மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி இது தெரியவந்துள்ளது.

பொது தகவல் அதிகாரி மற்றும் காவல்துறை உதவி தலைவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சென்னை, இந்த பதில்களை அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களிலும் அதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 24 கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 341 கிராமங்களில் தீண்டாமை கட்டுப்பட்டிருப்பதாகவும் இந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2015 - 16 ஆண்டு முதல் 2021 - 22 வரை தமிழ்நாடு அரசால் தீண்டாமை பாகுபாடு ஒழிப்பதற்காக தனியாக எந்த நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் காவல்துறை பதிலளித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது
படக்குறிப்பு,

தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது

எஸ்.சி/எஸ்/டி வன்கொடுமை வழக்குகள் 27% அதிகரிப்பு

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்திக், `மதுரை ஆட்சியர் சமீபத்தில் கொடிக்குளம் ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மத நல்லிணக்க ஊராட்சி என அறிவித்து ரூ.10 லட்சம் பரிசு வழங்கியிருந்தார். ஆனால் அதே மதுரையில் தான் 43 கிராமங்களில் தற்போதும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக காவல்துறை அடையாளப்படுத்தியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி 2009-ம் ஆண்டிலிருந்து 2018 வரையிலான பத்து ஆண்டுகளில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் 27.3% அதிகரித்துள்ளன.காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இந்த தீண்டாமை கிராமங்களை அடையாளம் கண்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த துறைக்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம். கடந்த காலங்களில் இந்த துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரியான முன்னுரிமை வழங்க வேண்டும்

மேலும் காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இந்த கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள மதுரையில் கடந்த ஆண்டு 21 கூட்டங்களும் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 3 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

மதுரையில் 43 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுகின்றன
படக்குறிப்பு,

மதுரையில் 43 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுகின்றன

அதே நேரம் இந்த பட்டியலில் 16 கிராமங்களைக் கொண்டு ஆறாவது இடத்தில் உள்ள திருச்சியில் கடந்த ஆண்டு 50 கூட்டங்களும் இந்த ஆண்டு மாதம் வரை மட்டும் 28 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் ஒரு கூட்டம் கூட நடைபெறவில்லை.

சமூக நல்லிணக்க கிராமங்கள்

தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் சமூகநலத் துறை ஆகிய மூன்று தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்.

சமூக நல்லிணக்க கிராமங்களை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். தீண்டாமை ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகையும் அறிவிக்க வேண்டும்` என்றார்.

"தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்," என்கிறார் கார்த்திக்

பட மூலாதாரம்,KARTHICK

படக்குறிப்பு,

"தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்," என்கிறார் கார்த்திக்

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் சிந்தனை செல்வன் பிபிசி தமிழிடம் பேசுகையில், `தமிழ்நாட்டில் 445 கிராமங்களில் வன்கொடுமைகள், தீண்டாமை அதிக அளவில் நடப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பதிவானவை மட்டுமே இத்தனை கிராமங்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதிவாகாமல் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கலாம்.

மதுரை, விழுப்புரத்தில் அதிக கிராமங்களில் வன்கொடுமைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் குறைவாக இருப்பதாக புரிந்து கொள்ளக்கூடாது. இந்த மாவட்டங்களில் நிகழ்கிற குற்றங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்படுவதால் தான் இவை முன்னணியில் உள்ளன. வன்கொடுமை குற்றங்கள் பதிவு செய்யப்படாத கிராமங்களும் அதிக அளவில் இருக்கின்றன. இதனை மாநிலம் தழுவிய அளவில் முறையான ஆய்வு நடத்தி தீர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்

விழிப்புணர்வு கூட்டங்கள் பெரும்பாலும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகளை தள்ளுபடி செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு தான் செயல்படுகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மாநில அளவிலான கண்கானிப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக செய்வதில் தான் சவால் உள்ளது` என்றார்.

படக்குறிப்பு,

"பதிவானவை மட்டுமே 445 கிராமங்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதிவாகாமல் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கலாம்."

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் காவல்துறை தலைவர் செந்தாமரை கண்ணன், `இந்த பட்டியலில் உள்ள கிராமங்களில் தீண்டாமை வெளிப்படையாக கடைபிடிக்கப்படுவதாக அர்த்தம் கிடையாது. வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ள, வன்கொடுமை நிகழ்வதற்கான சாத்தியங்கள் உள்ள பதற்றமான கிராமங்கள் என வகைப்படுத்தப்பட்டவை தான் இவை.

சில கிராமங்களில் கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள் இருக்கலாம். சில கிராமங்களில் பொது இடங்களை பயன்படுத்துவது, திருவிழா நடத்துவது, இடுகாடு அமைவது எனப் பல வகையான பிரச்சனைகள் உள்ளன. அந்த இடங்களை கண்டறிந்து அங்குள்ள பதற்றமான சூழலை தணிக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்` என்றார்.

முன்னுரிமை வழங்கப்படும்

வன்கொடுமை பாதிப்பு அதிகம் உள்ள மதுரை மாவட்டத்தில் துறை சார்பில் குறைவான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக பதிலளித்தவர், `கடந்த ஆண்டு கொரோனாவால் பல்வேறு துறைகளும் முடங்கிப் போய் இருந்தன. மேலும் துறைகளில் ஆட்கள் பற்றாக்குறையினாலும் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மே மாதம் முதல் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகளும் பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

குற்றம் நிகழ்ந்த பிறகு விசாரணையை முறையாக, விரைவாக நடத்தி முடிப்பது தான் காவல் துறையின் பணி. அதே சமயம் குற்றம் நிகழாமல் தடுப்பது அனைத்து தரப்பின் கடமையாகும். காவல்துறையால் கண்கானிப்பு மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த பணிக்கு என தனி நிதி ஒதுக்கீடு இருக்காது. மாவட்ட நிர்வாகம் தான் முன்னுரிமையின் அடிப்படையில் அதை மேற்கொள்ளும்` என்றார்.

பிபிசி செய்தியே...