்தானிய அரசின் இனக்கொள்கையைக் குறிப்பிடுகிறார். இந்தியர்களைப் பிளவுபடுத்தி தம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் இனக்கொள்கையைப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அடியும் முடியும் என்ற இந்தத் தொகுப்பு நூலில் கடவுள் ஆயினும் சரி, வேறு எத்தகைய மொழி அல்லது இலக்கியப் போக்காயினும் சரி - எல்லாமே வரலாற்றில் குறிப்பிட்ட சூழலில் தோன்றுகின்றன என்ற மார்க்சியக் கண்ணோட்டத்தை ஆய்வு நெறியாக முன்வைக்கிறார். அடியையும் முடியையும் வரலாற்றில்தான் தேடிக் கண்டறிய முடியும். வரலாற்றுக்கு வெளியில் வைத்து சமூகத்தில் உள்ளஎவற்றையும் ஆய்வுச் செய்யமுடியாது என்கிறார்.

இன்றைய தமிழக சூழலில் தாய்மொழிக்கான தேவையை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனரா என்பதனை முதலில் காண்போம்.

தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும், ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக்காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு உழலுகின்றது.

தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப் பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ் தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும் நிலைநாட்டவும், அரசின் போக்கை புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும், அரசியல் அதிகாரத்தில் பங்குகொள்ளவும் ஆட்சிமொழி அம்மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும் என்பது உயிராதாரமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை இங்கு நிறைவேற்றப் படவில்லை. அரசுத் துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும்தான் தமிழ் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.

இங்கு கல்வியில் ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில்; உயர் கல்வியும் ஆங்கிலத்தில்; ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் - ஆங்கிலத்தை அகற்றாமல் - தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சிமொழியாக பயிற்றுமொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.

நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லாத ஒன்று. தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கப்பூர்வமான அறிவு கிட்டும். எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்விதான்.

முன்பு வேதங்களை பார்ப்பனர்களின் ஏகபோகமாக வைப்பதற்காக, பிறர் வேதம் படிக்கத் தடை இருந்தது. பார்ப்பன-சத்திரியன் அரசியல் அதிகாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகச் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என இருந்தது போல, இப்போது உழைக்கும் வர்க்கத்திடமிருந்து கல்வியைப் பறித்து, மேல்தட்டுப் பிரிவினரின் ஏகபோகமாக்கிட அந்நியமொழிக் கல்வி உதவுகிறது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் எனக் கோருவது நமது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம்தான் பயிற்றுமொழியாக ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு இருக்கின்றன. அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வந்து விட்டது ஆங்கில மோகம் தமிழர்கள் மத்தியில் கோலோச்சுகிறது. எந்த கல்வி கற்றாலும் இங்கே வேலையை உருவாக்காத அரசு மக்களின் மொழியையும் பிடுங்க நினைப்பது எவ்வளவு கொடூரமானது.

இன்றைய தமிழகத்தில் கல்விகற்ற பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது. இதுபோன்ற ஒரு நிலைமையை தமிழகத்தில் உருவாக்கியுள்ள பெருமை இந்த ஆட்சியாளர்களின் சாதனைதனே? ஆகையால் தாய்மொழியின் தேவையும் எதிர்காலம் அறிந்தும் செயலாற்றுவோம்.

தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும், அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய அரசு தடையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.

கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நடந்தது.

தமிழை முழுமையாக ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.

காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன் என்பதை ஆளுவோர்தான் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு எது நல்லதோ அதனைச் சமுதாயத்திற்கும் நல்லது எனச் சொல்லித்தான் நிலைநிறுத்துவார்கள். அப்படித்தான் புதியகாலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்திற்கு உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை (அரசியல் உரிமையை) மறுக்கிறது. எனவே தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ணய உரிமை பெறவும், தமிழ்மொழி ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பண்பாட்டு மொழியாகவும், அதற்குத் தடையாக உள்ள இந்த அரசுக்குப் பதிலாக உழைக்கும் மக்களுக்கான அரசு நிறுவப்படவேண்டும் (அவை மக்கள் ஜனநாயக அரசு என்பது புரித்ல்).

இப்பணியை நிறைவேற்றப் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர ஜனநாயக இயக்கம் தேவை. எனவே, அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பது நமது உடனடிப்பணியாகும்.

இங்குள்ள ஜனநாயக சக்திகள் இன்று ஆளும் வர்க்க கட்சிகளின் பின்னால் அணி திரண்டுள்ள பல்வேறு தேசியம் மொழிப்பிரச்சினை குறித்து பேசுவோர் தங்களின் விடுதலைக்கான பாதை எவை என்று நிர்ணயம் செய்யாததன் வெளிப்பாடே இவை. உண்மையில் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கான அரசாக இவை இல்லாத பொழுது இவை அந்த மக்களுக்கான எவையும் செய்யாத பொழுது இந்த அரசமைப்புமுறையே அவர்களுக்கானதாக இல்லாத பொழுது அவர்களுக்கான ஆளுமைக்கான பாட்டாளி வர்க்க அரசை பற்றி பேச வேண்டும் அல்லவா? அவை ஆசான்கள் சொன்ன பொதுவுடமைக்கான வழிமுறைக்கான சோசலிசத்தை இடைகட்டமாக கம்யூனிசமே இலக்காக பயணிப்போம்... இன்னும் பின்னர்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்