தோழர்களே,
மார்க்சியமும் மார்க்சியல் அல்லாத போக்குகள் பற்றி தொடர் எழுத நினைப்பதன் நொக்கம் மார்க்சியவாதிகளே, மார்க்சிய வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டே மார்க்சிய விரோத போக்கில் செயல் படுகின்றனர். அவர்களை அம்பலப்படுத்துவதோடு நமக்கான புரிதலை உருவாக்குவதே எமது நோக்கம்.
இன்று அரசு பற்றி சற்று புரிந்துக் கொள்ள முயலுவோம் ...
மார்க்சியம் எனும் உலக கண்ணோட்டம் தனிசொத்துடமையின் கோர வடிவமான சுரண்டலை ஒழித்து தனிச்சொத்தை சமூகத்தின் பொது சொத்தாக சுரண்டல் அற்ற சமூகம் படைப்பதே.
சுரண்டலற்ற சமூகத்தை படைக்க சுரண்டல் சமூகத்தை அகற்ற சொல்கிறது மார்க்சியம். இதனை நடைமுறையில் பாரிஸ் கம்யூன் படிப்பினைகளின் அடிப்படையில் ரசீய சீன மற்றும் பல நாடுகளில் ஏற்பட்ட புரட்சி சாட்சியம் பகிர்கின்றது.
மார்க்சியம் உலக தத்துவமாக பல நாடுகளில் புரட்சியின் மூலம் சாதித்துவிட்டது. அதனை வழிபற்றி நடக்க தவறியவர்கள் தோல்வி கண்டனர். மார்க்சியத்தை மறுக்கும் சிதைக்கும் திருத்தும் போக்கானது நம்மவர்களிடையே இன்று மலிந்து கிடப்பதற்கு காரணம் மார்க்சியம் தியாகத்தையும் போராட்டத்தையும் கோருகிறது; மார்க்சியம் அல்லாதவை சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம் ஆளும் வர்க்கத்தோடு இணக்கமாக கூடிவாழ்ந்து சமரசமாக அடிமயாக வாழ சொல்கிறது.
புரட்சிக்கான பாதை என்பது தியாகத்தையும் உயரிய இலட்சியத்தையும் கொண்டது. ஆனால் சீர்திருத்தவாதம் திருத்தல்வாதம் ஆளும் வர்க்கதிடம் அண்டி பிழைக்கும் சமரச பாதை கொண்டது.
நம் சமூகத்தில் நடைமுறையில் புரிந்துக் கொள்ள முயலுவோம்!
இன்று தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைபணியாளர்கள் செவிலியர் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் இன்று இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அரசான போலிஸ் அவர்களை அச்சுறுத்துகிறது. ஆக அரசை புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.
பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதி தந்து மக்களின் ஓட்டை வாங்கி அரசாங்கத்தை அமைத்த பின்னர் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உழைக்கும் மக்களின் சம்பள உயர்வை வழங்காமல் வஞ்சிக்கும் இதே அரசினால்தான் கோடிக்கோடியாய் சில தனிநபர்களான முதலாளிகளுக்கு வாரி வழங்குகின்றனர் அது எப்படி?
ஓட்டுவாங்க பல்லிளித்து வரும் எல்லா ஓட்டு கட்சிகள் பல முன்னனி பெயரில் இணைந்துள்ள கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை கோட்பாடற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாய் உழைக்கும் மக்களை ஏய்து முதலாளிகளுக்கானவர்களே இங்குள்ள எல்லா ஓட்டு கட்சிகளும் உள்ளதை காணலாம்!
உழைக்கும் மக்கள் அவர்களின் எந்த பிரசினைக்கு போராடினாலும், போலிஸின் குண்டாந்தடிதான் முதலில் சட்டம் ஒருங்கு என்ற பெயரில் வருகிறது, ஆனால் சம்பந்தபட்ட துறைசார்ந்தவர்கள் வருவதில்லை; தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வருவதில்லை! ஆனால் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஓடோடி வருகின்றனர் ஏன்? அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிகாரம் இவர்களுக்கு. அதேபோல் உத்தரவு போடும் போலிஸ் அதிகாரிகளும்; நீதி வழங்கும் நீதிபதிகளும்; சிறை கொட்டடியின் அதிகாரிகளும் மக்களினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களா!?உழைக்கும் மக்களை தண்டிக்கும் உரிமை எப்படி அவர்களுக்கு? உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள் மக்களின் அன்றாட வாழ்வை ஆட்டிப்படைப்பதாக உள்ளது. இந்த அரசு அதிகாரம் படைதவர்கள்தான் இந்த தனிஉடமையை பாதுகாக்கும் பணமுதலைகளின் காவல் தெய்வங்கள். உழைக்கும் வர்க்கத்தின் தேவை அறியாத சுரண்டும் முதலாளிகளின் தேவை அறிந்து செயல்புரிபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகளே. சொத்துடைய வர்க்கத்தின் காவலர்களே. ஆக அரசும் அரசாங்கமும் வர்க்க அடிப்படையில் ஆளும் வர்க்கமாய் உள்ளவற்றின் நலன் சார்ந்தவையே!
