இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு- பிரேம சந்திரன்

 இலக்கு இணைய இதழ்களில் வெளியான கட்டுரையே தேவைகருதி மீண்டும் பதிபிக்கிறோம்

இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னர் ஏகாதிபத்தியங்களால் தங்களது நெருக்கடியை தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட கீன்சிய பொருளாதார கொள்கையும் 1970 களில் தோல்வியடைந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கீன்சிய கொள்கையை காட்டிலும் அதிகொடூரமான சுரண்டல் கொள்கையான தனியார்மய, தாராளமய மற்றும் உலகமய பொருளாதார கொள்கைகளை உலகில் செயல்படுத்த துவங்கியது. அத்துடன் கூடவே அதுவரை கடைபிடித்து வந்த முதலாளித்துவ சீர்திருத்த கொள்கையை கைவிட்டு பாசிசக் கொள்கைகளை செயல்படுத்தவும் பாசிச அமைப்புகளை கட்டியமைக்கவும் துவங்கியது. இன்று உலகம் முழுக்க 2008-ல் துவங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு அமெரிக்க ,ஐரோப்பா மற்றும் ஆசியகண்டங்களில் பாசிசகட்சிகளை நிறுவுவதும் மற்றும் பாசிசஆட்சிகளை கட்டி அமைக்கப்படுவதும் பொதுபோக்காக மாறிவருகிறது. இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா பாசிச இயக்கத்தின் அரசியல் பிரிவான பி.ஜே.பிகட்சிதான் கடந்த எட்டு ஆண்டுளாக ஆட்சியில் உள்ளது. இந்தியாவில் RSS துவங்கும் போதே இத்தாலிய பாசிஸ்டான முசோலினியுடனான தொடர்போடுதான் துவங்கப்பட்டது. அதன் துவக்கம் முதலே அதன் கொள்கை பாசிசமாகும். RSSன்பாசிசத்திற்கு அடிப்படை இந்துத்துவ கொள்கையாக கொள்கையாக இருந்தபோதும் அதன்நோக்கம் அன்றைய பிரிட்டீஷ்காலனி ஆதிக்கவாதிகளின் நலன்களை பாதுகாத்து வளர்ப்பதாகவே இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்தபாசிச அமைப்பு தற்போதுபா.ஜ.க. என்ற அரசியல் அமைப்பை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றி உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து இந்திய மக்களின் மீது பாசிச தாக்குதலை மிகவும் வெளிப்படையாகவே நடத்திவருகிறது. இன்றைய சூழலில் பாசிசம் பற்றியும் குறிப்பாக இந்தியாவில் பாசிசத்தின் வளர்ச்சியைப் பற்றியும் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் அதற்காக பாடுபடுபவர்களும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கான விவாதத்திற்காக இந்த கட்டுரையை இலக்கு முன்வைக்கிறது.

பாசிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான உறவு:-

பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கமானது மூன்றாவது கம்யூனிஸ்டு அகிலத்தில் விரிவான நிர்வாககுழுவின் 13 ஆவது கூட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டது. அது பின்வருமாறு கூறுகிறது.

"பாசிசம் என்பது நிதிமூலதனத்தின் (ஏகாதிபத்தியத்தின்) ஆகபடுமோசமான, படுபிற்போக்கான, ஆக அதிக இனவெறி கொண்ட ஏகாதிபத்தியவாதிகளின் பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரம்ஆகும்." ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிட்ட முதலாளிகள் இதுவரை கடைபிடித்து வந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை கைவிட்டு விட்டு பாசிசர்வாதிகார ஆட்சி முறைக்கு மாறுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய ஆய்வுகளை நாம் கற்ற வேண்டும்.

ஏகாதிபத்தியம் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை என்றால் பாசிசம் என்றால் என்ன என்பது குறித்து நாம் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியாது.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்கள் குறித்து லெனின் கூறுவதாவது:

1) உற்பத்திமற்றும்மூலதனக்குவிப்பைத்தொடர்ந்து, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய ஏகபோகங்கள் உருவாகின்றன.

2) வங்கி மூலதனமும் தொழில்மூலதனமும் இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்பட்டு நிதிமூல தனம் உருவாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பொருளாதாரத்துறையில் நிதிமூலதனக் கும்பல்கள் உருவாகின்றன.

