இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை
நமது பொதுவுடைமைவாதிகள் 100 ஆண்டுகளை கடந்த கட்சி அதில் பயணிப்போராகட்டும் அதனை பின் தொடர்ந்து மார்க்சியர்களாக இருப்பவர்களாகட்டும் உண்மையாலுமே நமது ஆசான்களின் வழிகாட்டுதலை எந்தளவிற்கு புரிந்து நடந்துக் கொண்டுள்ளோம்? இந்த தேர்தல் பற்றி எத்தனை குழப்பங்கள் என்னென்ன எழுத்துக்கள் போராட்டங்கள் அவை எந்தளவிற்கு நமது ஆசான்களை புரிந்து எழுதினர் செயல்பட்டனர் என்பதிலிருந்தே அவர்கள் ஆசான்களிடம் கற்றவையும் கல்லாதவையும் தெளிவு! அது போலவே ஒவ்வொன்றை பற்றியும் அலசி ஆய்ந்தால் நமக்கான(மார்க்சிய லெனினிய வாதிக்கான) பணி என்ன நாம் செய்ய மறந்தவை செய்ய தவிர்பவை என்ன? ஆக இவர்கள் செய்யும் பணியிலிருந்தே இவர்கள் எந்த வர்க்க நலனில் செயல்படுகின்றனர் என்பது தெளிவாகிவிடும் சரி ஒரு முயற்சிதான் நீங்கள் மார்க்சியத்தை ஏற்பவர் என்றால் இதை செய்ய கடமை பட்டவர்தானே?
நமது ஆசான் மார்க்ஸ்,"இயக்கத்தைப் பார்க்கும் போதும் சென்ற காலத்தைப் பற்றிய பார்வையுடன் மட்டும் அதைப் பார்க்காமல் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையுடனும் இயக்கத்தைப் பார்க்கிறோம்".மேலும் அவரே "அரசியல் தேக்கம் உள்ள அல்லது மந்தமான, அமைதியானதாகச்" சொல்லப்படும் வளர்ச்சி நிலவும் காலப் பகுதிகளை, முன்னணி வர்க்கத்தின் உணர்வையும் பலத்தையும் போர்த்திறனையும் வளர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மற்றொருபுறம், இப்படிப் பயன்படுத்திக்கொள்ளும் வேலை அனைத்தையும் இந்த வர்க்கத்தினுடைய இயக்கத்தின் "இறுதி இலட்சியத்தை" அடைவதற்காக, "இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள" மகத்தான நாட்களில், மகத்தான பணிகளை நடைமுறையில் நிறைவேற்றி வைப்பதற்குரிய திறனை அந்த வர்க்கத்தினிடையே உண்டாக்கி வைப்பதற்காக நடத்திக் கொண்டு போக வேண்டும்" எங்கிறார்.
இங்கே ஒரு தேர்தலை பற்றி உங்களுக்கு ஒரு சரியான புரிதலையே கொடுக்க முடியாதவர்கள் என்ன வைகையில் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்?
ஆசான் மார்க்ஸ் கூறுகிறார்,"இங்கேதான் பொருளாதாரப் போராட்டத்துக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் வரப்போகும் சில பத்தாண்டுகளுக்கு வேண்டிய வேலைத் திட்டமும் போர்த்தந்திரங்களும் நமக்குக் கிடைக்கின்றன. பாட்டாளி வர்க்கம் "வரப்போகும் போருக்குத்" தனது சக்திகளைத் திரட்டிக் கொள்கிற நீண்ட காலப் பகுதி முழுவதற்கும் இவை போதும்".(மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் உதாரணத்தைப் பற்றித் தந்துள்ள பல மேற்கோள் குறிப்புகளில்).
எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர்களின் தலைவர்கள் "தீவிர முதலாளிவர்க்கத் தாருக்கும் தொழிலாளிக் கும்" இடைநிலையிலேயுள்ள ரகமாக ஆகி வருகிறார்கள்- மார்க்ஸ்
மேலும் அவரே,"தன்னிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மக்களிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மேல் நிலையிலுள்ளோரைக் கண்டு முணு முணுப்பது, கீழ்நிலையிலுள்ளோரைக் கண்டு நடு நடுங்குவது; ... உலகப் புயலைக் கண்டு பயப்படுவது; எந்த விதத்திலும் ஊக்கம் கிடையாது, எல்லா விதங்களிலும் சிந்தனைத் திருட்டு;. முன்முயற்சியே கிடையாது;. திடகாத்திரமான மக்களின் வாலிப இதயத்தின் துடிப்புகளைத் தனது சொந்தக் கிழட்டு நலன்களுக்காக வழிகாட்டித் தடம் புரளச் செய்யும் வேலை தனக்கு விதித்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளும் சாபத்தீடான கிழட்டுக் கட்டை..." (நியூ ரைனிஷ் ஜைடுங், 1848; லிடெராரிஷேர் நாக்லஸ், தொகுதி 3, பக்கம் 212ஐப் பார்க்க.)
