அன்றைய பிரஷ்யாவின் பெர்லின் நகரில் பிறந்த ஒய்கேன் கார்ல் டூரிங் (Eugen Karl Dühring) சட்டம் பயின்று, வழக்குரைஞராகப் பணியாற்றியவர். 1864-74 ஆம் ஆண்டுகளில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1867 டிசம்பரில் Ergänzungsblätter என்னும் பத்திரிக்கையில் மார்க்சின் மூலதனம் நூலுக்கு டூரிங் மதிப்புரை எழுதினார். அதனை மார்க்ஸ்-எங்கெல்ஸ் படித்தனர். 1868 ஜனவரி-மார்ச் மாதங்களில் இருவரும் டூரிங் பற்றிய தம் கருத்துகளை கடிதங்களில் பகிர்ந்து கொண்டனர். அதன்பின் 1870 நடுப்பகுதி வரை அவரை முற்றிலும் மறந்துவிட்டனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில்தான் டூரிங், ஜெர்மன் அரசியலில் பிரவேசித்து முன்னணிக்கு வருகிறார். தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் பற்றியெல்லாம் நூல்கள் எழுதுகிறார்.
ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியினர் டூரிங்கின் கருத்துகளால் பெரிதும் கவரப்பட்டனர். டூரிங் எழுதிய அரசியல் பொருளாதாரம், சோசலிசம் பற்றிய விமர்சன வரலாறு (1874), தத்துவவியல் பற்றிய பாடவிளக்கம் (1875) ஆகிய நூல்கள் அவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நூல்களில் டூரிங், மார்க்சியத்தின் உள்ளடக்கக் கூறுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் ஆகிய அனைத்தையும் கண்டன விமர்சனம் செய்துள்ளார்.
1874 மார்ச்சில் சமூக-ஜனநாயகக் கட்சியின் மக்கள் அரசு (Volksstaat) பத்திரிக்கையில், டூரிங்கின் நூலைப் பாராட்டி, ஒரு கட்டுரை, எழுதியவரின் பெயரின்றி வெளியானது. (உண்மையில் அதை எழுதியது பெபல்). 1875 பிப்ரவரி-எப்ரல் மாதங்களில், டூரிங்கை விமர்சித்து அதே பத்திரிக்கையில் எழுதுமாறு லீப்னெஹ்ட், எங்கெல்ஸை வலியுறுத்தி வந்தார். 1876 மே 26-இல் மக்கள் அரசு பத்திரிக்கையில், ஜெர்மன் நாடளுமன்றத்தில் பிரஷ்யன் ஓட்கா (Prussian Vodka in the German Reichstag) என்னும் கட்டுரையின் மூலம் டூரிங்கின் மீதான தாக்குதலை எங்கெல்ஸ் தொடங்கி வைத்தார். சமூக-ஜனநாயகக் கட்சியில் பரவிவரும், டூரிங்கின் குட்டி-முதலாளித்துவக் கருத்துகளுக்கு எதிராக, ஒரு கருத்துப் போரைத் தொடங்க வேண்டிய அவசியம் பற்றி, 1876, மே 24-இல் எங்கெல்ஸ், மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தினார்.
டூரிங்கைக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டுமென மறுநாளே மார்க்ஸ் மறுமொழி தந்தார்.
எங்கெல்ஸ் எட்டு ஆண்டுகளாய் ஆய்வு செய்து எழுதிவந்த இயற்கையின் இயக்கவியல் நூலைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, டூரிங்கின் கருத்துகளை விமர்சிக்கும் பணியைக் கையிலெடுத்தார். “மார்க்ஸ் மூலதனத்தை எழுதி முடிப்பதற்கு ஏதுவாக இதனை நான் எழுதுகிறேன்” என்று எங்கெல்ஸ் இப்பணி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1876 செப்டம்பர் முதல் 1878 ஜூன் வரையிலான காலகட்டத்தில் எங்கெல்ஸ் இந்த விமர்சனத்தை எழுதினார். எங்கெல்ஸ் எழுதியவை முன்னேற்றம் (Vorwärts) என்னும் ஜெர்மன் மொழிப் பத்திரிக்கையில், “திரு ஒய்கேன் டூரிங் தத்துவ இயலில் நிகழ்த்திய ஒரு புரட்சி”, “திரு ஒய்கேன் டூரிங் அரசியல் பொருளாதாரத்தில் நிகழ்த்திய ஒரு புரட்சி”, “திரு ஒய்கேன் டூரிங் சோசலிசத்தில் நிகழ்த்திய ஒரு புரட்சி” என்னும் தலைப்புகளில் மூன்று தனிதனிக் கட்டுரைத் தொகுதிகளாக 1877 ஜனவரி 3 முதல் 1878 ஜூலை 7 வரை வெளியிடப்பட்டன.
