சமூகத்தில் சாதியயை புரிந்துக் கொள்ள மார்க்சியம் புரிந்திருக்க வேண்டும்.

 உலகில் தோன்றிய எல்லா சித்தாந்தங்களும் மனிதகுலத்தை விளங்கிடச் செய்தது. மார்க்ஸ் மட்டுமே அதன் அடிப்படைகளை விளக்கி அதனை மாற்றுவதற்கான வழியைக் கூறினார். எவ்வாறு டார்வின் உயிர்ப் பொருள் இயல்பின் வளர்ச்சி விதியைக் கண்டறிந்தாரோ அவ்வாறே மனிதகுல வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்; “அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு முதலில் உணவு, டை, இருப்பிடம் ஆகியவை வேண்டும் என்ற எளிய உண்மையை மதச் சித்தாந்தங்களால் மறைக்கப்பட்டிருந்ததை மார்க்ஸ் வெளிச்சமிட்டு காட்டினார். எனவே மனித வாழ்க்கைக்கு உடனடியாக அவசியமான பொருள் சார்ந்த வகைமுறைகளின் உற்பத்தியும் அதன் விளைவாக அந்த சமூக வாழ்க்கை தேவைக்கேற்பட்ட பொருளியல் வளர்ச்சியுமே. அரசு நிறுவனங்களதும், சட்டக்கருத்தாக்கங்களதும் கலைகளதும் ஏன் மதங்கள் பற்றிய சிந்தனைகளதும் அஸ்திவாரமாக அமைந்தன எனவும். மனித வாழ்வியல் (பொருளியல்) தேவையின் அடிப்படையிலேயே மற்றவற்றை (மேற்கட்டுமானம்) விளக்கப்பட வேண்டுமேயன்றி இதுவரை இருந்து வந்தது போல மறுவிதமாக அல்ல என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்தார்.

 
மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும் அல்லது சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவமாகும். மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்ன மாற்றங்கள் மனித குலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. சில நுண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நுண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது. அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொது உண்மையை, பொதுவான வழிகாட்டுதலை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்த பொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது. உள்ள அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு தீர்வை முன் வைக்கிறது. மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை; மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.
 
குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதாலோ பயன் இல்லை. மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்தநாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். 
 
ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வு செய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக் கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால், தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது. மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூக மாற்றத்திற்கான கொள்கைத் திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. 
 
மனித சமூகம் உயிர் வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூக விஞ்ஞானம் போதிக்கிறது. இவ்வளவு விரிவாக விளக்குவதன் நோக்கம் நம் சமூகத்தில் உள்ள ஏற்றதாழ்வான வர்க்க அமைப்பே சாதியின் இருப்பிற்கு காரணமாக உள்ளது. அதனை புரிந்து, மாற்ற மார்க்சிய அறிவை பெற வேண்டும். மார்க்சிய போதனையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
 
மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைக் கொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். மனித சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான தொடக்கக் காலங்களில் இந்த உற்பத்திச்சாதனங்கள் சமூகத்தின் பொதுச்சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப் பிரிவுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகினார்கள். மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றியதோடு அவர்களை சுரண்டியும் வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப் பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும்வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன் படுத்தியே ஆளும்வர்க்கம் சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தி நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்துவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் (மேல்கட்டுமானம்) என்கிறோம். மேலும் சுருக்கமாக அறிவோம். மனிதகுலம் தோன்றியதிலிருந்து இதுவரை 5 விதமான சமுக அமைப்பு தோன்றியுள்ளது. அவை அதன் சமுக உற்பத்தி முறையின் அடிப்படையில் அதனை ஒவ்வொன்றாக மேலோட்டமாக பார்ப்போம்.
 
மார்க்சின் படைப்புக்களில் இருந்தும் அதன் குறிப்புக்களில் இருந்தும் மார்க்சிய மானிடவியல் அணுகுமுறையில் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்(05)” என்ற நூல் ஏங்கெல்சால் முழுமையாக்கப்பட்டது. உடனடி வாழ்க்கையின்‌ உற்பத்தியும்‌ புனருற்பத்தியுமே வரலாற்றில்‌ தீர்மானகரமான காரணியாகும்‌. ஆனால்‌ இது இருவகையான தன்மைகொண்டது. ஒரு பக்கத்தில்‌, வாழ்க்கைக்குத்‌ தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும்,‌ அவற்றைப்‌    பெறுவதற்குத்‌ தேவையான கருவிகளையும்‌ உற்பத்தி செய்‌வது; மறுபுறத்தில்‌, மனிதர்களையே உற்பத்தி செய்வது அதாவது மனித குலத்தைப்‌ பெருக்குவது. ஒருதிட்டவட்டமான வரலாற்றுச்‌ சகாப்தத்தைச்‌ சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச்‌ சேர்ந்த மக்கள்‌ எந்த சமூக அமைப்பின்‌ கீழ்‌ வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின்‌ இரண்டு வகைகள்‌ கட்டுப்‌ படுத்துகின்றன. ஒரு பக்கத்தில்‌, உழைப்பின்‌ வளர்ச்சி எந்தக்‌ கட்டத்தில்‌ இருக்கிறது என்பதும்‌ மறுபக்கத்தில்‌, குடும்பத்தின்‌ வளர்ச்சி எந்தக்‌ கட்டத்தில்‌ இருக்கிறது என்பதும்.
 
எந்த அளவுக்கு உழைப்பின்‌ வளர்ச்சி குறைவாகவும் உற்பத்தியளவு குறுகியதாகவும் உள்ளதோ‌ அதன்‌ காரணமாக சமூகத்தின்‌ செல்வமும்‌ குறுகியதாகவும்‌ இருக்கின்றது.தன் காரணமாக சமூக அமைப்பின்‌ மீது குலமரபு உறவுகளின் எச்சங்கள் தொடர்வதும்‌ குலமரபு உறவுகளை அடிப்‌படையாகக்‌ கொண்ட இந்தச்‌ சமூகக்‌ கட்டுக்கோப்புக்குள்‌ளாகவே உழைப்பின்‌ உற்பத்தித்‌திறன்‌ மேன்மேலும்‌ வளர்கிறது; அத்துடன்‌ கூடவே தனிச்சொத்தும்‌ பரிவர்த்‌தனையும்‌ வளர்கின்றன; செல்வத்தில்‌ வேற்றுமைகளும்‌ மற்றவர்களுடைய உழைப்புச்‌ சக்தியைப்‌ பயன்படுத்திக்‌ கொள்வதற்குரிய வாய்ப்பும்‌, அதன்‌ மூலம்‌ வர்க்க முரண்‌பாடுகளின்‌ அடிப்படையும்‌ வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்‌; இவை தலைமுறைக்குப்‌ பின்‌ தலைமுறையாக பழைய சமூகத்தின்‌ கட்டுக்கோப்பைப்‌ புதிய நிலைமைகளுக்கேற்பத்‌ திருத்தியமைக்கப்‌ பார்க்கின்றன. முடிவில்‌, அவ்விரண்டிற்கும்‌ இடையிலுள்ள பொருந்தாநிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச்செல்கிறது. புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின்‌ மோதலில்‌ குலமரபுக்‌ குழுக்களின்‌ அடிப்படையில்‌ அமைந்திருந்த பழைய சமூகம்‌ வெடித்துச்‌ சிதறிவிடுகிறது. அந்தப்‌ பழைய சமூகத்தின்‌ இடத்தில்‌ ஒரு புதிய சமூகம்‌ தோன்றுகிறது. அந்த அரசின்‌ கீழ்நிலை அங்கங்களாக குலமரபுக்‌ குழுக்கள்‌ இல்லை, வட்டார அடிப்படையில்‌ அமைந்த குழுக்களே இருக்கின்றன. இந்தப்‌ புதிய சமூகத்தில்‌ சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின்‌ மீது முழுமையாக ஆதிக்கம்‌ செலுத்துகிறது. மேலும்‌, இந்த சமூகத்தில்‌ வர்க்க முரண்‌பாடுகளும்‌ வர்க்கப்‌ போராட்டங்களும்‌ இப்பொழுது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும்‌ வர்க்கப்‌ போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்லா வரலாற்றுக்கும்‌ உள்ளடக்கமாக இருக்கின்றன.
 
இங்குள்ள எல்லாம் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் சுரண்டலும் அரசு என்ற வலிமை மிக்க அடக்குமுறை கருவியின் துணைக்கொண்டே நிகழ்கிறது. சொத்துள்ளவன் சொத்தற்றவனின் உழைப்பை சுரண்ட, சுரண்டலாளர்களின் கருவியாக அரசு அன்றும் இன்றும் இருக்கிறது. அன்று வாளின் வலிமை கொண்டு அரசன் அவன் அதிகாரத்தால் மக்கள் சமூகத்தின் மீது பல்வேறுவிதாமான கருத்தியல் மற்றும் கோட்பாட்டு நியமங்களை திணித்தான் அவைதான் அன்றைய நியாயம் நீதி நடைமுறை அதனை மீற அச்சமூகத்தில் உரிமை இல்லை. இன்றை அரசும் தன் அதிகார எல்லையில் அதே போன்ற சுரண்டல் அடக்குமுறை ஒடுக்குமுறையை நடத்த வேண்டிய தேவை அவர்களின் வர்க்க நிலையில்தான் ஆம் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்ட பல கோட்பாடுகள் அவை ஆளும் வர்க்க நலனிற்கானதே. இங்கே யார் எதற்காக அடக்கப்படுகின்றனர் யாரின் நலனிலிருந்து சிந்தித்தால் தெளிவடைய முடியும். அவை அந்த வர்க்க நிலையிலிருந்தே காணல் வேண்டும். குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே சுரண்டி பிழைக்கின்றனர் மற்றெல்லாம்  சாது என்பதல்ல! வர்க்க சமூகத்தில் வர்க்கம் சாரா எவையும் இல்லை அவர்கள் எந்த சாதியை சார்ந்தவராக இருப்பினும்.
மார்கசியம் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞானம் என்ற இயங்கியலை புரிந்துக் கொள்ளாத எவையும் முழுமை இல்லை....
 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்