விஞ்ஞான சோசலிசத்தின் வரையறுப்புகளை தெளிவாக எடுத்துரைத்தபின், டூரிங் முன்வைக்கும் சோசலிச சமூக மாதிரியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அது எவ்வாறு சாத்தியமில்லை, அப்படியே அமைந்தாலும் அது எவ்வாறு சிதைந்து போகும் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார் எங்கெல்ஸ். சோசலிசம் என்பது வரலாற்று ரீதியான வளர்ச்சியின் அவசியமான ஒரு விளைவு, இன்றைய பொருளாதார நிலைமைகளின் தவிர்க்க முடியாத விளைவு என்பதை டூரிங் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது சோசலிசம் “அறுதியும் இறுதியுமான உண்மை. சிந்தனையில் உருவாக்கப்பட்டது. அதன் வேர்களைச் சர்வப் பொது சமூகநீதிக் கோட்பாட்டில் கண்டறிய வேண்டும்” என்கிறார். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிகள் எப்போதோ தற்செயலாய் ஏற்படும் விலகல் என்பது அவரது கருத்து. இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் மக்களின் குறைநுகர்வே என்கிறார். இது சிஸ்மாண்டி முன்வைத்த கருத்தாகும். நெருக்கடிகள் மிகை-உற்பத்தியின் விளைவு என்பது மார்க்ஸ்-எங்கெல்ஸ் கருத்தாகும்.
“பொருளாதாரக் கம்யூன்” என்னும் சோசலிச முன்மாதிரியை முன்வைக்கிறார் டூரிங். இது சர்வப்பொது நீதிக் கோட்பாட்டின்மீது கட்டமைக்கப்பட்டது. மனிதகுல வரலாற்றில் மாபெரும் முக்கியத்துவம் கொண்ட முழுமையான வரைமுறைத் திட்டம் என்கிறார். ஒரு வரையறுத்த நிலப்பரப்பில் இது நிலவும். உற்பத்தி நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கம்யூனாய் அமையும். அதன் வருமானத்தில் அனைவருக்கும் பங்கு உணடு. உழைப்புச் சாதனங்கள் கம்யூனுக்குச் சொந்தம். அனைவரும் உழைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். சுருக்கமாய்ச் சொன்னால் உற்பத்தி முதலாளித்துவ முறைப்படியே நடக்கும். முதலாளியின் பாத்திரத்தைக் கம்யூன் வகிக்கும்.
முதலாளித்துவ உற்பத்தி முறை சிறந்தது. எனவே, அது அப்படியே நீடிக்கலாம். ஆனால், வினியோகம் தீங்கானது. அது மாற்றப்பட வேண்டும் என்பது டூரிங் கருத்து. வினியோகத்துக்கும் உற்பத்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று டூரிங் கருதுகிறார். பொருளாதாரக் கம்யூனில், அனைவருக்கும் சம-கடமை உண்டு; சம-ஊதியம் வழங்கப்படும்; சம-உரிமை உண்டு. கம்யூனுக்கிடையிலும், கம்யூனுக்கும் மக்களுக்கு இடையிலும் பண்டங்களின் பரிவர்த்தனை இருக்கும். தனிநபர்களுக்கிடையே பரிவர்த்தனை கிடையாது. உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாள், வார, மாதக் கணக்கில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும். கடை உண்டு, பண்டங்களுக்கு விலையுண்டு, விற்றல்-வாங்கல் உண்டு. ஆனால், நியாயமான ஊதியம், நியாயமான விலை நிர்ணயிக்கப்படும். பரிவர்த்தனைக்த்கு தங்கம், வெள்ளி வடிவிலான பணம் உண்டு. தனிச் சொத்துடைமை கிடையாது. ஆனால், உபரியான பணம், சாதனங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை மூலதனமாகப் பயன்படுத்த முடியாது. இப்போதைய குடும்பம் உண்டு. பரம்பரைச் சொத்துண்டு. முக்கியமாக, சம உழைப்புக்குச் சம உழைப்பு பரிவர்த்தனை செய்யப்படும்.
டூரிங்கின் மேற்கண்ட கருத்துகள் ஒவ்வொன்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார் எங்கெல்ஸ். சம உழைப்புக்குச் சம உழைப்பு பரிவர்த்தனை செய்யப்பட்டால், கம்யூனின் செல்வம் பெருகாது. சமுதாயம் வளர்ச்சி அடையாது. நூறாண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்தபடியே இருக்கும் என்ற உண்மையை எங்கெல்ஸ் கணக்குப் போட்டுக் காட்டுகிறார். பணம் இருக்கும் என்றால் பணப்பதுக்கல் இருக்கும். வறுமை தவிர்க்க முடியாது. சிலர் பணக்காரர்களாயும் சிலர் ஏழைகளாயும் இருப்பார்கள். உழைப்பின் மூலம் மட்டுமின்றி வேறு வழியிலும் பணம் சம்பாதிக்க முடியும். ஏழைகள் வட்டிக்குக் கடன்வாங்கிக் கடனாளி ஆவார்கள். கம்யூனுக்கு வெளியே முதலாளித்துவ உலகச் சந்தை இருக்கலாம் என்பதால், தங்கம், வெள்ளி, உலகப் பணமாய்ச் செயல்படும். பணத்தைப் பதுக்கிச் சேர்ப்பவர்கள் கம்யூனையே விலைக்கு வாங்குவார்கள்.
அடுத்து, சரக்கின் மதிப்பு வடிவத்தைப் பற்றியும், மதிப்பு விதியைப் பற்றியும் எங்கெல்ஸ் விவரிக்கிறார். மதிப்பு விதி முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை விதியாகும். தன்னைத் தானே வலியுறுத்திக் கொள்ளும் அடிப்படை விதியாகும். கண்மூடித்தனமாய்ச் செயல்படும் இயற்கை விதியைப்போல் உற்பத்தியாளர்களின் விருப்பம், செயல்களைச் சாராமல் இயங்கும் விதியாகும். இன்றைய தீங்குகளின் அடிப்படைக் காரணமே இவ்விதியின் செயல்பாடுதான். டூரிங்கின் கம்யூனில் மதிப்பு விதி வேண்டும், ஆனால் அதன் தீங்குகள் வேண்டாம் என்பது எப்படிச் சரியாகும்? மதிப்பு விதியை ஏற்றுக் கொண்டு, “உண்மையான மதிப்பை” நிலைநாட்டுவதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிக்க முயல்வது, “உண்மையான” போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கத்தோலிக்க மதத்தை ஒழிக்க முயல்வதற்கு ஒப்பானதாகும் என எங்கெல்ஸ் கிண்டல் செய்கிறார்.
சமுதாயக் குழுக்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் மிகவும் வலிமை மிக்க சாதனமாகப் பணம் எப்போதும் செயல்படுகிறது. சட்டங்கள், நிர்வாக விதிகள் எவ்வளவுதான் இருந்த போதிலும், டூரிங்கின் சோசலிச அமைப்பு (பொருளாதாரக் கம்யூன்) எப்போதாவது தோன்றுமானால் பணம் அதைத் தகர்த்துவிடும் என்று எங்கெல்ஸ் முத்தாய்ப்பாய்க் கூறி முடிக்கிறார்.
இறுதி அத்தியாயத்தில் அரசு, மனித சுதந்திரம், மதம், குடும்பம், கல்வி, பால் உறவு, காதல், விபச்சாரம் பற்றிய டூரிங்கின் கருத்துகளை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார். டூரிங்கின் அரசில் ராணுவம், போலீஸ், காவல்படை அனைத்தும் இருக்கும். தனிமனிதனுக்கு முழுச் சுததிரம் உண்டு. ஆனால், தேவையானால் தனிமனிதச் செயல்பாட்டில் அரசு தலையிடும். ஆனால், அரசின் நடவடிக்கை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்! மதம், மதச் சடங்குகள், மத மூட நம்பிக்கைகள் அனைத்தும் ஒழிக்கப்படும். முதலாளித்துவக் குடும்ப அமைப்பு அப்படியே தொடரும். மக்கள்-பள்ளியில் கணிதத்தின் அடிப்படைக் கூறுகள், வர்ணனை அளவிலான தாவரவியல், விலங்கியல் கற்றுத் தரப்படும். மொழியைப் பொறுத்த மட்டில் தாய்மொழி, வெளிநாட்டுத் தொடர்புக்கு அந்நிய மொழி கற்றுத் தரப்படும். ஆனால், செத்துப் போன மொழிகளைப் பற்றியோ, தாய்மொழியின் வரலாறு பற்றியோ கற்றுத்தரப்பட மாட்டாது. மக்கள் இனப்பெருக்கம் முக்கியம். எனவே பாலுறவு முக்கியம். ஆனால், மக்கள் எண்ணிக்கை முக்கியமில்லை. தரம்தான் முக்கியம். எனவே, உடல் குறைபாடுள்ளவர்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடக்கூடாது. அதேபோல, தேவையில்லாத கருவைக் கலைக்க வேண்டும். பிறப்பில் சிறந்த குழந்தைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். சுதந்திரமான காதல் உண்டு. கட்டாயத் திருமணம் கூடாது. விபச்சாரம் ஆண்களுக்குச் சாதகமாயும் பெண்களுக்குப் பாதகமாயும் உள்ளது. இதில் மாற்றம் வேண்டும்.