ஆகவே அரசு என்றால் என்ன? அதன் இயக்கத்தையும் புரிந்துக் கொள்வோம்.
இங்கே உள்ள அட்டை படம் வாயிலாக அரசு என்பது என்ன என்பதனை புரிந்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதாவாது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் போலிஸ், இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை! அதன் செயல்பாட்டின் முழுமையை புரிந்துக் கொள்ளாமையே அதன் சூட்சமம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் ஆளூமையே தொடர்கிறது!
அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ்)ஏன் எதற்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து சுருக்கமாக அறிவோம்.
வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன. ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன் முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசு தேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்க தொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர். இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும். அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும்; அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள், பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப்போட்டு தனியுடைமையாக்குகிறான். இயற்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது.
இரண்டும் நேர் எதிரான சமூக பிரிவு. அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோன்றின... (இது ஒரு நீண்டகால வளர்ச்சியில் தோன்றியது).
இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இந்த அரசு.
இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு”-என்றார் லெனின்.
“அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி”- என்றார் லெனின்.
ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமூகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது.
“ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு”...
இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம், “டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா?”, இதை ஜனநாயக நாடு எனலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்!
இதைவேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.
இன்றைய ஒன்றிய அரசின் செயலை கண்மூடி கண்டுக் கொள்ளாமல் இருக்கும் ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். நேரடியாக பல லட்சம் கோடிகள் காணமல் போவதும் அவை பெரும்முதலாளிகள் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதும் அரசாங்கமே மனம் உவந்து அவர்களின் கடனை ரத்து செய்வது ஏழை உழைக்கும் மீது உழைப்பால் சேர்க்கும் ஒரு ஒரு ரூபாயின் மீதும் வரி போட்டு சுரண்டுவதும் எதற்கு யாரின் நலனுக்கு? புரிந்துக் கொண்டுள்ளீர்தானே?
எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ?
எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோ? எந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிறுபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோ?
அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது. உழைக்கும் மக்கள் போராடினாலே அவர்களை அடக்க ஓடோடி வரும் போலிஸ் மற்றும் இராணுவம் பிரிட்டனில்தான் முதன்முதலில் தோன்றியது17 மற்றும் 18 நூற்றாண்டுகளில். இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது. (மூன்றாவது வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லை) இன்று போலீஸ் இல்லாத நாடே இல்லை. அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது? 18 ஆம் நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில் இங்கிலாந்தில், சர் ரோபேர்ட் பீல் உள்நாட்டு மந்திரியாக இருந்தபோது தோன்றியது. ஒரு பொலீஸ் படையை தோற்றிவைப்பதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அவரேயாகும்.
நாம் இன்று காணும் அரசானது மிக அண்மை காலதியதே; நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது.
அடிமை சமுக காலக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும், பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான நிலபிரபுத்துவத்திற்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் தோன்றியது இருக்கிறது.
இந்திய அதிகார வர்க்கத்தின் சில உதாரணங்களுடன் விளக்கலாம். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இராணுவ அதிகாரியான சிலர் பின்னர் இராணுவ ஜெனரல்களாகவும், முன்னர் ICS லும் பின்னர் IAS ம் பதவி வைத்தவர்கள் நிரந்தரமாக எப்படி தொடர்கின்றனர். அதாவது நமது நாட்டில் ஐந்து வருட முக்கியமான மந்திரிப் பதவிக் காலத்தில் செயலாளராக இருந்தவர் ஆட்சி மாறினாலும் அடுத்த ஆட்சியிலும் நிரந்தர செயலாளராக எப்படி தொடர முடிகிறது?
ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ, போலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் அதே எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச் சேவை செய்கின்றனர். அந்த அதிகாரம் படைத்த மனிதர்கள்தான் உண்மையில் ஆட்சி செய்கிறார்கள். எந்த அரசாங்கம் என்றாலும் ஆட்சி என்னவோ இந்த அரசு இயந்திரம்தான் நடத்துகிறது.
இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசு இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், போலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது.
அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக உள்ளார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கபடாத, மக்களுக்கு கட்டுப்படாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் போலீஸ், இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை ஏன்?. அவைதான் மக்கள் மீது அதிகாரம் செழுத்தும் அரசே ஆகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் அரசாங்கமாகும். இந்த அரசாங்கம்தான் சட்டங்களை போடுகிறது. இந்த சட்டங்களை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகள் அடங்கிய அரசு நிர்வாகம் ஆகும். இந்த அரசுதான் ஆயுதம்தாங்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்த அரசுதான் உழைக்கும் மக்களை வன்முறைகொண்டு அடக்கு கிறது. போலீஸ்தான் போராடும் மக்களை தடிகொண்டு தாக்குகிறது, துப்பாக்கியால் சுடுகிறது. போராடும் மக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. நீதிமன்றங்கள்தான் போராடிய மக்களை குற்றவாளி என்று சொல்லி சிறைக்கு அனுப்புகிறது. சிறைச்சாலையில்தான் சிறைத்துறை அதிகாரிகள்தான் சிறைக்குள் போராடிய மக்களை கொடுமைக்குள்ளாக்குகிறது. மக்களின் நலன்காக்கும் அரசுத்துறைகள் யாவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால் அதனை மக்கள் தட்டிக்கேட்டால் அவர்கள் போலீசைக்கொண்டு மக்களை தாக்குகிறார்கள்.
இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை, ஆனால் செல்வந்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். மக்களை இவர்கள் கால்தூசுக்கு கூட மதிப்பதில்லை. இதற்கு காரணம் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. இவர்களை மக்களே தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் மக்களுக்கு இருக்குமானால் இந்த அரசு அதிகாரிகள் மக்களுக்கு எதிராக நடக்கமாட்டார்கள். ஒரு கம்யூன் வடிவத்திலான பாட்டாளிகளின் அரசில்தான் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை செயல்படுத்தப்படும். ஆகவே அரசு அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யவும் மக்களுக்கு அதிகாரம் கொண்ட கம்யூன் ஆட்சிமுறைதான் உழைக்கும் மக்களுக்குத் தேவை.
இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் எல்லா கட்சிகளின் ஆட்சியிலும் நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்கின்ற நிறுவனம்தான் அரசு அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்க அரசு என்ற நிறுவனமாகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை யாராலும் பறிக்க முடியாது. ஒரு கட்சியிடமுள்ள ஆட்சி அதிகாரத்தைக்கூட ஒரு தேர்தலில் பறித்துவிட்டு வேறு ஒரு கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை தேர்தல்மூலம் மக்களால் கொடுக்கமுடியும். ஆனால் எப்போதும் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை மக்களால் பறிக்கவும் முடியாது வேறு ஒருவருக்கு அதிகாரத்தை கொடுக்கவும் முடியாது. ஆகவேதான் இங்கே அரசு அதிகாரிகள் அவர்கள் நினைத்ததை யெல்லாம் செய்துகொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் ) ஏன் எதற்கு எப்போது தோன்றியது? என்பதை நாம் அறிந்துகொண்டிருப்பீர் ஆக உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்கும் என்பதனை பாரீஸ் கம்யூன் நமக்கு அளித்துள்ளது அவைதான் உழைக்கும் மக்களுக்கான அரசு வடிவமாக இருக்க முடியும். அதனைதான் லெனின் அவர்களும் ஏப்ரல் அறிக்கையில் தெளிவுப்படுத்தி இருப்பார்.
கம்யூனிஸ்டுகள் சுரண்டல் அற்ற சமூகத்தை விரும்புவர்கள். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத.... எல்லாச் செல்வமும் எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையில்... ஒருவர் மீது எல்லோரும், எல்லோர் மீது ஒருவரும் அக்கறை செலுத்தக் கூடிய... சமூகம் படைப்பதே இலட்சியமாக கொண்டவர்கள். இதனை அடைய இந்த அரசு கண்ணை மூடியிருக்குமா?
