இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.
அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.
இந்தியாவில் அப்போது “கிலாபத்” இயக்கத்தைச் சேர்ந்த பலர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை முறியடிக்க அகண்ட இஸ்லாம் (Pan-Islam) சித்தாந்தத்துடன், ஆப்கானைக் கடந்து மேற்கு ஆசியாவுக்கும் துருக்கிக்கும் சென்று, அங்கிருந்து படை திரட்டி பிரிட்டிஷாரை வீழ்த்த முற்பட்டனர். “முகாஜிர்”கள் என்றழைக்கப்பட்ட இத்தகையோர் இடைத் தங்கலாக தாஷ்கண்ட் நகரில் இருந்தபோது, அவர்களிடம் அன்றைய சோவியத் சோசலிசக் குடியரசின் அதிகாரிகளும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தினர். இதில் எம்.என். ராயும் அவரது துணைவியாரும் முக்கிய பங்காற்றினர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய முஸ்லிம்களிடம் பேசி அவர்களையும் கம்யூனிசத்துக்கு ஆதரவாளராக்கினர். தாஷ்கண்ட் நகரில் இந்திய ராணுவப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பலர் இணைந்து பயிற்சி பெற்றனர். முகம்மது ஷபீக், முகம்மது அலி முதலான முன்னாள் இளம் முகாஜிர்கள் எம்.என். ராய் மூலம் கம்யூனிஸ்டுகளாக உயர்ந்தனர். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முகாஜிர்களில் சிலர் மாஸ்கோவுக்குச் சென்று, “கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக”த்தில் சேர்ந்து கம்யூனிச சித்தாந்தத்தைக் கற்றறிந்தனர். அவர்களில் சிலர் இந்தியாவுக்கு இரகசியமாகத் திரும்பி வந்து, உழைக்கும் மக்களை கட்சிக்கு அணிதிரட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, பெஷாவர் சதி வழக்கிலும் கான்பூர் சதி வழக்கிலும் கைதாகி, சிறை – சித்திரவதைக்கு ஆளாகினர்.
இதேபோல, அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள இந்திய அறிவுத்துறையைச் சேர்ந்த விரேந்திரநாத் சட்டோபாத்தியாயா தலைமையில் பூபேந்திரநாத் தத், முகம்மது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் ஒரு குழுவாக இணைந்து, போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டி நாட்டை விடுதலை செய்ய விழைந்தனர். அமெரிக்காவிலும் கனடாவிலுமுள்ள சீக்கியர்கள் “கெதார் கட்சி”யில் இணைந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியதோடு, சோசலிச ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு கம்யூனிசப் பாதையில் நாட்டை விடுதலை செய்ய முயற்சித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்கண்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது முறையாக இயங்கவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும். பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.
“ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும், அது நீடித்து நின்று செயல்படவேயில்லை. ஏனெனில், அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.
“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்” என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.
“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார். அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்; மற்றபடி, இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம். சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்” என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Frontline , Volume 29 – Issue 09, May 05-18, 2012)
1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது.
- அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.
அன்றைக்கு, கம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில் தெபாகா விவசாயிகள் எழுச்சி; மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின் எழுச்சி; கேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்; தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்; தபால் தந்தி ஊழியர் போராட்டம்; மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்; மும்பை கப்பற்படை எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ்ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின. கம்யூனிஸ்டுகள் தலைமையில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன் மூதாதையர்கள், இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும், இவற்றையெல்லாம் மீறி கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி, 1946-இல் முன்னேறிய தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அதன் கொள்ளைக்குத் துணை போன இந்திய தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் கூட்டுச் சதியின் விளைவாக, 1947-இல் ஆட்சி அதிகாரத்தை அவர்களின் அடிமைகளிடம் ஒப்படைத்ததோடு மத அடிப்படையில் நாட்டை துண்டாடி வெளியேறினர். அன்றைய போராட்டதிற்கு சொந்தகாரர்கள் கம்யூனிஸ்டுகளே என்றால் மிகை அல்ல.
எனினும், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் பின்னர் உருவான ‘மார்க்சிஸ்ட்’ கட்சியிலும் இருந்த புரட்சியாளர்கள் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர். இதன் விளைவாக, 1967-இல் நடந்த நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து 1969-இல் உருவாக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யும் இந்திய மக்களுக்கு புரட்சியின் மீது மாபெரும் நம்பிக்கையூட்டின. இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது புரட்சிகரப் போராட்டங்கள் நடந்த இடங்களிலெல்லாம், மார்க்சிய-லெனினியக் கட்சியின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். பண்ணையாதிக்கம், சாதி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், அரசின் ஒடுக்குமுறைகள் போன்றவற்றிற்கெதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராட்டியது கம்யூனிச இயக்கங்கள்தான் அவை ஆரம்பகால இயக்கமாகட்டும் பிந்தைய நக்சல்பாரி இயக்கமாகட்டும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கு முன்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகளே.
இன்று ஒருபுறம் ஓட்டுச்சீட்டு நாடாளுமன்றப் பாதையில் வீழ்ந்து திருத்தல்வாதத்தால் சந்தர்ப்பவாதத்தால் மூழ்கியதும் அதேபோல் மற்றொருபுறம் பல்வேறு நிலைப்பாடுகளால் மா-லெ குழுக்கள் சிதறிக்கிடப்பதை அறிவோம்.
இந்தியாவிலும் பல கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இந்தியாவில் இவ்வாறு உயிர் தியாகம் செய்த கட்சிகளில் முதன்மையானது கம்யூனிஸ்டு கட்சியேயாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தில், தெலுங்கானா போராட்டம் ஒரு சிறப்பான போராட்டமாகும். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளையும், விவசாயிகளையும் பாசிச நேருவின் ஆட்சியில் அதன் இராணுவம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்குவதற்காக அது செய்த கொடுமைகள் அதனால் பல கம்யூனிஸ்டுகளும், விவசாயிகளும் கொல்லப்பட்ட கொடூரா வரலாற்றை காணலாம். அந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைந்தாலும், அந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக அன்றைய காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே செல்வாக்கு பலமாக இருந்தது.
அதற்குப்பின் தோன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிய-லெனினிய) கட்சியானது விவசாயிளையும், தொழிலாளர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டிப் போராடியது. இந்த கட்சி நடத்திய போராட்டங்கள் வீரத்தெலுங்கானா போராட்டப் பாதையையே பின்பற்றியது. இவர்கள் நக்சல்பாரியிலும், கல்கத்தா நகர வீதிகளிலும், ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் போன்ற பகுதிகளிலும் தமிழகத்தில் தருமபுரி, வடஆற்காட்டுப் பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. அப்போது இந்த கம்யூனிஸ்டுகளின் மீது ஆட்சியாளர்கள் கொடூரமானதாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தியதன் காரணமாக பல தியாக கம்யூனிஸ்டுகள் வீரமரணம் அடைந்தார்கள். பலர் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டாலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை. அவர்களின் தியாகமும் போராட்டமும் எதிர்கால படிப்பினைக்கு ஆம் தவறுகளை புரிந்து அதனை களைந்து சரியான பாதையில் பயணிக்க வழி கிடைக்கும்.
இன்று திரிபுவாதம், இடதுசாரி குறுங்குழுவாதம், வறட்டுவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டே இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு இயக்கமானது, இன்றுவரை அதற்கான பணியான மக்கள் ஜனநாயக புரட்சியையோ அல்லது சோசலிசத்தை அமைக்கும் பணியையோ நிறைவேற்றாமையால் அவை கனவாகவே உள்ள நிலையில், அதனை பற்றி ஓர் ஆய்வுக்குட்டுபடுத்துவோம் அதற்கு முன் நமது ஆசான்கள் காட்டிய வழியில் நாம் பயணிக்கிறோமா என்பதனையும் சற்று தெளிவடைவது சரியாக இருக்கும்.
அரசியல் பொருளாதார, நிர்வாக காரியங்களை நிறைவேற்ற ஒரு பெரிய அதிகார வர்க்கம் அவசியமாகிறது. இவர்களில் பலர் அதிகார வர்க்கத்தினராக, தம்மை மக்களைவிட மேலாகக் கருதும் பிரிவினராக மாறும் சாத்தியம் சோவியத்து ரஷ்யாவில் இருந்தது என்பதை லெனினும் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவேதான் நிர்வாகத்தை அரசியலிருந்து என்றும் பிரிக்கக் கூடாது என்று லெனின் எச்சரித்தார். இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? சோவியத்து கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனை கொண்ட தீய பண்புடைவர்கள் நுழைந்து விட்டிருந்தனர். ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் இவர்களால் சோவியத்து ஆட்சிக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகவே தோழர் ஸ்டாலின் மறையும்வரை காத்திருந்து அவர் மறைந்தவுடன் அவர்களின் தீய சதிச் செயலுக்கு ஆதரவு தரும் குருஷேவ் ஆட்சிக்கு வந்தவுடன் குருஷேவின் திருத்தல்வாத கொள்கை மற்றும் திட்டங்களைப் பயன்படுத்தி சோவியத்து ரஷ்யாவை முதலாளித்துவத்தை புகுத்தி அதற்கேற்ற வகையில் மாற்றிவிட்டனர். ஆகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நமது அணிகளுக்கும் மக்களுக்கும் போதனை அளித்து அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதற்கு மேலும் மார்க்சிய தத்துவம் மற்றும் கம்யூனிச பண்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்களுக்கு மார்க்சிய, கம்யூனிசத்தை போதித்து மக்களை சித்தாந்தரீதியாக வளர்க்க வேண்டும். மேலும் நம்மிடையே கம்யூனிச பண்புகளை திட்டமிட்டு வளர்க்க வேண்டும், கம்யூனிச பண்புகளுக்கு எதிரான தீய பண்புகள் நம்மிடம் இருக்குமானால் அதனை களைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் மேலும் மக்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பல தியாகங்கள் செய்து புரட்சி நடத்திய, சோவியத்து ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனையின் அடிப்படையிலான தீய பண்பாளர்கள் உள்ளேநுழைந்து இருந்ததால்தான் பல லட்சக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட சோவியத்து அரசை மிகவும் எளிதாக வீழ்த்த முடிந்தது என்ற வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டுகள் இந்தப் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே இந்திய கம்யூனிச அமைப்பிற்குள் இத்தகைய முதலாளித்துவ தனிவுடமை சிந்தனையின் அடிப்படையிலா தீய பண்புள்ளவர்கள் சிலர் உள்ளே புகுந்து கம்யூனிச அமைப்புகளை கம்யூனிச அமைப்புகளாக வளரவிடாமல் அந்த அமைப்புகள் பல குழுக்களாக சிதைவடைவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். ஆகவே அரசியல் பொருளாதார அறிவுள்ளதோடு மார்க்சிய சித்தாந்த அறிவுடன் கூடவே சிறந்த கம்யூனிச பண்புள்ளவர்களை வளர்க்க வேண்டும்.
இன்னும் தொடர்சியாக சில பகுதிகளை பார்ப்போம்...
இலக்கு 79 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பிடி எப் வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள்