நாட்டு நடப்பும் இடதுசாரிகள் சிந்திக்க வேண்டியவையும்

கள்ளச்சாராய உற்பத்தியாளர்களுக்கும் அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லாமல் இவ்வளவு பெரிய சாராய சாம்ராஜ்ஜியம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.- தோழர் கே.பாலகிருஷ்ணன் டிவியில். இதனை முழுசெய்தி வீடியோவாக இதன் மீது விமர்சனமின்றி செய்திக்காக வெளியிடுகிறேன்-https://www.youtube.com/watch?v=5YJe003JjgE கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி போகுது கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை.... அன்று காலையில் 33 பேருன்னாங்க 60க்கு மேல் சென்று விட்டது. 107 பேரு மருத்தவமனையில் இருக்கானுங்க...செய்தி

இறந்தவர்கள் ஏன் என்ன எப்படி என்பதனை அலசி ஆராய்ந்து விட்டனர். நாமும் சமூகத்தை பற்றி சிறிது அறிவோம். அரசே சாரயகடை நடத்தியும் இந்த விசசாரயம் குடிக்கும் மக்கள் போக்கை மட்டும் பேசி மேலே செல்வோம். தங்களின் வாழ்க்கைகான குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத இவர்கள் ஆன்மீக போதை போல தற்காலிகமாக பிரச்சினையை மறக்க இந்த போதைக்கு அடிமை ஆவதும்;அதனை காசாக்க துடிக்கும் கொள்ளைக்கூட்டம் இவர்களை குடிக்காரர்களாக்கி வீதியில் வீசுவதும். இவர்களின் உழைப்பில் பெரும் பகுதி மது அருந்துவதற்காகவே செலவிடப்படுகிறது இவர்களில் சிலர் அதிகமான விலை கொடுத்து மதுவை வாங்குவதை தவிர்ப்பதற்காக மலிவான விலையுள்ள சாராயத்தை வாங்கிக் குடித்து மாண்டு போனார்கள். அப்படியென்றால் மற்ற மதுவெல்லாம் உயிரை கொல்லாதவை என்றாலும் எல்லா போதைப் பழக்கமும் உடலுக்கு தீங்கானதே மெதுவாக கொல்லும் இவை உழைக்கும் மக்களை முடமாக்கி வீதியில் எறிந்தும் அவன் எதிர்த்து குரல் கொடுக்க முடியாத அளவிற்கு அடிமையாக்கி விட்டது இனி ஆட்சியாளர்களுக்கு என்னே பிரச்சினை?.

அடுத்து ஒரு பிரச்சினை இடஒதுக்கீடு என்று காட்டுக் கூச்சல் போடும் கூட்டம் தவறியும் பேசாதவை இவை:-கல்வி கற்க உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அண்மையில் NEET தேர்வுதாள் மோசடி அறிந்தவையே. அதனை பற்றி பலரும் பேசி விட்டனர் ஆக நான் அதற்கு முன் JEE, IIT, IMA படித்தவர்களின் நிலையை பற்றி பேசப்போகிறேன். நாட்டின் உயர் தொழிற்நுட்ப பல்கலைக் கழங்களில் கல்விகற்று வெளியேறியவர்களான ஐ.ஐ.டி பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 32% பேர் 2016 மற்றும் 2019 க்கு இடையில் வேலைகிடைக்கவில்லை என்று சிஎன்பிசி-டிவி 18 இன் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) மூலம் பகிரப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் வேலைவாய்ப்பு இன்மையால் வீதியில் வீசப்பட்டுள்ளனர் மேல்நிலை பட்டதாரிகளே என்றால் மற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று கனவு காண்போர் நிலையை சொல்ல வேண்டியதில்லை. நாட்டில் 55% பேர் விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகளின் வாழ்விற்காக இந்த அரசு எதையும் செய்யவில்லை. மேலும் உயர் கல்வி கற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கல்லாத உழைக்கும் மக்களின் வாழ்விற்காகவும் இந்த அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால் உழைக்கும் மக்களிடமிருந்து ஜிஎஸ்டி போன்ற வரிகளை வசூலித்து கொள்ளையடித்து அந்த நிதியை யாருடைய நலனுக்காகப் பயன்படுத்துகிறது? நிச்சயமாக இந்த உழைக்கும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இந்தியாவில் 18 ம் முறை நாடாளுமன்றம் மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். அதே நேரத்தில் ஓட்டாளித்த மக்களின் எல்லோருக்கும் இவை பயனளிக்குமா? எனும் கேள்வியை முன் வைத்து மேலே எழுதுகிறேன்.

