21 நூற்றாண்டின் பொருளாதாரம்- சுகுமார் .ரா


 

முந்தைய இலக்கு இதழின் தொடர்சி

நிலப்பிரபுத்துவ மூடத்தனங் களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான வெகுமக்கள் எழுச்சி முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையில் உழைப்பு சுருண்டல் சமயத்துறை பிரம்மைகளால் அரசியல் பெருமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தது. மூலதன வளர்ச்சி மனிதனை உழைப்புத் திறனைத் தவிர வேறேதும் இல்லாதவனாய் பழங்கால நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கைவிட வேண்டியவனாய்,தெளிந்த புத்தியுடனும் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளை உற்று நோக்கி தனது தனித்துவத்தை கண்டறிய வேண்டியவனாய் மாற்றியுள்ளது. இயற்கையாகவே மேலானோர்க்கு கீழ்ப்படுத்தி கட்டிப் போட்ட பந்தங்களை அறுத்தெறிந்து , ஆதிக்க உறவுகளையும் தந்தை வழி சமுதாய உறவுகளையும் .கிராம மந்திர பாரம்பரிய உறவுகளையும் ஒழித்துக் கட்டியுள்ளது. புனித பேரானந்தங்கள் என அறியப்பட்ட பக்தி பரவசம் மதமயக்கம் பேராண்மையின் வீரம் உணர்ச்சி பசப்புகள் அனைத்தும் வெறும் சுயநலம் தான் என்பதை அம்பலப்படுத்தியது. பணிவுக்கும் பக்திக்கும் உரியதாய் போற்றிப் பாராட்டி வந்த மருத்துவரையும் ஆசிரியரையும் சமய குருவையும் வழக்கறிஞரையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் காசுக்கு உழைக்கும் கூலிக்காரர்களாய் சிறுமைப்படுத்தியுள்ளது. இது சிறுவீத அடிப்படையில் பிணைக்கப்பட்டு இருந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்த நிலப்பரப்புத்துவ அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக போராடி பெருவீத உற்பத்தி முறையை நிலை நிறுத்தியது. சிதறுண்டு கிடந்த மக்களையும் உற்பத்தி சாதனங்களையும் சொத்தையும் அடர்ந்து திரட்சி பெற செய்தது. நிலபிரப்புதுவ நியாயங்களையும் நீதிகளையும் அரசு வடிவங்களையும் சட்டங்களையும் ஒழுக்க நெறிகளையும் வெகு மக்கள் திரல் எழுச்சிகள் மூலம் வீழ்த்தி நவீன அரசு வடிவங்களையும் சட்டங்களையும் ஒழுக்க நெறிகளையும் உண்டாக்கியது.

மூலதன வளர்ச்சியும் முதலாளித்துவம்

மூலதனம் தோன்றிய போது முதலாளித்துவம் தோன்றியிருக்கவில்லை . முதலாளி வர்க்கமும் தோன்றியிருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரப்புதுவம் என்று அறியப்படும் விவசாய சமுதாயத்தின் அங்கமாக இருந்த வியாபார மூலதனம் தான் உலகம் முழுவதும் மூலதனமாக இருந்தது அப்போதும் வியாபாரம் உலகம் முழுவதும் நடந்தது. அப்போதைய உலக சந்தையின் தேவைகளை விவசாய சமுதாயத்தின் சிறுவீத உற்பத்தி முறையே பூர்த்தி செய்தது. கிழக்கத்திய நாடுகள் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்து நாடுகள் அந்த உற்பத்தி முறையில் மேலோங்கி உலக சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்தன. ஆதியில் வியாபாரம் மூலதனம் பண வடிவில் தோன்றியது . விற்பதற்காக பண்டங்களை வாங்குவதற்கு பயன்பட்ட பணம்தான் மூலதனம் என்று அறியப்பட்டது. அப்போது அந்த மூலதனம் உற்பத்தி சாதனங்களையும் உழைப்பையும் வாங்க பயன்படுத்தப்படவில்லை.

பண்டம் பணம் பந்தம் என்ற பண்ட சூழல் இயக்கத்தில் பொதுப்பண்டமாகத்தான் பணம் இருந்தது பணம் பொது பணமாக வளர்வதற்கு முன்னால் தங்கம் தான் பொது பண்டமாக இருந்தது. தங்கத்திற்கு முன்னால் வேறு பண்டங்கள் பண்ட சுழற்சியில் பொது பண்டங்களாக செயல்பட்டு வந்தன. சுய தேவை பூர்த்தி ஆன பின்னால் மீதியாகும் உபரி உற்பத்தியை சந்தைக்கு அனுப்பப்பட்டது ஆனால் மூலதனம் உற்பத்தியில் ஈடுபட்ட பிறகு பண்டங்கள் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன. சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபட்ட சமூகமே முதலாளி வர்க்கத்தை படைத்தது முதலாளித்துவ சமுதாயம் உருவாக அடிப்படையாகவும் இருந்தது. இந்தப் பண்ட சுழற்சி முறை மானுடசமுதாயத்தில் உற்பத்தி சக்திகளை பிரமாண்டமாக வளர்த்தது. கைவினை சங்கங்களையும் பட்டறை தொழில்களையும் அப்புறப்படுத்தி கோடீஸ்வர தொழிலதிபர் களும் பெரும் தொழில்துறை பொருள் உற்பத்தி சேனைகளது அதிபதிகளுமான முதலாளிகளை உருவாக்கியது. அதுவரை நிலவி வந்த உற்பத்தி முறைகளையும் பரிவர்த்தனை முறைகளையும் பின்னுக்குத் தள்ளி மூலதன உற்பத்தி விநியோக முறையை முன்னுக்கு கொண்டு வந்தது . தந்தை வழி தனியுடைமை முறைகளையும் கிராமந்திர பாரம்பரிய தனி உடைமைகளையும் ஒழித்துக் கட்டி மூலதன தனி உடைமை முறையை நிலை நாட்டியது. மூலதன உடைமையாளர்களான முதலாளிகள் தொழில்துறையிலும் வாணிபத்திலும் கப்பல் போக்குவரத்திலும் ரயில் பாதைகளும் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக தங்கள் மூலதனத்தை பெருக்கிக் கொண்டார்கள் நீண்டதொரு வளர்ச்சி போக்கின் விளைவாய் உற்பத்தி முறையிலும் பரிவர்த்தனை முறையிலும் ஏற்பட்ட புரட்சியின் விளைவாய் வளர்ந்த உற்பத்தி சக்திகள் பழைய சமுதாய கட்டுமானத்தை தகர்த்து மூலதன தனி உடைமை அடிப்படையிலான புதிய சமுதாய கட்டுமானத்தை படைத்தன. இந்த சமுதாயத்தை படைக்கும் புரட்சிகர எழுச்சிகளில் வெகுமக்களுக்கு மூலதன உடைமையாளர்களான முதலாளிகள் தலைமை தாங்கினார்கள் மூலதான உடமை முறையை வளப்பதற்குமான மேல் கட்டுமானங்களை அதாவது அரசு சட்டம் நீதி மற்றும் ஒழுக்க நெறிகளை படைத்துக் கொண்டார்கள். மூலதன வளர்ச்சிக்கேற்ப தனி உடமை முறையை தகவமைக்கும் இயக்கம் தான் முதலாளித்துவ இயக்கமாக இருக்கிறது.

மூலதனம் என்பது உற்பத்தி சாதனங்களும் உழைப்பு கூலியும்தான் தொழில் மூலதனத்தின் தோற்றம் பண்ட சுழற்சி முறையில் புரட்சிகர மாற்றங்களை படைத்தது. சந்தையில் சிதறி கிடந்த சமூகங்களை இணைத்ததன் மூலம் நுகர்வில் நிலவிய தடைகளை தகர்த்து சமூகமயமாக்கியது.

சமூகமயமான சந்தைக்கு உற்பத்தி செய்ததன் மூலம் உழைப்பும் சமூகமயமாக்கப்பட்டது இந்த சமூக இயக்கத்தில் மூலதனம் என்பது உற்பத்தி சாதனங்களும் உழைப்புக்கானகூலியும்தான் . இந்த இரண்டும் உற்பத்தி சக்திகளாகும். மூலதனத்தின் வளர்ச்சி என்பது உற்பத்தி சாதனங்கள் மற்றும் மனித உழைப்பின் வளர்ச்சியாகும். பணத்தின் வளர்ச்சி அல்ல. இதில் உற்பத்தி சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலதனம் மாறா மூலதனம் என்றும் உழைப்பு கூலிக்கு பயன்படுத்தப்படும் மூலதனம் மாறும் மூலதனம் என்று அறியப்படுகிறது.

மூலதன இயக்கம்

மானுட வாழ்வில் மூலதனம் என்பது பண்ட சுழற்சியின் வரலாற்று வளர்ச்சியாகும். உற்பத்தி சாதனங்கள் மற்றும் உழைப்பு சக்தியின் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி ஆகும். உற்பத்தி சாதனங்கள் அதாவது மாறாத மூலதனம் தானாக வளர்வதில்லை

மூல தனத்தை வளர்ப்பதும் இல்லை மாறாக உற்பத்தியில் ஈடுபடுவதால் உற்பத்தி சாதனங்கள் அழிகின்றன மனித உழைப்புதான் திறன் மிக்கதாய் வளர்ந்து அழியும் உற்பத்தி சாதனங்களையும் வளர்த்து ஒட்டு மொத்த மூலதனத்தையும் வளர்கிறது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்திய மூலதனம் உழைப்புக்கு விலை கொடுத்து சந்தைக்கான பண்ட உற்பத்தியில் மனிதர்களை ஈடுபடுத்துகிறது. உழைக்கும் மக்கள்

உழைப்புக்குப் பெற்ற விலையான கூலியே அவர்களுடைய வாங்கும் சக்தியாகிறது. உழைக்கும் மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை பயன்படுத்தி சந்தையில் தங்களுக்கு தேவையான பண்டங்களை வாங்குகிறார்கள். இதனால் சந்தையில் பண்டங்கள் அழிந்து தேவையை உண்டாக்குறது சந்தையில் ஏற்படும் தேவைகளை நிறைவு செய்ய மூலதனம் மீண்டும் உற்பத்தியில் ஈடுபடுகிறது. இந்தப் பண்ட சுழற்சி இயக்கமே மூலதன இயக்கம் ஆகும். இந்த பண்ட சுழற்சியில் மூலதனம் வளர்கிறது மூலதன வளர்ச்சியின் கட்டத்திற்கு ஏற்ப சமூக கட்டுமானம் முழுவதும் வளர்கிறது. மூலதன இயக்கத்தின் பிரம்மாண்டமானவளர்ச்சியில் சிறுவீத அடிப்படையிலான பண்ட சுழற்சி விரிந்து பரந்து பெருவீதமானது.அந்த சுழற்சியில் உற்பத்தி சாதனங்கள் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே முல தன வளர்ச்சியாகும். முதலாளித்து வளர்ச்சி என்பது தனி உடைமை முறையின் வளர்ச்சி .. 21ம் நூற்றாண்டின் பண்ட சுழற்சி இயக்கமானது மூலதன இயக்கத்தின் வளர்ச்சி உலகம் முழுவதையும் இணைத்துள்ளது. 2007 இல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி உலகத்தில் உள்ள 265 பூகோள பிரிவுகளில் 195 இறையாண்மை கொண்ட அரசுகள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் சந்தைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. உலக வர்த்தக மையத்தின் தோற்றம் என்பது பண்ட சுழற்சியின் தடைகளை களைவதற்கான அதிகார அமைப்பு நாடுகளும் தேசங்களும் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகும்.

முதலாளித்துவம் என்பது தனி உடைமை உற்பத்தி உறவாகும். மூலதனமே முதலாளித்துவம் அல்ல. மூலதன வளர்ச்சியும் முதலாளித்துவ வளர்ச்சியில்லை. மூலதன உடமை முறை உருவான போது தான் முதலாளித்துவம் தோன்றியது. முதலாளித்துவம் என்பது மூலதன அடிப்படையிலான தனி உடமை உற்பத்தி உறவுகள் ஆகும். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் மூலதனத்தின் மீதான தனி உடமை முறையாகும். தொழில் மூலதன அடிப்படையிலான பண்ட சுழற்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட சமூக உறவுகளாகும். பண்ட சுழற்சியின் இந்த வளர்ச்சி முதலாளித்துவத்திற்கு முந்தைய தனி உடைமை முறையின் வடிவங்கள் அனைத்தையும் அழித்து அதன் இடத்தில் மூலதன தனியுடைமை முறையை மட்டும் நிலை நிறுத்தியது. முதலாளித்துவம் பல்வேறு வகையான பந்தங்களால் பிணைக்கப்பட்டு இருந்த தனி உடமை உறவுகளையும் தந்தை வழி தனி உடமை உறவுகளையும் கிராமாந்திர பாரம்பரிய தனி உடமை முறைகளையும் ஈவு இரக்கமின்றி ஒழித்து கட்டி முதலாளித்துவ தனி உடமை முறையை மட்டும் பாதுகாத்தது.விவசாய வர்க்கங்களையும் வியாபார வர்க்கங்களையும் சிதைத்து மூலதன தனி உடமை முறையை சார்ந்து இருக்கும்படி புனரமைத்துள்ளது ஆகவே முதலாளித்து வளர்ச்சி என்பது பண்டச் சுழற்சியில் மூலதனதனியுடமை முறையின் வளர்ச்சி ஆகும். மூலதன தனிஉடமை முறையை வளர்த்து பாதுகாப்பதே முதலாளித்துவத்தை பாதுகாப்பதாகும்.

மூலதன தனியுடைமை முறையின் தோற்றமும் வளர்ச்சியும்

நகரங்களுக்கு தப்பி ஓடி வந்த பண்ணை அடிமைகளின் சேமிப்பாக மூலதனம் தோன்றியது. அந்த சுழற்சியில் வினியோக இயக்கமான வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டும் வட்டிக்கு விடுவதன் மூலமாகவும் வளர்ந்தது. அப்போது அது கடுவட்டியாளர் மூலதனம் மற்றும் வியாபாரம் மூலதனம் என்று கருதப்பட்டது அப்போது அந்த மூலதனம் உற்பத்தி சாதனங்கள் மீது உழைப்பின் மீது எந்த உரிமையும் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தில் நிலவிய உற்பத்தி அமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை வாங்கி விற்பதற்கு மட்டும் பயன்பட்ட வியாபார மூலதனம் ஆகும். தனி நபர்களின் உடமையாக இருந்த அந்த மூலதனம் தான் உற்பத்தி சாதனங்களை வாங்கி உற்பத்தியில் ஈடுபடுத்திய போது தொழில் மூலதனமானது. தொழில் மூலதனத்தின் தோற்றமே மூலதன தனி உடைமை முறையின் தோற்றமாகும். தொடக்கத்தில் இந்த மூலதனம் தனிநபர்களுக்கு உடமையாய் இருந்தது. பின்னர் அது கூட்டணிகளுக்கு உடமையாகி தொழில்களை மையப்படுத்தியது. உற்பத்தி சாதனங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட உழைக்கும் மக்களை திரட்டி உற்பத்தியில் ஈடுபடுத்தியது. இந்த மையப்படுத்துதலின் விளைவாக சிதறி கிடந்த மக்கள் தொகையும் உற்பத்தி சாதனங்களும் சொத்தும் அடர்ந்து திரண்டது. இவ்வாறு அடர்ந்து திரண்ட உற்பத்தி சாதனங்கள் மற்றும் மனித உழைப்பின் தனி உடைமை வடிவமே மூலதனமாகும்.

இந்த மையப்படுத்தப்பட்ட மூலதன வளர்ச்சியின் விளைவாக தனித்தனிநலன்களும் சட்டங்களும் அரசாங்கங்களும் வரி விதிப்பு முறைகளும் கொண்டனவாய் சுயேட்சையாகவோ அல்லது தளர்ந்த இணைப்புடனோ இருந்த மாநிலங்கள் ஒரே அரசாங்கத்தையும் ஒரே சட்டத் தொகுப்பையும் தேச அளவிலான ஒரே வர்க்க நலனையும் ஒரே தேச எல்லையையும் ஒரே சுங்கவரிமுறையையும் கொண்ட ஒரே தேசமாய் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்தக் கட்டத்தில் மூலதனம் சில தனி நபர்களிடம் குவிந்திருந்த போதிலும் தேசத்தின் வளர்ச்சிக்கானதாய் இருந்தது, அவ்வாறே உணரவும் பட்டது. அதனால் அது தேசிய மூலதனம் என்ற வடிவம் பெற்றது. மூலதன உடைமை முறையின் தேசிய வடிவம் மானிட முன்னேற்றத்திற்கு தீவிர பங்காற்றியது தேசிய உற்பத்தி தேசிய சந்தை என தேசிய பொருளாதாரத்தில் மாபெரும் வளர்ச்சியை முந்தித் தள்ளியது. அதன் இணை விளைவாக தேசப்பற்று தேச பக்தி போன்ற தேசிய மாண்புகளும் தேசிய அரசுகளும் உருவாகி வளர்ந்தன. தேசிய அரசுகளின் பாதுகாப்பில் தனிநபர் மூலதனம் பிரமாண்டமாக வளர்ந்தது. தனிநபர் மூல தானத்தின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியாக கருதப்பட்டு தேசம் அணி திரட்டப்பட்டது. இந்தக் கட்டத்தில் தொழில்களும் வியாபாரம் முன்னேறிய தேசங்களில் ஒரு சிலர் அல்லது குழுக்களின் ஏகபோகமாக வளர்ந்தது. இந்த ஏக போகங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேசம் போதுமானதாகயில்லை. ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சிக்காக தேசம் கடந்த தனி உடைமை பாதுகாக்க வேண்டி இருந்தது.

ஏகபோக மூலதனமாக முன்னேறிய தேசத்தின் வளர்ச்சிக்காக மற்ற தேசங்கள் அடக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் நியாயப்படுத்தப்பட்டது. இதனால் முன்னேறிய தேசங்கள் பின்தங்கிய நாடுகளை மூலப் பொருட்களுக்காகவும் சந்தைக்காகவும் காலணிகளாக மாற்றிக் கொண்டார்கள். இதற்காக முன்னேறி தேசங்களுக்கு இடையிலான போட்டி உலகில் யுத்தங்களை அதிகப்படுத்தி பேரழிவுகளுக்கு மானுடத்தை தள்ளியது. முதல் உலக யுத்தம் மானுடப் பேரழிவை அடையாளம் காட்டி எச்சரித்தது . ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி துருக்கி பல்கேரியா பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி அமெரிக்கா ஜப்பான் ருசியா ருமேனியா செர்பியா பெல்ஜியம் கிரீஸ் போர்ச்சுகல் மென்டோனிக்கா ஆகிய 17 முன்னேறியதேசங்கள் 6 கோடிக்கு மேற்பட்ட படைவீரர்களை அதாவது பயிற்றுவிக்கப் பட்ட மனிதர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியது. அவர்கள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் தேச பக்தி கொண்ட முன்னணிகள். அத்தகைய முன்னணிகள் மூன்று கோடி பேருக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். சாதாரண மக்கள் எண்ணற்றவர்கள் கோடிக்கணக்கில் கொல்லப்பட்டும் ஊனமுற்றும் பாதிக்கப்பட்டார்கள். வென்ற நாடுகளுக்கு இடையில் உலகம் பங்கு போடப்பட்டது. பின்தங்கி தேசங்கள் மீது முன்னேறி தேசங்களின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டது. அதுவரை மூலதனம் மையப்படுத்தலுக்கு உந்த விசையாய் பயன்பட்ட தேசிய உணர்வுகள் பின்தங்கிய நாடுகளிலும் காலணிகளிலும் மூலதன மையப்படுத் தலுக்கு எதிரானதாய் மாறின.

தேசம் என்பது முதலாளித்துவ தனி உடமை முறை வளர்ச்சியின் வரலாற்றுக் கட்டமாகும்.

உற்பத்தி சாதனைகள் மையப்படுத்தப் பட்டு சொத்துகள் ஒரு சிலர் கையில் குவிந்ததன் விளைவாக அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட வேண்டிய தாகியது. அதன் விளைவாகவே சிறு சிறு மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தேசங்கள் உருவானது. முதலாளித்துவத் திற்கு முந்தைய சமுதாயத்தின் வர்க்கங்களான விவசாய வர்க்கங் களையும், வியாபார வர்க்கங்களையும் ஒடுக்கி அவர்களுடைய உடமை உரிமைகளை அழிக்க மூலதன உடைமையாளர்கள் சொத்தேதுமற்ற உழைக்கும் மக்களான பாட்டாளிகளை ஒரு தேசமாக்கி அணி திரட்டி கொண்டார்கள். ஆகவே தேசம் என்பது தனி உடைமையை வரலாற்றில் மூலதன தனி உடைமை முறைமை தேசத்தின் பெயரால் மானிட சமுதாயம் ஏற்றுக் கொண்ட கட்டமாகும். முதலாளி வர்க்கம் சந்தையின் நலன்களுக்காகவும் உற்பத்தி நலன்களுக்காகவும் சிறு சிறு கூட்டங்களாக வாழ்ந்த மக்களை தேசிய உணர்வூட்டி ஒரு தேசமாக அணிதிரட்டிக்கொண்டது. மார்க்சியம் தோன்றுவதற்கு முன்னால் மானுடத்தின் மிக உயர்ந்த புரிதல் தேசிய இனமாக தான் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூட பகையற்ற மானிட சமுதாயம் அமைக்கப்பட வேண்டும் என்று கருதிய பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மாமனிதர்களின் தீர்மானமே ஆகும்.

ஏகபோகமாக வளர்ந்த தேசிய மூலதனமே தேசிய அரசுகளை ஏகாதிபத்திய அரசுகளாக வளர்த்தது.

மூலதன வளர்ச்சியில் சிறுவீத அளவில் சிதறி கிடந்த உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி சக்தியான மக்கள் தொகையையும் சொத்துகளையும் திரண்டு குவிக்க செய்தது. சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிந்ததின் தவிர்க்க முடியாத விளைவாக அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டு சிதறி கிடந்த சிறு மாநிலங்கள் ஒருசேர இணைக்கப்பட்டு தேசங்கள் உருவானது. தேசிய உற்பத்தி தேசிய சந்தை தேசிய பண்டங்கள் தேசிய மூலதனம் தேசிய வளர்ச்சி மற்றும் தேச பக்தி போன்ற தேசிய உணர்வுகள் தேசிய மாண்புகளாக வளர்ந்தன. இந்த தேசிய மாண்புகள் தேசிய அரசுகளை வலிமைப்படுத்தி மூலதன வளர்ச்சியை தீவிர படுத்தின தேசிய மூலதனத்தின் வளர்ச்சி தேசத்தின் உற்பத்தியையும் வியாபாரத்தையும் ஒரு சிலரின் ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஒரு தேசத்திற்குள் ஏகபோகமாக வளர்ந்த மூலதனத்தின் வளர்ச்சிக்கு தேசிய எல்லைகள் போதுமானதாக இல்லை. ஆகவே மூலதனம் தேசிய எல்லை கடந்து தன் செயல்பாடுகளை விரிவாக்கியது. மூலதனத்தை பாதுகாக்க முன்னேறிய தேசங்களின் அரசுகள் பின் தங்கிய தேசங்கள் மற்றும் நாடுகளின் அரசுகளை ஒடுக்கி அவற்றை தங்கள் காலணிகளாகவோ அல்லது சார்பு நாடுகளாகவோ மாற்றிக் கொண்டார்கள்.

இதனால் மூலதனத்தின் ஏகபோக வளர்ச்சி முன்னேறி தேசங்களை ஏகாதிபத்தியங்களாக வளர்த்தது. ஏகாதிபத்திய அரசுகள் தங்கள் தேசங்களின் ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சிக்காக போட்டியிட்டன. வளரும் நாடுகளை முடக்கவும் வளராத நாடுகளை காலணிகளாக்கவும் தங்களுக்குள் மோதிக்கொண்டன. பின்தங்கிய நாடுகளில் தேசிய உணர்வுகள் முழுவதும் ஏகபோக வளர்ச்சிக்கு எதிராக அணிதிரண்டது .

ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சிக்காக ஏகாதிபத்திய அரசுகள் மூலதனம் வளர்த்தெடுக்க தேசங்களை அடக்கவும் ஒழிக்கவும் செயல்பட்டன. மூலதன தனி உடமை முறையின் ஏகாதிபத்திய வளர்ச்சி முன்னேறிய தேசங்களுக் கிடையே போட்டியை வளர்த்தது,முதல் உலக யுத்தத்தை மானிடத்தின் மீது திணித்தது.

ஏகாதிபத்தியம் என்பது மூலதனத்தின் மீது தேசம் கடந்த தனி உடமை முறையை நிலை நாட்டுவதற்கான அரசு வடிவமாகும்.

மூலதனம் இருப்பதற்கும் வளர்வதற்கும் தொடர்ந்து விரிந்து பரந்து செல்லும் சந்தையும் அதற்குரிய உற்பத்திப் பெருக்கமும் தேவைப்படுகிறது. ஆகவே அது மூலப்பொருட்களுக்காகவும் சந்தைக்காகவும் தேசம் கடந்து உறவுகளை படைக்க வேண்டியுள்ளது.

மூலதன தனி உடைமையை உரிமை களை தேசம் கடந்து நிலை நாட்டவும் பாதுகாக்கவும் மான அரசு வடிவமாகத் தான் முன்னேறிய தேசங்களின் அரசுகள் ஏகாதிபத்திய அரசுகளாக மாறி காலணிகளையும் சார்பு நாடுகளையும் உருவாக்கின. அதற்கென போட்டியிட்டு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. மூலதன தனிஉடமை முறையான உற்பத்தி உறவை ஏக போக தனி உடமை முறையான உற்பத்தி உறவாக மாற்று வதற்கான மேல் கட்டுமான இயக்க மாகவே ஏகாதிபத்திய இயக்கங்கள் தோன்றியது. தொகுத்து சொன்னால் ஏகபோக மூலதனம் தொடர்ந்து சந்தித்த நெருக்கடிகளை கடக்க தேசம் கடந்து விரிவடைய வேண்டி இருந்தது. ஆகவே ஏகபோக மூலதனம் தேசம் கடந்த மூலதன தனியுடைமை முறையை நிலைநாட்டியது. அதற்கான அரசு வடிவமாக ஏகாதிபத்தியம் தோன்றியது. அதன் பிறகு ஏகாதிபத்திய போட்டியில் மோதல்களுமே உலக நிகழ்வானது.

சமூக உற்பத்தியில் ஈடுபடுவதே மூலதனம் இருப்பதற்கும் வளர்வதற் குமான விதியாகும் .

தனிமனித தேவைகள் குடும்ப தேவைகளாக வளர்ந்து சமுதாயதேவைகளாக முதிர்ச்சி அடைந்தபோது நிலவிய பண்ட சுழற்சியில் மூலதனம் தோன்றியது. சந்தை என்பது சமூக தேவைகளை பூர்த்தி செய்யும் பண்ட சுழற்சி இயக்கமாக இருந்தது .

ஆதியில் மூலதனம் பண்ட உற்பத்தியில் ஈடுபடவில்லை பண்டங்களை சேகரித்து சந்தையில் விற்கும் இயக்கமாக மூலதனம் செயல்பட்டது. இந்த சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதன் மூலமாக சந்தையில் கிடைத்த லாபத்தில் மூலதனம் வளர்ந்தது இந்த சுழற்சி எங்கு தடைபட்டாலும் மூலதனம் அழியத் தொடங்கிவிடும். பண்ட சுழற்சி மீண்டும் மீண்டும் நிகழும்போதுதான் மூலதனம் இருக்க முடியும். மூலதனம் உற்பத்தியில் ஈடுபட்ட பிறகுதான் மூலதனத்தின் வளர்ச்சி தீவிரமானது. பண்ட சுழற்சியில் உபரி மதிப்பு படைக்கப்பட்டு மூலதனம் வளர்கிறது வாங்கும் சக்தி கொண்ட சில தனிநபர்கள் அல்லது சிறு குழுக்களின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதாக இருந்தால் மூலதனம் வளராது அது விரிவடைந்து செல்லும் சமுதாய தேவைகளை பூர்த்தி செய்வதால் மட்டுமே வளர முடியும். ஆகவே சமூகத்தின் வாங்கும் சக்தியை பாதுகாப்பது மூலதனம் இருப்பதற்கும் வளர்வதற்குமான அடிப்படையாக இருக்கிறது. மனித உழைப்பு சக்தி முழுவதையும் சமூகத்திற்கு தேவையான பண்ட உற்பத்தியில் ஈடுபடுத்துவதும் பண்ட உற்பத்தியை நுகர்வதற்கு மனித சமுதாயத்திற்கு தேவையான வாங்கும் சக்தியை சமூகத்திற்கு வழங்குவதுமான இயக்கமாகத்தான் மூலதன இயக்கம் இருக்கிறது. சமுதாய தேவைகள் அதிகரித்த போது பண்டங்கள் சந்தையில் விற்பதற்காக மட்டும் பண்டங்களை வாங்க பயன்படுத்தப்பட்ட மூலதனம் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனமாக மாறியது. உற்பத்தி சாதனங்களையும் உழைப்பு சக்தியையும் வாங்கி மையப்படுத்தியது இந்த மூலதனமே தொழில் மூலதனம் ஆகும். இந்த மூலதனமே பண்டங்களில் மறைந்திருந்து, உற்பத்தி சாதனங்களோடு பிணைக்கப்பட்டு இருந்த உழைப்பு சக்தியை விடுவித்து அதற்கு விலை நிர்ணயம் செய்தது. அந்த உழைப்பின் விலையை மானுட சமுதாயத்தின் வாங்கும் சக்தியை நிர்ணயித்து வளர்க்கிறது. வாங்கும் சக்தி குறைந்தால் மூலதனம் உற்பத்தி செய்யும் பண்டங்கள் நுகரப்படாமல்தேங்கிவிடும் அவ்வாறு தேங்குமானால் பண்டங்களில் முடங்கி கிடக்கும் மூலதனம் மீள முடியாமல் அழிந்து விடும். ஆகவே மூலதனம் வாழ்வதற்கும் வளர்வதற்கும் சமுதாயத்தின் வாங்கும் சக்தியை பாதுகாப்பதும் அந்த வாங்கும் சக்தியை பெறுவதற்குமான உழைப்பு சக்தியை உற்பத்தி செய்யும் குடும்பங்களின் பிழைப்பு சாதனங் கள்களான பண்டங்களை உற்பத்தி செய்வதும் தடை இன்றி தொடர வேண்டும் நவீன கால இந்தப் பண்ட சுழற்சி இயக்கமே மூலதன இயக்கமாகும் இந்த மூலதன இயக்கமே மனித உழைப்பையும் உற்பத்தி சாதனங் களையும் வளர்த்து மானுட சமுதாயம் பிரமாண்டமான வெற்றிகளை பெற செய்தது.

இந்த மூலதன இயக்கத்தை பாதுகாப்பதற்கான மேல்கட்டு மானமாகவே முதலாளித்துவ அரசு வடிவங்களும் நீதி நியாயங்களும் சட்டமும் ஒழுக்க நெறியும் உருவானது.

மூலதன அடிக்கட்டுமான மேல் கட்டுமானம் சமுதாய அடிக்கட்டுமாணம் என்பது குடும்பம் உற்பத்தி செய்யும் மனித உழைப்பையும் உழைப்பு உற்பத்தி செய்யும் உற்பத்தி சாதனங்களையும் அவற்றுக்கு இடையிலான உறவு களையும் குறிக்கும். மனிதர்களுக் கிடையிலும் மனிதர்களுக்கும் உற்பத்தி சாதனங்களுக்கும் இடையிலும் இருக்கும் உறவுகளே உற்பத்தி உறவுகளாகும். இந்த உறவுகள் முதன்மையாக மனிதர்களுக்கு உற்பத்தி சாதனங்கள் மற்றும் உற்பத்தி மீதான உரிமை குறித்ததாகும். இரண்டாவதாக மனித உழைப்பை சமூக உழைப்புக்கான உற்பத்தியில் ஈடுபடுத்தும் முறையாகும் மூன்றாவது உற்பத்தியை நுகர் வதற்கான உரிமையாகும். இந்த உற்பத்தி உறவுகளை படைக்கவும் பாதுகாக்கவும் உருவானதுதான் அரசு சட்டம் நீதி மற்றும் ஒழுக்க நெறிகளான மேல்கட்டு மானமாகும்.

உற்பத்தி சக்திகளான உற்பத்தி சாதனங்களும் மனித உழைப்பும் அதாவது மூலப் பொருட்களும் கருவிகளும் உற்பத்தி திறனும் பண்ட சுழற்சியில் தீவிரமாக வளர்கின்றன. இந்த வளர்ச்சி அதுவரை நிலவி வரும் உற்பத்தி உறவுகளுக்கு பொருந்தாமல் அவையே தடையாகும் போது அந்த உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்காக உற்பத்தி சக்திகள் போராடுகின்றன. அந்த உற்பத்தி உறவுகளை பாதுகாக்கும் அரசு சட்டம் நீதி நியாயங்கள் மற்றும் ஒரு ஒழுக்க நெறிகளை தகர்த்து மாற்றுகின்றன இந்த சமூக விதிகளின்படி தான் மனித உழைப்பு சக்தியும் நவீன உற்பத்தி சாதனங்களும் வளர்ந்த போது முதலாளித்து வர்க்கங்களான பாட்டாளி வர்க்கமும் நவீன உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்களான முதலாளிவர்க்கமும் பழைய சமுதாய மேல் கட்டுமான அரசு சட்டம் நீதி நியாயங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை தகர்த்து முதலாளித்துவ அரசு சட்டம் நீதி நியாயங்கள் ஒழுக்க நெறிகளை நிறுவி முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை படைத்து பாதுகாக்கிறது. சமுதாயத்திற்கு தேவையான பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு முதலாளித்து வர்க்கம் எங்கெல்லாம் அரசியல் ஆதாயத்தை வென்று கொண்டதோ அங்கெல்லாம் பழைய விவசாய சமுதாயத்தை சிதைத்தொழித்தது தந்தை வழி சமுதாய உறவுகளையும் கிராமாந்திர பாரம்பரிய உறவுகளையும் ஒடுக்கி பின்னுக்கு தள்ளியது.

மூலதன இயக்கம் சிதறி கிடந்த மக்கள் தொகை உற்பத்தி சாதனைகள் சொத்து ஆகியவற்றை ஒன்று குவித்தது உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தியது சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிந்ததன் தவிர்க்க படமுடியாத விளைவாய் அரசியல் அதிகாரமும் மையப்படுத்தப்பட்டது இவ்வாறு மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரமாக தான் தேசங்கள் தோன்றின. தேசிய பொருளாதாரம் தேசிய உற்பத்தி தேசிய சந்தை போன்ற பொருளாதார அம்சங்களும் தேசபக்தி தேசப்பற்று போன்ற தேசிய மாண்புகளும் தேசிய நியாயங்களும் நீதியும் சட்டங்களும் தேசிய அரசும் முதலாளித்துவ தேசிய அடிக்காட்டுமானத்தின் மீது எழுப்பப்பட்ட தேசிய மேல் கட்டுமானங்களே ஆகும்.

தொடரும்......

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்