ரஷ்யாவில் நரோடிஸமும், (மக்கள் வாதம்) மார்க்சியமும் -பிளக்கனோவும், அவருடைய “தொழிலாளர் விடுதலைக் குழுவும்”-நரோடிஸத்தை எதிர்த்து பிளக்கனோவின் போராட்டம் - ரஷ்யாவில்மார்க்சியம் பரவுதல்.
மார்க்சிய குழுக்கள் தோன்றுவதற்கு முன்பு, நரோத்தினிக் என்பவரால் ரஷ்யாவில் புரட்சி வேலைகள் செய்யப்பட்டு வந்தன. இவர்கள்மார்க்சியத்தின் விரோதிகள்.
1883 ஆம் ஆண்டில் தான் ரஷ்யாவில் முதன்முதலில் மார்க்சிஸ்ட் குழு ஒன்று தோன்றிற்று. இதுதான் ஜி.வி பிளக்கநோவ் என்பவரால் நிறுவப்பட்ட “தொழிலாளர் விடுதலை குழு” புரட்சி காரியங்களில் ஈடுபட்டதற்காக அவரை ஜார் அரசாங்கம் கொடுமைப்படுத்திற்று. அதன் பிடியில் இருந்து தப்பி அவர் ஜெனிவா நகரத்திற்கு ஓடினார். அங்கிருக்கும் போதுதான் இந்த முதல் மார்க்சிய குழுவை அவர் அமைத்தார்.
அதற்கு முன் பிளக்கனோவ் ஒரு நரோத்தினிக்காகவே இருந்தார். ஆனால் வெளிநாட்டில் மார்க்சியத்தை கற்றதன் பலனாய் அவர் நரோட்டிசத்தை விட்டுவிட்டார், மார்க்சிய கொள்கையை பரப்பினார். ரஷ்யாவில் மார்க்சியத்தை பரப்புவதற்கு “தொழிலாளர் விடுதலை குழு” பெரிதும் பணியாற்றியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய நூல்களை அவர்கள் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தார்கள். கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதனமும், கற்பனையாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் முதலிய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றை வெளிநாடுகளிலே அச்சிட்டார்கள், இரகசியமாக ரஷ்யாவிற்கு கொண்டுவந்து பரப்பினார்கள். பிளாக்கநோவ், ஜாஸூலிக், அக்சல்ராட் முதலிய அக்குழுவின் சிறப்பு உறுப்பினர்கள், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் போதனைகளை, - விஞ்ஞான சோசலிசத்தின் கருத்துக்களை -விளக்கி பல நூல்களை எழுதினார்கள்.
விளக்கம்:- ரஷ்யாவில் மார்க்சியம் பரவுவதற்கு முன்பு, அங்கு நரோத்தினியம் என்ற அமைப்புதான் புரட்சிக்கான வேலைகள் செய்து வந்தன. அதன் பின்பு, மார்க்சியம் ரஷ்யாவில் பரவும் பொழுது இந்த நரோத்தினிக்குகள் மார்க்சியத்தை எதிர்த்து மார்க்சிய விரோதிகளாகவே இருந்தார்கள். 1883 ஆம் ஆண்டில் தான் ரஷ்யாவில் முதன்முதலாக மார்க்சிய குழுக்கள் உருவாகின. இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் தொழிலாளர் விடுதலைக் குழுவாகும். இந்தக் குழுவை உருவாக்கியவர் பிளாக்கநோவ் என்பவர் ஆவார்.
பிளக்கனோவ் புரட்சிகர வேலைகள் செய்தார் என்பதற்காக பிளாக்கநோவை ஜார் அரசாங்கம் கொடுமைப்படுத்திற்று. ஆகவே அவர் ரஷ்யாவில் இருந்து வெளியேறி ஜெனிவா நகரத்திற்கு சென்றார். இதற்கு முன்பு பிளாக்கநோவ் ஒரு நரோத்தினுக்காகவே இருந்தார், ஆனால் அவர் வெளிநாட்டில் மார்க்சியத்தை படித்துக் கற்றுக் கொண்ட பின்பு நரோத்தினிகளின் அரசியல் மற்றும் நடைமுறை தவறு என்பதை உணர்ந்தார்; அதன் பின்பு மார்க்சியத்தை ரஷ்யாவில் தொழிலாளர்களிடம் பரப்ப வேண்டும் என்று முடிவு செய்தார்.
