பொருளும் பொருள்முதல்வாதிகளும்
எல்லா பொருள்முதல்வாதிகளுக்கும் பொதுவாயுள்ள கருத்துக்களை முதலில் வரையறுத்துச் சொன்னோம். அதன் பிறகு ஆன்மீகவாதிகளை எதிர்த்து எல்லா பொருள்முதல்வாதிகளும் தரும் வாதங்களையும் வரையறுத்தோம். கடைசியில், சந்தேகவாதம் எப்படி தவறு என்றும் விளக்கி நிரூபித்தோம். இனி இந்தப் போதனையிலிருந்து சில முடிவுகளுக்கு வருவோம்.
1. பொருள் என்பது என்ன?,
2.பொருள்முதல்வாதியாக இருப்பதற்கு அர்த்தம் என்ன? என்ற இரண்டுகேள்விகளுக்கு விடைகளைத் தந்து பொருள்முதல்வாதத்தின் வாதங்களைப்லப்படுத்துவோம்.
1. பொருள் என்பது என்ன?
இந்தக் கேள்வியின் முக்கியத்துவம்; ஒரு பிரச்சனையைத் தீர்க்கவேண்டியேற்படுகிற பொழுதெல்லாம், கேள்வியை நாம் மிகத் தெளிவாகப்போட வேண்டும். உண்மையைச் சொன்னால், மேற்படி கேள்விக்குத் திருப்திகரமாக விடை தருவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.
அதற்கு ஒரு திருப்திகரமான விடை கிடைக்க வேண்டும் என்றால் பொருளைப்பற்றி ஒரு தத்துவத்தை நாம் நிர்மானித்தாக வேண்டும். ஒரு பிரச்சனையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்தப் பிரச்சனை தொடர்பாக நாம் பல கேள்விகளை நமக்குள்ளே எழுப்பி அதற்கு விடை காண வேண்டும். அதன் மூலமே நம்மால் அப்பிரச்சனையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக நாம் சாதிப் பிரச்சனையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால்
1. சாதி என்றால் என்ன?
2. சாதி எப்படி தோன்றியது,
3. சாதி தோன்றியபோது இருந்த அதே சூழ்நிலைதான் இன்றும் நிலவுகிறதா? சாதி தோன்றியபோது இருந்தது போலவேதான் இப்போதும் இருக்கிறதா? சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப சாதியின் நிலைகளில் மாற்றங்கள் உள்ளதா அல்லது இல்லையா? போன்ற பல கேள்விகளை நாம் எழுப்பி அதற்கு நாம் விடை காண்பதன் மூலம் நம்மால் சாதிப்பிரச்சனையை புரிந்துகொள்ள முடியும். இதற்கு மாறாக வெறுமனே நாம் என்னவகையான உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறோமோ அந்த உணர்சிகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த சாதிப் பிரச்சனையை நாம் புரிந்துகொள்ளவும் முடியாது, அந்தப் பிரச்சனையை தீர்க்கவும் முடியாது. நமது மக்களில் பலரும் இந்தப் பிரச்சனையை உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டே பார்ப்பதால்தான் மக்களின் எதிரிகள் அவர்களின் உணர்சிகளை தூண்டிவிட்டு மக்களிடையே சாதிய மோதல்களை ஏற்படுத்தி இந்த சாதிப் பிரச்சனை தீராமல் நீடிக்கச் செய்கிறார்கள். ஆகவே நாம் சந்திக்கும் எந்தப் பிரச்சனையையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக அப்பிரச்சனை தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும், அதன் மூலம் மட்டுமே நாம் அந்தப் பிரச்சனையை புரிந்துகொள்வதோடு அதனை தீர்க்கவும் முடியும்.
பொருள் என்பது நாம் நமது கைகளால் தொட்டுப் பார்க்கக்கூடியது, அது கடினமாக இருக்கும் எதிர் அழுத்தம் உள்ளது, என்றுதான் மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். பண்டையகால கிரேக்கர்கள் பொருளை இப்படித்தான் வரையறுத்துச் சொன்னார்கள்.அது அவ்வளவு சரியான வரையறுப்பு அல்ல என்பதை விஞ்ஞானம் நமக்கு இன்று எடுத்துக் காட்டுகிறது.
2. பொருளைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாய் வந்த தத்துவங்கள். பொருளைப் பற்றிய தத்துவங்களைச் சாத்தியமான அளவுக்குச் சுருக்கமாக, தெளிவாக, விமர்சிப்பதே நமது நோக்கம். இங்கே விஞ்ஞான விளக்கங்களில் இறங்கப் போவதில்லை. பொருள் என்பது ஏதோ ஒரு திடமான ஒன்று அதை முடிவில்லாமல் கூறுபோட்டுக் கொண்டே போக முடியாது என்று கிரேக்க நாட்டினர் கருதினார்கள். கூறுபோட்டுக்கொண்டே வந்து ஒரு கட்டத்தை எட்டியவுடன் அதற்கு மேல் கூறுபோட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இவ்வாறு மேலும் கூறுபோட முடியாத நிலையை எட்டிய கடைசி கூறுகளுக்கு அணுக்கள் என்று பெயரிட்டார்கள். இந்த அணுக்கள் ஒவ்வொன்றும் வேறு வேறானவை என்றும் நினைத்தார்கள். எண்ணெய் வகைப்பட்ட அணுக்கள் மாதிரி வழவழப்பாகவும் உருண்டையாகவும் சில அணுக்கள் இருக்கும்; புளித்த காடியின் அணுக்கள் மாதிரி சொற்பாக கொக்கி போல் வளைந்து வேறு சில அணுக்கள் இருக்கும் என்றெல்லாம் நினைத்தார்கள்.
பண்டைய காலத்தில் டெமாக்ரிடஸ் என்றொரு பொருள்முதல்வாதிஇருந்தார்; அவர்தான் இந்த அணுத்தத்துவத்தை நிர்மாணித்தார்.
பிரபஞ்சத்தை பொருள்முதல்வாத ரீதியில் அவர்தான் முதன் முதலாக விளக்க முயற்சித்தார். உதாரணமாக மட்டரகமான அணுக்களால் ஆனதே இந்த மனித உடல் என்றும், மெல்லிய ரக அணுக்களின் சேர்க்கையே ஆன்மா என்றும் அவர் நினைத்தார். தேவர்கள் உண்டு என்று அவர் ஒப்புக்கொண்டார் என்றாலும் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் அவர் விளக்க விரும்பினார். ஆகவே தேவர்கள் உன்னதமான மெல்லிய ரக அணுக்களால் உண்டாக்கப்பட்டவர்களே என்று டெமாக்ரிடஸ் ஆணித்தரமாகச் சொன்னார். எனவே பண்டைக்காலத்திலிருந்தே பொருளை விளக்க மனிதர்கள் முயற்சித்து வந்துள்ளார்கள். மத்திய காலம் வந்த பிறகும் கிரேக்கர்கள் விவரித்த இந்த அணுத் தத்துவத்துக்கு மேலாகப் புதிதாய் ஒன்றும் யாரும் சொல்லிவிடவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் தான் இந்த தத்துவம் ஆழ்ந்தமாறுதல்களுக்கு உள்ளாயிற்று.
பொருள் என்பது பல அணுக்களால் ஆனது; இந்த அணுக்கள் பல கடினமான துகள்களால் ஆனவை; இந்தத் துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்கின்றன; என்று இப்போது எண்ணினார்கள். ஆக கிரேக்க அணுத் தத்துவம் கைவிடப்பட்டது. அணுக்கள் உருண்டையாக இருக்கும் கொக்கி போல் வளைந்திருக்கும் வழவழப்பாக இருக்கும் என்ற எண்ணங்கள் மறைந்தது என்றாலும் அவை கடினமாக இருக்கும், அவற்றை மேற்கொண்டு பிரிக்கவே முடியாது அவை ஒன்றையொன்று ஈர்த்து இயங்கிக்கொண்டிருக்கும் என்று சிலர் தொடர்ந்து சாதித்து வந்தார்கள்.
அதன் பிறகு விஞ்ஞானம் முன்னேறியதால் இன்னும் குறிப்பாக, கணக்காக, விஷயத்தை சொல்ல முடிந்தது. பொருளை விளக்குவதில் இன்னும் ஆழமாகப் போக முடிந்தது. இப்பொழுது என்ன நிலைமை? அணு என்பது மையம்; அதைச் சுற்றி பல கோளங்கைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு மண்டலம் ஈர்ப்பு சக்தியால் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்தக் கோளங்கள் மின்விசையை ஏற்றிச் செல்கின்றன என்று இப்போது கண்ணெதிரே நிருபித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அணுவின் மையம் அதாவது அணுவின் மூலக்கரு இருக்கிறதே அதுவே ஒரு ரெம்பவும் சிக்கலான விஷயம்; அதன் அமைப்பு ஒரேமாதிரியில்லாமல் பலவிதமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அணுக்களின் ஒரு கூட்டுத் தொகைதான் பொருள் என்பது. ஒரு மேஜையின் மேல் கையை வையுங்கள் உங்கள்கையை மேஜையை எதிர்த்து அழுத்துவதாக ஒரு அனுபவம் உங்களுக்கு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் அந்த மேஜையின் அணுக்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மின்சாரத் தாக்குதல்கள் மின்சார அதிர்ச்சிகள்,வெளிப்பட்டு கையை வந்தடைகின்றன என்பதுதான்.
பொருளை விளக்குவதில் இதுதான் நவீன காலத்திய தத்துவம். விஞ்ஞான சோதனைகளும் ஆராய்ச்சிகளும் இந்த தத்துவத்தை மெய் என்று உறுதிப்படுத்தியுள்ளன. இதைக் கேட்டவுடனே ஆன்மீகவாதிகள், “ஓஹோ, கடினமான பொருள் என்றென்றும் கிடையாதா? அப்படியென்றால், பொருள் என்பதே கிடையாதே; பொருளின் எதிர் அழுத்தத்தை நமது தத்துவ மெய்ஞானத்துக்கு ஆதாரமாகக் கொள்ளும் பொருள்முதல்வாதிகளுக்கு இனி
சாட்சியங்கள் எதுவும் கிடையாது. பொருள் மறைந்து மாயமாய்ப் போய்விட்டது” என்று வாதிக்கலாயினர்.
இந்த வகையில் வாதம் புரிவது ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதைக் கேட்டவுடனே சில மார்க்சியவாதிகள் கூட (மார்க்சியவாதிகள் பொருள்முதல்வாதியாகத்தான் இருக்க முடியும், இல்லாவிட்டால் அவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல) நிலைதடுமாறிப் போயிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன?
ஆன்மீகவாதிகள் விஷயத்தை, பிரச்சனையை, குழப்புகிறார்கள் அவ்வளவுதான். பொருளின் அமைப்பை, உள்ளடக்கத்தை, இன்னும் கொஞ்சம் கணக்காக வரையறுக்கிறோம் என்பதற்காகப் பொருளே இல்லை, அது மறைந்து மாயமாகப் போயிற்று என்று சொல்லிவிடுவதா? இது குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறென்ன?
