பொருள்முதல்வாதத்துக்கும்மார்க்சியத்துக்கும் இடையேயுள்ள உறவு என்ன?
இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள உள்ள உறவுகளைப் பின்வருமாறு சுருங்கக் கூறலாம்.
1. பொருள்முதல்வாத விஞ்ஞானமே மார்க்சியத்துக்கு அடிப்படை.
2. பிரபஞ்சத்தின் பிரச்சனைகளுக்கு பொருள்முதல்வாதம் விஞ்ஞான ரீதியான விளக்கம் தர விரும்புகிறது. ஆகவே வரலாற்றுப் போக்கில் விஞ்ஞானம் வளர வளர அத்துடன் கூடவே பொருள்முதல் வாதமும் வளர்ந்து முன்னேறுகிறது. ஆகவே மார்க்சியம் பல விஞ்ஞானங் களிலிருந்து பிறந்தது; அவற்றை அடிப்படையாகக் கொண்டது; அவ்விஞ்ஞா னங்கள் வளர வளர அவற்றோடு கூடவே மார்க்சியமும் வளர்கிறது.
3. மார்க்சுக்கும், எங்கெல்சுக்கும் முன்பே பொருள்முதல்வாத தத்துவங்கள் பல இருந்து வந்துள்ளன. பல காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் இருந்து வந்துள்ளன என்ற போதிலும் 19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானங்கள் வெகுதூரம் முன்னேறியதையொட்டி மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத்தை புதிதாக உருவாக்கினர். அவர்கள் அதற்கு
விஞ்ஞானங்களையே அடிப்படையாகக் கொண்டனர். நவீன கால பொருள் முதல்வாதத்தைநமக்குத் தந்தார்கள். அதன்பெயர்தான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஆகும். அந்த தத்துவம்தான் மார்க்சியத்துக்கு அடிப்படை.
இந்த விளக்கங்கள் எதைக் காட்டுகின்றன? சிலபேர் சொல்வதற்கு மாறாக பொருள் முதல்வாதத்துக்கு ஒரு வரலாறு உண்டு என்பதைத்தான் காட்டுகிறது. அதன் வரலாறு விஞ்ஞானங்களின் வரலாற்றுடன் இறுகப் பிணைந்துள்ளது. பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சீயம் ஒரு தனிப்பட்ட மனிதனின் மூளையிலிருந்து உதிக்கவில்லை. பண்டையகாலப் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி அது. பரிபூரணமான மலர்ச்சி அது. பண்டையகால பொருள்முதல்வாதம் தீதரோவின் துணைகொண்டு வெகுதூரம் முன்னேறி வளர்ந்திருந்தது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவுக்களஞ்சியக் குழுவினர் அதைவளர்த்தார்கள். (தீதரோ, தாலம்பேர் என்ற தத்துவவாதிகளின் தலைமையின் கீழ் செயல்பட்ட குழுதான் அறிவுக்களஞ்சியக் குழுவினர் ஆவார்கள். பௌதீக உலகைப் பற்றிய விஷயங்களையும், ஆன்மீக, அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத் திலிருந்து விமர்சித்து விளக்கிய இவர்கள், அறிவுக்களஞ்சியம் என்ற நூலை தயாரித்தார்கள்).
19ஆம் நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அதைப் பெரிதும் வளப்படுத்தின. அப்படி வளர்ந்து வளம் பெற்றிருந்த பொருள்முதல் வாதத்தின் முழுமலர்ச்சிதான் மார்க்சியம் ஆகும். மார்க்சியம் ஒரு ஜீவனுள்ள தத்துவம். அது பிரச்சனைகளை எப்படிப்பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வர்க்கப் போராட்டம் என்ற பிரச்சனையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டு விளக்குவோம்.
வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
சோறு கிடைக்கப் போராடினால் போதும், அரசியல் போராட்டம் தேவையில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். புரட்சிகரமான தெருச்சண்டை நடத்தினால் போதும், நிறுவனம், கட்சி ஒன்றும் தேவையில்லைஎன்று சிலர் நினைக்கிறார்கள். அரசியல் போராட்டம் ஒன்றுதான் இந்த வர்க்கப்போர் பிரச்சனைக்குப் பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றவையெல்லாம் வேண்டியதில்லை என்று வேறு சிலர் எண்ணுகிறார்கள்.
ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்டப் பிரச்சனையை எப்படி பார்க்கிறார்?
மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரே பிரச்சனையாகப் பார்க்கிறார். (1) பொருளாதாரப் போராட்டம், (2) அரசியல் போராட்டம், (3) தத்துவ அறிவுப் போராட்டம் என்று மூன்று அம்சங்களைக் கொண்டதுதான் வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியவாதி கருதுகிறார்.ஆகவே இந்த மூன்று அம்சங்களையும் ஏககாலத்தில் அதாவது ஒரே சமயத்தில் முன்னிறுத்தி
வர்க்கப் போராட்டப் பிரச்சனையை நாம் பரிசீலிக்க வேண்டும். இதற்கு மாறாக இந்தப்போராட்டங்களில் ஒன்றைப் புறக்கணித்தாலும் அது முழுமையான வர்க்கப்போராட்டமாகாது. இந்திய கம்யூனிச அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்றுவகையான போராட்டங்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தவறிவிட்டனர். அதிலும் குறிப்பாகதத்துவ அறிவுப் போராட்டத்தை நடத்த தவறிவிட்டனர். தத்துவப் போராட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் முட்டிமோதவேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மாற்று கருத்தை பரிசீலித்து தங்களது கருத்தை நிலைநாட்ட விவாதம் நடத்துவதை தவிர்க்கிறார்கள். தங்களது கருத்தே சரியானது என்றும் பிறரது கருத்து தவறானதுஎன்றும் கருதிக்கொண்டு பிறரது கருத்து எப்படி தவறானது என்று விளக்கம் தருவதற்கு முயற்சிப்பதும் இல்லை. விவாதத்தில் ஈடுபடுவதும் இல்லை. பொருளாதாரப் போராட்டங்களில் ஈடுபட்டாலும் தொழிற்சங்கவாதப் போராட்டங்களில்தான் ஈடுபடுகிறார்கள். லெனின் காட்டிய வழியில் பொருளாதாரப் போராட்டத்தை நடத்தாமல் பொருளாதாரவாதத்தினரின் வழியிலேயே பொருளாதாரப் போராட்டங்களை நடத்துகிறார்கள்.உழைக்கும் வர்க்கம்அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அரசியல் போராட்டத்தை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் நடத்து வதில்லை. மாறாக இந்த அரசியல் அமைப்பை தக்கவைத்துக்கொண்டே சில சீர்திருத்த கோரிக்கைகளை முன்வைத்தும் பாராளுமன்றத்தில் சில சீட்டுகளை பெறுவதற்கான அரசியல் போராட்டத்தையே நடத்துகின்றனர். தொகுத்துச் சொன்னால் மார்க்சிய லெனினிய முறையில் வர்க்கப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுவதில்லை. அதன் காரணமாகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தோல்வியடைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தோல்விகளைப் பயன்படுத்தி கம்யூனிசத்திற்கு எதிரானவர்கள் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் வெற்றிபெறாது என்று பல்வேறு வகையான முதலாளித்துவ சீர்திருத்தப் போராட்டங்களே இங்கே வெற்றிபெறும் என்று கூறி உழைக்கும் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்துக்கொண்டும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அ) சுதந்திரத்திற்காகப் போராடாமல் (அதாவது தத்துவ அறிவுப் போராட்டம் நடத்தாமல்) சமாதானத்துக்காகப் போராடாமல் (அதாவது அரசியல் போராட்டம் இல்லாமல்) சோற்றுக்காகப் போராடுவது (அதாவது பொருளாதாரப் போராட்டம் நடத்துவது)சாத்தியமில்லை.
ஆ) அரசியல் போராட்டத்தைப் பற்றியும் அதேவிதமாகச் சொல்ல முடியும். மார்க்சுக்குப் பிறகு இந்த அரசியல் போராட்டமே ஒரு அசல் விஞ்ஞானமாகப் பரிணமித்துவிட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் போராட்டத்தைப் பற்றிப் பேசும்பொழுது பொருளாதார நிலையையும் தத்துவப்போக்குகளையும் கவனித்துக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இ) தத்துவப் போராட்டம் பிரச்சாரம் என்ற வடிவத்தில் நிலவுகிறது. ஆகவே இந்தத் தத்துப்போர் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது அரசியல் பொருளாதார நிலைமைகளைநிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும்.
ஆகவே நாம் இங்கே பார்பது என்ன?
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஒன்றோடொன்று இறுகப் பிணைந்து கிடைக்கின்றன என்பதைத்தான் பார்க்கிறோம். வர்க்கப் போராட்டம் என்பது ஒருமகத்தான பிரச்சனையாகும். அதன் ஒவ்வொரு தனி அம்சத்தையும் நாம் பார்க்க வேண்டும்.
அத்துடன் அதை முழுமையாகவும் பரிசீலிக்க வேண்டும். அப்படி பார்க்காமல் வர்க்கப்போராட்டத்தின் எந்த ஒரு தனி அம்சத்தைப் பற்றியும் நாம் முடிவுகட்ட முடியாது.
ஆகவே இந்த மூன்று முனைகளிலும் போராட்டத் திறமை பெற்றிருக்கிறவரால் தான் கம்யூனிச இயக்கத்திற்கு சிறந்த முறையில் தலைமை வகிக்க முடியும்.
ஆனால் யதார்த்தத்தில் இந்த மூன்று அம்சங்களிலும் ஒருசேர திறமை படைத்தவர்கள் அறிதாகவே இருக்கிறார்கள். எனினும் இந்த மூன்று அம்சங்களில் ஏதாவது ஒரு அம்சங்களில் ஆர்வமுள்ளவராகவும் தேர்ச்சி பெற்றவர் களாகவும் பலர் இருக்கிறார்கள். ஆகவே இந்த எதார்த்த சூழலை கணக்கிலெடுத்து அமைப்பிற்குள் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் விரிவாக அதாவது பொருளாதரத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு, அரசியல் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு மற்றொரு குழு தத்துவப் பிரச்சனைகளை ஆய்வு செய்து விவாதிப்பதற்கு ஒரு குழு என்று மூன்று குழுக்களை உருவாக்கி இந்த மூன்று குழுக்களால் முன்வைக்கப்படும் அறிக்கைகளை இந்த மூன்று குழுக்களையும் உள்ளடக்கிய மத்திய குழுவால் விவாதித்து இந்த மூன்று அம்சங்களிலும் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுத்த வேண்டிய நடைமுறையைத் தீர்மானித்து செயல்பட முடியும்.
வர்க்கப் போராட்டம் என்ற பிரச்சனையை ஒரு மார்க்சியவாதி இந்த மூன்று அம்சங்களின் இணைவின் அடிப்படையி லேயேதான் புரிந்துகொள்ள வேண்டும்.
தத்துவ அறிவுப் போராட்டத்தில் நாம் தினந்தோறும் ஈடுபட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தின்போது சில சிரமமான பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டி நேரிடுகிறது.
தொடரும்...
No comments:
Post a Comment