1877 ஜூலையில் முதல் பகுதி ஒரு பிரசுரமாகவும், 1878 ஜூலையில் இரண்டாம், மூன்றாம் பகுதிகள் ஒரு பிரசுரமாகவும் வெளியிடப்பட்டன. அதே மாதத்தில் மூன்று பகுதிகளையும் சேர்த்து ஒரு முழு நூலாக, “திரு ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி: தத்துவம். அரசியல் பொருளாதாரம். சோசலிசம்” என்னும் தலைப்பில், லைப்ஸிக் நகரில் எங்கெல்ஸின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது. பின்வந்த ஜெர்மன் பதிப்புகளில் துணைத் தலைப்பு நீக்கப்பட்டது. 1886-இல் ஜூரிச்சில் இரண்டாம் பதிப்பும், 1894-இல் ஸ்டுட்கார்ட்டில் மூன்றாம் பதிப்பும் வெளியாயின. அவற்றிலும் எங்கெல்ஸ் எழுதிய சிறிய முன்னுரைகள் இடம்பெற்றன. 1892-இல் இந்நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.
அதில், மூன்று ஜெர்மன் பதிப்புகளுக்கு எங்கெல்ஸ் எழுதிய மூன்று சிறிய முன்னுரைகளும் இணைக்கப்பட்டன. பின்வந்த பதிப்புகளும், மொழிபெயர்ப்புகளும், “டூரிங்குக்கு மறுப்பு” என்னும் குறுகிய தலைப்புடனே வெளியிடப்பட்டன. 1894-இல் வெளியிடப்பட்ட ஜெர்மன் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, எமிலி பர்ன்ஸ் (Emile Burns) மொழிபெயர்த்த ஆங்கிலப் பதிப்பை 1947-இல் சோவியத் யூனியனில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது.
1880-இல் பால் லஃபார்க்கின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்நூலின் அறிமுகத்திலுள்ள முதல் அத்தியாயத்தையும், மூன்றாம் பாகத்திலுள்ள முதலிரண்டு அத்தியாயங்களையும் செழுமைப்படுத்தி, ஒரு தனி நூலாக எங்கெல்ஸ் வெளியிட்டார். அதுதான், இன்றைக்கும் உலகின் மிகவும் செல்வாக்குப் பெற்ற சோசலிச இலக்கியமாகத் திகழும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்னும் நூலாகும். இந்த நூல் எங்கெல்சின் வாழ்நாளிலேயே பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, புரட்சிகரத் தொழிலாளர்களிடையே மிகவும் விரிவான அளவில் செல்வாக்குப் பெற்றது.
டூரிங்குக்கு மறுப்பு நூலில் எங்கெல்ஸ், டூரிங்கின் கருத்துகளைத் தகர்த்ததோடு மட்டுமின்றி, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிக் கூறியுள்ளார். மார்க்சியத் தத்துவம் பற்றிய ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தை இந்த நூலில் பெறலாம். மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்திலும் அதற்குப் பின்பும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் மார்க்சியக் கல்வி வகுப்புகளில் மார்க்சியத் தத்துவத்தின் பாட நூலாக இந்நூல் பயிலப்பட்டு வந்துள்ளது. இந்த நூலை அடியொற்றியே, பின்னாளில் லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்ற நூலை எழுதினார். நூலின் உள்ளடக்கக் கூறுகளைச் சுருக்கமாய் இங்குக் காண்போம்.
மூன்று முன்னுரைகள்
முதல் மூன்று பதிப்புகளுக்கான மூன்று சிறிய முன்னுரைகளில் எங்கெல்ஸ், கீழ்க்காணும் சில முக்கியமான கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்:
- டூரிங்குக்கு எழுதிய எதிர்மறை விமர்சனமானது, மார்க்சியக் கோட்பாடுகளின் நேர்நிலையான விளக்கமாகவும் அமைந்துவிட்டது.
நானும் மார்க்சும் ஆதரித்துப் போராடி வருகிற இயக்கவியல் முறை, கம்யூனிச உலகக் கண்ணோட்டம் பற்றிய விளக்கமாகவும் அமைந்துள்ளது. - இந்த நூலில் விளக்கப்பட்டுள்ள கண்ணோட்டம் பெருமளவு மார்க்ஸ் உருவாக்கி வளர்த்தது. என்னுடைய பங்கு சிறிதே.
இந்த நூல் முழுவதையும் மார்க்சுக்குப் படித்துக் காண்பித்தேன். இதில் பகுதி-2, 10-வது அத்தியாயம் மார்க்ஸ் எழுதியதாகும்.
உணர்வுபூர்வ இயக்கவியலை ஜெர்மன் கருத்துமுதல்வாதத்திலிருந்து காப்பாற்றி, இயற்கை, வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்துக்குப் பயன்படுத்தியவர்கள் மார்க்சும் நானுமே. - இயக்கவியல் விதிகளை இயற்கைக்குள் நிலைநாட்டுவது என்ற பிரச்சினையே இல்லை. மாறாக, இயற்கையில் அவற்றைக் கண்டறிவதும், அதிலிருந்து முறையாக அவற்றை வெளிப்படுத்துவதுமே இப்போதைய தேவையாகும்.
முகவுரை
இந்த நூலின் முதல் அத்தியாயம் முகவுரை என்பதாகும்.
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்னும் நூலில் இந்த முகவுரை முதல் அத்தியாயமாய் இடம்பெற்றுள்ளது. இம்முகவுரையில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் பெரிதும் மதிக்கக்கூடிய காற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஷர்ல் ஃபுரியே, ராபர்ட் ஓவன் ஆகிய மூவரைப் பற்றியும், அவர்கள் முன்வைத்த சோசலிசக் கருத்துகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இயக்கவியலின் தோற்றம், ஹெகல் வளர்த்தெடுத்த இயக்கவியலில் இருந்த கருத்துமுதல்வாத உள்முரண்பாடு, இன்றைய பொருள்முதல்வாத அடிப்படையிலான இயக்கவியல், இயக்கவியல் அடிப்படையிலான நவீனப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றை விளக்கியுள்ளார்.
வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிநாதமாக விளங்கும் அடிக்கட்டுமான, மேற்கட்டுமானக் கோட்பாடு விளக்கப்பட்டுள்ளது. “சமுதாயத்தின் பொருளாதாரக் கடாமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்போதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் இதன் மேற்கட்டுமானமாய் அமையும் வரலாற்றின் அந்தக் காலகட்டத்துக்குரிய நீதிநெறி, அரசியல், அரசாங்கம், மதம், தத்துவக் கருத்துகளுக்கும் பிற கருத்துகளுக்கும் முடிவான விளக்கம் காண முடியும்… மனிதனின் வாழ்நிலையே அவனுடைய உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது. மனிதனின் உணர்வுநிலை அவனுடைய வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை” என்கிறார் எங்கெல்ஸ். கடந்த கால வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பது இதிலிருந்து பெறப்படுகிறது என்கிறார்.
சோசலிசத்தின் பணியானது, நிறைவான ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வதல்ல. வர்க்கப் பகைமையின் வரலாற்றுப் பொருளாதார அமைப்பைப் பரிசீலிப்பது, நிலவும் பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவுகட்டும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தல் ஆகியவையே நவீன சோசலிசத்தின் பணியாகும். முதலாளித்துவ உற்பத்தி முறை குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அதேபோல் அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது என்று முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடிக்கிறார். வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், உபரி மதிப்பு ஆகிய இரண்டு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்கிறார் எங்கெல்ஸ்.
பகுதி-1: தத்துவம்
இப்பகுதியில் மன நிச்சயவாதம் (Apriorism), உலக வரைமுறையியல் (World Schematism), இயற்கைத் தத்துவவியல் (Natural Philosophy), கான்ட், ஹெகல் கோட்பாடுகள் பற்றிய கொச்சையான புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் டூரிங் முன்வைக்கும் தத்துவக் கோட்பாடுகளை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார்.
தத்துவ, கணித, விஞ்ஞானக் கோட்பாடுகள் சிந்தனையிலிருந்து பெறப்பட்டவை; அவற்றை இயற்கையிலும் மனித உலகிலும் பயன்படுத்த வேண்டும். அவை இவற்றுடன் ஒத்துப்போக வேண்டும் என்கிற டூரிங்கின் கருத்தை விமர்சித்து, சிந்தனை, புற உலகிலிருந்தே பெறப்படுகிறது, கோட்பாடுகள் புற உலக எதார்த்தத்திலிருந்து தருவிக்கப்படுகின்றன; இயற்கயோடும் மனித வரலாற்றோடும் ஒத்திருக்கும் வரையே அவை செல்லுபடி ஆகும் என நிறுவுகிறார் எங்கெல்ஸ்.
காலத்துக்குத் தொடக்கம் உண்டு; விசும்புக்கு வரம்பு உண்டு என்பது டூரிங்கின் கருத்தாயுள்ளது. காலத்துக்குத் தொடக்கம் இல்லை, விசும்புக்கு வரம்பு கிடையாது என்பதை விளக்குகிறார் எங்கெல்ஸ். உலகம் சுய-சமத்துவ நிலையிலிருந்தது. ஒரு கட்டத்தில் இயக்கத்தைப் பெற்றது என்கிறார் டூரிங். இக்கருதுகோள், இயக்கத்தின் ஆதித்தூண்டல் கடவுள் என்கிற கருத்துக்கு இட்டுச் செல்லும் என்பது எங்கெல்ஸ் கருத்து.
அடுத்துப் பொருள்-இயக்கம் பற்றி விளக்குகிறார். பொருளும் இயக்கமும் இணைந்தே இருக்கும்; இரண்டையும் பிரிக்க முடியாது; பொருளில்லா இயக்கம் இல்லை, இயக்கமில்லாப் பொருள் இல்லை; இரண்டையும் அழிக்கவோ படைக்கவோ முடியாது; இயக்கம் என்பது பொருளின் நிலவுகைப் பாங்கு (mode of existence) – என இயக்கவியலின் அடிப்படையை எங்கெல்ஸ் எடுத்து விளக்குகிறார்.
இயற்கைக்கு உணர்வு பூர்வமான நோக்கம் உண்டு; உயர் பண்பான நுண்ணயம் உண்டு; சித்தம் உண்டு; உலகில் ஒழுங்கை நிலைநாட்டும் இடையறாத கடப்பாடு இயற்கைக்கு உண்டு என டூரிங் முன்வைக்கும் கருத்தை எங்கெல்ஸ் மறுத்துரைக்கிறார். அது கடவுள் கொள்கைக்கு இட்டுச் செல்லும் என்கிறார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைக் குற்றம் சொல்லும் டூரிங், வாழ்வுக்கான போராட்டம் விலங்குலகில் மட்டுமே உண்டு, தாவரங்களுக்குப் புலனுணர்ச்சி இல்லை, வளர்சிதை மாற்றம் உயிரினங்களுக்கு மட்டுமே, உயிரற்ற பொருள்களில் இல்லை என்கிறார். இவற்றை மறுத்து, எங்கெல்ஸ் பல எடுத்துக்காட்டுகள் தருகிறார்.
அடுத்ததாக, என்றென்றும் மாறாமல் எல்லாக் காலத்துக்கும் எல்லா தேசத்துக்கும் பொருந்தக்கூடிய நித்தியமான உண்மைகளைப் பற்றி டூரிங் பேசுகிறார். ஒழுக்கநெறி, சட்டம், சமத்துவம், சுதந்திரம், அவசியம் (தேவை) – இவையெல்லாம் மாறாத உண்மைகள் என்கிறார். எங்கெல்ஸ் இதனை மறுக்கிறார். அறிவின் மண்டலங்களை உயிரற்ற இயற்கை, வாழும் உயிரினம், மனித வரலாறு என மூன்றாகப் பிரிக்கும் எங்கெல்ஸ், இவற்றில் எந்த மண்டலத்திலும் மாறாத நித்திய உண்மைகள் கிடையாது என்கிறார்.
உண்மை-பொய், சரி-தவறு, நன்மை-தீமை, நல்லது-கெட்டது இவை எல்லாமே சார்புத் தன்மை கொண்டவை. அறுதியும் இறுதியுமான உண்மைகள் எதுவும் கிடையாது. காலத்துக்குக் காலம், தேசத்துக்குத் தேசம் இவை மாறிக்கொண்டே இருக்கின்றன. பொருள்களின் உற்பத்தியும், பரிவர்த்தனையும் படைக்கும் பொருளாதார உறவுகளே இவற்றின் அடிப்படை. வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ள சமூகத்தில் வர்க்க ஒழுக்கநெறியே நிலவும். சட்டம், நீதி, நியாயம் என்பதெல்லாமே வர்க்கச் சார்புடையவையே என்று தெளிவாய் எடுத்துரைக்கிறார் எங்கெல்ஸ்.
சமத்துவம், சுதந்திரம் என்கிற கருத்துகள் வரலாற்று ரீதியாய் எப்படி வள்ர்ச்சிபெற்று வந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டும் எங்கெல்ஸ், நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மனித சுதந்திரத்தை மேம்படுத்தியுள்ளன; இத்தகைய நவீன சக்திகள் மட்டுமே வர்க்கமற்ற, வாழ்க்கையைப் பற்றிக் கவலை இல்லாத ஒரு சமுதாயம் அமைவதைச் சாத்தியமாக்கும்; அப்போதுதான் உண்மையான சுதந்திரம் பற்றிய பேச்சு இருக்கும் என்று முடிக்கிறார்.
இறுதிப் பகுதியாக, இயக்கவியலின் மூன்று விதிகளை எங்கெல்ஸ் எடுத்து விளக்குகிறார். இயக்கவியல் பற்றித் தனியாக மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல் எதுவும் எழுதவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கும் உண்டு. எங்கெல்ஸ் எழுதிய “இயற்கையின் இயக்கவியல்” நூலும் பாதியிலேயே நின்று போனது. ஆனால், டூரிங்குக்கு மறுப்பு நூலில் எங்கெல்ஸ், இயக்கவியலின் அடிப்படையான விதிகள் மூன்றையும் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு விரிவாக விளக்கியுள்ளார்.
முதலாவது விதி முரண் விதி. இரு எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் என்னும் விதி. அதாவது, பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பொருளிலும், எந்தவொரு நிகழ்விலும், மனித சமூகத்திலும், மனித சிந்தனையிலும் இரு எதிர்நிலைகள் உள்ளன. அவை ஒன்றையொன்று சார்ந்தும் இணைபிரியாமலும் இருக்கின்றன. அதேவேளையில் , இரண்டும் எப்போதும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டே உள்ளன. இதனாலேயே, பொருள் இயக்கத்தில் உள்ளது, மாற்றத்துக்கு உள்ளாகிறது, வளர்ச்சி ஏற்படுகிறது.
இரண்டாவது விதி, அளவு மாற்றமும் பண்பு மாற்றமும் என்னும் விதியாகும். பொருள்களில் ஏற்படும் மாற்றமானது, முதலில் அளவு மாற்றமாகத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியதும், பண்பு மாற்றமாக வெளிப்படுகிறது. அதாவது புதிய பொருள் உருவாகிறது.
மூன்றாவது விதி, நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்னும் விதியாகும். இவ்வாறு புதியதாகத் தோன்றிய பொருளில் வேறு இரண்டு எதிர்நிலைகள் உருவாகின்றன. அவற்றுக்கிடையேயான போராட்டத்தில் மீண்டும் அளவு மாற்றம், பண்பு மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் இன்னொரு புதிய பொருள் உருவாகிறது. முதலில் நிலைமறுக்கப்பட்டு உருவான புதிய பொருள் மீண்டும் நிலைமறுக்கப்பட்டு வேறொரு புதிய பொருள் உருவாகிறது. மனித சமூகமும் அதனுள் நிலவும் இரு எதிர்நிலைகளின் போராட்டத்தால் மெல்ல மெல்ல மாறுதலுக்கு உள்ளாகிக் குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு புதிய சமூகம் உருவாகிறது. அவ்வாறு உருவான முதலாலித்துவ சமூகமும் நிலைமறுக்கப்பட்டு சோசலிச சமூகம் மலரும் என்பதுதான் வரலாற்று எதார்த்தமாகும்.
கட்டுரையாளர்: மு.சிவலிங்கம் (மார்க்சிய எழுத்தாளர்)
No comments:
Post a Comment