அது போகட்டும், இங்கே முக்கியமாக, அவசியமாக, பார்க்க வேண்டியது என்னவென்றால் பொருளை பொருள்முதல்வாதிகள் எப்படி பார்க்கிறார்கள், எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? விஞ்ஞானம் வளர வளர பொருளைப் பற்றிய பல உண்மைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அதிலிருந்து கடினமான பொருள் உலகில் இல்லை என்றால் உலகில் பொருளே இல்லை என்றும் அது மறைந்துவிடுகிறது என்றும் கருத்துமுதல்வாதிகள் வாதிட்டார்கள். அவர்களது வாதங்களைக் கேட்ட மார்க்சியவாதிகளான பொருள்முதல்வாதிகளே தடுமாறி கருத்து முதல்வாதிகளின் கருத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
இவ்வாறு சமூகம் பற்றிய உண்மைக்கு மாறான கருத்துக்களை மிகவும் திறமையாகவும், சதித்தனமாகவும் எடுத்துச் சொல்லி நம்மை நம்பவைத்து ஏமாற்றுபவர்களும் உண்டு, அத்தகைய ஏமாற்றுக்காரர்களை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை பெற்று அதன் அடிப்படையில் ஒருவரது கருத்தை பரிசீலிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். விஞ்ஞானத்தை வளர்க்கும் விஞ்ஞானிகளின் முயற்சியின் காரணமாக சமூக விஞ்ஞானமும் வளர்கிறது. பொருளே இல்லை என்ற கருத்துமுதல்வாதிகளின் பொய்களை விஞ்ஞானமானது தகர்க்கிறது. பொருளைப் பற்றிய புரியாத புதிர்களை எல்லாம் விஞ்ஞானம் நமக்கு எப்படி புரியவைக்கிறதோ, அது போலவே மார்க்சியம் என்ற பொருள்முதல்வாத தத்துவமானது சமூகத்தைப் பற்றி நாம் இதுவரை புரிந்து கொள்ளாத புதிர்களை நமக்குப் புரிய வைக்கிறது.
3. பொருள்முதல்வாதிகள் பொருளை எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்?
இந்த விஷயம் சம்பந்தமாய் ஒரு பாகுபாடு செய்வது மிகவும் அவசியம்.
1. பொருள் என்பது என்ன? என்று முதலில் பார்க்க வேண்டும். அதன் பிறகு
2.பொருள் எப்படி எப்படி எல்லாம் இருக்கும் என்றும் பார்க்க வேண்டும்.
முதல் கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் கொடுக்கும் பதில் இதுதான்: பொருள் என்பது புறநிலையிலுள்ள ஒரு யதார்த்தம் அது மனத்தைச் (சிந்தனையை) சார்ந்திராமல் சுதந்திரமாக இருப்பது. மனதில்லாமலேயே அது இருக்க முடியும்; அது இருப்பதற்கு மனம் அவசியமே இல்லை என்கிறார்கள். இதைப் பற்றி சொல்லும் போது “பொருளைப் பற்றிய கருத்தோட்டம் குறிக்கிறதெல்லாம் நம் புலனுணர்ச்சிகள் மூலமாக நாம் அறியும் பறநிலை யதார்தமேயொழிய வேறெதுவுமில்லை” என்று கூறினார் லெனின். (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற அவரது நூலில் 323 ஆம் பக்கம் பார்க்க)
ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது புறநிலையில் அதாவது நமது விருப்பங்களுக்கும், நமது சிந்தனைகளுக்கும் வெளியில் பொருள்கள் உள்ளது என்பதுதான் பொருள்முதல்வாதிகளின் கருத்தாகும். உதாரணமாகநமக்கு முன்னே ஒரு மேஜை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், நாம் சிந்திப்பதால்தான் மேஜை அங்கு இருக்கிறதா? இல்லை, நாம் சிந்திக்காவிட்டாலும் அங்கு மேஜை இருக்கும் என்பதுதானே உண்மை. நாம் சிந்திக்காவிட்டால் அல்லது அங்கு மேஜை இல்லை என்று கருதினால் அங்கு மேஜை இல்லாமல் போய்விடுமா? அங்கு மேஜை இல்லாமல் போய்விடா தல்லவா? இந்த எளிமையான உண்மையைக் கூட கருத்துமுதல் வாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆகவேதான் கருத்துமுதல்வாதிகளில் ஒரு பிரிவினர் உண்மை என்பது எங்குமே கிடையாது என்றும் நாம் காண்பதெல்லாம் மாயையே என்று சொல்லி உழைக்கும் மக்கள் படும் துண்பங்களையே மூடிமறைத்து அந்தத் துண்பங்களிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடுவதிலிருந்து திசைதிருப்புகிறார்கள். இந்த வகையில்தான் கருத்துமுதல்வாதமானது உழைக்கும் மக்களுக்கு எதிரான தத்துவமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான்
பொருள்கள் எல்லாம் மனது என்ற ஒன்று இல்லாமலேயே இருக்க முடியும் என்றும் பொருள்கள் இருப்பதற்கு மனது என்று ஒன்று தேவையே இல்லை என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.மேலும் பொருள்கள் எல்லாம் நமது மனதுக்கு வெளியே சுதந்திரமாக இருந்தாலும் பொருளின் இருப்பை நமது புலன் உணர்வுகளால் உணர முடியும் அதன் மூலம் அந்தப் பொருளைப் பற்றிய கருத்துக்களை மனிதர்களால் உருவாக்க முடியும் என்று பொருள்முதல்வாதிகள் சொல்கிறார்கள். உதாரணமாக ஒரு மலையை நமது கண்களால் பார்த்து உணர்வதன் மூலம் அது ஒரு மலை என்று புரிந்துகொண்டு மலை என்ற கருத்தை உருவாக்குகிறார்கள்.
