மார்க்சியத்தை கற்றறியும் தேவையை உணர்ந்தவர்கள், அதன் மீதான நம்பிக்கையுள்ளவர்கள் கூட்டுப்படிப்பின் ஊடாகவே கற்பது நல்லது. இந்த சமூக அமைப்பில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ போன்ற அதீத சிந்தனை வளம் கொண்டவர்கள் நம்மிடம் இன்றில்லை. இதனால் சமச்சீரற்ற சிந்தனை வளர்ச்சி கொண்ட புரிதலுக்குள் சிக்கித் தவிக்கின்றது. இங்கு தனிமனிதர்கள் தமது புரிதல்களை முன்னிறுத்துவதும், குழுநிலையை உருவாக்கிக் கொள்வது என்ற குட்டி முதலாளிய சிந்தனை ஆட்கொண்டிருக்கின்றதை அவதானிக்கலாம்.
மார்க்சியம் என்பது சமூகவிஞ்ஞானம், இந்த விஞ்ஞான அறிவைக் கொண்டு சமூக பொருளாதார அமைப்பினை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதாகும். அந்த சமூக பொருளாதார அமைப்பின் சமூக உறவுகளை, சமூக நடத்தைகளையும், சமூக பண்பாட்டையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்பதாகும். ஆதிக்க கருத்தியல் - எதிர்க்கருத்தியல் என்று இரண்டு இருக்கின்றது. இவை இரண்டையும் வர்க்கமே தீர்மானிக்கின்றது. இதில் உழைக்கும் மக்களுக்கான குரலாகவே மார்க்சியம் இருக்கின்றது. சிந்தனைக்கும் வாழ்நிலைக்குமான சித்தாந்தப் பிரச்சனையை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது அவசியமானதாகும்.
முதலாளித்துவவாத சிந்தனைக்கு அப்பால் மார்க்சியமும் பன்முகப் பார்வையை கொடுக்கின்றது. ஆனால் இயங்கியலுக்கு மாற்றாக பற்பல சிந்தனைப் போக்குகளை அறிமுகப்படுத்துகின்றது இங்குள்ள ஆளும் வர்க்க கூட்டம். தனித்தனி பிரச்சினைகளை முன்னிறுத்தி தீர்வுகளை தனித்தனியாக முன்வைக்க முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது. மார்க்சியமற்ற போக்கில் அமைந்த செயற்பாடுகளைக் கொண்ட அரசியல் முன்னெடுக்க முயலுகின்றனர்.
மார்க்சியத்தை தவிர மற்றைய உதிரிக் கோட்பாடுகளை உள்வாங்கிய நிலையில் தான் இன்றைய கம்யூனிச கட்சிகள் உள்ளன.
‘‘வர்க்கங்கள் இருந்து வருவது உற்பத்தியின் வளர்ச்சியில் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் தொடர்புடையது. வர்க்கப் போராட்டம் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திக்கே இட்டுச் செல்கிறது. இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களை ஒழிப்பதற்கான வர்க்கங்களற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான மாறுதல் கட்டமாகும்.” மார்க்ஸ்
இந்த அடிப்படையில் இருந்துதான்
மார்க்சியர்களும் செயற்பட வேண்டும். சமூகக் கட்டத்தை கடப்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கிக்
கொள்ள வேண்டும். ஆனால் இன்று அவ்வாறான நிலை அறவே இல்லை. மாறாக இந்தக் கட்சிகள் லெனின்
காலத்தில் இரண்டாம் அகிலத்தில் பின்தங்கிய மார்க்சியப் போக்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது
போலவே உள்ளன. இன்று மார்க்சியம் அல்லாத போக்குகள் வெவ்வேறு முகாம்களில் வெளிப்படுத்தப்படுகின்றது.
லெனின் தலைமை வகித்த அகிலத்தின் வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.
இதன் காரணமாகவே இரண்டாம் அகிலத்தின் நிலையில் இருந்து முன்னேறிடவில்லை.
பின்நவீனத்துவ அணுகுமுறைப் போக்கானது மார்க்சியத்தின் அங்கமாக பல உதிரிக் கோட்பாடுகளை நமக்கு முன்னிறுத்தப்படுகின்றது. இந்தப் போக்கிற்கு எதிரான அரசியல் விவாதத்திற்கான வெற்றிடம் இருந்து கொண்டே உள்ளது.
தனிமனிதர்களின்
தமது வல்லமைக்குட்பட்ட ஆய்வுமுறையானது இயங்கியல் மறுப்பை தன்னகத்தே கொள்கின்றது. இந்தப்
பிரச்சனையை கவனத்தில் கொண்டு அதனை முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். மார்க்சிய அணுகுமுறைக்கு
அப்பால் தன்னார்வ, அனார்க்கிய (தாராளவாத) அணுகுமுறை, சிந்தனைமுறை ஆகியவை முன்னிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தே
கலாசாலை மார்க்சிய அணுகுமுறை வடிவமும் முன்னிறுத்தப்பட்டதோடு அல்லாமல் அதுவே புரட்சிகர
மார்க்சியமாக முன்னிறுத்தப்பட்டும் வருகின்றது. மார்க்சிய அணுகுமுறையை நிராகரித்துக்
கொள்வதினால் தனிமனித புரிதல்களே மார்க்சியமாக முன்னிறுத்தப்படுகின்றது.
இந்த சமூக அமைப்பு தனிமனிதர்களை தனித்தீவுகளாகக் கொண்ட சிந்தனை மையங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இங்கு தனிமனித புரிதல்களை முன்னிறுத்துகின்றது. தனிமனித புரிதல்களை முன்னிறுத்தும் போக்கும், தனிமனித மையப்போக்கும், சமூக அமைப்பில் ஆளுமை செலுத்துகின்றது. இதன் தொடர்ச்சியாக ஒப்புறவு கொண்ட சமூக மனிதர்களின் கூட்டை அது உடைக்கின்றது. இந்தவகையில் தனித்துவவாதம் என்பது சிந்தனைத் தளத்திலும் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை அறிய இந்த முயற்சி பயன்படும்.
மார்க்சியத்தில் எவ்வாறு பன்முகப் பார்வையை முன்னிறுத்துகின்றதை மாவோ இன்னும் இலகுவாக நமக்குப் படைத்துத் தந்துள்ளார். மாவோ மார்க்சியத்தை வளர்த்தெடுத்தும் தந்துள்ளார்.
தனிமனிதர்கள்
சமூகத்தின் ஒரு பகுதியாகவும், பொருளாதார முனைப்புக்கள் பற்றியும் இங்கே காணமுடிகின்றது. தனித்துவவாதத்தைக் கோருவது, தனிமனித விருப்பத்தை
முன்நிறுத்துவது போராட்ட அமைப்பிடையே காணப்படுகின்றது. ஒரு உறுப்பினர்
கட்சி திட்டத்திற்கு பணிந்து நடப்பதையும் தவறென்கின்றார்கள்.
தனிமனித வாழ்வியலுக்கு மாற்றாக கட்சியை முதன்மை கொள்வதை மறுக்கின்றார்கள். இந்தப் போக்கானது அமைப்பிடையே அராஜகத்தை வளர்த்து விடுகிறது. அராஜகவாதமானது (Anarchism) மத்தியப்படுத்தப்பட்ட
நிறுவன அமைப்பை கொண்ட தலைமையை, அரச அதிகாரத்தை எதிர்க்கின்றது. இவர்கள் சனநாயக-
மத்தியத்துவத்தை மறுப்பவர்களாகின்றனர். அதற்கு மாறாக ஒழுக்கமைக்கப்படாத
தன்னிச்சைப் போக்கான பாதையை முன்வைக்கின்றது. அதேவேளை அமைப்பிடையே தாராளவாதம் என்பது எவ்வகையான பாதிப்பை கொண்டு வருகிறது
எனப்பார்ப்போம்.
