குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.-எங்கெல்ஸ்- பாகம் 1.

 வரலாற்றைப் பற்றி தன்னுடைய பொருள்முதல்வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளை வெளிப்படுத்தியவர்தான் காரல் மார்க்ஸ். அதாவது மனித சமூகத்தின் வரலாற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டால்தான் உண்மையான சமூக வரலாற்றை நாம் புரிந்துகொள்ள முடியும் என்பதை முதன்முதலில் நிறுவியவர் காரல் மார்க்ஸ் ஆவார். அமெரிக்காவில் வாழ்ந்த மக்களின் பண்டையகால வரலாற்றை அந்த மக்களோடு ஒன்று கலந்து பல ஆண்டுகலாக ஆய்வு மேற்கண்ட மார்கன் என்ற ஆய்வாளரால் கண்டுபிடித்து முன்வைக்க உண்மைகளானது காரல் மார்க்சால் முன்வைக்கப்பட்ட வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞான ஆய்வு முறையானது சரியானது என்பதையும் உண்மையானது என்பதையும் நிரூபித்தது.

ஆகவேதான் இந்திய வரலாற்றை ஆய்வு செய்து அதன் உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்புவோர் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து இந்திய வரலாற்றை எழுதிய மார்க்சிய அறிஞர்களின் நூல்களைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு மாறாக இந்தியாவை நீண்டகாலம் ஆண்ட பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளின் எடுபிடி ஆய்வாளர்கள் எழுதிய கற்பனை கதைகளை இந்திய வரலாறாகக் கருதக்கூடாது. மேலும் இந்துத்துவவாதிகளின் கட்டுக்கதைகளையும் இந்திய வரலாறாகக் கருதக்கூடாது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து சமூகத்தின் அநாகரிக காலத்தையும், நாகரீக காலத்தையும் ஒப்பிட்டு காரல் மார்க்ஸ் என்ன முடிவெடுத்தாரோ அதே முடிவைத்தான் மார்கன் தனது நடைமுறைஆய்வின் மூலமும் வந்தடைந்தார். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் காரல் மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவக் கண்ணோட்டத்தின் மூலம் நாம் நடைமுறை உண்மைகளை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ள முடியும் என்பதுதான் அது. ஆகவே மார்க்சால் போதிக்கப்பட்ட வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவத்தை நாம் படித்து சமூகத்தை விஞ்ஞானத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு அதனை மாற்றியமைப்பதற்கான அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாகப் பார்க்கும் போது பொருள்முதல்வாத கருத்தமைப்பின்படி உடனடியான வாழ்க்கையில் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானகரமான காரணியாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது. இதில் உற்பத்தி என்பது பொருளுற்பத்தியைக் குறிக்கிறது. அதாவது மனிதர்கள் தங்களது தேவைகளை, உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படையான தேவைகள் மட்டுமல்லாது மேலும் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மனிதர்கள் பொருளுற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய உற்பத்தியையே உற்பத்தி என்று மார்க்சியம் குறிக்கிறது. இந்தகைய உற்பத்தியில் ஈடுபடுவதற்கான நிறுவனங்களாக தொழிற்சாலை, அலுவலகம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. புனருற்பத்தி ( Regeneration) என்பது மனிதர்கள் தங்களது மனித இனத்தையே உற்பத்தி செய்வதை குறிக்கிறது. அதாவது மனிதர்கள் தங்களது சந்ததிகளை உருவாக்கி வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதற்கு குடும்பம் என்ற நிறுவனம் அவசியமாகிறது. ஒரு திட்டவட்டமான காலக்கட்டத்தில், ஒரு திட்டவட்டமான நாட்டைச் சேர்ந்த மக்கள் எந்த சமூக அமைப்பின் கீழ் வாழ்கிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின் இந்த இரண்டுவகைகளும் கட்டுப்படுத்துகின்றன. அதாவது நிலவுகின்ற சமூக அமைப்பை, மனிதர்கள் ஈடுபடும் பொருளுற்பத்தியும் குழந்தைகளை உற்பத்தி செய்யும் புனருற்பத்தியும் கட்டுப்படுத்துகின்றன என்று மார்க்சியம் போதிக்கிறது. அதாவது சமூகத்தில் நிலவும் பொருளுற்பத்திக்கும் அதாவது தொழில் துறை அமைப்புக்கும் குழந்தைகளை உற்பத்தி செய்வதற்கும் அதாவது குடும்ப அமைப்பிற்கும் பொருத்தமாகவே சமூகமும், அது சார்ந்த கருத்துக்களும், பண்பாடும், பழக்கவழக்கங்களும் அமையும் என்பதே மார்க்சியம் போதிக்கும் உண்மையாகும். உதாரணமாக வேளாண்மை தொழிலே முதன்மையாக இருந்த காலத்தில் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாமல் இருந்தபோது ஒரு குடும்பமே விவசாயத் தொழிலில் ஈடுபட வேண்டிய அவசியம் இருந்தபோது குடும்பமானது கூட்டுக் குடும்பமாக இருந்தது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அண்ணன், தம்பி, மாமன் மச்சான் என்ற இரத்த உறவுகளின் அடிப்படையிலான பிணைப்புகள் இறுக்கமாக இருந்தது. ஆனால் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைந்து முதலாளித்துவ உற்பத்தி மேலோங்கியபோது பல பகுதியிலிருந்து தொழிலாளர்கள் அவர்கள் ஒரு குடும்பத்தைச் சாராமல் பல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு குடையின் கீழ் பணியாற்றி அதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளியும் தனித்தனியாக சம்பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்ட போது கூட்டுக் குடும்பத்திற்கான தேவை குறைந்தது, அதன்

காரணமாக கூட்டுக் குடும்பம் சிதைந்தது. ஒவ்வொரு கணவன் மனைவியும் தனிக் குடும்பமாக குடும்பத்தை அமைத்துக்கொண்டார்கள்.

சமூகத்தில் பணத்தின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க இரத்த உறவுகளும்இறுக்கம் தளர்ந்து, மறைந்து குடும்பங்களிலும் உறவுகள் பண உறவுகளாகமாறுகின்றதை நாம் பார்க்கலாம்.எந்தளவுக்கு உழைப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறதோ, அந்தளவுக்கு உற்பத்தியின் அளவும் குறைவாகவே இருக்கும். அதன் காரணமாக சமூகத்தின் செல்வத்தின் அளவும் குறைவாகவே இருக்கும், அதன் காரணமாகவே சமூக அமைப்பின் மீது குல மரபு உறவுகள் ஆதிக்கம் பெற்று இருக்கும். எனினும் இத்தகைய குல மரபு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக கட்டுக்கோப்புக்குள்ளேயே உழைப்பின் உற்பத்தித் திறன் மென்மேலும் வளர்கிறது. அதாவது உற்பத்திக் கருவிகளும், உற்பத்திச் சாதனங்களும் நவீனமயமாக்கப்படுகிறது, அதன் காரணமாக மனிதர்களின் உற்பத்தி திறன் வளர்கிறது, உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக தனிச் சொத்துடமையும் பரிவர்த்தனையும் வளர்கின்றன.