அன்று ஆசான் சொன்னவற்றிக்கும் இங்குள்ள பலரின் ஏன் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் இவை பொருந்தாதா? பதில் சொல்லுங்கள்.
மார்க்சியம் என்பது குருங்குழுவாத தத்துவம் அல்ல ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம்தான் மார்க்சியம் என்று- லெனின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும் என்ற பகுதியில் கூறியிருப்பார்.
இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகள் தொடங்கி இங்குள்ள பல்வேறு குழுக்கள் வரை குறுங்குழுவாதத்தில் மூழ்கி கிடக்கிறது அப்படி என்னும் பொழுது அவர்கள் எங்கே உழைக்கும் ஏழை எளிய மக்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றப் போகிறார்கள்? சரி நோயை அறிந்து மருந்தை கொடுக்க வேண்டும் அல்லவா?
குறுங்குழுவாதம் பற்றி எமது புரிதல்
ஒருவரிடமுள்ள இந்த தனிவுடமை முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பில் (கம்யூனிச அமைப்பில்) செயல்படும் ஒருவர் தன்னை ஒரு சிறந்த அறிவாளியாக கருதுகிறார், தன்னைக்காட்டிலும் சிறந்த அறிவாளிகள் இந்த அமைப்பில் இல்லை என்று கருதுகிறார். தான் சிந்திப்பது மற்றும், அவரது உணர்வுகளே உண்மையானது என்றும் மற்றவர்களின் கருத்துக்கள் எல்லாம் உண்மையானது அல்ல என்று கருதுகிறார். இந்த அமைப்பில் தலைவனாக இருப்பதற்கு தான் மட்டுமே தகுதியானவன் என்று கருதுகிறார், மற்றவர்களுக்கெல்லாம் இந்த தகுதி இல்லை என்று கருதுகிறார். தான் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்டுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கருதுகிறார்.
மக்களிடமோ, தமது அமைப்பைச் சார்ந்தவர் களிடமோ இருக்கும் நல்ல அம்சங்களை பார்க்க மறுத்து மக்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இத்தகைய பண்பானது ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கக் கூடாத குறுங்குழுவாதப் பண்பாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது.
சில மார்க்சிய நூல்களை படித்தவுடன், தன்னடக்கம் உள்ளவர்களாக மாறுவதற்குப் பதிலாக அகந்தை கொண்டவர்களாக சிலர் மாறுகிறார்கள். தங்களது அறிவு அரைகுறையானது என்பதை உணராமல், தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணராமல், அதாவது கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழியை உணராமல்தான் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டு மற்றவர்களை மதிக்காமல் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள்.இத்தகைய பண்பு கொண்டவர்கள் குறுங்குழுவாதிகளே. மார்க்சியத்தால் வகைப்படுத்தப்படும் மார்க்சியவாதிகள் இல்லை.
கம்யூனிஸ்டு கட்சி சாராத மக்களோடு ஒப்பிடுகையில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மிகவும் சிறுபாண்மையினர்தான். நூறுகோடி மக்கள் இருக்கும் நாட்டில், ஒருகோடி பேர் கம்யூனிஸ்டு உறுப்பினர்களாக இருந்தாலும் மொத்த மக்கள் தொகையில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையான ஒரு சதவீதம்தான். இங்கே பலம்வாய்ந்த ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையில் நிலவுகின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையானது மிகமிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு குறைவானவர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியுமா?முடியாது என்பதை சாதாரண மக்களும் அறிவார்கள்.
இந்தச் சூழலில் மிகப்பெருவாரியான மக்களோடு இந்த சிறு குழுவினர் இணைந்து செயல்பட வேண்டியது மிகமிக அவசியம் ஆகும். மக்களோடு இணையாமல் நாம் எதையும் சாதிக்கமுடியாதல்வா. ஆனால் இந்த சிறிய குழுவிலுள்ள அகம்பாவம் பிடித்த குறுங்குழுவாதிகளால் அகந்தை மனோபாவம் கொண்டு செயல்படுவதன் மூலம் இந்த குழுக்கள் மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறார்கள்.
ஆகவே இந்த குறுங்குழுவாத சிந்தனைமுறை நம்மை மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறது, மேலும் மற்ற கம்யூனிச குழுக்களோடு தோழமையாக இருக்கவும் குழுக்கள் ஒன்றினையவும் தடையாக இருக்கிறது.
