21 நூற்றாண்டின் பொருளாதாரம்- சுகுமார் .ரா

 


மூலதனம் பிரம்மாண்டமாக வளர்ந்து இருந்த போதிலும் முதலாளித்துவும் சீரழிந்து கொண்டிருக்கிறது.

நிஜங்களையும் நிஜ பிம்பங்களையும் மாய பிம்பங்களையும் உள்ளடக்கிய பௌதிக இயக்கமாகத்தான் மானுட சமுதாய இயக்கம் இருக்கிறது . மானிட சமுதாயத்தின் நிஜ இயக்கம் உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறு உற்பத்தியும்தான் இதுவே இருவகைப்பட்ட தன்மை கொண்டது ஒன்று வாழ்க்கைக்கு வேண்டிய பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு உடை வீடு ஆகியவற்றையும் அவற்றுக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வது; இன்னொன்று மனிதர்களையே உற்பத்தி செய்வது. மனிதர்களை உற்பத்தி செய்யும் இயக்கம் குடும்ப அமைப்பு முறையாகவும் பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் இயக்கம் உற்பத்தி முறையாகவும் இருக்கிறது - இரண்டு இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த இயக்கங்களாகும். இந்த இரண்டு இயக்கங்களின் வளர்ச்சிதான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கிறது.

இந்த இயக்கங்களில் ஏற்படும் வளர்ச்சிகளின் அடிப்படையில் சமுதாயத்தின் வரலாற்றுக் கட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன இரண்டு இயக்கங்களையும் உற்பத்தி மற்றும் நுகர்வு இயக்கம் ஒன்றிணைக்கிறது இந்த உற்பத்தி மற்றும் நுகர்வு இயக்கம் பண்ட சுழற்சியின் வடிவில் நிகழ்கிறது.

பண்ட சுழற்சி இயக்கம்

பண்ட சுழற்சி இயக்கத்தின் அடிப்படை பண்ட உற்பத்தியாக இருக்கிறது பண்டம் என்பது பயன் மதிப்பு பரிமாற்றம் மதிப்பு கொண்ட பொருள்கள் ஆகும். தானேயான பொருட்களை தனக்கான பொருளாக மாற்றும் மனித உழைப்பே பொருட்களுக்கு பயன் மதிப்பையும் பரிமாற்ற மதிப்பையும் தருகிறது . ஆகவே பிழைப்பு சாதனங்கள் அனைத்துமே மனித உழைப்பின் விளைப் பொருள்களாக இருக்கின்றன. இந்தப் பிழைப்பு சாதனங்களே பண்டங்கள் ஆகும். மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் பிழைப்பு சாதனங்கள் மனிதர்களாலேயேநுகரவும் படுகிறது. இந்த உற்பத்தியும் நுகர்வும் மீண்டும் மீண்டும் நிகழ்வதால் பண்ட சுழற்சி ஏற்படுகிறது .

பண்ட சுழற்சியால் தனிமனித உற்பத்தி சமூக உற்பத்தியாய் மாறுகிறது.

தனி மனிதர்கள் தங்களுக்கு தேவையான பிழைப்பு சாதனங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே ஒவ்வொரு தனி மனிதனும் தான் உற்பத்தி செய்த பிழைப்பு சாதனங்களை மற்றவர்கள் உற்பத்தி செய்த பிழைப்பு சாதனங்களுடன் பரிமாறிக் கொள்கிறான். தினந்தினம் நடக்க இந்த லட்சக்கணக்கான பரிமாற்ற ங்கள் தனி மனிதர்களுக்கிடையே திட்ட வட்டமான உறவுகளை ஏற்படுத்தி தனி மனிதர்கள் உற்பத்தி செய்யும் பண்டங் களின் பயன் மதிப்பை சமப்படுத்தி வருகின்றன. இந்த இயக்கங்கள் ஒவ்வொரு தனி மனிதனின் உற்பத்தியையும் சமூகத்திற்கான உற்பத்தி யாய் மாற்றுகின்றன . ஆகவே ஒவ்வொரு தனி மனிதன் நுகர்வும் சமுதாய நுகர்வாய் மாறுகிறது. இந்த உற்பத்தி நுகர்வு இயக்கம் சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் சமூக உறவுகளைப் படைக்கின்றன. சமுதாயம் என்பது தனி மனிதர்களின் தொகுப்பு அல்ல மாறாக மானுட உறவுகளின் ஒட்டு மொத்த தொகுப்பாகும்.

சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பு சமுதாயத்திற்கான உழைப்பா கவும் மாறுகிறது.

தனிமனித உழைப்பும் கூட்டு உழைப்பும் சுய தேவைகளையோ அல்லது சிறு குழுவின் தேவைகளையோ பூர்த்தி செய்து கொண்டிருந்த நிலையை பண்ட சுழற்சியின் வளர்ச்சி சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் உழைப்பாக மாற்றி அமைத்தது. சந்தையில் பண்டங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பரிமாற்றமும் தனி மனிதன் உற்பத்தி செய்த பண்டங்களை சமுதாயத்திற் கானதாக மாற்றியது இதனால் சந்தைக் கான உற்பத்தி சமுதாயத்திற்கான உற்பத்தியாகவும் சந்தைக்கான உழைப்பு சமுதாயத்திற்கான உழைப்பாகவும் மாறுகிறது .பண பண்ட சுழற்சி இயக்கம் தனிமனித உழைப்பையும் தனிமனித தேவைகளையும் பின்னிப் பிணைப்பதன் மூலம் அது சமுதாய இயக்கமாகிறது. உழைப்பையும் உற்பத்தியையும் சமூகத் தன்மை பெற செய்கிறது. ஆகவே பண்ட சுழற்சி முறை உழைப்பையும் உற்பத்தியையும் சமூகமயமாக்குகிறது .

ஆதியில் மூலதனம் வியாபாரம் மூலதனமாகவே தோன்றியது. ஆதியில் பண்டமாற்று முறையே பண்ட சுழற்ச்சியாக இருந்தது. மனிதர்களின் உழைப்புத் திறனில் ஏற்பட்ட வளர்ச்சி பண்டத்தின் பயன் மதிப்பை அதிகப்படுத்தி விரிவாக்கியது. இதனால் பண்டத்தின் தேவை அதிகமாகி பண்ட உற்பத்தி பெருகியது. இந்த பெருக்கம் பண்டங்களை பரிமாறிக்கொள்ள ஒரு பொது பண்டமாக தங்கத்தை கண்டறிந்தது. இறுதியில் பொது பண்டமான தங்கம் பணமாக வளர்ந்தது. இந்த வரலாற்றுக் கட்டத்தில் பண்ட சுழற்சி பண்டம் -பணம் - பண்டம் என்ற சுழற்சியில் இருந்தது. பண்ட சுழற்சியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி உற்பத்தியிலும் விநியோகித்தத்திலும் உத்தரவாதத்தை ஏற்படுத்தி உற்பத்தியை பெருக்கியது. உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம், தேவைக்கான உற்பத்தியை அதாவது தங்களுக்கு தேவையான பண்டங்களை வாங்குவதற்கான பண்ட உற்பத்தியை சந்தைக்கான உற்பத்தியாக அதாவது விற்பதற்காகவே செய்யப்படும் உற்பத்தியாக மாற்றியது. பண்ட சுழற்சியின் இந்த கட்டத்தில் விற்பதற்காக பண்டங்களை வாங்கும் பணமாகத்தான் மூலதனம் தோன்றியது. பண்டம் -பணம்- பண்டம் என்றிருந்த பண்ட சுழற்சி இயக்கம் பணம்- பண்டம் -பணம் என்ற பண்ட சுழற்சி இயக்கமாக மாறியது. இந்த இயக்கத்தில் வியாபார மூலதனமாக தோன்றிய மூலதனம் சந்தைகளை விரிவு படுத்தியது.

குடும்ப அமைப்பு முறை மனித உழைப்பை வளர்த்தது

உணவு மற்றும் உடலுறவு தேவைகளை பெறுவதில் காட்டுமிராண்டி நிலையையும் அநாகரிக நிலையும் கடந்து மனித சமுதாயம் நாகரிக நிலை அடைந்தபோது குடும்பம் உருவானது. பண்ட உற்பத்தியில் ஏற்பட்டவளர்ச்சி குடும்ப அமைப்பு முறையை வளர்த்தது. தனி மனித பிழைப்பு சாதனங்கள் குடும்ப அமைப்பின் தேவைகளாக ஒழுங்கமைந்தன. குடும்பம் தனி மனிதர்களை உற்பத்தி செய்தது. குடும்பம் பிழைப்பதற்கான பண்டங்களை பெறுவதற்காக ஏதாவது ஒரு பண்ட உற்பத்தியில் அல்லது சேகரிப்பில் குடும்பத்திலுள்ள மனிதர்களை ஈடு படுத்தியது. இதனால் மனித உழைப்பு திறன் வளர்ந்தது. குடும்ப அமைப்பு முறை பண்ட உற்பத்திக்காக உழைக்கும் மனிதர்களை உருவாக்கியது. பண்ட உற்பத்தி முறை மனிதர்களை உற்பத்தி செய்யும் குடும்ப அமைப்பின் தேவைகளை நிறைவு செய்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடும்பத்தை பிரதிநிதித்துவ படுத்துகிறான். பண்ட சுழற்சியில் குடும்ப முறை உற்பத்திக்கு தேவையான மனிதர்களை உற்பத்தி செய்து தந்தும், உற்பத்தி முறை குடும்பத்திற்கு தேவையான பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்து தந்தும் பரஸ்பரம் வினைபுரிந்து கொள்கின்றன.