இந்தக் கருத்துகள் ஒவ்வொன்றையும் எங்கெல்ஸ் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார். அவற்றுள் மதம் ஒழிக்கப்படுவது பற்றியும், மொழியியல் பற்றியும் எங்கெல்ஸ் கூறும் கருத்துகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மதத்தின் தோற்றம் பற்றியும், அதன் படிப்படியான வளர்ச்சி பற்றியும் எங்கெல்ஸ் விவரிக்கிறார். மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் புறச் சக்திகள் பற்றி மனிதர் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே மதத்தின் தோற்றுவாய். தொடக்கத்தில் மனிதனைத் துன்பத்துக்கு ஆளாக்கிய இயற்கை சக்திகளைக் கடவுளாக வழிபட்டான். காலப்போக்கில் பல்வேறு புற ஆதிக்க சக்திகளுக்கு ஏற்ப, பல்வேறு கடவுள்களை உருவாக்கிக் கொண்டான். முதலாளித்துவ சமூகம் உருவாகி, சர்வ வல்லமை படைத்த ஒற்றை ஆதிக்க சக்திக்கு ஆட்பட்ட மனிதன் சர்வ வல்லமை படைத்த ஒற்றைக் கடவுளை வழிபடுகிறான். சமூகத்தில் புறச் சக்திகளின் ஆதிக்கம் இருக்கும் வரை மதம் இருக்கும். மதம், கடவுள் எல்லாம் புற நிலைமைகள் மனித சிந்தனையில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பே ஆகும். புறத்தாக்கம் இருக்கும்வரை பிரதிபலிப்பு இருக்கும், மதமும் இருக்கும். சமூக உடைமையில் புற ஆதிக்கம் ஒழியும்போது, பிரதிபலிக்க எதுவும் இருக்காது. எனவே, மதமும் மறைந்து போகும்.
மொழிகளைக் கற்பது பற்றி எங்கெல்ஸ் கூறுவதாவது: குறுகிய தேசிய நிலைபாட்டைக் கடந்து மேலெழுந்து வரக்கூடிய வாய்ப்பினை வழங்கக்கூடிய இரு உந்துசக்திகளை ஒழித்துவிட ஹெர் டூரிங் விரும்புகிறார்: முதவாவது, தொன்மையான மொழிகளின் அறிவு. அவ்வறிவு, குறைந்தபட்சம் செவ்வியல் கல்வி பயின்ற பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரிந்த பொது அறிவெல்லையைத் திறந்துவிடும். இரண்டாவது, நவீன மொழிகளின் அறிவு. அவ்வறிவினை ஊடகமாகக் கொண்டு மட்டுமே, பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மக்கள், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதன் மூலம் தம்மைத் தாமே புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சொந்த எல்லைகளுக்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதைத் தாமே அறிந்து கொள்ளவும் முடியும். இதற்கு மாறாக, தாய்மொழியின் இலக்கணத்தை முழுமையாகக் கறாரான பயிற்சியின் மூலம் கற்பிக்க வேண்டும். எனினும், ஒருவருடைய சொந்த மொழியின் தோற்றத்தையும், படிப்படியான பரிணாம வளர்ச்சியின் சுவட்டையும் அறிந்து கொள்ளும்போது மட்டுமே, “அம்மொழியின் சாரமும், வடிவமும்” அவருக்குப் புரியக்கூடியதாய் ஆகிறது. முதலாவதாக, அம்மொழியின் சொந்த வழக்கொழிந்த வடிவங்களையும், இரண்டாவதாக, ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, வாழ்வதும் இறந்து போனதுமான இருவகைப்பட்ட மொழிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இதைச் செய்ய முடியாது.
டூரிங்கின் சோசலிசத்தைப் “பிரஷ்யன் சோசலிசம்” என இரண்டு இடங்களில் எங்கெல்ஸ் விமர்சிப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது..
கட்டுரையாளர்: மு.சிவலிங்கம் (மார்க்சிய எழுத்தாளர்)
No comments:
Post a Comment