நம்மோடு இணைந்து செயல்பட விரும்புபவர்களை, இணையப்போகிறவர்களை பொறுத்தமட்டில் நமது ஒரே செயல் அவர்களோடு இணைந்து செயல்பட அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான். அவர்களை புறக்கணிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நம் தோழர்களில் ஒருசிலர் இதனை புரிந்துகொள்ளாமல், நம்மோடு இணைந்து செயல்பட முன்வருபவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். அவர்களோடு நாம் இணைந்து செயல்பட முடியாது என்று பார்க்கிறார்கள். அவர்களின் கொள்கையும் நோக்கங்களும் தவறானவை என்றும், அவர்களிடத்தில் மாற்றங்களே ஏற்படாது என்று முடிவு செய்கிறார்கள். நம்மோடு இணைந்து செயல்பட முன்வருபவர்களிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யாமலேயே அவர்களோடு இணைவது கூடாது என்று முடிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களோடு சித்தாந்தப் போராட்டத்தை நாம் நடத்துவதற்கு போதுமான சித்தாந்த அறிவு நமக்கு இல்லை என்பதையும், அத்தகைய சித்தாந்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பார்ப்பதில்லை.
ஆகவே மற்றவர்களுடன் இவர்கள் இணைவதற்கு மறுக்கிறார்கள். இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை.
இவ்வாறு பிறருடன் இணைய மறுப்பதற்கும், தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர் களிடம் மட்டுமே சேர்வோம் என்று கருதுவதற்கு எவ்விதமான நியாயத்தையும் நாம் கூற முடியாது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள்இவ்வாறு பிறருடன் இணையக் கூடாது என்று எங்காவது சொல்லியிரு க்கிறார்களா? இல்லை. மாறாக மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நம்மை நம் ஆசான்கள் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறார்கள். நாம் இணைந்து செயல்பட்டாலும் நமக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் வரும் என்றும் இந்த கருத்து முரண்பாடுகளை நமக்கிடையே கருத்துப் போராட்டங்கள் நடத்தி தோழமையான முறையிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நமது ஆசான்கள் நமக்கு வழிகாட்டி யுள்ளார்கள். அதே வேளையில் நாம் ஒன்றுபடுவதற்கு முன்பு நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று நமது ஆசான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அத்தகைய எல்லைக் கோட்டை போடுவது நமது முதன்மையான பணியாகும். அத்தகைய எல்லைக்கோட்டை நாம் போடவில்லை என்றால் அத்தகைய எல்லைக் கோட்டை போடுவது நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். அந்த பணியை ஒரு சிறிய குழுவால் செய்ய முடியவில்லை என்றால் அந்தப் பணியை பிற குழுக்களோடு இணைந்துதான் செய்ய வேண்டும்.
கம்யூனிச குழுக்களுக்கு இடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமையையும், கம்யூனிச குழுக்களுக்கும் பிறஜனநாயக வாதிகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிச குழுக்களுக்கு இடையே ஒற்றுமையின் நோக்கம் சித்தாந்த ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான நோக்கமாக இருக்கவேண்டும். கம்யூனிச குழுக்களுக்கும் பிற ஜனநாயகவாதக் குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமை என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களின் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு எதிரான நடைமுறைக்கான ஒற்றுமையாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் விலகி நிற்க வேண்டும் என்று ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியோ, சீனக் கம்யூனிஸ்டு கட்சியோ எப்போதாவதோ, எங்கேயும் தீர்மானம் போட்டதில்லை. ஆனால் சில குறுங்குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன்வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார்.
இத்தகைய குறுங்குழுவாதத்தை முறியடிப்பதற்கு விரிவான அளவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கட்சிக் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவோ. இதன் மூலம் குறுங்குழுவாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார்.
ஒரு பலம்வாய்ந்த கட்சிக்கே ஆபத்தானது இந்த குறுங்குழுவாதமாக இருக்கின்றபோது, இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களில் இந்த குறுங்குழுவாதம் எந்தளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் நீண்ட காலமாக கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு இருக்கும் சூழலில், குறுங்குழுவாதத் திற்கு இவர்கள் பழக்கப்பட்டு அது இயல்பானது என்று குறுங்குழுவாதத்தில் ஊறிப்போய்விட்டனர். அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் தனது பலத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடமுடியாமல் எதிரிகளுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு பரிதாபமான நிலையை இந்த குறுங்குழுவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகவே பாசிஸ்டுகள் மக்களின் மீது மிகக் கடுமையாக தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கொடுமைக்கு பாசிஸ்டுகள் மட்டும் காரணம் இல்லை. கம்யூனிச அமைப்புகளிலுள்ள குறுங்குழுவாதிகளும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்கள் இந்த குறுங்குழுவாதத்திலிருந்து மீளாதவரை உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை.
