கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகள் என்ன? அதனை எவ்வாறு திருத்தி உழைக்கும் வர்க்க இயக்கத்தை முன்னெடுத்து செல்வது?-தேன்மொழி

 


இந்திய கம்யூனிச அமைப்புகள் கடந்த காலத்தில் பல தவறுகள் செய்துள்ளது. அந்த தவறுகளை இப்போதும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. இந்த தவறுகளை ஒவ்வொன்றாக பரிசீலித்து, அந்த தவறுகளை களைந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நடைமுறையில் செயல்படுவதன் மூலமே கம்யூனிச இயக்கமானது மக்களின் செல்வாக்கை பெற்று வளரும்.

கம்யூனிச அமைப்பில் சேர்ந்துவிட்டால் அவர் உடனடியாக புனிதமானவராக மாறிவிட மாட்டார். சமுகத்தில் மக்களிடையேயுள்ள தவறான கருத்துகள், சிந்தனைமுறை, பழக்கவழக்கங்களை நீண்டகாலம் பின்பற்றி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகியே இருப்பார். இந்த தீய பழக்கவழக்கங்களிலிருந்து அவர் உடனடியாக மீண்டுவருவது மிகவும் சிரமமானதேயாகும். ஆகவே கம்யூனிச அமைப்பிலுள்ளவர்கள் அனைவரும் தவறே செய்யாத உத்தமர்கள் என்று கருதுவது தவறானதாகும். கம்யூனிஸ்டுகளும் தவறு செய்வார்கள் என்ற உண்மையை நாம் எப்போதும் மறுக்கக் கூடாது.

இவ்வாறு கம்யூனிச அமைப்பில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் அவர்கள் தலைவர்களாகக்கூட இருக்கலாம். அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் தவறு செய்யும் போது, அந்த தவறை கம்யூனிஸ்டு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் சுட்டிக்காட்டி விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கும் அந்த உரிமை உண்டு என்றார், மாவோ. ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் மக்களின் சேவகர்கள். ஆகவே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இதற்கு மாறாக மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் ஆதிக்க சக்திகள் அல்ல, கம்யூனிஸ்டுகள் என்ற கருத்தை மாவோ நமக்கு தெளிவாகச் சொல்லிஉள்ளார். இந்த கருத்தை ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) கட்சியிலிருந்து பிரிந்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) மக்கள் யுத்த குழுவானது, இதுவரை கடைபிடித்து வந்த அழித்தொழிப்பு கொள்கையை கைவிட்டது. அது மிகவும் தவறான கொள்கை என்று மக்கள் மத்தியிலேயே சுயவிமர்சனம் செய்துகொண்டது.

''வீரப்புளியம்பட்டி தீரர் திம்மக்காளி போல் போர்வழி செல்வோமையா, அதில் புரியாமல் செய்த பிழைகளை போக்கி மக்கள் படையினை அமைப்போமையா'' என்ற மக்கள் கலைமன்ற பாடல் வரிகளின் மூலம் மக்கள்யுத்த குழு பகிரங்கமாக மக்களிடம் சுயவிமர்சனம் செய்து கொண்டது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்பு மக்களின் செல்வாக்கோடு மக்கள்யுத்த குழு வளர்ந்தது.

மக்களிடையே பகிரங்கமாக தனது தவறுகளை வெளிப்படுத்தி சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அமைப்பானது மக்களின் செல்வாக்கை பெற்று வளரும் என்பது நிருபிக்கப்பட்டது.ஆனால் அதற்குப் பின்பு மக்கள்யுத்த குழு பிளவுபட்டது. அந்த குழுவின் தலைமை மீது புரட்சிப்பண்பாட்டு இயக்கத் தோழர்கள் வைத்த விமர்சனங்களுக்கு தலையானது பதில் கொடுக்க தவறியது. அவர்கள் வைத்த விமர்சனம் சரியானது என்றால் அதனை திருத்தி சுயவிமர்சனம் செய்து கொள்ளவில்லை. வைத்த விமர்சனம் தவறானது என்றால் அதனை அணிகளிடம் விளக்கத் தவறியது. இதற்கு மாறாக தலைமையானது தன்மீது விமர்சனம் வைத்தவர்கள் குட்டிமுதலாளியவாதிகள் என்றும், தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முத்திரை குத்தி தோழர்களை அமைப்பிலிருந்து விரட்டியடித்தது. முன்பு அழித்தொழிப்பு பாதை தவறு என்று மக்களிடம்சுயவிமர்சனம் செய்து வளர்ந்த குழு, அதே முறையைப் பின்பற்ற தவறியதால் அமைப்பிலுள்ள அறிவுஜீவிகளின் நம்பிக்கையை இழந்து தொடர்ந்து பல பிளவுகளை சந்தித்து தற்போது சிறுசிறு குழுவாக சிதறிக்கிடக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த குழுக்களிலுள்ள கம்யூனிஸ்டுகள் சுயவிமர்சனம் செய்வதற்கு மறுப்பதுதான்.

கம்யூனிச அமைப்புகளிலுள்ள தோழர்கள், பல தவறுகளை தொடர்ந்து செய்ய வாய்ப்பள்ளதால், அவர்களது தவறுகளை தொடர்ந்து திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டே இருந்தால்தான், உண்மையில் சரியான கம்யூனிஸ்டாக தங்களை வளர்த்துக் கொள்ள முடியும். பெரும்பாலும் ஒரு கம்யூனிஸ்டு செய்யும் தவறு அவருக்கு தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த கம்யூனிஸ்டை தொடர்ந்து கண்காணித்து வரும் பிறரால் மட்டுமே அவரது தவறுகளை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே ஒரு அமைப்பிற்குள் செயல்படும் ஒரு கம்யூனிஸ்ட் செய்யும் தவறுகளை பிறர்தான் தெளிவாக சுட்டிக்காட்டுவார்கள். ஆகவே பிறரால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் எப்போதும் வரவேற்ப்பார். ஏனென்றால் பிறரால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை தான் களைந்தால் மட்டுமே அவரால் குறைகள் இல்லாத கம்யூனிஸ்டாக மாற முடியும், மேலும் உழைக்கும் மக்களுக்காக எவ்விதமான குறையும் இல்லாமல் பாடுபட முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டு தனக்காக மட்டும் பாடுபடக் கூடியவர் இல்லை. பரந்துபட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்தான் கம்யூனிஸ்டாக இருக்க முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டிடம் தவறுகளும் குறைகளும் இருக்குமானால் அது உழைக்கும் மக்களையும் பாதிக்கும். ஆகவே உழைக்கும் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தன்னிடமுள்ள குறைகளை பிற தோழர்கள் சுட்டிக் காட்டினால் உடனடியாக களைந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். அதற்குத்தான் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை அமைப்பு முறையாக கம்யூனிஸ்டுகள் பின்பற்றுகிறார்கள்.நிலவுகின்ற தனிவுடமை சமுதாயத்தில், தனிநபரின் அறிவு மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் அறிவு மற்றும் திறமை பெற்றவராக இருந்தால் பொருளாதாரரீதியில் செல்வத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், அவ்வாறு அறிவு, திறமை இல்லாதவரால் சொல்வந்தராக ஆக முடியாது என்றும் அவர் வறுமையில் வாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்து இந்த தனிவுடமை சமூகத்தில் பரவலாக விதைக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தில் வாழ்ந்துவரும் குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள் இந்த கருத்துக்கு பலியாகி ஈகோ என்று சொல்லப்படும் தனிமனித அகம்பாவப் பண்பிற்கு ஆளாகிறார்கள். இவ்வாறு தனிமனித அகம்பாவப் பண்பு கொண்டவர்கள் கம்யூனிச அமைப்பிற்குள் சேர்ந்து செல்வாக்கு பெற்ற கம்யூனிஸ்டு களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் பலர், தான் சொல்வதெல்லாம் சரியானது என்றும், தான் தவறே செய்ய மாட்டோம் என்று கருதுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினால் இவர்கள் அதனை பொருட்படுத் துவதில்லை. இவர் மீது வைக்கும் விமர்சங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. மாறாக விமர்சனம் வைத்தவரிடமிருந்து உறவை துண்டித்துக்கொள்கிறார்கள். அமைப்பிற்குள் இவர்களுக்கு செல்வாக்கு இருக்குமானால் அதனை பயன்படுத்தி இவர் மீது விமர்சனம் வைத்தவரை தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டி .விடுகிறார்கள் .