செல்வத்தில் வேற்றுமையும் அதாவது ஒரு சிலர் செல்வந்தர்களாக வளர்வதும் மிகப்பெருவாரியானவர்கள் செல்வம் ஏதுமின்றி வறியர்களாவதும் இத்தகைய வேற்றுமைகள் வளர்கின்றன. இதன் காரணமாக ஒரு சிலர் மற்றவர்களின் உழைப்பு சக்தியை பயன்படுத்துவதற்கும் சுரண்டுவதற்குமான வாய்ப்புகள் அதிகரித்து, வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு வளர்கின்றது. இத்தகைய புதிய அம்சங்கள் நிலவுகின்ற சமூக அமைப்பிற்குள்ளேயே உருவாகி வளர்கின்றன. இத்தகைய புதிய அம்சங்கள் அதாவது வர்க்க முரண்பாடுகள் நிலவுகின்ற சமூக அமைப்புக்குள்ளேயே கூர்மையடைவதால், இவை தலைமுறைக்குப் பின் தலைமுறையாக பழைய சமூகத்தின் கட்டுக்கோப்பை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அதாவது வளர்ச்சியடைந்த உற்பத்தியானது சகல மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்கேற்ப திருத்தி அமைக்கப் பார்க்கின்றன. அதாவது உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை எல்லாம் முதலாளிகள் அபகரித்துக்கொள்வதை திருத்தி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வகையில் சமூக அமைப்பை திருத்துவதற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள். இத்தகைய முயற்சியைத் தொடர்ந்து முடிவில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஒரு புரட்சியாக வெடிக்கும் என்று மார்க்சியம் போதிக்கிறது. இதன் மூலம் புரட்சி என்பது மார்க்சியவாதிகளின் ஆசையோ விருப்பமோ அல்ல. புற நிலையில் உழைக்கும் மனிதர்களின் உழைப்பின் பலன்களை தொடர்ந்து தட்டிப்பறிக்கும் முதலாளிகளின் நடவடிக்கைகளின் காரணமாக தொழிலாளி வர்க்கத்தின் வறுமை அதிகரிப்பதும் அவர்களது வாழ்நிலை பறிபோவதை முடிவுக்கு கொண்டுவரும் தொழிலாளர்களின் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நடவடிக்கையே புரட்சியாகும். இத்தகைய புரட்சியை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதையே தகுந்த ஆதாரங்களோடு நிறுவியது மார்க்சியம் மட்டுமே ஆகும்.

எனினும் முதலாளிகளும் அவர்களுக்கு காவடி தூக்கும் கயவர்களும் மக்களை எவ்வளவுதான் பொய் சொல்லி ஏமாற்றினாலும் அவர்களால் புரட்சியை தள்ளிப்போட முடியும், ஆனால் நிச்சயமாக புரட்சியை அவர்களால் தடுக்க முடியாது. நிச்சயமாக ஒரு நாள் புரட்சி நடந்தே தீரும். அதற்கான தயாரிப்புகளை தற்போதைய இடதுசாரிகள் செய்யவில்லை என்றாலும் வருங்கால இடதுசாரிகள் அத்தகைய தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள், தொடர்ந்து புரட்சியை நடத்தியே தீர்வார்கள்.

மனிதகுல வரலாற்றில், குல மரபு குழுக்களின் அடிப்படையில் அமைந்திருந்த பழைய சமூகம் வெடித்து சிதறியது என்பதை நாம் அறிவோம். அந்த பழைய சமூகத்தின் இடத்தில் அரசாக அமைக்கப்பட்ட புதிய சமூகம் தோன்றியது. அந்த அரசின் கீழ்நிலை அங்கங்களாக குலமரபுக் குழுக்கள் இல்லை. அவைகள் மறைந்துவிட்டன. அதற்குப் பதிலாக வட்டார அடிப்படையில் அமைந்த குழுக்களே இருந்தன. அதாவது கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதர்கள் ஓர் இடத்தில் தங்கி வாழுகின்ற நிலையில் இந்த கூட்டங்கள் ஒன்றிணைந்து வட்டார அடிப்படையில் வாழும் முறைக்கு வந்தனர். இந்த புதிய சமூகத்தின் சொத்துடமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதுதான் வரலாறாகும். மேலும் புதிதாக உருவான இந்த சமூகத்தில் வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும் சுதந்திரமாக வளர்ந்தன. அதாவது பழைய சமுதாயத்தில் உற்பத்திக் கருவியின் வளர்ச்சியின்மையாலும், உற்பத்தி குறைவாக நடத்தப்பட்டதாலும் மனிதர்கள் கூட்டாக உழைப்பதும், உழைப்பின் பலனை கூட்டாக பகிர்ந்துகொள்ளும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கூட்டான உழைப்பு தகர்ந்து சமூகத்தில் மிகப் பெருவாரியான மக்கள் மட்டும் உழைப்பில் ஈடுபடுவதும், ஒரு சிலர் மட்டும் பிறரது உழைப்பின் பலனை கைப்பற்றி சுகமாக வாழும் நிலை ஏற்பட்டது. இத்தகைய பிரிவுதான் மனிதர்களை வர்க்கங்களாகப் பிரித்தது. அதாவது ஒரு பக்கம் உழைக்கும் வர்க்கமும் மறு பக்கம் சுரண்டும் வர்க்கமாக சமூகம் பிளவுபட்டது.