எல்லாவகையான குறுங்குழுவாதத்திற்கும் அகவயவாதமே (எண்ணமுதல்வாதமே) அடிப்படையாகும் என்றார் மாவோ. அதாவது தனது மனதிற்குப் பட்டதே உண்மையானது என்றும் பிறர் சொல்வதில் உண்மைகள் எதுவும் இல்லை என்று கருதும் சிந்தனைப் போக்குதான்இதற்கு காரணம் என்பதாகும். இத்தகைய சிந்தனை படைத்தவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்தும் கேட்க்கமாட்டார்கள். தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க்க வேண்டும் என்று கருதுவார்கள். புறநிலை எதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாகவே இவர்கள் பிறறோடு தோழமையாகப் பழக மாட்டார்கள். தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். இத்தகைய சிந்தனைப் போக்குள்ளவர்களால் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய தன்மை படைத்தவர்களால் ஒரு பலம்வாய்த கட்சிக்கே கேடு விளையும் என்றால், குழுக்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்கவேண்டும். இத்தகைய அகநிலைவாத, குறுங்குழுவாதத் தலைவர்களால்தான் இந்தியாவில் சிதறுண்ட குழுக்கள் நீண்டகாலமாக ஒன்றுபட முடியவில்லை.
கட்சிசாராத மக்களுடனும், ஊழியர் களுடனும் கட்சியானது இணையாமல் சீனாவில் புரட்சி சாத்தியமில்லை என்றார் மாவோ. மாவோவின் வழிகாட்டுதல்களை இந்தியாவில் குறுங்குழுவாதத் தலைவர்கள் உள்வாங்கவும் இல்லை, அதனை பின்பற்றவும் இல்லை.அதன் காரணமாக கம்யூனிஸ்டுகள் பலவாறு சிதறிக்கிடக்கின்றனர். இவர்களால் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்த முடியவில்லை என்பது நடைமுறை எதார்த்தமாகும். ஆகவே மக்களைஒன்றுபடுத்த வேண்டுமானால் சிதறிக்கிடக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டியது அவசியம். அதற்கு கம்யூனிஸ்டுகளிடம் இருக்கும் குட்டிமுதலாளிய உணர்வுகளை களைய வேண்டும், குறுங்குழுவாதத்தை அறவே கைவிட வேண்டும். இந்த முயற்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்.
இந்த சூழலில் பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியை எதிர்த்து கம்யூனிச குழுக்களும் பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நடைமுறையில் பாசிஸ்டுகளின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு மக்கள் முன்னணியை அமைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்ற மாகும். இவ்வாறு நடைமுறையில் ஒற்றுமை காணும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கென்று வெவ்வேறு கொள்கையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவது என்ற ஒரு கொள்கையில் உடன்பாடு கொண்டு ஒன்றுபடுகிறார்கள்.
அதனால் இவர்களது போராட்டமானது பாசிச ஆட்சியாளர்களின் தாக்குதலிருந்து மக்களை பாதுகாக்கப் பயன்படாலாம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு இந்த கூட்டணி போதாது. கருத்தொற்றுமையும் அதன்அடிப்படையிலான பலம் வாய்ந்த அமைப்பும், அந்த அமைப்பினால் திரட்டப்பட்ட மக்கள் திரள் அமைப்புகளும் இல்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
இந்த கூட்டணியில் இணைந்துள்ள கம்யூனிசக் குழுக்கள் ஒன்றுபட்டு கருத்துப் போராட்டங்கள் நடத்தி தங்களிடமுள்ள குறுங்குழுவாதப் பார்வையை களைந்து ஒரு ஒன்றுபட்ட கொள்கை முடிவெடுத்து ஒரு அமைப்பாக, (கட்சியாக) வேண்டும். அந்த கொள்கையின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கங்களை வர்க்க அமைப்புகளில் திரட்ட வேண்டும். அப்போதுதான் கம்யூனிச அமைப்பு பலமாக முடியும். அந்த பலத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்.
ஆகவே இந்த குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடி ஒரு ஒன்றுபட்ட கட்சி கட்டவேண்டும். அதற்கு முதற்கண் அறிவுஜீவிகளோடு விவாதிப்பதும், சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்கும் வகையில் புரியவைக்க வேண்டும்.
ஆகவே இலக்கு இணையதள இதழைப் பயன்படுத்தி தோழர்கள் உங்களது கருத்தை முன்வைத்து விவாதத்தில் பங்குகொள்ளுமாறு இலக்கின் சார்பில் தோழர்களை நாங்கள் அழைக்கிறோம்.
மேலும் பின்னர்.....
No comments:
Post a Comment