இத்தகைய அகம்பாவம் பிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகளின் அமைப்புக் கொள்கை யான விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை பின்பற்ற மாட்டார்கள் என்பது நமது அனுபவமாக உள்ளது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் உள்ள தோழர்களிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஏற்படும். ஒரு தோழரின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அவர் முகம் கோணாமல் அந்த விமர்சனத்திற்கு பதில் அளித்தால் அந்த தோழரின் மீது மற்ற தோழர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், அந்த தோழரின் மீது நம்பிக்கை வளரும். ஆகவே விமர்சனம், சுயவிமர்சன முறையை பின்பற்றுவதன் மூலம் கம்யூனிச அமைப்பின் மீதுஅணிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து அமைப்பிற்குள் ஒற்றுமை பலப்படும். ஆனால் கடந்த காலங்களில் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சன முறை பின்பற்றப்படவில்லை. இதற்குத் தடையாக அமைப்பிற்குள் இருந்த குட்டிமுதலாளிய,, தான் என்ற அகம்பாவம் பிடித்த நபர்களே காரணமாகும். ஆகவே இன்றைய கம்யூனிஸ்டுகளிடம் தான் என்ற அகம்பாவப் பண்பு இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும். விமர்சனம், சுயவிமர்சன முறையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு அதனை செயல்படுத்த வேண்டும். சில தனிநபர்கள் எவ்வளவு அறிவும் திறமையும் படைத்தவர்களாக இருந்தாலும் அந்த அறிவு, திறமையின் பலத்தைக் கொண்டு மட்டும் சமூகத்தை மாற்றிவிட முடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்களே என்ற மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் மட்டுமே சமூகத்தை மாற்ற முடியும் என்பதை இந்த குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

கம்யூனிஸ்டு என்றாலே உழைக்கும் மக்களின் மீது பாசம் கொண்டு அவர்களை நேசிப்பவர், அவர்களுக்காக பாடுபடுவதே ஒரே லட்சியமாகக் கொண்டவர்கள். அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் தியாகிகள் என்பது பொருளாகும். கம்யூனிஸ்டுகளிடம் இருக்கும் இத்தகைய தியாக உணர்வையே பாட்டாளி வர்க்க உணர்வு என்று கம்யூனிஸ்டுகள் வரையறை செய்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பு இந்த வர்க்க உணர்வுதான் என்பதை கம்யூனிஸ்டுகள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரஷ்யாவிலும், சீனாவிலும் இத்தகைய பாட்டாளி வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள் அந்த நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளில் பலர் இருந்தனர். அதனால்தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உறுதியுடன் போராடி உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவினார்கள். (ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உண்டு, எனினும் இந்த கட்டுரையின் மூலம் கம்யூனிஸ்டுகளுக்கு பாட்டாளி வர்க்க உணர்வின் அவசியத்தைஉணர்த்துவதும், அதன் அடிப்படையில் தீய குணமாகிய தான் என்ற அகம்பாவத்தை கைவிட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவதும், அதன் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் விமர்சனம், சுயவிமர்சன முறையைக் கடைபிடித்து தனது தவறுகளை களைவது மிகமிக அவசியம் என்பதை உணர்த்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.).

இந்தியாவிலும் பல கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இந்தியாவில் இவ்வாறு உயிர் தியாகம் செய்த கட்சிகளில் முதன்மையானது கம்யூனிஸ்டு கட்சியே ஆகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தில், தெலுங்கானா போராட்டம் ஒரு சிறப்பான போராட்டமாகும். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளையும், விவசாயி களையும் பாசிச நேருவின் ஆட்சியில் அதன் இராணுவம் தொலுங்கானா போராட்டத்தை நசுக்குவதற்காக அது செய்த கொடுமைகள் அதனால் பல கம்யூனிஸ்டுகளும், விவசாயிகளும் கொல்லப்பட்ட வரலாற்றை படிப்பவர்களின் கண்களிலிருந்து இரத்த கண்ணீர் வருவதை இன்றும் காணலாம். அந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைந்தாலும், அந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக அன்றைய காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே செல்வாக்கு பலமாக இருந்தது.

அதற்குப் பின் தோன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) கட்சியானது விவசாயிகளையும், தொழிலாளர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டிப் போராடியது. இந்த கட்சி நடத்திய போராட்டங்கள் வீரத் தெலுங்கானா போராட்டப் பாதையையே பின்பற்றியது. இவர்கள் நக்சல்பாரியிலும், கல்கத்தா நகர வீதிகளிலும், ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் போன்ற பகுதிகளிலும் தமிழகத்தில் தருமபுரி, வடஆர்க்காட்டுப் பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அப்போது இந்த கம்யூனிஸ்டுகளின் மீது ஆட்சியாளர்கள்கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தியதன் காரணமாக பல தியாக கம்யூனிஸ்டுகள் வீரமரணம் அடைந்தார்கள். பலர் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டாலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை.

கம்யூனிஸ்டுகளுக்கு தியாக உணர்வு வேண்டும். தன்னலம் கருதாது உழைக்கும் மக்களின் நலன்களை உயர்த்திப் பிடித்து பொதுநல உணர்வோடு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும், தான் என்ற அகம்பாவம் கம்யூனிஸ்டுகளிடம் இருக்கவே கூடாது. கம்யூனிஸ்டுகள் பிறரை மதிக்க வேண்டும், பிறரின் கருத்துக்களை காதுகொடுத்து கேட்க்க வேண்டும், அந்த கருத்துகள் சரியாக இருந்தால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்று பொறுமையாக விளக்க வேண்டும். உழைக்கும் மக்களோடு ஒன்றுபட்டு வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களைக் காட்டிலும் தான் சிறந்த அறிவாளி என்ற மமதை கூடாது. அமைப்பிற்குள் தனக்கு வழங்கப்படும் தலைமை பதவியை தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரமாக கருதி அமைப்புத் தோழர்களின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, மாறாக தனக்கு கொடுக்கப்பட்ட தலைமைப் பதவியை தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பாக எடுத்துக்கொண்டு, அமைப்பிலுள்ள தோழர்களையும் நமக்கு ஆதரவு தரும் மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதனை பக்குவமாக கையாண்டு முரண்பட்ட கருத்துகளை ஆழமாக இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து அமைப்பு முழுவதும் விவாதிப்பதன் மூலம் முரண்பாடுகளை தீர்த்திட வேண்டும். அப்போது முரண்பாடுகள் ஜனநாயக முறையில் அமைதி வழியில் தீர்க்கப் படுவது மட்டுமல்லாமல் அமைப்பில் செயல்படும் அனைத்து கம்யூனிஸ்டு களுக்கும் மார்க்சிய - லெனினிய போதனைகளை நாம் வழங்க முடியும். இத்தகைய பாடத்தை வீரமிக்க போராட்டத்தை நடத்தி உயிர் விட்டதியாகிகளின் வாழ்க்கையிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தியாகம் என்றால் உயிர் தியாகம் மட்டுமே தியாகம் என்று கருதக் கூடாது. தியாகத்தைப் பற்றி மக்கள் கலைமன்ற பாடல் வரிகளில் சொல்வதென்றால், ''குடும்பம் விட்டீர், குழந்தை விட்டீர், அடிமை விலங்கொடிக்க செங்கொடி பிடித்தீர், பாட்டாளி வர்க்க விடுதலைக்கு தோழர்களே நீங்கள் உயிர் கொடுத்தீர்'' இந்த பாடல் வரிகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? பாட்டாளி மக்களின் ஒற்றுமைக்காகவும், அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்று செயல்படுகின்ற ஒவ்வொரு செயல்பாடும் ஒரு தியாகமே. அதேபோல் அவர்கள் நேசிக்கின்ற குடுப்பத்திற்கும், அவர்களது குழந்தைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், உழைக்கும் மக்களின் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய பண்புள்ளவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியும் என்ற உண்மையை கடந்தகால தியாக கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செயல்படுத்தி காட்டினார்கள். எனினும் கம்யூனிச கொள்கையில் பற்றுக்கொண்ட தோழர்களில் பலர் கம்யூனிச இயக்கத்தில் பங்கு பெற்றாலும் அவர்கள் அவர்களது குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் கம்யூனிச ஆதரவாளர்களாக மட்டுமே இருக்க முடியும். எனினும் அவர்கள் சிறந்த கம்யூனிஸ்டாக மாறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