“ஒரு புரட்சிகரக் கூட்டுறவில் தாராளவாதம் என்பது தீங்கு விளைவிக்கும் ஒன்று
அது ஐக்கியத்தை அரித்துத் தின்னுகின்ற ஒன்றிணைப்பினைச்
சீர்குலைக்கின்ற, வேலையில் பாராமுகத்தை உண்டாக்குகின்ற, வேற்றுமையை விதைக்கின்ற
ஒரு நச்சுத்திரவம். அது புரட்சிகர அணிகளில் உள்ள கட்டுக்
கோப்பான ஸ்தாபன அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும்
அழித்து விடுகின்றது. கொள்கைகள் பூரணமாய் அமுல்
நடத்தப்படுவதை அது தடுக்கிறது. கட்சியின் தலைமையில் உள்ள
மக்களிடமிருந்து கட்சி ஸ்தாபனங்களைப் பிரித்து விடுகிறது.
இது மிகத்தீமையான ஒரு போக்காகும்.
தாராளவாதிகள்
மார்க்சிசக் கோட்பாடுகளை வெறும் வரட்டுத் தத்துவமாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை
அங்கீகரிக்கின்றனர், ஆனால் அதை அனுஷ்டிக்க அல்லது பூரணமாக அனுஷ்டிக்கத்
தயாராக இல்லை. தமது தாராளவாதத்துக்குப் பதிலாக, அதன் இடத்தில் மார்க்சியத்தை வைக்கவும் அவர்கள்
தயாராக இல்லை. இந்த நபர்களிடம் மார்க்சிசம் இருக்கும் அதேவேளையில், தாராளவாதமும் இருக்கிறது.
அவர்கள் மார்க்சிசம் பேசுகின்றனர். ஆனால் தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு
மார்க்சிசத்தையும் தமக்குத் தாராளவாத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான
சரக்குகளையும் இருப்பில் வைத்து, இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான்
சில நபர்களின் மூளை வேலை செய்கின்றன.” (354-5 மாவோ மேற்கோள்கள்)
தாராளவாதச்
சிந்தனை என்பது ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத்திற்குரியது.
இது தனித்துவவாதம் என்பதை
உணர்வதில்லை. மாறாக புறச்சூழலின்
தாக்குதலானது இவர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தனித்துவவாதம்
முதலில் கேள்வி ஞானத்தின் அடிப்படையில் இலங்கை, இந்திய நாடுகளில் நுழைக்கின்றது. பின்னரே இது பொருளாதார
வளர்ச்சியை எட்டியவுடன் கருத்துருவமும், அமைப்புருவமும்
பெறுகின்றது. எமது நாடுகளில் தனித்துவவாதச் சிந்தனை முற்று முழுதாக
சென்றடையவில்லை. மேற்கு நாடுகளை தவிர்ந்த நாடுகளில்
தாராளவாதச் சிந்தனையின் பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது. அது
முதலாளித்துவ சித்தாந்த நீரோட்டத்தின்
தாக்குதல் என்ற நிலையில் அனைத்துச் சமூகப் பிரிவுகளிடையே ஏற்படும் தாக்குதல் என்ற
நிலையில் உள்ளது. ஆனால் இது முற்று முழுதாக பொருளாதார
வளர்ச்சி அடைந்து, அந்த பொருளாதார நலனுக்கு ஏற்றவாறான வீச்சு
இதனிடம் இருக்கவில்லை. ஆனால் கலாசாலையை பின்புலமாக
கொண்டவர்கள் மத்தியில் இச்சிந்தனை உள்ளது. இவர்களிடத்தில்
இருந்து தாராளவாதச் சிந்தனை வெளிப்படுவதைக் காணமுடியும். இந்த நாடுகளில் படித்தவரிடையே தனித்துவவாதச் சிந்தனை தோன்ற
இடமிருக்கின்றது. ஆனால் அரைநிலமானியச் சிந்தனையில் வளர்க்கப்பட்டவர்கள்,
கடமையுணர்ச்சியை (ஒருவரை ஒருவர் தங்கியிருப்பது)
முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்டவர்கள், இதனால் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் மேற்கு நாடுகளில் இருக்கின்ற நிலை போன்று
தனித்துவவாதிகளாக இவர்களால் இருக்க முடியாது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்
நிலப்பிரபுத்துவ சிந்தனை முறை, சமூக உறவு என்பது முழுமையாக சிதையவில்லை. இன்னும் கூறப்
போனால் முதலாளித்துவ உற்பத்தி முறை, சமூக உறவு என்பது வளர்ச்சியடையவில்லை.