அவர் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய நூல்களை ரசிய மொழியில் மொழிபெயர்த்து ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதனை பரப்பினார். அந்த நூல்களை வெளிநாட்டிலே அச்சிட்டு ரஷ்யாவிற்குள் ரகசியமாக கடத்தி வந்து தொழிலாளர்களுக்கு போதித்து தொழிலாளர்களிடம் மார்க்சிய சிந்தனையை வளர்த்தார். இதுதான் ரஷ்யாவில் மார்க்சியம் வளர்க்கப்பட்டு, ரஷ்யாவில் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி உருவாவதற்கான அடிப்படையாக அமைந்தது. மார்க்சிய ஆசான்களின் போதனைகளை தொழிலாளர்களிடம் கொண்டுசென்று அவர்களிடம் சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காக தொழிலாளர்கள் பாடுபட வேண்டும் என்ற உணர்வை வளர்த்துத்தான் ரஷ்யாவில் தொழிலாளர்களுக்கான கட்சி கட்டப்பட்டது என்பது வரலாறு.
இந்த ரஷ்ய வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டும் என்றால் கம்யூனிச ஆசான்களுடைய கொள்கைகள் கோட்பாடுகளை தொழிலாளி வர்க்கத்திடம் பரப்பி சோசலிசத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தி அதற்காக பாடுபட வேண்டும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி அத்தகைய உணர்வு கொண்டவர்களை கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதுதான் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் அடிப்படையான பாடமாகும். மார்க்சிய அடிப்படையை தொழிலாளர்கள் புரிந்து கொள்ளாமல் தொழிலாளர்களை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புக்குள் நாம் கொண்டுவர முடியாது, அப்படியே கொண்டு வந்தாலும் அந்த தொழிலாளர்களைக் கொண்டு சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றுவதற்கு முடியாது. ரஷ்யாவில் மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர்களுடைய கருத்துக்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கு தடை இருந்தது, அந்தத் தடையை மீறி ரகசியமாக மார்க்சிய ஆசான்களது நூல்களை மொழி பெயர்த்து தொழிலாளர்களிடம் கொண்டு சேர்த்த வேலையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்தார்கள். ஆனால் இங்கு இந்தியாவில் மார்க்சிய ஆசான்களுடைய நூல்களை வெளியிடுவதும் படிப்பதற்கும் எவ்விதமான தடையும் இல்லாத நிலையில் அந்த நூல்களை தொழிலாளர்களுக்கும் படிப்பாளிகளுக்கும் பொதுவாக உழைக்கும் மக்களுக்கும் கொண்டு சென்று அதனை விளக்கி மக்களிடம் சோசலிச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையை எந்த கம்யூனிஸ்ட் அமைப்பும் செய்யாமல் இருப்பது ரஷ்ய கம்யூனிஸ்களிடமிருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே சோசலிசத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவரும் மார்க்சிய ஆசான்களது நூல்களை கற்றுக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும்..
பிளக்கநோவ் மிகச்சிறந்த அறிவாளி எனினும் அவர் மார்க்சிய ஆசான்களது நூல்களை கற்றுக்கொண்டதன் மூலமே அவரால் நரோத்திக்குகளின் அரசியல் கொள்கையும் நடைமுறையும் தவறு என்பதையும் மார்க்சிய அரசியலும் நடைமுறையும்தான் மக்களின் விடுதலைக்கான ஒரே சரியான கொள்கை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது என்றால் நம்நாட்டிலுள்ள சாதாரணமான தொழிலாளர்களால் எந்த அரசியல் சரியானது என்பதை மார்க்சியத்தை கற்றுக்கொள்ளாமல் புரிந்துகொள்ள முடியுமா? முடியாது அல்லவா?.