இவ்வாறு உருவான வர்க்கங்களுக்கு இடையில் முரண்பாடுகள் உருவாகி, வர்க்கப் போராட்டங்கள் வளர்ந்தது. இவ்வாறு உருவாகி வளர்கின்ற வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும்தான் ஏடறிந்த மனித வரலாற்றின் அடிப்படையாகவும் உள்ளடக்கமாகவும் இருக்கிறது என்று மார்க்சிய ஆசான்களாகிய மார்க்சும், எங்கெல்சும் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர். இதன் மூலம் வரலாற்றை நாம் ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டுமானால் மன்னர்களைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் புரிந்துகொள்ளும் முறைக்கு மாறாக வர்க்கங்களின் வாழ்நிலை மற்றும் வர்க்கங்களுக்கு இடையே நடந்த போராட்டங்களை ஆய்வு செய்வதன் மூலமே வரலாற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான வழிமுறையை நாம் அறிவதற்கும் வர்க்கங்களின் வாழ்நிலையைப் பற்றியும், இந்த வாழ்நிலையை எத்தகைய புதிய வாழ்நிலையாக மாற்றியமைப்பது என்பதற்கான அறிவை நாம் பெறுவதன் மூலமே வரலாற்றில் புதிய சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று மார்க்சியம் போதிக்கிறது. வர்க்கங்கள் இருப்பதும், வர்க்கங்களுக்கு இடையே போராட்டங்கள் நடப்பதும் நமது விருப்பத்திலிருந்து உருவாவதில்லை. நம்முடைய உணர்வுகளுக்கு விருப்பங்களுக்கும் அப்பாற்பட்டு புறநிலையில் நடந்துகொண்டிருக்கிறது.

அதனை நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து புரிந்துகொண்டு வர்க்க முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தீர்வை நாம் காணவேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது.இத்தகைய வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படையான பிரச்சனையை புறக்கணித்துவிட்டு வேறுவகையான உதாரணமாக சாதிப் பிரச்சனைதான் இங்கு முதன்மையான பிரச்சனை என்றும், சாதிப்பிரச்சனையை தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சனையயும் தீர்க்க முடியாது என்று கருதுபவர்களால் சமூகத்தை மாற்றியமைக்கவும் முடியாது, அவர்கள் சொல்லும் சாதிப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. ஏனெனில் வர்க்கப் போராட்டத்திற்குள் உள்ளடங்கியதே சாதிய முரண்பாடாகும். வர்க்க முரண்பாடே சாதிய முரண்பாட்டுக்கு அடிப்படையாகும். ஆகவே வர்க்க முரண்பாட்டை தீர்க்காமல் சாதிய முரண்பாட்டை தீர்க்க முடியாது. ஆனால் மார்க்சியத்தை எதிர்க்கும் சாதியவாதிகள் தலைகீழாகப் பேசுகிறார்கள். அதாவது சாதியமுரண்பாட்டை தீர்க்காமல் வர்க்க முரண்பாட்டை தீர்க்க முடியாது

