டூரிங்குக்கு மறுப்பு ஓர் அறிமுகம் – 2

 பகுதி-2: அரசியல் பொருளாதாரம்

“அரசியல் பொருளாதாரம் என்பது அதன் விரிவான பொருளில், மனித சமுதாயத்தினுடைய வாழ்க்கைச் சாதனங்களின் உற்பத்தியையும் பரிவர்த்தனையையும் ஆளுகை செய்யும் விதிகளின் விஞ்ஞானம் ஆகும்… அது ஒரு அறிவுத்துறை விஞ்ஞானம் ஆகும்” என்று தொடத்திலேயே சொல்லிவிடுகிறார் எங்கெல்ஸ். அடுத்து, அரசியல் பொருளாதாரம் எவ்வாறு உருவாகியது என்பதை விளக்குகிறார். இது நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச மீதங்கள் பற்றிய விமர்சனத்துடன் தொடங்கியது. அந்த இடத்தில் முதலாளித்துவ வடிவங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்துடன் வளர்ந்தது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து தொடர்ந்து வளர்ச்சி பெற்றுள்ளது. அரசியல் பொருளாதாரத்தின் சோசலிச விமர்சனமோ அதன் எதிர்மறைக் கூறுகளை அம்பலப்படுத்தி, முதலாளித்துவம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. டூரிங்கோ அரசியல் பொருளாதாரத்தை இறுதியும் அறுதியுமான உண்மைகளில், இயற்கையின் நித்திய விதிகளில் காண்கிறார்.
டூரிங், வினியோகத்துக்கு உற்பத்தியுடன் தொடர்பில்லை என்கிறார். வினியோகத்தில்தான் அநீதி இருக்கிறது. உற்பத்தியை அப்படியே வைத்துக் கொண்டு வினியோகத்தை மாற்றியமைக்கலாம் என்கிறார்.

“வினியோகத்தை அநீதி என்று கூறி வீழ்த்த முடியாது. உற்பத்தியோடு இணைந்ததே வினியோகம். ஒரு புரட்சியினால் உற்பத்தி முறை மாறும்போதுதான் வினியோக முறையும் மாறும். நவீன சோசலிசத்தின் வெற்றிக்கான நம்பிக்கை இந்தப் பொருளாதார உண்மையின்மீதே ஆதாரப்பட்டுள்ளது. நாற்காலித் தத்துவவாதிகளின் நீதி-அநீதி பற்றிய கருத்தோட்டங்களின் மீதல்ல… நீதிக்கான வேண்டுகோள், சமூகம் ஓர் அங்குலமும்கூட முன்செல்ல உதவாது. தார்மீக ஆக்ரோஷம் எவ்வளவுதான் நியாயமாய் இருந்தாலும் பொருளாதார விஞ்ஞானத்துக்கு ஒரு வாதமாய் ஆகாது, வெறும் அடையாளம் மட்டுமே ஆகும்” என்பதே எங்கெல்ஸ் கருத்து.
அடுத்து, பலப்பிரயோகக் கோட்பாடு குறித்து மூன்று அத்தியாயங்களில் விரிவாக ஆய்வு செய்கிறார் எங்கெல்ஸ். டூரிங், அடிமை முறையிலிருந்து பலப்பிரயோகமே பெரும் நிலவுடைமையை உருவாக்கியது; அங்கே பலப்பிரயோகமே சுரண்டலுக்குக் காரணமாய் இருந்தது; முதலாளித்துவத்தில் பலப்பிரயோகம் மென்மையடைந்திருந்தாலும் இங்கும் சுரண்டலுக்குப் பலப்பிரயோகமே காரணம் என்கிறார்.