தனித்துவவாதிகள்
தமது அறிவை சக்தியாக மாறுகின்றனர். இவர்கள் சாதாரணமாக அமைப்புகளில் இருந்து செயற்பட தயங்குபவர்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது அவற்றை பயன்படுத்திக் கொள்ள முனைவர்.
இவர்களின் வர்க்கம் வெளிப்படுத்தும் அறிவை வரையறுத்துக் கொள்ளவும்
வேண்டியிருக்கின்றது. அறிவினை எல்லா மக்களும் கொண்டுள்ளனர்,
ஒவ்வொருவரும் அவரவர் வட்டத்தினுள் திறமையுடையவர்கள். அறிவு பற்றிய அளவுகோளில் பட்டப்படிப்பினால் பெறும் அறிவினைக் கொண்டு
அளவிடக் கூடாது. ஆனால் இங்கு குறிப்பிடுவது படித்தவர்கள்
தாம் கொண்ட அறிவைக் கொண்டு மற்றைய மனிதர்களை தமது தேவைகளுக்காக பயன்படுத்துவதும்,
அதன் பின்னர் தூக்கி எறியும் நிலையைப் பற்றியே குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பிரிவினர் தமது மேதாவிலாசத்தைக் கொண்டு மக்களை, சக உறுப்பினர்களை தமது விருப்பத்திற்கு அமைய கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள் அங்கம் வகிக்கும் அமைப்புக்களில்
தன்னாதிக்கத்தை மேற்கொள்கின்றனர். அமைப்பிற்கு வெளியே
இருப்பவர்கள் புத்தகங்களை எழுதிவிடுவதன் மூலம் தமது கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்வதும், படித்துப் பெற்ற அறிவைக் கொண்ட
விமர்சன முறைகள் கொண்டு இயங்கின்ற நபர்கள் அமைப்பு வடிவம் எடுப்பதில்
பின்வாங்குகின்றனர். இந்த வகையானவர்கள் இலக்கிய கழகம் என்றதன் பின்னால் ஒழிந்து
விடுகின்றனர்.
இதன் வெளிப்பாடுகள் மேற்கில்
தீவிரமாக எழுந்திருந்தது. இதன் வெளிப்பாடுகள் இன்றும் எமது சமூகத்தின் முன்னால் கொண்டு
வந்து நிறுத்தப்படுகின்றது. திறந்தநிலை மார்க்சியம் என்ற தலைப்பில்
(Open Marxism) நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
1. இயக்கவியலும்
வரலாறும், (Dialectics and H istory (1992), 2. கோட்பாடும் செயல்பாடும் - (Theory and Practice 1992), 3. மார்க்சின் விடுவிப்பு, (Emancipating Marx 1995), 4. மூடப்படும் உலகத்துக்கு எதிராக (Against a Closing World (2020) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியானதை தமிழில் மொழிபெயர்த்து NCBH
வெளியிட்டுள்ளது. மேற்கில்
இருந்து கோட்பாடுகளை இறக்க வேண்டிய தேவை என்ன? ஏன் இவர்களால் சொந்தக் கோட்பாட்டை உருவாக்க
முடியவில்லையா?
குருசேவிற்குப் பின்னரான அமைதி
வழி ‘‘மக்கள் ஜனநாயகப் புரட்சி” (தேர்தல்) மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது, தலைமறைவு
அமைப்பு வடிவத்தை மறுப்பது, சட்டரீதியான அமைப்பு வடிவம் என்று தொடங்கியது. கொள்கைக்காக
வாழ்தல், மக்களுக்காக அர்பணித்தல் என்பது எல்லாம் தேவையற்றது என்ற சிந்தனை அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னால் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறைக்கு மாற்றாக
எதுவும் இல்லை. மார்க்சின் முடிவுரையான சமூகக் கட்டம் என்பது இனிச் சாத்தியம் இல்லை
என்று பரப்புரை செய்யப்பட்டது. மார்க்சியத்தில் இருந்த குறைபாடுகளை தீர்ப்பதாக பல குழுக்கள்
எழுந்தன. அந்தக் குழுக்கள் வர்க்கமற்ற படைப்பாளிகளின்
அமைப்புருவாக்கம் முற்போக்கு என்ற ரீதியில் நடந்தேறியது. ஏகாதிபத்திய தாராளவாதத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு
தம்மை நிலைப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் சீர்திருத்தத்தினால் பலனடைந்தவர்கள்
உள்ளார்கள். அவர்களின் வர்க்கநிலை அமைதியாக்கம் ஊடாக இணைந்து பயணிக்க முடிகின்றது.