என்கிறார்கள். நம்மை ஆண்ட பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள்தான் இந்திய வரலாற்றை திராவிட ஆரிய இனப்போராட்டமாக சித்தரித்தார்கள், அதன் மூலம் இந்திய வரலாற்றை வர்க்கப் போராட்ட வரலாறாக சித்தரிக்காமல் கதைவிட்டார்கள். மேலும் சாதியை ஒருபோதும் யாரும் மறந்துவிடக்கூடாது என்று கருதி ஒவ்வொருவரும் தனது சாதியை சட்டப்பூர்வமாக பதிவு செய்துகொள்ளச் செய்து ஒருவர் தனது சாதி அடையாளத்தை கைவிட வேண்டும் என்று விரும்பினாலும் அவரால் கைவிட முடியாத வகையில் சட்டப்பூர்வமாக ஒவ்வொருவருக்கும் சாதிய முத்திரையை குத்திவிட்டார்கள். இதன் மூலம் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் எப்போதும் நடந்துவிடக் கூடாது என்ற சதியைச் செய்துவிட்டார்கள். ஆகவே இந்த சதியை முறியடித்து வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். சாதிப்பிரச்சனையையும், தேசிய இனப் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான போராட்டங்களை நடத்திடக்கூடாது என்பதல்ல. இத்தகைய போராட்டங்களை வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டே நடத்திட வேண்டும் என்பதே மார்க்சியமாகும்மேலும் இத்தகைய சமூக கொடுமைகளை எதிர்த்தும் கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும் என்றே லெனின் போதித்தார்.

ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய வரலாற்றின் அடிப்படைகளை அதாவது பண்டையகால மக்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்து உலக மக்களின் முன் வைத்த பெருமை மார்கனையே சேரும். இந்தப் பணியை அவர் ஒருசில ஆண்டுகளில் செய்யவில்லை. அதற்காக வட அமெரிக்காவைச் சேர்ந்த செவ்விந்திய மக்களோடு மக்களாக நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து செவ்விந்திய குல உறவுகளை அவர் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையிலேயே அவரது நூலைப் படைத்தார். அதன் மூலம், கிரேக்க ரோமானிய ஜெர்மானிய வரலாற்றில் இதுவரை விடுவிக்க முடியாதிருந்த மிகவும் முக்கியமான புதிர்களை விடுவிப்பதற்குரிய வழியையும் மார்கன் காட்டினார்.

நம் காலத்தில் வெளிப்பட்டிருக்கின்ற சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களில் மார்கனின் நூல் இடம்பெற்றுள்ளது. காரல்மார்க்சின் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தையும் மார்கனின் பண்டையகால சமூகத்தைப் பற்றிய வரலாற்று ஆய்வு நூலை இணைத்தே எங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் நூலை எழுதினார். இந்த நூலை நாம் படிப்பதன் மூலம் மனித சமூகத்தின் வரலாற்றைப் பற்றியும் மனித சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான வழிமுறையையும் நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவேதான் எங்கெல்சின் இந்த நூலை கம்யூனிஸ்டுகள் திரும்பத் திரும்ப படிக்க வேண்டும் என்றார் மாமேதை லெனின். மனித சமுதாயத்தின் பண்டையகால வாழ்க்கை முறையை இந்த மனித சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கையை தியாகம் செய்தார் மார்கன். அவர் கம்யூனிஸ்ட் இல்லை, எனினும் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்த மனித குலத்துக்கும் மகத்தான சேவை செய்தவர்தான் மார்கன். அப்படியானால் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த சமூகத்தை வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்து இந்த சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதற்கு எந்தளவுக்கு நாம் பாடுபட வேண்டும் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர வேண்டும்.

இதற்கு மாறாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பொருளாதார நலன்களுக்காக தொழிற்சங்கப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டும், பிற்போக்கு பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுத்து ஆட்சிக்கு வருவதற்காக மட்டும் முயற்சி செய்துகொண்டும், ஒரு சில மக்களை மட்டும் திரட்டிக்கொண்டு ஒரு குழுவாக மட்டுமே செயல்பட்டுக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்பதை நடைமுறை நமக்கு காட்டுகிறதை புரிந்துகொண்டு மார்கனைப் போல. மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் போன்ற தலைவர்களைப் பின்பற்றி நமது பணிகளை அமைத்துக் கொண்டு மக்களுக்கான கடமையை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும்.

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலை எங்கெல்ஸ் எழுதுவதற்கு பண்டையகால சமூகம் பற்றி மார்கன் எழுதிய நூலை விமர்சனப்பூர்வமாகப் படித்து அதனை பயன்படுத்திக்கொண்டார்.