உயிர்தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போர்க்குணமிக்க போராட்டங்களை வன்முறை கொண்டு ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட பின்பு அந்த கம்யூனிச அமைப்புகளுக்கு பொறுப்பிற்கு வந்த தலைவர்களிடம் தியாக கம்யூனிஸ்டுகளிடமிருந்த கம்யூனிச பண்புகள் இல்லை. குறிப்பாக தியாக உணர்வு இல்லை, உழைக்கும் மக்களை நேசிக்கும் பண்பு இல்லை, உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒற்றுமை படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒவ்வொருவரும் தன்னை மிகச்சிறந்த அறிவாளியாக கருதிக் கொண்டு தனக்கென்று பேரும் புகழும் வேண்டும் என்ற அடிப்படையிலேயேசெயல்பட்டனர்.

ஒரு நாட்டில் சமூக மாற்றம் நடக்க வேண்டுமானால், அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி, வழிநடத்துவதற்கு ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி தேவை. கம்யூனிஸ்டுகள் பல்வேறு பிரிவாக பல அமைப்புகளில் பிளவுபட்டு இருந்தால் அங்கு சமூக மாற்றம் நடப்பதற்கு வாய்பே இல்லை என்று லெனின் விளக்குகிறார். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டிருப்பது ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமானதே ஆகும். இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி ஆளும் வர்க்கமானது தனது அரசை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் மீது கொடூரமான தாக்குதலை தொடுக்கிறார்கள். கம்யூனிச குழுக்களும் அதற்கு எதிராக போராட முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் வாழ்வு மேலும் மேலும் கீழே போய்க்கொண்டிருக்கிறது.

ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்கான திட்டத்தை, பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டியதும், அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை உருவாக்க வேண்டியதும் முதன்மையான கடமையாகும். இத்தகைய ஒரு ஒன்றுபட்ட கட்சி உருவாகிவிட்டால், அந்த கட்சியை உழைக்கும் மக்கள் பின்பற்றினால் சமூக மாற்றமானது எவ்விதமான தடையும் இல்லாமல் நடக்கும். அப்படியே தடைகள் வந்தால் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தடைகள் தகர்க்கப்படும்.

இத்தகைய ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு தடையாக இருப்பது எது? கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைபாடே காரணமாகும். கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளே காரணமாகும். உண்மை யிலேயே உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக பாடுபட வேண்டும் என்ற லட்சிய உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள், இதனை உணரவேண்டும். தங்களிடத்தில் குறைகள் உள்ளது என்பதையும், தாங்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன?

தற்போது ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட,பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்த முயற்சியில் ஈடுபடும்போது பல்வேறுவிதமான கருத்துகள் விவாதத்திற்கு வரும். அவ்வாறு வரும் கருத்துகளை நாம் புறக்கணிக்கக் கூடாது. மாறாக ஒவ்வொரு கருத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும். எந்த ஒரு கருத்தையும் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து கோட்பாடு அடிப்படையில் அந்த கருத்து தவறு என்று நிருபிக்க வேண்டும். அல்லது அந்த கருத்தை நடைமுறையில் சோதித்துப் பார்த்து அந்த கருத்து தவறு என்று நிருபிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கருத்து கோட்பாடு ரீதியிலோ, நடைமுறையிலோ தவறு என்று நிருபிக்கப்படாதவரை அந்த கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது, அதுவரை அந்த கருத்தானது விவாதத்திற்குரிய கருத்தாகவே கருத வேண்டும். இவ்வாறான அணுகுமுறையின் மூலம் நாம் கருத்து விவாதங்களை நடத்தினால் நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒத்த கருத்தை வந்தடைய முடியும். இதற்கு மாறாக ஒருவரோ, ஒரு அமைப்போ முன்வைக்கும் கருத்தை பரிசீலிக்காமல் அந்த கருத்து தவறானது என்பதை நிருபிக்காமலேயே அராஜகமாக புறக்கணிப்பதால், நம்மால் ஒரு ஒத்த கருத்திற்கு வர முடியாது.