நாட்டின் இன்றைய மக்கள் தொகை 1,441,446,153 காலை ஜீன் 24, 2024 நிலவரப்படி, இவை உலக மக்கள் தொகையில் 17.76% இங்கே நாம் கவனிக்க வேண்டியவைதான் முதன்மையானது. பெரும் முதலாளிகளின் சொத்து நாளுக்கு நாள் உயர்ந்து உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் சில இடங்களுக்கு சென்று விட்டனர் ஆனால் ஏழைகள் நிலையோ என்றும் இல்லாத அளவிற்கு கீழ் நோக்கி சென்றுக் கொண்டுள்ளது. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவானது பங்களாதேஷ், பாகிஸ்தானை விஞ்சி கீழ்நிலையில் உள்ளது.

அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டமாக, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் 2005ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.பின், 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.

கிராம பஞ்சாயத்துகளே வேலை வழங்கும் பணிகளை மேற்கொள்கின்றன. 18 வயது பூர்த்தியான திறன் சாரா உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த பணி வழங்கப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் இந்த திட்டத்தின் இன்றைய நிலை என்ன? பல இலட்சம் கோடிகளை பெரும்முதலாளிகளுக்கு வாரி வழங்கும் பொழுது நிதிபற்றா குறை ஏற்படாத பொழுது இந்த ஏழைகளுக்கு பயன்படும் திட்டங்களை செயல்படுத்த நிதிபற்ற குறை இன்று 10 நாட்கள் கூட சரியான வேலையின்றி முடங்கி போய்யுள்ள கண்துடைப்புக்கான இந்த திட்டம். கிராமபுற மக்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க தொடங்கப்பட்ட இந்த 100 நாள் வேலை திட்டதிற்கு அரசிடம் பணமில்லை என்று மக்களை ஏய்க்கும் அதே வேளையில் பெரும் முதலாளிகளின் தேவைக்காக 25 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் பெயரில் தள்ளுபடி செய்துள்ளதை செய்தி தாள்கள் குறிபிடுவதை காணலாம்.

ஆக இந்த அரசானது தனிசொத்தின் பாதுகாவலந்தான் பணம் படைத்தவன் அதிகாரம் படைத்தவன் எந்த பயமும் இன்றி கொடுமைகள் நடத்துவதும், கடைநிலையில் உள்ள மக்கள் அடுத்தவேளை உணவுக்கு கூட வழியின்றி வதங்கி சாவதும். இதனை ஆளும் வர்க்கத்தின் அரசின் தூண்கள் கண்மூடி கடந்து செல்வதை தினநிகழ்வுகளாக நாம் இச்சமூகத்தில் காண முடியும்.

இன்னும் விரிவாக 

நாட்டில் உள்ள எல்லா தொழிலாளிகளின் வாழும்வுரிமைக்கான காப்பீடுதான் ஆம் ஆத்மி பீமா யோஜனா அவற்றை பற்றி சிறிது தெரிந்துக் கொள்வோம். கீழ்காணும் தகவல் அரசின் செய்தி குறிப்பே:-நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 93% அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் ஆவர். சில தொழில் குழுக்களுக்கு அரசாங்கம் சில சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது, ஆனால் பாதுகாப்பு மிகக் குறைவு. பெரும்பான்மையான தொழிலாளர்கள் இன்னும் எந்த சமூக பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. வறுமைக்கு வழிவகுக்கும் சுகாதார செலவினங்களின் அபாயத்திலிருந்து ஏழை குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்தல். இருப்பினும், கடந்த காலங்களில் சுகாதார காப்பீட்டை வழங்குவதற்கான பெரும்பாலான முயற்சிகள் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் இரண்டிலும் சிரமங்களை எதிர்கொண்டன. ஏழைகள் மருத்துவக் காப்பீட்டின் செலவு, அல்லது உணரப்பட்ட நன்மைகள் இல்லாததால் அதை எடுக்க முடியவில்லை அல்லது விரும்புவதில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதார காப்பீட்டை ஏற்பாடு செய்து நிர்வகிப்பதும் கடினம்.