கிரீஸ் ரோமாபுரி பற்றிய வரலாற்றை எழுதுவதற்கு மார்கனது ஆய்வுகள் போதுமானதல்ல என்பதற்காக அது பற்றிய விவரங்களை எங்கெல்சே தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து சேகரித்தார். கெல்டுகள் ஜெர்மானியர்கள் பற்றிய விவரங்களை எங்கல்சே முயற்சி செய்து சேகரித்தார். இவ்வாறு எங்கெல்ஸ் தனது ஆய்வு நூல்களை எழுத தான் எந்தப் பிரச்சனையைப் பற்றி எழுத விரும்பினாரோ அது பற்றிய விவரங்களை சொந்தமாக முயற்சி செய்து சேகரித்தார். மேலும் அந்தப் பிரச்சனை பற்றி பிறர் எழுதிய நூல்களையும் அவர்களால் சேகரிக்கப்பட்ட விவரங்களையும் விமர்சனரீதியாக புரிந்துகொண்டார். அதன் அடிப்படையில் கடுமையாக முயற்சி செய்தே தனது ஆய்வு நூல்களைப் படைத்தார். மார்க்சும் எங்கெல்சும் தங்களுக்கு முன்பு இருந்த தத்துவ ஆசிரியர்களை விமர்சனப் பூர்வமாக படித்துப் புரிந்துகொண்டார்கள். அந்த தத்துவ ஆசிரியர்களின் கருத்துக்களில் சரியானவற்றை ஏற்றுக்கொண்டார்கள், மேலும் அதனையே தங்களுக்கு வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக்கொண்டு அதனை மேலும் வளர்த்தார்கள். அதே வேளையில் அந்த தத்துவ ஆசிரியர்களின் தவறான கருத்துக்களை விமர்சித்து புறக்கணித்தார்கள், மேலும் அந்த தவறான கருத்துக்களை எதிர்த்து தொடர்ந்து போராடினார்கள். உதாரணமாக ஹெகல் என்ற தத்துவ ஆசிரியரின் இயங்கியல் ஆய்வு முறையை மார்க்சும் எங்கெல்சும் சரியானது என்று ஏற்றுக்கொண்டார்கள். அந்த இயங்கியல் முறையிலேயே தங்களது ஆய்வுகளை செய்தார்கள். ஆனாலும் ஹெகலிடமிருந்த கருத்துமுதல்வாத தத்துவம் தவறானது என்ற காரணத்தால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து அதனை எதிர்த்துப் போராடினார்கள்.பெயர்பாக் என்ற தத்துவ ஆசிரியரிடமிருந்த பொருள்முதல்வாத கருத்துக்களை மார்க்சும் எங்கெல்சும் ஏற்றுக்கொண்டார்கள், அந்த தத்துவத்தையே அவர்கள் பின்பற்றினார்கள். அதே வேளையில் பெயர்பாக்கிடமிருந்த இயங்காவியல் ஆய்வு முறையை மார்க்சும் எங்கெல்சும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனை புறக்கணித்து தொடர்ந்து எதிர்த்துப் போராடினார்கள். மார்க்சிய ஆசான்கள் பின்பற்றிய வழியிலேயே நாம் எதைப் படித்தாலும் எவர் சொல்லும் கருத்துக்களைக் கேட்டாலும் அவற்றில் சரியானவற்றையும் உண்மையையும் ஏற்றுக்கொண்டு அதனை

பின்பற்ற வேண்டும். அதே வேளையில் ஒருவர் எவ்வளவு சிறப்பான சிந்தனையாளராக இருந்தாலும் அவர் சொல்லும் தவறான கருத்துக்களை ஏற்க மறுத்து புறக்கணிக்க தயக்கம் காட்டக்கூடாது. எனினும் ஒருவரது கருத்து சரியா அல்லது தவறானதா என்பதை புரிந்துகொள்வதற்காக நமது அறிவை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய அறிவை மார்க்சியம் லெனினியம் நமக்கு வழங்குகிறது. ஆகவே நாம் சரி எது, தவறு எது என்பதை புரிந்துகொள்ள மார்க்சிய லெனினியத்தை கற்றுக்கொள்வோம்....... தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்