மக்களின் வறுமை, வேலையில்லா கொடுமைகளுக்கு போராடினாலே குண்டாந்தடியை காண்பிப்போர் அவர்களை இல்லாதொழிக்க சம்மதிப்பார்களா? மலைப்போல் மூலதனத்தையும் அதிகார பலத்தையும் கொண்டுள்ளோரை சிறுதுளியே ஆனால் கடல் அளவுள்ள பெருத்த எண்ணிக்கையில் உள்ள உழைப்பாளிகள் தங்களின் விடுதலைக்கு இவர்களை இல்லாதொழிக்க ரசிய சீன படிப்பினைகள் வேண்டும் என்பதே... அவை நீண்ட பணிதான், இருந்தும் அவையின்றி உழைக்கும் மக்கள் இந்த அரசால் பயன் பெறா!
சோசலிசம் மற்றும் கம்யூனிச சமுதாயத்தை அடைவதே கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் ஆகும். இந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அதற்கு தடையாக இருந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி வீழ்த்தி சோசலிசத்தைப் படைத்தனர். எனினும் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான எதிரிகள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இப்போதும் நீடிக்கின்றதை நாம் பார்க்கிறோம். இந்த பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகவே இன்றும் உள்ளது. அது அவ்வளவு எளியது அல்ல. கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் மக்களும் வாழ்வின் ஒவ்வொரு அரங்கிலும் இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி இந்த எதிரிகளை அடியோடு வீழ்த்தி சவக்குளிக்குள் புதைக்க வேண்டும். அப்போதுதான் நாம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் கொண்டுவர முடியும். அது ஒரு நீண்ட நெடிய கடினமான போராட்டத்தின் மூலமே உழைக்கும் மக்கள் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும். இத்தகைய நீண்ட நெடிய போராட்டமின்றி கம்யூனிசத்தை எளிதாக அடையவே முடியாது. இத்தகைய நீண்ட போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்தான் சிறந்த கம்யூனிஸ்டாக முடியும். ஆனால் சில பேர்வழிகள் உடனடியாக தங்களின் வாழ்வியல் பிரச்சனைகள் தீரவில்லை என்பதால் சோர்வடைந்து கம்யூனிச கொள்கையின் மீதே நம்பிக்கை இழந்து உடனடியாகச் சில சலுகைகள் வழங்குபவர்களை நம்பி அவர்கள் பின்சென்று அவர்களின் துரோகத்துக்குப் பலியாகிறார்கள். உதாரணமாக மக்களுக்கு திமுக நன்மை செய்யும் என்று நம்பி அவர்களுக்கு ஓட்டுப்போட்டு பதவி கொடுத்தனர்.
ஆனால் திமுக பதவிக்கு வந்த பின்பு சாம்சங் போராட்டம், துப்புறவுத் தொழிலாளர் போராட்டங்களில் உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்ததை நாம் பார்க்கிறோம். சோசலிசம் மற்றும் கம்யூனிசம் என்பது கம்யூனிஸ்டுகளின் கற்பனையான கண்டுபிடிப்பு என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் மனிதகுல வரலாற்றைப் பார்த்தால் வர்க்கங்கள் தோன்றியதிலிருந்து வரலாற்றில் பல போராட்டங்களும், போர்களும் நடந்துள்ளது. ஒவ்வொரு போராட்டத்தின் முடிவிலும் உழைக்கும் மக்கள் தோல்வியடைந்தாலும் சமுதாயத்தில் பலவகையான மாற்றங்கள் நடந்துள்ளதை நாம் காணலாம். இத்தகைய வர்க்கப் போராட்டங்கள் அனைத்தும் இறுதியாக வர்க்கங்களை சமுதாயத்திலிருந்து ஒழித்துக்கட்டுவதிலேயே முடிவுறும். அதாவது சமுதாயம் கம்யூனிச சமுதாயமாக மாறுவதிலேயே முடியும். இது சமூக வளர்ச்சி விதியின் தவிர்க்க இயலாததாகும்.
பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோற்றுவிக்கப்படுவது, போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது, அவற்றுக்கு ஏற்பாடு செய்வது, அவற்றை வழி நடத்துவது என இவை அனைத்துமே சமூக வளர்ச்சியின் விதிகளுக்குப் பொருத்தமான நிகழ்ச்சிப் போக்குகள்தான்.
அரசை புரிந்துக் கொள்ளும் நோக்கம் கொண்டதே இந்தப் பகுதி
தொடரும்...