நாம் புரிந்துக் கொள்ள:- புற்றீசல் போல் முளைத்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள் கோடிக்கோடியாய் கொள்ளை அடிக்கிறது. ஆனால் இழப்பீட்டு தொகை அந்த ஏழைஎளிய மக்களுக்கு போய் சேர்கிறதா எனும் பொழுது யானை பசிக்கு சோளப்பொறியாக உள்ளது எனலாம். 25 லட்சம் கோடியை பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வாரி வழங்கியுள்ள இவர்கள் நாட்டில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை பற்றி கண்டுக் கொள்வதே இல்லை எனலாம்.இவ்வாறாக செயல்படும் பாராளுமன்ற ஜனநாயகத்தை பற்றி நமது மார்க்சிய ஆசான் தெளிவுப்படுத்தியுள்ளதை புரிந்துக் புரிந்துகொண்டிருக்கிறார்களா? இங்குள்ள பாராளுமன்ற மாயையில் மூழ்கியுள்ள இடதுசாரிகள் பார்ப்போம்.குறிப்பாக பாராளுமன்றத்தில் பங்கேற்பதையும் பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என்பதையும் நமது ஆசான்களின் வலியுறுத்தலை மிகத் தெளிவாகப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் ஏன் பாராளுமன்றத்தை கலைத்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமான சோசியலிசத்தை நிறுவ வேண்டும் என்பதை தெளிவாக்காமல் உள்ளனர்.

பாரிஸ் கம்யூன் படிப்பினைகளானது பாராளுமன்றமானது வரலாற்று ரீதியாக காலாவதி ஆகிவிட்டது என்பதை கட்டியம் கூறியது.இருந்தும் பல நாடுகளில் இன்றும் பாராளுமன்றம் கட்டிக் காக்கப்படுகிறது. ஆக மக்களுக்கு உண்மையாலுமே அவர்களுக்கான ஜனநாயகம் என்பது இந்த முறையில் இல்லை என்பதைஉணர்த்தும் அதே வேளையில் அதற்கான பணியினை இடதுசாரிகள் செய்ய வேண்டும் அதனை செய்கிறார்களா?

ஜனநாயகக் குடியரசு என்று சொல்லப்படும் ஒரு அரசும் கூட ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு எதுவும் இல்லை. ஆக ஜனநாயகமான ஒரு முதலாளித்துவக் குடியரசு முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முதலாளிகள் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரமாகவே உள்ளது. ஆக சுதந்திரமான ஒரு குடியரசிலும்கூட முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கின்றது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் ராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம். இது அரசு பற்றிய ஜனநாயக குடியரசு பற்றிய மார்க்சிய-லெனினியப் போதனை ஆகும்.தற்கால முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள் அனைத்தும் இந்த அரசு இயந்திரத்தை நீடித்து வைத்திருக்கின்றன. எனவே “பொதுவான ஜனநாயகம்” என்று ஆரவாரத்துடன் கூக்குரலிடுவது உள்ள படியே முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சுரண்டலாளர்கள் என்ற முறையில் அவர்களது தனியுரிமைகளையும் ஆதரிப்பதே ஆகும் என லெனின் எடுத்துரைத்தார்.முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் கீழ் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துடமை வர்க்கங்களின் எந்த பிரதிநிதி நாடாளுமன்றத்தில் “மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவர் மற்றும் அடக்குவார்” என்பதை முடிவு செய்யும் உரிமைகளை அனுபவிக்கின்றன என்ற மார்க்சியப் போதனையை லெனின் திரும்பத் திரும்ப நினைவூட்டினார்.பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனைத்தையும் தழுவிய விதிகளில் ஒன்றான பலாத்காரப்புரட்சி என்ற விதியையும், பழைய அரசு நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதின் அவசியத்தையும் ஆளும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் ஆளப்படும்வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும் உள்ள அமைப்புமுறையினிடத்தில் பாட்டாளி வர்க்கச்சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும், பண்டைய திருத்தல்வாதிகளிலிருந்து நவீனதிருத்தல்வாதிகள் வரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சமாதான மாற்றத்திற்கு வாய்ப்புண்டு என்று வாதிடுகின்றனர்.

சமாதான மாற்று பாதைக்காக வாதிட்ட பழைய திருத்தல் வாதிகள் தங்களது வாதத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, 1870- களில் அமெரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளில் “தொழிலாளர்கள் தங்கள் இலட்சியத்தை சமாதான முறையில் அடைய முடியும்” என்று மார்க்ஸ் கூறியதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

கம்யூனானது முதலாளித்துவ அரசு இயந்திரத்தையும் அதிகார வர்க்கம் நீதித்துறை இராணுவம் மற்றும் போலீஸ் இயந்திரம் ஆகியவற்றின் அடித்தளம் வரைக்கும் சென்று அவற்றை நசுக்கவும் முயன்றது. சட்டமியற்றல் மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு இடையே பிரிவினை இல்லாத தொழிலாளர் திரளின் ஒரு சுயாட்சி நிர்வாக நிறுவனம் மூலம் மாற்றீடு செய்ய முயன்றது இம்முயற்சிகளில்தான் உண்மையிலே கம்யூனின் முக்கியத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய மார்க்சீய போதனையை எல்லா வகையான சந்தர்ப்பவாதிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தார்.