3) இதுவரை பலநாடுகளுக்கு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வதோடு கூடவே அங்கிருந்து மூலதனத்தையும் ஏற்மதி செய்வது என்றநிலை உருவாகியது.

4) இதன் மூலம் உலகில் சில நாடுகள் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் பலநாடுகள் ஏழைநாடுகளாகவும் பிளவுபடும் நிலை உருவாகியது.

5) உலகிலுள்ள முதலாளித்துவ வளர்ச்சிபெறாதநாடுகளை வளர்ச்சிபெற்ற இந்த ஏகாதிபத்திய நாடுகள் கைப்பற்றிக் கொண்டுவிட்டன. இந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான போட்டியானது கைப்பற்றபட்ட நாடுகளை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியாகவும் போராகவும் மாறிவிட்டது.ஏகாதிபத்தியங்களின் இந்த ஆதிக்கப்போக்கின் காரணமாகவும், ஏகாதிபத்தியங்களின் கொடூரமான சுரண்டல் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கும் தற்போதைய ஆட்சி முறைக்கு மாறாக ஒரு பிற்போக்கான ஆட்சிமுறைக்கு மாறுவதற்கான போக்கு அனைத்து முதலாளித்துவ அரசியல் அமைப்புகளிலும் காணப்பட்டது. இந்தப்போக்குகள் பாசிசத்துடன் மிகவும் இணக்கமான வடிவங்களில்தோன்றியது.

இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவு கூறுவது சரியாக இருக்கும். மார்க்ஸ்கூறுவதாவது:

"தமது வாழ்க்கையில் சமூக உற்பத்தி நடத்துவதில் மனிதர்கள் திட்டவட்டமான உறவுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை. மனிதனுடைய சித்தத்திற்கு, விருப்புவெறுப்பிற்கு அப்பாற்பட்டவை, இந்த உற்பத்திஉறவுகள் அவர்களுடைய பொருளாதாய உற்பத்திசக்திகள் வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கும் பொருத்தமாய் உள்ளன. இந்த உற்பத்திஉறவுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு முழுமைதான் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக அமைகிறது. அதுதான் உண்மையான அடிப்படை. அதன்மீதுதான் சட்டம், அரசியல் என்கிற கட்டுக்கோப்பு நிர்மாணிக்கப்பட்டு நிற்கிறது. அந்த அஸ்திவாரத்திற்கு பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் திட்டவட்டமான வடிவங்கள் அமைகின்றன. அதாவது பொருளாதார வாழ்வின் அடிப்படையிலிருந்துதான், உற்பத்தி உறவுகளிலிருந்துதான் மக்கள் அவர்களது கருத்துக்களை உருவாக்குகின்றனர்.

"பொருளாயாத வாழ்வின் உற்பத்திமுறை தான் சமுதாய வாழ்க்கையின், அரசியல் வாழ்க்கையின், சிந்தனைப் போக்கின் ஓட்டத்தை அல்லது இயக்கத்தை பொதுவாக நிர்வகிக்கிறது. (அதாவது நமது பொருளாதார வாழ்நிலைதான் நமது சிந்தனையையும் அதனால் உருவாகும் கருத்துக்களையும் தீர்மானிக்கிறது. மாறாக நமது சிந்தனைகளும் கருத்துக்களும் நமது பொருளாதார வாழ்க்கையை தீர்மானிக்காது).இத்தகைய பொருளாதார அஸ்திவாரம் மாறுதல் அடைகிறபோது அதன்மீது எழுப்பப்பட்ட பிரமாண்டமான கட்டிடம் முழுவதும் அதாவதுசட்டம், அரசியல், கருத்துக்கள் போன்றவை அதிகவிரைவாகமாற்றப்படுகிறது. அதாவது மனிதர்கள் அவர்களது பொருளாதார வாழ்க்கைக்குப் பொறுத்தமான சட்டம், அரசியல் மற்றும் கருத்துக்களை மாற்றிக்கொள்வார்கள். இந்த மாறுதல்களை கவனிக்கும் காலத்தில் இரண்டையும் அதாவது உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில்ஏற்படும் பௌதீக மாறுதல்களையும் மற்றொருபுறத்தில்சட்டம், அரசியல், மதம், கலாச்சாரஞானம், தத்துவம் முதலான சுருக்கமாக சொல்வதானால் சித்தாந்தரீதியான வடி வங்களையும் எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்த சித்தாந்த வடிவங்களுக்கு உள்ளேதான் இந்த மோதல் பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு ஒருமுடிவுகாணும் வரை போராடுகிறார்கள். ஆக இந்த அடிப்படை கோட்பாட்டு நிலையிலிருந்து பார்க்கையில் ஏகாதிபத்திய பொருளாதார அடித்தளத்திற்கும் அதாவது ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதார நலன்களுக்கும் ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் தோன்றிய பாசிசக் கொள்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைநாம் அனுமானிக்கலாம்.(3ம் இலக்கு இதழிலின் தொடர்ச்சி) சென்ற இதழின் தொடர்ச்சி......பிரிட்டீஷாரின் காலனியத்தை கட்டிகாப்பாற்றுவதற்கான காலனிய இனவியல் கோட்பாடு.......

பிரிட்டீஷ் இந்த நாட்டில் காலனிய ஆட்சியை மேற்கொண்டபோது இங்கு நூற்றுக்கணக்கான மொழிகள் பேசக்கூடிய மக்களினங்களும், ஆயிரக்கணக்கான சாதிய பிரிவுகளும், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை சார்ந்தவர்கள், சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், ஆயிரக்கணக்கான குலதெய்வ மற்றும் சிறுதெய்வ, பெருதெய்வ வழிபாட்டு பிரிவினர்கள் போன்ற பல்வேறுபட்ட இறைவழிபாட்டு பிரிவினரே இங்கு இருந்தனர் பழக்க வழக்கங்களிலும் பண்பாட்டிலும் ஒருவரொக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக வேறுபட்டவர்களாக இருந்தனர். இந்து என்ற சொல்லோ இந்து மதமோ இங்கு இருக்கவில்லை. வேதங்களிலோ மற்றும் இந்துமத சாஸ்திர நூல்கள் என்று கூறப்படும் பழைய நூல்களிலும் கூட இந்து என்ற சொல் கிடையாது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை போன்று திட்டவட்டமான ஒரு பொது இறைவழிபாட்டு முறை என்பது இந்துக்கள் அல்லது இந்து மதத்திற்கென்று இன்றுவரை கிடையாது. ''இந்து'' என்ற சொல்லுக்கு விளக்கமானது ''யார் கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்தமத பிரிவினர் மற்றும் இஸ்லாமியர் பிரிவுகளை சார்ந்தவராக இல்லையோ அவரே ''இந்து'' என்று பிரிட்டீஷார் வகைப்படுத்தினர்.

இதற்கு ஒப்புதல் சாட்சியாக காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் கூற்றொன்றை இங்கு கூறுவது சரியாக இருக்கும். அவர் கூறுவதாவது: "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார் உபாசகர், ஐப்பன் பக்தர், எல்லையம்மனை கும்பிடுகிறவர் என்று நம்மை பிரித்துக்கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம். இப்போது “இந்து சமூகம்'' என்று பொதுப்பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழு, எட்டாக தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற மதத்தவர்கள்தான் அதிக தொகையாக இருப்பார்கள்.அதாவது இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல் நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகி இருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான் எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு இந்து என்று பொதுப்பெயரைத் தந்து இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையை செய்திருக்கான்" சந்திரசேகரேந்திரசரஸ்வதி (காஞ்சி பரமாச்சாரியார்) தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று, ஏழாம் பதிப்பு, 1988, வானதி பதிப்பகம், சென்னை, பக்கம் 305 – 306.

ஆக நாம் பிரிட்டீஷாரை புரிந்துகொள்வது என்றால் அவர்களின் காலனி ஆதிக்கத்தின் வரலாறை புரிந்துகொள்வதுதான். முதலில் உலகம் முழுக்க ஐரோப்பியர்களுக்கு காலனிகள் இருந்தன. ஐரோப்பியகாலனி ஆதிக்கவாதிகளான பிரிட்டன், ஹாலந்து, போர்த்துகீஸ், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தாங்கள் காலனி ஆதிக்கம் செலுத்துவதற்கான தகுதியான இனம் என்று தங்களது நாட்டிலும் தாங்கள் ஆளுகின்ற காலனிய நாட்டிலும் நியாயப்படுத்தவும் காலனிய நாடுகளில் இனபாகுபாடுகள் மதபாகுபாடுகள் மற்றும் சாதியபாகுபாடுகள் (இந்தியாவில்) இவைகளை இட்டுகட்டி கட்டியமைத்து காலனிய மக்கள் தங்களை எதிர்த்து போராடாதவாறும் அவர்கள் மத்தியிலேயே பகை முரண்பாட்டை உருவாக்கி மோதவைக்கவும், தொடர்ந்து காலனியாதிக்கம் செலுத்தவும் காலனிய இனவியல் கொள்கையை 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பாதியிலும் உருவாக்கினர். இவற்றில் தீவிர ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்டது பிரிட்டீஷ்தான். காரணம் உலகத்தில் பிரிட்டனுக்குத்தான் மிகப்பரந்து விரிந்து பரந்த செல்வ வளமிக்க இந்தியா உட்பட காலனிகள் அதிகம். அவர்களுக்கு அத்தகைய இனபேத ஆய்வு தேவைப்பட்டது. அந்த ஆய்வுகளில் முதன்மையாக பங்கெடுத்தவர்கள் வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் முல்லர் மற்றும் ஹெர்பர்ட்ரிஸ்லே இன்னும் பலர் ஆவர்.

அந்த ஆய்வின் மூலமாக ஆதியில் மத்திய ஆசியாவில் பேசப்பட்ட ஒரு தெய்வீக மூலமொழியிலிருந்து சமஸ்கிருதம், பார்சி, லத்தீன், கிரேக்கம், கோதிக் மற்றும் கெல்டிக் மொழிகள் தோன்றின. அதிலிருந்து அதன் கிளை மொழிகள் தோன்றின. இதன்மூலம் ஆரிய மேலான்மை கோட்பாடும் ஐரோப்பிய வெள்ளைத்தோல் மேலான்மை கோட்பாடும் நிறுவப்பட்டது.

மனுதர்ம அடிப்படையில் சாதிய பாகுபாடுகளை உருவாக்கி திடப்படுத்திய பிரிட்டீசாரின் பிராமணிய சட்டத்தொகுதி மேலும் 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் இந்திய மக்கள் மத்தியில் தோன்றும் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சட்ட விதிகளின் தொகுதி ஒன்றை உருவாக்க அன்றைய கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் ஜென்டூ சட்டத்தொகுதி அல்லது பண்டிதர்களின் புனித ஆணைகள் என அழைக்கப்பட்ட விதிமுறைகளை உருவாக்க - 11 சமஸ்கிருத பண்டிதர்களை நியமித்தார். இங்குள்ள சமஸ்கிருத ஏடுகளை பிரிட்டீஷாரால் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனவே அவர்கள் இந்தியாவின் மதநூல்கள் மற்றும் சமூக பழக்கவழக்கங்களில் பண்டிதர்களுக்கு இருந்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத் தொகுப்பு ஒன்றை உருவாக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டனர். அதன் விளைவாக ஆங்கிலோ-பிராமணிய சட்ட நூல் ஒன்று உருவானது. அது வர்ணாஸ்ரம தர்மத்தை (மனுஸ்மிருதி) அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது.

அது முற்றிலுமாக வார்த்தை அளவிலும், உணர்வுகள் அளவிலும் உண்மையான நடைமுறைகளை மீறியதாக இருந்தது. ஏனென்றால் வார்த்தைகளைப் பொறுத்தவரை மூலங்களுடன் ஒப்பிடுகையில் அது துல்லியமற்று இருந்தது. உணர்வுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை தங்கள் சாதிக்கு ஏற்றவாறு திரிக்கும் உரிமைகளாக எடுத்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அதற்கு எவ்வித இலக்கிய ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது. நாட்டில் சாதிய வேறுபாட்டு பிரச்சனைகளை ஏற்றத்தாழ்வு, அல்லது உயர்வு தாழ்வு பிரச்சனைகளாக இன்னும் பெரிதாக்கவே அது உதவியது.

காலனிய ஆதிக்கத்திற்கு முன்பிருந்த இந்திய மக்கள் சமூகத்தில் எழுந்த சர்ச்சைகள் அனைத்தும் ''சாதி'' அல்லது ''பிராதரி'' ''ஊர்'' கூட்டம் அல்லது ''பஞ்சாயத்து'' என்ற சமுதாய முறைகளில் தீர்வு காணப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது மற்ற உயர் சாதியினரின் அங்கீகாரத்திற்கான அவசியம் எதுவும் இன்றி உள்ளூர் மரபுகள் மற்றும் பாரம்பரியங்களின் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனையானது ஒரு சாதி அல்லது குலத்திற்குள் அவனது சக குடிமக்களாலேயே முடிவு செய்யப்பட்டது. மாறாக இந்த பிராமண பண்டிதர்கள் பரவலான யதார்த்த சமூக நடைமுறைகளை பிரதிபலிப்பதற்கு பதிலாக தங்களை ஒற்றை அதிகார மையம் என்ற அந்தஸ்தை நிறுவ நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்கை அளவிலான நியாயங்களை அதாவது அவர்களால் எழுதப்பட்ட மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டினர். பெரும்பாலான பிரிட்டீஷார் அவர்கள் கூறியதே உண்மை என நம்பினர் எனினும் சிலருக்கு சந்தேகம் இருந்தது.

இந்திய சமூகத்தை மேலோட்டமாக பார்க்கும்போது உண்மையான சமூக நடைமுறைகளானது அன்று நிச்சயமாக அதிகாரப்பூர்வ அல்லது ''சாஸ்திரீய'' சட்டத்தைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

ஆனால் இப்போது பழைய புனித நூல்கள் எல்லாம் மேற்கோள் காட்டப்படுகின்றன. அத்துடன் சமுதாயத்தின் தன்னாட்சி அதிகாரத்தை தடுக்கவும், மத மேன்மையின் பெயரால் மேலும் அதைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக அந்தப் பழங்கால நெறிமுறைகளில் உண்மையில் முன்பு இல்லாத கடுமை புகுத்தப்பட்டது. இது பிரிட்டீஷாரின் நோக்கங்களை நன்றாக நிறைவேற்றியது.நிர்வாகக் காரணங்களுக்காக அவர்களுடைய காலனி மக்களையும், வளங்களையும் அதை கணக் கெடுக்கவும், வகைப்படுத்தவும், மதிப்பீடு செய்யவும் வெளிப்படையாக விரும்பியது.

இந்திய மக்கள் மீது பிரிட்டீஷாரின் கட்டுப்பாட்டைத் திணிக்கவும், நிலை நாட்டவும் இனம், சமுதாயம், சாதி மற்றும் நிறம் சார்ந்த பாகுபாடுகள் எல்லாம் பிரிட்டீஷ் அரசு திட்டத்தின் ஓர் அங்கமாகவே சக்திவாய்ந்த முறையில் கடை பிடிக்கப்பட்டன. அந்த நடை முறையில், வேதங்கள் பற்றிய ஞானத்துடன் கூடிய பிராமணர்கள் இந்தியாவில் தங்களுடைய ஆட்சிக்கு மிகத் தகுதியான, பொருத்தமான இடைத் தரகர்களாக இருப்பார்கள் என்ற அவர்களின் ஆரம்ப நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது பிராமணர்கள் பிரிட்டீஷாரின் நல்லாதரவை நன்கு அனுபவித்தனர். அத்துடன், பிராமண பண்டிதர்களின் எண்ணங்களால் உந்தப்பட்டு, தாழ்ந்த சாதி என எண்ணிய மற்ற இனங்களை விட தாங்கள் மேலானவர்கள் என்றும் பிராமணர்கள் நினைக்கத் தொடங்கினர்.

அதன் விளைவாக, பிரிட்டீஷ் அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் எல்லாம் பிராமணர்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் அவர்களுடைய எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே. ஆனால் அன்றைய இந்திய அரசுப் பணிகளில் அவர்கள் 90 சதவீத இடங்களைஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர். இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் மிகக் கீழ்நிலை பணிகளில் மட்டும் அவர்கள் இல்லை. இந்தியர்களுக்கு வாய்ப்பு இருந்த உயர் தொழில்களில், குறிப்பாக சட்டம், மருத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் அவர்கள் பத்திரிக்கை மற்றும் கல்வித்துறைகளில் நுழைந்தனர். எனவே, அதிலும் அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலித்தது. அதுவே இந்திய வெகுஜன கருத்தாகவும் மாறியது.

நீண்ட கட்டுரை முழுமையாக வாசிக்க இந்த இணைப்பில் செல்க தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்