ஒரு தோழர் மற்றொரு தோழரின் மீது விமர்சனம் வைத்தால், விமர்சிக்கப்பட்ட தோழர் அந்த விமர்சனத்தை முதலில் ஏற்றுக்கொண்டு அதனை பரிசீலிக்க வேண்டும். பரிசீலனையின் முடிவில், விமர்சனம் சரியானதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை அவர் களைய வேண்டும். இதற்கு மாறாக அந்த விமர்சனம் தவறாக இருக்குமானால் அந்த விமர்சனம் தவறானது என்பதை விமர்சனத்துக்கு உட்பட்டவர் விளக்க வேண்டும். இந்த முறையை ஒரு கம்யூனிச அமைப்பு முறையாகப் பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக விமர்சனம் வைத்தவருக்கு பதில் சொல்ல மறுத்து விமர்சனம் வைத்தவர் மீதே அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த தோழரைஅமைப்பின் பிற தோழர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முறை கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது, இந்த ஜனநாயகத்திற்கு எதிரான முறையை கம்யூனிஸ்டுகள் கைவிட வேண்டும்.

ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் தலைவரையும் அந்த அமைப்பின் சாதாரண ஊழியர் விமர்சிக்க உரிமை உண்டு. அந்த வகையில் ஒரு ஊழியர் அமைப்பின் தலைவரை விமர்சித்தால், அந்த தலைவர் அந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டும். அந்த விமர்சனமும் தலைவரின் பதிலும் அமைப்பு முழுவதற்கும் சுற்றுக்குவிட வேண்டும். அமைப்பிலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும் அதன் மீது தங்களது கருத்துகளை முன்வைக்க வேண்டும். மேலும் தலைவர் மீதான விமர்சனம் உண்மையாக இருந்தால் தலைவரிடத்திலும் தவறுகள் இருக்கிறது என்ற அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, தலைவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக கடந்த காலங்களில் தலைவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டபோது அந்த விமர்சனமானது கட்சியின் (அமைப்பு) மீதான விமர்சனமாக கருதி விமர்சனம் வைத்தவரை அமைப்பிற்கு எதிரான விரோதி என்றும் சதிகாரர் என்றும் துரோகி என்றும் பலவாறு பிரச்சாரம் செய்து விரட்டியடித்தனர். இதற்கு காரணம் அணிகளிடத்திலுள்ள தலைமை வழி பாடுதான் காரணமாகும். ஆகவே இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான முறையிலிருந்து விடுபட தலைமை வழிபாட்டு முறையை அணிகள் கைவிடுவதற்காக அணிகளிடம் மார்க்சிய லெனினிய அடிப்படை கல்வி புகட்டப்பட வேண்டும்.