பாரீஸ் கம்யூனின் அனுபவத்திற்கு பிறகு மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்து வத்தினால் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது, அதை தகர்த்தெறிய வேண்டும் என்று எடுத்துரைத்த புரட்சியைப்பற்றிய அடிப்படையான விதியை லெனின் உறுதியாக ஆதரித்ததுடன் அதை மேலும் செழுமைப்படுத்தினார்.

புரட்சியின் உயிர்நாடி: மார்க்சிய-லெனினிய போதனையின்படி ஒவ்வொரு புரட்சியிலும் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினைதான். பாட்டாளி வர்க்கப் புரட்சியில் உயிர் நாடியான பிரச்சினை பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு, முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களைப் பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக் கட்டி, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதும் ஆகும்.

திருத்தல்வாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டம்: பலாத்காரப் புரட்சியையும், பழைய அரசு இயந்திரத்தை உடைத்தெறியும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் பெர்ன்ஸ்டைன் எதிர்த்தார். முதலாளித்துவம் சமாதான முறையில் “சோசலிசமாக வளர்ச்சி யடையும்” என்று அவர் வாதிட்டார். நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல் அமைப்பு அழிக்கப்படக் கூடாது என்றும் அதற்கு மாறாக, அது மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்ன்ஸ்டைன் கூறினார்.

திருத்தல்வாதத்தின்தலைமகன் பெர்ன்ஸ்டைனை *லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்:“மார்க்சியத்தின் நேரடியான புரட்சிகரத் தன்மையைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டுமே மார்க்சியமாக பெர்ன்ஸ்டைன் வாதிகள் ஏற்றுக்கொண்டனர் இப்பொழுதும் ஏற்கின்றனர். பாராளுமன்றப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் ஆயுதங்களில் ஒன்று என்று அவர்கள் கருதவில்லை மாறாக “பலாத்காரம்”,“கைப்பற்றுதல்”, சர்வாதிகாரம்” போன்றவற்றை தேவையற்றதாகச் செய்து விடுகிற முக்கியமான ஒரே போராட்ட வடிவமாக பார்க்கின்றனர்.”(லெனின் - இராணுவப் படைகளின் வெற்றியும், தொழிலாளர் கட்சியின் பணிகளும்).

முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்பில் “வர்க்க முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொள்ள இனியும் இடமில்லை” என்றும் “பலாத்காரத்தின் மூலம் அரசைத் தூக்கியெறிய வேண்டும் எனப் பிரசாரம் செய்வது கேலிக்குரியது” என்றும் ஓடுகாலி காவுத்ஸ்கி கூறினார். “இதுவரை இருந்தது போலவே இப்போதும் நமது அரசியல் போராட்டத்தின்நோக்கம்,நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று, நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானனாக மாற்றி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்து வருகிறது” என்று ஓடுகாலி காவுத்ஸ்கி வாதிட்டார் அவரை லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்.“கயவர்களும் முட்டாள்களும்தான் முதலாளித்துவ நுகத்தடியின் கீழ், கூலி அடிமை என்ற நுகத்தடியின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிக்கு வரும் என்று நினைக்க முடியும். இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று அல்லது முட்டாள்தனமாகும். இது வர்க்கப் போராட்டத்துக்கும் புரட்சிக்கும் பதில் பழைய அமைப்பின் கீழ் பழைய அதிகாரத்துக்குஓட்டுப்போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கிறது.” (லெனின் - ‘இத்தாலியன், பிரெஞ்சு, ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்த்துக்கள்’)

இதிலிருந்து நம் படிபினைகள் இருக்க வேண்டும் அதற்கான பணி உழைக்கும் மக்களை அரசியல் படுத்துவதும் அவர்களை ஒன்றிணைத்து இங்குள்ள அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டுவதும் அவசியமான பணியாகும் இதனை மார்க்சியம் பேசும் அனைவரும் அறிந்து செயல்படல் வேண்டும். அதற்கான முன்னெடுபுகள் பற்றி தொடர்ந்து ஆராய்வோம். 



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்