ஆகவே ரஷ்யகம்யூனிஸ்டுகள் செய்தது போல மார்க்சிய ஆசான்களது போதனைகளைஉழைக்கும் மக்களிடம் கொண்டுசென்று அதனை போதிப்பதுதான் இங்குள்ள கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை என்பதை ரஷ்ய கம்யூனிஸ்டுகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
கற்பனை உலகில் உலாவி கனவு காண்கிறவர்கள் புதிதாகக் கற்பனை செய்து கண்டுபிடித்த ஒரு விஷயம் அல்ல சோசலிசம் என்பது; இதற்கு மாறாக, அது நவீன முதலாளித்து சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவு என்று முதன் முதலில்கனவு காணும் சோசலிஸ்களுடைய அபிப்பிராயத்துக்கு (கருத்துக்களுக்கு) நேர்மாறாக - உலகிற்கு விளக்கம் கூறியவர்கள், பாட்டாளி வர்க்கத்தின் பெருமைமிக்க பேராசன்களான மார்க்சும் எங்கெல்சும் ஆவர். எப்படி பண்ணை அடிமைத்தனம் வீழ்ச்சி அடைந்ததோ, அதுபோல், முதலாளித்துவ அமைப்பு முறையும் வீழ்ச்சி அடையும் என்று இவர்கள் விளக்கிக் காட்டினார்கள். முதலாளித்துவம் தன்னை புதைப்பதற்கு குழிதோண்டக் கூடியவர்களை, பாட்டாளி உருவத்தில் தானே படைக்கிறது என்று எடுத்துக்காட்டினார்கள். பாட்டாளி வர்க்கப் போராட்டம் ஒன்றுதான் - பூர்ஷ்வாக்களை (முதலாளிகளை) முறியடித்து பாட்டாளி வர்க்கம் அடையும் வெற்றி ஒன்றுதான் - முதலாளித்துவத்தின் பிடியிலிருந்தும் சுரண்டலில் இருந்தும் மனித சமூக விடுதலை செய்யும் என்று அவர்கள் தெளிவாக காட்டினார்கள்.
விளக்கம்:- “எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்று ஒரு கவிஞர் பாடினார். நம் அனைவருக்கும் நம்முடைய அனைத்து தேவைகளும் கிடைக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அதனை அடைவதற்கு நாம் கனவு காண்கின்றோம். ஆனால் நமது கனவுகள் நீண்ட நெடுங்காலம் ஆன பின்பும், நமது கனவுகள் கனவுகளாகவே இருக்கிறது. நடைமுறையில் நமக்குத் தேவையான பொருட்கள் நமக்கு கிடைக்கவில்லை. நாம் வறுமையிலும் நோயிலுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைப் போலவே பல ஆண்டுகளுக்கு முன்னால், ரஷ்யாவில் ஏழை எளிய மக்கள் தங்கள் அனைவருக்கும் தேவையானவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்கள், அதற்காக கனவு கண்டார்கள். அந்த மக்களுக்காக பாடுபட்ட சோசலிஸ்களும் அதனை அடைவதற்கு சரியான வழியை புரிந்து கொள்ளாமல், அவர்களும் கனவிலேயே மிதந்தார்கள். அவ்வாறு கனவிலே மிதந்தவர்களுக்கு முன்பு இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அதாவது நடைமுறையில் சாதிப்பதற்கு சரியான வழியை விஞ்ஞானத்தின் அடிப்படையில் உருவாக்கி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு முன்னால் முதன் முதலில் எடுத்துச் சொன்னவர்கள் காரல் மார்க்சும் எங்கெல்சும் ஆவார்கள். நம் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி சமுதாயத்தை சோசலிச சமுதாயமாக மாற்றப்பட வேண்டும், இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்ற உண்மையை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துரைத்தார்கள். இத்தகைய சோசலிச சமுதாயத்தை உருவாக்குவதற்கு அவர்கள் கற்பனை செய்யவில்லை, மாறாக நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயம் தவிர்க்க முடியாதபடி சோசலிச சமுதாயமாக மாறும் என்ற உண்மையை விஞ்ஞான அடிப்படையில் நிறுவினார்கள். உலகில் எப்படி பண்ணை அடிமை முறை வீழ்த்தப்பட்டதோ, அதுபோலவே, இந்த முதலாளித்துவ சமூக அமைப்பும் வீழ்த்தப்பட முடியும் என்று தெளிவாக விளக்கியவர்கள்தான் மார்க்சும் எங்கெல்சும் ஆவார்கள். முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு அல்லது அதை குழி தோண்டி புதைப்பதற்கு, பாடுபடக்கூடிய பாட்டாளி வர்க்கத்தை இந்த முதலாளிகள் தான் உருவாக்கினார்கள் அதாவது முதலாளித்துவத்துக்கு சவக்குழி தோண்டுவதற்கு முதலாளிகளே தொழிலாளர்களை உருவாக்கி உள்ளார்கள் என்று மார்க்ஸ் விளக்கினார். பாட்டாளி வர்க்கப் போராட்டம் தான் முதலாளிகளை முறியடித்து வெற்றி பெறும். அதன் மூலம் மனித குலத்தையே அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யும் என்ற உண்மையை மார்க்சும் எங்கெல்சும்தான் தெளிவாக எடுத்து வைத்தார்கள். (இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுத்தான் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் சாதனைபடைத்தார்கள்) இந்த மார்க்சிய போதனைகளை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் படித்து அறிந்து தெளிவாக புரிந்து கொண்டு அதனை ரஷ்ய மக்களிடம் கொண்டு சென்று விளக்கி சோசலிசத்தின் அவசியத்தை புரிய வைத்தார்கள் அதற்காக தொழிலாளர்கள் பாடுபட வேண்டும் என்று உணர்வு ஊட்டினார்கள்.இத்தகைய மார்க்சிய கல்வி இயக்கத்தை முதன் முதலில் நடத்தி, உணர்வூட்டப்பட்ட மக்களை அணி திரட்டித்தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். ஆகவே உலகில் உள்ள ஏழை மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் வெறுமனே கற்பனை செய்து கொண்டு இருந்தால்மட்டும் போதாது, மாறாக வறுமையை ஒழித்து வளமான வாழ்க்கை வாழ்வதற்கு மார்க்சியத்தை கற்றுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அத்தகைய மார்க்சியத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்து ஒவ்வொரு மக்களும் எல்லாம் பெற்று சுகமான வாழ்க்கை வாழ முடியும், அதற்காக சோசலிச சமுதாயத்தை அமைப்பதற்கு மக்கள் பாடுபட வேண்டும் என்று மக்களுக்கு உணர்வூட்டி நம்பிக்கை ஊட்டிசெயலுக்கு கொண்டு வர வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டுடைய கடமையாகும். ரஷ்ய கம்யூனிஸ்ட் இடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான பாடங்களில் இது ஒன்றாகும். பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்த பலத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய வர்க்க நலன்கள் என்னென்ன என்பதை உணர்ந்து அவற்றின் மீதே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்றும் பூர்ஷ்வாக்களை அதாவது முதலாளிகளை எதிர்த்து தீர்க்கமான போராட்டத்தை நடத்துவதற்கு ஒன்றுபட வேண்டும் என்றும் மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்துக்குப் போதித்தார்கள். முதலாளித்துவ சமூகம் எவ்விதம் வளர்ச்சியடைகிறது என்பதை ஆராய்ந்து மார்க்சும் எங்கெல்சும் அதனுடைய வளர்ச்சி விதிகளைக் கண்டுபிடித்தார்கள்.
முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சியும், அச்சமுகத்துக்குள்ளே நடக்கும் வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியிலும் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியிலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஏற்படுவதிலும் - கொண்டு போய் விடும்; இந்த போக்கை யாராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது தவிர்க்க முடியாது என்று விஞ்ஞான ரீதியாக மார்க்சும் எங்கெல்சும் நிரூபித்தார்கள். (சோவியத் கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூல் பக்கம் - 28)
விளக்கம்:- பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்த பலம் உண்டு, ஏனெனில் அதுதான் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறது அதன் மூலம் மக்களுக்கு தேவையான பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. பாட்டாளி வர்க்கம் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றால் மனித சமுதாயமே வாழ முடியாது. பாட்டாளி வர்க்கம் உழைப்பில் ஈடுபட்டு உருவாக்கப்பட்டதுதான் மூலதனம் ஆகும். அந்த மூலதனத்தை தனதாக்கி கொண்ட முதலாளி வர்க்கத்தால் அந்த மூலதனத்தை கொண்டு மட்டும் வாழவோ வளரவோ முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் துணை இல்லாமல் முதலாளிகளால் வாழ முடியாது, முதலாளித்தவுமும் நீடிக்க முடியாது. ஆகவே இந்த உண்மையை பாட்டாளி வர்க்கம் ஆழமாக புரிந்து கொண்டு தனது சொந்த பலத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. பாட்டாளி வர்க்கமானது தனது வர்க்கத்தின் நலன்கள் என்னென்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் மீது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. முதலாளிகளை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் உறுதியாகவும் உணர்வுபூர்வமாகவும் போராட வேண்டும், அதற்காக பாட்டாளி வர்க்கம் ஒன்று பட வேண்டும் என்றும் மார்க்சியம் போதிக்கிறது. மார்க்சும் எங்கெல்சும் இந்த முதலாளித்துவ சமூகம் எவ்வாறு உருவானது எவ்விதம் வளர்ச்சி அடைகிறது அதற்கான விதிகள் என்ன என்பதை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து அந்த விதிகளை தொழிலாளர்களுக்கு போதித்தார்கள். இந்த முதலாளித்த சமுதாயத்துக்குள்ளேயே இரண்டு அடிப்படையான வர்க்கங்கள் ஒன்று முதலாளிகள் மற்றொன்று தொழிலாளிகள் இவ்விரு வர்க்கங்களுக்கு இடையே நடைபெறும் போராட்டத்தில், இறுதியாக முதலாளித்துவம் வீழ்த்தப்படும் என்றும் பாட்டாளி வர்க்கம் வெற்றியடையும் என்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் உருவாகும் என்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு உருவாக்கத்தை தொழிலாளர்கள் சாதிப்பார்கள் என்றும் இந்த வரலாற்று நிகழ்வை இந்தப் போக்கை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, இது வரலாற்றில் தவிர்க்க முடியாது என்ற உண்மையை வரலாற்று அனுபவங்களிலிருந்தும் விஞ்ஞான ரீதியாகவும் மார்க்சும் எங்கெல்சும் நிரூபித்தார்கள். அது பற்றி அவர்கள் ஏராளமான ஆய்வு நூல்களை எழுதினார்கள், அவற்றையெல்லாம் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சையும் எங்கெல்சையும் பின்பற்றுகின்ற கம்யூனிஸ்டுகள் கொண்டுசென்று போதித்து தொழிலாளர்களுக்கு சோசலிச அறிவையும் உணர்வையும் ஊட்டினார்கள். மார்க்ஸ் மற்றும் எங்கெல்சினுடைய இந்த போதனைகளை தொழிலாளி வர்க்கம் எந்த அளவுக்கு படித்துப் புரிந்து கொள்கிறதோ அந்த அளவுக்கு தொழிலாளி வர்க்கத்துக்கு சோசலிசத்தின் மீது நம்பிக்கையும் அதற்காக போராடுகின்ற உணர்வும் ஆர்வமும் வளரும். அத்தகைய உணர்வும் ஆர்வமும் தொழிலாளர்களிடம் வளர்ப்பதன் மூலமே அதன் அடிப்படையில் செயல்படுவதன் மூலமே கம்யூனிஸ்டுகள் சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றி அமைக்க முடியும். இவ்வாறுதான் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களிடம் மார்க்சியத்தை போதித்து உணர்வூட்டி அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். இதற்கு மாறாக ரஷ்யாவிலிருந்த பொருளாதாரவாதிகள் தொழிலாளர்களை கூலி உயர்வு போன்ற பொருளாதாப் போராட்டங்களில் மட்டும் ஈடுபடுத்தி பாட்டாளிகளின் அரசியல் வர்க்க உணர்வை மழுங்கடித்தார்கள். இத்தகைய பொருளாதாரவாதிகளை எதிர்த்து லெனின் போராடினார். இந்த வரலாற்று உண்மையிலிருந்து தொழிலாளர்களுக்கு மார்க்சியத்தை போதித்து அவர்களுக்கு வர்க்க அரசியல் உணர்வூட்டி போராடுவதுதான் ரஷ்ய கம்யூனிஸ்டுகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதும், முதலாளித்துவத்தின் சொத்துக்களை சமூக சொத்துக்களாக மாற்றுவதும் சமாதான முறைகளை கைக்கொள்வதனால் சாதிக்க முடியாது. பூசுவாக்களுக்கு அதாவது முதலாளிகளுக்கு எதிராக புரட்சிகரமான பலாத்காரத்தை பயன்படுத்துவதனால் மட்டுமே, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்த அரசாட்சியை நிறுவினால் மட்டும்தான் சுரண்டுபவர்களின் எதிர்ப்பை உறுதியுடன் நசுக்கி, வர்க்கமற்ற புதிய சமுதாயமாகிய, கம்யூனிஸ்ட் சமூகத்தை படைக்கும் படியான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதனால் மட்டும்தான் இவற்றை சாதிக்க முடியும் என்று மார்க்சும் எங்கெல்சும் போதித்தார்கள். (சோவியத்கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூல் பக்கம் - 28)
விளக்கம்:-நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தை சோசலிசசமுதாயமாக மாற்ற வேண்டுமென்றால், தற்பொழுது நிலவுகின்றமூலதனத்தின், பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஒழிப்பதும்,முதலாளிகளிலிடமிருந்து சொத்துக்களை அதாவது உழைக்கும் மக்களைசுரண்டுவதற்கு அவசியமான உற்பத்தி சாதனங்களை அதாவது தொழிற்சாலை நிலங்கள் எந்திரங்கள் போன்றவற்றை, முதலாளிகளுக்கு சொந்தமான இவற்றை பறிமுதல் செய்து சமூகத்தின் சொத்துக்களாக மாற்றுவதும் அவசியமாகும். இத்தகைய மாற்றம் செய்யப்பட்டால்தான் முதலாளிகளால் தொழிலாளர்கள் சுரண்டுவதற்கும் அவர்களை அடிமைப் படுத்துவதற்கும் முடியாத நிலையை ஏற்படுத்த முடியும். ஆனால் மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும், முதலாளிகளுடைய சொத்துக்களை சமூகமயமாக்குவதற்கு சமாதான முறையில் நாம் முயற்சி செய்தால் அதனை சாதிக்க முடியாது. ஏனென்றால் அரசு என்ற பலாத்காரமான கருவி முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தொழிலாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபடும் போது தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை அடக்கி விடுவார்கள்.
ஆகவே இதனை சமாதான முறையில் சாதிக்க முடியாது என்று மார்க்சும் எங்கெல்சும் வரலாற்று அனுபவத்திலிருந்து தெளிவாக எடுத்து கூறினார்கள். ஆகவே முதலாளிகளுக்கு எதிரான புரட்சிகரமான பலாத்காரத்தை பயன்படுத்துவதனால் மட்டுமே, அதாவது பாட்டாளி வர்க்க புரட்சியின் மூலம் மட்டுமே, முதலாளி வர்க்கத்தை வீழ்த்தவும் அதன் அரசை தகர்க்கவும், அதன் இடத்தில் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அரசாட்சியை நிறுவ முடியும். அத்தகைய அரசை பாட்டாளி வர்க்கம் நிறுவுவதன் மூலம், அந்த அதிகாரத்தைக் கொண்டு முதலாளிகளின் எதிர்ப்பை உறுதியுடன் நசுக்கி வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கி சமூகத்தை பாட்டாளி வர்க்கத்தால் வளர்க்க முடியும். இந்த உண்மையை மார்க்சும் எங்கெல்சும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள்.மார்க்சிய ஆசான்களின் இந்த போதனையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்கள் மத்தியில் பரப்பி, அவர்களை புரட்சிகர போராட்டத்துக்கு தயார் செய்தார்கள்.இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து நாம் மார்க்சிய ஆசான்களின் போதனைகளை தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை புரட்சிகர நடவடிக்கைக்கு தயார் செய்ய வேண்டும். இதுதான் ரஷ்யப் புரட்சி அனுபவத்திலிருந்து நாம் படித்து புரிந்துக் கொள்ள வேண்டிய பாடமாகும்.- தேன்மொழி
No comments:
Post a Comment