வியாபாரம் மூலதனம் தொழில் மூலதனமாக வளர்ந்தது

பணம் -பண்டம் -பணம் என்ற பண்டச் சுழற்றில் தோன்றிய வியாபார மூலதனம் சந்தைகளை உருவாக்கியது. அப்போது நிலவி கொண்டிருந்த பட்டறைத் தொழில் களும் சிறுவீத உற்பத்தி அமைப்புகளும் பண்ட சுழற்சியில் விரிவடைந்து வந்த சந்தைக்கு போதுமானதாக இல்லை அதனால் முதலாளித்துவத்திற்கு முந்திய சமுதாயத்தில் நிலவிய பட்டறை தொழில்கள் அப்புறபடுத்தப்பட்டு அதன் இடத்தில் தொழிற்சாலை உற்பத்தி முறை நிறுவப்பட்டு பண்ட சுழற்சி முறை வளர்ந்தது. அதுவரை விற்பதற்காக பண்டங்களை வாங்க பயன்படுத்திய பணம் இப்பொழுது உற்பத்தி சாதனங்களுக்கான கருவிகளையும் மூலப் பொருட்களையும் வாங்குவதற்கான பணமாக மாறியது. இந்த பணம் தான் தொழில் மூலதனமாகும். தொழில் மூலதனத்தின் தோற்றம் பாரம்பரிய சமூக கட்டுப்பாடுகளால், தனி மனிதர்களையும் குடும்பங்களையும் பிணைத்திருந்த உற்பத்தி சாதனங்களை பறித்து குடும்பங்களை சிதைத்து உற்பத்தி சாதனங்களை ஓரிடத்தில் குவித்துதொழிற்சாலைகளாக மாற்றியது. உழைப்பாளிகள் ஏதுமற்ற ஆனால் சுதந்திரமானவர்களாக மாற்றினார்கள். உழைப்பாளிகள் தொழிற்சாலைக்கு வந்து உழைத்து விட்டு சென்றனர் . இந்த உற்பத்தி சாதனங்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கொடுக்கப்பட்ட கூலிக்கும் செலவழிக்கப் பட்ட பணம்தான் தொழில் மூலதனமானது. இந்த மூலதன உடைமையாளர்கள் சமுதாயத்தில் மூலதன உடைமையாளர்கள் என்று சமூகப் பிரிவாக, முதலாளி வர்க்கமானார்கள். உடைமைகள் ஏதுமற்ற உழைக்கும் சமூகப் பிரிவாக பாட்டாளி வர்க்கமானார்கள். மூலதனம் தொழில் மூலதனமாக மாறுவதற்கு முன் நிலவிய அனைத்து சமூகப் பிரிவுகளுக்கான வர்க்கங்களில் பலர் தங்களது உடமைகளையும், தொழில்களையும் இழந்து மூலதன உடமையற்றவர்களாகவோ அல்லது ஏதுமற்ற பாட்டாளிகளாகவோ மாறினார்கள். இந்த முதலாளித்து வளர்ச்சி என்பது மூலை முடுக்குகளில் இருந்தவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தது. எல்லா தேசங்களையும் மிகவும் அநாகரிக கட்டத்தில் இருந்த தேசங்களை கூட நாகரி கட்டத்திற்குள் இழுத்தது. உற்பத்தியிலும் வினியோகித்திலும் நாடுகளுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் உற்பத்தியிலும் நுகர்விலும் மானுட சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் ஒரு உற்பத்தி விநியோக முறையை வெளிக்கொணர்ந்தது. மூலதன வளர்ச்சி உலக மக்கள் அனைவரையும் மானுட தேவைகளுக்கான பண்ட உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் அதற்கு கூலி வழங்குவதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை உறுதி செய்வதும்;வாங்கும் சக்தி பெற்ற மக்கள் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை நுகர்வதும் மீண்டும் பண்ட உற்பத்தியில் ஈடுபடுவதுமான பண்ட சுழற்சி இயக்கம் மானுடத்தை தடையின்றி வளர்க்க முடியும் மானுட வளர்ச்சியில் நிஜ இயக்கத்தை நிர்ணயிப்பது உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் மறு உற்பத்தியும் தான். வாழ்க்கைக்கு வேண்டிய பிழைப்பு சாதனங்களை உற்பத்தி செய்வது - அதாவது உணவு உடை வீடு ஆகியவற்றையும் அவற்றைப் பெறுவதற்கான கருவிகளையும் உற்பத்தி செய்வதும் மனிதர்களை உற்பத்தி செய்வதும் ஆகிய இரண்டு வகைஉற்பத்தியும் சுவிகரிப்பும் மறு உற்பத்தியும் சமுதாயத்தின் அடிப்படை இயக்கமாக இருக்கிறது. தானேயான பொருள்களை தனக்கான பொருளாக மாற்றும் இயக்கமான உற்பத்தி முறையும் தானேயேயான மனிதர்களை தனக்கான மனிதர்களாகும் இயக்கமான குடும்ப அமைப்பு முறையும்தான் மானிட சமுதாயத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தின் மீதுதான சமுதாயத்தின் மேல் கட்டுமானமான அரசு, சட்டம், நீதி , மதம் கலை இலக்கியம் மற்றும் ஒழுக்க நெறிகள் கட்டமைக்கப்படுகின்றன.







இயக்கத்தின் விதிகளும் புரட்சி விதிகளும்

சமூகத்தை அப்படியே தயார் நிலையில் இருக்கும் மனிதக் கூட்டங்களின் தொகுப்பாக புரிந்து கொள்வதற்கும் இயக்கப் போக்குகளின் தொகுப்பாக புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மாற்றம் இல்லாத இயக்கங்களைக் கொண்ட மனிதர்களின் தொகுப்பாக சமுதாயத்தை புரிந்து கொண்டால் சமூக நிகழ்வுகள் தீர்வற்ற சிக்கல்களாகவே தோன்றும். இயக்க போக்குகளின் தொகுப்பாக சமுதாயத்தை புரிந்து கொண்டால் பௌதிக இயக்கத்தின் விதிகள் சமூக இயக்கத்திற்கும் பொருந்துவதை கண்டுணர முடியும். மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றம் அடையாத சமூக நிகழ்வுகள் போல வெளிக்குத் தோன்றும் நிகழ்வுகளும் அந்நிகழ்வுகளால் ஏற்படும் சிந்தனைகளும், கருத்துருவங்களும், தோன்றிய படியும் மறைந்த படியும் இருக்கும் இடையராத மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கம் எப்பொழுதும் பின்னோக்கி செல்வதில்லை முன்னோக்கி மட்டுமே செல்லும். அளவ ரீதியாக தோன்றி குணரீதியாக வளரும் இந்த இயக்கத்தின் இருப்பு முரண்பாடுகளால் வெளிப்படுகிறது. இயற்கைக்கும் மானுட வாழ்வுக்கும் இடையிலான முரண்பாடே மானுடத்தின் அடிப்படை முரண்பாடாக இருக்கிறது. இந்த முரண்பாடே இயற்கையையும் மானிட சமுதாயத்தையும் வளர்த்தது, வளர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் இயற்கை மீதான மானுடத்தின் வெற்றியை மானுடம் முழுவதும் அடையவிடாமல் ஒரு சமூகப் பிரிவினரை இன்னொரு சமூக பிரிவினர் தடுத்து ஒடுக்கினர். இந்த சமூகப் பிரிவுகளில் இடையே ஆன போராட்டமே வர்க்கப் போராட்டமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இயற்கைக்கும் மானுட வாழ்வுக்கும் இடையிலான முரண்பாட்டில் மானுடத்தின் வெற்றிதான் தானேயான பொருள்களை தனக்கான பொருள் களாக்கும் நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வில் தான் மனித உழைப்பு பண்டங்களை படைக்கிறது இந்த பண்ட உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மனித உழைப்பும் கருவிகளும் மூலப் பொருட்களும் உற்பத்தி சக்திகள் ஆகும். இந்த உற்பத்தி சக்திகளுக்குகிடையே ஏற்படும் உறவே உற்பத்தி உறவாகும். இந்த உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் அடிப்படையாய் இருக்கும் மனிதர்களை குடும்பமே உற்பத்தி செய்கிறது.

இந்த உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தின் அடிக்கட்டுமான இயக்கமாக இருக்கிறது . குடும்ப அமைப்பு உற்பத்தி செய்யும் மனித உழைப்பே முதலில் வளர்கிறது. இந்த வளர்ச்சி உற்பத்திக் கருவிகளிலும் மூலப்பொருட்களை பயன்படுத்துவதிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தி சக்திகளிலும் வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அதுவரை நிலவிக் கொண்டிருந்த உற்பத்தி உறவுகளுக்கு பொருந்தாமல் போகும்போது அந்த உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க உற்பத்தி சக்திகள் எழுச்சி பெறுகின்றன.

பழைய உற்பத்தி உறவுகளை பாதுகாப்பதற்கு உருவாகி இருந்த மேல் கட்டுமான இயக்கமான அரசு, சட்டம், நீதி மற்றும் ஒழுக்க நெறிகள் பழைய உற்பத்தி உருவுகளை பாதுகாக்க செயல்படுகிறது. இந்த மேல் கட்டுமான இயக்கத்தை எதிர்த்து எழுச்சி பெரும் உற்பத்தி சக்திகளின் இயக்கம் வெகுமக்கள் தன்மை பெற்று மேல் கட்டுமானத்தை தகர்த்தெறிந்து புதிய மேல் கட்டுமான இயக்கத்தை படைக்கிறது. இதுதான் புரட்சியின் விதியாக இருக்கிறது.

மூலதன வளர்ச்சி அதற்கு முந்தைய சமுதாயத்தின் சிறுவீத அடிப்படைகளை தகர்த்து பெருவீத அடிப்படையில் புனரமைத்துள்ளது.

