அரசு பற்றிய விவாதங்களில் ஒரு தவறான விவாதங்கள் நடத்தப்படுகின்றன அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது, அது பற்றி எங்கெல்ஸ் எச்சரித்துள்ளார். அரசு, அதாவது பொதுவாக அரசை ஒழிப்பது என்பது ஜனநாயகத்தை ஒழிப்பது என்பதை குறிப்பதாகும் என்றார் எங்கெல்ஸ். அரசு உலர்ந்து உதிர்வது என்றால் ஜனநாயகம் உலர்ந்து உதிர்வது என்றாகும் என்றார். இதன் பொருள் என்னவென்றால் பொதுவாகவே எந்த வகையான அரசாக இருந்தாலும், அதாவது முதலாளிகளுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக இருந்தாலும், பாட்டாளி வர்க்கத்துக்கு (உழைக்கும் மக்களுக்கு) சேவை செய்யக்கூடிய அரசாக இருந்தாலும், அந்த அரசனது ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களுக்கு தான் சேவை செய்கிறது; அதற்கு எதிரான வர்க்கங்களுக்கு துரோகம் செய்கிறது அல்லது கெடுதல் செய்கிறது. இதுதான் அரசு பற்றிய மார்க்சியத்தின் விளக்கம். உலகத்தில் அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு என்பது எங்கேயும்கிடையாது. இந்த அரசு முறையில், மக்களில் ஒரு பிரிவினர் பிற பிரிவினர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் அதாவது கட்டுப்பட வேண்டும். இதுதான் எல்லா அரசுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் கோட்பாடாகும். ஆனால் முதலாளித்துவ அரசுக்கும் சோசலிச அரசுக்கும் உள்ள வேறுபாடு,எந்த வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கு எந்த வர்க்கங்கள் கட்டுப்பட வேண்டும் அல்லது கீழ்படிய வேண்டும் என்ற வேறுபாட்டில் தான் இந்த அரசுமுறைகள் அடங்கியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையில் சிறுபான்மையினராக இருக்கும் முதலாளிகளுக்கு பெருவாரியாக இருக்கும்உழைக்கும் மக்கள் கீழ்படிய வேண்டும். இதற்கு நேர் மாறாக பாட்டாளிவர்க்க அரசில் சிறுபான்மையாக இருக்கிற முதலாளிகள் பெருவாரியான இருக்கக்கூடிய உழைக்கும் மக்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். இத்தகைக்குகீழ்ப்படிதல் முறையைத்தான் ஜனநாயகம் என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினர் கீழ்படிய வேண்டும் அதுதான் ஜனநாயகம். ஆனால் சமுதாயத்தில் சுரண்டுபவர்கள் சிலராகவும் சுரண்டப்படுபவர்கள் பலராகவும் இருக்கும் நிலை மாறி அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரே நிலையில் உள்ளவர்களாக மாறும் பொழுது அங்கே சிறுபான்மை என்றும் பெரும்பான்மை என்றும் இருக்க முடியாது அதனைத் தான் கம்யூனிச சமுதாயம் என்று சொல்கிறோம். கம்யூனிச சமுதாயத்தில் சிறுபான்மையினர் என்ற ஒரு பிரிவினரே இல்லாத நிலையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட வேண்டும் அல்லது கீழ்படிய வேண்டும் என்ற நிலையே இருக்காது. அதன் காரணமாக கம்யூனிச சமுதாயத்தில் ஜனநாயகம் என்பது தேவையற்றதாக மாறிவிடுகிறது, அதாவது கம்யூனிச சமுதாயத்தில் மக்களை நிர்வகிக்கக்கூடிய அரசு நிறுவனம் எப்படி தேவையில்லையோ; அது போலவே ஜனநாயகமும் தேவையில்லாது போய் விடுகிறது. ஆகவே தான் இங்கே எங்கெல்ஸ் பொதுவான அரசு ஒழியும் பொழுது ஜனநாயகமும் ஒழிந்து விடும் என்றும், பொதுவாக அரசு உலர்ந்து உதிரும் பொழுது ஜனநாயகமும் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்று சொல்கிறார். இந்த கம்யூனிச சமுதாயத்தையும் சோசலிச சமுதாயத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பக் கூடாது. கம்யூனிச சமுதாயத்தில் அரசு தேவையில்லை, ஜனநாயகமும் தேவையில்லை, சர்வாதிகாரமும் தேவையில்லை, பலாத்காரமான அரசு நிறுவனங்களும் தேவையில்லை, ஆனால் சோசலிச சமுதாயத்தில் அந்த சமுதாயத்தின் நோக்கம் சமுதாயத்தை வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயமாக வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, அதற்காக பாடுபடும் பொழுது முதலாளி வர்க்கமானது அதனை எதிர்க்கும் அந்த முதலாளி வர்க்கத்தை அடக்குவதற்கும் மக்களிடையே கம்யூனிச சமுதாயத்தின் அவசியத்தை புரிய வைப்பதற்கும் அதற்கான கல்வி இயக்கத்தை நடத்துவதற்கும் சோசலிச அரசுக்கு பல நிறுவனங்கள் தேவைப்படுகிறது, ஆகவே சோசலிச சமுதாயத்தில் அரசும் கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதற்கு அதற்கான தடையை அடக்குவதற்கும் கம்யூனிச சமுதாய சிந்தனை முறையையும் ஒழுங்கமைப்பையும் மக்களுக்கு போதித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அவசியம் இருக்கிறது அந்த அவசியத்தை நிறைவேற்றுவதற்காகவே சோசலிச சமுதாயத்தில் பாட்டாளிகளுக்கு அரசு தேவைப்படுகிறது.
இந்த அரசு பாட்டாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்கவேண்டியுள்ளது. மேலும் முதலாளிகளை சர்வாதிகார முறையில்அடக்க வேண்டியுள்ளது. ஆகவே சோசலிச அரசில் ஜனநாயகம் ஒழியாது நீடிக்கவே செய்யும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஒழிந்து வர்க்கங்கள் இல்லாத நிலையிலேயே சோசலிச அரசும் ஜனநாயகமும் தேவையற்றதாக மாறி ஒழிந்துவிடும் அதாவது உலர்ந்து உதிர்ந்துவிடும்.
கம்யூனிச லட்சியம் தான் முக்கியம். அந்த லட்சியத்திற்காக நாம் பாடுபடுகிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம். இதனை ஒவ்வொரு வினாடியும் நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்தகைய சுயபரிசோதனை செய்து கொள்ள தவறினால், நமது வழி கம்யூனிசத்தை நோக்கி இருப்பதற்கு வாய்ப்பு ரொம்ப குறைவு. மாறாக நாம் கம்யூனிச வழியிலிருந்து திசைவிலகி முதலாளித்துவ பாதையில் சென்று மக்களுக்கு துரோகம்தான் செய்வோம். இதற்கு உதாரணம்தான் குருஷேவ் கும்பலும் டெங்கும்பலும் ஆகும். ஆகவே நாம் மார்க்சையும் லெனின் மாவோவையும் பின்பற்ற போகிறோமா? அல்லது துரோகிகளான டிராட்ஸ்கி, குருஷேவ், டெங் கும்பலை பின்பற்றப் போகிறோமா? என்பது நம்முன் உள்ள கேள்வியாகும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோவின் போதனைகளை பின்பற்றுபவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஆவார்கள். ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மார்க்சையும் எங்கெலெசையும் அவர்களது போதனைகளை பின்பற்றினார்கள், வெற்றி பெற்றார்கள். இதனைத்தான் நாம் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்சிய தத்துவம் ஜெர்மானியர்களின் தத்துவம் என்று அதனை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்கவில்லை.
அரசு பற்றிய வழக்கமான வாக்குவாதங்களில் மீண்டும் மீண்டும் ஒரு தவறு இழைக்கப்படுகிறது. இந்த தவறு குறித்து எங்கெல்ஸ் எச்சரிக்கை செய்தார்; மேலே போகிற போக்கில் இதனை நாம் சுட்டிக் காட்டி உள்ளோம். அரசின் ஒழிப்பு ஜனநாயகத்தின் ஒழிப்பை குறிப்பதாகும். அரசு உலர்ந்து உதிர்வது ஜனநாயகம் உலர்ந்து உதிர்வதையும் குறிப்பதாகும் என்பது மீண்டும் மறக்கப்பட்டுவிடுவதுதான் இந்தத் தவறு.
இவ்வாறு சொல்வது மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் மிக வினோதமாகவும், புரிந்து கொள்ள முடியாததாகும் தோன்றுகிறது. ஏன், சிறுபான்மையோர் பெரும்பான்மையானவருக்கு கீழ்ப்படியும் கோட்பாடு கடைப்பிடிக்கப்படாத ஒரு சமுதாய அமைப்பு உதிக்கப் போவதாய் எதிர்பார்க்கிறோம் என்கின்ற சந்தேகம் கூட சிலருக்கு நம் மீது ஏழலாம். - ஏனெனில், இந்தக் கோட்பாட்டை அங்கீகரிப்பது தானே ஜனநாயகம். இல்லை, ஜனநாயகமும், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்கு கீழ்ப்படிதலும் ஒன்றல்ல. சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்கு கீழ்ப்படிதலை அங்கீகரிக்கும் அரசுதான் ஜனநாயகம் எனப்படுவது; அதாவது, ஒரு வர்க்கம் பிறிதொன்றின்மீது, மக்கள் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றின் மீது, முறைப்படி பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கான ஒழுங்கமைப்பே ஜனநாயகம் எனப்படுவது.
அரசை ஒழிப்பதே, அதாவது ஒழுங்கமைந்த முறைப்படியான எல்லா பலாத்காரத்தையும், பொதுவில் மக்களுக்கு எதிராய்ப் பிரயோகிக்கப்படும் எல்லா பலாத்காரத்தையும் ஒழிப்பதே நமது இறுதி இலட்சியம். சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்ப்படியும் கோட்பாடு அனுசரிக்கப்படாத ஒரு சமுதாய அமைப்பு உதிக்கப் போவதாய் நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் சோசிலிசத்துக்காகப் பாடுபடுகையில், இது கம்யூனிசமாய் வளர்ச்சியுறும், ஆகவே பொதுவில் மக்களுக்கு எதிரான பலாத்காரத்தின் தேவையும், ஒரு மனிதர் பிறிதொருவருக்கும், மக்களின் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றுக்கும் கீழ்ப்படியும் தேவையும் அறவே மறைந்து போய்விடும். ஏனெனில் பலாத்காரம் இல்லாமலே கீழ்ப்படிதல் இல்லாமலே மக்கள் சமுதாய வாழ்வின் சர்வ சாதாரண நெறிமுறைகளை அனுசரித்து நடக்கப் பழக்கப்பட்டு விடுவார்கள் என்பதில் எங்களுக்கு ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
வரும் இலக்கு இதழுக்கு எழுதப்பட்டுள்ள கட்டுரை பகுதியிலிருந்து...

No comments:
Post a Comment