\அது போலவே ஒரு மரத்தைப் கண்கலால் பார்த்து அதனை மரம் என்று உணர்ந்து மரம் என்ற கருத்தை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். அந்த வகையில் பொருள்களை புரிந்துகொள்ள மனிதர்களின் புலனுணர்வு மனிதர்களுக்குப் பயன்படுகிறது. ஆகவே மனிதர்கள் தமது புலன் உணர்வுகளைப் பயன்படுத்தி பொருள்களைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், அந்தப் பொருள்கள் எல்லாம் மனிதர்களின் சிந்தனைக்கு வெளியில்தான் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் கருத்துமுதல்வாதிகள் மனிதர்களை குழப்பி அவர்களின் புலனுணர்வையும் பகுத்தறிவையும் ஊணப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஒரு சமூகக் காரணம் இருக்கிறது. அதுதான் இந்த சமூகமானது பகைமையான வர்க்கங்களைக் கொண்ட வர்க்க சமூகமாக இருப்பதால் சுரண்டும் வர்க்கங்கள் ஏழை உழைக்கும் வர்க்கங்களை சுரண்டுவதற்கு பலாத்காரமான ஒடுக்குமுறையோடு கூடவே உழைக்கும் மக்களிடம் தத்துவ குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்தியல் ஒடுக்குமுறையையும் கையாளுகிறார்கள். இத்தகைய கருத்துக் குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களது வறுமைக்கும் துன்பங்களுக்கும் காரணமான உண்மைகளை அறிந்துகொண்டு தங்களது விடுதலைக்காகப் போராட முன்வந்துவிடக் கூடாது என்று ஆளும் வர்க்கங்களும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளும் கருதுகிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றவே கருத்துமுதல்வாதக் கருத்துக்களையும் சிந்தனை முறையையும் மக்களிடம் பரப்புகிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல் வாத சிந்தனை முறையை மக்களிடம் பரப்ப வேண்டும்.
இனி இரண்டாவது கேள்வி “பொருள் எப்படியெல்லாம் இருக்கும்“ என்ற கேள்வி. இந்தக் கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கு விடை தரவேண்டியவர்கள் நாங்கள் அல்ல;விஞ்ஞானம்தான் இதற்கு விடை அளிக்க வேண்டும்.“ என்று சொல்கிறார்கள். முதல் கேள்விக்குத் தந்த விடை பண்டையகாலத்திலிருந்து தற்காலம்வரை மாறினதே இல்லை. இரண்டாவது கேள்விக்குத் தந்த விடை காலத்துக்குக் காலமும் மாறி வந்திருக்கிறது, மாறித்தான் தீரவேண்டும்.
ஏனெனில் அது விஞ்ஞானத்தைச் சார்ந்து நிற்பது; அது மனித அறிவின் தரத்தைப் பொறுத்திருக்கிறது, அது இறுதி விடை அல்ல. ஆக, பிரச்சனையை தெளிவாக, முறையாக, வரையறுத்து நிறுத்துவது எவ்வளவு அத்தியாவசியம் என்று இப்போது பார்க்கிறோம் அல்லவா? இந்த இரண்டு கேள்விகளையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதற்கு ஆன்மீகவாதிகளுக்கு நாம் இடமளிக்கவே கூடாது. இரண்டு கேள்விகளையும் பிரித்து வரையறுக்க வேண்டும். அவற்றில் முதல் கேள்விதான் மூலக்கேள்வி என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அந்த முதல் கேள்விக்கு, மூலக்கேள்விக்கு, பொருள்முதல்வாதிகள் ஆரம்பத்தி லிருந்தே ஒரே விடைதான் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும்.
“புறநிலையில் யதார்த்தமாக இருக்கும் தன்மை நமது மனதுக்கு வெளியே இருக்கும் தன்மை, என்று பொருளுக்கு ஒரு குணாம்சத்தை அங்கீகரிப்பதோடு மெய்ஞான ரீதியான பொருள்முதல்வாதம்சம்பந்தப்பட்டிருக்கிறது எனலாம்” என்று லெனின் சொல்லியிருக்கிறார்.(அதே நூல் பக்கம் 317)
ஆகவே இதிலிருந்து தெரிந்துகொள்வது என்ன? பொருள் என்பது புறநிலையில் உள்ளது, நமது சிந்தனைக்கு வெளியே உள்ளது என்ற குணத்தைக் கொண்டதுதான் பொருள் என்பதாகும். இந்தப் பொருள் எப்படியெல்லாம் இருக்கிறது என்பது அடுத்த இரண்டாவது கேள்வியாகும்.
