இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம் 9. நியாயத் தத்துவம் (இறுதி பகுதி)–அ.கா.ஈஸ்வரன்

 


கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதயணர் என்பவர் “நியாய குசூமாஞ்சலி” என்கிற நியாயத் தத்துவ நூலை எழுதியுள்ளார். அதில் கடவுள் இருப்புக்கு ஒன்பது காரணங்கள் கூறப்பட்டுள்ளது. அதனை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. செயலால் (கார்யாத்)

பொருட்கள், செயல், வினையாற்றுதல் இந்த மூன்றையே பிரபஞ்சப் படைப்புக்கு காரணங்களாக நியாயத் தத்தும் கூறுகின்றது. ஒரு விளைவுக்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது, அது செயல்பட்டால்தான் விளைவை நிறைவேற்ற முடியும். அந்த செயலை திறம்பட செய்வதற்கு ஒரு செயற்பாட்டாளர் வேண்டும், அந்த செயல்பாட்டாளரே கடவுள்.

உலகம் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை ஒரு திறமையான ஒருவன் செய்திருக்க வேண்டும். அந்த ஒருவனே கடவுள்.

2. ஒருங்கிணைப்பால் (அயோஜனாத்)

படைப்புக்கு அணுக்களே அடிப்படை, ஆனால் இந்த அணுக்கள் உணர்வற்றவை.

உணர்வற்றப் பொருள் தானே செயல்பட முடியாது. “அதிர்ஷ்டம்” என்ற செயற்பாட்டின் தொடக்கமே படைப்பை நிகழ்த்துகிறது. இந்த “அதிர்ஷ்டம்” உணர்வற்றது. அதனால் செயல்பாடு திறம்பட நடைபெறுவதற்கு உணர்வுள்ள ஒருவன் தேவை, அந்த ஒருவன்தான் கடவுள்.

அணுக்களின் சேர்க்கையே பொருட்கள். இந்த அணுச்சேர்கையை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்றால் உணர்வுள்ள கடவுளால்தான் முடியும். இது பிற்கால நியாய தத்துவத்தின் கருத்து. “அதிர்ஷ்டம்” என்ற படைப்புத் தன்மையை பிற்கால நியாய தத்துவம் உணர்வற்ற, அறிவற்ற பொருளாக கருதி, உணர்வுள்ள கடவுளை நுழைத்தது.

3. ஆதாரம் (த்ரிதே)

ஆதாரம் இல்லாது எந்த பொருளுக்கும் இருப்பு இல்லை. இந்தப் பிரபஞ்சம் நிலைத்திருப்பதற்கு ஒர் ஆதாரம் தேவை, அந்த ஆதாரமே கடவுள். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்த, கடவுள் என்ற உணர்வுள்ள ஆதாரத்தால் தான் முடியும்.

4) சொல் (பதாத்)

ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கிறது. அந்தப் பொருள் குறிப்பிட்ட நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. நெருப்பு என்றால் வெப்பத் தன்மையை குறிப்பிடுகிறது, தண்ணீர் என்றால் குளிர்ச்சியை குறிக்கிறது, பறவை என்றால் பறப்பதைக் குறிக்கிறது. அதேபோல பிரபஞ்ச படைப்பு நிகழ வேண்டும் என்றால் உணர்வுள்ள ஒன்று, படைப்பைப் பற்றி நினைக்க வேண்டும், நினைத்ததை நிறைவேற்ற வேண்டும். அந்த ஒன்றே கடவுள்.

கடவுளின் சங்கல்பம் இல்லாது படைப்பு நிகழ்வதில்லை. செய்ய வேண்டியதை வரையறுத்து அதற்கான ஆயத்தம் செய்வதே சங்கல்பம். “அதிர்ஷ்டம்” என்ற செயல் நிகழவேண்டும் என்றால் அதற்கு கடவுள் சங்சல்பிக்க வேண்டும்.

5) நம்பிக்கை (பிரத்யதஹ்)

வேதங்கள் பல்வேறு ரிஷிகளின் பெயரால் கூறப்பட்டுள்ளது. ரிஷிகள் மனிதர்கள், மனிதர்கள் சரியானதையும் தவறானதையும் சேர்த்துச் செய்யக்கூடியவர்கள். வேதம் தீர்க்க தரிசனமானவை, அதாவது வேதம் தவறு அற்றவை என்பதினால் இதனைப் படைத்தது தவறே செய்யாத கடவுளே ஆவார்.

6) வேதத்தால் (ஸ்ருதி)

உலகைப் படைத்து, காத்து, அழிப்பவர் கடவுள் என்று வேதம் கூறியுள்ளது. இந்த சாஸ்திர பிரமாணம் கூறுகிறபடி கடவுள் உண்டு. அதாவது வேதமே பிரமாணம், வேதத்தில் கடவுளின் இருப்பைப் பற்றி கூறியுள்ளது அதனால் கடவுள் உள்ளார்.

7) கட்டளைகளால் (வாக்யாத்)

ஆன்மீகக் கட்டளைகள் தெய்வத்திடம் இருந்துதான் வரமுடியும். வேதம் தெய்வத்தின் கட்டளைகள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற முக்காலத்துக்குமான கட்டளைகளைக் கொண்டுள்ளது வேதம். முக்காலத்தைப் பற்றி மனிதன் அறிய முடியாது, முக்காலத்தையும் அறிந்த கடவுளே வேதத்தை படைத்திருக்க வேண்டும். இந்த வேதம் ரிஷிகள் மூலம் அறியப்பட்டு உலகுக்கு அறிவிக்கப்படுகிறது. சமூகத்தில் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகள், சட்டங்கள் போன்றவற்றை வேதம் கூறுகிறது.

இந்த வேதத்தை உருவாக்கியது மனித சக்திக்கு அப்பாற்பட்ட அதாவது மனிதனுக்கு அப்பாற்பட்ட கடவுளாகவே இருக்க முடியும்.

8) எண்களின் சிறப்பால் (சங்க்யாவிசேஷாத்)

அணுக்களின் எண்ணிக்கைப் படியே உலகில் உள்ள பொருட்கள் தோன்றியுள்ளது. அணுக்களின் எண்ணிக்கையின் அளவைப் பொருத்தே பொருட்கள் வேறுபடுகின்றன. அணுக்களின் சேர்க்கை தற்செயல் நிகழ்வல்ல, அதனை ஒழுங்காக நெறிப்படுத்த ஒருவர் வேண்டும். அந்த ஒருவர் கடவுளாகத்தான் இருக்க முடியும்.

9) காண இயலாததால் (அதிருஷ்டாத்)

சமூகத்தில் உள்ள மனிதர் அனைவரும் இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது என்கிற இரட்டைகளை அனுபவிக்கின்றனர். ஆனால் சிலர் மட்டும் பணக்காரராக இன்பத்தை அதிகம் அனுபவிக்கின்றனர்,பலர் கடுமையாக உழைத்தும் ஏழ்மையால் துன்பப்படுகின்றனர். இதற்கு காரணமாக ஆன்மீகம் வினைக் கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்த பிறவியில் சிலர் வேதக் கட்டளைக்கு மாறாக நடந்து கொண்டாலும் பணக்காரர்களாக இருப்பதற்கு போன ஜென்மத்தில் அவர்கள் செய்த புண்ணிய காரியமே காரணம் ஆகும். சாதிய விதிப்படி கடுமையாக உழைத்தும் ஏழைகள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்றால் போன ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவ காரியமே காரணம் ஆகும். போன ஜென்மத்தில் செய்த பாவ-புண்ணிய காரியத்துக்கு ஏற்ப பிறப்பெடுத்த மனிதனுக்கு பணக்கார-ஏழைத் தன்மைகள் கிடைக்க வேண்டுமானால் அதை செய்வதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியே கடவுள்.

போன ஜென்மத்தில் செய்ததை இப்பிறப்பில் மனிதர்களால் அறியமுடியாது மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுளாலேயே அறிய முடியும்.

கடவுள் இருப்புக்கான ஒன்பது காரணங்களை இவ்வாறு நியாய தத்துவம் விளக்குகின்றது.

இதனை தொகுத்து சுருக்கமாக மு.கு.ஜகந்நாத ராஜா கூறியுள்ளார்:-

“நியாயம் கடவுள் உண்மையை நிரூபிக்கக் கூறும் தருக்கத்தில் முக்கியமானது இந்த உலக சிருஷ்டிக்குக் காரண கர்த்தாவாக ஒரு அறிவுடைய பொருள் இருக்க வேண்டும். மனித ஆன்மா சிற்றறிவுடையது. இப்பரந்த பிரபஞ்சத்தை அறிவற்ற ஜடம், யாதொரு நோக்கமுமின்றிச் சுயமாகத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் முற்றறிவுடைய ஒரு பரம்பொருள்தான் சிருஷ்டிக்கு மூல காரணமாகும். குடத்தைச் செய்ய ஒரு குயவன் வேண்டும். நாற்காலி செய்ய ஒரு தச்சன் வேண்டும். மண்ணோ மரமோ தானாக குடமாவதும், நாற்காலியாவதும் இல்லை. அது போன்றே இப்பிரபஞ்சமும் படைப்போனாகிய ஈசுவரன் (கடவுள்) ஒருவனால் தான் தோன்ற முடியும்.

அது முற்றறிவுடைய மாபெரும் சக்தியாகிய மூலப் பரம்பொருள் ஆகும் என்று நியாயம் கூறுகிறது.”

(தத்துவ தரிசனங்கள், பக்-165)

தொடக்கக் கால நியாய தத்துவத்தின் அணுக்கோட்பாடு, பிற்காலத்தில் கடவுள் கோட்பாட்டுக்குள் அடக்கப் பட்டுள்ளது.

சமூகத்தில் ஏழை-பணக்காரன் என்று இரு வர்க்கங்களாக பிரிந்து போனதற்குக் காரணத்தை, சமூகத்தில் தேடாது, போன ஜென்மத்தின் விளைவாக பிற்கால நியாய தத்துவம் கூறுகிறது. சமூகப் பார்வையற்று, வர்க்க வேறுபாட்டை புரிந்து கொண்டதாலும், ஆத்மா, கடவுள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதாலும் நியாய தத்துவம் மனித வாழ்க்கையை துன்பமயமானதாகவும், பிறவிச் சுழற்சியாகவும் கண்டது. அதனால் இந்த உலகில் இருந்து விடுபடுவதே விடுதலை என்று முக்திக்கு வழிகாட்டியது.

துன்பமயமான உலகில் விடுதலைக் கிடையாது, ஆத்வை விடுவிப்பதே விடுதலை ஆகும். இந்த விடுதலையே மோட்சம்-முக்தி எனப்படுகிறது

முக்தி

இங்கே நியாய-வைசேஷிகர்களின் முக்தி பற்றிய கூறுவதைப் பார்ப்போம்.

உலகில் மனிதன் துன்பத்தை அனுபவிப்பதற்கு, உண்மையல்லாத இந்த உலகை உண்மையாக கருதியதே காரணம், ஆத்மாவே உண்மையானது. அந்த ஆத்மா இயல்பிலேயே ஆனந்த மயமானது. இந்த ஆத்ம ஆனந்தத்தை அடைய வேண்டும் என்றால் இன்பம்-துன்பம், நன்மை-தீமை, பணக்காரன்-ஏழை என்கிற இரட்டைத் தன்மையுள்ள உலகத்தை விடுத்து, தன்னியல்பான ஆத்மாவில் (பரமாத்மாவில்) ஒடுங்க வேண்டும்.

பழங்குடி சமூகத்தில் மனிதர் எவ்வளவு கஷ்டங்களுக்கு ஆளானாலும் அதை ஒற்றுமையாக எதிர்த்து ஒன்றுபட்டு வாழ்ந்தனர். கிடைத்தவற்றை சமமாக பங்கிட்டுக் கொண்டனர். உழைப்புப் பிரிவினையும், சொத்துடைமையும் தோன்றிய பிறகு உழைப்பைப் பெறுபவன்உழைப்பை செலுத்துபவன் என்று இரு வர்க்கமாக சமூகம் பிளவுபட்டது. உடல் உழைப்பு இழிவாகவும் மூளை உழைப்பு உயர்ந்ததாகவும் கூறப்பட்டது. அதுமுதல் வர்க்க முரண் முற்றி வருகிறது. வர்க்க போராட்டத்தை மழுங்கடிக்க, இந்த உலகம் துன்பமயமானது என்ற கருத்தை கருத்துமுதல்வாதத் தத்துவம் பரப்புகிறது. இந்த உலகினால் மனிதனுக்குக் கிடைத்து கைவிலங்கே, இன்பத்தால் கிடைப்பது பொன் விலங்கு, துன்பத்தால் கிடைப்பது இரும்பு விலங்கு. ஆக இரண்டும் விலங்கே என்று கருதுகிறது.

விலங்கிட்ட இந்த உலகம் மாயையானது அதாவது உண்மைக்கு மாறானது, ஆத்மாவே உண்மையானது. இந்த ஆத்மா இயல்பிலேயே ஆனந்தமயமானது. ஆகவே பொய்யான, அடிமைத்தனமான உலகில் இருந்து விடுபட்டு ஆத்மாவில் ஒடுங்குவதே விடுதலை-முக்தி என்கிறது நியாய-வைசேஷிகம்.

ஆத்மாவின் ஒன்பது இயல்புகளை முடிவுக்கு கொண்டுவருவதே முக்தி.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-

“1.உணர்வு அறிவு 2.மகிழ்ச்சி 3.வேதனை 4.விருப்பு 5.வெறுப்பு 6.ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் 7.தர்மம் 8.அதர்மம் 9.பழைய வினைக்கேற்பச் செயல்படுதல், என்பவையே அவை. இவை அனைத்தும் அழிந்தொழிந்தால் ஆத்மா விடுதலை பெற்று விடுவதாகக் கொள்ளலாம். அவ்வாறு விடுதலை பெறும் போதும் ஆத்மாவின் நிலை எப்படி இருக்கும்? அப்போது ஆத்மா வெறும் ஜடமாய் - உணர்வும் அறிவும் இல்லாமலும் வேறு எத்தகைய உடலுக்குரிய செயல் இல்லாமலும் இருக்கக்கூடிய பொருளாக ஆகிவிடுகிறது; மண் போலவும் கல் போலவும் கண்கூடாகவே ஒரு வெறும் பௌதீகப் பொருள் ஆகிவிடுகிறது என்பதுதான் முடிவாகும்.”

(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், பக்-646)

ஆத்மாவில் ஒடுங்கி “கல்” போன்றும் “மண்” போன்றும் கிடக்க வேண்டுமா?

சமூக முரணை எதிர்கொண்டு போராட வேண்டுமா? எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரவர் சொந்தமாக முடிவெடுக்க வேண்டும்.

நியாய-வைசேஷிகத் தத்துவம் உண்மையில் அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது இதற்கு முரணாகவே ஆத்மா, கடவுள், முக்தி ஆகியவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டது. தொடக்கநிலை பொருள் முதல்வாதமாக இருந்த நியாய-வைசேஷிகத் தத்துவம் பிற்காலத்தில் கருத்துமுதல்வாதமாக மாற்றப்பட்டது.

இந்தக் கருத்துக்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் அது அணுக் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதையும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

“இது மிகவும் சுவையான விஷயம்; எங்கிருந்து மோக்ஷத்தைப் பற்றிய விஷயங்களைக் கடனாகப் பெற்று ஒட்டி வைத்தார்கள் என்பது இதனால் தெரிய வருகிறது. தத்துவ ஞானத்தால் இவ்வுலகத்துப் பாச பந்தங்கள் அகலும் என்பது உபநிஷத்தின் முக்கியமான விஷயம். கருத்தமுதல்வாதத்தின் வெறும் ஊகமானது இது; இதைத்தான் அத்வைதிகளும் மஹாயானிகளும் ஒத்துப் பாடினார்கள். இதன் அடிப்படை இரண்டு. ஆத்மா ஒன்றுதான் பரமஸத்யம் என்பதும் ஜட இயற்கையான உலகம் நிஜமில்லை என்பதுமே அவை. இவை இரண்டையும் கற்றுக் கொண்டால் ஆத்மாவுக்கும் இதற்கும் தொடர்பும் உண்டு என்பதை, அக்ஞானத்தால் விளையும் பாச பந்தமான தளையைத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஞானம் அக்ஞானத்தை அகற்றி, பரமஸத்யத்தை ஆத்மாவை அடையச் செய்யும். அதுதான் மோக்ஷம். இப்படிக் கொள்வது நியாய சாத்திரத்திற்குப் பொருந்தாது; இதை ஏற்றால்தான் மோக்ஷத்தை ஒப்புக் கொள்வது பொருந்தும்.

இதைக் கருத்துமுதல்வாதத்திலிருந்து பிரித்துக் கொண்டு வந்து ஒட்ட வைப்பதால் கருத்துமுதல்வாதத்தின் எதிர்தரப்பான நியாய சாத்திரம் முரண்பட நேர்கிறது.”

(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், பக்-657)

நியாய-வைசேஷிகம் தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகும். அணுக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தில் ஆத்மா, தெய்வம், முக்தி என்று பேசுவது முரணானது.

உலக வாழ்வில் நம்பிக்கை அற்று விலகி ஓடுபவர்கள், ஆத்மாவை ஏற்று முக்தியை நாடுவார்கள். அவர்களுக்கு கருத்துமுதல்வாதம் துணைநிற்கிறது. சமூக வாழ்வில் நம்பிக்கை கொண்டு எதிர் நீச்சல் போடுபவர்கள், கருத்துமுதல்வாதத்தை விடுத்து சமூக விடுதலைக்கு வழிகாட்டும் பொருள்முதல்வாதத் தத்துவத்தை நாடுவார்கள்.

அவரவர்களின் முடிவு அவரவர்களின் கைகளில் இருக்கிறது. உன் முடிவு உன் கையில்.

இந்தத் தொடர் முடிகிறது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்