எங்கெல்ஸ் அதனை மறுத்து, பலப்பிரயோகம் சுரண்டலை உருவாக்காது, அதனைப் பாதுகாக்கும். முதலாளித்துவத்தில் மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான உறவே சுரண்டலின் அடிப்படை, முதலாளித்துவத்தின் வெற்றிக்கு அதன் பொருளாதார அதிகார சாதனங்களே காரணம், பலப்பிரயோகம் அல்ல என்று நிறுவுகிறார் எங்கெல்ஸ்.
அரசியல் அதிகாரமே தீர்மானகரமானது; பொருளாதார நிலைமைகள் அதன் விளைவுகளே ஆகும்; அரசியல் நிலைமைகளே பொருளாதார நிலைமைக்கு நிர்ணயமான காரணம் என்பது டூரிங்கின் கருத்து. இது, கடந்தகால வரலாற்று ஆசிரியர்கள் முன்வைத்த மிகப் பழமையான கருத்து; பொருளாதார உற்பத்தி நிலைமக்கு ஏற்றவாறே அரசியல் அதிகாரம் அமைகிறது; ஆதிகால நிலப் பொதுவுடைமையிலிருந்து நிலத் தனியுடைமை உருவாகியதும், அடிமை முறை உருவானதும், பண்ணையடிமை முறை உருவானதும் பலப்பிரயோகத்தால் அல்ல. உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றமே காரணம். தற்போது, முதலாளித்துவத்தில் கூலியுழைப்பு முறைக்கும் சரக்கு வடிவிலான உற்பத்தி முறையே காரணம். என்பது எங்கெல்ஸ் கருத்து. ஆளும் சுரண்டல் வர்க்கம் சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் ஆகும்போது அது நேரடிப் பலப்பிரயோகத்தை எந்த அளவுக்குத் தன்னிடம் வைத்திருந்தாலும் அது இரக்கமின்றி ஒழிக்கப்படும். அரசியல் அதிகாரம் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாய் நின்று, எதிராகச் செயல்பட்டால், இந்த மோதல் எப்போதும் அரசியல் அதிகாரத்தின் வீழ்ச்சியிலேயே போய் முடிந்தது, அதற்குப் பிரெஞ்சுப் புரட்சியே சாட்சி என்கிறார்.

அடுத்து, மதிப்புக் கோட்பாடு பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. சந்தையில் விற்கப்படும் ஒரு சரக்கின் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? டூரிங், உற்பத்தி மதிப்பு, வரி சேர்த்த வினியோக மதிப்பு, மறு உற்பத்திச் செலவால் அளவிடப்படும் மதிப்பு, சரக்கில் அடங்கியுள்ள உழைப்புநேரத்தால் அளவிடப்படும் மதிப்பு, கூலியால் அளவிடப்படும் மதிப்பு என ஐந்து மதிப்புகளைப் பற்றிப் பேசிக் குழப்புகிறார். “சரக்கின் மதிப்பு அதில் உருக்கொண்டுள்ள, சமூக வழியில் அவசியமான சராசரி மனித உழைப்பால் நிர்ணயிக்கப்பட்டு, அதன் கால அளவால் அளவிடப்படுகிறது” என்ற மார்க்சின் கறாரான வரையறுப்பை மூலதனம் நூலிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் எங்கெல்ஸ். உழைப்பு எல்லா மதிப்புகளின் அளவீடு ஆகும். ஆனால், உழைப்புக்கென்று எவ்வித மதிப்பும் இல்லை என்கிறார் மார்க்ஸ். சரக்கின் மதிப்பைக் கூலியுடன் போட்டுக் குழப்பக்கூடாது என்பதும் மார்க்சின் கருத்தாகும்.
கோட்பாட்டளவில் எல்லா உழைப்பு நேரமும் எவ்வித விதிவிலக்கும் இன்றி மதிப்பில் முற்றிலும் சமம்; சராசரி பார்க்க வேண்டிய தேவையில்லை; தேர்ச்சிபெற்ற உழைப்பு என்று வேறுபடுத்தவும் கூடாது என்கிறார் டூரிங். ஆனால், தேர்ச்சி பெற்ற உழைப்பு சாதாரண உழைப்பைவிட அதிக மதிப்பைப் படைக்கும்; எனவே, தேர்ச்சிபெற்ற உழைப்பு என்பது பன்மடங்காக்கப்பட்ட சாதாரண உழைப்பே என்கிறார் மார்க்ஸ்.
மூலதனம் எதிலிருந்து பிறக்கிறது? உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது? என்கிற கேள்விகளுக்குத் தெளிவான விடையை மார்க்சின் மூலதனம் நூலிலிருந்து எடுத்துத் தருகிறார் எங்கெல்ஸ்.