இந்த இரண்டு கேள்வியையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக் கூடாது. உதாரணமாக ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி புரட்சி நடத்தி வெற்றி பெற்றதா? என்ற கேள்வியையும் இப்போது ரஷ்யாவில் சோசலிச ஆட்சி நிலவுகிறதா? என்ற கேள்வியையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவதை நாம் பார்க்கிறோம். அன்றைய ரஷ்ய சூழலை சரியாக மதிப்பிட்டு செயல்பட்டதன் மூலம் போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்றார்கள். ஆனால் பின்னால் வந்த குருஷேவ் போன்றவர்கள் அவர்கள் காலத்து சூழலுக்கு
புறம்பான முடிவெடுத்து செயல்படுத்தியதால் அங்கு சோசலிசம் வீழ்த்தப்பட்டது என்பதை நாம் தனித்தனியாக ஆய்வு செய்வதன் மூலமே புரிந்துகொள்ள முடியும். இதற்கு மாறாக இரண்டையும் போட்டு குழப்புபவர்களின் நோக்கம் மார்க்சியமே வெற்றிக்கான தத்துவம் இல்லை என்ற கருத்தை மக்களிடம் விதைக்கும் முயற்சியாகும். ஆகவேதான் பொருள் எப்படியெல்லாம் இருக்கும் என்ற கேள்விக்கு அது மாறிக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானம் சொல்கிறது, அதுதான் உண்மை என்று யதார்த்த நடைமுறையின் வாயிலாக நாம் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக ஒரு சிறு குழந்தை என்ற பொருள் எப்படியெல்லாம் இருக்கிறது என்ற கேள்விக்கு குழந்தை பிறந்தபோது அது குழந்தையாக இருந்தது, சிறிது காலத்துக்குப் பிறகு அது சிறுவனகாக இருந்தது, அதற்குப் பிறகு அது இளைஞனகவும் பின்பு முதியவனாகவும் மாறியது என்பதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. ஆகவே ரஷ்யா எப்படியெல்லாம் இருந்தது என்ற கேள்விக்கு ஜார் காலத்தில் ஜாரின் எதேச்சிகாரத்துக்கு கட்டுப்பட்ட நாடாக இருந்தது, லெனின் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி காலத்தில் சோசலிச ரஷ்யாவாக இருந்தது, குருஷேவின் தலைமையிலான ஆட்சி காலத்தில் அதிகாரவர்க்க ஆட்சிக்குட்பட்ட ரஷ்யாவாக மாறியது தற்போது புதின் தலைமையிலான ஏகாதிபத்திய ரஷ்யாவாக மாறியது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாற்றங்களையும் இதற்கான காரணங்களையும் நாம் புரிந்துகொள்வதன் மூலமே ரஷ்ய சமூகத்தின் இயக்கத்தையும், அது போல பிற நாட்டு சமூக இயக்கங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஆகவேதான் ஒரு பொருளை அதன் இயக்கத்திற்குள் வைத்து பார்க்க வேண்டும் என்று இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் நமக்கு வழிகாட்டுகிறது. ஆகவே நாம் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள பிரச்சனை பற்றி தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய வரையறை இல்லாமல் குழப்புவதற்கு முயற்சி செய்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
4. பொருள் என்ற கருத்தோட்டத்தைப் பற்றிபொருள்முதல்வாதிகள் அளிக்கும் வரையறுப்புகள் நமக்கு வெளியே நமது மனத்துக்கு வெளியே பொருள் இருக்கிறது என்று பார்க்கிறோம். ஆகவே அப்படிக் கூறவும் செய்கிறோம். அதே பொழுதில் பொருள் என்பது இன்னின்ன காலத்தில் இன்னின்ன இடத்தில் இருக்கிறதன்மை பெற்றது என்ற காலத்தையும் களத்தையும் குறித்து வரையறுக்கின்றோம். 2. பொருள் இயங்கிக்கொண்டே இருக்கும் தன்மை பெற்றது என்று இயக்கத்தையும் குறித்து வரையறுக்கிறோம். இந்த இரண்டு அம்சங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது, காலம் களம் என்பவை நமது மனதில் உதித்த எண்ணங்களே என்று ஆன்மீகவாதிகள் நினைக்கிறார்கள்.
காந்த் என்ற ஜெர்மன் மெய்ஞானத் தத்துவவாதி தான் இந்த வாதத்தை முதல் முதலில் ஆதரித்தார். களம் என்ற வடிவத்தை நாம்தான் பொருளுக்குத் தருகிறோம்; களம் என்பது மனித மனத்திலிருந்து உதித்த ஒரு எண்ணம்தான்; அது போல காலம் என்பதும் மனித மனத்திலிருந்து உதித்த ஒரு எண்ணம்தான் என்று ஆன்மீகவாதிகள் கருதுகிறார்கள்.
அப்படியல்ல களம் நம் மனத்தில் இல்லை; நாம்தான் களத்தில் இருக்கிறோம்; என்று பொருள்முதல்வாதிகள் சாதிக்கிறார்கள். நமது வாழ்வு விரிந்து மலர்வதற்கு காலம் என்பது ஒரு அத்தியாவசியமான நிபந்தனையாகும்; ஆகவே நமது மனத்துக்கு வெளியே காலத்திலும் களத்திலும் நிலைகொண்டிருப்பதே பொருள்; என்று பொருள்முதல்வாதிகள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
“காலம், களம் என்பவை எல்லா வாழ்நிலைக்கும் ஆதார வடிவங்கள் ஆகும். களத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இருக்க முடியும் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதுபோல் காலத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இருக்க முடியும் என்று சொல்லுவதும் முட்டாள்தனமாகும்.” நமது உணர்வைச் சார்ந்திராமலே சுதந்திரமாக ஒரு யதார்த்தம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். நமக்கு முன்னாலேயே இருந்து வந்தது என்று நாமெல்லோரும் நம்புகிறோம். நாம் மறைந்த பிறகும் அது நீடித்திருக்கும் என்றும் நம்புகிறோம். நாம் பிறப்பதற்கு முன்னாலேயே பாரீஸ் நகரம் இருந்தது என்று நினைக்கிறோம். அதை அடியோடு தரைமட்டம் ஆக்கினாலொழிய நாம் இறந்த பிறகும் அது இருந்துகொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறோம். பாரீஸைப் பற்றி நாம் சிந்திக்காமல் மறந்திருக்கும் போதுகூட பாரீஸ் என்னவோ இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது நம்மைப் பொறுத்தவரையில் சர்வநிச்சயம். அதைப் போலவே, நாம் என்றைக்குமே பார்த்திராத விஜயம் செய்திராத பல்லாயிரக்கணக்கான நகரங்கள் உண்டு. அவற்றின் பெயர்கூட நமக்குத் தெரியாது, இருந்தபோதிலும் அவையெல்லாம் இருக்கத்தானே செய்கின்றன.