வர்க்கமற்ற சமூகப் படைப்பாளிகளின் கூட்டு என்பது இன்று பலமாக இருக்கின்றது. இதனால்
படைப்பாளிகளிடையே உள்ள மாறுபட்ட சிந்தனையை மக்கள் இனங்கண்டு கொள்வதில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
இன்று முதலாளித்துவ வளர்ச்சி முன்னேற்றம் கொண்டு வளர்கின்றது. முதலாளித்துவ சனநாயகத்தை
மையமாகக் கொண்டு அமைப்பில் சனநாயகம் மறுக்கப்படுவதாகவும், தனிமனிதனின் வளர்ச்சியில் மார்க்சியம் அக்கறை
கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.
மார்க்சிய
அறிவு என்பது கூட தாராளவாத தனித்துவவாத, அரைநிலமானியச் சிந்தனை வட்டத்தினுள்
இருந்தே கற்கப்படுகின்றது. அதாவது அரைநிலப்பிரபுத்துவச்
சிந்தனையில் சமூகமயப்பட்ட வாழ்வியலுக்கு உட்பட்ட சிந்தனை வட்டித்தில் இருந்து தான் மார்க்சியத்தினை கற்றுக் கொள்கின்றனர். புதிய
சிந்தனையை கற்றுக் கொள்கின்ற போது நமக்கு அன்னியமான ஒரு
புதிய வாழ்க்கை முறையை கற்றுக் கொள்கின்ற போது பழைய எச்சங்களையும் கொண்டிருப்பதை
வரலாறு எங்கும் கண்டுகொள்ள முடியும். பொதுவுடமையமைப்பு விதிகளுக்கும், முதலாளித்துவம்
முழுமையடையாத நாடுகளில் முன்னிறுத்தப்படும் தனிமனித உரிமைக் கோரிக்கைக்கும் இடையே வேறுபாடு
உண்டு. தனிமனித உணர்வை முதன்மைப்படுத்திய கலை இலக்கிய படைப்புக்களும்
இவற்றிற்கு விதிவிலக்கல்ல. தனிமனித சிந்தனைப் போக்கினை இலக்கிய, ஆய்வுகளில் முன்வைக்கப்படுகின்றது.
“வரலாற்றாசிரியனின் சிந்தனை என்பது வேறு எதனையும் சாந்திராமல் தன்னைத் தானே
சார்ந்த சுயமாக இயங்கும் மனித அறிவின் ஒரு செயற்பாடாகும்.” என்றும்
“வரலாற்றாசிரியன் படைப்பாற்றல் மிக்க கற்பனையில் திளைக்கிறான். எனவேதான் வரலாறு தொடர்பாக நூல்களின் தரத்தை நிர்ணயிப்பதில்
வரலாற்றாசிரியனின் மனநிலை பெரும் பங்கு வகிக்கிறது. (நீலகண்ட
சாஸ்திரி, ப120 கிருஸ்ணமூர்த்தி- 5)
வரலாறு என்பது தனிமனிதரின்
செயற்பாட்டின் விளைபொருள் அல்ல. அது ஒரு மக்கள் குழுமத்தின் கூட்டுச் செயற்பாடு. தனிமனிதர்கள்
விம்பமாக தோற்றம் பெற்றாலும் பெரும் மக்கள் கூட்டத்தின் அசைவியக்கம் என்பது
முக்கியமானதாகும்.
No comments:
Post a Comment