பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் நூலை ஏன் பயிலத் தொடங்கினேன் என்றால் இங்கு "திறந்தநிலை மார்க்சியம்" என்று பேசிக் கொண்டே இவர்கள் மார்க்சியத்தை மறுக்க முயலுவதை தெளிவுப்படுத்தவும் மேலும் அந்த நூலின் உண்மை தன்மையை அவர்களே அவர்களின் எழுத்து மூலம் உணர்த்தியுள்ளனர்.
உண்மையில் நான் இவர்களை விமர்சிக்க நமது ஆசான் லெனின் நூலையே துணைக்கு எடுத்துக் கொண்டுள்ளேன். அதனை பற்றி நீண்ட கட்டுரை எழுதியுள்ளேன் அதனை வாசிக்கும் முன்னர் நமது ஆசான் லெனின் இது போன்ற துரோகிகளை அம்பலப்படுத்தி எழுதியுள்ள பகுதியிலிருந்து வாசியுங்கள். நேரமுள்ள தோழர்கள் இந்த பகுதியை வாசியுங்கள் உங்களை நீங்கள் சரியாக்கி கொள்ள பயன்படும் தோழர்களே.
லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.
இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?அதிலும் புரட்சியின் தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்?
அன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்சினைகள் என்று லெனின் கருதினார். தத்துவப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.
மார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது. அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.
சமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,முதலாளித்துவ தத்துவ நிலைகள், மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. இந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.
நூலாக்கத்தின் பின்னணி
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிசம் எனவும், “அனுபவவாத விமர்சனம்” என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக், அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர். தத்துவம், கருத்துமுதல் வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி ,”அனுபவவாத விமர்சனம்“ தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம் செய்து நூல்களை வெளியிட்டனர்.
அன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்த மார்க்சிஸ்ட்கள் பலரும் ,”அனுபவவாத விமர்சனம்“ என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர்.இந்த கூட்டத்தோடு சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.
அன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது. அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும் பணியால் உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிற வகையில் பரவிக் கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம்,எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார்.இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.
ஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும் கருத்தியல் போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சி கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது.புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது. பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.
அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம் மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது. “கடவுள் நாடுவோர்”எனும் பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.
ஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா?மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார்.அதன் விளைவாகவே “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” நூல் பிறப்பெடுத்தது.
பொருளே முதன்மையானது…
“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளை லெனின் வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.
தத்துவத்தில் பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம்.எனவே ஒரு புறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல்வாதம்தான். ஆனால், அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார். புலனறிவு,பொருளின் இருப்பு,அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின் பார்வையையும் மாக்கியவாதிகள் விமர்சித்துள்ளனர்.ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.
அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையை படைப்பதாக கூறிக்கொண்டனர்.இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது பழைய 17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும்,முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக்,அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.
தத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமான நிலை என்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார்.
புலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார் லெனின். கருத்துதான் அடிப்படை;பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும் பழைய தத்துவத்தைத்தான் “புலன் உணர்வுகளின் தொகுதி”என்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.
பொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது.பிறது அது மனித மூளையால் பெறப்பட்டு பொருள் பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.
பொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின் நிறம் எப்படி உணரப்படுகிறது?ஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு,அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத் தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.
இதில் பொருள் மட்டுமல்ல,ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள,வெளியுலகம் அனைத்துமே பொருட்களால் ஆனது:அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதை லெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல.எனவே பொருள்,அதன் தன்மைகள் அனைத்தும் மனித மனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை.இதுவே மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்
அனுபவவாத விமர்சகர்கள் பொருளை “அருவமான அடையாளம்”என்று வரையறுக்கின்றனர்.இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். “அருவமான அடையாளம்”என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது;பொருள்அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது? பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம் என்பதுதான் அனுபவவாதிகளின் உண்மையான நிலை என்று வெளிப்படுத்திய லெனின்,அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.
நீண்ட கட்டுரை ஆக இந்த இணையப்பகுதியில் சென்று வாசிக்க தோழர்களே
No comments:
Post a Comment