பொதுவாகவே மனித குலத்தின் துணிந்த முடிவு இது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கிற விஷேசத்தால் இந்த வாதத்தை நாம் இன்னும் கணக்காக இன்னும் உறுதியாகச் சொல்ல முடிந்துள்ளது. ஆன்மீகவாதிகள் கிளப்புகிற மயிர்பிளக்கும் வாதங்களை இது நிர்மூலமாக்குகிறது.
“மனிதனோ அல்லது வேறு எந்த ஜீவராசியோ வாழ்ந்திராத வாழ்ந்திருக்க முடியாத நிலையில் ஒரு காலத்தில் பூமி இருந்தது என்று இயற்கைத்துறை விஞ்ஞானங்கள் திண்ணமாகக் கூறுகின்றன. உயிரோடு இயங்கும் ஜீவராசிகள் பின்னால் வந்தவைதாம். நீண்ட பரிணாம வளர்ச்சியின் பயனாக வந்தவையே அவை என்று லெனின் கூறுகிறார். (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்று நூல் பக்கம்140) களத்திலும் காலத்திலும் நின்று பொருள் நிலைகொண்டு இருக்கிறது என்றும் அதே சமயத்தில் பொருள் இயங்கிக்கொண்டும் இருக்கிறது என்றும் விஞ்ஞானங்கள் நமக்கு ஆதாராங்கள் தருகின்றன. பின் சொன்ன நுண்ணிய அறிவுத்துணுக்கை நவீனகால விஞ்ஞானம் நமக்குத் தந்துள்ளது. அதுரெம்பவும் முக்கியம். ஏனெனில் பொருளுக்கு இயங்கும் சக்தி கிடையாதுஎன்று சொன்ன பழைய தத்துவத்தை அது வேரறுக்கிறது.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? காலம் களம் என்பவை நமதுமனத்தில் உதித்த எண்ணங்களே என்று ஆன்மீகவாதிகளானகருத்துமுதல்வாதிகள் கருதுகிறார்கள், இது உண்மையல்ல, யதார்த்தமும் விஞ்ஞானமும் இதனை மறுக்கின்றன. களம் அல்லது இடம் என்பது நமது மனதில் இல்லை, மாறாக அந்த இடத்தில்தான் நாம் இருக்கிறோம், மேலும் காலம் என்பது நமது மனதிற்குள் இல்லை, இந்த உண்மையை நாம் எளிதாக யதார்த்தத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும். நேரம் கடப்பதை நமது மனத்தால் கட்டுப்படுத்த முடியாது என்பது யதார்த்தமான உண்மையாகும். அப்படி இருக்கும் போது நேரம் என்று சொல்லப்படும் காலமானது நமது மனதிற்குள் எப்படி இருக்க முடியும் இந்த யதார்த்த உண்மையை மறுப்பவர்கள்தான் ஆன்மீகவாதிகளும் கருத்துமுதல்வாதிகளும் ஆவார்கள். அதேபோலவே காலமும் நமது மனதிற்குள் இல்லை, இந்த காலத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்ற யதார்த்தத்தை ஆன்மீகவாதிகள் மறுக்கிறார்கள்.
உதாரணமாக ஒரு காலத்தில் ஈவேரா பெரியார் வாழ்ந்து வந்தார் என்பது யதார்த்தமான வரலாறாகும். அதே போலவே பல தலைவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து வந்தார்கள் என்ற உண்மை நம் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வாழ்ந்தார், அவர் தனது கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்கு பல இடங்களுக்கும் சென்றார் என்பது வரலாறாகும். ஆன்மீகவாதிகளின் கூற்றுப்படி காலமும் களமும் நமது மனதுக்குள்ளேதான் இருக்கிறது என்றால் பெரியார் வாழ்ந்த காலத்தையும், அவர் சென்ற இடங்களும் நமது மனதுக்குள்ளேதானே இருக்க வேண்டும். அதாவது ஒருவரது மனம் பெரியார் வாழ்ந்த காலத்தையும் இடங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பெரியார் இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்பது பொய்யாகிவிட வேண்டும். இது உண்மையா? யதார்த்தமா?, பெரியார் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்தார் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதற்கான தத்துவமே ஆன்மீகவாதம் மற்றும் கருத்துமுதல்வாதமாகும். இதன் மூலம் ஆன்மீகவாதமானது உண்மையை மக்கள் அறிந்துகொள்வதற்கு தடையான தத்துவம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு நேர்மாறாக பொருள்முதல்வாத தத்துவமானது உண்மையை கண்டுபிடிப்பதற்கு நம்மை ஊக்குவிக்கும் தத்துவமாகும். எவ்வளவுதான் பிற்போக்குவாதிகளும் ஆதிக்கவாதிகளும் சமூகப் பிரச்சனைகளையும் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டுபிடிப்பதற்கு எதிராக தடை செய்தாலும்,குழப்பினாலும் நம்மால் உண்மையை பகுத்தறிந்து கண்டுபிடிக்க முடியும் என்றும் உண்மைகளை கண்டுபிடிக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று பொருள்முதல்வாத தத்துவம் நமக்கு வழிகாட்டுகிறது.
“இயக்கம் “ என்பது பொருளின் வாழும் தன்மையாகும், வாழ்க்கை முறையாகும். இயக்கமற்ற பொருளைப் பற்றி எப்படிச் சிந்தித்துப் பார்க்கவும் முடியாதோ அதேபோல் பொருளற்ற இயக்கத்தைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கவே முடியாது” என்கிறார் எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு என்ற அவரது நூல் பக்கம் 70)
இன்றைய நிலையிலிருக்கும் பூமியானது ஒரு நீண்ட காலத்திய பரிணாமத்தின் மொத்த விளைவாகும். அதாவது நிதானமான ஆனால் இடையறாத, இயக்கத்தின் விளைவேயாகும் என்பது நமக்குத் தெரியும்.