கடந்த காலங்களில், தலைவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டவுடன் அந்த தலைவர் அமைப்பிற்குள் தலைமை வழிபாடு இருப்பதை பயன்படுத்தி, அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு தோழரையும் தனித்தனியாக சந்தித்து தன்மீது விமர்சனம் வைத்தவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் அமைப்பை உடைப்பதற்கு முயற்சி செய்யும் ஊடுருவல்காரர் என்றும் பலவாறாகச் சொல்லி தனக்கென ஒரு அணியை சேர்த்து தனது தலைமையை தக்க வைத்துக்கொண்டு தனக்குஎதிரானவர்களை விரட்டியடித்து, அமைப்பிற்குள் பிளவுபடுத்த முயற்சித்தது கடந்தகால வரலாறு ஆகும். கடந்தகால தவறான இந்த வழிமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தலைவர்கள் இவ்வாறு அமைப்புத் தோழர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களை சமாதானப் படுத்துவதை அணிகள் அனுமதிக்கக் கூடாது. மாறாக அனைத்துப் பிரச்சனை களையும் அமைப்பு முறையில்தான் விவாதித்து தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் நாம் நமது தலைவர்களை மதிக்கவில்லை என்பது பொருளாகாது. தலைவரும் அமைப்பு முறைகளை பின் பற்றினால் மட்டுமே அவர் மதிப்பிற் குரியவராக ஆகிறார் என்பதுதான் இதன் பொருளாகும். கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனிச அமைப்பைவிட மேலானது ஒன்று மில்லை. ஆகவே தலைவராக இருந்தாலும் பிரச்சனைகளை அமைப்பு முறையில்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக தனது தலைமை பதவி, மற்றும் அமைப்பிற்குள் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தீர்க்க முயல்வது அமைப்பு முறைக்கு எதிரானது, மட்டுமல்ல அமைப்பு தோழர்களுக்கு இடையில் நம்பிக்கை இன்மையை தோற்றுவிக்கும் மேலும் ஒற்றுமைக்கும் குழிபறிக்கும் அபாயகரமான முறையாகும். கடந்த காலத்தில் கையாளப்பட்ட இந்த முறையை கம்யூனிஸ்டுகள் ஒழித்திட வேண்டும். இதற்கு மாறாக அமைப்பு முறையை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

பொதுவாக கம்யூனிஸ்டுகள் மக்களை நேசிப்பவர்களாகவும், மக்களுக்காக பாடு படுபவர்களாகவுமே இருக்கிறார்கள். எனினும் அவர்களால் இதுவரை மக்களின் நல்வாழ்விற்கான சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதற்கு என்ன காரணம் என்றால், அவர்களிடத்தில் உள்ள குறை பாடுகளும், அவர்கள் செய்யும் தவறுகளுமே முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய குறைகளும் தவறுகளும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் ஒற்று மையை சீர்குலைத்துக்கொண்டு இருக் கிறது. தங்களுக்கு இடையிலேயே ஒற்று மையை இவர்கள் ஏற்படுத்த முடியாத வர்களால் உழைக்கும் மக்களிடையிலும் ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லை.

உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்காக பாடுபட்டால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நன்கு அறிவார்கள். ''மக்களே வரலாற்றை படைக்கிறார்கள்'' என்று கம்யூனிச தத்துவத்தை உருவாக்கிய காரல்மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

ஆகவே மூத்த கம்யூனிஸ்டுகள் தங்களது கடந்தகால அனுபவங்களிலிருந்து, கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைகளையும், அவர்கள் செய்துகொண்டிருக்கும் தவறு களையும் சுட்டிக்காட்டி, அதனை களைவதற்கான வழிமுறைகளை முன் வைக்க வேண்டும். அதனை கம்யூனிஸ்டு கள் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகளால் அவர்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்வது மட்டுமல்லாது உழைக்கும் மக்களிடையேயும் ஒற்று மையை ஏற்படுத்த முடியும்.

இத்தகைய நடைமுறை மூலமே கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்திட வேண்டும் என்ற லட்சியத்தை அடிப்படை யாகக் கொண்டு ஒரு குழு செயல்பட்டாலும், அந்த குழு வளரும். அதன் பாதிப்பு பிற குழுக்களிலும் ஏற்படும். அதன் விளைவாக குழுக்கள் ஒன்றுபடும். இப்பிரச்சனையில் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு குழுவில் துவங்கி பல குழுக்களுக்கும் பரவும்படி செய்திட ஒரு குழு முயற்சி செய்தாலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும். கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைகளை களைவோம், தவறுகளை திருத்திக்கொள்வோம், கம்யூனிஸ்டுகளிடமும், உழைக்கும் மக்களுக்கு இடையிலும் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம். இதுதான் இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால் உள்ள முதன்மையான கடமையாகும் என்று இலக்கு கருதுகிறது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்