சரக்குகளின் சுற்றோட்ட நிகழ்முறையில் பணம் இறுதி வடிவமாகத் தோற்றமளிக்கிறது. சரக்குச் சுற்றோட்டத்தின் இந்த இறுதி விளைவே, மூலதனம் தோற்றமளிக்கும் முதல் வடிவம். அதாவது, சரக்குகளின் பொதுச் சமதையாகப் புழங்கும் [பண] வடிவமே முதலாவதாக மூலதனம் புழங்கும் வடிவம் என்பது மார்க்சின் கருத்து. உபரி மதிப்பு என்பது சரக்கை அதிக லாபம் வைத்து விற்பதால் வராது; ஏமாற்றுதலாலும் பலப்பிரயோகத்தாலும் வராது; வாங்கல், விற்றலில் தோன்ற முடியாது, காரணம் சரக்கு அதன் மதிப்புக்கேதான் விற்கப்படுகிறது. சரக்குக்குள்ளேயேதான் தோன்ற முடியும். உற்பத்தி நிகழ்முறையில் தொழிலாளியின் உழைப்புச் சக்தியே உபரி மதிப்பைப் படைக்கிறது.

முதலாளி ஒருநாளைக்கு எட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டுமென தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கூலி தருகிறார். அவர் கொடுக்கும் கூலி ஒரு நாளைக்கான குறைந்தபட்சக் கூலி. தொழிலாளி 6 மணிநேரத்திலேயே அந்தக் கூலிக்குரிய உழைப்புச் சக்தியைத் தந்துவிடுகிறார். அதன்பிறகும் 2 மணிநேரம் முதலாளிக்காக வேலை செய்கிறார். இந்த, கூலி தரப்படாத உபரி உழைப்பே உபரி மதிப்பைப் படைக்கிறது. இந்த உபரி மதிப்பு சந்தையில் பணமாய் ஈடேற்றம் காண்டு முதலாளியின் கையில் சேர்கிறது. அதன் ஒருபகுதி முதலாளியின் லாபமாகவும், அவர் வாங்கிய கடனுக்கு வட்டியாகவும், நிலம், கட்டட வாடகையாகவும், இடை வணிகர்களின் லாபமாகவும் பிரிகிறது. மறுபகுதி மீண்டும் மூலதனமாய் மாற்றப்படுகிறது. இவ்வாறு தொழிலாளி கூலி பெறாமல் படைக்கும் உபரி மதிப்பானது மூலதனமாய்ப் பெருக்கமடைகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் புதிர் அவிழ்க்கப்படுகிறது.

பகுதி-3: சோசலிசம்
இப்பகுதியில் முதலாவதாக, சான் சிமோன், ஷர்ல் ஃபூரியே, ராபர்ட் ஓவன் ஆகிய மூன்று கற்பனாவாத சோசலிஸ்டுகளின் கருத்துகளைச் சுருக்கமாகத் தருகிறார் எங்கெல்ஸ். சான் சிமோன், வருங்காலத்தில் விஞ்ஞானமும் தொழில்துறையுமே தலைமையேற்கும் என்று முன்னறிந்து கூறுகிறார். அரசியாலானது பொருளாதாரத்தில் கரைந்து போகும் என்று அரசியல் மேற்கட்டுமானத்துக்குப் பொருளாதார நிலைமைகளே அடித்தளம் என்பதைச் சூசகமாய் உணர்த்துகிறார். எதிர்காலத்தில் அரசியல் ஆட்சி என்பது உற்பத்தி நெறியாண்மை, பொருள்களின் நிர்வாகமாய் மாறிப்போகும் என்கிறார். அரசு ஒழியும் என்ற கருத்தின் தோற்றுவாய் இது. முதலாளித்துவ சமூகத்தின் இன்றைய நிலைபற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் ஃபூரியே, எந்தவொரு சமுதாயத்திலும் மகளிர் விடுதலையின் அளவே சமூக விடுதலையின் அளவுகோல் என்று சரியாகச் சொல்கிறார். ராபர்ட் ஓவன் 2500 பேர் கொண்ட நியூ லனார்க் நகரில் ஒரு மாதிரி சோசலிச சமூகத்தை நிறுவுகிறார்.

தொழிலாளர்களின் வேலைநேரம் 10 ½ மணிநேரம் (வேறிடங்களில் 14 மணிநேரம்). 4 மாதம் லே-ஆஃபின் போதும் முழுச் சம்பளம் தருகிறார். இருப்பினும் அதிக லாபம் ஈட்டிக் காட்டுகிறார். பணத்தை ஒழிக்கிறார். ஊதியமாக உழைப்பு-நோட்டுகளைத் தருகிறார். தொழிலாளர்-கடைகளில் அதைக் கொடுத்துப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். மழலையர் பள்ளியின் முன்னோடி அவர். சமுதாய முன்னேற்றதுக்குத் தனிச்சொத்து, மதம், திருமண முறை ஆகியவை தடைக்கற்கள் என அடையாளம் காட்டுகிறார்.
இவர்கள் மூவருமே சமூகத் தீர்வை மூளையிலிருந்து வெளிக்கொணர முயன்றனர். மாதிரிச் சோதனைகள் மூலம், சோசலிசத்தை வெளியிலிருந்து சமூகத்தின்மீது திணிக்க முயன்றனர். புதிய அமைப்புமுறையை உருவாக்கிப் பிரச்சாரம் மூலம் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் நிர்மாணிக்க முயன்றனர். புத்திசாலித்தனமாய் முன்வைக்கப்பட்டாலும் இவையனைத்தும் கற்பனாவாதமாகவே முடிவுற்றன. காரணம், அக்காலகட்டத்தில் முதலாளித்துவ முறை முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. முதலாளி, பாட்டாளி வர்க்கப் பகைமை முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. வர்க்க மோதல், உற்பத்திக்கும் பரிவர்த்தனைக்குமான மோதல் தொடக்கக் கட்டத்திலேயே இருந்தது. பாட்டாளி வர்க்கம் சுதந்திரமான அரசியல் போராட்டத்துக்கு முழு ஆற்றல் பெற்றிருக்கவில்லை. எனவே, பக்குவமற்ற முதலாளித்துவ உற்பத்தி நிலைமையில், பக்குவமற்ற வர்க்க உறவு நிலைமையில் அவற்றுக்கிணையான பக்குவமற்ற கோட்பாடுகளே உருவாக முடியும் என்று கற்பானாவாத சோசலிசத்தின் காரணத்தை எங்கெல்ஸ் விளக்குகிறார்.

அடுத்து, சோசலிசக் கோட்பாடு பற்றிய ஒரு தெளிவான வரையறுப்பை எங்கெல்ஸ் வழக்குகிறார். எது சோசலிசம் அல்ல, சோசலிசம் என்றால் என்ன? எப்போது சாத்தியம் ஆகும்? எப்படிச் சாத்தியம் ஆகும்? என்பதைத் தெள்ளத் தெளிவாக முன்வைக்கிறார். முதலாவதாக, மார்க்ஸ் உருவாக்கிய, வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கோட்பாட்டை சுட்டிக் காட்டுகிறார். “மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையுமே சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளமாகும்; எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான காரணங்களைப் பொருளுற்பத்தி, வினியோக முறையின் மாற்றங்களில்தான் கண்டறிய வேண்டும், மனித மூளையில் அல்ல”.

உற்பத்திக்கும், உற்பத்தி முறைக்கும் இடையிலான மோதல் மனித மனத்தில் உதித்தெழுந்தது அல்ல. நமக்குப் புறத்தே, புறநிலை உண்மையாய், எதார்த்த நிலவரமாய், இதை மூண்டெழச் செய்தோரின் விருப்பத்தையும், செயல்களையும் சாராமல் தன்னியல்பாய் நிலவுவது ஆகும். முதலாளித்துவத்தில் தனிப்பட்ட உழைப்பு சமூக உழைப்பாய் ஆனது. தனிப்பட்ட உற்பத்திப் பொருள் சமூக உற்பத்திப் பொருள் ஆனது. ஆனால், சமூக உற்பத்திப் பொருள்கள் தனியார் (முதலாளி) வசமாயின. ஆக, சமூக உற்பத்திக்கும் முதலாளித்துவக் கைவசப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாடு முதலாளி, பாட்டாளி இடையிலான வர்க்க முரண்பாடாய் வெளிப்படுகிறது.
உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் வலிமை மிக்கனவாய் வளர்ந்து முதலாளித்துவ இயல்பை எதிர்த்துக் கலகம் புரிகின்றன. தம்மைச் சமுதாய உற்பத்திச் சக்திகளாய் நடத்தும்படி முதலாளித்துவ வர்க்கத்தைக் கட்டாயப்படுத்துகின்றன. முதலாளித்துவத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருக்கடி வெடிக்கிறது. வணிகம் தடைப்படுகிறது. கடன் செலாவணி இல்லை. முதலாளித்துவம் தன்னைக் காத்துக் கொள்ள, கார்ட்டல்கள், டிரஸ்டுகள், கூட்டுப் பங்கு நிறுமங்கள், ஏகபோகங்கள் ஆகியவற்றை உருவாக்குகின்றன. உச்ச கட்டமாய் உற்பத்தியின் நெறியாண்மையை அரசே ஏற்க வேண்டி வருகிறது.
உற்பத்திச் சக்திகள் அரசுடைமை ஆக்கப்படுகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு அரசுடைமை ஆக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மெய்ந்நடப்பில் அது தேசிய முதலாளி ஆகிறது. அவ்வளவுக்கு அது குடிமக்களைச் சுரண்டுகிறது. தொழிலாளர் வர்க்கம் பாட்டாளி வர்க்கமாகவே நீடிக்கிறது. முதலாளித்துவ உறவு அகற்றப்படவில்லை. மாறாக, உச்சநிலைக்கு மும்முரமாக்கப்படுகிறது. இறுதியில் தலைகுப்புறக் கவிழ்கிறது.
உற்பத்திச் சக்திகள் அனைத்தும் அரசுடைமையில் இருப்பதானது மோதலுக்குத் தீர்வாகாது. சமுதாயம் முழுமையின் கட்டுப்பாட்டையன்றி வேறெந்தக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவையாய் விஞ்சி வளர்ந்துவிட்ட உற்பத்திச் சக்திகளைப் பகீரங்கமாகவும், நேரடியாகவும் சமுதாயமே உடைமையாக்கிக் கொள்வதன் மூலமே தீர்வு எட்டப்படும். இதற்கான வழிமுறையையும் முதலாளித்துவமே சுட்டிக் காட்டுகிறது.

பாட்டளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை முதலில் அரசுச் சொத்தாய் மாற்றுகிறது. ஆனால், இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் நிலைக்கே முடிவு கட்டிக் கொள்கிறது. எல்லா வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவு கட்டுகிறது. அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. அரசு சமுதாயம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதி ஆகும்போது அது தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது.
அரசானது மெய்யாகவே சமுதாயம் முழுமைக்கும் பிரதிநிதியாய் இருந்து உற்பத்திச் சாதனங்களை சமுதாய உடைமையாய் ஆக்குகின்ற அதன் முதலாவது செயல், அரசு என்ற முறையில் அது புரியும் இறுதிச் செயலாகவும் அமைந்துவிடுகிறது. அனைத்துத் துறைகளிலும் அரசு தேவையற்றதாய் ஆகிவிடுகிறது. மக்களை ஆள்வது என்கிற அரசின் செயல்பாடு, அன்றாடப் பணிகளின் நிர்வாகமாய், உற்பத்தி நிகழ்முறைகளின் நெறியாண்மையாய் மாறிவிடுகிறது. அரசு ஒழிக்கப்படவில்லை. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது.
உற்பத்திச் சாதனங்களை சமுதாய உடைமை ஆக்கிக் கொள்ளல் நிறைவேறுவதற்குரிய எதார்த்த நிலைமைகள் தோன்றிய பிறகே இது சாத்தியம் ஆகும், வரலாற்று அவசியமாய் ஆக முடியும். இது, வர்க்கங்கள் இருப்பது நீதிக்கும் சமத்துவத்துக்கும் முரணாகும் என்று மனிதர்கள் உணர்வதாலோ அல்லது இந்த வர்க்கங்களை ஒழிக்க வேண்டுமென வெறுமனே விரும்புவதாலோ நடைமுறை சாத்தியம் ஆகாது. மாறாக, குறிப்பிட்ட பொருளாதார நிலைமைகள் எட்டப்பட்ட பிறகே சாத்தியம் ஆகிறது.
உற்பத்தி குன்றியிருப்பதே வர்க்கங்கள் நிலவக் காரணம். வர்க்கங்கள் குறையுற்பத்தியின் தவிர்க்கவியலா விளைவு. மொத்த உற்பத்திப் பொருள்களும் மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய அளவைக் காட்டிலும் மிகச்சொற்ப அளவே அதிகமாய் இருக்கும்வரை, இதனால் பெரும்பான்மை மக்கள் முழுநேரமும் உழைக்க வேண்டிய தேவை இருக்கும்வரை இந்தச் சமுதாயம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாய்ப் பிளவுபட்டிருக்கும். நவீன உற்பத்திச் சக்திகளின் முழு வளர்ச்சியால் வர்க்கப் பிரிவினைகள் துடைத்தெறியப்படும்.

உண்மையில் சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்பட, வரலாற்று வழியிலான பரிணாம வளர்ச்சி குறிப்பிட்ட அளவு [முன்னேறி] இருப்பது முன் நிபந்தனை ஆகும்.
சோசலிச சமூக அமைப்பில் சரக்கு உற்பத்திக்கு முடிவு கட்டப்படும். உற்பத்திப் பொருள் உற்பத்தியாளரை அடிமைப்படுத்துவது ஒழியும். சமூக உற்பத்தியில் ஒழுங்கின்மை ஒழிக்கப்படும். தனிமனிதனின் வாழ்வுக்கான போராட்டம் மறையும். மனிதனை ஆட்சி செய்த வாழ்நிலைமைகள் மனிதனின் ஆதிக்கதுக்கு உட்படும். மனிதன் முதன்முதலாய் இயற்கையின் மெய்யான அதிபதி ஆவான். சமூக ஒழுங்கமைப்பை ஆட்சிபுரியும் அதிபதி ஆவான். வரலாற்றை ஆளுகை செய்த புறநிலைச் சக்திகள் நேரடியாய் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மனிதன் உணர்வுடன் தன் சொந்த வரலாற்றைத் தானே படைப்பான். சமுதாய நோக்கங்கள் எண்ணிய விளைவை எண்ணியாங்கு எய்தும். அவசியத்தின் ஆட்சி சுதந்திரத்தின் ஆட்சியாய் மலரும்.

கட்டுரையாளர்: மு.சிவலிங்கம் (மார்க்சிய எழுத்தாளர்)

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்