ஆகவே பொருள் இருக்கிறது என்று நிரூபித்துக் காட்டிய பிறகு குறிப்பாகப் பின்வருமாறு வரையறுக்கிறோம்.
“இயங்கிக்கொண்டே இருக்கும் பொருளைத் தவிர உலகில் வேறொன்றும்இல்லை. அந்த இயங்கும் பொருள் காலத்திலும் களத்திலும்தான் இருந்து இயங்க முடியுமேயல்லாமல் வேறெந்த ரீதியிலும் இயங்க முடியாது”
என்றார் லெனின். (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் நூல் பக்கம் 236)
முடிவுரை
இந்தக் கருத்துக்களின் விளைவாக என்ன முடிவாகிறது? கடவுள் என்ற கருத்து,”பரிசுத்த ஆன்மா, பரமாத்மா” என்ற கருத்து, பிரபஞ்சத்தை சிருஷ்டித்த அல்லது படைத்த கர்த்தா என்ற கருத்து, இருக்க சாத்தியமே இல்லை என்று ஆகிறது. ஏனெனில் காலத்துக்கும் களத்துக்கும் அப்பாற்பட்ட கடவுள் என்று ஒன்று இருக்க முடியாது. காலத்துக்கு அப்பாற்பட்டு இருக்கும் கடவுள் (அதாவது எந்த குறிப்பிட்ட காலத்திற்கும் நிலைகொள்ளாத கடவுளை) (அதாவது அங்கே இங்கே என்றும் எங்குமே இடங்கொண்டிராத கடவுளை) நம்புவதென்றால், ஆன்மீகவாத ரீதியான மாயாவாதத்தில்தான் நாம் போய் விழ வேண்டும். அதில் விழுந்தால் விஞ்ஞானத்தைக் கொண்டு விஷயங்களைச் சரியா தப்பா என்றுஆராய்வதை அனுமதிக்கக்கூடாது.
விஞ்ஞான முடிவுகளின் பலத்தைத் துணையாகக் கொண்டு பொருட்கள் களத்திலும் காலத்திலும் இருந்து இயங்குகின்றன என்று பொருள்முதல்வாதிகள் அறைந்து கூறுகின்றனர். ஆகவே இந்தப் பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டிருக்க முடியாது, அதாவது படைக்கப்பட்டிருக்க முடியாது.
ஏனெனில் இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்து முடித்திருக்க வேண்டும் என்றால் இந்தப் பிரபஞ்சத்தை ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்க வேண்டும். ஏதோ ஒரு காலப் பிரமாணம் அல்லது கால அவகாசம் கடவுளுக்கு வேண்டியிருந்திருக்கும். ஆனால் கடவுளுக்குக் காலம் என்று ஒன்றும் கிடையாதே! மேலும் இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்திருக்க முடிந்திருக்க வேண்டும் என்றால் இந்தப் பிரபஞ்சத்தை ஏதோ ஒரு களத்தில் கடவுள் படைத்திருக்க வேண்டும். ஆனால் கடவுளுக்குத்தான் களம் கிடையாதே! எனவே சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் பிறந்திருக்க வேண்டும். அற்றதிலிருந்து உற்றது என்றாகியிருக்க வேண்டும்
என்ற அவசியம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தை யாரோ படைத்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமானால் முதலில் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரபஞ்சம் இருக்கவில்லை என்றும் அடுத்தபடியாக வெறும் சூன்யத்திலிருந்து “ஏதோ ஒன்று வெளிவந்தது என்றும் ஒப்புக்கொண்டாக வேண்டும்” இதனை விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளாது. ஆகவே விஞ்ஞானத்துக்கு எதிரே ஆன்மீகவாத வாதங்கள் நிற்க முடியாது என்று பார்த்தோம். அதே சமயத்தில் பொருள்முதல்வாதிகளின் வாதங்கள் விஞ்ஞானத்தோடு ஒன்றி நிற்கின்றன என்றும் பார்த்தோம். ஆகவே பொருள்முதல்வாதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையேயுள்ள நெருங்கிய உறவை மீண்டும் இங்கே வலியுறுத்திக் காட்டுகிறோம்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை.
1. உலகிலுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அது இயங்கிக்கொண்டே இருக்கும். அதாவது அந்தப் பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். உதாரணமாக இந்தியாவில் சாதி தோன்றியபோது இருந்தது போன்ற நிலைகள் அப்படியே இப்போதும் இருக்கிறதா? இல்லை என்பதே யதார்த்தமாகும். ஒரு சமயம் பிறப்பின்அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொழிலை மட்டும் செய்யும் நிலை இருந்தது. ஆனால் தற்போது பிறப்பின் அடிப்படையில் ஒருவர் குறிப்பிட்ட தொழிலில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இங்கு இல்லை. அதற்காக யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.உதாரணமாக செருப்பு தைக்கும் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட சக்கிலிய சாதியைச் சேர்ந்தவர் மருத்துவ கல்லூரியில் பயின்று மருத்துவராகி மருத்துவ தொழில் ஈடுபடுவதை யாரும் தடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சாதியானது இப்போது எப்படி இருக்கிறது, இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதையும் இதற்குப் பிறகு என்ன வகையானதாக மாறும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த சாதிப்பிரச்சனையை தீர்த்து சாதியற்ற நிலையை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு அதன் இயக்கத்தை அதாவது மாற்றங்களை நாம் ஆராய வேண்டும். அதுவே இயங்கியல் முறையாகும். ஆகவே சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு கம்யூனிச அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவை நியமித்து அந்தக் குழுவுக்கு சாதி பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் பணியை அந்தக் குழு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் செய்யும் ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கைகள் தயாரித்து பரவலான மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். அந்த அறிக்கைகளை பரவலாக விவாதிக்க வேண்டும். அதன் மூலம் உருவாக்கப்படும் கருத்துக்களை முன்னணியினர் விவாதித்து சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.