புரட்சியின் விதிகளின்படிதான் முதலாளித் துவத்திற்கு முந்தைய சமுதாயமான நிலப்பரப்புத்துவ சமுதாயத்தில் சிறுவீத அடிப்படையில் சிதறுண்டு இருந்த உற்பத்தி சக்திகள் அப்போது வளர்ந்திருந்த மானுட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வளர்ந்தன. இந்த வளர்ச்சிக்கு அதுவரை நிலவி வந்த உற்பத்தி உறவுகளுக்கு பொருந்தவில்லை. எனவே அந்த உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க வளர்ந்து விட்ட உற்பத்தி சக்திகள் எழுச்சி பெற்றன. இந்த எழுச்சிக்கு தடையாயிருந்த அதை ஒடுக்கிய மேல் கட்டுமானமான அரசு, சட்டம், நீதி மற்றும் ஒழுக்க நெறி அனைத்தும் தகர்த்தெரியப்பட்டது.

இதுவே ஜனநாயக புரட்சியாகும் இந்த புரட்சிகர போராட்டங்களின் விளைவாக உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது சாத்தியமாக்கும் உற்பத்தி விநியோக முறை உண்டானது.

தானே உழைத்து தானே நுகர்ந்து கொண்ட தனி மனித உழைப்பை ஒருங்கிணைத்து சந்தைக்காக உழைத்து சந்தை வழியாக நுகர்ந்து கொண்ட உற்பத்தி விநியோக முறை மூலம் இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் மனித சக்தியால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை மூலதனத்தின் வளர்ச்சி சாதித்தது. இருப்பினும் இயற்கைக்கு எதிரான மானிடத்தின் வெற்றியை மானிடம் முழுவதும் பெறுவதை ஜனநாயக புரட்சி என அறியப்படும் முதலாளித்துவ புரட்சி சாதிக்கவில்லை.

மனிதர்களுக்கிடையேயான பகை முடிக்கப்படவில்லை .

காட்டுமிரண்டாய் வாழ்ந்த மனிதன் உணவுக் காகவும் உடலுறவுக்காகவும் ஒருவரை ஒருவர் பகைத்து அழித்துக் கொண்டனர். உற்பத்தி விநியோக முறையில் ஏற்பட்ட வளர்ச்சி இந்த பகையை தணித்தது. இருந்தபோதிலும் மனித குலம் அவரவர் உற்பத்தி விநியோக நலன்களை பாதுகாத்துக் கொள்ள சமூக பிரிவுகளான வர்க்கங்களாக பிரிந்து பகை கொண்டு போராடி ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டும் அழிந்து கொண்டும் இருந்தனர். இதுவே மனித சமுதாயத்தின் வரலாறாக இருக்கிறது. இந்த மோதல்களும் மோதல்களின் முடிவும் உற்பத்தி விநியோக முறையில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை கொண்டு வந்தது.

மூலதானத்தின் தோற்றம் அதுவரை நிலவி வந்த உற்பத்தி விநியோக முறையை சிதைத்து அழித்து அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிரான வெகு மக்களின் புரட்சிகளை எழுச்சிகளை நிகழ்த்தியது. இருப்பினும் மூலதன சமுதாயத்தின் புரட்சிகர எழுச்சி பகை கொண்ட மானிட சமுதாயத்தின் வரலாறு இருக்கும் வர்க்க பகை முடிவுக்கு கொண்டு வரவில்லை. மாறாக சமுதாயம் இனங்களாக பிரிந்து பகை கொண்டு மோதி ஒன்றை ஒன்று ஒடுக்கவும் ஒழிக்கவுமான இயக்கமாக தீவிரமுற்றது . முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமுதாயத்தில் நிலவிய அனைத்து வர்க்கங்களின் வாழ்வையும் அழித்து ஒழித்தது . அவற்றை முதலாளிகளாகவோ அல்லது உடைமைகள் அற்ற பாட்டாளி வர்க்கங்களாகவோ மாறும்படி நிர்பந்தித்தது. மாறாதவர்களை ஈவிரக்கமின்றி நாசம் செய்தது (கொன்றொழித்தது). மானிட உறவுகளை சுயநல கணிப்பில் மூழ்கடித்து மோதல்களை அதிகப்படுத்தி உள்ளது.

தொடரும்....

கட்டுரையாளர் மார்க்சிய சமூக பொருளாதரத்தை ஒரு எளிய முறையில் விளக்க முயற்சித்துள்ளார்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்