2. உலகில் இயக்கமற்ற பொருளும் இல்லை, பொருளற்ற இயக்கமும் இல்லை என்றார் எங்கெல்ஸ். மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி இருக்கும் என்பது கிராமத்து பழமொழி. அதுபோல வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் பிரச்சனைகள் இருக்கும், அதேபோல் பிரச்சனை என்று ஒன்று இருந்தால் அதற்கு தீர்வும் இருக்கும் என்பார்கள் நமது முன்னோர்கள். ஆகவே நாம் சந்திக்கும் பிரச்சனை என்பது யதார்த்தமானதாகும். அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதனை தீர்ப்பதற்கு நாம் வழிகாண வேண்டும். அவ்வாறு நாம் வழி காணவில்லை என்றாலும் பிரச்சனையானது அதன் இயல்பான போக்கிலேயே மாறுதலுக்குள்ளாகும். இந்த இயக்கமானது காலத்திலும் களத்திலும்தான் இயங்கும். ஆகவேதான் ஒரு பொருளைப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் ஒவ்வொரு காலத்திலும் அந்தப் பொருள் எவ்வாறு இருந்தது என்ற வரலாற்றின் அடிப்படையில்தான் புரிந்துகொள்ள வேண்டும், அதேபோலவே அந்தப் பொருள் அல்லது அந்தப் பிரச்சனையானது எங்கெங்கு எப்படி இருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உதாரணமாக இந்தியாவிலும் சாதி இருக்கிறது, ஜப்பானிலும் சாதி இருந்தது.
ஜப்பானில் சாதி ஒழிந்துவிட்டது ஆனால் இந்தியாவில் சாதி ஒழியவில்லை. இடத்துக்கு இடம் ஒரே பிரச்சனையானது மாறுபட்ட வகையில் இருப்பதை நாம் பார்க்க வேண்டும். ஜப்பானில் சாதி ஒழிக்கப்பட்டதற்கான அடிப்படை என்ன? இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாததற்கு காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வுகளிலிருந்து இங்கு சாதியை ஒழிப்பதற்கும் தீண்டாமை கொடுமையை முடிவிற்கு கொண்டுவருவதற்குமான வழிமுறைகளை நாம் காண வேண்டும். இதற்கு மாறாக அதாவது சாதிப் பிரச்சனையை காலத்திலும் களத்திலும் வைத்து பகுத்தறியாமல் பொதுவாக சாதிப்பிரச்சனையைப் பார்த்தாலும் உணர்ச்சிவசப்பட்டு சாதிப்பிரச்சனையை பார்த்தாலும் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை நம்மால் காண முடியாது. ஆகவே சாதிப்பிரச்சனையை இயங்கியல் முறையில் பகுத்தறிந்தால் மட்டுமே சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கான தீர்வை நாம் காண முடியும்.
3. கடவுள் இருக்கிறார் அவர்தான் இந்த உலகத்தையும், சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற பிரபஞ்சத்தையும் படைத்தார் என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். கடவுள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறார் என்றும், கடவுளுக்கு காலமும் களமும் இல்லை என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். கடவுள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும் மட்டுமோ மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருப்பார் என்பதல்ல, ஏனெனில் கடவுளுக்கு காலமும் களமும் இல்லை என்கிறார்கள். இந்த உலகை கடவுள் படைத்தார் என்றால் இந்த உலகை படைப்பதற்கு கடவுளுக்கு சிறிது காலம் தேவைப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கடவுளுக்கு காலம் கிடையாது ஆகையால் இந்த உலகை கடவுளால் படைத்திருக்க முடியாது என்று பொருள்முதல்வாதிகள் வாதிடுகிறார்கள். காலத்துக்கும் களத்துக்கும் அப்பாற்பட்ட கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று நம்புபவர்கள் உலகே மாயம் என்ற மாயாவாதத்தில்தான் மூழ்க வேண்டி வரும். சூன்யத்திலிருந்துதான் இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் இதனை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே மனிதர்கள் ஒன்று விஞ்ஞானத்தை நம்ப வேண்டும் அல்லது கடவுளைப் பற்றி பேசும் ஆன்மீகவாதத்தை நம்ப வேண்டும்.
ஆனால் யதார்த்தத்தில் விஞ்ஞானத்தை நம்பி அதனை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுபவர்கள் வெற்றிபெறுகிறார்கள். இதற்கு மாறாக விஞ்ஞானத்தை மறுத்து அஞ்ஞானத்தை நம்பி ஏற்று செயல்படுபவர்கள் வெற்றி பெறுவதில்லை. அதேபோலவே வெளிப்படையாக ஆன்மீகவாதத்தை மறுத்தாலும் விஞ்ஞான அடிப்படையில் பிரச்சனைகளை பரிசீலித்து அதனை தீர்ப்பதற்கு விஞ்ஞான வழிமுறைகளை பின்பற்றாமல் தனது மனதுக்குப் பட்ட வகையில் பிரச்சனையை புரிந்துகொண்டு அதாவது அகவய முறையில் பிரச்சனையை புரிந்துகொண்டு செயல்படுபவர்களாலும் வெற்றிபெற இயலாது. இதற்கு காரணம், இவர்கள் ஆன்மீகவாத கண்ணோட்டம் கொண்டவர்களாக இல்லாத போதும் தத்துவார்த்த வகையில் அகவயவாத, அல்லது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களால் வெற்றிபெற இயலவில்லை. உதாரணத்துக்கு பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் அவரது கண்ணோட்டம் கொச்சை பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகவே இருந்தது. இந்தக் கண்ணோட்டமும் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமே ஆகும். தேன்மொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment